என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • மன்னிப்பு என்பது ஒருவர் இழைத்த தீமையை முழுமையாக மறந்து விடுவது என்பதில்லை.
    • மன்னிப்புக் கேட்பதும் மன்னித்து விடுவதும் கோழைத்தனமான செயல் என்று சிலர் கருதுகிறார்கள்;

    மன்னித்தல் என்னும் மகத்துவம் வாய்ந்த குணத்தைப்பற்றி அறிந்துகொள்ள ஆவலோடு காத்திருக்கும் அன்பு வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

    'தவறு செய்வது மனித இயல்பு! அதனை மன்னிப்பது தெய்வ இயல்பு!' என்பது சான்றோர் வழக்கு. இதையே வேறுவிதமாகக் குறிப்பிட்டால், 'செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்பது மனித குணம்!; அதனைப் பெருந்தன்மையோடு மன்னித்துவிடுவது மாமனிதனின் குணம்!". தவறு செய்தவர்கள், தண்டனைக்குரிய குற்றமே இழைத்தவர்கள் என்றாலும் அதனை மன்னித்துத், தண்டனைகள் கிடைக்காமல், அவர்கள் பிழைத்துப் போகட்டும் என்று விட்டு வைப்பதற்குப் பெரிய மனது தேவைப்படும்.

    அன்றாட வாழ்வியலின் போக்கில் ஏற்படும் சிறுசிறு சறுக்கல்களும் வழுக்கல்களுமே தவறுகள் ஆகும்; இவை நேர்ந்துவிடாமல் வெகு கவனமாக நடத்தையில் அக்கறை காட்டுவதும், பிழைகள் இயல்புதான் என்றாலும், அவற்றையும் திருத்திக்கொள்வதற்கு எப்போதும் தயாராக இருப்பதும் மாண்புடைய மனித குணமாகும். சாலையில் நடந்து செல்லும்போது, பாதைகள் ஒரே சீரானவையாக இருப்பதில்லை; வளைவு நெளிவுகள் உண்டு; மேடு பள்ளங்கள் உண்டு; குண்டு குழிகள் உண்டு; கற்களும் முட்களும் உண்டு; இவற்றையெல்லாம் கவனத்தில் வைத்துத்தான் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

    போதாக்குறைக்கு நாம் எடுத்து வைக்கும் அடிகளுக்கிடையேயும் வேறுபாடுகள் உண்டு; கவனக்குறைவால் தள்ளாட்டங்கள் உண்டு; தடுமாற்றங்களும் உண்டு. இவ்வளவு இடையூறுகளுக்கு மத்தியில் நாம் வெகு சரியாகப் பயணிப்பது என்பது இயல்பானது அல்ல. இதே பிரச்சனைகளோடு, எதிரும் புதிருமாய், குறுக்கும் நெடுக்குமாய் நம்மைப்போல் பலரும் பயணிக்க நேரிடும். இப்பயணத்தில் தவறுகள் ஏற்படாமல், விபத்துகளில் சிக்காமல் பயணிக்க முடியுமா?.

    அதனால்தான் மனிதர்கள் எப்போதும் மன்னிப்புக் கேட்பதற்குத் தயாராய் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு மனிதரும் முதலில் தம்மையறியாமல் தாம் செய்யும் தவறுகளுக்குத் தம்மிடமே மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்க வேண்டும். அடுத்து, நம்மால் அடுத்தவர்களுக்கு நேரிடும் இடையூறுகளுக்கும் நிபந்தனையற்ற முறையில் மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்க வேண்டும்.

    மூன்றாவதாக, அடுத்தவரால் நமக்கு இடையூறு ஏற்படும் தருணங்களில், அவர்கள் மன்னிப்புக் கேட்க நேரிட்டால், அதனை முழுமனத்துடன் மன்னிக்கவும் கருணையோடு காத்திருக்க வேண்டும்.

    மன்னிப்பு என்கிற மாபெரும் சக்தி, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற பகையுணர்வை, எதிர்மறைச் சிந்தனைகளை, வன்மத்தை, நான் என்னும் அகம்பாவத்தை வேரோடு அழித்து மனித நேயத்தை, அன்பை, கருணையை, அமைதியை அளவுகடந்த நிலையில் பரவச் செய்கிறது.

    யார்? யாரை மன்னிப்பது? என்கிற அடிப்படையானதொரு கேள்வி எல்லார் மனதிலும் எழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒரு குடும்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற பெற்றோர், பிள்ளைகள், கணவன் மனைவி இவர்களெல்லாம் ஒருவருக்கொருவர் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதும், மன்னித்தேன் என்று மன்னிப்பு வழங்குவதும் தேவையற்ற செயல்கள்; அப்படி ஒருவருக்கொருவர் மன்னித்தலில் தான் மகிழமுடியும் என்றால் அதிலும் தவறில்லை என்றே கூறலாம்.

    ஆனால் பிடிவாதமாக 'மன்னிப்புக் கேட்டால்தான் உண்டு!', 'மன்னித்தால் தான் உண்டு!' என்று கணவன் மனைவிக்கு இடையேயோ, பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையேயோ ஆணவப் போட்டிகள் அரங்கேறிவிடக் கூடாது. இதையே நண்பர்களிடமோ, சக அலுவலர்களிடமோ, முன்பின் அறிமுகமில்லாத வெளியாட்களிடமோ மன்னிப்புக் கேட்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டால், நிச்சயம் மன்னிப்புக் கேட்கவோ அல்லது மன்னிக்கவோ தயங்கிடக் கூடாது.

    சுந்தர ஆவுடையப்பன்


     

    மன்னிப்புக் கேட்பவர் உயர்ந்தவர் என்றோ, மன்னிக்கிறவர் உயர்ந்தவர் என்றோ ஆணவப்போக்கில் ஒரு முடிவுக்குத் திடீரென வந்துவிடவும் கூடாது. உண்மையில் காணப் புகுந்தால், அவர்களின் பணிவு மற்றும் விட்டுக் கொடுக்கும் தன்மைகளின் அடிப்படையில், இருவருமே உயர்ந்து நிற்கிறவர்களாகவே திகழ்கிறார்கள். இரண்டுபக்கத்தில் உள்ளவர்களுக்கும் மன்னிப்பின் மாண்பு உணர்ந்து கொள்ளப்பட்டதாகவே திகழ வேண்டும்.

    ஒரு நாட்டின் அரசர் அந்த நாட்டின் வரவு செலவுக் கணக்கைச் சரிபார்த்துக் கொண்டிருந்தார். அந்த நாட்டின் அரண்மனைச் சேவகன் ஒருவன் பத்தாண்டுகளுக்குமுன் பத்தாயிரம் பொற்காசுகள் அரசாங்கத்திடமிருந்து கடனாகப் பெற்றிருந்ததையும், அதில் இன்று வரை அசலாகவோ வட்டியாகவோ ஒருகாசுகூடச் செலுத்தவில்லை என்பதையும் தணிக்கையில் கண்டுபிடித்தார்.

    உடனே அந்த அரண்மனைச் சேவகனைச் சபைக்கு அழைத்துவரச் செய்தார். "இன்று வரை நீ அரசாங்கத்திடமிருந்து வாங்கிய கடன்குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் இருந்ததற்கு என்ன முகாந்திரம்?" என்று அரசர் கேட்டார். "அரசே! நான் பிள்ளை குட்டிக்காரன்! மாதாமாதம் வாங்குகிற சம்பளம் குடும்பச் செலவிற்கே சரியாக இருக்கிறது!. இந்த அழகில் நான் கடனை அடைக்க எங்கே போவேன் எஜமான்?" என்று அழுது கண்ணீர் விட்டான்.

    "அப்படியா? உனக்குப் பத்துநாள் அவகாசம் தருகிறேன்! வட்டியோடு கடன்தொகை பத்தாயிரத்தையும் கட்டிவிட வேண்டும். இல்லாவிட்டால், உன்னுடைய வீடு நிலங்கள், மற்றும் மனைவி பிள்ளைகள் அனைவரையும் ஏலம்விட்டுக், கிடைக்கிற பணத்தை அரசாங்கக் கஜானாவில் சேர்த்துவிடச் சொல்வேன் ஜாக்கிரதை!" என்று கறாராகப் பேசி எச்சரித்தார் ராஜா.

