என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- திருச்செந்தூர் - திருநெல்வேலி வழியில், திருச்செந்தூரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் ஆழ்வார்திரு நகரி என்ற ஊர் உள்ளது.
- திருச்செந்தூரிலோ சுவாமிகளைக் காணாமல் பக்தர்களும் மக்களும் தவித்தனர்.
திருச்செந்தூர் முருகன் ஆலயத்தை சீரமைத்து புதுப்பித்து கட்டியதில் தேசிக சுவாமிகள், மவுன சுவாமிகள், காசி சுவாமிகள், ஆறுமுக சுவாமிகள், வள்ளி நாயக சுவாமிகள் ஆகிய 5 பேரும் முக்கிய பங்கு வகித்தனர் என்பதை கடந்த வாரம் பார்த்தோம்.
இந்த ஐவரின் ஜீவசமாதிகளும் திருசெந்தூர் மற்றும் அதன் அருகிலேயே அமைந்து உள்ளது. இவை அனைத்தையும் ஒரே நாளில் தரிசிக்கலாம். முதலில் திருச்செந்தூர் ஆலய ராஜகோபுரத்தை கட்டிய தேசிக மூர்த்தி சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்து இருக்கும் பகுதியை பார்க்கலாம்.
திருச்செந்தூர் - திருநெல்வேலி வழியில், திருச்செந்தூரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் ஆழ்வார்திரு நகரி என்ற ஊர் உள்ளது. இந்த ஊருக்கு அருகில் உள்ள ஆழ்வார்தோப்பு கிராமத்தில் வீற்றிருக்கும் காந்தீஸ்வரம் கோவிலின் நந்தவனம் பகுதியில் தேசிக மூர்த்தி சுவாமிகளின் ஜீவ சமாதி திருக்கோவில் அமைந்திருக்கிறது.
தேசிக மூர்த்தி சுவாமிகள் திருச்செந்தூர் ராஜகோபுரத்தை கட்டி முடித்ததும் அவர் தலைமையில் கும்பாபிஷேகம் நடக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் முருகப்பெருமானின் விருப்பம் வேறுவிதமாக இருந்தது. சுவாமிகளின் கனவில் முருகப் பெருமான் தோன்றி, "தேசிக மூர்த்தியாரே தாங்கள் இங்கிருந்து கும்பாபிஷேகத்தைக் காண வேண்டாம். எங்கிருந்து வந்தீரோ, அந்த இடத்துக்குச் சென்று மனக்கண்களால் கும்பாபிஷேகத்தைக் கண்டு மகிழும்" என்றார்.
அதை ஏற்று தேசிகமூர்த்தி சுவாமிகள் முன்பு தங்கியிருந்த ஆழ்வார்தோப்பு காந்தீஸ்வரம் சிவாலயம் அருகில் உள்ள மடத்திலேயே தங்கினார். அங்கிருந்தபடி மனக்கண்களால் கும்பாபிஷேக வைபவத்தை தரிசித்து மகிழ்ந்தார்.
திருச்செந்தூரிலோ சுவாமிகளைக் காணாமல் பக்தர்களும் மக்களும் தவித்தனர். அதேநேரம் அவர்களின் கண்களுக்கு, ராஜகோபுரத்தில் சுவாமிகள் காட்சி தந்து மறைவது போல் தெரிந்தது. எல்லோரும் சிலிர்த்துப்போனார்கள். இன்றைக்கும் திருச்செந்தூர் முருகன் கோவில் வள்ளியம்மை சந்நிதித் தூண் ஒன்றில் சிற்பவடிவில் சுவாமிகளின் திருவுருவைக் காணலாம். சுவாமிகளை ஞானதேசிக மூர்த்தி சுவாமிகள் என்று பக்தர்களும் மக்களும் போற்றுகிறார்கள்.
பிற்காலத்தில் சுவாமிகள் சமாதி அடைந்ததும் காந்தீஸ்வரத்திலேயே அவருக்கு ஜீவ சமாதி அமைக்கப்பட்டது. திருச்செந்தூர்- திருநெல்வேலி மார்க்கத்தில் உள்ள ஆழ்வார் திருநகரிக்கு வரும் பக்தர்கள், அங்கே சங்கு மண்டப நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம். அங்கிருந்து ஒரு பர்லாங் தூரத்தில் ஆற்றுப்பாலம் உள்ளது. அதன் வழியே பயணித்து ஆற்றுக்கு எதிர்க்கரையில் இருக்கும் காந்தீஸ்வரத்தை அடையலாம்.
இங்கே சுவாமிகள் தங்கியிருந்த மடம், ஈஸ்வரன் திருக்கோவில் ஆகியவற்றையும் தரிசிக்கலாம். அருகிலேயே சுவாமிகளின் சமாதிக் கோவிலும் அமைந்து உள்ளது. இன்றைக்கும் பக்தர்கள் விரும்பிய வரங்களைத் தரும் அருள் அலைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது சுவாமிகளின் சமாதித் திருக்கோவில்.

சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்தால், அதன் மேல் லிங்கம் வைத்து கோவில் கட்டுவது வழக்கம். ஆனால் இங்கே மூலஸ்தானத்தில் கல்லினால் ஆன திருவாசியுடன் கூடிய வேல் போன்ற அமைப்பில் உள்ளது. இது வேறெங்கும் காண்பதற்கரிய அமைப்பாக உள்ளதால், இங்கு வந்து வழிபடுவதால் விசேஷ பலன்கள் கைகூடும் என்கிறார்கள் பக்தர்கள்.
சுவாமிகளின் சமாதித் திருக்கோவிலில் மார்கழி மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில் குருபூஜை சிறப்புற நடைபெறுகிறது. இங்கு வந்து இந்த சுவாமிகளை வணங்கினால் நினைத்த காரியம் கைகூடும், புதிய வீடு கட்டும் வாய்ப்பு கிடைக்கும், வீடு கட்டுவதில் இருக்கும் தடைகள் நீங்கும். திருமணம் முதலான சுபகாரியங்கள் தடையின்றி இனிதே நடந்தேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
காந்தை முனிவர், கருவூரார் என சித்தர்கள் பலரின் அருள் அலைகள் நிரம்பி இருக்கும் தலம் ஆதலால், இங்கு வந்து வழிபடுவோருக்கு முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
தேசிகமூர்த்தி சுவாமிகள் ஜீவ சமாதியை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் எளிதில் வந்து செல்ல வசதிகள் உள்ளன. திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் வாகனங்களில் வருபவர்கள் ஆழ்வார்திருநகரில் உள்ள தாமிரபரணி ஆற்று பாலத்தை கடந்து இடது புறம் திரும்பினால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலேயே தேசிகமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதியை அடைந்து விடலாம். இதேபோல் பஸ்களில் வருபவர்கள் ஆழ்வார் திருநகரி பஸ்நிறுத்தத்தில் இறங்கியும் எளிதாக தாமிரபரணி ஆற்றின்வழியாக நடந்து கோவிலை அடையலாம். தற்போது காந்தீஸ்வரம் கோவில் நந்தவனத்தில் யானைகள் பராமரிப்பு மையமும் செயல்படுகிறது. கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இங்குள்ள யானை களையும் வெளியில் நின்றபடி பார்த்து ரசிக்கலாம்.
வேல் மூலம் நிதி திரட்டினார்
திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் கட்டிய தேசிகமூர்த்தி சுவாமிகள் சுமார் 4 அடி உயரம் உள்ள செம்பினால் ஆன ஒரு வேலில் திருச்செந்தூர் கோவில் திருப்பணி செய்து முடிக்க யாசகம் பெறுவதை கையாண்டார். கோவில் திருப்பணிக்கு ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற நிதியை தருமாறு முருகப்பெருமானே கேட்பதாக வாசகங்களை அந்த வேலில் பொறித்தார். அதை வீரபாகு என்பவரிடம் கொடுத்து திருப்பணிக்குப் பொருள் யாசகம் பெற்று வரும்படி அனுப்பி வைத்தார்.
வீரபாகுவும் அந்த வேலாயுதத்துடன் சென்று பக்தகோடிகளிடம் திருப்பணிக்குப் பொருள் பெற்று வந்தார். திருப்பணியும் விரைவில் நிறைவேறியது. மிகப்பழமை வாய்ந்த அந்த வேலாயுதம், இன்றைக்கும் திருச்செந்தூர் கீழரத வீதியில் உள்ள திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை திருஆதீன மடத்தில் பாதுகாக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ செந்திலாண்ட வரைத் தரிசிக்க திருச்செந்தூர் செல்லும் அன்பர்கள், அப்படியே மடத்துக்கும் சென்று அற்புதமான அந்த வேலாயுதத்தையும் தரிசித்து வரலாம்.
அடுத்த வாரம் திருச்செந்தூர் ஆலயத்தை சீரமைத்த 4 சுவாமிகள் பற்றியும் திருச்செந்தூர் முருகன் புகழ் பாடிய நொண்டி நாடகம் பற்றியும் பார்க்கலாம்.
- தன்வந்திரி ஜெயந்தியைக் குறிக்கும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல்.
உலகளவில் "தேசிய ஆயுர்வேத தினம்" செப்டம்பர் 23-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இது ஆயுர்வேதத்தின் பழமையான மருத்துவ முறைகளை உலகளவில் மேம்படுத்தவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கடைபிடிக்கப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு முதல், தன்வந்திரி ஜெயந்தியைக் குறிக்கும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. இருப்பினும் மத்திய அரசு 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆண்டுதோறும் செப்டம்பர் 23-ந்தேதி ''தேசிய ஆயுர்வேத தினம்" கடைபிடிக்கப்படுகிறது என்று அறிவித்தது.
ஆயுர்வேத நாளை கொண்டாட பல்வேறு கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் இலவச சுகாதார முகாம்களை ஏற்பாடு செய்து இலவசமாக மருந்துகளை வழங்குகின்றன. ஆயுர்வேத நாளன்று ஆயுர்வேத சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்கு பங்களித்தவர்களை அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் 'தேசிய தன்வந்திரி ஆயுர்வேத விருது' வழங்கி கவுரவிக்கிறது. தேசிய தன்வந்திரி ஆயுர்வேத விருதுகள், ஒரு பாராட்டு சான்றிதழ் (தன்வந்திரி சிலை) மற்றும் ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
நோக்கம்:
ஆயுர்வேதத்தின் பழமையான மருத்துவ முறைகளைப் பரப்புதல்.
ஆயுர்வேதத்தை உலகமயமாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல்.
காரணம்:
ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை என்று கருதப்படும் தன்வந்திரி முனிவரின் பிறந்த நாளான தன்வந்திரி ஜெயந்தியைக் குறிக்கும் வகையில் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
முக்கியத்துவம்:
உடல், மனம் மற்றும் ஆவி ஆகியவற்றின் சமநிலையை மேம்படுத்துவதன் மூலம் முழுமையான ஆரோக்கியத்தை ஆயுர்வேதம் வழங்குகிறது.
- புரதம், நார்சத்து இரும்பு சத்து, பொட்டாசியம் வைட்டமின் ஏ, சி சத்து நிறைந்தது.
- பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தினைக் குறைக்கின்றது.
வெள்ளை பூசணி பெயரை கேட்டவுடனேயே அமாவாசைக்கு திருஷ்டி சுத்தி நடுரோட்டில் உடைப்பதும், பூசணிக்காயில் முகம் வரைந்து வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுவதும் தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். மார்கழி மாதத்தில் இதன் பூவை வாசலில் கோலத்தின் மீது வைப்பர். கல்யாண வீடுகளில் 'காசி அல்வா' எனப்படும் இந்த வெள்ளை பூசணி அல்வா மிகவும் பிரபலம் பெற்றது. தரையில் படர்ந்து எந்த பெரு முயற்சிகளும் இல்லாமல் நாம் எதிர்பாராமலே காய்க்கும். இதற்கும் மவுசு சற்று குறைவுதான். ஆகவேதான் மக்கள் அலட்சியப்படுத்தும் இந்த சத்துமிக்க காய்கறிகளின் முக்கியத்து வத்தினைப் பற்றி இங்கு எழுதப்படுகின்றது.
* வெண் பூசணி செரிமானத்தினை கூட்டும். மலச்சிக்கலை நீக்கும்.
* நார் சத்து மிகுந்த காய். ஆகவே எடை குறைப்பிற்கு உகந்தது.
* வைட்டமின் 'டி' சத்து உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்டுகின்றது.
* வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரிக்க உதவுகின்றது.
* மன அழுத்தம் நீங்க உதவுகின்றது.
* புண்களை ஆற்றும் சக்தி கொண்டது.
* பொட்டாசியம், சி சத்து, நார்ச்சத்து இருதய ஆரோக்கியத்தினைக் கூட்டுகின்றது.
* உடலில் நீரிழப்பு தடுக்கப்படுகின்றது.
* தொடர்ந்து தினமும் 100 மி.லி. அளவு வெள்ளை பூசணி ஜூஸ் குடித்தால் உடலில் நச்சுகள் நீங்கும்.
* உடற்பயிற்சி செய்வோர் பயிற்சி முடிந்த பிறகு வெள்ளை பூசணி ஜூஸ் அருந்தலாம்.
* இதன் விதைகள் இதயம், எலும்பினைக் காக்கின்றது.
* நல்ல தூக்கம் இருக்கும்.
* சர்க்கரை அளவு கட்டுப்படும்.
* பூசணி விதை வீக்கங்களை குறைக்க வல்லது. * சத்து நிறைந்தது.

* சில வகை புற்று நோய்களின் பாதிப்பினை தவிர்க்க வல்லது.
* சிறு நீரக பை, ப்ராக்ட் ரேட் இவற்றினை பாதுகாக்கும்.
* நிறைந்த மக்னீசியம் சத்து கொண்டது.
அவரைக்காய்
அநேக வீடுகளில் கொத்து கொத்தாய் சர்வ சாதாரணமாய் காய்த்து கிடக்கும் காய்கறி. பலருக்கு காசு செலவு கூட இல்லை. பறித்து உடனே செய்யலாம். இதுதான் ஆரோக்கியம். இதுதான் மகிழ்ச்சி. புரதம், நார்சத்து இரும்பு சத்து, பொட்டாசியம் வைட்டமின் ஏ, சி சத்து நிறைந்தது. அடிக்கடி அவரைக்காயினை உணவில் சேர்த்துக் கொண்டால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
* புரதச் சத்திற்கும் உதவும். இன்று அநேகரது பிரச்சினையே புரதம் தேவையான அளவு இல்லாததுதான்.
* நார்சத்து கொலஸ்டிரால் அளவினை கட்டுப்படுத்தும். சீரண சக்தியினைக் கூட்டும்.
* வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். இது எடை குறைப்பிற்கும் உதவும்.
* இரும்பு சத்து ரத்த சோகையினை தவிர்க்கின்றது.
* பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தினைக் குறைக்கின்றது.

கமலி ஸ்ரீபால்
* வைட்டமின் ஏ,சி உடல் ஆரோக்கியம் நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டுகின்றது.
* சிங்க் செல் பாதுகாப்பிற்கு உதவுகின்றது.
* இதிலுள்ள குறைந்த உப்பு, நார்சத்து, பொட்டாசியம் போன்றவை இருதய பாதுகாப்பிற்கு உதவுகின்றன.
* தாது சத்துகள் நிறைந்தது. வலுவான எலும்புகள் உருவாகின்றன.
* நோய் எதிர்ப்பு சக்தி கூடுகின்றது.
* சர்க்கரை அளவு கட்டுப்படுகின்றது.
கவனம்
G6PD குறைபாடு உள்ளவர்கள் அவரைக்காயினை தவிர்க்க வேண்டும்.
* அறுவை சிகிச்சை என்றால் 2 வாரம் முன்பே அவரைக்காய் எடுக்க வேண்டாம்.
* பிஞ்சு அவரை, அவரை விதை இவையெல்லாம் இயற்கை (எ) இறைவனின் அருளே.
இன்றைக்கே அவரைக்காய் சாப்பிட ஆரம்பிக்கலாமே.
இதனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுகின்றது. இருதய பாதிப்பு அபாயம் குறைகின்றது. எலும்புகள் வலுவாய் இருக்கும். சர்க்கரை அளவு கட்டுப்பட உதவும். சக்தி, மனநிலை சீராவது, நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
பூசணிக்காயை விதவிதமாய் சமைக்கத் தெரியும். தினம் ஒரு டீஸ்பூன் பூசணி விதை அநேக நன்மைகளைத் தரும்.
ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க மருத்துவ ஆலோசனைப் பெற்று பழக்கத்தில் கொண்டு வரலாமே.
- குடும்பத்தை ஒழுக்கமும் நன்னடத்தையும் உள்ள குடும்பமாக உருவாக்க வேண்டிய பெரும்பொறுப்பு, குடும்பத்திலுள்ள ஒவ்வொரு தனிமனிதருக்கும் உண்டு.
- பிரதிபலன் கருதாமல் செய்கிற உதவியே ஆகச் சிறந்த உதவி.
உபத்திரவங்கள் வந்து சேர்ந்தாலும் உதவுவதற்கு எப்போதும் தயாராக இருக்கின்ற அன்பின் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.
ஒவ்வொரு மனிதனின் உயிர் வாழ்க்கையும் சக மனிதனோடு ஒத்துப் போவதையும், சக மனிதனுக்கு உதவிசெய்து வாழ்வதைப் பொறுத்துமே அமைவு பெறுகிறது. தமிழில் 'உதவி' என்பதற்கும் 'நன்றி' என்பதற்கும் 'நன்மை செய்தல்' என்று ஒரே பொருள்தான். திருவள்ளுவர் தமது திருக்குறளில் இவ்விரண்டு சொற்களையும் ஒரே பொருண்மையில் பயன்படுத்தியுள்ளார்.
"தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்"
"மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான்கொல் எனும் சொல்"
ஆகிய குறள்களில் மகன் தந்தைக்கும், தந்தை மகனுக்கும் செய்ய வேண்டிய உதவிகளைக் குறித்து வள்ளுவர் சுட்டிக்காட்டுகிறார். ஒரு குடும்பத்து உறவுகளுக்குள்ளேயே பெற்றோர்கள் பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் பெற்றோருக்கும் நன்மைகள் செய்துகொள்வது சமூகக் கடமையாகும்.
கல்வி கேள்விகளில், ஒழுக்க நடத்தைகளில் தாம் பெற்றெடுத்த பிள்ளைகள், மற்ற எல்லாரையும்விட முந்தியிருக்கும்படி செய்வது ஒவ்வொரு பெற்றோரின் சமூகக் கடமையாகும். அதேபோல, இப்படிப்பட்ட நல்ல பிள்ளைகளை உருவாக்க இவர்களது பெற்றோர்கள் என்ன தவம் இயற்றினார்களோ என்று பார்ப்பவர்கள் வியக்கும்படிப், பிள்ளைகள் சாதனைகளில் சாதித்துக் காட்ட வேண்டும். இந்தச் சமூகத்தை நல்ல சமூகமாகக் கட்டமைக்க வேண்டிய பொறுப்பு, சமூகத்தின் அங்கமாகத் திகழுகிற ஒவ்வொரு குடும்பத்திற்கும் உண்டு.
அதேபோலக், குடும்பத்தை ஒழுக்கமும் நன்னடத்தையும் உள்ள குடும்பமாக உருவாக்க வேண்டிய பெரும்பொறுப்பு, குடும்பத்திலுள்ள ஒவ்வொரு தனிமனிதருக்கும் உண்டு. அந்த வகையில் தனிமனிதர் தொடங்கி, சமூக மனிதர் வரை ஒருவருக்கொருவர் நன்மை செய்து கொள்வதும், உதவி செய்துகொள்வதும் அவசியமான சமுதாயக் கடமையாகும்.
'இந்தச் சமூகமும் மனிதர்களும் எனக்கு என்ன உதவிகள் செய்தார்கள்? நான் எதற்காக அவர்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும்?' என்று சிலர் கேட்கக்கூடும்; அவர்களது கேள்வியிலும் சில நியாயங்கள் இருக்கவும் கூடும். ஆனாலும் பிரதிபலன் கருதாமல் செய்கிற உதவியே ஆகச் சிறந்த உதவி. நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள் சூழ்ந்துள்ள இந்த உலகத்தில் நாம் இயல்பாகப் பெறக்கூடிய உதவிகள் எண்ணற்றவை.
நாம் இயற்கையிடமிருந்து பெறும் உதவிகளுக்குச், செய்நன்றியறிதலாய் வேறு எவற்றைத் திருப்பிச் செய்ய இருக்கிறோம்?. இயற்கைச் சூழலை அதன் இயல்புகெடாமல் பாதுகாத்தாலே போதும்; வேறு எதையும் நம் சக்திக்குமீறிச் செய்ய வேண்டாம். அதேபோல 'வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட மரபாகிய' இந்த மானுட சுழற்சிப் போக்கிலே, எத்தனையோ ஆயிரமாயிரம் உதவிகளை நமது முன்னோர்கள், தங்களது அறிவின் துணைகொண்ட கண்டுபிடிப்புகளின் வாயிலாக நமக்கு வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். நாமும் நம் பங்கிற்கு, இந்தச் சமூகத்திற்கு, எதிர்காலச் சந்ததிக்கு யாதானும் உதவிகளைச் செய்துவிட்டுச் செல்ல வேண்டாமா?.
உதவிகளில் சிறந்த உதவி, செய்யாமல் செய்த உதவி என்கிறார் திருவள்ளுவர்.
"செய்யாமற் செய்த உதவிக்கு வானகமும்
வையமும் ஆற்றல் அரிது"

சுந்தர ஆவுடையப்பன்
அடுத்தவர் எந்த உதவியும் செய்யாமல், அவர்களுக்கு நாம் செய்கிற நன்மைக்கு ஈடாக இந்த மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் தந்தால்கூட ஈடாகாது என்கிறது திருக்குறள். அதே போலப், பிரதிபலன் கருதாமல் அடுத்தவர்க்கு யார் உதவுகிறார்களோ அந்த நன்மை கடலைவிடப் பெரியது என்று மற்றொரு குறள் இயம்புகிறது. அடுத்தவர்க்கு உதவும் குணத்தை மனிதன் இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
என்ன பிரதிபலன் கருதி சூரியன் அன்றாடம் உதிக்கிறது? எதை அனுபவிப்பதற்காகக் காற்று வீசிக்கொண்டிருக்கிறது? எந்தப் பலனை எதிர்பார்த்து மழை பெய்து பயிர் விளைந்து கொண்டிருக்கிறது?. இவையெல்லாம் இயற்கை; இவற்றிற்கு யோசிக்கும் மனமில்லை; ஆனால் மனமுள்ள மனிதன், தனக்கு அடுத்தவர் உதவினாலும் அதற்குப் பிரதியாக உபத்திரவத்தையே பரிசாக வழங்குகிறானே அது ஏன்? என்று அனுபவசாலியான சிலர் கேட்கலாம். ஏன் இப்படி நமக்கு நன்மை செய்பவர்க்கும் இடையூறு செய்யும் மனோபாவம்?. சிலபேருக்கு அது பிறவிக்குணமாகவும் அமைந்து விடுகிறது.
ஓர் ஆப்பிரிக்க நாட்டு நாட்டுப்புறக் கதை. மலைகளால் சூழ்ந்த ஒரு பெரிய காடு. அந்தக் காட்டில் திடீரென்று தீப்பிடித்துக் கொள்கிறது. காட்டுத் தீயில் அகப்பட்டு ஏகப்பட்ட விலங்குகள் வெந்து சாம்பலாயின. விலங்குகள், பறவைகள் பாதுகாப்பாக ஒளிவதற்கு ஒரு மரமுமில்லை; ஒரு புதருமில்லை. எல்லாம் மளமளவென்று தீப்பிடித்துச் சாம்பலாகிக் கொண்டிருந்தன. இந்தக் களேபரத்தில் ஒரு நல்லபாம்பும் சிக்கி கொண்டது. காட்டின் நிலப்பரப்பில் ஊர்ந்துகொண்டிருந்தால் மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்த பாம்பு, நிலத்தில் தெரிந்த ஒரு துவாரத்திற்குள் நுழைந்து விட்டது; அது பெரிய ஆழமான ஓட்டை என்பதால் பத்திரமாக அடியாழம்வரை சென்றுவிட்டது.
அந்த நேரத்தில், காட்டின்மீது ஒரு கடும்மழை பெய்தது; நெருப்பு அணைந்து, காட்டின் வெப்பம் தணிந்தது. ஓட்டை வழியே பூமிக்குள் சென்றிருந்த நல்ல பாம்பு இப்போது, தரையின் மேலடுக்குக்கு வந்தது; ஆனால், வனப்பகுதியின் சமவெளிப் பகுதிக்கு வருவதற்கான ஓட்டை அடைபட்டிருந்தது. எப்படி வெளியே வருவது?. தீவிபத்தில் தப்பித்திருந்த சில விலங்குகள், பாம்பு சிக்கியிருந்த தரைக்கு மேல்பகுதியில் செல்வதும் திரும்புவதுமாக இருந்தன. அப்போது அந்த வழியில் வேடன் ஒருவனும் வந்தான். தரைக்குள்ளிருந்த பாம்பு, " நான் நல்லபாம்பு!, பூமியின் ஓட்டைக்குள் சிக்கிக் கொண்டுள்ளேன்! யாராவது ஓட்டைத் துவாரம் பார்த்து என்னை வெளியே எடுத்துக் காப்பாற்றி விடுங்கள்!" என்று மன்றாடியது.
" நீ இப்படித்தான் சொல்வாய்!. உன்னைக் காப்பாற்றி வெளியேற்றினால், உடனே உதவி செய்த எங்களையே கடித்து வைத்துவிடுவாய்!. பெயர்தான் நல்ல பாம்பு; ஆனால் பாம்பின் குணம் கடித்து வைப்பதுதானே!" என்று கூறி எந்த விலங்கும் பாம்பைக் காப்பாற்றுவதாய் இல்லை. பார்த்துக்கொண்டிருந்த வேடன், " அவையெல்லாம் விலங்குகள்!; நான் ஆறறிவு உள்ள மனிதன்; நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்; ஆனால் கடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்துகொடு!" என்று பாம்பிடம் பேசினான்.
"கட்டாயம் கடிக்க மாட்டேன்!; காப்பாற்று!" என்றது நல்லபாம்பு. பூமிக்குக் கீழே பாம்பு சிக்கியிருக்கும் அடுக்குக்கு அருகிலிருக்கும் ஒரு துவாரத்தின் வழியே விரலைவிட்டுப் பாம்பைப் பிடித்து இழுத்து, பூமிக்கு வெளியே கொண்டுவந்து விட்டான் வேடன். வெளியே வந்ததுதான் தாமதம், அடுத்த நொடியே வேடனைக் கொத்துவதற்கு நல்லபாம்பு ஒரு சீறு சீறியது. சுதாரித்து விலகிக்கொண்ட வேடன்," பார்த்தாயா! சொன்ன சொல்லைத் தவறுவதற்கு முயற்சிக்கிறாயே!, உதவி செய்ததற்கு உபத்திரவம் கொடுப்பதுதான் நீதியா?.
எங்காவது நன்மை செய்தவர்களுக்குத் தீமையை யாராவது பரிசளிப்பார்களா?" என்று பாம்பிடம் கேட்டான். " அதெல்லாம் எனக்குத் தெரியாது . சீறுவதும் கொத்துவதும்தான் என்னுடைய குணம்!. அதைத்தான் நான் இப்போது செய்தேன்!" என்றது நல்ல பாம்பு. " சரி வா!. நகரத்திலிருக்கும் நீதிமான் அவர்களிடம் சென்று வழக்கை வைப்போம்! அவர் தீர்ப்பு வழங்கட்டும்!". என்று நீதிமானிடம் அழைத்தான் வேடன்; சரியெனப் பாம்பும் அவனுடன் கிளம்பியது.
நகரத்திற்குச் செல்லுகிற வழியில் இருவரும் ஒரு குதிரையைச் சந்தித்தார்கள்; நடந்ததை விவரித்து, இது குறித்து உன்னுடைய தீர்ப்பு என்ன? என்று குதிரையிடம் கேட்டனர். "என்னைப் பொறுத்த வரை, என்மீது ஏறிச் சவாரி செய்பவருக்குத் தொந்தரவில்லாமல் சொகுசாகத்தான் சுமந்து செல்வேன்!; ஆனால் அதற்குப் பரிசாக நாலைந்து சவுக்கடி கொடுத்து இன்னும் விரைவாகப் போகச்சொல்லித் துன்புறுத்தவே செய்வார்கள்!" என்றது குதிரை. நல்ல பாம்பு வேடனைப் பார்த்துச் சிரித்தது.
அடுத்து, செல்லும் வழியில் ஒரு கழுதையை இருவரும் பார்த்தார்கள்; இருவருக்கும் இடையேயுள்ள வழக்கைப்பற்றிக் கழுதையிடம் சொல்லி, அதனுடைய தீர்ப்பு என்ன? என்று கேட்டார்கள். "எவ்வளவு பொதி சுமந்தாலும் சாட்டைக்கம்பு அடியைத் தவிர வேறு எதனையும் நான் பரிசாகப் பெற்றதில்லை" என்று சோகமாக சொன்னது கழுதை.
அடுத்து ஒரு பசுமாட்டை வழியில் பார்த்த வேடனும் நல்ல பாம்பும், உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் தருபவர்கள் பற்றி உன்னுடைய அபிப்பிராயம் என்ன? என்று கேட்டார்கள். " அதை ஏன் கேட்கிறீர்கள்; நாங்கள் எங்கள் எஜமானர்களுக்கு மாடாய் உழைக்கிறோம்; ஆனாலும் கடைசியில் எங்களை அடிமாடாய்த்தானே விற்றுவிடுகிறது இந்த உலகம்!" என்று புலம்பித் தள்ளிவிட்டது பசுமாடு.
"குதிரை, கழுதை, பசுமாடு ஆகியவை கூறிய நடைமுறைத் தீர்ப்புகளைக் கேட்டோம்.
எல்லாமே எனக்குச் சாதகமானவை. இனிமேலுமா நகரத்திற்குச் சென்று நீதிமானைப் பார்க்க வேண்டும்?" கேட்டது நல்ல பாம்பு. "இதோ நகரம் வரப்போகிறது. அவரும் என்ன தீர்ப்புச் சொல்கிறார் என்று பார்ப்போம்" என்று விடாமல் பாம்பை அழைத்துக்கொண்டு நடந்தான் வேடன்.
வழக்கை விசாரித்த நீதிமான், சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்த்தபின் தீர்ப்புச் சொல்கிறேன் என்றார். மூவரும் தீப்பிடித்த வனப்பகுதிக்குள் சென்றனர். சம்பவம் எப்படி நடந்தது என்பதை நிகழ்த்திக் காட்டச் சொன்னார் நீதிமான்.
பாம்பு சிக்கியிருந்த பொந்துக்குள் சிரமப்பட்டு உள்ளே நுழைந்தது; என்னைக் காப்பாற்றுங்கள்! என்று கத்தியது. காப்பாற்றினால் கடிக்க மாட்டேன் எனச் சத்தியம் பண்ணச் சொல்லி வேட்டுவன் கேட்டான். சரி என்றது பாம்பு. காப்பாற்ற பொந்துக்குள் வேடன் கையை விட்டான். இப்போது அவனது கையை நீதிமான் பிடித்து இழுத்துத் தடுத்துவிட்டார். உதவி பெறுகிறவர் அந்த உதவியின் மதிப்பைத் தெரிந்தவராக இருந்தால் தான் நன்றியோடு இருப்பார்; இல்லையென்றால் உபத்திரவங்களையே செய்வார்.
இன்று முழுவதும் பாம்பு பொந்துக்குள்ளேயே கிடக்கட்டும்; பசியில் வாடட்டும்; பிறகு காப்பாற்று; நிச்சயம் அதன்பின் உன்னிடம் அன்போடு நடந்து கொள்ளும்!" என்றார் நீதிமான். ஆம் திருவள்ளுவர் குறிப்பிடுவதைப்போல,
"உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து"
உதவியைப் பெறுகிறவரின் சான்றாண்மைக் குணத்தைப் பொறுத்தே, சிறிய உதவிகூடப் பெரும் உபகாரமாய் மாறும். தகுதியில்லாதவர்க்குச் செய்யும் உதவி, திரும்பவும் நமக்கு உபத்திரவமாகவே வந்து சேரும்.
தொடர்புக்கு 94431 90098
- சிவாஜி ராவின் இந்த குணத்தை பார்த்து அவரது அறை நண்பர்கள் அடிக்கடி ஆச்சரியப்பட்டது உண்டு.
- அமைந்தகரையில் இருந்து ஜெமினி பாலம் செல்ல 2 வழித்தடங்கள் உள்ளன
அமைந்தகரை அருண் ஓட்டலில் 3-வது மாடியில் நண்பர்களுடன் தங்கி இருந்த சிவாஜி ராவ் கல்லூரிக்கு புறப்படும் ஸ்டைலே தனியாக இருக்கும். அதிகாலையிலேயே எழுந்து சிகரெட்டை புகைத்தப்படியே வராண்டாவில் வலம் வருவார். மற்ற நண்பர்கள் கண் விழிப்பதற்குள் இரண்டு, மூன்று சிகரெட்டுகளை ஊதித்தள்ளி விடுவார்.
நண்பர்கள் எழுந்து கல்லூரிக்கு தயாராக வேண்டும் என்று குளியல் அறைக்கு செல்ல நினைத்தால் அவ்வளவு எளிதில் முடியாது. ஏனெனில் அதற்குள் குளியல் அறையை பூட்டிக்கொண்டு உள்ளே சிவாஜி ராவ் தம் அடித்துக் கொண்டு இருப்பார். அது மட்டு மல்ல குளியல் அறைக்குள் இருக்கும் கண்ணாடி முன்பு நின்றுக் கொண்டு விதவிதமாக நடித்தும் பார்ப்பார்.
இது அவரது அறை நண்பர்களுக்கு மிகப்பெரிய இடையூறாக இருந்தது. ஒரு கட்டத்தில் சண்டைப் போட்டு நாங்கள் எல்லோரும் குளித்த பிறகுதான் நீ குளிக்க வேண்டும் என்று சிவாஜிராவுக்கு நண்பர்கள் உத்தரவிட்டனர். என்றாலும் சிவாஜிராவ் யாருக்காகவும் தனது சுதந்திரமான செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளவில்லை.
இதனால் அறையில் அவருக்கும், ரவீந்திர நாத்துக்கும் இடையே அடிக்கடி முட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இருவரும் ஜென்ம விரோதிகள் போல சண்டைப் போடுவார்கள். அப்போது சதீசும், அசோக்கும் இடையில் புகுந்து சண்டையை தீர்த்து வைப்பார்கள்.
ஆனால் அடுத்த சில நிமிடங்களில் எதுவுமே நடக்காதது மாதிரி சிவாஜி ராவும், ரவீந்திரநாத்தும் கொஞ்சி குலாவியபடி பேசிக் கொள்வார்கள். சிவாஜி ராவின் இந்த குணத்தை பார்த்து அவரது அறை நண்பர்கள் அடிக்கடி ஆச்சரியப்பட்டது உண்டு.
