என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- அபூர்வ ராகங்கள் படம் வெளியானது!
- “கேள்வியின் நாயகனே” பாடலை கண்ணதாசன் மிகவும் அற்புதமாக எழுதி இருந்தார்.
- அபூர்வ ராகங்கள் படம் பல்வேறு விருதுகளை பெற்றது.
1975-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று அபூர்வ ராகங்கள் படம் வெளியானது. இந்த படத்தின் கதை மிகவும் வித்தியாசமாக இருப்பதாக மக்கள் மத்தியில் தகவல் பரவி இருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் இந்த படம் வெளியானதும் தொடக்கத்தில் இருந்தே வெற்றிகரமாக ஓடியது.
சென்னையில் மிட்லண்ட், அகஸ்தியா, ராக்சி, கிருஷ்ணவேணி ஆகிய 4 தியேட்டர்களில் அபூர்வ ராகங்கள் படம் திரையிடப்பட்டது. 144 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தில் கதாநாயகன் கமல்ஹாசன், கதாநாயகி ஸ்ரீ வித்யா. இவர்களுடன் சுந்தரராஜன், நாகேஷ், ஜெயசுதா முக்கிய வேடம் ஏற்று இருந்தனர்.
கவிஞர் கண்ணதாசன், ஜெய்சங்கர் இருவரும் சிறப்பு வேடத்தில் வந்து சென்றனர். கடைசி காட்சிகளில் ரஜினிகாந்த் நடித்து இருந்தார். ஆனால் படத்தில் அவரது வருகை ரசிகர்கள் மத்தியில் மனதில் பதியும் அளவுக்கு அமைந்தது. அதற்கு காரணம் அபூர்வ ராகங்கள் படத்தின் வித்தியாசமான, சிக்கலான கதை ஆகும்.
இந்த படத்தில் பிரசன்னா என்ற வேடத்தில் மிருதங்க இசைக்கலைஞராக கமல் நடித்து இருந்தார். அவரது தந்தையாக மேஜர் சுந்தரராஜன், மகேந்திரன் என்ற வேடத்தில் நடித்து இருந்தார். பைரவி என்ற வேடத்தில் ஸ்ரீவித்யாவும், ரஞ்சனி என்ற வேடத்தில் ஜெயசுதாவும் நடித்தனர்.
கமல்ஹாசன் இந்த படத்தில் தன்னை விட வயதில் மூத்த ஸ்ரீவித்யாவை காதலிப்பார். ஸ்ரீவித்யாவின் மகள் ஜெய சுதாவை கமல்ஹாசனின் தந்தை மேஜர் சுந்தரராஜன் திருமணம் செய்ய முயற்சி செய்வார். இந்த கதை அமைப்பை தமிழக ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற சந்தேகம் டைரக்டர் பாலச்சந்தர் உள்பட அபூர்வ ராகங்கள் படக்குழுவினர் அனைவருக்குமே இருந்தது.
ஆனால் அவர்களது எண்ணங்களை தவிடு பொடியாக்கி விட்டு தமிழக ரசிகர்கள் இந்த படத்தை ஆரவாரமாக ரசித்தனர். கமல்ஹாசனும், ஸ்ரீவித்யாவும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யும் நேரத்தில்தான் பாண்டியன் என்ற பெயரில் புயலாக ரஜினிகாந்த் படத்துக்குள் வருவார்.
அவர்தான் ஸ்ரீவித்யாவை முதல் முதலில் காதலித்தவர். புற்று நோய் பாதித்ததால் அவர் காதலியை விட்டு விலகி இருப்பார். கடைசி காலத்தில் அவர் ஸ்ரீவித்யாவை தேடி வருவார். காதலர்களை சேர்ந்து வாழும்படி சொல்லி விட்டு உயிரை விடுவார். இந்த படத்தில் ரஜினிகாந்த் வில்லன் போல வரவில்லை. அவரை அந்த படத்தில் டைரக்டர் பாலச்சந்தர் ஒரு தியாகி போலவே காட்டி இருப்பார். அந்த காட்சிகள் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் படம் பாதிக்கப்படவில்லை. வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அந்த படம் பெற்றது.
