என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- முதல்நாளே 3 படங்களில் ஒப்பந்தம்
    X

    ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- முதல்நாளே 3 படங்களில் ஒப்பந்தம்

    • சிவாஜிராவின் வாழ்க்கையில் அன்றைய தினம் மிகப் பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது என்பதை யாருமே அறிந்திருக்க மாட்டார்கள்.
    • கேடயங்களில் பொறிக்கப்பட்டு இருந்த சினிமா படங்களின் பெயரை சிவாஜிராவ் ஒவ்வொரு எழுத்தாக கூட்டி மெல்ல வாசித்தார்.

    சிவாஜிராவ் காரில் ஏறி அமர்ந்ததும் விண்ணில் பறப்பது போன்று உணர்ந்தார். அந்த கார் அமைந்தகரை ஓட்டலில் இருந்து டைரக்டர் பாலச்சந்தரின் அலுவலகம் நோக்கி புறப்பட்டது. சிவாஜிராவின் வாழ்க்கையில் அன்றைய தினம் மிகப் பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது என்பதை யாருமே அறிந்திருக்க மாட்டார்கள்.

    கார் முக்கிய சாலைகள் வழியாக சென்று கொண்டிருக்க சிவாஜிராவுக்குள் படபடப்பு அதிகரித்தது. டைரக்டர் பாலச்சந்தரை பார்த்ததும் என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கினார். பாலச்சந்தர் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் அளித்தால் நன்றாக இருக்கும் என்று மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டார்.

    இடைஇடையே பாலச்சந்தர் உதவியாளர் சர்மாவிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசினார். எப்படியாவது பாலச்சந்தர் சாரிடம் கேட்டு படத்தில் நடிக்க வாய்ப்பை பெற்று விட வேண்டும் என்று அவரது மனம் துடியாய் துடித்தது. ஆனால் மனதுக்குள் ஒருவித பதற்றமும் இருந்தது.

    அதேசமயத்தில் சிறுவயதில் அவர் பெற்றிருந்த ஆன்மீக யோகா பயிற்சி காரணமாக அடுத்த ஓரிரு நிமிடங்களில் மனதை சற்று அமைதிப்படுத்திக் கொண்டு இருந்தார். இந்த நிலையில் கார் கலாகேந்திரா என்று பெரிய அறிவிப்பு பலகையுடன் காணப்பட்ட ஒரு பங்களாவுக்குள் நுழைந்தது.

    பாலச்சந்தர் இங்குதான் இருக்கிறாரா? என்று சிவாஜிராவ் வியப்போடு பார்த்தார். அவரை சர்மா உள்ளே அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்றார். அலுவலகத்தின் வரவேற்பறையில் சிவாஜிராவ் உட்கார வைக்கப்பட்டார்.

    அந்த அறையை சிவாஜிராவ் மெல்ல நோட்டமிட்டார். வரவேற்பறை மிகவும் சுத்தமாக இருந்தது. எல்லா பொருட்களும் மிக மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அறையின் எந்த இடத்திலும் தூசி இல்லை. திரும்பிய பக்கமெல்லாம் நேர்த்தியான தூய்மை காணப்பட்டது.

    வரவேற்பறையின் பல்வேறு பகுதிகளிலும் டைரக்டர் பாலச்சந்தர் இயக்கிய படங்களின் வெற்றி விழா கேடயங்கள், பரிசுக் கோப்பைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. 'பூ வா தலையா', 'இருகோடுகள்', 'காவியத் தலைவி', 'அரங்கேற்றம்', 'அவள் ஒரு தொடர்கதை' என்று பலப்படங்களின் வெற்றிக் கேடயங்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்தன.

    அந்த கேடயங்களில் பொறிக்கப்பட்டு இருந்த சினிமா படங்களின் பெயரை சிவாஜிராவ் ஒவ்வொரு எழுத்தாக கூட்டி மெல்ல வாசித்தார். எவ்வளவு பெரிய இயக்குனர். அவர் நம்மை அழைத்து இருப்பது கடவுள் நமக்கு போட்ட பிச்சை என்று சிவாஜிராவ் மனதுக்குள் தோன்றியது.

    அருகில் பாலச்சந்தர் அறைக்குள் இருந்து சிரிப்பு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. அவர் யாருடனோ பேசுவதும் கேட்டது. சிவாஜிராவ் அந்த பேச்சை கூர்மையாக கேட்டபடியே இருந்தார்.

    அப்போது கலாகேந்திரா அலுவலக உதவியாளர் ஒருவர் அங்கு வந்தார். அவர் சிவாஜிராவிடம், 'காபி வேணுமா? டீ வேணுமா?' என்று கேட்டார். சிவாஜிராவுக்கு ஏதாவது ஒன்றை குடித்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. ஆனால் சினிமா வாய்ப்பு தேடி வந்த இடத்தில் ஏதாவது நினைத்து விடுவார்களோ என்று பயந்தார்.