அமைந்தகரையில் இருந்து திரைப்படக் கல்லூரி அமைந்து இருந்த ஜெமினி பாலம் வரை ஏராளமான டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. சிவாஜிராவும் அவரது நண்பர்கள் வேணுகோபால், சதீஷ், அசோக் மற்றும் சிலர் தினமும் ஒரே பஸ்சில்தான் பயணம் செய்வார்கள்.
அமைந்தகரையில் இருந்து ஜெமினி பாலம் செல்ல 2 வழித்தடங்கள் உள்ளன. மேத்தா நகர் வழியாக ஒரு வழித்தடம் உள்ளது. அமைந்தகரை சேத்துப்பட்டு வழியாக மற்றொரு வழித் தடம் உள்ளது. இதில் 1973-ல் அமைந்தகரையில் இருந்து மேத்தா நகர் வழியாக ஜெமினி பாலம் செல்ல 25 காசுகள் கட்டணம் கொடுக்க வேண்டும்.
அமைந்தகரை சேத்துப்பட்டு வழியாக செல்லும் பஸ்களுக்கு 30 காசுகள் கட்டணம். சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் தினமும் அந்த 5 பைசாவை மிச்சப்படுத்துவதற்காக மேத்தா நகர் வழியாக செல்லும் பஸ்சில்தான் ஏறுவார்கள்.
அந்த பஸ் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே வரும்போது பெரும்பாலான நாட்கள் ரெயில்வே கேட்டில் நிற்க வேண்டியது ஆகி விடும். 1973-ல் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே சாலையில் சுரங்கப்பாதை அமைக்கப்படவில்லை. எனவே அந்த சாலையில் வரும் வாகனங்கள் அனைத்தும் ரெயில்வே கேட் திறக்கும்வரை அங்கேயே நீண்ட வரிசையில் காத்து கொண்டு இருக்கும்.
அப்படி சிவாஜி ராவ் வரும் பஸ்களும் ரெயில்வே கேட்டில் சிக்கி விடுவது உண்டு. ஒரு தடவை நுங்கம்பாக்கம் ரெயில்வே கேட் மூடப்பட்டு விட்டால் மீண்டும் திறப்பதற்கு சுமார் 30 நிமிடங்களாவது ஆகிவிடும். இதனால் சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் பல நாட்கள் திரைப்படக் கல்லூரி வகுப்புக்கு தாமதமாக சென்று ஆசிரியர்களிடம் திட்டு வாங்கி இருக்கிறார்கள்.
ரெயில்வே கேட் மூடப்படும் நாட்களில் சிவாஜிராவும் நண்பர்களும் பஸ்சில் அடிக்கும் லூட்டிகள் பயங்கரமாக இருக்கும். அந்த சமயங்களில் சிவாஜி ராவை வெறுப்பு ஏற்ற வேண்டும் என்பதற்காகவே சில சமயங்களில் "ஏய் கருப்பா?" என்று நண்பர்கள் அழைப்பார்கள். அப்போது எல்லாம் சிவாஜி ராவுக்கு கடும் கோபம் வந்து விடும்.
ஒரு தடவை சிவாஜி ராவை பார்த்து பஸ்சில் வைத்து சதீஷ் "டேய் நீ ஏன்டா இவ்வளவு கருப்பாய் இருக்கிறாய்? உனக்கு எப்படி கதாநாயகன் வாய்ப்பு கிடைக்கும்?" என்று கிண்டல் செய்தார். இதைக் கேட்டதும் சிவாஜிராவுக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. "டேய் கேலி செய்யாதே? எனக்கு கோபம் வந்தால் சும்மா இருக்க மாட்டேன்? என் கையில் கிடைப்பதை தூக்கி அடித்து விடுவேன்" என்று எச்சரித்தார்.
என்றாலும் சதீஷ் தொடர்ந்து சிவாஜி ராவை பார்த்து கருப்பா.... கருப்பா... என்றே சொல்லி வெறுப்பு ஏற்றினார். பஸ்சில் பல பயணிகள் முன்னிலையில் சதீஷ் செய்த கிண்டல் சிவாஜி ராவுக்குள் குமுறலை ஏற்படுத்தியது. "டேய் விளையாடாதே? என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது" என்று முறைத்தார்.
அப்போது ஜெமினி பாலம் பஸ் ஸ்டாப் வந்து இருந்தது. நண்பர்கள் அனைவரும் இறங்கினர்கள். அப்போதும் சதீஷ் சிவாஜி ராவை பார்த்து, "கருப்பா வேகமா வாடா?" என்றார். அடுத்த நிமிடம் சிவாஜி ராவ் பாய்ந்து சென்று சதீசை சட்டையை பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினார்.
"நீ என்ன பெரிய மன்மதனா? எப்போது பார்த்தாலும் என்னை கருப்பா என்கிறாய்? உன் மனதில் என்னடா நினைத்துக் கொண்டிருக்கிறாய்?" என்று எச்சரித்தார். சிவாஜி ராவுக்கு வந்த கோபத்தை பார்த்து சதீஷ் ஒரு நிமிடம் மிரண்டு போய் விட்டார். அதன் பிறகு அவர் சிவாஜி ராவிடம் நிறம் பற்றி கிண்டல் செய்து பேசியதே இல்லை.
சிவாஜி ராவ் கோபப்பட்டாலும் சிறிது நேரத்தில் அதை மறந்து நண்பர்களுடன் கலகலப்பாக பேச ஆரம்பித்து விடுவார். இதனால் கல்லூரியிலும், அருண் ஓட்டலிலும் எப்போதும் நண்பர்கள் அவருடன் இருந்தனர். அந்த நண்பர்களுடன் சேர்ந்து பொழுதை போக்குவதுதான் அவரது இரவு நேர பழக்கமாக இருந்தது.
சிவாஜி ராவிடம் இருந்த சிகரெட் புகை பிடிக்கும் பழக்கம் தவிர மற்ற அனைத்து பழக்கங்களையும் அவரது நண்பர்கள் ரசித்தனர். குறிப்பாக சினிமா மீது சிவாஜி ராவுக்கு இருந்த வெறியை நினைத்து பிரமிப்பார்கள். எப்போதும் சினிமா நினைப்பிலேயே இருந்த சிவாஜி ராவ் அடிக்கடி அமைந்தகரை லட்சுமி டாக்கீசுக்கு படம் பார்க்க சென்று விடுவார்.
தமிழில் புதுப்படம் ரிலீஸ் ஆகி இருந்தால் சிவாஜிராவ் தவற விட மாட்டார். அன்று முதல் ஆளாக லட்சுமி டாக்கீசில் ஆஜராகி விடுவார். நண்பர்கள் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி லட்சுமி டாக்கீசுக்கு சென்று படம் பார்ப்பது அவருக்கு ஒரு பழக்கமாக மாறிப் போனது.
அமைந்தகரை லட்சுமி டாக்கீஸ் தியேட்டரில் புதுப்படங்கள் ரீலிஸ் ஆகாத நாட்களில் இடையிடையே பழைய படங்களையும் போடுவார்கள். அந்த படங்களையும் சிவாஜிராவ் விட்டு வைப்பது இல்லை. முதல் காட்சிக்கு முதல் ஆளாக போய் நிற்பார்.
தங்கை, தங்கசுரங்கம், என் தம்பி, திருடன், ராஜா, எங்கள் தங்க ராஜா உள்பட சிவாஜி கணேசன் படங்களில் பெரும்பாலானவற்றை சிவாஜிராவ் லட்சுமி தியேட்டரில்தான் கண்டுகளித்தார். அதுபோல எம்.ஜி.ஆர். நடித்த படங்களையும் அவர் விடாமல் பார்த்தார். எம்.ஜி.ஆர்.- சிவாஜி என்ற இரண்டு இமயங்களும் தமிழ் திரையுலகை ஆக்கிரமித்து இருந்ததை அவர் படம் பார்த்து விட்டு நண்பர்களுடன் ஆர்வமாக விவாதிப்பார்.
குறிப்பாக சிவாஜிகணேசனின் நடிப்பை புகழ்ந்து பேசிக் கொண்டே இருப்பார். ஏற்கனவே பணக்கஷ்டத்தில் இருந்த சிவாஜி ராவுக்கு அடிக்கடி படம் பார்ப்பதால் கூடுதல் செலவு ஆனது. என்றாலும் சிவாஜிராவ் சாப்பாட்டை தியாகம் செய்து விட்டு கூட லட்சுமி தியேட்டருக்கு சென்று படம் பார்த்தது உண்டு.
சில சமயங்களில் சிவாஜி ராவிடம் போதுமான அளவுக்கு கையில் காசு இருக்காது. அதே சமயத்தில் லட்சுமி தியேட்டரில் புதிய படம் வெளியாகி இருக்கும். என்றாலும் படம் பார்க்க வேண்டும் என்ற வெறியுடன் சிவாஜிராவ் லட்சுமி தியேட்டருக்கு சென்று சாதாரண வகுப்பில் டிக்கெட் எடுத்து படம் பார்ப்பது உண்டு.
ஒரு தடவை லட்சுமி தியேட்டரில் அவர் தரையில் உட்கார்ந்து சிவாஜி படத்தை பார்த்து விட்டு வந்தார். அந்த அளவுக்கு சிவாஜி நடிப்பில் அவர் மனதை பறிக் கொடுத்து இருந்தார்.
லட்சுமி தியேட்டரில் மட்டுமின்றி திரைப்படக் கல்லூரியிலும் சிவாஜி ராவுக்கும், அவரது நண்பர்களுக்கும் அடிக்கடி படங்கள் போட்டு காட்டப்படுவது உண்டு. பெரும்பாலும் திரைப்படக் கல்லூரியில் காட்டப்படும் படங்கள் ஆங்கிலப் படங்களாக இருக்கும். ஆலிவுட் நடிகர்கள் சார்லஸ் லாப்டன், கிளார்க் கேபிள், கிரிகிரிபெக், ஆண்டனிகுயின், மார்லன்பிராண்டோ ஆகியோரது படங்களை அடிக்கடி காண்பித்து பயிற்சி கொடுப்பார்கள்.
அந்த நடிகர்களின் உடல் மொழி, முகப்பாவனைகள் அனைத்தையும் சிவாஜி ராவ் மனதுக்குள் உள்வாங்கிக் கொண்டார். அதுபோலவே எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ராமாராவ், ராஜ்குமார், திலீப்குமார், ராஜ்கபூர், சத்யன், நாகேஸ்வரராவ் ஆகியோரது படங்களையும் பார்த்து அவர்களிடம் இருந்த தனித்துவத்தை புரிந்து உணர்ந்துக் கொண்டார்.
சினிமா படங்களை பார்க்க... பார்க்க... அவருக்குள் நடிப்பின் மீதான வெறி விஸ்வரூபமாக மாறியது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மற்ற தியேட்டர்களுக்கும் சென்று படங்கள் பார்த்தார். இதன் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் மொழிகளின் படங்களும், நடிகர்களின் நடிப்பும் அவரது மனதுக்குள் ஆழமாக பதிந்தன.
இந்த நிலையில்தான் அமைந்தகரையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தை வேடிக்கை பார்க்க சென்ற சிவாஜி ராவை போலீசார் சுற்றி வளைத்து அடி பின்னி எடுத்து விட்டனர்.
அந்த பயங்கர சம்பவம் பற்றி திங்கட்கிழமை (22-ந்தேதி) பார்க்கலாம்.
- காதல் ரேகையின் வகைகள்.
- இருதய ரேகையுடன் தொடர்புடைய காதல் ரேகைகள்
கைரேகை மூலம் ஒருவரின் எதிர்காலத்தை கணிக்க முயற்சிக்கும்போது காதல் ரேகை மிக முக்கியமான ஒன்றாகும். கையில் இருக்கும் திருமணக் கோடு, நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்பதைக் கணிப்பது மட்டுமல்லாமல், வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் காதல் அல்லது திருமணம் குறித்த உங்கள் அணுகுமுறையை அடி கோடிட்டு காட்டவும் உதவும். காதல் விஷயத்தில் நீங்கள் எப்படிப்பட்ட நபராக இருக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளவும் இது உதவுகிறது.
ஆண்களுக்கு வலது கட்டை விரலுக்கு கீழே சின்னதாக செங்குத்தான ஒரு கோடு செல்லும் அதான் காதல் ரேகை.
ஒருவருடைய கையில் விதிரேகை நன்றாக அமைந்து, அந்த விதி ரேகையை சந்திர மேட்டிலிருந்து வரும் ரேகை ஒன்று தொட்டு நின்று, திருமண ரேகை நன்கு அமையுமானால் அந்த நபர் கண்டிப்பாக காதல் திருமணம் செய்வார்.
காதல் ரேகை அமைப்புக்கேற்ற பலன்களை அறியலாம். படத்தில் 1,2,3..என 8 வரை குறிப்பிட்டுள்ள ரேகைகளுக்கான பலன்கள் எப்படி என்பதை பார்ப்போம்...
1.நீங்கள் காதல் விவகாரங்களில் சற்று அதிக கூச்ச சுபாவம் கொண்டு இருக்கலாம். நீங்கள் மட்டும் காதல் விவகாரங்களில் துணிச்சலுடன் செயல்பட்டால் உங்களுக்கு அதில் வெற்றி உண்டு.
2.காதல் விவாகரங்களில் நீங்கள் சிக்கினீர்கள் என்றால், அது முற்பகுதியில் உங்களுக்கு சந்தோஷத்தை தரும். ஆனால் பிற்பகுதியில் பலவிதமான அனுபவங்களை தரலாம். ஒரு வேலை உங்கள் சுக்கிர மேடு வலுவாக இருந்தால் பல திருப்பு முனைகளை சந்தித்து இறுதியில் உங்களது காதல் வெற்றி பெறும். காதல் ரேகையும் இல்லை, சுக்கிர மேடும் பலமாக அமையவில்லை எனில் காதலில் கூடுமானவரையில் நீங்கள் ஈடுபடுவதை தவிர்த்து, பெற்றோர்கள் பார்க்கும் திருமணத்திற்கு உடன் பட்டு செல்வது நல்லது.
3.பல தடைகளை கடந்து நீங்கள் காதல் செய்வீர்கள், அப்படி செய்தாலும் கூட உங்களின் காதல் வெற்றி அடையும் என்று உறுதி அளிக்க முடியாது. நீங்கள் பேசாமல் வீட்டில் பார்க்கும் பெண்ணை அல்லது மணமகனை திருமணம் செய்து கொள்வது உங்களுக்கு மிக நல்லது. மீறி காதல் விவகாரங்களில் ஈடுபட்டால் நீங்கள் அதிக ஏமாற்றத்தை சந்திக்க இடம் உண்டு.
4.நல்ல வசதியான நபரை தேடிப் பிடித்து காதல் செய்வீர்கள். பொய்யை கூட உண்மை போலவே சொல்லக்கூடியவர்கள் நீங்கள். அதனால் நீங்கள் என்ன சொன்னாலும் காதலிப்பவர் நம்பும் படியாக சொல்வதில் வல்லவர்கள். எனினும் காதலில் உண்மையுடன் தான் இருப்பீர்கள் அல்லது நடந்து கொள்வீர்கள் என்று சொல்வதற்கு இல்லை.
5.நீங்கள் காதல் செய்யும் நபர் எதிர்காலத்தில் பலராலும் அறியப்படும் நபராக இருப்பார். மேலும் நீங்கள் அதிக ரொமேன்டிக்காக செயல் படத் தெரிந்தவர்கள். காதல் விவகாரங்களில் பட்டையை கிளப்புவீர்கள்.
6.நீங்கள் காதல் செய்வதை கூடிய வரையில் தவிர்த்து வீட்டில் பார்க்கும் பெண்ணை அல்லது வாழ்க்கை துணையை திருமணம் செய்து கொள்வது உங்களுக்கு நல்லது. காரணம், நீங்கள் காதல் விவகாரங்களில் இறங்கினால் கண்டிப்பாக அந்தக் காதல் உங்களுக்கு சந்தோஷத்தை தர வாய்ப்பில்லை.
7.நீங்கள் காதலிக்கும் நபர் அதிக நேர்மையான நபராக இருக்க வாய்ப்பில்லை. இதனால் வாழ்க்கையில் சில தொல்லைகளை நீங்கள் சந்திக்க இடம் உண்டு. நீங்கள் பெரும்பாலும் காதல் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது உங்களுக்கு நல்லது.

அ.ச.இராமராஜன்
8.உங்களுக்கே உங்கள் காதல் மீது நம்பிக்கை இல்லாமல் போகலாம். மேலும் நீங்கள் செய்யும் காதல் சமயத்தில் ஒரு தலை காதலாகக் கூட இருக்கலாம். அதனால் சில ஏமாற்றங்களை நீங்கள் சந்திக்க இடம் உண்டு. நீங்களும் கூட காதல் விவகாரங்களில் தலை இடாமல் வீட்டில் பார்க்கும் வாழ்க்கை துணையை திருமணம் செய்து கொள்ளுதல் நலம்.
திருமண ரேகை இரண்டு துண்டுகளாக காணப்பட்டு, அதில் ஒரு துண்டு இருதய ரேகையும், புத்தி ரேகையும் கடந்து நின்றால், அப்படிப்பட்ட நபர் காதலில் தோல்வியை சந்திப்பர். அந்த ரேகை ஆயுள் ரேகையும் கடந்து சென்றால் அப்படிப்பட்ட நபர் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொள்வார்.
