என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

பிரச்சினைகளை எதிர்கொள்வது எப்படி?
- பிரச்சினை என்று வந்துவிட்டால் முதலில் அது உண்மையிலேயே பிரச்சினை தானா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்
- பொதுவாகப் பிரச்சினைகள், நம்மைப் பலவீனப்படுத்துவதற்காக அல்ல; பலப்படுத்துவதற்காகவே வருகின்றன.
பிரச்சினைகள் நிறைந்ததுதான் வாழ்க்கை!; எனினும் அவற்றை எதிர்கொண்டு வாழ்வது எப்படி? என்பதை அறிந்து கொள்வதற்கு ஆவலோடு காத்திருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.
நெல்லைத்தானே விதைத்தோம்! அதில் ஏன் புல்லும் முளைக்கிறது? என்று சலித்துக் கொண்டால் விவசாயம் பண்ணமுடியாது; பயிர்களோடு சேர்ந்து களைகளும் வளரும் என்பது இயற்கையின் விதி!; கூடவே அதிக மழை பெய்து பயிர்களை அழுகவும் வைக்கும்; மறுபுறம் மழையே பெய்யாமல் பயிர்கள் காய்ந்து கருகிடவும் நேரிடும்; எல்லா லாப நஷ்டக் கணக்குகளும் சேர்ந்ததுதான் வேளாண்மை; வணிகம் முதலான பிற தொழில்களும் அதைப் போன்றதுதான்.
வாழ்க்கையில் நல்லதையே நினைத்து, நல்லதையே திட்டமிட்டு, நல்லபடியாக நடக்க வேண்டும் என்று முயற்சி செய்தாலும், சில தடைகளும் தடங்கல்களும் நம்மையும் மீறி நமக்கு எதிராகக் கிளம்பும்!; நமது திறமைக்கும் உழைப்புக்கும் கடுமையான பரீட்சைகள் வைத்துப், போராடி ஜெயிப்பதற்கு நம்மைத் தயார்படுத்தும். நல்லவற்றை மட்டுமல்ல; தோல்விகள் உள்ளிட்ட எல்லாவற்றையும் எதிர்நோக்கி இருப்பதே வாழ்க்கை.
பிரச்சினைகள் என்றால் என்ன?. வாழ்க்கையின் போக்கில் நமக்குத் தொந்தரவாக, இடையூறாக அமைகின்ற அனைத்துமே பிரச்சினைகள் தாம்; நாம் நினைத்தபடி நடந்து மகிழ்ச்சி தராமல், தோல்விகளைத் தந்து துன்பத்தில் ஆழ்த்தி விடுபவையும் பிரச்சினைகள்தாம்.
விடியலில் விழித்து, இரவு உறங்கப்போகும் வரை நாள்முழுக்க, நாம் நினைத்தது நினைத்தபடி, வகுத்தது வகுத்தபடி நடக்காமல், நழுவல்களும், சறுக்கல்களும், தடங்கல்களும் சின்னஞ்சிறு அளவிலோ, அல்லது பெரிய அளவிலோ நடக்கும். அவை நம்மைத் திகைக்க வைக்கவும் வருந்த வைக்கவும் செய்தால் அவையும் பிரச்சினைகள்தாம். பிரச்சினைகள் பெரும்பாலும் வெளியிலிருந்து வருவதில்லை; 'தீதும் நன்றும் பிறர் தர வாரா!' என்பது புறநானூறு. ஆனாலும் வருகின்ற பிரச்சினைக்கான பழியை யார்மீது தூக்கிப் போடலாம் என்று வெளியாள்களைத்தான் ஒவ்வொரு மனமும் துடிதுடிப்புடன் தேடிக் கொண்டிருக்கும்.
சுந்தர ஆவுடையப்பன்
"நோய் நாடி! நோய் முதல்நாடி! அது தணிக்கும் வாய்நாடி!" என்று நோய்க்கான மருத்துவ முறையைத் திருவள்ளுவர் மூன்று கட்டங்களில் நிரல்படுத்திக் கூறுவார். இதையே நமக்கு வருகிற பிரச்சினைகளுக்கும் பொருத்திப் பார்த்து நிவர்த்தி செய்ய முயற்சிக்கலாம். நோயாக இருந்தாலும் பிரச்சினையாக இருந்தாலும் துன்பம் தருகிற வகையில் இரண்டும் ஒன்றுதானே!. நமக்குத் தொழில் ரீதியாகவோ அல்லது வேறு எதன் ரீதியாகவோ ஏதாவது பிரச்சினைகள் வந்தால், உண்மையிலேயே அவை பிரச்சினைகள் தானா? அவை பிரச்சினைகள் என்றால் என்ன வகைப்பட்டவை? என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.