    அவ்வளவுதான் நெடுஞ்சான் கிடையாக அரசன் அமர்ந்திருக்கும் சிம்மாசனம் நோக்கி விழுந்து விட்டான் அரண்மனைச் சேவகன். " அரசே!. என்னை முழுமையாக மன்னித்து விடுங்கள். உங்களின் பெரிய மனதில்தான் என்னுடைய சந்ததியே வாழவேண்டும்!. இந்த ஏழைக்கு மன்னிப்பு வழங்கி ஆதரியுங்கள் பிரபுவே!" என்று கதறினான்.

    அரண்மனைச் சேவகனின் பரிதாப நிலையைப் பார்த்த அரசர் அவனை மன்னித்து, அவன் வாங்கிய முழுக்கடனையும் தள்ளுபடி செய்துவிட்டார். " உன்னை முழுமையாக மன்னித்துவிட்டேன்; கடனாக வாங்கிய பணத்தை நீ இனிமேல் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய அவசியமில்லை" என்று கூறி அரசவையிலிருந்து அவனை அனுப்பி வைத்தார்.

    மகிழ்ச்சியோடு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த அரண்மனைச் சேவகன், தன்னிடம் பத்துப் பொற்காசுகளைக் கடனாக வாங்கி, ஓராண்டிற்கும் மேலாக வட்டியும் முதலும் கட்டாத ஒரு கடன்காரனை வழியில் பார்த்துவிட்டான். கடன்காரனோ, "ஐயா வயிற்றுக்கும் வாழ்க்கைக்குமே வருமானம் சரியாகப் போய்விடுகிறது; மன்னியுங்கள்! விரைவில் கட்டிவிடுகிறேன்!" என்று கெஞ்சிக்கேட்டான்.

    ஆனால் அரண்மனைச் சேவகனோ கடன்காரனை மன்னிப்பதாக இல்லை; நேராக நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று, 'பத்துப் பொற்காசுகள் கடனை வட்டியோடு கட்டும் வரையில் கடன்காரன் சிறையில் இருக்க வேண்டும்!' என்று தண்டனையும் பெற்றுத் தந்துவிட்டான்.

    அரண்மனைச் சேவகன், தன்னிடம் கடன் பெற்றவனுக்கு மன்னிப்பு வழங்காததோடு, தண்டனையையும் வாங்கித் தந்த செய்தி அரசரின் செவிகளுக்குச் சென்று சேர்ந்தது. மீண்டும் அரசவைக்கு அந்தச் சேவகனை அழைத்துவரச் செய்தார், "மன்னிப்பின் தரம் உணர்ந்தவர்களால் மட்டுமே மன்னிப்பை முழுமையாக அனுபவிப்பதற்கும் தகுதி உண்டு;

    நான் உனக்கு நீ வாங்கிய பணம் பத்தாயிரம் பொற்காசுகளுக்கும் முழு மன்னிப்புக் கொடுத்து உன்னை நான் விடுவித்தேன்; ஆனால் நீயோ உன்னிடம் ஒரு ஏழை வாங்கிய வெறும் பத்துப் பொற்காசுகளுக்கு மன்னிப்பு வழங்காமல் சிறைத் தண்டனை பெற்றுத் தந்திருக்கிறாய். எனவே உனக்கு நான் வழங்கிய மன்னிப்பை முழுமையாக இப்போது ரத்து செய்கிறேன்; உடனடியாக நீ அரசாங்கத்திடம் கடனாகப் பெற்ற பத்தாயிரம் பொற்காசுகளை வட்டியும் முதலுமாகக் கட்ட வேண்டும்; இல்லையென்றால் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டியது!" என்று உத்தரவிட்டார்.

    மன்னிப்பு என்பது ஒருவர் இழைத்த தீமையை முழுமையாக மறந்து விடுவது என்பதில்லை; அத்தீமை காரணமாக மனத்தில் ஏற்பட்டுள்ள கசப்புணர்வையும், எதிர்மறைச் சிந்தனைகளையும் போக்கிக் கொள்ள முயற்சிப்பது. ஒருவர் அவசரமாக நகர்ந்து கொண்டிருக்கும் பேருந்தில் ஏறுகிறார்; வாசற்படியில் பெருங்கூட்டம்; காலைப் படிக்கட்டில் வைப்பதற்குப் பதிலாக, படிக்கட்டில் நின்று பயணித்துக் கொண்டிருக்கும் ஒருவரது காலில் வைத்துவிடுகிறார்; மிதிபட்ட பயணி கோபத்துடன், யாரது மடத்தனமாகச், செருப்புக்காலோடு என் காலை மிதிப்பது? என்று திட்டுகிறார்.

    மிதித்த பயணியோ, எடுத்த எடுப்பிலேயே, "மன்னித்து விடுங்கள்" என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டே பேச்சைத் தொடங்குகிறார்," தெரியாமல் மிதித்துவிட்டேன்! மன்னியுங்கள்!" என்று கெஞ்சிக் கேட்கிறார். தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் வலி ஒன்றுதான். வருகிற கோபம் மிதிபட்டவருக்கு வந்துதான் தீரும்.

    ஆனால் தெரிந்து மிதித்தால் அது தண்டனைக்குரிய குற்றம்; தெரியாமல் மிதித்ததால் மன்னித்து, விட்டு விடுவதற்கு இடமிருக்கிறது. மிதிபட்டவர் பதிலுக்கு, மிதித்தவரை அதேபோல மிதித்தால்தான் கோபம் ஆறும்; ஆனாலும் வன்மம் பெருகும். பிரச்சனையைத் தற்போதைக்கு முடித்து வைப்பதற்கு ஒரு மன்னிப்புக் கேட்பது போதுமானது; பாதிக்கப் பட்டவரும் பெருந்தன்மையோடு மன்னித்து விடுவதும் அவரது பரந்த மனத்தை எடுத்துரைப்பது ஆகும்.

    மன்னிப்புக் கேட்பதும் மன்னித்து விடுவதும் கோழைத்தனமான செயல் என்று சிலர் கருதுகிறார்கள்; உண்மையில் மன்னிப்பதற்குப் பெரும் தைரியமும் வீரமும் தேவைப்படும். மனிதர் இழைக்கும் குற்றங்களிலேயே பெருங்குற்றம் கொலைக்குற்றம் ஆகும். அதனால்தான் அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்ச தண்டனையாகிய மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ வழங்கப் படுகிறது.

    "கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்

    பைங்கூழ்

    களை கட்டதனொடு நேர்"

    எனும் குறளில் வள்ளுவர் கொலைக் குற்றவாளிக்கு வழங்கப்பட வேண்டிய அரச நீதி பற்றிக் குறிப்பிடுகிறார்; நற்பயிர் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கிற களைபறித்து அகற்றலைப் போன்றவை இவ்வகைத் தண்டனைகள் என்கிறார். ஆனால் தனிமனித நிலையில், ஒருவருக்கொருவர் குற்றங்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளுதலையே வள்ளுவப் பெருந்தகை வலியுறுத்துகிறார்.

    "கொன்றன்ன இன்னா செயினும்

    அவர்செய்த

    ஒன்று நன்றுள்ளக் கெடும்"

    ஒருவர், தற்போது கொலைக்கு நேரான குற்றங்களைச் செய்தாலும், அவர் இதற்குமுன் நமக்குச் செய்துள்ள ஒரே ஒரு நல்ல காரியத்தை நினைத்துப் பார்த்தால் போதும்; அவர்மீது வரும் கோபம் மாறிப்போவதற்கும்; மன்னித்து அருள்வதற்கும்! என்பது வள்ளுவம்.

