என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- ரஜினிக்கு கிடைத்த சூப்பர் ஸ்டார் பட்டம்!
- ரஜினிக்கு எதிராக வில்லனாக நடிக்க மாட்டேன் என்று முத்துராமன் சொல்லி ஒதுங்கி விட்டார்.
- படப்பிடிப்பின்போது ரஜினி மிக எளிமையாக நடந்து கொண்டார்.
இது எப்படி இருக்கு? என்ற ரஜினியின் "பஞ்ச்" டயலாக் 1978-ம் ஆண்டு தமிழ்நாட்டு மக்களின் வாய்களில் அதிகம் பேசப்பட்ட ஒன்றாக இருந்தது. 16 வயதினிலே படம் ஆரம் பிக்கப்பட்ட போது இந்த டயலாக்கை ரஜினியால் சரியான உச்சரிப்புடன் சொல்ல இயலவில்லை.
16 வயதினிலே படத்தில் பாரதிராஜாவுக்கு உதவியாக பாக்கியராஜும் சித்ரா லட்சுமணனும் உதவி இயக்குனர்களாக இருந்தனர். அவர்களில் பாக்கியராஜ் பல தடவை "இது எப்படி இருக்கு?" என்பதை ஏற்ற இறக்கத்துடன் ரஜினிக்கு பேசிக் காட்டுவார். அதை அப்படியே "சிக்"கென்று பிடித்துக் கொண்டு ரஜினி பேசியதால் "இது எப்படி இருக்கு?" நிகரற்ற புகழைப் பெற்றது.
இந்தப் படத்தில் இடம் பெற்ற "செந்தூரப் பூவே.... செந்தூரப்பூவே" பாடலைப் பாடிய எஸ்.ஜானகிக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.
இதனால் ரஜினியைத் தேடி வந்த படத் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை 1978-ல் மேலும் அதிகரித்தது. 1978-ம் ஆண்டு ரஜினி நடிப்பில், சங்கர்-சலீம்-சைமன், கில்லாடி கிட்டு (கன்னடம்), அண்ண தம்முல சவால் (தெலுங்கு), ஆயிரம் ஜென்மங்கள், மாத்து தப்பித மகா (கன்னடம்), மாங்குடி மைனர், பைரவி, இளமை ஊஞ்சலாடுகிறது, சதுரங்கம், வணக்கத்துக்குரிய காதலியே, வயசு பிலி சிந்தி (தெலுங்கு), முள்ளும் மலரும், இறைவன் கொடுத்த வரம், தப்பித தானா (கன்னடம்), தப்புத் தாளங்கள், அவள் அப்படித்தான், தாய் மீது சத்தியம், என் கேள்விக்கென்ன பதில், ஜஸ்டிஸ் கோபிநாத், ப்ரியா ஆகிய 20 படங்கள் வெளியானது.
இந்த 20 படங்களில் மார்ச் மாதம் 10-ந்தேதி வெளியான "ஆயிரம் ஜென்மங்கள்", ஜூன் மாதம் 2-ந்தேதி வெளியான "பைரவி", 9-ந்தேதி வெளியான "இளமை ஊஞ்சலாடுகிறது", 30-ந்தேதி வெளியான "சதுரங்கம்", ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி வெளியான "முள்ளும் மலரும்", அக்டோபர் மாதம் 30-ந்தேதி வெளியான "தப்பு தாளங்கள்", "தாய் மீது சத்தியம்", டிசம்பர் மாதம் 16-ந்தேதி வெளியான "ஜஸ்டிஸ் கோபிநாத்", 22-ந்தேதி வெளியான "ப்ரியா" ஆகிய 9 படங்களும் ரஜினிக்கு மிகப்பெரிய புகழையும், சிறப்புகளையும் பெற்று தந்தன.
இதில் ஆயிரம் ஜென்மங்கள் படம் ரஜினி நடித்த முதல் கலர் படம் ஆகும். இந்த படத்தில் லதாவின் அண்ணனாக ரஜினி நடித்து இருந்தார். லதாவுக்கும், விஜயகுமாருக்கும் திருமணம் ஆகும். ஆனால் தற்கொலை செய்த விஜயகுமாரின் காதலி ஆவி லதா உடம்புக்குள் புகுந்துக் கொண்டு படாதபாடுப்படுத்தும். அந்த ஆவியை விரட்டும் வேடத்தில் ரஜினி நடித்து இருந்தார்.
இந்த படம் 100 நாள் ஓடி சாதனை படைத்தது. இந்த படத்தில் இடம் பெற்ற வெண்மேகமே.... பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து வெளியான "பைரவி" படமும் ரஜினியை தமிழ் திரையுலகில் மிகவும் உச்சத்துக்கு கொண்டு சென்று நிறுத்தியது.
