என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

கர்ப்பப்பையில் நோய்க்கிருமிகள் பரவாமல் தடுக்கும் பாக்டீரியாக்கள்
- நாம் அன்றாடம் உட்கொள்கிற உணவுகள் ஜீரணமாகி, அதில் இருக்கின்ற கார்போஹைட்ரேட் தனியாக பிரிக்கப்படுகிறது.
- பெண்கள் மற்றும் ஆண்கள் என எல்லோருக்குமே பொதுவாக பாக்டீரியாக்கள் என்பது குடல், வாய் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இருக்கிறது.
நமது உடலின் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று நல்ல பாக்டீரியாக்கள். இந்த நல்ல பாக்டீரியாக்கள் தான் நமது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. நமது உடலில் நோய்களை ஏற்படுத்தக்கூடிய கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை இந்த நல்ல பாக்டீரியாக்கள் கட்டுப்படுத்தி அழிக்கின்றன. நமது உடலானது இயற்கையான முறையில் இயங்குவதற்கும் நல்ல பாக்டீரியாக்கள் மிகவும் உதவுகின்றன.
உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் உணவு பழக்க வழக்கம்:
நம்முடைய அன்றாட வாழ்க்கையானது மிகவும் ஆரோக்கியமாக இருப்பதற்கு குடலில் உள்ள இந்த நல்ல பாக்டீரியாக்கள் தான் காரணமாக அமைகின்றன. அதனால் தான் விஞ்ஞானிகள் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளிலும், நமது குடலில் உள்ள பாக்டீரியாக்கள், நல்ல பாக்டீரியாக்களாக இருக்க வேண்டும், குடல் பாக்டீரியா தான் நமது ஆரோக்கியத்துக்கான அடிப்படை என்று ஏற்கனவே கண்டுபிடித்துள்ளார்கள்.
ஏனென்றால் நாம் தினமும் உட்கொள்கின்ற உணவுகள் தான் நமது உடலுக்கான ஆரோக்கியம் மற்றும் உடலின் நன்மை, தீமை ஆகிய எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைகிறது.
இன்றைக்கு நாம் அன்றாடம் உட்கொள்கிற உணவுகள் ஜீரணமாகி, அதில் இருக்கின்ற கார்போஹைட்ரேட் தனியாக பிரிக்கப்படுகிறது. அதில் இருக்கும் புரதம் தனியாக பிரிக்கப்படுகிறது. மேலும் அமினோ அமிலம் தனியாக பிரிக்கப்பட்டு உறிஞ்சப்படுகிறது. உணவில் உள்ள கொழுப்பும் தனியாக பிரிக்கப்படுகிறது.
இவ்வாறு நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருட்களிலும் உள்ள கார்போஹைட்ரேட், புரதம், அமினோ அமிலம், கொழுப்பு ஆகியவை அதில் இருந்து பிரிக்கப்பட்டு அவை நமது உடலில் சேரும் வகையில் குடல் மூலம் உறிஞ்சப்படுவது தான் நமது உடலுக்கு மிகவும் தேவையான முக்கியமான செயலாகும். இந்த வகையில் நமது உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் முதல் முக்கியமான விஷயங்களாக, நம்முடைய உணவு பழக்க வழக்க முறைகளே அமைகிறது. நிறைய கார்போஹைட்ரேட் மற்றும் இனிப்பு வகைகளை சாப்பிட்டால் நீரிழிவு பாதிப்பு வருகிறது. உப்பு நிறைந்த உணவுகள் அதிகம் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது.
அதேபோல் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள பொருட்களை சாப்பிட்டால் நமது உடலிலும் கொழுப்பு அதிகமாகி மாரடைப்பு ஏற்படுகிறது. இதெல்லாம் அடிப்படையாகவே எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அப்படி என்றால் நமது உணவு பழக்க வழக்க முறைகளால் பலவிதமான பாதிப்புகளையும் நமது உடல் எதிர்நோக்குகிறது.
உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்கள்:
இப்படிப்பட்ட நிலையில் நமது குடலின் ஆரோக்கியம் ரொம்ப ரொம்ப முக்கியம் என்று மருத்துவர்கள் எதற்காக சொல்கிறார்கள் என்றால், இந்த குடல் பகுதியில் இருக்கின்ற சில கெட்ட பாக்டீரியாக்கள் தான் நமக்கு ஏற்படும் பலவிதமான வியாதிகளுக்கான அடிப்படையாக அமைகிறது. அதே நேரத்தில் இந்த குடல் பகுதியில் இருக்கிற நல்ல பாக்டீரியாக்கள் தான் பொதுவாக நமது உடலுக்கு பாதுகாப்பை கொடுக்கக்கூடியது ஆகும்.