    ஒருவரை ஒருவர் மன்னித்து வாழுகிற வாழ்க்கை, ஒருவரை ஒருவர் சகித்து, பொறுத்து வாழ்கிற பொறுமைமிகு வாழ்க்கை ஆகும்; அதுவே மனச் சலனமற்ற அமைதி வாழ்விற்கும், கருணை வாழ்விற்கும் அன்பு வாழ்விற்கும் வழிகாட்டும். போரற்ற சமாதானம்; பொறாமை யற்ற சமூக வளம் அனைத்தும் மன்னிப்பு என்னும் மகத்துவத்தில் அடங்கியிருக்கிறது.

    தொடர்புக்கு - 943190098

    • பொதுவாக எதை எடுத்துக்கொண்டாலும் இரண்டு விஷயங்கள் இருக்கும்.
    • தலையில் எண்ணெய் தேய்ப்பது அனைவரும் தினமும் செய்யலாம்.

    தினமும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறியிருந்ததை பார்த்தோம். உடலெங்கும் எண்ணெய் தேய்க்க சிரமம் என்பதினால், மிக முக்கியமாக மூன்று இடங்களில் மட்டும் எண்ணெய் தேய்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை தலை, காது, பாதம்.

    பொதுவாக எதை எடுத்துக்கொண்டாலும் இரண்டு விஷயங்கள் இருக்கும். ஒன்று ஆரம்பம் மற்றொருன்று முடிவு, மனித உடலை பொறுத்தவரை உடல் ஆரம்பிக்குமிடம் தலை, முடியும் இடம் பாதம். இந்த உடம்பில் தலை தான் மிக முக்கியம். ஏன் எனில் நாம் ஏற்கனவே பார்த்தது போல ஐம்புலன்களும் உள்ள உறுப்பு தலை.

    தலையைப்பற்றி பார்ப்பதற்கு முன் பொதுவாக சில விஷயங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு மரம் நன்றாக செழித்து வளர வேண்டுமென்றால் அதனுடைய வேர் நன்றாக இருக்க வேண்டும். வேர் சரியில்லை என்றால் மரம் பலவீனமாகிவிடும் மற்றும் பட்டுப்போக வாய்ப்புயிருக்கிறது. அதேபோலத்தான் மனிதனும்.

    மனிதனுடைய வேர் தலையில் தான் இருக்கிறது. என்னது மனிதனுடைய வேர் தலையா? ஆனால் மரத்தின் வேர் அடியில் அல்லவா இருக்கிறது. மனித தலை மேலே அல்லவா இருக்கிறது என்று கேட்க தோன்றும். ஆம், உண்மைதான். ஆயுர்வேத கூற்றின்படி மனிதன் தலை கீழாக செயல்படும் ஓர் இனம்.

    பருமனாக உள்ள பொருள் கீழே இருக்கும், லேசான பொருள் மேலே இருக்கும் என்பதுதானே நிதர்சனம்.

    மனித உடலில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்கள் உள்ளன. இதில் மார்புக்கு மேலே கபம், மார்பிலிருந்து தொப்புள் வரை பித்தம், தொப்புளுக்கு கீழே வாதம் இருக்கும்.

    ரா. பாலமுருகன்

     

    இதில் வாதம் லேசான தன்மை கொண்டது, கபம் கணத் தன்மை கொண்டது. லேசான தன்மை கொண்டது மேலிருக்க வேண்டும். கணத் தன்மை கொண்டது கீழ் இருக்க வேண்டும். ஆனால் மனித உடல் தலை கீழாக அமைத்து உள்ளது. அதனால் தான் மனிதன் தலை கீழாக செயல்படும் இனம் என்கிறோம். இப்போது தெரிய வருகிறதா மனித தலை தான் வேர் என்று.

    பொதுவாக ஆரோக்கியத்தை மேம்படுத்த தலையை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் மிக தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளது.

    தலையை பாதுகாக்க "மூர்த்தினி தைல சிகிச்சை" நான்கு வகையாக மேற்கொள்ளப்படுகிறது.

    1. தலையில் எண்ணெய் தேய்த்தல்.

    2. தலையில் எண்ணெய்யை தொடர்ந்து ஊற்றுதல்.

    3. தலையில் பஞ்சின் உதவி உடன் சிறிது நேரம் எண்ணெய் வைத்தல்.

    4. vbதலையில் வரையறுக்கப்பட்ட கால அளவு நேரம் எண்ணெய்யை தேக்கி வைத்தல் என்று நான்கு வகையில் சிகிட்சை மேற்கொள்ளப்படுகிறது.

    இதில் முதலில் கூறிய தலையில் எண்ணெய் தேய்த்தல் என்பதை தவிர மீதமுள்ள மூன்றும் நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மட்டும் செய்யப்படுவது. ஆனால் தலையில் எண்ணெய் தேய்ப்பது அனைவரும் தினமும் செய்யலாம்.

    ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் எப்படி எண்ணெய் தேய்க்கலாம் என்று பார்ப்போம். தினமும் காலையில் குளிப்பதற்கு முன் 10ml சுத்தனமான நல்லஎண்ணெய் அல்லது சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது மூலிகை மருந்துகள் கொண்டு செரியூட்டபட்ட மருந்து எண்ணெய்யை தலை முழுவதும் வட்ட வடிவில் அதிக அழுத்தம் இல்லாமல் தலையில் எல்லா இடத்திலும் படும்படி தேய்க்க வேண்டும். அதன் பின் தலைக்கு குளிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அண்டை மாநிலங்களில் இம்முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

    நம் மாநிலத்தில் குளித்த பின்பே எண்ணெய் தேய்க்கும் முறை இருந்து வந்தது. ஆம் இருந்து வந்தது தான்... ஆனால் தற்போது இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இளைஞர்கள் தலையில் எண்ணெய் வைக்க வேண்டும் என்பதையே மறந்து வாழ்த்து வருகின்றனர் .இதனால் தான் தூக்கம் குறைந்து, நியாபக சக்தியையும் குறைந்து வருவதை காணமுடிகிறது.

     

    தலையில் எண்ணெய் தேய்ப்பதினால் அளப்பரிய பயன்களை பெற முடியும், தலை வலி ஏற்படாது. தலை முடி நன்றாக அடர்த்தியாக, கருமை நிறத்தில், நீண்ட முடியாக வளரும். இள நரை, வழுக்கை ஏற்படாது. கபாலத்திற்கு பலம் ஏற்படும். ஐம்புலன்கள் நன்றாக செயல்படும். முக மலர்ச்சி ஏற்படும். மிக முக்கியமாக நன்றாக தூக்கம் வரும்.

    இது தான் இன்றைய இளைஞர்களுக்கு மிக முக்கியமாக தேவையான ஒன்று. ஆக குளிப்பதற்கு முன்போ அல்லது குளித்து நன்கு தலை காய்ந்த பின்போ மூலிகை எண்ணெய் அல்லது சுத்தமான நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் தேய்த்து வரலாம்.

    நோய்யுற்றவர்கள் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் கீழ் காணும் மருந்துகளை வாங்கி தினமும் தலையில் தேய்த்து வர நோய் கட்டுக்குள் வரும்.

    நீலிபிருங்காதி தைலம் - தலை முடி நன்றாக வளர...

    பிருங்க ஆமலாக தைலம் - தலைமுடி கருக்க, குளிர்ச்சி ஏற்பட...

    க்ஷிரபலா தைலம் - நன்றாக தூக்கம் வர...

    அசன வில்வாதி தைலம் - சைனஸ் பிரச்சனைக்கு...

    பலா ஹட்டாதி தைலம் - தலை வலி குணமாக...

    தூர்வாதி தைலம் - தலையில் ஏற்படும் அரிப்பு, பொடுகு நீங்க...

    மேலும் மன உளைச்சல், அழுத்தம், தூக்கமின்மை, தலையில் ஏற்படும்சோரியாசிஸ் போன்ற பல நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் தலையில் எண்ணெய் தேய்த்து வரலாம்.

    தொலைபேசி- 9025744149

    • சென்ட்ரலில் இருந்து சிவாஜிராவ் அங்கு பஸ்சில் வந்தார்.
    • இருவரும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கட்டிடத்தின் முன்பு வந்து நின்றனர்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து சிவாஜிராவ் வெளியில் வந்தார். ஏற்கனவே சில தடவை சென்னைக்கு வந்திருந்த போதிலும் இந்த தடவை அவரது மனதில் வித்தியாசமான உணர்வுகள் இருந்தன. மிகப்பெரிய நடிகனாக மாற வேண்டும் என்ற ஒரே லட்சியம்தான் அவரது மனதில் நிறைந்து இருந்தது.