பிறகு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யவேண்டும்; ஆணிவேரைப் பற்றித் தெரிந்து கொண்டால்தான், பிரச்சினையின் வீரியத்தைப் புரிந்துகொண்டு ஏற்றவாறு தீர்வுக்கான வழிமுறைகளைக் கண்டறியலாம். மூன்றாவதாக அந்தப் பிரச்சினைகளை எந்தெந்த வழிகளில் சென்று தீர்த்துவைக்க முடியும் என்னும் வழிமுறைகளின் மீதும் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே வருகின்ற பிரச்சினைகளுக்கும் சண்டைகளுக்குமான காரணங்களை எளிதில் கண்டறிந்துவிட முடியாது. சாப்பாட்டில் உப்புக்குறைவு என்று ஆரம்பிக்கும் சண்டைக்கு மூல காரணமாக, முப்பது வருடத்திற்கு முந்தி நடந்த திருமணத்தன்று வரதட்சணைப் பணம் ஆயிரம் ரூபாய் குறைவாகத் தந்ததாகக்கூட இருக்கலாம்.
குடும்பத்தில் கணவன்-மனைவியருக்கிடையே வருகின்ற சண்டைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு கண்டுவிடுவது நல்லது; இல்லையென்றால் அது கிளைவிட்டு வளர்ந்து, கொடிவிட்டுப் படர்ந்து ஏதேதோ பிரச்சினைகளுக்கெல்லாம் மூல காரணங்களாக வேர்விடக் கூடும். குடும்பச் சண்டைகளுக்கு வக்கீல் வைத்து வாதம் செய்து நீதிபதி வைத்துத் தீர்ப்புச் சொல்ல வேண்டும் என்பதெல்லாம் தேவையற்றது. எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் கணவனும் மனைவியும் எந்தவிதமான நிபந்தனையுமின்றிச் சமாதானமாகப் போய்விடுவதே ஆகச் சிறந்த நல்ல காரியம்.
மனிதர்கள் பொதுவாகவே விட்டுக் கொடுத்துப் போவதன் மூலமும் அனுசரித்துப் போவதன் மூலமும், பொதுவெளியில் பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுவிடலாம். சிலர் பிரச்சினைகளைப் பிரச்சினைகளாகவே பார்ப்பார்கள்; சில கெட்டிக்காரர்கள் பிரச்சினைகளைத் தீர்வுகளாகவே பார்ப்பார்கள். பிரச்சினைகளாகவே பார்ப்பவர்கள் எந்நேரமும் தீராத படபடப்புடனும் பரபரப்புடனுமே திரிவார்கள்; வெகுசீக்கிரத்தில் நோய்களுக்கும் மாத்திரைகளுக்கும் அடிமையாகிப் போவார்கள்; தீர்வுகளாகப் பார்க்கிறவர்கள் திசைகளுக்கே திசைகாட்டிகளாக வெற்றிமேல் வெற்றி குவிப்பார்கள்.