நமது உடலில் உள்ள எல்லா உறுப்புகளும், குறிப்பாக வெளியில் தெரிகிற உறுப்புகள் எல்லாமே அன்றாட சூழ்நிலையில் பாக்டீரியா, வைரஸ் ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடுகிறது. அப்படி இருக்கும்போது நமது உடலை பாதுகாப்பதற்கு சில வழிமுறைகள் இயற்கையாகவே இருக்க வேண்டும். உதாரணத்துக்கு நமது உடலின் தோல் பகுதியை எடுத்துக் கொண்டால், அதில் தோல் பகுதியை பாதுகாக்கக்கூடிய பாக்டீரியாக்கள் நிறைய இருக்கிறது. இதில் நிறைய பாக்டீரியாக்கள் இழப்பு ஏற்படும் போது தான் நமக்கு நோய் தொற்றுக்கள் ஏற்படுகிறது. அதேபோல் தான் நமது குடல் பகுதியில் இருக்கிற சில நல்ல பாக்டீரியாக்கள் பலவிதமான நோய் தடுப்பு முறைகளுக்கான அடிப்படையாக அமைகிறது.
நமது உடலில் மட்டுமல்ல, பெண்ணுறுப்புகளிலும் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் முக்கியமான பல நோய் தடுப்புகளுக்கு வழிமுறையாக அமைகிறது. இதேபோல் நமது வாயில் உள்ள பாக்டீரியாக்களும் நோய்களை தடுக்க பயன்படுகிறது. இதேபோல் நமது உடலில் உள்ள எல்லா திறந்த வெளி உறுப்பு பகுதிகளிலும் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன.
நமது உடலில் வெளியே தெரியும் பகுதிகளில் இருந்து உள் நுழைவு பகுதிகளாக இருக்கும் வாய், கண், மூக்கு, காது, யோனிப்பகுதி, சிறுநீர்க்குழாய் ஆகிய எல்லா பகுதிகளிலுமே நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும். அந்த பாக்டீரியாக்கள் நமது உடலுக்கு ரொம்ப ரொம்ப தேவையானது.
டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
பெண்களின் கர்ப்பப்பைக்குள் தொற்றுக்கள் செல்வதை தடுக்கும் பாக்டீரியாக்கள்:
ஏனென்றால் நமது உடலில் நோயை உருவாக்குகிற பல பாக்டீரியாக்கள் வெளியே இருக்கிறது. அந்த பாக்டீரியாக்கள் நமது உடலில் உள்ளே நுழைவதற்கு முதல் தடுப்பு புள்ளியே நமது உடல் உறுப்புகளின் நுழைவு பகுதிகளில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தான். இந்த நல்ல பாக்டீரியாக்கள் அனைத்தும் நோய்க்கிருமிகளிடம் இருந்து நமது உடலுக்கு பாதுகாப்பை கொடுக்கின்றன.
பெண்கள் மற்றும் ஆண்கள் என எல்லோருக்குமே பொதுவாக பாக்டீரியாக்கள் என்பது குடல், வாய் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இருக்கிறது. இதற்காகத்தான் எப்போதும் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். நமது வாய் பகுதியில் ஆரோக்கியமற்ற கெட்ட பாக்டீரியா வரக்கூடாது என்பதற்காகத் தான் தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும் என்று சொல்கிறோம். அதேபோல் பெண்களின் பெண் உறுப்புகளில் இருக்கிற சில நல்ல பாக்டீரியாக்கள் அவர்களின் ஆரோக்கியத்துக்கு ரொம்ப முக்கியமான ஒரு பங்கை வகிக்கிறது. அதாவது பெண்களின் கர்ப்பப்பைக்குள் செல்கிற எந்தவொரு தொற்றுக்களையும் உள்ளே செல்லாமல் தடுப்பதற்கு இந்த நல்ல பாக்டீரியாக்கள் முக்கியமான வேலைகளை செய்கிறது.
அது என்ன வேலைகளை செய்கிறது என்று பார்த்தால், பெண்ணுறுப்பில் உள்ள யோனி என்கிற குழாயில் தான் கர்ப்பப்பையின் வாய் திறக்கும். யோனிப்பகுதி குழாயின் மறுபுறமானது நமது உடலின் வெளிப்புற பகுதியில் திறக்கும். இந்த அமைப்புகள் இப்படி இருக்கும் நிலையில் கர்ப்பப்பை நேரடியாக உடலின் வெளிப்புற பகுதியில் திறப்பது கிடையாது.