    இதற்கு முன்பு சென்னைக்கு வந்த போது ஆங்காங்கே சுற்றி விட்டு பெங்களூர் திரும்புவதை சிவாஜிராவ் வழக்கத்தில் வைத்திருந்தார். சென்னையில் சில இடங்கள் அவருக்கு பார்த்த இடங்களாக இருந்தாலும் திரைப்படக் கல்லூரிக்கு எப்படி செல்வது என்பது தெரியவில்லை.

    தமிழக அரசால் ஆரம்பிக்கப்பட்டு இருந்த அந்த திரைப்படக் கல்லூரி 1973-ல் அண்ணா சாலை ஜெமினி பாலம் அருகே சபையர் தியேட்டர் அருகே அமைந்து இருந்தது. சென்ட்ரலில் இருந்து சிவாஜிராவ் அங்கு பஸ்சில் வந்தார். ஜெமினி பாலம் அருகே இறங்கிய அவருக்கு திரைப்படக் கல்லூரி எங்கே இருக்கிறது? என்பது தெரியவில்லை.

    அந்த பகுதியில் நிறைய சினிமா போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. சிவாஜிகணேசன் நடித்த "வசந்த மாளிகை" படத்தின் போஸ்டர்கள் அதிகம் காணப்பட்டன. சிவாஜிகணேசன் கையில் மது கோப்பையுடன் இருக்கும் போஸ்டரை சிவாஜி ராவ் நீண்ட நேரமாக ரசித்து பார்த்தார்.

    இதே போன்று நமது படமும் போஸ்டர்களில் இடம் பெற வேண்டும் என்ற ஆசை அவருக்குள் ஏற்பட்டது. அடுத்தடுத்த படப்போஸ்டர்களையும் பார்த்த போது பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாகி இருந்த அரங்கேற்றம் படத்தின் போஸ்டர்களையும் பார்த்தார். அந்த போஸ்டர்களில் சிவக்குமார், பிரமிளா படங்கள் அவருக்குள் பிரமிப்பை ஏற்படுத்தின.

    சுவர்களில் இருந்த போஸ்டரை பார்த்தபடியே திரைப்படக் கல்லூரிக்கு செல்ல யாரிடமாவது வழி கேட்கலாம் என்று நினைத்தார். அப்போது அவரை கடந்து ஒரு இளைஞர் வேக வேகமாக சென்று கொண்டு இருந்தார். அவரை நிறுத்தி, "திரைப்படக் கல்லூரிக்கு எப்படி செல்வது?" என்று கேட்டார்.

    சிவாஜிராவ் நிறுத்திய அந்த இளைஞர் பெயர் சதீஷ். அவரும் பெங்களூரில் இருந்து திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்காக வந்து இருந்தார். சிவாஜிராவை பார்த்து சிரித்துக் கொண்டே அவர், "நானும் அங்குதான் போகிறேன். என்னுடன் வாருங்கள்" என்று அழைத்துச் சென்றார்.

     

    இருவரும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கட்டிடத்தின் முன்பு வந்து நின்றனர். அதன் ஒரு பகுதியில்தான் திரைப்படக் கல்லூரி வகுப்புகள் நடத்தப்பட்டன. அந்த இடத்தை பார்த்த பிறகுதான் சிவாஜி ராவுக்கு சில தினங்களுக்கு முன்பு நேர்முக தேர்வுக்கு வந்திருந்தது நினைவுக்கு வந்தது.

    அந்த நேர்முக தேர்வுக்காக வந்த போது நடந்த நிகழ்ச்சிகளை சிவாஜி ராவ் நினைத்துப் பார்த்தார்........

    திரைப்படக் கல்லூரியில் நுழைவு தேர்வு நடந்த தினத்தன்று கடுமையான கூட்டம் காணப்பட்டது. அதைப் பார்த்த போது சிவாஜி ராவுக்கு பயம் வந்து விட்டது. இவ்வளவு கூட்டத்துக்கு மத்தியில் எப்படி போராடி இடம் பிடிப்பது என்று சிவாஜி ராவ் மனதுக்குள் மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்தது.

    என்றாலும் தன்னம்பிக்கையை கைவிடாமல் அடுத்து என்ன செய்யலாம்? என்று யோசித்தார். யாரிடம் விசாரித்தால் திரைப்படக் கல்லூரி பற்றி முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்று அந்த பகுதியில் நோட்டமிட்டார். அப்போது திரைப்படக் கல்லூரியில் பியூனாக இருந்த வீரைய்யா என்பவர் அங்கும் இங்கும் கையில் நிறைய தாள்களுடன் சென்று வருவது தெரிந்தது.

    அவரிடம் கேட்டால் நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம் என்று சிவாஜி ராவ் முடிவு செய்தார். பியூன் வீரைய்யாவை நெருங்கி, "சார்" என்றார். அதற்கு வீரைய்யா, "என்னய்யா என்ன வேண்டும்?" என்றார். சிவாஜி ராவ் மனதுக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "என்ன சார் இங்கு இவ்வளவு பேர் இருக்காங்க?" என்றார்.

    உடனே பியூன் வீரைய்யா, "திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சிக்காக இன்று ஆட்களை தேர்வு செய்யப் போகிறார்கள். இந்த பயிற்சி பெறுவதற்கு 350 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அந்த விண்ணப்பத்தில் இருந்த போட்டோ மற்றும் தகவல்களை பார்த்து விட்டு 150 விண்ணப்பங்களை ஏற்கனவே கழித்து விட்டனர்.

    இப்போது 200 பேர் மீதம் இருக்கிறார்கள். அவர்களில் 36 பேரை மட்டும் தேர்வு செய்வார்கள். அந்த தேர்வுதான் இன்று நடக்கப் போகிறது.

    அதனால்தான் இவ்வளவு கூட்டமாக இருக்கிறது. ஒரு ஓரமாக போய் உட்கார்ந்து வேடிக்கைப் பாருங்கள்" என்று சொல்லி விட்டு அவர் ஒரு அறைக்குள் புகுந்து கொண்டார். இதை கேட்டதும் சிவாஜி ராவுக்கு மனம் திக்... திக்... என்று அடித்துக் கொண்டது. கையும் ஓடவில்லை... காலும் ஓடவில்லை... இடம் கிடைக்குமா? என்று கதிகலங்கி போனார். அப்போது ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு தேர்வு நடந்தது.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் நடிப்பு பயிற்சி கல்லூரி மாணவர்கள் தனித்தனியாக தேர்வு செய்யப்பட்டனர். கன்னட மாணவர்களை கேள்வி கேட்டு தேர்வு செய்யும் பொறுப்பு புட்டண்ணாவிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அவரிடம் அழைத்துச் சென்று சிவாஜி ராவை விட்டனர்.

    அவர் சிவாஜி ராவை தலை முதல் உச்சி வரை ஒரு பார்வை பார்த்தார். கறுப்பு நிறம். சற்று தொப்பை வயிறு. குச்சி போன்ற கால்கள். ஆனாலும் முகத்திலும், கண்களிலும் நடித்தே தீரவேண்டும் என்ற பிரகாசமான உணர்வு இருப்பதை புட்டண்ணா உணர்ந்தார்.

    அவர் சிவாஜி ராவை பார்த்து, "ஏதாவது நடித்து காட்டுங்கள்" என்றார். உடனே சிவாஜி ராவுக்கு கர்நாடகா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முனியப்பா நடத்திய புராண நாடகத்தில் நடித்து இருந்த பாத்திரம் நினைவுக்கு வந்தது. அந்த பாத்திரத்தின் வசனங்களை அவர் புட்டண்ணா முன்பு தைரியமாக நடித்துக் காட்டினார்.