காதல் ரேகையின் வகைகள் மற்றும் பலன்கள்:
நீளமான காதல் ரேகை:
நீண்ட, நேராக செல்லும் காதல் ரேகை ஒருவரின் ஆழ்ந்த உணர்ச்சிகளையும், காதல் மீதான ஈடுபாட்டையும் குறிக்கிறது. இது ஒரு நிலையான மற்றும் தீவிரமான காதல் வாழ்க்கையை குறிக்கும் என்று கருதப்படுகிறது.
குறுகிய காதல் ரேகை:
குறுகிய காதல் ரேகை கொண்டவர்கள் உணர்ச்சி ரீதியாக வெளிப்படையாக இல்லாமல் இருக்கலாம் அல்லது காதல் விஷயங்களில் அவ்வளவு ஆர்வம் காட்டாமல் இருக்கலாம், குறுகிய காதல் ரேகைகள் உள்ளவர்கள் ஒரு உறவில் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை அறிவார்கள், மேலும் தங்கள் சொந்த விருப்பங்களையும் தேவைகளையும் முதலில்வைக்கபயப்படுவதிலை. ஒரு குறுகிய ரேகை, காதல் மற்றும் உறவுகள் என்று வரும்போது ஒருவர் சற்று தனிமையாக இருப்பதையும் குறிக்கலாம்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிளைகள் கொண்ட காதல் ரேகை:
காதல் ரேகையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிளைகள் பிரிந்திருந்தால், இது ஒருவரின் காதல் வாழ்க்கையில் பல உறவுகள் அல்லது குழப்பங்கள் இருப்பதைக் குறிக்கலாம்,
காதல் ரேகை மற்றும் சூரிய ரேகை சந்திப்பு:
காதல் ரேகை சூரிய ரேகையை சந்திக்கும் போது, இது ஒருவரின் காதல் வாழ்க்கையில் பிரபலமான மற்றும் வெற்றிகரமான நபராக இருப்பதைக் குறிக்கலாம் என்று கருதப்படுகிறது,
காதல் ரேகையின் ஆரம்பம் மற்றும் முடிவு:
காதல் ரேகையின் ஆரம்பம் மற்றும் முடிவு எந்த மேட்டிலிருந்து தொடங்குகிறது மற்றும் எந்த மேட்டை அடைகிறது என்பதை வைத்து, ஒருவரின் காதல் வாழ்க்கையின் ஆரம்பம் மற்றும் முடிவு பற்றியும் அறியலாம்,
இருதய ரேகையுடன் தொடர்புடைய காதல் ரேகைகள்
ஒருவருக்கு காதல் ரேகை, இருதய ரேகையை நோக்கி வளைந்திருந்தால், அவர் தனிமரமாகவே இருப்பார். அவருக்கு திருமண வாழ்க்கை அமைந்தாலும், தனியாகவே வாழ வேண்டியிருக்கும். ஒருவேளை அந்த வளைவு சற்று மங்கலாக இருந்தால், அந்த நபர் திருமண வயதை அடையும் போது நாள்பட்ட நோய் பாதிப்பை சந்திக்க வேண்டி வரும். தொடக்கத்தில் கோடு V வடிவமாக இருந்தால், அவர் எந்த காதலிலும் நிரந்தரமாக இருக்கமாட்டார் என்று அர்த்தம். சூரிய ரேகையை வெறும் கோடு தொட்டால், செல்வந்தருடன் திருமணம் நடக்கும் வாய்ப்பு உண்டு. காதல் கோட்டில் கரும்புள்ளி இருந்தால், துணை இறக்கலாம்.
காதல் ரேகையின் மீது பல்வேறு கோடுகள்
காதல் ரேகைக்கு மீது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோடுகள் இருந்தால், அந்த நபருக்கு பல்வேறு காதல் ஏற்படக்கூடும் என்பதை குறிக்கிறது. அதில் சில காதல்கள் வலுவாக இருக்கும் என்று கைரேகை பலன்கள் கூறுகின்றன. கோடுகள் எதுவும் வலுவாக இல்லாவிட்டால், அந்த நபருக்கு உறுதியான காதல் எதுவும் அமையாது என்று அர்த்தம். இதுபோன்ற கைரேகை கொண்ட நபருக்கு திருமண பந்தமும் நிலைக்காது என்று கைரேகை பலன்கள் கூறுகின்றன.
- கல்லூரி நண்பர்களில் பெரும்பாலானவர்கள் சிக்கனமாக இருப்பதை அப்போது அவர் உணர்ந்தார்.
- முதல்வர் ராஜாராம் தன்னிடம் தனி அன்பு வைத்து இருக்கிறார் என்பது சிவாஜி ராவுக்கும் தெரியும்.
திரைப்படக் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததை நினைத்து சிவாஜி ராவ் தவிப்பின் உச்சத்துக்கே சென்று விட்டார். நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம் வருகிறது என்று நினைத்துப் பார்த்தார். கல்லூரி நண்பர்களில் பெரும்பாலானவர்கள் சிக்கனமாக இருப்பதை அப்போது அவர் உணர்ந்தார்.
தன்னைப் பொறுத்தவரை சிகரெட் புகைப்பதற்கு அதிகம் பணம் செலவாகிறது என்பது அவருக்கு நன்றாக தெரிந்தது. அவர் ஒவ்வொரு தடவையும் சிகரெட் புகைக்கும் போது ஏன் இப்படி காசை வீணாக்குகிறாய் என்று நண்பர்கள் அறிவுரை சொல்வதை நினைத்துப் பார்த்தார். சாப்பிடாமல் கூட இருந்து விடுவேன். ஆனால் சிகரெட் புகைக்காமல் என்னால் இருக்கவே முடியாது என்று ஒவ்வொரு தடவையும் சிவாஜிராவ் சொல்வது உண்டு. சிகரெட் வாங்க முடியாத சூழ்நிலையில் பீடி வாங்கி புகைக்கவும் அவர் தயங்கியது இல்லை.
ஒரு தடவை பீடி கூட வாங்க முடியாத அளவுக்கு சுத்தமாக கையில் பணம் இல்லாமல் தவித்தார். என்ன செய்வது என்று அங்கும் இங்கும் பார்த்த அவரது கண்களில் திரைப்படக் கல்லூரி பியூன் வீரைய்யா தென்பட்டார். வீரைய்யாவுக்கு பீடி புகைக்கும் பழக்கம் உண்டு. அவரிடம் ஓடிச்சென்று ஓசி பீடி வாங்கி சிவாஜி ராவ் புகைத்தார். அந்த அளவுக்கு புகை பிடிப்பதில் சிவாஜி ராவ் இன்பம் கண்டு இருந்தார். ஆனால் அதுதான் அவரை துன்ப நிலைக்கும் தள்ளி இருந்தது. அத்தகைய துயரத்துடன் திரைப்படக் கல்லூரி முதல்வர் அறைக்குள் சென்றார்.
திரைப்படக் கல்லூரி முதல்வர் ராஜாராம் தனது இருக்கையில் தலை குனிந்தபடி எதையோ எழுதிக் கொண்டிருந்தார். சிவாஜி ராவை பார்த்ததும் "வா...வா... சிவாஜி உட்கார்" என்று அன்போடு கூறினார். இதுதான் சிவாஜி ராவுக்கு அவரையும் அறியாமல் அவரது குல தெய்வமும், இஷ்ட தெய்வமும் அமைத்துக் கொடுத்த அருமையான வழிகாட்டல் என்று சொல்லலாம். ஆம், உண்மையிலேயே அந்த கல்லூரி முதல்வர் காட்டிய அன்பும் பரிவும் குலதெய்வத்தின் கருணைக்கு ஈடானது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு சிவாஜிராவ் மீது பாசத்தைக் காட்டி அவரது நடிப்பு ஆர்வத்தை பல தடவை முதல்வர் ராஜாராம் பாராட்டி இருக்கிறார்.
அதனால்தான் சிவாஜி ராவின் ஏழ்மையை கருத்தில் கொண்டு அவரையும் அறியாமல் பல தடவை பல உதவிகள் செய்து இருக்கிறார். முதல்வர் ராஜாராம் தன்னிடம் தனி அன்பு வைத்து இருக்கிறார் என்பது சிவாஜி ராவுக்கும் தெரியும். அந்த நன்றி உணர்வுடன் அவர் முன்பு பவ்வியமாக அமர்ந்து இருந்தார். "என்ன விஷயம். எதற்காக என்னைப் பார்க்க வந்து இருக்கிறாய்?" என்று முதல்வர் ராஜாராம் கேட்டார். சிவாஜி ராவுக்கு ஒரு பக்கம் வேதனை கலந்த வெட்கமாகவும், மறுபக்கம் தாங்க முடியாத துயரமாகவும் இருந்தது. விட்டால் கதறி... கதறி... அழுதுவிடுவார் என்ற நிலையில்தான் அவர் இருந்தார்.
மெல்லிய குரலில் மிகவும் தயங்கியபடி, "சார்... என் கல்லூரி கட்டணம்..." என்று முடிக்காமல் வார்த்தையை இழுத்தார். சிவாஜிராவை நிமிர்ந்து பார்த்த ராஜாராம், "அதற்கு என்னப்பா?" என்று மென்மையாக கேட்டார். சிவாஜி ராவுக்கு சற்று தைரியமும், தன்னம்பிக்கையும் வந்தது. ஆனால் அவரிடம் காணப்பட்ட தயக்கமும், வெட்கமும் அவர் வாயில் இருந்து வார்த்தையை வரவிடாமல் செய்தன.

"பரவாயில்லை. எதுவாக இருந்தாலும் என்னிடம் தைரியமாக சொல்லலாம்" என்று ராஜாராம் தன்னம்பிக்கை அளித்தார். இதையடுத்து சிவாஜிராவ் பேசத் தொடங்கினார். "சார்... கல்லூரி கட்டணம் கட்டுவதற்கு இன்றுதான் கடைசிநாள். நான் எவ்வளவோ முயற்சி செய்து விட்டேன். எனக்கு பணம் கிடைக்கவில்லை. இப்போது என்னிடம் கையில் ஒருபைசா கூட கிடையாது. வீட்டில் இருந்து வந்த பணம் அனைத்தும் சாப்பாடுக்கு சரியாகி விட்டது. என்ன செய்வது எனக்கு ஒன்றும் தெரியவில்லை" என்றார்.
அவர் கண்களில் இருந்து கண்ணீர் திரண்டு சொட்டு... சொட்டாக... விழ ஆரம்பித்தது. முதல்வர் ராஜாராம் பொறுமையாக "அழாதே பார்த்துக் கொள்ளலாம்" என்றார். என்றாலும் சிவாஜி ராவுக்கு கண்ணீர் நிற்கவில்லை. அலை அலையாக வந்தது. சற்று தெம்பை வரவழைத்துக் கொண்டு சிவாஜிராவ் தொடர்ந்து பேசினார். "சார்... எனக்கு கொஞ்சம் நாட்கள் அவகாசம் கொடுங்கள். 10 நாள் கொடுத்தால் கூட போதும். அதற்குள் நான் கல்லூரி கட்டணத்துக்கான பணத்தைத் தயார் செய்து விடுவேன். எப்படியும் சீக்கிரம் பணம் கட்டி விடுவேன். எனக்கு ஒரே ஒரு வாய்ப்புத் தாருங்கள்" என்றார்.
இதைக் கேட்டதும் முதல்வர் ராஜாராம் சிரித்தார். "அடடா... இதற்காக ஏன் அழுகிறாய்? கண்ணைத் துடைத்துக் கொள். நீ கவலைப்படாதே. உன் கல்லூரி கல்விக் கட்டணத்தை நேற்றே நான் கட்டி விட்டேன். நீ வகுப்புக்கு போ. நன்றாக பயிற்சி எடுத்துக் கொள். ஒவ்வொரு பயற்சி பாடத்தையும் நன்றாக கவனி. அந்த அர்ப்பணிப்புதான் உன்ைன வாழ்க்கையில் உயர்த்தும்" என்றார்.
இதை கேட்டதும் சிவாஜிராவுக்கு அழுகையை அடக்க முடியவில்லை. வாய் விட்டு கதறி அழுதார். தனது ஏழ்மை நிலை காரணமாக இந்த சூழ்நிலை உருவாகிவிட்டதாக ராஜாராமிடம் கதறினார். பிறகு கை எடுத்து கும்பிட்டு நன்றி கூறினார். இருக்கையில் இருந்து எழுந்து வந்த முதல்வர் ராஜாராம் அப்படியே சிவாஜிராவை அரவணைத்துக் கொண்டு அவர் முதுகில் தட்டிக் கொடுத்தார். கவலைப்படாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்து. நீ போகலாம் என்றார். சிவாஜி ராவுக்கு மனதில் ஏற்பட்ட கவலை மிகப்பெரிய பாரமாக மாறியது.
கல்லூரி முதல்வர் ராஜாராமை தெய்வமாகவே பார்த்தார். இதற்கு முன்பும் ஒருமாதம் கல்லூரி முதல்வர் ராஜாராம், சிவாஜிராவுக்கு கல்லூரி கட்டணம் கட்டி இருந்தார். இது 2-வது தடவை. அவரை மனதுக்குள் வணங்கியபடியே சிவாஜி ராவ் வகுப்புக்கு புறப்பட்டு சென்றார்.
வழிநெடுக அவருக்கு பெங்களூர் வாழ்க்கையின் பழைய நினைவுகள் வந்தது. அனுமந்தராவ் நகர், கவிபுரம், குட்டஹள்ளி பகுதிகளில் எந்த கவலையும் இல்லாமல் சுதந்திர பறவைப் போல சுற்றி திரிந்த நாட்களை அசைப்போட்டு பார்த்தார். அந்த வயதில் சிவாஜிராவ் எப்போதும் கழுத்தில் சைக்கிள் செயினை தொங்க விட்டு இருப்பார்.
யாராவது அவரிடம் வம்பு செய்தாலோ அல்லது எதிர்மறையாக பேசினாலோ சிவாஜிராவ் அந்த சைக்கிள் செயினை எடுத்து அடிக்கத் தொடங்கி விடுவார். அப்படி பல தடவை பலர் சிவாஜி ராவிடம் சைக்கிள் செயினால் அடி வாங்கி இருக்கிறார்கள். இதனால் அவரை சகோதரர் சத்திய நாராயணராவ் பல தடவை அழைத்து கண்டித்துள்ளார்.
ஒழுக்கமாக வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்வார். அந்த அறிவுரை சிவாஜிராவ் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போனது. சென்னைக்கு வந்த பிறகு தனது வாழ்க்கை பாதையும் நடவடிக்கைகளும் முற்றிலுமாக மாறி விட்டதை சிவாஜி ராவ் உணர்ந்தார்.
திரைப்படக் கல்லூரி ஆசிரியர்களின் அறிவுரைகள் மற்றும் நண்பர்களின் பழக்க வழக்கங்கள் சிவாஜி ராவிடம் அடுத்தடுத்து மாற்றங்களை கொண்டு வந்தன. சிறு வயது பிடிவாதமும், சேட்டைகளும் அவரிடம் குறைந்து இருந்தன. ஒருவித பக்குவ நிலைக்கு அவர் வந்திருந்தார். ஆனால் சிவாஜி ராவுக்குள் உருவாகி இருந்த அந்த பக்குவ நிலையை பரிசோதிப்பது போலதான் கைகளில் சில்லரை காசுகள் கூட இல்லாத பரிதாப நிலை அடிக்கடி உருவானது. என்றாலும் சிவாஜிராவ் மனதுக்குள் சினிமா உலகில் ஜெயித்து காட்ட வேண்டும் என்ற தன்னம்பிக்கை மட்டும் போகவில்லை. வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்று உறுதியாக நம்பினார்.
அன்று திரைப்படக் கல்லூரி வகுப்பு முடிந்ததும் நண்பர்கள் ரகுநந்தன், விட்டல், சதீஷ் மற்றும் சிலருடன் அவர் ஜெமினி பாலம் அருகே நடைபாதையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அந்த பகுதியில் ஏராளமான சினிமாப்பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. பொதுவாகவே சினிமா போஸ்டர்களை பார்த்தால் சிவாஜி ராவ் அங்கு ஒரு நிமிடம் நின்று உன்னிப்பாக பார்த்து விட்டுதான் அந்த இடத்தை விட்டு நகர்வார்.
அன்றும் சிவாஜி, எம்.ஜி.ஆர். படப் போஸ்டர்களை ஒருவித எதிர்பார்ப்புடன் ஆசை... ஆசையாக பார்த்தார். அவரது கண்கள் ஏக்கத்துடன் மாறியது. அருகில் இருந்த நண்பர்களிடம், "டேய் நானும் இப்படி சினிமாவில் புகழ் பெற முடியுமா? என் படமும் இப்படி போஸ்டர்களில் அழகாக வருமா?" என்று ஆதங்கத்தோடு கேட்டார்.
நண்பர்கள் அனைவரும் ஏகோபித்த குரலில், "கவலைப்படாதே சிவாஜி. உனது நேர்மைக்கும், கடினமான உழைப்புக்கும் நிச்சயம் பலன் கிடைக்கும். சினிமா உலகில் நீ பெரிய நடிகனாக வருவாய்" என்றனர். என்றாலும் சிவாஜி ராவுக்குள் திருப்தி ஏற்பட வில்லை.
அந்த பகுதியில் ஒட்டப்பட்டு இருந்த எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் போஸ்டரை பார்த்து, "இப்படி வருவேனா?" என்றார். நண்பர்களும் "நிச்சயமாக உனக்கு இப்படி புகழ் கிடைக்கும்" என்றனர். இதை கேட்டதும் சிவாஜிராவ் மனம் முழுக்க மகிழ்ச்சியுடன் கனவு உலகத்துக்குள் சென்று விட்டார்.