ஒரு குடும்பத்தில் ஒரு தந்தை, மகன். தந்தை எந்தவிதப் பரபரப்புக்கும் ஆளாகாமல் எப்போதும் அமைதியும் கனிவும் ததும்பத் திகழ்பவர்; மகன் எவ்வளவு பெரிய பிரச்சினை தனக்கு வந்தாலும் அப்பாவிடம் மனம் திறந்து சொல்லி அறிவுரைகளைப் பெற்றுக் கொள்பவன். மகன் வெளி வேலைகளுக்குச் செல்வதாலும், இளைய வயதினனாக இருப்பதாலும் அவனுக்கு அடிக்கடி பிரச்சினைகள் வரும்; அதுவும் பிரச்சினைகள் விதம்விதமாக வருவதும் உண்டு. சிறு குழந்தையாக இருக்கும் காலந்தொட்டே, பிரச்சினை என்று வந்துவிட்டால் மகன் மனக் கலக்கத்துடன் வந்து அப்பாவிடம் பிரச்சினை முழுவதையும் சொல்வான். எல்லாவற்றையும் முழுமையாகக் கேட்டுவிட்டு, தந்தை மகனிடம், " இவ்வளவுதானா பிரச்சினை?! வருத்தப்படாதே! விரைவில் தீர்ந்துபோகும்!" என்று ஆறுதலாகக் கூறுவார்; மகனும் எதிர்ப்பேச்சுப் பேசாமல் சென்றுவிடுவார்; பிரச்சினையும் அப்பா கூறியதுபோலவே சில நாள்களில் இல்லாமல் மறைந்து போய்விடும். தந்தை மகனிடையே இப்படித்தான் பிரச்சினைகள் குறித்த பேச்சு வார்த்தைகள் காலம் காலமாய் நடந்து கொண்டிருந்தன. எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் தந்தை கூறுகிற ஒரே ஒரு சொல்.. "இவ்வளவுதானா பிரச்சினை? விரைவில் தீர்ந்து போகும்!" என்பது மட்டுமே.
மகனும் இப்போது வளர்ந்து பெரியவனாகி விட்டான்; அனுபவங்களும் பெருகிவிட்டன. இப்போதும்கூடப் பிரச்சினை என்று வந்து விட்டால் தந்தையிடம் அவற்றைக் கூறாமல் இருப்பதில்லை; தந்தையும் கேட்டுவிட்டு, தனது வழக்கமான வார்த்தைகளைத் தெரிவிக்காமல் இருப்பதில்லை. ஆனால் முன்பெல்லாம் தனக்கு வந்திருக்கிற பிரச்சினைகளை ஒருவிதப் பதற்றத்தோடும் மனக் கலக்கத்தோடும் தந்தையிடம் தெரிவித்து வந்த மகன், தற்போதெல்லாம் எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் லேசான புன்னகையோடு தெரிவிக்கத் தொடங்கி விட்டான். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் தெரியுமா? மகனிடம் தந்தை கேட்டார். "நீங்களே சொல்லுங்கள்!" என்றான் மகன்.
"முன்பெல்லாம் பிரச்சினைகளைப் பிரச்சினைகளாகப் பார்த்தாய்!; அதனால் உனக்குப் பதற்றமும் வருத்தமும் மனசெல்லாம் பரவிக் கிடந்தது. நாளாக நாளாகப் பிரச்சினைகளின் தன்மைகளை உணரத் தொடங்கிவிட்டாய்!; கையாளவும் கற்றுக்கொண்டு விட்டாய்!. இப்போது நீ பிரச்சினைகளைத் தீர்வுகளாகக் காணத் தொடங்கி விட்டாய்!. அதனால் உன் முகத்தில் இப்போதெல்லாம் புன்னகை இழையோடத் தொடங்கி விட்டது. இனி எந்நாளும் வெற்றியே!" என்று வாழ்த்தினார் தந்தை.
அந்தத் தந்தையின் வார்த்தைகளில், 'இவ்வளவு தானா?!' என்கிற சொல்லுக்கு எவ்வளவோ மகத்துவம் இருக்கிறது. எதையும் பூதாகரம் பண்ணிப் பார்க்கும்போது பிரச்சினை பெரியது போலவும், தீர்ப்பதற்கு முடியாத பல சிக்கல்களை உடையதுபோலவும் தோன்றி விடுகிறது; மலைப்புத் தோன்றிவிட்டால் எப்போதுமே வெற்றி இலக்கை எட்டிப் பிடிக்க முடியாது. 'ஒரு நிமிடம்' என்பதை 'ஒரு நிமிடம்'தானே! என்று படக்கென்று தாண்டிச் சென்றுவிடவும் முடியும்; அல்லது 'அறுபது வினாடிகள்' இருக்கின்றனவே! என்று நீட்டிப் பகுத்து, உழன்று தவித்திடவும் கூடும்.