யோனிப்பகுதியை பாதுகாக்கும் அமிலத் தன்மை நிறைந்த பாக்டீரியாக்கள்:
பெண்கள் நிறைய பேருக்கு இந்த விஷயத்தில் சந்தேகம் ஏற்படும். என்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்கள் பலரும் இதை கேட்பார்கள். 'டாக்டர் கர்ப்பப்பையில் நோயை உருவாக்குகின்ற தொற்றுகள் கர்ப்பப்பைக்குள் தானாகவே போய்விடுமா?' என்பார்கள்.
கண்டிப்பாக அப்படி தொற்றுக்கள் கர்ப்பப்பைக்குள் செல்ல முடியாது. ஏனென்றால் யோனி குழாயில் உள்ள பாதுகாப்பு அம்சமானது, எந்தவித நோய் தொற்றுக்களுமே கர்ப்பப்பையின் உள்ளே செல்ல விடாமல் தடுக்கும். இந்த யோனி பகுதியில் இருக்கிற நல்ல பாக்டீரியாக்கள் உருவாக்குகிற சில பாதுகாப்பு விஷயங்கள் தான் இந்த நோய் தாக்கும் கிருமிகள் நமது கர்ப்பப்பைக்குள் செல்ல விடாமல் தடுக்கிறது. நாம் ஆரோக்கியமாக இருக்க அந்த நல்ல பாக்டீரியாக்கள் தான் முக்கியம்.
அதனால் தான் யோனி பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் எப்போதுமே அமிலத்தன்மை பி.எச். நிறைந்த பாக்டீரியாக்களாக இருக்கும். அதன் அமிலத்தன்மையானது 4.5 என்ற அளவில் பராமரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த அமிலத்தன்மை பி.எச். அளவானது மாறுபட்டு காரத்தன்மை பி.எச். உருவானால் தொற்றுகள் பரவலாம்.
அதனால் தான் இந்த யோனிப்பகுதியில் உள்ள பாக்டீரியாவின் அமிலத்தன்மை பி.எச். அளவை மிகவும் கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம். நமது உடலில் எப்போதும் இயற்கையாகவே நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இதனை லாக்டோபேசிலிஸ் என்று சொல்வோம். லாக்டோபேசிலிசில் கிரிஸ்பேக்டர்ஸ், கெசேரி, ஜென்சினி ஆகியவை மிகவும் பொதுவான லாக்டோபேசிலிஸ் ஆகும். இதனுடைய தன்மையே இந்த அமிலத்தன்மை பி.எச். அளவை 3.5 முதல் 4.5 ஆக வைத்துக் கொள்ளும். அப்படி இருந்தால் தான் எந்தவித தொற்றுக்களும் உள்ளே வர முடியாது.
நமது கர்ப்பப்பையின் பி.எச். ஆல்கலைன், இது கர்ப்ப வாயில் இருக்கும் பி.எச். ஆகும். இதன் அளவானது 7.4 ஆகும். நமது உடலில் உள்ள எல்லா திரவங்களும் 7.4 என்ற அளவில் தான் இருக்க வேண்டும். நமது உடலில் உள்ள ரத்தமே ஒரு ஆல்கலைன் தான். அதுவும் 7.4 என்ற அளவில் தான் இருக்கும். அதனால் தான் பல நேரங்களில் பல தொற்றுக்கள் வெளியில் இருந்து உள்ளே வராமல் தடுப்பதற்கு அமிலத்தன்மை அதிக மாக இருக்கின்ற பி.எச்., லாக்டோபேசிலிசில் உருவாகிறது. எனவே பெண்களை பொருத்த வரைக்கும் இந்த கர்ப்ப்பப்பை வாயில் இந்த பி.எச்.ஐ பராமரிப்பது இந்த லாக்டோபேசிலிஸ் தான். இதனால் கர்ப்பப்பையானது நோய் தொற்றுக்கள் பரவாமல் பாதுகாக்கப்படுகிறது.
ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் இந்த நல்ல பாக்டீரியா பழுதானாலோ அல்லது அழிக்கப்பட்டாலோ அல்லது குறைவானாலோ நமது உடலில் நோய்க்கிருமிகள் எளிதாக தொற்றிக்கொள்ளும். அது பல்வேறு பிரச்சி னைகளையும் ஏற்படுத்தும். நமது உடலில் அந்த நல்ல பாக்டீரியாக்கள் அழிவதற்கான காரணங்கள் என்ன? அடுத்த வாரம் பார்ப்போம்.