    அதை பார்த்து புட்டண்ணா கைத்தட்டி பாராட்டுகளை தெரிவித்தார். இதை கண்டதும் சிவாஜி ராவுக்கு உற்சாகமாக இருந்தது. அதன் பிறகு அவரை போட்டோ எடுத்தனர். ஆனால் நேர்முக தேர்வு முடிவை உடனே சொல்லவில்லை.

    வெளியில் இருங்கள் என்றனர். அதனால் சிவாஜி ராவ் படபடப்புடன் வெளியில் இருந்தார். சிறிது நேரம் கழித்தே அவருக்கு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைத்து இருப்பது தெரிந்தது. அந்த மகிழ்ச்சியோடு போனவர் இன்று திரும்பி வந்து இருப்பதை மலரும் நினைவுகளாக நினைத்துப் பார்த்தார்.

    மனதுக்குள் தாயாரையும், ராகவேந்திர சுவாமிகளையும் வணங்கி ஆசி பெற்றபடி திரைப்படக் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்தார். அங்கு இருந்த கரும்பலகை முன்பு நிறைய பேர் கூடி நின்று பரபரப்புடன் பெயர்களை வாசிப்பது தெரிந்தது. சிவாஜிராவ் அது என்ன? என்று விசாரித்தார்.

    1973-ம் ஆண்டு திரைப்படக் கல்லூரியில் சேருவதற்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் விவரங்கள் அதில் எழுதப்பட்டு இருப்பதாக சொன்னார்கள். சிவாஜி ராவுக்கு மகிழ்ச்சியும், ஆர்வமும் ஏற்பட்டது. அவரும் ஓடிச் சென்று கரும்பலகையில் இருந்த பெயர்களை வாசித்தார்.

    தமிழ் வகுப்பில் படிக்க நடராஜ், சத்திய மூர்த்தி, ராஜகோபால், ஷேக் முகமது, சதீஷ், எழிலரசி ஆகியோர் தேர்வாகி இருப்பதாக எழுதப்பட்டு இருந்தது. மலையாளம் வகுப்பில் படிக்க ஜேம்ஸ், ரவீந்திரன், ஆதம்அயூப், இந்திராபாலன் ஆகியோர் தேர்வாகி இருந்தனர்.

    தெலுங்கு வகுப்பில் படிக்க விட்டல் பிரசாத், ராமகிருஷ்ண ரெட்டி, கிருஷ்ண ரெட்டி, பிரதீப் சக்தி, உசைனி, நாராயணராவ், ரிஸ்வான், அனந்த ராம், முனீஷ், ரவீந்திரநாத் ரெட்டி, நந்தா கிஷோர், கோபாலகிருஷ்ணா, விஜயலட்சுமி, ஹேமா சவுத்ரி ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருந்தன. மற்ற மொழி வகுப்புகளை விட தெலுங்கு வகுப்பில் சேர்ந்து படிப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருந்தது.

    கன்னட மொழி வகுப்பில் படிக்க அமர் முல்லா, சந்திரஹால், ரகுநந்தன், ரவீந்திரநாத், சிவாஜி ராவ், வேணுகோபால் ஆகிய 6 பேர் பெயர்கள் எழுதப்பட்டு இருந்தன. அதை சிவாஜி ராவ் பார்த்து கண்ணீர் மல்க மகிழ்ச்சி அடைந்தார். மீண்டும்... மீண்டும்... அந்த கரும்பலகையில் எழுதி இருப்பதை வாசித்து பார்த்தார். நடிப்பதற்கு விண்ணப்பித்து இருந்த 300 பேரில் தாமும் ஒருவராக தேர்வாகி இருப்பதை நினைத்த போது சிவாஜி ராவுக்கு இன்னும் தன்னம்பிக்கை அதிகரித்தது. திரையுலகில் சாதித்தே ஆக வேண்டும் என்ற வெறி உண்டானது.

    தேர்வான 36 மாணவர்களையும் திரைப்படக் கல்லூரி முதல்வர் ராஜாராம் அழைத்துப் பேசினார். கல்லூரி வாழ்க்கை எப்படி இருக்கும்? எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்? என்று அறிவுரை வழங்கினார். பிறகு இங்கு நாங்கள் உங்களுக்கு நடிப்பு மட்டுமே சொல்லிக் கொடுக்க மாட்டோம். உங்களிடம் இருக்கும் திறமைகளையும் வெளியே கொண்டு வரப்போகிறோம்" என்றார்.

    முதல்வர் ராஜாராம் பேசியதை கேட்டதும் சிவாஜி ராவுக்கு மேலும் மகிழ்ச்சி ஏற்பட்டது. நமது திறமைகள் பட்டை தீட்டப்பட்டு விடும் என்று அவரது உள் மனது சொல்லியது. அப்போது முதல்வர் ராஜாராம் பியூன் வீரைய்யாவை அழைத்தார்.

    அட்டவணைகளை அனைவருக்கும் கொடு என்றார். உடனே பியூன் வீரைய்யா தனது கையில் இருந்த அட்டவணை பேப்பர்களை 36 மாணவர்களிடமும் வழங்கினார். அதில் திரைப்படக் கல்லூரியில் காலையில் இருந்து மாலை வரை என்னென்ன வகுப்புகள் நடத்தப்படும், எத்தகைய பயிற்சிகள் கொடுக்கப்படும் என்ற விவரம் இருந்தது. காலை 10 மணி முதல் 11 மணி வரை நடிப்பு பற்றிய பாடம் எடுக்கப்படும். 11 மணி முதல் 12 மணி வரை நடனப்பயிற்சி வழங்கப்படும். 12 மணி முதல் 1 மணி வரை நடிப்பு பயிற்சி. 1 மணி முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவேளை.

    பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை அந்தந்த மொழிக்கான நடிப்பு வகுப்புகள். மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை தேநீர் இடைவேளை. மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி வகுப்புகள்.

    இவ்வாறு அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மாணவர்கள் அதை படித்து முடித்ததும் ஒவ்வொரு பயிற்சி வகுப்பையும் மற்றும் ஒவ்வொரு மொழிக்கும் யார்-யார் பாடம் எடுப்பார்கள்? என்ற விவரத்தை கல்லூரி முதல்வர் ராஜாராம் வெளியிட்டார்.

    அதன்படி நடிப்பு பற்றி பாடத்தை கல்லூரி முதல்வர் ராஜாராம் எடுப்பார் என்றும், நடிப்பு பயிற்சியை சிவனந்தன் வழங்குவார் என்றும், உடற்பயிற்சி மற்றும் யோகா வகுப்புகளை பிரபாகர் மேற்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது.

    அதுபோல ஒவ்வொரு மொழிக்கும் ஒரு ஆசிரியர் அறிவிக்கப்பட்டார். கன்னட மொழியில் நடிப்பு பயிற்சிக்கு உஷா அறிவிக்கப்பட்டார். இதை கேட்டதும் சிவாஜிராவ் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். மாணவர்கள் அனைவரிடமும் நாளை முதல் வகுப்புகள் தொடங்கும் சென்று வாருங்கள் என்று முதல்வர் ராஜாராம் கூறினார். சிவாஜி ராவுக்கு எங்கே போவது? என்று தெரியவில்லை.

    அடுத்து என்ன நடந்தது என்பதை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பார்க்கலாம்.

    • சிறு வயது சம்பவங்களை அடுத்தடுத்து நினைத்துக் கொண்டே இருந்தார்.
    • ஒரு நிமிடம் இதையெல்லாம் சிவாஜி ராவ் நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டார்.

    பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எல்லோரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் சிவாஜி ராவுக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. கையில் கிடைத்த அரசு கண்டக்டர் வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு வருகிறோமே என்ற ஒருவித பயம் அவரது மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டே இருந்தது.

    ஆனால் மனதில் மற்றொரு புறத்தில் அசைக்க முடியாத தன்னம்பிக்கையும் இருந்தது. நிச்சயமாக சினிமாவில் சாதிக்க முடியும் என்ற வெறி அவருக்குள் உருவாகி இருந்தது. அந்த அடக்க முடியாத வெறியால் அவருக்கு தூக்கம் வரவில்லை. எனவே சிறு வயது சம்பவங்களை அடுத்தடுத்து நினைத்துக் கொண்டே இருந்தார்.