இந்த படத்தின் வெற்றிக்கு கண்ணதாசன் எழுதிய பாடல்களும் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையும் மிகப்பெரிய பலமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. "அதிசய ராகம்... ஆனந்த ராகம்..." பாடலை கே.ஜே.ஏசுதாஸ் பாடி இருந்தார். "கைகொட்டி சிரிப்பார்கள்..." என்று தொடங்கும் பாடலை சியாக் முகமது பாடி இருந்தார்.
"ஏழு சுவரங்களுக்குள் எத்தனை பாடல்..." என்ற பாடலை வாணிஜெயராம் பாடி இருந்தார். அதுபோல "கேள்வியின் நாயகனே இந்த கேள்விக்கு பதில் ஏதய்யா?" என்ற பாடலை வாணி ஜெய ராமும், சசிரேகாவும் பாடி இருந்தனர். ஸ்ரீவித்யாவுக்கு வாணி ஜெயராமும், ஜெயசுதாவுக்கு சசிரேகாவும் பாடி இருந்தது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
"கேள்வியின் நாயகனே" பாடலை கண்ணதாசன் மிகவும் அற்புதமாக எழுதி இருந்தார். இந்த பாடலில் அவர் அபூர்வ ராகங்கள் படத்தின் ஒட்டு மொத்த கதையையும் அழகாக சொல்லி இருந்தார். படப்பிடிப்பும் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டு இருந்தது. இந்த பாடல் காட்சியில் ஸ்ரீ வித்யா தவிப்புடன் பாடுவதும், கமல்ஹாசன் மிருதங்கம் வாசிக்காமல் இடையில் எழுந்து செல்வதும் மேஜர் சுந்தரராஜன் முன் வரிசையில் அமர்ந்து பாடலை கேட்பதையும் மிக மிக அற்புதமாக பாலச்சந்தர் காட்டி இருப்பார். அந்த பாடலின் கடைசியில் ரஜினி தோன்றுவதும் மிகப்பெரிய சிறப்பாக அமைந்தது.
இதன் காரணமாக அபூர்வ ராகங்கள் படம் பல்வேறு விருதுகளை பெற்றது. வாணிஜெயராமுக்கும் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது. கமல்ஹாசன், பாலச்சந்தருக்கு பிலிம்பேர் விருதுகள் கிடைத்தன. தமிழகத்தின் பல தியேட்டர்களில் இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.
இந்த படத்தில் ரஜினிகாந்த் வேடம் பலராலும் பாராட்டுகளை பெற்றது. பத்திரிகை விமர்சனங்களில் ரஜினிகாந்த் நடிப்பு பற்றியும் சிறப்பான கருத்துக்கள் வெளியானது. இது ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய டானிக்காக இருந்தது. என்றாலும் அவர் மனதுக்குள் ஒரு ஆசை தோன்றியது. தனது முதல் படமான அபூர்வ ராகங்கள் படத்தை தியேட்டரில் ரசிகர்களோடு அமர்ந்து பார்த்தால் எப்படி இருக்கும் என்று ஆசைப்பட்டார். ரசிகர்கள் அந்த படத்தில் எந்தெந்த காட்சிகளை ரசித்து பார்த்து வரவேற்கிறார்கள் என்பதை நேரில் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
ரஜினிகாந்த் சென்னையில் திரைப்படக் கல்லூரியில் படித்தபோது அமைந்தகரை லட்சுமி தியேட்டரிலும், தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டரிலும் தான் அதிக தமிழ்ப் படங்களை பார்த்தார். எனவே கிருஷ்ணவேணி தியேட்டருக்கு சென்று அபூர்வ ராகங்கள் படத்தை பார்க்க முடிவு செய்தார்.
(கிருஷ்ணவேணி தியேட்டரில் ரஜினிகாந்த் முதல் முதலில் நடித்த அபூர்வ ராகங்கள் படம் தொடங்கி சமீபத்தில் அவரது சினிமா உலக 50-வது ஆண்டில் வெளியாகி இருக்கும் "கூலி" படம் வரை அனைத்து படங்களும் தவறாமல் வெளியானது என்பது மிகப்பெரிய சாதனையாகும்)
1975-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி ரஜினிகாந்த் டிப்-டாப்பாக உடை அணிந்து, கம...கம....க்கும் சென்ட் பூசிக் கொண்டு தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்ட ருக்கு அபூர்வ ராகங்கள் படம் பார்க்க சென்றார். அவருக்கு முன்பு அங்கு நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு இருந்தனர். கூட்டமோ கூட்டம். ரஜினி தவித்துப்போனார்.