    எனவே, 'எதுவும் வேண்டாம்' என்று மென்மையாக சொன்னார். என்றாலும் பாலச்சந்தர் உதவியாளர்கள் வலுக்கட்டாயமாக காபியை கொண்டு வந்து வைத்தனர். 'குடியுங்கள்' என்று சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு சென்றனர். சிவாஜிராவ் பிரமிப்புடன் இருந்தார். நடப்பது கனவா, நனவா? என்பது கூட அவருக்கு சந்தேகம் ஆகிவிட்டது. காபியை குடிக்கலாமா என்று நினைத்த போது அவரது அந்த சந்தேகத்தை தீர்க்கும் வகையில், 'சிவாஜிராவ் உங்களை டைரக்டர் சார் கூப்பிடுகிறார். உள்ளே செல்லுங்கள்' என்று சொன்னார்கள்.

    மேஜையில் இருந்த காபியை அப்படியே வைத்து விட்டு அடுத்த நிமிடம் சிவாஜிராவ் மனதில் பரபரப்புடன் எழுந்தார். எப்படி பாலச்சந்தர் அறைக்குள் சென்றார் என்றே தெரியவில்லை. அவரது கால்கள் தானாக நடந்து பாலச்சந்தரின் அறைக்குள் சென்றன. பாலச்சந்தரை பார்த்ததும் சிவாஜிராவின் கைகள் தாமாக கைக்கூப்பி வணக்கம் தெரிவித்தன. 'வணக்கம் சார்' என்றார். அப்போது டைரக்டர் பாலச்சந்தர் தனது மூக்குக்கண்ணாடி வழியே கூர்மையாக ஊடுருவி பார்த்தார்.

    சிவாஜிராவுக்கு அடுத்து என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அப்போது என்ன நடந்தது என்பதை சிவாஜிராவ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த பேட்டி வருமாறு:-

    பாலச்சந்தர் சார் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். இரு கை கூப்பி வணங்கினேன். அவர் கை நீட்டி, என்னுடன் கை குலுக்கினார்.

    'உட்காருங்கள்' என்றார். நான் உட்காராமல் நின்று கொண்டே இருந்தேன். வற்புறுத்தி, உட்காரச் சொன்னார். நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்தேன்.

    அவர் என்னைக் கூர்ந்து பார்த்தார். எனக்கு அப்போது தமிழும் சரியாகத் தெரியாது. ஆங்கிலமும் சரியாகத் தெரியாது. எந்த மொழியில் பேசுவது என்று எனக்குக் குழப்பம். கொஞ்ச நேரம் ஓடியது.

    'என்ன படிச்சிருக்கீங்க?' என்று பாலச்சந்தர் கேட்டார்.

    'எஸ்.எஸ்.எல்.சி. பாஸ்' என்றேன்.

    இது மாதிரி வேறு சில கேள்விகள் கேட்ட பின். 'நான் இதுவரை உங்கள் நடிப்பைப் பார்த்ததில்லை. ஏதாவது நடித்துக் காட்டுங்கள்' என்றார்.

    'எனக்குத் தமிழ் தெரியாதே' என்றேன்.

    'பரவாயில்லை. கன்னடத்தில் பண்ணுங்க' என்றார்.

    கிரீஷ்கர்னாட் எழுதிய 'துக்ளக்' நாடகத்தில் இருந்து ஒரு சீனை நடித்துக் காட்டினேன். பாலசந்தர் சாருக்கு மிகுந்த சந்தோஷம். 'ரொம்ப நல்லா இருக்கு' என்று பாராட்டினார்.

    பிறகு பாலச்சந்தர் சார் சொன்னார். இப்போது, 'அபூர்வ ராகங்கள்' என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு ரோல். அது சின்ன ரோல். என்றாலும், ரொம்ப பவர்புல் ரோல். அந்த ரோலில் உங்களை அறிமுகம் செய்யப் போகிறேன். அடுத்து, 'அவள் ஒரு தொடர்கதை' படத்தை தெலுங்கில் எடுத்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் ஜெய்கணேஷ் நடித்த ரோல் உங்களுக்கு" இவ்வாறு கூறிய பாலசந்தர், 'உங்களுக்கு தெலுங்கு தெரியுமா?' என்று கேட்டார். எனக்கு அப்போது தெலுங்கில் சில வார்த்தைகள்தான் தெரியும். என்றாலும் துணிந்து, 'தெரியும்' என்றேன்.

    பாலசந்தர் தொடர்ந்து, '3-வது ஒரு கதை இருக்கு. (மூன்று முடிச்சு). அதில் ஆன்டி ஹீரோ ரோலை உங்களுக்குக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்' என்று கூறிவிட்டு, 'நீங்கள் மட்டும் தமிழை நன்றாகக் கற்றுக் கொண்டால், உங்களை எங்கேயோ கொண்டு போய் விட்டு விடுவேன்' என்று அழுத்தம் திருத்தமாய் சொன்னார்.