ஒரு தடவை அல்ல... சிவாஜிராவ் எப்போதெல்லாம் சென்னை தெருக்களில் நண்பர்களுடன் நடந்து போகிறாரோ அப்போது எல்லாம் இத்தகைய சம்பவங்கள் நடந்தது. திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து 5 மாதங்கள் நிறைவு பெற்று இருந்தன. இந்த நிலையில் சிவாஜி ராவிடம் புதிய பழக்கம் ஒன்று உருவானது.
அது அமைந்தகரையில் உள்ள லட்சுமி டாக்கீஸ் தியேட்டரில் தினமும் படம் பார்க்கும் பழக்கம் ஆகும்.
அப்போது ஏற்பட்ட ஒரு ருசிகர தகவலை நாளை பார்க்கலாம்.
- பணத்தைப் பெற்ற வங்கிகள் அதைத் தேவைப்பட்டோருக்குக் கடனாகத் தந்து, வட்டியுடன் வசூலிக்கும் பொறுப்பை ஏற்றன.
- நம் அனைவருக்கும் கண்டிப்பாக ஒரு வங்கிக் கணக்காவது இருக்கும்.
மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். செல்வம் என்னும் சிம்மாசனத்தில் அமர யாருக்குத்தான் ஆசை இல்லை? பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பார்கள். முக்தி என்னும் கோட்டைக்குள் நுழையப்போகும் பிணத்துக்கே அந்த கதி என்றால், தினந்தோறும் வாழ்வுடன் போராடிக் கொண்டிருக்கும் நம் போன்ற சாதாரண மனிதர்களுக்கு பணத்தை சம்பாதிக்கவேண்டும், சேமிக்கவேண்டும், வசதியாக வாழ வேண்டும் என்ற உத்வேகம் வரக் கேட்பானேன்? ஆகவேதான் தொடர்ந்து பணம் வரும் வழிகளையும், அதனை சேமித்துப் பெருக்கும் பர்சனல் பைனான்ஸ் முறைகளையும் பார்த்து வருகிறோம்.
பர்சனல் பைனான்சில் முதலீடு என்பது கடன் (Debt) சார்ந்தவை, பங்கு (Equity) சார்ந்தவை என்று இரண்டாகப் பிரிக்கப்படுகிறது என்று பார்த்தோம். கடன் சார்ந்த முதலீடுகளில் இன்று வரை ராஜாவாக இருப்பவை வங்கிகள். பர்சனல் பைனான்சின் அடித்தளம் சேமிப்பு என்றால், சேமிப்பின் அடித்தளம் வங்கிகள். ஐயாயிரம் வருடங்களாக மனிதர்களுடன் உறவாடுபவை வங்கிச் சேவைகள். சுமேரியக் கோவில்களில் ஆரம்பித்து, இன்று நம் ஸ்மார்ட் போன்களில் உறையும் வரை வங்கியின் பயணம் நீண்ட நெடிய ஒன்று.
முதலில் மக்கள் தங்களிடம் மீதி இருக்கும் பணத்தை வங்கிகளில் போட்டு, தங்கள் பணத்துக்குப் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் தேவையானபோது, தேவையான அளவு தொகையை மட்டும் எடுத்துக் கொள்ளும் வசதி ஆகியவற்றைப் பெற்றனர். பணத்தைப் பெற்ற வங்கிகள் அதைத் தேவைப்பட்டோருக்குக் கடனாகத் தந்து, வட்டியுடன் வசூலிக்கும் பொறுப்பை ஏற்றன.
நம் அனைவருக்கும் கண்டிப்பாக ஒரு வங்கிக் கணக்காவது இருக்கும். இந்தியாவின் கடைக்கோடி மனிதனுக்கும் வங்கிச் சேவை கிட்ட வேண்டுமென்பதற்காக ஜன்தன் அக்கவுன்ட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாம் இருக்கும் ஊரில் உள்ள ஒரு வங்கியில் அக்கவுன்ட்டை ஆரம்பித்ததுமே பாஸ் புக், செக் புக், ஏ.டி.எம். கார்ட், இமெயில் அலர்ட், எஸ்.எம்.எஸ். அலர்ட் என்று அத்தனையும் நமக்கு வந்து விடுகின்றன.
வங்கி என்பது வெறும் சேவிங்ஸ் அக்கவுன்ட் மட்டுமல்ல; ரெக்கரிங் டெபாசிட், பிக்சட் டெபாசிட், 5 வருட வரி சேமிப்புத் திட்டம், சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டம், சுகன்யா சம்ரித்தி திட்டம் போன்ற டெபாசிட் திட்டங்களையும், வாகனக் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன், நகைக் கடன், தனி நபர் கடன், வேளாண்மைக் கடன், வியாபாரக் கடன், கரன்ட் அக்கவுன்ட் போன்ற கடன் திட்டங்களையும், டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட், லாக்கர் போன்ற வசதிகளையும், உலகளாவிய பணப்பரிமாற்ற வசதிகளையும் உள்ளடக்கிய அட்சய பாத்திரம்.
இங்கு உள்ள ஒவ்வொரு விதமான அக்கவுன்ட்டும் ஒவ்வொருவிதமான பயன் தரக்கூடியவை. சேவிங்ஸ் அக்கவுன்ட்: சேவிங்ஸ் அக்கவுன்ட் எனப்படும் எஸ்.பி. அக்கவுன்ட்டை எடுத்துக் கொண்டால், நம்மிடம் உபரியாக இருக்கும் பணத்தை பத்திரமாக வைத்து, அதற்கு வட்டியும் வழங்கும் ஓரிடம் என்று கூறலாம். மேலும் மாதாந்திர பில்கள், கடனுக்கான இ.எம்.ஐ., சேமிப்புக்கான எஸ்.ஐ.பி., இன்சூரன்சுக்கான ப்ரீமியம் –இவை எல்லாவற்றுக்கும் நம் எஸ்.பி. அக்கவுன்ட்டில் ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கலாம். அரசு தரும் மானியங்கள் இடைத்தரகர்கள் இன்றி, நம் எஸ்.பி.அக்கவுன்ட்டை வந்தடைகின்றன.
வெளிநாடுகளுக்குச் செல்வோர் இன்டர்நேஷனல் டெபிட் கார்ட் வாங்கிக் கொண்டால் அந்நியச் செலாவணி பற்றிய கவலை இன்றி எஸ்.பி. அக்கவுன்ட்டில் உள்ள பணத்தை செலவழிக்கலாம். மேலும் நம் எஸ்.பி.அக்கவுன்ட்டுகளில் இருந்து உலகின் எந்த மூலைக்கும் பணத்தை அனுப்ப இயலும். இன்று பல வங்கிகளிலும் 18 முதல் 65 வயது வரை உள்ளவர்களுக்கு எஸ்.பி.அக்கவுன்டுடன் ஆக்சிடென்டல் டெத் இன்சூரன்சும் தருகிறார்கள். வருடத்திற்கு ரூ.100 செலுத்தினால் 2 லட்சம், ரூ. 200 செலுத்தினால் ரூ.4 லட்சம் இன்சூரன்ஸ் கிடைக்கிறது. வருடத்திற்கு 100 அல்லது 200 ரூபாய் செலுத்தி வங்கியில் ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதன் மூலம் எளிதாக இதனைப் பெறலாம். நீங்கள் அக்கவுன்ட் வைத்திருக்கும் வங்கியில் இது குறித்த மேலதிகத் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
ரெக்கரிங் டெபாசிட்: இன்றைய எஸ்.ஐ.பி.யின் (SIP) பழைய வடிவம்தான் ரெக்கரிங் டெபாசிட். இதிலும் மாதாமாதம் பணம் சேர்த்து, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வட்டியுடன் திரும்பப் பெறலாம். ஸ்கூல் பீஸ், தீபாவளி, பொங்கல் செலவுகள், சுற்றுலா, துணி மணி செலவுகள் போன்ற வருடாந்திரச் செலவுகளுக்கு தனித்தனியாக ஆர்.டி. ஆரம்பித்து சேர்த்து வந்தால், செலவு வரும் நேரம் திகைக்க வேண்டியிருக்காது.

சுந்தரி ஜகதீசன்
பிக்சட் டெபாசிட்: பிக்சட் டெபாசிட் என்பது, பெரிய தொகையை டெபாசிட் செய்து மாதாந்திர வட்டி பெறுதல் அல்லது வட்டியை டெபாசிடிலிருந்து எடுக்காமல், அதனையும் குட்டி போட வைத்து பெரிய தொகையை இன்னும் பெரிய தொகையாக்குதல் என்ற இரு விதமான வழிகள் கொண்டது.
7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரை பிக்சட் டெபாசிட்டுகளை ஆரம்பிக்கலாம். 5 வருட வரி சேமிப்புத் திட்டமும் உள்ளது. வங்கிகளில் வைக்கப்படும் டெபாசிட்டுகளுக்கு ரூ.5 லட்சம் வரை அரசின் உத்திரவாதம் உள்ளது. பிக் டிக்கட் ஐட்டம்ஸ் என்று அழைக்கப்படுகிற மேற்படிப்பு, திருமணம், வாகனம் வாங்குதல், வீடு வாங்குதல் போன்ற பெரிய செலவுகளுக்கு சேமித்துவர பிக்சட் டெபாசிட் உதவும். இவை போன்ற பெரிய செலவுகளுக்கு கண்டிப்பாகக் கடன் தேவைப்படும். அந்தக் கடனுக்கு பத்து பர்சன்டாவது டவுன் பேமென்ட் தர வேண்டியிருக்கும். அதைச் சேர்ப்பதற்கும் வங்கிதான் வழி.
கடன்கள் என்றதுமே நமக்கு உடனே நினைவுக்கு வருவதும் வங்கிகள்தான். கந்து வட்டிக்காரர்கள் கையில் சிக்கி சின்னாபின்னமடைந்த சாதாரண மக்களுக்கு ஆபத்பாந்தவனாக வந்தவை பொதுத் துறை வங்கிகள். இன்று தனியார் வங்கிகள், ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள், என்.பி.எஃப்.சி. என்று எத்தனை வந்தாலும், கடன்களுக்கு பொதுத்துறை வங்கிகள் விதிக்கும் கட்டணங்களும், வட்டி விகிதமுமே குறைவாக உள்ளன. வங்கிகள் தரும் கடன்கள், நகைக் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன் என்று ஆரம்பித்து பிசினஸ் லோன், கார்பரேட் லோன் என்று படிப்படியாக வளர்ந்தன.
டெலிகாம் மற்றும் டிஜிடலைசேஷன் வருகைக்குப் பின் வங்கிகளின் சேவை, இன்டர்நெட் பேங்கிங், போன் பேங்கிங், ஆர்.டி.ஜி.எஸ்., என்.இ.எஃப்.டி., ஐ.எம்.பி.எஸ். என்று மேலும் இறக்கை கட்டிப் பறக்கின்றன. பேங்க்கின் இன்டர்நெட் பக்கத்தில் எந்த நிதியாண்டில் நம்மிடமிருந்து எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு வரிப்பிடித்தம் செய்துள்ளன என்பதைக் காட்டும் 26ஏஎஸ் படிவம் காணக் கிடைக்கிறது.
எஸ்.பி. அக்கவுன்ட்டில் அதிகப் பணம் சேர்ந்துவிட்டால் வங்கிக்கு சென்று எப்.டி ஆரம்பித்ததெல்லாம் அந்தக் காலம். இன்று அதற்கென இருக்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்தால் எப்பொழுதெல்லாம் நம் அக்கவுன்ட்டில் நாம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் சேர்கிறதோ, அப்பொழுதெல்லாம் ஒரு புதிய எப்.டி. ஒரு வருட காலத்திற்கு அன்றைய வட்டி விகிதத்தில் ஆரம்பிக்கப்படுகிறது. இதனால் உபரிப் பணம் குறைந்த வட்டியில் சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் இருப்பது தடுக்கப்படுகிறது. ஒருவேளை நம் சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் இருக்கும் பணத்தை விட அதிகப் பணத்திற்கு செக் கொடுத்தாலோ, அல்லது ஏ.டி.எம்.மில் எடுக்க முற்பட்டாலோ தேவையான அளவுப் பணம் இந்த எப்.டி.யில் இருந்து எஸ்.பி.அக்கவுன்ட்டுக்கு திரும்புகிறது.
முன்பெல்லாம் பிசினஸ் செய்பவர்களுக்கு மட்டுமே கரன்ட் அக்கவுன்ட் வசதி தரப்படும். இன்று உங்களிடம் ரூ.50000-க்கு பிக்சட் டெபாசிட் இருந்தால் போதும்; அதன் மீது ரூ.37500 வரை லிமிட் கொண்ட கரன்ட் அக்கவுன்ட்டை வங்கியில் கேட்டுப் பெறலாம். அவசரமாக ரூ.1000 தேவை என்றால் கூட இந்தக் கரன்ட் அக்கவுன்ட்டிலிருந்து செக் அல்லது ஏ.டி.எம். மூலம் எடுக்கலாம்; மறுநாளே கூட திரும்பக்கட்டலாம்; மறுபடி எடுக்கலாம். இதற்கான வட்டி, பிக்சட் டிபாசிட்டின் வட்டியைப் பொறுத்தது என்பதால் 8 சதவீதம் அல்லது 9 சதவீதம் வட்டியில் கடன் கிடைக்கிறது. பர்சனல் லோன், கிரெடிட் கார்டு போன்றவற்றில் 18 சதவீதம், 36 சதவீதம் என்று வட்டி கட்டுபவர்களுக்கு வெறும் 8 சதவீதத்தில் கடன் என்பது வரப்பிரசாதம் அல்லவா?
மியூச்சுவல் பண்டும், பங்குச்சந்தையும் மக்களின் மனதை ஆக்கிரமிக்கும் வரையில் தனிக்காட்டு ராஜாவாக விளங்கிய வங்கித் துறை இன்று பலம் குன்றுவதற்கு 3 காரணங்கள் உள்ளன:
முதலாவதாக, வங்கி பிக்சட் டெபாசிட்டுகளில் 1990கள் வரை 13 சதவீதமும், அதற்கு அதிகமாகவும் கிடைத்து வந்த வட்டி, தற்போது 3.50 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையே தரப்படுகிறது. (ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளில் அதிகம் கிடைக்கும்).
இரண்டாவதாக டெபாசிட்டுகளிலிருந்து கிடைக்கும் வட்டி ரூ. 40000-த்தை தாண்டினால் (சீனியர் சிட்டிசன்களுக்கு ரூ.50000) 10 சதவீதம் மூலவரிப்பிடித்தம் செய்யப்படுகிறது. இது முதலீட்டின் வளர்ச்சியை பாதிப்பதாக உள்ளது. (வரி கட்டவேண்டிய அவசியம் இல்லாதவர்கள் படிவம் 15 ஜி/எச் சமர்ப்பித்து வரிப் பிடித்தத்தை தவிர்க்கலாம்).
மூன்றாவதாக, வங்கி டிபாசிட்டுகளுக்கு ரூ.5 லட்சம் வரையே அரசின் உத்தரவாதம் உள்ளது. "இந்த உத்தரவாதத்துக்கு அவசியம் வரப்போவதில்லை; ஏனெனில் நம் வங்கிகள் பலம் வாய்ந்தவை" என்று நாம் உணர்ந்தாலும், நெருடல் தொடர்கிறது.
ஆனால் இன்றைய சூழ்நிலையில் பொருளாதார உலகில் வங்கிகள் இன்றி நாம் செயல்படமுடியாது. வள்ளுவர் இன்றிருந்தால் "பர்சனல் பைனான்ஸ் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் வங்கி வழி சேராதார்" என்று புதுக் குறளே எழுதி இருப்பார்.
ஆனால் போகும் இடங்களிலெல்லாம் புதிது, புதிதாக வங்கிக் கணக்குகள் ஆரம்பித்து ஒவ்வொன்றிலும் ரூ.500, ரூ.1000 என்று போட்டுவைப்பது தவறு. பொதுத் துறை வங்கிகளில் ஒன்று, தனியார் வங்கிகளில் ஒன்று என இரண்டு அக்கவுன்ட்டுகளை வைத்துக் கொண்டு மற்றவற்றை க்ளோஸ் செய்வது நல்லது.
நீங்கள் எத்தனை வங்கிகளில் அக்கவுன்ட் வைத்திருக்கிறீர்கள்?
- ராஜ் பகதூரின் வார்த்தைகள் சிவாஜி ராவ் மனதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
- அருண் ஓட்டலில் ஒரு அறையில் 3 பேர்தான் தங்க வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டு இருந்தது.
சிவாஜி ராவுக்கு திரைப்படக் கல்லூரி வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக பழகி விட்டது. அதுபோல அமைந்தகரை அருண் ஓட்டலில் நண்பர்களுடன் தங்கி இருந்து கல்லூரிக்கு வந்து செல்வதும் பழக்கத்துக்கு வந்து இருந்தது. நடிப்பு விஷயமாக சொல்லிக் கொடுக்கப்பட்ட ஒவ்வொன்றையும் சிவாஜி ராவ் கூர்மையாக கவனித்து மனதுக்குள் உள்வாங்கிக் கொண்டார்.
நடிப்பு பயிற்சி மற்றும் நடன பயிற்சி வகுப்புகளிலும் தவறாமல் பங்கேற்றார். நடிப்பு மீது அவருக்கு இருந்த ஆர்வம் திரைப்படக் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் அவர் மீது நல்ல மதிப்பை உருவாக்கி இருந்தது. எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த போதிலும் பணக்கஷ்டம் மட்டும்தான் சிவாஜிராவை படாதபாடுப் படுத்தியது.
சிவாஜி ராவ் அவ்வளவு கஷ்டத்திலும் பிரிஸ்டல் ரக சிகரெட்டுகளை புகைப்பதை பழக்கத்தில் வைத்து இருந்தார். கல்லூரி நண்பர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சிகரெட் புகைப்பதை அவரால் விடவே முடியவில்லை. இதனால் ஒவ்வொரு மாதமும் அவருக்கு பணத்தேவை இருந்துக் கொண்டே இருந்தது.