வெயிலும், கூட்ட நெரிசலும் அவரை வாட்டி வதைத்தது. கிருஷ்ணவேணி தியேட்டருக்கு சென்றதும் தன்னை ரசிகர்கள் அடையாளம் கண்டுக் கொண்டு சூழ்ந்து கொள்வார்கள் என்று ரஜினிகாந்த் நினைத்து இருந்தார். ஆனால் ஒருவர் கூட அவரை திரும்பிப் பார்க்கவில்லை. ஏனெனில் அவரை யாருக்கும் அந்த சமயத்தில் அடையாளம் தெரியவில்லை. ஆட்டோ கிராப் வாங்க தன்னை மக்கள் கூட்டம் துரத்தும் என்று நினைத்த அவருக்கு இது மிகப்பெரிய ஏமாற்றம் ஆகி விட்டது. டென்சன் தீர்வதற்கு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். தியேட்டரில் நிரம்பி வழிந்த கூட்டத்தை தாண்டிச் சென்று டிக்கெட் வாங்க முடியுமா? என்பது அவருக்கு மலைப்பாக இருந்தது.
அப்போது அங்கு குண்டாக இருந்த ஒரு நபர் வந்தார். அவர் ரஜினியைப் பார்த்து, "என்னப்பா டிக்கெட் கிடைவில்லையா? உன்னைப் பார்த்தால் இந்த படத்தில் கடைசியில் வரும் நடிகர் போலவே இருக்கிறாய்? எனவே தியேட்டருக்குள் போய் மானேஜரை பார்த்து நான்தான் இந்த படத்தில் நடித்து இருக்கிறேன் என்று சொல்லி டிக்கெட் கேள்., டிக்கெட் தந்து விடுவார்கள்" என்றார்.
இதைக் கேட்டதும் ரஜினிக்கு சிரிப்பாக வந்தது. உண்மையில் அந்த வாலிபன் நான்தான் என்று அவர் சொல்ல ஆரம்பிக்கும் முன்பே அந்த நபர், "நேரமாகி விட்டது..... நீ டிக்கெட் வாங்கினால் வாங்கு... வாங்காவிட்டால் எப்படியோ போ..." என்று சொல்லி விட்டு போய் விட்டார். இதையடுத்து ரஜினி அந்த நபர் சொன்னது போலவே தியேட்டருக்குள் சென்று மானேஜரை பார்த்தார். "சார், இந்த படத்தில் நானும் நடித்து இருக்கிறேன். டிக்கெட் வாங்க முடியவில்லை. கடுமையான கூட்டமாக இருக்கிறது. எனக்கு ஒரு டிக்கெட் தாருங்கள்" என்று கேட்டார்.
அவரை பார்த்து தியேட்டர் மானேஜர் நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, "இப்படி எல்லாமா... ஏமாற்றுவீர்கள்? போய் ஒழுங்காக வரிசையில் நின்று டிக்கெட் எடுங்கள்" என்று சொல்லி விரட்டி விட்டார். வெளியில் வந்த ரஜினிக்கு எதுவுமே புரியவில்லை. எப்படியாவது இன்று ரசிகர்களோடு உட்கார்ந்து அபூர்வ ராகங்கள் படத்தை பார்த்துவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஆனால் டிக்கெட் கிடைக்குமா? என்ற சந்தேகம் அவருக்குள் ஏற்பட்டது. அப்போது அவரை நெருங்கிய ஒரு நபர் கூடுதல் விலைக்கு பிளாக்கில் டிக்கெட் இருப்பதாக சொன்னார்.
இதை கேட்டதும் ரஜினிகாந்த் வேறு வழி தெரியாமல் பிளாக்கில் டிக்கெட் எடுத்துக் கொண்டு தியேட்டருக்குள் சென்றார்.
அங்கு என்ன நடந்தது என்பதை நாளை பார்க்கலாம்.