    அதைக்கேட்டு மெய் சிலிர்த்துப் போனேன். ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்ச்சி. 'சரி. நீங்கள் போகலாம். விலாசம், போன் நம்பர் எல்லாம் கொடுத்து விட்டுப் போங்கள். படப்பிடிப்பின்போது உங்களுக்கு சொல்லி அனுப்புகிறேன்' என்றார் பாலசந்தர். அவர் சொல்ல சொல்ல எனக்கு கண்ணீர் வந்தது. அவர் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விட்டு வெளியில் வந்தேன். இவ்வாறு அந்த பேட்டியில் சிவாஜிராவ் கூறியிருந்தார்.

    டைரக்டர் பாலச்சந்தர் அறையில் இருந்து வெளியில் வந்த சிவாஜிராவ் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி தவழ்ந்தது. ஒருவித புத்துணர்ச்சி தோன்றியது. தன்னை வழிநடத்தும் ராகவேந்திர சுவாமிகளை மனதிற்குள்ளேயே நினைத்து வணங்கினார். அப்போது அவரிடம் சர்மா வந்து சிரித்த படியே, 'டைரக்டரை பார்த்து விட்டீர்களா? என்ன சொன்னார்?' என்று கேட்டார். சிவாஜிராவ் நடந்ததை சொன்னார். அதை கேட்டு ஆச்சரியப்பட்ட சர்மா, சிவாஜிராவுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

    பிறகு அவரிடம் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை வாங்கி டைரியில் குறித்துக் கொண்டு வழி அனுப்பி வைத்தார். காரில் ஏறிய சிவாஜிராவ் தன்னை ஜெமினி பாலம் அருகே இருக்கும் உட்லண்ட்ஸ் ஓட்டலில் இறக்கி விட்டு விடும்படி தெரிவித்தார். அவரது கையில் அப்போது 20 ரூபாய் மட்டுமே இருந்தது. அந்த 20 ரூபாயை வைத்துக் கொண்டு நண்பர்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். சிறிது நேரத்தில் பாலச்சந்தர் அலுவலக கார் சிவாஜிராவை உட்லண்ட்ஸ் ஓட்டலில் இறக்கி விட்டது.

    அந்த ஓட்டல் வரவேற்பறையை நோக்கி 'ரகு ரகு' என்று கத்திக் கொண்டே சிவாஜி ராவ் ஓடினார். அப்போது வரவேற்பறையில் ரகு வேறு யாருடனோ பேசிக் கொண்டு இருந்தார். சிவாஜிராவ் அலறிக் கொண்டு வருவதை பார்த்ததும் அவருக்கு அதிர்ச்சியாகி விட்டது.

    'டேய் என்னடா? என்ன விஷயம்? சொல்லு' என்று ரகு கேட்டார். அதற்கு சிவாஜிராவ், 'டேய் எனக்கு மூச்சே நின்று விடும் போலிருக்கிறது. இன்று நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை. பாலச்சந்தர் சார் என்னை அவரது படத்தில் நடிப்பதற்கு தேர்வு செய்து இருக்கிறார்' என்றார்.

    இதைக் கேட்டதும் ரகு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சிவாஜிராவுக்கு கை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். பாலச்சந்தர் சார் ஒப்பந்தம் செய்து இருக்கும் படத்தின் பெயர் என்ன என்று ரகு கேட்டார். அதற்கு சிவாஜிராவ் 'டேய் ரகு என்னை அவர் ஒரு படத்தில் நடிக்க மட்டும் ஒப்பந்தம் செய்யவில்லை. 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருக்கிறார். இன்று ஒரே நாளில் 3 படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அதில் 2 படங்கள் தமிழ் படங்கள், ஒன்று தெலுங்கு படம்' என்றார்.

    இதைக் கேட்டதும் ரகுவுக்கு மிக மிக ஆச்சரியமாக இருந்தது. என்ன சொல்கிறாய். மூன்று படங்களா என்று மயக்கம் வராத குறையாக கேட்டார். சிவாஜிராவும் ஆமாம் என்று சொல்லியபடி நண்பர்களுக்கு விருந்து கொடுக்க முடிவு செய்தார். கையில் இருந்த 20 ரூபாய்க்கும் மசால் தோசை, இனிப்பு மற்றும் காபி, டீ ஆர்டர் செய்தார். நண்பர்கள் அனைவரும் சிவாஜிராவை கட்டிப்பிடித்து கொண்டாடினார்கள்.

    அதன் பிறகு ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அது என்ன என்பதை நாளை பார்க்கலாம்.

    Next Story
    ×