    குறிப்பாக பள்ளிக்கூடத்தில் படித்த நாட்களில் தனக்கு கிடைத்த பல வாய்ப்புகளை நினைத்துப் பார்த்தார். ஆன்மீகத்தில் மனதை பக்குவமாக மாற்றும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். அதே சமயத்தில் பள்ளியில் தனக்கு நண்பர்கள் மூலம் ஏற்பட்ட சில கெட்ட பழக்கங்களையும் நினைத்துப் பார்த்தார்.

    ராமகிருஷ்ணா மடம் நடத்திய பள்ளியில் படித்த காலத்தில் அவருக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. அதாவது பள்ளியில் வாரம் தோறும் மற்ற மாணவர்களுக்கு கதை சொல்ல வேண்டும் என்ற பொறுப்பு ஆகும். இதற்காகவே சிவாஜி ராவ் அந்த இளம் வயதில் நிறைய கதை புத்தகங்களை தேடி தேடி படித்தார்.

    கன்னட முன்னணி எழுத்தாளர்கள் எழுதிய கதைகளை உன்னிப்பாக படித்து சேர்த்து வைத்துக் கொண்டார். அந்த கதைகளை அவர் பள்ளி வகுப்பு மாணவர்களுக்கு சொல்லி வந்தார். அந்த கதையுடன் அவரது சில கருத்துக்களையும் சேர்த்து மசாலா போட்டு ரசனையாக கதை சொல்வார்.

    இதனால் பள்ளி மாணவர்களிடம் கதை சொல்வதில் சிவாஜி ராவ் கில்லாடி என்று பெயர் பெற்று இருந்தார். ஆசிரியர்கள் அவரை பாராட்டினார்கள். அதே சமயத்தில் சில மாணவர்களுடன் ஏற்பட்ட சேர்க்கையால் சிவாஜி ராவ் தவறான பழக்கங்களிலும் அடிமையாக நேரிட்டது.

    எந்தெந்த பழக்கங்கள் எல்லாம் தன்னை திசை மாற்றின என்று சிவாஜி ராவ் ஒரு நிமிடம் கண்ணை மூடிக் கொண்டு ேயாசித்து பார்த்தார். மது குடிப்பது, புகை பிடிப்பது ஆகிய இரண்டு பழக்கங்களும் பள்ளியில் படிக்கும் போதே தனக்கு வந்து விட்டதை உணர்ந்து வருந்தினார்.

    ஒரு சமயம் அவரது நண்பர்கள் காட்டுப் பகுதியில் மறைந்து இருந்து திருட்டுத்தனமாக புகைப்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற சிவாஜி ராவை மூத்த மாணவர்கள் இங்கெல்லாம் வரக்கூடாது போ என்று விரட்டினார்கள். ஆனால் சிவாஜி ராவ் அதை ஏற்கவில்லை.

    அவர்களுக்கு போட்டியாக வித்தியாசமாக புகைப்பிடித்து காட்டுவதாக சவால் விட்டார். உடனே நண்பர்கள் அவருக்கு ஒரு பீடியை எடுத்துக் கொடுத்தனர். பீடியை பற்ற வைத்த சிவாஜி ராவ் அதை ஸ்டைலாக மேலே தூக்கி போட்டார். அது கீழே வந்ததும் வாயில் கவ்விப் பிடித்து ஸ்டைலாக புகையை வெளியிட்டார்.

     

    சிவாஜி ராவ் நண்பர்களும், மூத்த மாணவர்களும் இதை கண்டு ஒரு நிமிடம் பிரமித்துப் போனார்கள். ஆனால் சிவாஜி ராவுக்கு அதுதான் புகை பிடிக்கும் போது கிடைத்த முதல் ஸ்டைல் ஆகும். நண்பர்களிடம் சவால் விட்டதால் அவரையும் அறியாமல் இந்த ஸ்டைல் அவருக்குள் உருவாகி இருந்தது.

    ஒரு நிமிடம் இதையெல்லாம் சிவாஜி ராவ் நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டார். பிற்காலத்தில் இந்த ஸ்டைல்தான் அவரை தமிழக மக்கள் மனதில் வித்தியாசப்படுத்தி காட்டி புகழ் பெற வைக்கப் போகிறது என்பது அப்போது சிவாஜி ராவுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

    அதுபோலதான் சிவாஜி ராவுக்கு இருந்த மது குடிக்கும் பழக்கமும். அதையும் சிவாஜி ராவ் அந்த ரெயில் பயணத்தில் நினைத்துப் பார்த்தார். பெங்களூரில் கங்கேரி என்ற ஒரு பகுதி உண்டு. அந்த காலத்தில் அந்த இடத்தில் நிறைய சாராயக் கடைகள் இருந்தன.

    சிவாஜி ராவும், அவரது நண்பர்களும் அடிக்கடி கங்கேரிக்கு சென்று சாராயம் குடிப்பதை வழக்கத்தில் வைத்து இருந்தனர். சாராய வாடை வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக வெங்காயம் உள்பட பல பொருட்களை பயன்படுத்தியதை சிவாஜி ராவ் நினைத்து... நினைத்து... சிரித்தார்.

    மது போதையில் பலரிடம் சண்டை போட்ட நாட்களும் சிவாஜி ராவுக்கு நினைவுக்கு வந்தது. கங்கேரியில் ஒரு தடவை மது குடித்துக் கொண்டிருந்த போது எதிரே இருந்த ஒரு நபரை சிவாஜி ராவ் அடித்து துவைத்தார். பதிலுக்கு அந்த நபரும் சிவாஜி ராவை கடுமையாக தாக்கினார்.

    இந்த சண்டையில் சிவாஜி ராவ் சட்டைக் கிழிந்தது. அவர் உதட்டில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அந்த கிழிந்த சட்டையோடு வீட்டுக்கு போனால் தெரிந்து விடுமே என்ற பயத்தில் நண்பர்கள் வீட்டுக்கு சென்று சட்டையை மாற்றிக் கொண்டு சென்ற நாட்களை எல்லாம் சிவாஜி ராவ் நினைத்துப் பார்த்தார்.

    நாம் இப்படியெல்லாம் வாழ்ந்து இருக்கிறோமே என்று அவருக்குள் அடக்க முடியாத ஆச்சரியம் ஏற்பட்டது. அதே சமயத்தில் அவரோடு பழகிய சில நல்ல நண்பர்களும் அவரது நினைவுக்கு வந்தார்கள். நண்பர் ராமண்ணாவை நினைத்துப் பார்த்தார். அவரோடுதான் சிவாஜிராவ் தட்டச்சுப் பயிற்சிப் பெற டைப்ரைட்டிங் வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றார். அப்போது செய்த பல குறும்புகள் அவரது நினைவுக்கு வந்தன.

    குறிப்பாக டைப்ரைட்டிங் வகுப்பு முடிந்து ஒருநாள் வெளியில் வந்தபோது இளம்பெண் ஒருவரிடம் தகராறு செய்து சிக்கி போலீஸ் நிலையத்துக்கு சென்றதை நினைத்துப் பார்த்தார். போலீசார் விசாரணை நடத்திய போது நான் போலீஸ்காரர் மகன் என்று ஆணவமாக சொன்னதையும் நினைத்துப் பார்த்தார்.

    அப்படி சொன்னால் தன்னை போலீஸ்காரர்கள் விட்டுவிடுவார்கள் என்று நினைத்தார். ஆனால் அவர் எதிர்பாராதவிதமாக சப்-இன்ஸ்பெக்டர் பளார் அறை கொடுத்து இரவு முழுக்க சிவாஜிராவையும் அவர் நண்பர்களையும் ஸ்டேசனில் வைத்து விட்டார். மறுநாள் காலை புத்திமதி சொல்லி வீட்டுக்கு அனுப்பினார்.

    இதை நினைத்துப் பார்த்தபோது எவ்வளவு பெரிய தவறு செய்து இருக்கிறோம் என்று சிவாஜி ராவுக்கு உறைத்தது. அதுபோல சந்திரசேகரன் என்ற நண்பருடன் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்த நாட்களையும் நினைத்துப் பார்த்தார்.