பிரச்சினை என்று வந்துவிட்டால் முதலில் அது உண்மையிலேயே பிரச்சினை தானா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்; பிறகு அது பிரச்சினைதான் என்று ஏற்றுக்கொண்டு துணிந்து எதிர்கொள்ளத் தயாராகிவிட வேண்டும். பிரச்சினை என்று வந்தவுடன் நம்மில் பலர் நமக்கு ஏன் வம்பு என்று அஞ்சி நழுவிவிடவே பார்ப்பார்கள்; பிரச்சினைகளை வெற்றிகொள்ளச் சிறந்த வழி, துணிச்சலுடன் எதிர்கொள்வது மட்டுமே!. பிரச்சினைகளைக் கண்டு அஞ்சி நாம் விலகிப்போக ஆரம்பித்தால் அந்தப் பிரச்சினைகள் மேலும் மேலும் வளருமேயொழிய தீர்ந்து போவதற்கு வாய்ப்பே கிடையாது.
ஒரு பிரச்சினையை மூன்று நாள்களில் தீர்க்க வேண்டும் என ஒரு நெருக்கடி வருகிறது என்று வைத்துக் கொள்வோம். சிலர் முதல் நாளிலிருந்து வேலையைத் தொடர்ந்து, மூன்று நாள்களுக்கும் சமமாகப் பகிர்மானம் செய்து, பணியை ஆற்றி முடிப்பார்கள். சிலரோ மூன்று நாள்களில் முதலிரண்டு நாள்களுக்கு எந்த வேலையையுமே செய்யாமல் வெறுமனே சும்மா இருந்துவிட்டு, மூன்றாவது நாளில் மட்டும் அவசர கதியில் ஈடுபட்டு அவதிப்படுவார்கள்; சில வேளைகளில் மூன்றாவது நாளில் கச்சிதமாகச் செய்தும் முடித்து விடுவார்கள். வேறு சிலரோ முதலிரண்டு நாள்களில் ஆராய்ந்து திட்டமிட்டுக், கடைசிநாளில் முழு வேகத்துடன் ஈடுபட்டுத் திட்டமிட்டபடி முடித்தும் காட்டுவார்கள். இந்த மூன்று விதமான அனுகுமுறையும் சரியானவையா? அல்லது தவறானவையா? என்று எளிதில் சொல்லிவிட முடியாது.
'12, 13, 14 ஆகிய மூன்று நாள்களில் ஒரு பிரச்சினக்குத் தீர்வினைக் கண்டுபிடித்து முடித்துவிட வேண்டும்!' என்று ஒரு காலக்கெடு நமக்கு விதிக்கப்பட்டிருந்தால், பொதுவாக இந்த மூன்று நாள்களையும் நாம் எப்படி அணுகுவோம்?. வழக்கம்போல, மற்ற எல்லாரையும் போலவே 12,13,14 ஆகிய ஏறுவரிசையிலேயே அணுகு வோம். ஆனால் எனக்குத் தெரிந்த ஒரு வித்தியாச மனிதரோ, " அந்தப் பிரச்சினையை 14,13,12 ஆகிய மூன்று நாள்களில் முடிக்க வேண்டும்!" என்று மேலிருந்து கீழாகச் சொல் வார். அதாவது தீர்த்து வைக்கப்பட வேண்டிய இலக்கு நாளான மூன்றாவது நாளை முதல் நாளாக வைத்துக்கொண்டு அதற்கடுத்த துணை நாள்களாக மற்ற இரண்டு நாள்களைக் குறிப்பிடுவார். இதுதான் தீர்வினை மையப் படுத்திக்கொண்டு, அல்லது தீர்வினை முதன்மைப் படுத்திக்கொண்டு பிரச்சினையை அணுகும் முறை.
சிலர் பிரச்சினையை ஆராய்கிறேன்பேர்வழி என்று கூறி, இல்லாததும் பொல்லாததுமாய்ப் பூதக்கண்ணாடி வைத்துப் பெரிதுபண்ணிப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். இவ்வகை அணுகுமுறை, தீர்வினை எட்டும் தொலைவை தூரப் படுத்திக்கொண்டே போகும். பொதுவாகப் பிரச்சினைகள், நம்மைப் பலவீனப்படுத்துவதற்காக அல்ல; பலப்படுத்துவதற்காகவே வருகின்றன. அவற்றை நேர்முறைச் சிந்தையோடு அணுகினால், தீர்வுகளும் சிக்கல்கள் ஏதுமின்றி நேர்முறையாகவே எளிதில் அகப்பட்டு விடும்.
தொடர்புக்கு- 9443190098