அந்த பணத்தேவையை பூர்த்தி செய்ய அவர் அடிக்கடி பெங்களூருக்கு சென்று பணியாற்றி வருவதை வழக்கமாக மாற்றி இருந்தார். ஒரு தடவை அப்படி அவர் பெங்களூருக்கு சென்று இருந்த போது நண்பர் ராஜ் பகதூரை சந்தித்து பேசிக் கொண்டு இருந்தார்.
சிவாஜி ராவுக்கு அதிகளவு பணம் தேவைப்படுவதை உணர்ந்த ராஜ்பகதூர் தனது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை கழற்றி சிவாஜி ராவ் கழுத்தில் போட்டு விட்டார். இதை வைத்துக்கொள். முக்கியமான நேரங்களில் உனக்கு இது கை கொடுக்கும் என்று கூறினார்.
ராஜ் பகதூரின் தன்னலமற்ற உதவியை கண்கூடாக அனுபவித்த சிவாஜி ராவுக்கு கண்ணீரை அடக்க முடியவில்லை. அப்போது ராஜ்பகதூர் ஒரே ஒரு அறிவுரையை கூறினார். சிகரெட் பிடிப்பதை குறைத்துக் கொள். நிறைய பணம் மிச்சம் ஆகும் என்றார். மேலும் சுத்தமாக பணம் கையில் இல்லாவிட்டால் இந்த தங்க சங்கிலியை அடகு வைத்து விடு. பிறகு மீட்டுக் கொள்ளலாம் என்றார்.
ராஜ் பகதூரின் வார்த்தைகள் சிவாஜி ராவ் மனதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இனி பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டு சென்னைக்கு திரும்பி வந்தார். ஆனால் வழக்கம் போல சென்னையில் சிவாஜி ராவுக்கு பணக்கஷ்டம் தொடர் கதையாகவே இருந்து கொண்டு இருந்தது.
இதன் காரணமாக அருண் ஓட்டலில் தங்கி இருந்த நண்பர்களுடன் அவர் பல தடவை சண்டைப் போட்டு இருக்கிறார். குறிப்பாக ரவீந்திரநாத்துக்கும், அவருக்கும் அடிக்கடி சண்டை வரும். ஆனால் சிவாஜி ராவ் அதை கண்டு கொள்ளமாட்டார். அவரது விருப்பப்படி செயல்பட்டு கொண்டே இருந்தார்.
அருண் ஓட்டலில் ஒரு அறையில் 3 பேர்தான் தங்க வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டு இருந்தது. ஆனால் வேணுகோபால் அறையில் சிவாஜிராவ் 4-வது நபராக இருந்தார். ஓட்டல் முதலாளி வரும் போது அவரது கண்களில் படாமல் சிவாஜி ராவ் ஒளிந்துக் கொண்ட நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்தன.
நாளடைவில் அருண் ஓட்டல் சிவாஜி ராவ் வீடு போலவே மாறிப் போனது. ஆனால் அவரிடம் இருந்த மூன்றே மூன்று உடைகளை மட்டுமே அவர் மாற்றி மாற்றி உடுத்த வேண்டி இருந்தது. இது ரவீந்திரநாத்துக்கு பிடிக்கவில்லை.
"டேய் என்னடா ஒரே டிரஸ்சை போட்டுக் கொண்டே இருக்கிறாய்" என்று ரவீந்திரநாத் கிண்டல் செய்வார். இதனால் சிவாஜி ராவ் தனது கண்ணில் யார் உடை தென்படுகிறதோ அந்த உடையை எடுத்து அணிந்துக் கொண்டு சென்று விடுவார். இதனால் ரவீந்திரநாத்துக்கும், அவருக்கும் மோதல் அதிகரித்தது.
ஒரு தடவை ரவீந்திரநாத் இதுபற்றி வேணுகோபாலிடம் புலம்பித் தள்ளினார். "சிவாஜி ராவ் உடைகளை சரியாக துவைப்பது இல்லை. ஒழுங்காக பல் துலக்குவது இல்லை. இவனை வைத்துக் கொண்டு இன்னும் என்ன கஷ்டம் எல்லாம் அனுபவிக்க போகிறோமோ. அவன் உள்ளாடைகளை கூட துவைப்பது கிடையாதாம்" என்றார்.
அவரை வேணுகோபால் சமரசம் செய்தார். "விடு பார்த்துக் கொள்ளலாம்" என்பார். சிவாஜி ராவ் மீது இருந்த பாசம் மற்றும் இரக்கம் காரணமாக வேணுகோபால் எதையும் கண்டு கொள்வது இல்லை.
ஒருநாள் சிவாஜி ராவ் புறப்பட்டு சென்றதும் வேணுகோபாலிடம் சென்ற ரவீந்திரநாத் இனியும் பொறுக்க முடியாது என்று கொந்தளித்தார். ஏன் என்ன நடந்தது என்று வேணுகோபால் கேட்டபோது, "இன்று நமது அறையில் நடந்ததை நீ அறிந்தால் உனக்கே கோபம் வந்து விடும்.
உனது டூத்பிரசை பயன்படுத்திதான் இன்று சிவாஜி ராவ் பல் துலக்கினான். உனக்கு தெரியுமா?" என்று ரவீந்திரநாத் கூறினார். இதை கேட்ட பிறகு வேணுகோபாலுக்கு என்னவோ போல் இருந்தது. அன்று இரவு அவர் சிவாஜி ராவை அழைத்தார். நான் சொல்வதை பதில் சொல்லாமல் பொறுமையாக கேட்க வேண்டும் என்று கூறி அறிவுரைகள் சொல்லத் தொடங்கினார்.
ஒரு அறையில் நாம் நான்கு பேர் இருக்கிறோம். எனவே சுத்தமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் பயன்படுத்தும் பொருட்களை எடுக்கக் கூடாது. அதுதான் நாகரீகம். உனக்கு நடிப்புப் பயிற்சிப் பெறுவதில் நிறைய ஆர்வம் இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் உடைகள் விஷயத்திலும், பழகும் விஷயத்திலும் நீ மாற்றங்கள் செய்தே ஆக வேண்டும்" என்றார்.
அதோடு வேணுகோபால் விடவில்லை. தொடர்ந்து மேலும் சில அறிவுரைகளை சொன்னார். அதை கேட்க...கேட்க... சிவாஜி ராவுக்கு மிகவும் அவமானமாக போய் விட்டது. தெரியாமல் செய்து விட்டேன். இனி இதுபோல் நடக்காது என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
அன்று முதல் சிவாஜி ராவின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. மற்றவர்கள் பொருளை தொடுவதை குறைத்துக் கொண்டார். குறிப்பாக மற்றவர்கள் உடைகளை அணிவதை முற்றிலுமாக தவிர்த்தார்.
மற்றவர்களை போல நாமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தனது பழக்க வழக்கங்களிலும் மாற்றங்களை செய்ய தொடங்கினார். சிவாஜி ராவிடம் ஏற்பட்ட இந்த மாற்றம் அவருடன் படித்த திரைப்படக் கல்லூரி மாணவர்களிடம் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
என்றாலும் அவரது பிடிவாதமும், முரட்டு குணம் மட்டும் மாறவில்லை. சில விஷயங்களில் என்ன நினைக்கிறாரோ அதை மட்டுமே செய்ய வேண்டும் என்பதில் விடா பிடியாக இருந்தார். அதிலும் கண்டக்டராக பணிபுரிந்த போது செய்த ஸ்டைல்கள் அனைத்தும் அப்படியே அவரிடம் தொடர்ந்தன.
தங்கி இருந்த அறையில், பஸ்சில், திரைப்படக் கல்லூரியில், சாப்பிடப் போகும் இடங்களில் எங்கு கண்ணாடி இருந்தாலும் அதன் முன்பு நின்று தலைமுடியை ஸ்டைலாக கோதி விட்டுக் கொள்வார். அந்த ஸ்டைலில் உடலை அப்படியும், இப்படியுமாக அசைத்து பார்த்து தன்னைத் தானே பாராட்டிக் கொள்வார். இந்த பழக்கத்தை மட்டும் அவர் எத்தனையோ பேர் கேலி-கிண்டல் செய்தாலும் விடவே இல்லை.
ஒருநாள் திரைப்படக் கல்லூரியில் நடனப் பயிற்சி கொடுக்கும் ஆசிரியர் புதிய நடனத்தை சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார். அந்த பயிற்சி வகுப்பு முடிந்ததும் அவர் இந்த நடனத்தில் கால் அசைவு முக்கியமானது. நாளை நான் உங்கள் அனைவரின் கால் அசைவுகளை பார்க்க வேண்டும். எனவே நாளை நீங்கள் வகுப்புக்கு வரும்போது கால்சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும் என்றார்.
சில மாணவர்கள் அதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தனர். எங்களிடம் கால் சட்டை இல்லை என்றனர். ஆனால் நடனப் பயிற்சி ஆசிரியர் கேட்கவில்லை. கால்சட்டை அணிந்து வராவிட்டால் வகுப்பில் இருந்து வெளியேற்றி விடுவேன் என்று எச்சரித்தார். இதை கேட்டதும் சிவாஜி ராவுக்கு மிகுந்த பயமாகி விட்டது.
அவரிடம் கால்சட்டை எதுவும் கிடையாது. மாத கடைசியில் கையில் பணம் இல்லை. கால்சட்டை எப்படி முடியும் என்று யோசித்தார். யாரிடமும் கேட்கவும் அவருக்கு மனம் வர வில்லை.
நடப்பது நடக்கட்டும் என்று மறுநாள் சிவாஜிராவ் பேண்ட் அணிந்துக் கொண்டு நடனப் பயிற்சி வகுப்புக்கு சென்றார். அதை கண்டதும் நடனப்பயிற்சி ஆசிரியருக்கு கோபம் வந்தது. சிவாஜி ராவை பார்த்து, "நீ வெளியே போ. கால்சட்டை இருந்தால் உள்ளே வா..." என்றார். சிவாஜி ராவ் கொஞ்சமும் யோசிக்கவில்லை. தனது பேண்ட்டை கழற்றினார். உள்ளாடையுடன் வகுப்பறையில் நின்றார்.
அவர் அணிந்து இருந்த அண்டர்வேர் நீளமான டிராயர் போல இருந்தது. அதை கண்டதும் எல்லோரும் சிரித்தனர். ஆனால் சிவாஜி ராவ் கண்டுகொள்ளவில்லை. அந்த உள்ளாடையுடன் நடனம் ஆடி அன்றைய பயிற்சி வகுப்பை சமாளித்தார். சிவாஜி ராவின் இந்த செயலை அவரது நண்பர்கள் நீண்ட நாட்களுக்கு சொல்லி... சொல்லி சிரிப்பது உண்டு.
இந்த நிலையில் சிவாஜி ராவின் திரைப்படக் கல்லூரி வாழ்க்கை அவருக்கு பல மறக்க முடியாத அனுபவங்களை கொடுப்பதாக அமைந்தது. ஒவ்வொரு நாளும் திரைப்படக் கல்லூரியில் நடிப்புக்கு பெற்ற பயிற்சியோடு வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களிலும் பயிற்சி பெறும் களமாக சென்னை வாழ்க்கை அமைந்தது. அவருக்கு இருந்த ஒரே பிரச்சினை பணப்பிரச்சினைதான்.
ஒரு தடவை திரைப்படக் கல்லூரியில் தொடர்ந்து படிப்பதற்கு கட்டணம் செலுத்த முடியாத மிகுந்த அவல நிலைக்கு சிவாஜிராவ் தள்ளப்பட்டார். அனைவரும் கல்லூரிக் கட்டணம் செலுத்தி விட்ட நிலையில் சிவாஜி ராவ் மட்டும் இனி படிக்க முடியுமா? என்ற பரிதாப நிலையில் தவித்தார்.
என்ன செய்வது என்று மனக்குழப்பத்துடன் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்தார். அங்கு அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்து இருந்தது.
அது என்ன ஆச்சரியம் என்பதை நாளை காணலாம்.
- வீட்டில் பிரசவம் பார்க்கும்போது பல பெண்களும், குழந்தைகளும் உயிரிழக்கிறார்கள்.
- கர்ப்பமாக இருக்கும்போது குங்குமப்பூ நிறைய சாப்பிட்டு அதனால் பிரச்சனைகளை சந்தித்தவர்கள் தான் அதிகம்.
தாய்மை அடையும் நேரம் என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் மிகவும் மகிழ்ச்சிகரமான தருணம் ஆகும். எனவே பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலகட்டம் என்பது கர்ப்பகாலம் மற்றும் பிரசவ நேரம் ஆகியவை தான். இதைத்தான் ஒவ்வொரு பெண்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்குகிறார்கள். அந்த அளவுக்கு கர்ப்பம், பிரசவம் ஆகியவை பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு வயதில் மூத்த பெண்கள் கூறும் தவறான அறிவுரைகள்:
கர்ப்ப காலமும், பிரசவ நேரமும் எல்லா பெண்களுக்கும் மகிழ்ச்சியான காலகட்டமாக அமைவதில்லை. கர்ப்பம், பிரசவம் ஆகியவை பெண்கள் மட்டுமே சந்திக்கும் பிரத்தியேகமான விஷயங்கள் ஆகும். இந்த விஷயங்களில் பெண்கள் பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகள் பலருக்கும், வயதில் மூத்த பெண்கள் பலரும் பல்வேறு அறிவுரைகளை கூறுவார்கள்.
ஆனால் அந்த அறிவுரைகளில் சரியான விஷயங்களும் இருக்கும், சில நேரங்களில் தவறான விஷயங்களும் இருக்கும். அதாவது தவறான விஷயங்களை தவறு என்று அறியாமலேயே அவர்கள் சரியானது என்று கூறுவார்கள். அப்படி நிறைய விஷயங்கள் கர்ப்பிணிகளின் காதில் வந்து விழும்.
ஆனால் இவற்றில் எது நல்லது? எது கெட்டது என்பது பல நேரங்களில் அந்த கர்ப்பிணி பெண்கள் அறியாத ஒரு முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. எனவே ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களும் இதைப்பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் இன்றைக்கு ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற முக்கியமான விஷயமான கர்ப்பம் மற்றும் பிரசவம் என்பது மிகவும் சீரான முறையில், நல்ல முறையில் இருக்க வேண்டும். அந்த கர்ப்பிணி பெண்கள் மன அழுத்தம் எதுவும் இல்லாமல், நல்ல மகிழ்ச்சியோடு இருந்தால் கண்டிப்பாக ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும். பிரசவத்தின்போது தாய் சேய் இருவரும் பாதுகாப்பாகவும் இருக்க முடியும்.
இந்த வகையில் கர்ப்ப காலத்தின்போது பெண்கள் எதிர்நோக்குகின்ற முக்கியமான சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள் ஆகியவை எக்கச்சக்கம் இருக்கிறது. மேலும் சமுதாய ரீதியாக ஏற்படும் பல பிரச்சனைகளும் கர்ப்பிணி பெண்களின் வாழ்க்கையில் பங்கு வகிக்கிறது.
வீட்டிலேயே பிரசவம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:
மருத்துவத்துறை இப்போது எவ்வளவோ முன்னேறியுள்ளது. ஆனால் இந்த காலகட்டத்திலும் வீட்டில் பிரசவம் பார்க்கப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பிரசவம் எங்கு, எப்படி, யாரால் பார்க்கப்படுகிறது என்று கடந்த 2018-ம் ஆண்டிலேயே உலக அளவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் நிறைய பேர் வீட்டில் பிரசவம் பார்க்கிறார்கள் என்பதை கண்டறிந்து உள்ளனர். இன்றும் நிறைய பேர் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதை நாம் கேள்விப்படுகிறோம். யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்தேன் என்று நிறைய பேர் கூறுகிறார்கள்.
பிரசவத்திற்காக ஆஸ்பத்திரிக்கு போனால் குளுக்கோஸ் ஏற்றுகிறார்கள், ஊசி போடுகிறார்கள், சிசேரியன் அறுவை சிகிச்சை செய்கிறார்கள், தையல் போடுகிறார்கள் என்பது அவர்களின் ஆதங்கமாக இருக்கிறது. பிரசவம் என்பது இயற்கையாக ஏற்படுவது தானே? கர்ப்பம் இயற்கையாக உருவாகும் நிலையில், பிரசவமும் இயற்கையாகத்தானே இருக்க வேண்டும் என்பது போன்று பலரது கருத்துக்கள் உள்ளன.
அந்த கருத்துக்களில் தவறு இல்லை என்றாலும் கூட, அதை முழுக்க முழுக்க சரியென்று பலரும் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அந்த காலத்தில் வீட்டில் பிரசவம் ஆகவில்லையா என்கிற நம்பிக்கையோடு, தேவையில்லாமல் மருத்துவரை பார்க்க வேண்டாம் என்று எண்ணி, வீட்டிலேயே பிரசவம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை இப்போதும் அதிகமாக உள்ளது.
இதைத்தான் அந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. அந்த ஆய்வுகளில் சொல்லியிருக்கக்கூடிய விஷயம், படித்தவர்கள் நிறைய பேர் வசிக்கும் சுவீடன் போன்ற நாடுகளில் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 0.1 சதவீதமாக உள்ளது.