இந்த படத்தை சாண்டோ சின்னப்பா தேவர் கதை இலாகாவில் பணிபுரிந்து வந்த கதை வசன கர்த்தா கலைஞானம் தயாரித்தார். முதலில் அவருக்கு படம் தயாரிக்க நிதி உதவி செய்வதாக சாண்டோ சின்னப்ப தேவர் உறுதி அளித்து இருந்தார். ஆனால் பைரவி படத்தில் ரஜினியை கதாநாயகனாகப் போடுவதில் கலைஞானத்துக்கும், சாண்டோ சின்னப்ப தேவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
"ரஜினி இதுவரை பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அதோடு கருப்பாகவும் இருக்கிறார். அவரை நம்பி ஹீரோவாக ஏற்றுக் கொண்டு நான் எப்படி பணம் தர முடியும்? நான் பணம் தர மாட்டேன்" என்று சாண்டோ சின்னப்ப தேவர் திட்டவட்டமாக கூறி விட்டார்.
கலைஞானம் மனம் தளரவில்லை. மனைவியின் கழுத்தில் கிடந்த நகைகளை கழற்றி அடகு வைத்து அதன் மூலம் கிடைத்த 5 ஆயிரம் ரூபாயை கொண்டு சென்று ரஜினியிடம் அட்வான்சாக கொடுத்து கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார். பைரவி படத்தில் நீங்கள்தான் ஹீரோவாக நடிக்கிறீர்கள் என்று கலைஞானம் சொன்னபோது ரஜினி அடைந்த ஆச்சரியத்துக்கு அளவே இல்லை.
அதைவிட ஆச்சரியம் பைரவி படம் பற்றி அறிவிப்பு வெளியானதுமே ரஜினி ஹீரோ என்றதும் பலரும் போட்டி போட்டுக் கொண்டு விநியோக உரிமையை வாங்கியதுதான். இதன் மூலம் கலைஞானத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அந்த படத்தில் வில்லனாக பிரபல நடிகர் முத்துராமனை நடிக்க வைக்க முயற்சி நடந்தது.
ஆனால் ரஜினிக்கு எதிராக வில்லனாக நடிக்க மாட்டேன் என்று முத்துராமன் சொல்லி ஒதுங்கி விட்டார். பல நடிகர்கள் ஆய்வுக்கு பிறகு ஸ்ரீகாந்தை வில்லனாக நடிக்க வைத்தனர். அதன் பிறகு கதாநாயகியாக யாரை நடிக்க வைப்பது என்று கலைஞானம் நீண்ட ஆலோசனை நடத்தினார்.
ஸ்ரீபிரியாவை கதாநாயகியாக நடிக்க வைக்க தேர்வு செய்து ஒப்பந்தம் செய்யப்பட்டது. கற்பகம் ஸ்டூடியோவில் பைரவி படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டன. கதாநாயகன் வேடம் முதல் முதலாக கிடைத்ததால் ரஜினி தனக்குள் புதைந்து கிடந்த அத்தனை திறமைகளையும் வெளியில் கொட்டி அந்த படத்தில் நடித்தார். அந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் அவர் மிகவும் சிரத்தை எடுத்து நடித்தது அனைவருக்கும் கண்கூடாக தெரிய வந்தது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் பைரவி படத்தின் ஒவ்வொரு காட்சியின் போதும் ரஜினியிடம் இருந்து ஒரு நெருப்பு பொறி வெளியில் வந்து கொண்டே இருந்தது.
அந்த படத்தில் இடம் பெற்ற "நண்டூருது நரி யூருது...." பாடல் அண்ணன்-தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டது. ரஜினியை மிகவும் நெகிழ வைத்த அந்த பாடல் சூப்பர் ஹிட் பாடலாக மாறியதும் குறிப்பிடத்தக்கது. கண்ணதாசன் எழுதி டி.எம்.சவுந்தரராஜன் பாடி இளையராஜா இசையமைத்த அந்த பாடலுக்கு நடித்த போது ரஜினி உணர்ச்சிப் பிழம்பாக திகழ்ந்தார்.
படப்பிடிப்பின்போது ரஜினி மிக எளிமையாக நடந்து கொண்டார். சிறிது நேரம் கிடைத்தாலும் மரத்தடி அல்லது கிழிந்த சோபா அல்லது வெறும் தரையில் படுத்து தூங்கி விடுவார். சராசரி மனிதனாக நடந்து கொண்ட அவர் கதாநாயகன் என்ற பந்தாவை வெளிப்படுத்தவே இல்லை. இப்போது கதாநாயகர்கள் கேட்பது போல எந்த ஒரு வசதியையும் அவர் கலைஞானத்திடம் கேட்கவில்லை.
பைரவி படத்தை கஷ்டப்பட்டு தயாரிக்கிறார்கள் என்பதை உணர்ந்து ரஜினி அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தார். படப்பிடிப்பு ஊழியர்கள் எந்த உணவு சாப்பிடுகிறார்களோ அதையேதான் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். தான் சம்பந்தப்பட்ட காட்சி படமாக்காத நேரங்களில் ஸ்டூடியோவில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து எதையோ யோசித்துக் கொண்டே இருப்பார். அவர் மனதுக்குள் ராகவேந்திரரிடம் பேசிக் கொள்வார்என்பது யாருக்கும் தெரியாது.