    ஜிம்மில் செய்த உடற்பயிற்சிகள் காரணமாக தனக்கு கட்டு மஸ்தான உடல் வந்து விட்டதாக நெஞ்சை நிமிர்த்து நடந்த நாட்களும் அவரது நினைவுக்கு வந்து சென்றன. அந்த நாட்களில் அவரது கண்களை யாராவது கூர்மையாக பார்த்தாலே அவருக்கு கோபம் வந்து விடும். அடிதடியாகி கைகலப்பு வரை சென்று விடும் என்று சிவாஜி ராவே பல தடவை சொல்லி இருக்கிறார்.

    அந்த அடிதடி நாட்களின் நினைவுகளும் சிவாஜி ராவின் ரெயில் பயணத்தில் அவருடன் வந்து கொண்டே இருந்தது. இப்படி தாய்-தந்தை பாசத்தில் தொடங்கி நண்பர்களுடன் சேர்ந்து செய்த முரட்டு தனங்கள் வரை அனைத்தையும் அசைப்போட்ட சிவாஜி ராவுக்கு தனது வாழ்க்கை பயணம் அடுத்து எப்படி இருக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு மனதுக்குள் தோன்றியது.

    அவரால் எந்த இறுதியான முடிவுக்கும் வர இயலவில்லை. மனம் முழுக்க குழப்பம், வேதனை, எதிர்பார்ப்பு நிறைந்து இருந்தது. நள்ளிரவுக்கு பிறகு சிவாஜி ராவ் கண் அயர்ந்தார். அப்படியே தூங்கிப் போனார்.

    அதிகாலை நேரத்தில் புரண்டு படுத்த சிவாஜி ராவுக்கு கனவு ஒன்று வந்தது....

    இருட்டான காட்டுப்பகுதி. அங்கு ஒரு சுரங்கப் பாதை. அதற்குள் சிவாஜி ராவ் மெல்ல மெல்ல நடந்து செல்கிறார். கரடு–முரடான சுரங்கப் பாதைக்குள் கொஞ்சம் தூரம் நடந்து சென்றதும் திடீரென மெல்லிய வெளிச்சம் தோன்றியது.

    வெளிச்சம் வந்த திசையை நோக்கி சிவாஜி ராவ் திரும்பிப் பார்த்தார். அங்கு அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அங்கு ஒரு சன்னியாசி கண்களை மூடி தவம் செய்து கொண்டிருந்தார். அவரது முகம் ஒருவித அமைதியுடன் காணப்பட்டது. அவரை பார்க்க... பார்க்க சிவாஜி ராவ் மனதுக்குள் ஆனந்தம் ஏற்பட்டது.

    சிவாஜி ராவ் அந்த பகுதியை சுற்றிப் பார்த்தார். அழகான நதி ஒன்று காணப்பட்டது. அதில் தெளிந்த நீரோடையாக கண்ணாடி போன்று தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. சற்று தலையை உயர்த்திப் பார்த்த போது பெரிய மலை காணப்பட்டது. இமயமலை போன்று காட்சி அளித்த அந்த மலைக்குள் சுரங்கப் பாதையில் நாம் இருக்கிறோம் என்று சிவாஜி ராவ் நினைத்தார்.

    இந்த காட்சியுடன் அவரது கனவு கலைந்துப் போனது. திடுக்கிட்டு எழுந்தார். என்ன கனவு இது? ஒன்றும் புரியவில்லையே? என்று சிவாஜி ராவுக்கு குழப்பமாக இருந்தது. ஆனால் அடுத்த வினாடியே ரெயில் சென்னை வந்து விட்டதா? என்று ஆர்வமுடன் வெளியே எட்டிப் பார்த்தார்.

    அடுத்த சில நிமிட நேரங்களில் பிருந்தா–வனம் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்குள் வந்தது. சென்ட்ரல் ரெயில் நிலையத்தை அடைந்ததும் பயணிகள் மளமளவென இறங்கி நடக்க தொடங்கினார்கள். சிவாஜிராவும் அந்த அழகான ஆன்மிக கனவை அப்படியே சுத்தமாக மறந்து விட்டு தனது ஒரே ஒரு பையை எடுத்துக் கொண்டு ரெயில் பெட்டியில் இருந்து கீழே இறங்கினார்.

    கூட்டத்தோடு கூட்டமாக நடந்து வெளியில் வந்தார். தமிழ்நாட்டின் அரசியல், சினிமா, ஆன்மீக கலாச்சாரத்தை மாற்றப் போகும் ஒரு நிகரற்ற சக்தி கூட்டத்தோடு கூட்டமாக தங்களுடன் வருகிறது என்பதை அந்த சமயத்தில் யாரும் நினைத்துக் கூட பார்த்து இருக்க மாட்டார்கள்.

    சிவாஜி ராவ் தன்னம்பிக்கையின் உச்சத்துடன் சென்னை மண்ணில் தனது காலை பதித்தார். சென்னை அவரை வரவேற்றது. திரைப்படக் கல்லூரியை நோக்கி நடக்க தொடங்கினார். அவரது அந்த முதல் நாள் அனுபவம் எப்படி இருந்தது என்பதை நாளை பார்க்கலாம்.

    • பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படும் உணவுப்பொருள் செய்முறையால் ஆற்றல் கூட்டப்படுகிறது.
    • நம்முடைய மூத்த தலைமுறையினரும் அந்நுட்பத்தை கைக்கொண்டு வருகின்றனர்.

    நாம் பசிக்கும் நேரத்தில் நாலாவிதமான பட்சணங்களோடு உண்ணும் உணவைத் தவிர இடைப்பொழுதில் ஏதேனும் சிறுதீனி எடுத்துக் கொள்வது தவறென்ற கருத்து பரவலாக உண்டு. உண்மையில் நாவில் சுவைபட உண்கிற எதுவும் உணவே ஆகும். சிறுதீனியென்பது ஏதோ மனநிறைவுக்காகவும் அறிவியல் மொழியில் சொல்வதானால் மூளை நியாரன்களின் தூண்டலுக்கு உதவும் டொபமைன் (dopamine) ஆக மட்டுமே கருத முடியாது.

    சிறுதீயானது உடலின் பிற பாகங்களுக்கு ஊட்டம் அளிக்கும் ஆற்றலாகவும் மாற்றமடைகிறது. ஆக சிறுதீனி உடலால் செரிக்கப்பட்டு பிற உணவுவகைகளைப் போல ஆற்றலாக மாற்றமடைவதாக இருந்தால்தான் உடலுக்கு நன்மை செய்யும். மாறாக வெறுமே மூளைக்குத் தூண்டலை அளிக்கும் சுவையை மட்டுமே கொடுத்து விட்டு சுவைப்பாகம் தவிர மற்றெல்லாம் கழிவாக மாறும் என்றால் அது உடலுக்கு, உடலின் உள்ளுறுப்புகளுக்குப் பெருஞ்சுமையாக மாறும். இச்சுமையானது நாளுக்கு நாள் அதிகரித்து ஒரு கட்டத்தில் உயிருக்கு ஆபத்தினை விளைவிக்கும் ஒன்றாக மாறி விடும்.

    எடுத்துக்காட்டாக கண்ணுக்குக் கவர்ச்சியான நிறமும், புளிப்பும், காரமும் ஏற்றப்பட்ட பிராண்டட் (உருளைக்கிழங்கு) சிப்ஸை எடுத்துக் கொள்வோமே. இது பெயரளவில் தான் உருளைக்கிழங்கு என்று சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் உ.கி ஐ மாவாக்கி, அந்த மாவுடன் மிகவும் மலிவான ஏதேனும் கிழங்கு அல்லது சத்தும் சாரமுமற்ற மாவினைப் பெருமளவு கலந்து கொள்வார்கள். இந்த மாவுக் கலப்பை இயந்திரத்தில் இட்டு சீரான பார்த்தால் ஈர்க்கும்படியான வடிவத்திற்கு வெட்டி இயந்திரச் சூட்டில் உலர்த்தி மொறுமொறுப்பாக்குவார்கள்.