ஆனால் மலேசியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வீட்டில் பிரசவம் பார்ப்பது 19 முதல் 20 சதவீதமாக இருக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதில் ஒரு விஷயத்தை மட்டும் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
யூடியூப் பார்த்து பிரசவம் பார்ப்பதை தவிருங்கள்:
வீட்டில் பிரசவம் பார்த்தவர்களில், பிரசவம் சரியாக நடந்த ஒருவர் வேண்டுமானால் அதை யூடியூப்பில் போடலாம். ஆனால் வீட்டில் பிரசவம் பார்க்கும்போது பல பெண்களும், குழந்தைகளும் உயிரிழக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாருமே அதை யூடியூப்பில் போடுவதில்லை. ஏனென்றால் யூடியூப்பை பார்த்து பிரசவம் பார்க்கும்போது தாயும், குழந்தையும் ஒருவேளை இறக்க நேரிட்டால் அது மிகப்பெரிய பிரச்சனையாகி விடும். எனவே யூடியூப் பார்த்து பிரசவம் பார்ப்பதை தவிருங்கள்.
அந்த வகையில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், ஒரு கர்ப்ப காலத்தில் பலரும் பலவிதமான மாற்றுக் கருத்துக்களை கூறுவார்கள். இன்றைக்கும் அந்த காலத்து பெரியவர்கள் சிலர் சொல்லுவார்கள். நாங்கள் அந்த காலத்தில் வீட்டில் தான் பிரசவம் பார்த்தோம். இன்றைக்குத் தான் பெரிய பெரிய மருத்துவமனைகள் வந்துள்ளன. பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சென்றால் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து விடுவார்கள். இப்படி சொல்கின்ற அந்தக்கால பெண்கள் அதிகம்.
காலம் காலமாக பழகி வந்த கலாசாரம் மற்றும் அவர்களுடைய சமூக பழக்க வழக்கம் ஆகியவற்றை பின்பற்றி கர்ப்பிணியாக இருக்கும் பெண்களுக்கு அந்த காலத்து பெண்கள் நிறைய அறிவுரைகளை சொல்வார்கள். நான் நிறைய பெண்களுக்கு பிரசவம் பார்த்திருக்கிறேன். எனக்கு தெரியாதா என்று விமர்சனம் செய்கிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
அவர்கள் இப்படி விமர்சனம் செய்வதற்கு அறிவியல் ரீதியாக பிரசவம் பற்றிய புரிதல் இல்லாததுதான் முக்கியமான காரணம் ஆகும். கர்ப்பம் மற்றும் பிரசவம் என்கின்ற இயற்கையான விஷயத்தின் அறிவியல் அடிப்படையே அவர்களுக்கு தெரிவதில்லை. இது தொடர்பான புரிதல் என்பது மிகவும் முக்கியம்.
அந்த புரிதல் இல்லாததால் தான் பிரசவத்தின்போது வருகிற சவால்கள், என்ன நடக்குமோ என்கிற குழப்பங்கள், இதனால் வருகிற பாதிப்புகள் பற்றி தெரியாமல், நிறைய பேர் ஒரு சில விஷயங்களை மட்டும் தெரிந்து கொண்டு வீட்டிலேயே பிரசவம் பார்க்கிறார்கள்.
மேலும் பிரசவம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்கிற தவறான கருத்துக்களையும் சொல்கிறார்கள். அதனால் தான் இன்றைக்கு கர்ப்ப காலத்தில் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகிறது.
குங்குமப்பூ அதிகம் சாப்பிட்டால் கருச்சிதைவு அபாயம்:
இதேபோல் கர்ப்ப காலத்தின்போது பெண்களுக்கு, எல்லோரும் பலவிதமான அறிவுரைகளை சொல்வார்கள். நான் இதைத்தான் சாப்பிட்டேன், எனது குழந்தை நல்ல கலராக இருந்தது. நான் இதை சாப்பிட்டேன், குழந்தை மோசமாக இருந்தது என்பார்கள்.
இந்த மாதிரி பலவிதமான உணவு பழக்க வழக்க முறைகளிலும், வாழ்க்கை முறைகளிலும், அவர்கள் என்னென்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதை தங்களுடைய அனுபவத்தில் இருந்து, இதுதான் சரி என்று எண்ணி, தவறான கருத்துக்களை சொல்வது இன்னும் அதிகமாக இருக்கிறது.
இன்றைக்கும் சமூக வலைதளத்திலோ அல்லது யூடியூப்களிலோ யாராவது எளிதாக சொல்லி விடுவார்கள். நான் கர்ப்பமாக இருக்கும்போது இதைத்தான் சாப்பிட்டேன், அதனால் எனது குழந்தை நல்ல கலராக இருந்தது என்று பதிவிடுவார்கள். ஆனால் அது உண்மையான தகவலாக இருக்காது.
அந்த காலத்தில் குங்குமப்பூ சாப்பிட்டால் தான் குழந்தை நல்ல கலராக இருக்கும் என்பார்கள். ஆனால் கர்ப்பமாக இருக்கும்போது குங்குமப்பூ நிறைய சாப்பிட்டு அதனால் பிரச்சனைகளை சந்தித்தவர்கள் தான் அதிகம். ஏனென்றால் குங்குமப்பூவில் இருக்கிற பல விதமான விஷயங்கள் கருவுக்கும், கரு வளர்ச்சிக்கும் பிரச்சனையாக இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்ட தகவல் ஆகும்.
இந்த வகையில் கருச்சிதைவு என்பது குங்குமப்பூ அதிகம் சாப்பிடுவதால் ஏற்படுகிறது என்பதை பல ஆய்வுகளில் உறுதி செய்திருக்கிறார்கள். ஆனால் இது தெரியாமல் நிறைய பேர் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை அழகாக இருக்கும், நல்ல நிறமாக இருக்கும் என்கிறார்கள்.
இதெல்லாம் தவறான கருத்துக்கள். இப்படி பலரும் சமூக ஊடகத்தில் சொல்லும் தவறான கருத்துக்கள் மற்றும் தவறான தகவல்களை, கர்ப்பிணிகள் சரியானது என்று கருதி, அதை பயன்படுத்தி, அதனால் பலவித பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.
குங்குமப்பூ விஷயம் போலவே, அடுத்ததாக கர்ப்ப காலத்தில் என்னென்ன சாப்பிட வேண்டும், என்னென்ன சாப்பிடக்கூடாது என்கிற சந்தேகங்கள் நிறைய கர்ப்பிணி பெண்களுக்கு இருக்கிறது. அதுபற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.
- அருண் ஓட்டலுக்கு வருவதற்கு சிவாஜி ராவ் சம்மதித்தார்.
- அரசியல்வாதிகளும் அங்கு அடிக்கடி கூட்டங்கள் நடத்துவது உண்டு.
பெங்களூரில் இருந்து சிவாஜி ராவ் புறப்பட்டபோது அவருக்கு ராஜ்பகதூர் பல அறிவுரைகளை சொல்லி இருந்தார். குறிப்பாக புகை பிடிப்பதை கண்டிப்பாக குறைக்க வேண்டும். இதனால் பணம் மிச்சப்படும் என்று அறிவுறுத்தி இருந்தார். ஆனால் சிவாஜி ராவால் இந்த அறிவுரையை கடைபிடிக்க இயலவில்லை.
அதே சமயத்தில் ராஜ்பகதூர் கூறியிருந்த மற்றொரு அறிவுரை சிவாஜி ராவ் மனதுக்குள் அடிக்கடி வந்து போனது. திரைப்படக் கல்லூரி வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதிக்க வாரக் கடைசி நாட்களில் பெங்களூருக்கு வந்து அரசு போக்குவரத்து கழகத்தில் கூடுதல் நேரம் பணிபுரிந்து பணம் சம்பாதிக்கலாம் என்று ராஜ்பகதூர் கூறி இருந்தது நினைவுக்கு வந்தது.
எனவே சிவாஜி ராவ் வாரக் கடைசி நாட்களில் பெங்களூருக்கு சென்று கூடுதல் நேரம் பணிபுரிந்து சென்னைக்கு திரும்பி வருவதை வழக்கத்தில் வைத்திருந்தார். என்றாலும் புதிய உடை வாங்க முடியாத நிலையில்தான் சிவாஜி ராவ் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.
இதற்கிடையே திரைப்படக் கல்லூரியில் மாணவர்கள் அனைவரும் சகஜமாக பழகத் தொடங்கி இருந்தனர். ஒவ்வொருவரின் வாழ்க்கை பின்னணி மற்றவர்களுக்கு தெரிய வந்தது. இதனால் நண்பர்களுக்குள் நட்புணர்வு அதிகரித்தது. இப்படியே ஒரு மாதம் கடந்து இருந்தது.
இந்த நிலையில்தான் சிவாஜி ராவ் பற்றிய தகவல்களை மற்ற நண்பர்கள் தெரிந்துக் கொள்ள ஆரம்பித்தனர். அப்போது சிவாஜி ராவ் சாதாரண விடுதி ஒன்றில் தங்கி இருந்து கஷ்டப்படுவது அவரது வகுப்பு தோழர்களான வேணுகோபால், ரவீந்திரநாத், ரகுநந்தன் ஆகியோருக்கு தெரிய வந்தது.
ஒருநாள் வேணுகோபாலும், ரவீந்திரநாத்தும் திடீரென சிவாஜி ராவ் தங்கியிருந்த விடுதிக்குள் சென்றனர். அங்கு சிவாஜி ராவ் ஒரு பாயை விரித்து தரையில் தூங்கும் நிலையை கண்டனர். அவர்களுக்கு கடும் அதிர்ச்சியாகி விட்டது.

சிவாஜி ராவை எழுப்பி, "டேய் இந்த அறையில் எப்படிடா தங்கி இருக்கிறாய்? ஏற்கனவே வெளியில் வெயில் தாக்கம் தாங்க முடிய வில்லை. உள்ளே அடுப்பு வெப்பம் வேறு வருகிறது. இந்த கடுமையான வெப்பத்தில் எப்படி தங்கி இருக்கிறாய்? சூடு பிடித்தே உடல்நலம் கெட்டு போய் விடுமே?" என்றனர்.
சிவாஜி ராவ் தலையை குனிந்து கொண்டார். கண்களில் கண்ணீர் மல்கி இருந்தது. முதல் ஒரு நிமிடம் மவுனமாக இருந்தார். பிறகு அவர், "நான் வசதியான வீட்டு பையன் இல்லை. சாதாரண கண்டக்டர் வேலை பார்த்து வந்தேன். குடும்பத்தில் யாருக்கும் அவ்வளவு வசதி கிடையாது. நண்பர்கள்தான் உதவி செய்கிறார்கள். அப்படி இருக்கும் போது நான் எப்படி சற்று வசதியான வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியும்?
எனக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை. சென்னையில் எனக்கு வேறு யாரையும் தெரியாது. சென்னையில் உறவினர்களும் கிடையாது. நான் எங்கு போக முடியும்? எனக்கு இந்த இடம் கிடைத்ததே பெரிய விஷயம். எனவேதான் இங்கு தங்கி விட்டேன்.
இங்கேயே எனக்கு காலை சாப்பாடு தருகிறார்கள். இரவிலும் உணவு கிடைக்கிறது. என் கையில் இருக்கும் பணத்துக்கு இதுதான் கட்டுப்படி ஆகிறது. எனவேதான் இந்த விறகு அடுப்பு வெப்பத்தை கண்டு கொள்ளாமல் இங்கு தங்கியிருந்து சமாளித்து வருகிறேன்" என்றார்.
சிவாஜி ராவ் சொல்ல... சொல்ல... வேணு கோபாலுக்கு மிகவும் வேதனையாகி விட்டது. இன்னும் சொல்லப் போனால் முதல் முதலாக அவருக்கு சிவாஜி ராவ் மீது இரக்கம் பிறந்தது. ஒரு வாழ்க்கை லட்சியத்துக்காக எந்த அளவுக்கு கஷ்டப்படுகிறார் என்று பிரமித்துப் போனார்.
இப்படிப்பட்ட நண்பனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவரது உள்மனது விடாப்பிடியாக சொன்னது. அடுத்த நிமிடமே அவர், "சிவாஜி ராவ் இனி நீ இங்கு இருக்க வேண்டாம். நாங்கள் எல்லோரும் அமைந்தகரையில் உள்ள அருண் ஓட்டலில் தங்கி இருக்கிறோம். நீயும் எங்களுடன் வந்து அங்கு தங்கிக் கொள்ளலாம்" என்றார்.
ஆனால் சிவாஜி ராவ் அதை ஏற்கவில்லை. வேண்டாம் வேணுகோபால் எனக்கு அது சரிப்பட்டு வராது என்றார். ஆனால் வேணுகோபால் விடவில்லை. இப்போதே புறப்படு என்று வலியுறுத்தினார். அப்போது ரவீந்திரநாத் முகம் மட்டும் மாறியது. அவருக்கு சிவாஜி ராவை அமைந்தகரை அருண் ஓட்டலுக்கு அழைத்துச் செல்ல விருப்பம் இல்லை.
ஏற்கனவே அவர் இருந்த அறையில் 3 பேர் இருந்தனர். எனவே சிவாஜி ராவ் வந்தால் உள்ளே தங்குவதற்கும், தூங்குவதற்கும் சிரமமாக இருக்குமோ என்று நினைத்தார். அவர் வேணுகோபாலை சற்று தொலைவுக்கு அழைத்துச் சென்றார். சிவாஜி ராவை ஓட்டலுக்கு கூப்பிடாதே. அவனை அங்கு வைத்து நம்மால் சமாளிக்க இயலாது. அவன் இங்கேயே இருக்கட்டும் என்று ரவீந்திரநாத் கூறினார்.
ஆனால் வேணுகோபால் அதை ஏற்கவில்லை. சிவாஜி ராவை எப்படியாவது அருண் ஓட்டலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். எனவே சிவாஜி ராவிடம் புறப்படு... புறப்படு என்று நச்சரித்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்துக்குப் பிறகு அருண் ஓட்டலுக்கு வருவதற்கு சிவாஜி ராவ் சம்மதித்தார்.
மறுநாளே அந்த விடுதி அறையை காலி செய்து விட்டு சிவாஜி ராவ் அந்த ஒரே ஒரு பையை எடுத்துக் கொண்டு அமைந்தகரை அருண் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தார். அந்த ஓட்டல் நான்கு மாடிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்ட ஓட்டல் ஆகும்.
சென்னையில் 1970-களில் இருந்த புகழ் பெற்ற ஓட்டல்களில் ஒன்றாக அமைந்தகரை அருண் ஓட்டல் இருந்தது. வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் முக்கிய பிரமுகர்கள் அங்குதான் தங்குவார்கள். அரசியல்வாதிகளும் அங்கு அடிக்கடி கூட்டங்கள் நடத்துவது உண்டு.
எனவே அருண் ஓட்டலை பார்த்ததும் சிவாஜி ராவுக்கு பிரமிப்பாக இருந்தது. வேணுகோபால் மற்றும் 16 திரைப்படக் கல்லூரி மாணவர்கள் அங்குதான் தங்கி இருந்தனர். 18-வது நபராக அந்த ஓட்டலுக்குள் சிவாஜி ராவ் காலடி எடுத்து வைத்தார். அந்த ஓட்டலில் 3-வது மாடியில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர்.
சிவாஜி ராவை வேணுகோபால் தனது அறையில் தங்கிக் கொள்ளும்படி கூறினார். அந்த அறையில் ஏற்கனவே 3 பேர் இருந்தனர். சிவாஜி ராவ் 4-வது நபராக அந்த அறைக்கு சென்றார். இதன் மூலம் சிவாஜி ராவுக்கு பிரச்சினை இல்லாமல் தூங்குவதற்கு ஒரு இடம் கிடைத்து விட்டது.
அருண் ஓட்டலில் அறை எண் 324 என்பதுதான் சிவாஜிராவ் வசித்த அறையாகும். 10க்கு15 என்ற அளவில் அந்த சிறிய அறை இருந்தது. ஏற்கனவே இருந்த 3 பேரில் 2 பேர் மட்டும்தான் கட்டிலில் படுத்து தூங்கும் வசதி பெற்று இருந்தனர். இதனால் சிவாஜி ராவ் அந்த அறையில் கீழே தரையில்தான் படுத்து தூங்க வேண்டியதாயிற்று.
அந்த அறையை வேணுகோபாலும், ரவீந்திர நாத்தும் மிக மிக சுத்தமாக வைத்து இருந்தனர். ஒரு கட்டில், மூலையில் ஒரு மேஜை. துணி அடுக்கி வைப்பதற்கு அலமாரி என்று அந்த அறை கச்சிதமாக காணப்பட்டது. விறகு அடுப்பு வெப்பத்தில் தூங்கி பழக்கப்பட்டு இருந்த சிவாஜி ராவுக்கு அந்த அறை சொர்கமாக தெரிந்தது.
அந்த அறைக்கு அருண் ஓட்டல் நிர்வாகம் மாத வாடகைக்காக ரூ.175 நிர்ணயம் செய்து இருந்தது. வேணுகோபாலும், அவருடன் இருந்த மற்ற 2 பேரும் சரிசமமாக பணம் கொடுத்து அந்த வாடகையை செலுத்தி வந்தனர். அதாவது ஒவ்வொரு மாதமும் அவர்கள் ஓட்டலில் தங்குவதற்கு 60 ரூபாய் செலவு செய்தனர்.
சிவாஜி ராவின் ஏழ்மை நிலை வேணுகோபாலுக்கு தெரிந்ததால் அவர் அதிக வாடகையை சிவாஜிராவிடம் கேட்கவில்லை. வாடகை பணத்துக்காக அவர் வலியுறுத்தவில்லை. என்றாலும் நண்பர்கள் நிர்பந்தம் செய்ததால் சிவாஜி ராவிடம் இனி மாத வாடகைக்காக 40 ரூபாய் தந்தால் போதும் என்று கூறி விட்டார்.