படப்பிடிப்புக்கு வரும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஊழியர்கள் யாரிடமும் அவர் தேவையில்லாமல் பேசவே மாட்டார். அமைதியாக உட்கார்ந்து கொண்டே இருப்பார். யாரிடம் பேசினாலும் இரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேச மாட்டார்.
அதே சமயத்தில் அவரது காட்சியை படமாக்க அழைத்து விட்டால் மின்னல் போல வந்து சுறுசுறுப்பாகி விடுவார். இது கலைஞானத்துக்கும், மற்றவர்களுக்கும் மிகப்பெரிய உதவியாக இருந்தது. மளமளவென பைரவி படத்தின் காட்சிகள் அருமையாக படமாக்கப்பட்டன.
படப்பிடிப்பு தகவல்கள் தினத்தந்தி நாளிதழில் அடிக்கடி வெளியானதால் தமிழக ரசிகர்கள் மத்தியில் பைரவி படம் பற்றி மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உருவானது. அனைத்து ஏரியாக்களிலும் விநியோக உரிமை விற்று தீர்ந்தது. சென்னை நகர உரிமையை இஸ்லாமியர் ஒருவர் வாங்கி இருந்தார்.
அவருக்கு கூடுதலாக பணம் கொடுத்து அவரிடம் இருந்த பைரவி பட விநியோக உரிமையை கலைப்புலி தாணு வாங்கிக் கொண்டார். படம் வெளியானதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்தனர். பைரவி படம் அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் விருந்து படைத்தது.
பைரவி படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை பெற்று இருந்த கலைப்புலி தாணு அந்த படத்துக்காக செய்த விளம்பரம் ரஜினி வாழ்வில் அதிரடியாக இமாலயமாற்றத்தை ஏற்படுத்தியது. சென்னை அண்ணா சாலையில் பிளாசா தியேட்டரில் திரையிடப்பட்ட பைரவி படத்துக்காக அவர் அங்கு 35 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து இருந்தார். இதைப் பார்த்ததும் ரஜினி நெகிழ்ந்துப் போனார்.
சென்னை திரைப்படக் கல்லூரியில் படித்த காலங்களில் அதே அண்ணாசாலையில் அவர் நண்பர்களுடன் நடந்து செல்லும் போது, "எனக்கும் இப்படி கட்-அவுட் வைப்பார்களா?" என்று ரஜினி கேட்டது உண்டு. அந்த கனவை நனவாக்கும் வகையில் கலைப்புலி தாணு வைத்திருந்த கட்-அவுட் அவரை மெய் சிலிர்க்க வைத்தது.
எதையும் வித்தியாசமாக செய்யும் கலைப்புலி தாணு அந்த 35 அடி உயர கட்-அவுட்டோடு நின்று விடவில்லை. பைரவி பட போஸ்டர்களில் "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பைரவி" என்று போட்டு விளம்பரம் செய்து இருந்தார். இதுபற்றி தாணு கூறுகையில், "ரஜினியின் நடிப்பு ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்காகவே நான் பைரவி படத்தின் விநியோக உரிமையை போராடி வாங்கினேன். அதோடு ரசிகர்களை கவரவே ரஜினி பெயருக்கு முன்பு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை சேர்த்தோம்" என்றார்.
அன்று முதல் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழர்களும் ரஜினியை "சூப்பர் ஸ்டார்" என்று அழைக்கத் தொடங்கினார்கள். அதுவரை அதாவது 1977-ல் ஸ்டைல் மன்னன் என்று அழைக்கப்பட்டு வந்த ரஜினி மிக குறுகிய காலத்துக்குள் சூப்பர் ஸ்டார் என்ற இடத்துக்கு உயர்ந்தார். தனக்கு சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டதை அறிந்ததும் ரஜினி முதலில் மகிழ்ச்சி அடைந்தார். கலைப்புலி தாணுவின் கையை பிடித்துக் கொண்டு, "பென்டாஸ்டிக் போஸ்டர் பியூட்டிபுல் பப்ளிசிட்டி" என்று நெகிழ்ந்தார்.
ஆனால் அடுத்த நாளே அவருக்குள் திடீர் பதட்டம் ஏற்பட்டது. சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம். அதை இனி போடாதீர்கள். நிறுத்தி விடுங்கள் என்று ரஜினி அவசரம் அவசரமாக கலைப்புலி தாணுவிடமும் மற்ற விநியோகஸ்தர்களிடமும் கேட்டுக் கொண்டார்.
"சூப்பர் ஸ்டார்" பட்டத்தை வேண்டாம் என்று ரஜினி எதற்காக சொன்னார் என்பதை நாளை பார்க்கலாம்.