இதைக் கேட்டதும் சிவாஜி ராவ் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. திரைப்படக் கல்லூரியில் படிக்கும் இந்த 2 ஆண்டுகளிலும் நிம்மதியாக இங்கு தங்கி இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். அமைந்தகரையில் இருந்து மாநகர டவுன் பஸ்சில் ஜெமினி பாலம் வரை சென்று வரலாம் என்று சிவாஜி ராவ் திட்டமிட்டுக் கொண்டார்.
கல்லூரிக்கு கட்டணம் கட்டியாகி விட்டது. தங்குவதற்கு நல்ல இடமும் கிடைத்து விட்டது. ஆனால் சாப்பாடு சிவாஜி ராவுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்துக் கொண்டே இருந்தது. திரைப்படக் கல்லூரி கேண்டினில் தினமும் சாப்பிடுவது மிகப்பெரிய போராட்டமாக அவருக்கு இருந்தது.
நல்ல சாப்பாடு கிடைத்தால் நன்றாக இருக்குமே? என்று சிவாஜி ராவ் மனதுக்குள் ஏங்கினார். அதற்கும் அவர் நம்பி வணங்கிய ராகவேந்திரர் சுவாமிகள் வழி காட்டினார். அவரது திரைப்படக் கல்லூரி நண்பர் ரகுநந்தன் மூலம் அதற்கான வழி பிறந்தது.
ஒரு நாள் ரகுநந்தனிடம் சிவாஜிராவ் மனம் விட்டு பேசிக்கொண்டிருந்தார். நீ எங்கு தங்கி இருக்கிறாய்? என்று கேட்டார். அதற்கு ரகுநந்தன், "திரைப்படக் கல்லூரி அருகே இருக்கும் உட்லண்ட்ஸ் ஓட்டலில் எனது உறவினர் சங்கர்ராவ் மானேஜராக இருக்கிறார்.
எனவே நான் அந்த ஓட்டலிலேயே தங்கி இருக்கிறேன்" என்று கூறினார். இதைக் கேட்டதும் சிவாஜி ராவுக்கு ஆச்சரியமாக இருந்தது. ரகுநந்தன் தொடர்ந்து பேசுகையில் திரைப்படக் கல்லூரி படிப்பு நேரம் போக அந்த ஓட்டலில் வரவேற்பாளராக பணிபுரிவதாகவும் கூறினார். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து திரைப்படக் கல்லூரி கட்டணம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
அது மட்டுமின்றி உட்லண்ட்ஸ் ஓட்டலிலேயே தனக்குரிய சாப்பாட்டையும் பார்த்துக் கொள்வதாக ரகுநந்தன் கூறினார். இதைக் கேட்டதும் சிவாஜி ராவுக்கு மிகவும் உற்சாகமாகி விட்டது. நானும் அங்கு சாப்பிட வரட்டுமா? என்று சிவாஜிராவ் குழந்தைப் போல அப்பாவித்தனமாக கேட்டார்.
அதற்கு ரகுநந்தன் என்ன சொன்னார்? என்பதை நாளை பார்க்கலாம்.
- தங்கும் விடுதிகளுக்கும் செல்ல முடியாத நிலை.
- சிவாஜிராவால் அப்படி பேரம் பேசியவர்களிடம் தொடர்ந்து பேச இயலவில்லை.
திரைப்படக் கல்லூரியில் முதல் நாள் அறிமுக வகுப்பு சிவாஜிராவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. சினிமாவில் சாதித்தே தீரவேண்டும் என்ற ஆர்வமும், நம்பிக்கையும் சிவாஜி ராவிடம் தணியாத தாகமாக இருந்தது. அதனால்தான் அவர் அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து இருந்தார்.
2 ஆண்டு நடிப்பு பயிற்சிக்காக அந்த திரைப்படக் கல்லூரிக்கு 3 மாதத்துக்கு ஒரு தடவை 500 ரூபாய் கட்டணமாக கட்ட வேண்டும். முதல் 3 மாதத்திற்கான கட்டணத்தை சிவாஜிராவ் செலுத்தி விட்டார்.
கல்லூரி கட்டணம் போக தங்குவதற்கான இடத்துக்கு வாடகை கொடுக்க வேண்டும். தினசரி சாப்பிட வேண்டும். மற்ற செலவுகள் இருக்கிறது. அவற்றையும் சமாளித்து படிக்க வேண்டும்.
இவ்வளவு நிர்ப்பந்தங்களுடன் சிவாஜிராவ் திரைப்படக் கல்லூரி வாழ்க்கையை தொடங்கி இருந்தார்.
முதல் நாள் அறிமுகம் முடிந்ததும் கல்லூரி முதல்வர் நாளை முறைப்படி வகுப்புகள் தொடங்கும் என்று அறிவித்து விட்டு புறப்பட்டதும் மற்ற மாணவர்களும் கலைந்து சென்று விட்டனர்.
சிவாஜி ராவுக்கு எங்கு போவது என்றே தெரியவில்லை? ஏனெனில் சென்னையில் தங்குவதற்கு அவர் எந்த ஏற்பாடுகளும் செய்யாமல்தான் பெங்களூரில் இருந்து புறப்பட்டு வந்து இருந்தார். எனவே முதல் நாளே வாடகைக்கு வீடு தேடும் படலத்தை ஆரம்பித்தார். திரைப்படக் கல்லூரிக்கு அருகில் வீடு கிடைத்தால் நடந்தே வந்து விடலாம் என்ற எண்ணத்தில் அந்த பகுதி முழுக்க தெரு தெருவாக சென்று வாடகைக்கு வீடு இருக்கிறதா? என்று பார்த்தார்.
ஆனால் எங்குமே வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை. தங்கும் விடுதிகளுக்கும் செல்ல முடியாத நிலை. அதிக கட்டணம் கேட்பார்கள் என்பதால் முதல் நாளே சிவாஜி ராவ் தவித்துப் போனார். சிகரெட்டை புகைத் தப்படியே நடந்த அவருக்கு தங்குவதற்கு சரியான இடம் கிடைக்கவில்லை. இதனால் அன்று இரவு அவர் அண்ணா சாலையில் நடைபாதையிலேயே தங்கி விட்டார். இரவு முழுக்க அங்கேயே படுத்துத் தூங்கினார். கடுமையான கொசுக்கடிக்கு மத்தியில் நள்ளிரவுக்கு பிறகுதான் தூக்கமே வந்தது.
அடுத்த நாள் அதிகாலை எழுந்து அந்த பகுதியிலேயே காலை கடன்களை முடித்து விட்டு தயாரானார். நடைபாதை ஓரத்தில் இருந்த குழாயில் தண்ணீர் பிடித்து முகத்தை கழுவி உடை மாற்றி விட்டு புறப்படத் தயாரானார். அங்கிருந்து நடந்தே திரைப்படக் கல்லூரிக்கு வந்து சேர்ந்து விட்டார்.

அன்று.... திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி தொடங்கியது. மொத்த பயிற்சிக்கு 36 பேரும் ஒரே இடத்தில் இருந்தனர். மொழி வாரியாக பயிற்சி நடக்கும்போது மட்டும் அமர்முல்லா, சந்திரஹால், ரகுநந்தன், ரவீந்திரநாத், சிவாஜிராவ், வேணுகோபால் ஆகிய 6 பேரும் கன்னட மொழி வகுப்பில் இருந்தனர்.
முதல் நாள் சிவாஜி ராவ் மற்றவர்களிடம் அவ்வளவாக பேசவில்லை. தாழ்வு மனப்பான்மையோ என்னவோ அவர் மற்றவர்களிடம் இருந்து சற்று விலகியே இருந்தார். வகுப்பில் முதல் நாள் அவரிடம் அமைதி காணப்பட்டது. மற்ற மாணவர்கள் கன்னடத்தில் ஒருவருக்கு ஒருவர் சிரித்துப் பேசி ஜாலியாக இருந்தனர். அப்போது ரகுநந்தன் தாமாக முன்வந்து முதல் நபராக சிவாஜி ராவிடம் பேச்சுக் கொடுத்தார். "என் பெயர் ரகுநந்தன். ரகு என்று சுருக்கமாக கூப்பிடலாம்.
நான் உடுப்பியில் இருந்து வருகிறேன். உங்களைப் போன்றுதான் நானும் கர்நாடகாவில் இருந்து வந்து இருக்கிறேன். நாம் இருவரும் நண்பர்களாக இருக்கலாம்" என்றார். சிவாஜிராவுக்கு இதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. "நான் பெங்களூரில் இருந்து வந்து இருக்கிறேன். கண்டக்டராக வேலை பார்த்தேன்" என்று ரகுநந்தனிடம் சொல்லி சிறு அறிமுகம் செய்து கொண்டார். அதன் பிறகு ரகுவிடம் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.
அப்போது கன்னட மொழி பிரிவில் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் அமைந்தகரையில் உள்ள அருண் ஓட்டலில் (இப்போது அந்த இடத்தில் மிகப்பெரிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது) அறை எடுத்து தங்கி இருப்பதாக தெரிய வந்தது. மற்ற மொழி பிரிவில் உள்ள மாணவர்களும் அந்த ஓட்டலில் இருப்பதாக சிவாஜிராவ் அறிந்துக் கொண்டார்.
ஆனால் ஓட்டலில் தங்கும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்று நினைத்தார். மேலும் திரைப்படக் கல்லூரி அருகில் சிறிய அறை எதுவும் கிடைத்தால் போக்குவரத்து செலவு இருக்காது என்று நினைத்தார். எனவே அருண் ஓட்டலில் தங்குவதற்கு அவர் ஆர்வம் காட்டவில்லை.
இதனால் 2-வது நாளும் திரைப்படக் கல்லூரி வகுப்பு முடிந்ததும் மாலையில் வீடு தேடும் படலத்தை ஆரம்பித்தார். 4 சட்டை -பேண்ட் கொண்ட கைப்பையை எடுத்துக் கொண்டு தெரு தெருவாக அலைந்து வாடகைக்கு வீடு தேடினார். அப்போது சிவாஜி ராவுக்கு 3 விதமான இடையூறு உருவானது. முதலில் அவரிடம் திருமணம் ஆகி விட்டதா? என்று கேட்டனர். சிவாஜி ராவ் இல்லை என்றதும் பேச்சுலருக்கு வீடு கொடுப்பது இல்லை என்று சொல்லி வைத்தது போல எல்லோரும் மறுத்து விட்டனர். விடுதிகளிலும் கூட அவருக்கு இதே நிலைதான் ஏற்பட்டது.
2-வது அவருக்கு அறை கொடுக்க முன் வந்தனர். ஆனால் சினிமா துறையில் இருப்பதை அறிந்ததும் உடனடியாக மறுத்து விட்டனர். சினிமா துறையினர் மூலம் சிக்கல்கள் ஏற்படலாம் என்ற பயம் அந்தக் காலத்தில் இருந்து இப்போது வரை இருக்கத்தான் செய்கிறது.
3-வது இதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காதவர்கள் அதிக வாடகை கேட்டனர். அறையில் தங்குவதற்கு ஒருவர் சிவாஜி ராவிடம் 120 ரூபாய் வாடகை கேட்டார். முன் பணமாக 10 மாத வாடகை தொகையான 1,200 ரூபாயை தர வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். சிவாஜிராவால் அப்படி பேரம் பேசியவர்களிடம் தொடர்ந்து பேச இயலவில்லை.
இப்படி 3 விதமான சிக்கல்களை சந்தித்த சிவாஜிராவுக்கு 2-வது நாளும் சென்னை தெருவில் படுத்து தூங்க வேண்டிய நிலைதான் ஏற்பட்டது. 3-வது நாளும் அவருக்கு தெருவோர நடைபாதை தான் படுக்கையாக இருந்தது. தெருவில் படுத்து காலையில் தெருவோர குழாயில் குளித்து திரைப்படக் கல்லூரிக்கு சென்று வந்தார்.
3-வது நாள் இரவு தெருவோர நடைபாதையில் படுப்பதற்கு பயந்து பூங்கா ஒன்றுக்குள் சென்று பார்த்தார். அங்கு ஆங்காங்கே நீளமான சிமெண்ட் பெஞ்சுகள் இருந்தன. அதில் ஒரு பெஞ்சில் ஏறி படுத்தவர் அப்படியே தூங்கி விட்டார்.
இரவு 8 மணிக்கு பூங்கா காவலாளி தட்டி எழுப்பினார். "தம்பி 8 மணிக்கு பூங்காவை பூட்ட வேண்டும். வெளியே போங்க" என்று கூறினார். வேறு வழி இல்லாமல் மீண்டும் சிவாஜி ராவ் தெரு வோர நடைபாதைக்கு வந்து தூங்க ஆரம்பித்தார்.
திரைப்படக் கல்லூரி கேண்டினில் சாப்பிட்டதால் முதல் 3 நாட்களுக்கு சாப்பாடு பிரச்சினை இல்லாமல் இருந்தது. 4-வது நாள் சிவாஜி ராவுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. சரியான தூக்கம் இல்லை.... சரியான சாப்பாடு இல்லை... எங்கு போய் தங்குவது என்று ஒவ்வொரு பகுதியாக நடந்து கொண்டே இருந்தார்.
அதிர்ஷ்டவசமாக அன்று ஒரு விடுதியில் அவருக்கு சாதகமான பதில் கிடைத்தது.
அந்த விடுதியின் கீழ் தளத்தில் ஒரு அறை இருப்பதாக சொல்லி தங்கிக் கொள்ளும்படி கூறினார்கள். சிவாஜி ராவுக்கு மகிழ்ச்சி தாங்கிக் கொள்ள முடிய வில்லை. ஆனால் உள்ளே சென்ற பிறகுதான் அதிர்ச்சி காத்து இருந்தது.
அந்த அறையின் ஒரு ஓரத்தில் அடுப்பு வைத்து இருந்தனர். அதில் இருந்து கடுமையான வெப்பமும், புகையும் வந்து கொண்டே இருந்தது. அங்கு சமையல் வேலை நடந்தது. அதன் அருகில் சற்று தொலைவில் இருந்த இடத்தில் சிவாஜி ராவ் படுத்து தூங்கிக் கொள்ளும்படி கூறினார்கள்.
குறிப்பிட்ட ஒரு சிறு தொகையை மட்டும் வாங்கிக் கொண்டு காலையில் டிபன், இரவில் சாப்பாடும் அங்கேயே சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று கூறி இருந்தனர். இதனால் அந்த அறையில் இருந்த விறகு அடுப்பின் வெப்பத்தை தாங்கிக் கொண்டு அங்கேயே தங்கிக் கொள்ள சிவாஜிராவ் முடிவு செய்தார்.
அங்கிருந்தபடியே அவர் திரைப்படக் கல்லூரிக்கு சென்றுவர ஆரம்பித்தார்.
திரைப்படக் கல்லூரி சிவாஜிராவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக போதி மரமாக மாற ஆரம்பித்தது. திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருரகமாக இருந்தனர். சில மாணவர்கள் நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். கன்னட மொழி பிரிவு வகுப்பு மாணவர்களில் வேணுகோபால் மட்டும் நல்ல வசதியான குடும்பத்தில் இருந்து வந்திருந்தார். பெரும்பாலான மாணவர்கள் ஏழ்மை நிலையில் இருந்து ஒருவித ஏக்கத்துடனும், எதிர்பார்ப்புடனும் திரைப்படக் கல்லூரிக்கு வந்து இருந்தனர்.
முதல் வாரத்திலேயே இதை சிவாஜிராவ் உணர்ந்தார். தன்னைப் போல பல மாணவர்கள் வாழ்க்கையில் கஷ்டத்துடன் போராடி இந்த கல்லூரிக்கு வந்து இருப்பதை அறிந்தார். இதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து மாணவர்களிடமும் சிவாஜிராவ் பழகத் தொடங்கினார்.
சில விஷயங்கள் மட்டும் மற்ற மாணவர்களிடம் இருந்து சிவாஜி ராவை வித்தியாசப்படுத்தியது. சிவாஜி ராவ் எப்போதும் புகை பிடித்துக் கொண்டிருப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார். மற்ற மாணவர்கள் அந்த அளவுக்கு புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாக இருக்கவில்லை.
பெரும்பாலான மாணவர்கள் திரைப்படக் கல்லூரிக்கு வரும்போது நல்ல உடை அணிந்து வந்தனர். ஆனால் சிவாஜிராவிடம் நான்கே நான்கு ஜோடி உடைதான் இருந்தது. அதில் ஒரு உடை கண்டக்டர் உடை. அந்த கண்டக்டர் உடையையும் அணிந்துக் கொண்டு அவர் வகுப்புக்கு செல்லத் தொடங்கினார். முதலில் மற்ற மாணவர்கள் இதை ஒரு மாதிரியாக பார்த்தனர். சிவாஜி ராவ் மட்டும் நான்கு உடைகளை மாற்றி மாற்றி போடுவதை உன்னிப்பாக கவனித்தனர். ஆனால் சிவாஜி ராவ் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. ஒரு பொருட்டாகவும் எடுத்துக் கொள்ளவில்லை.
அவரிடம் இருந்த ஒரே எண்ணம் மிகப்பெரிய நடிகனாக வேண்டும் என்பதுதான். அந்த லட்சிய உணர்வோடு அவர் தினமும் வகுப்புக்கு வந்து கொண்டு இருந்தார். அந்த லட்சியம் அவர் மனதில் மிகப்பெரிய உறுதியாக மாறி இருந்தது. ஆனால் கையில் பணம் இல்லாதது அவரை வாட்டி வதைத்தது. எனவே விடுமுறை நாளில் பெங்களூருக்கு சென்று வேலை பார்க்கலாமா? என்று யோசித்தார்.
இதில் என்ன முடிவு எடுத்தார் என்பதை நாளை பார்க்கலாம்.