    சாலையோர சிப்ஸுக் கடையில் பெரிய வாணலியில் டின் டின்னாக எண்ணை ஊற்றி உருளைக் கிழங்கைப் பொரிப்பார்களே அதுபோல மேற்படி பிராண்டட் சிப்ஸ் பொரிக்கப்பட மாட்டாது. அப்படி எண்ணையில் பொரித்தால் எண்ணைக்குரிய விலை லாபத்தில் குறைந்து விடும். போக சிப்ஸைப் பொரித்த ஓரிரு வாரங்களுக்குள் சிப்ஸ் எண்ணைக்காரல் எடுக்க ஆரம்பித்து விடும். அந்தப் பண்டம் விரும்பத்தாகதாக மாறி விடும். எனவே தாவரக் கொழுப்பு, மிருகக் கொழுப்பு போன்ற ஏதேனும் மலிவான கொழுப்பின் வாசத்தை இயந்திரம் வாயிலாக ஏற்றி அதனோடு காரத்திற்கு ஒரு இரசாயனம், புளிப்பிற்கு ஏதேனும் ஒரு அமிலம், அப்புறம் நிறத்திற்கு ஒரு இரசாயனம், மேலும் அது கெடாதிருப்பதற்கும் வண்டு பூச்சிப் பிடிக்காமல் இருப்பதற்கு இரசாயனம் என பல கட்டங்களில் இரசாயனம் சிப்ஸில் ஏற்றப்படும்.

    உணவுத் தரக்கட்டுப்பாட்டுத் துறை என்ற ஒன்று இருக்கிறதல்லவா. அது என்ன செய்யும்? இந்த சிப்ஸில் ஏற்றப்படும் இரசாயனம் உடலால் எளிதில் நீக்கப்படும் அளவு தான் என்று சான்றிதழ் வழங்கும். அதனை ஒருமுறை நீங்கள் உண்டால் அதில் சேர்க்கப்பட்ட இரசாயனம் உங்கள் உடலால் எளிதில் வெளியேற்றக் கூடியதாக இருக்கலாம். ஆனால் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து உள்ளே தள்ளும்போது உள்ளுறுப்புகளில் தங்கி தேக்கமடையும் தானே. ஆனால் மேற்படித் தின்பண்டங்களை சந்தையில் இறக்குவோர்க்கு அதுபற்றி அக்கறை இல்லை.

    போப்பு

     

    ஒரு சோதனையில் உடலால் வெளியேற்ற முடியும் அளவிற்குத் தான் சேர்க்கப்பட்டுள்ளது என்று சான்றிதழ் பெற்று விட்டார்கள். அதாவது தரக்கட்டுப்பாட்டுத் துறையை ஏமாற்றியாகி விட்டது. மக்களின் கண்களுக்கு அப்பால் வெகுதொலைவில் உள்ள வணிகப் பெருநிறுவனங்களுக்கு தங்களது பண்டம் எந்த அளவிற்கு மக்களின் உடலுக்கு, உடலின் உள்ளுறுப்புகளுக்குத் தீங்கு விளைவிக்கிறது என்பதைப் பற்றிக் கவலையில்லை. அவர்களுக்கு ஆண்டுதோறும் எட்டப்பட வேண்டிய வணிக இலக்கு, இலாப இலக்கு, தொழில் விஸ்தரிப்பு போன்றவற்றைப் பற்றியே மூளை முழுதும் கணக்கீடுகள் நிரம்பி இருக்கும்.

    ஆனால் நம்முடைய பாரம்பரியமான சிறுதீனிகள் மிகவும் எளிமையானவை. நாம் காலங்காலமாக உணவிற்குப் பயன்படுத்தும் மூலப்பொருட்களையே அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுபவை. இவற்றில் இரசாயனக் கலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. எடுத்துக்காட்டாக உப்புக் கொண்டைக் கடலையையே எடுத்துக் கொள்ளுங்களேன். தமிழகத்துத் தென்மாவட்டக் கரிசல் நிலத்தில் ஒரு எளிய விவசாயி விளைவிக்கும் கருப்புக் கொண்டைக் கடலையை உப்பு நீரில் ஊற வைப்பார்கள். முழுதாக ஊறியபின்னர் நல்ல வெயிலில் காயவைப்பார்கள். பெருநிறுவன தயாரிப்பின்போது இயந்திரத்தில் இயல்புக்கு மாறான முறையில் உணவுப்பொருள் சூடேற்றப்படுகிற பொழுது அதன் மூலாதாரச் சத்துக்கள் சிதைந்து அவ்வுணவுப் பொருள் வெறும் குப்பையாகி விடும் என்பதைக் கவனியுங்கள்.

    உப்புநீரில் ஊறவைத்த கொண்டைக்கடலை சூரிய வெப்பத்தில் உலர வைக்கிற பொழுது உணவுப் பொருள் சூரிய ஆற்றலைப் பெறுகிறது. ஆக ஒரே செயல்முறை ஓரிடத்தில் உணவுப் பொருள் அதன் ஆற்றலை இழந்து குப்பையாகிறது. பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படும் உணவுப்பொருள் செய்முறையால் ஆற்றல் கூட்டப்படுகிறது.

    அடுத்து உலர வைத்த உப்புக் கொண்டைக் கடலையை வறுக்கிற பொழுது கனமான சூடுதாங்கும் இரும்பு வாணலியில் மணலைக் கொட்டி நெருப்பின் சூடு நேரடியாகத் தாக்காத வண்ணம் மணல் மீது ஏற்றப்பட்டு நிதானமாக சூடேற்றப்படுகிறது. அதன் வாயிலாக சூடு கெட்டியான கொண்டைக் கடலையின் நடுப்பகுதி வரைக்கும் ஏறி கடலை கொறிப்பதற்கு ஏதுவாக மொறுமொறுப்பாகிறது. இங்கே பண்டத்தில் மொறுமொறுப்புக்காக இரசாயனம் ஏதும் சேர்க்கப்படவில்லை. உப்புக்கடலையில் வாசனை மணலின் வாசமும் மித சூட்டின் வாசமும் கொ.கவின் வாசமும் மட்டுமே மிதமாக இருக்கும். உப்பும், சூடும் இதமாக நாவில் படரும். ஆனால் ஒரு பிராண்டட் சிப்ஸில் நாவின் சுவை மொட்டுக்களைச் சாட்டையடி போலச் சுளீரென்று தாக்கும் இரசாயன சுவையூட்டி சேர்க்கப்பட்டிருக்கும்.

    உப்புக் கடலையின் சூடேற்றமும், உப்பும், அதன் புரதச்சத்தும் மூளையின் நியூரான்களுக்கு மட்டுமல்ல உடலின் உறுப்புகள் அனைத்திற்கு சத்துக்களை வழங்குகிறது. உடலுக்கு எவ்விதப் பாதிப்புகளையும் அளிப்பதில்லை. ஆனால் பெரும் விளம்பரங்களுடன் சந்தைப்படுத்தப்படும் தின்பண்டங்கள் சுளீரென்று சுவைமொட்டுக்களைத் தாக்குவதால் மீண்டும் மீண்டும் தின்னச் செய்வதற்குரிய போதையூக்கியூக்கியாகவும், அடிமைப்படுத்துவதாகவும் இருக்கிறது. போக எந்த சத்துக்களையும் வழங்காததால் அதனை எவ்வளவு தின்றாலும் நிறைவு ஏற்படுவதில்லை. அதனால் தான் பிஞ்சு நாவினைக் கொண்ட பிள்ளைகள் மீண்டும் மீண்டும் பிராண்டட் தின்பண்டங்களில் நாட்டம் கொள்கின்றனர்.

    இதுவொரு வகையில் போதைப்பழக்கத்திற்கு அடிமைப்பட்ட உணர்வே ஆகும். உயிருடலில் ஏற்றப்பட்ட செயற்கையூக்கிகள் அனைத்தும் உடலை விட்டு வெளியேறுகிற பொழுது சட்டென்று சோர்வடைந்து விடும். ஏனென்றால் மிகைவூக்கம் குறையும் பொழுது இயல்பூக்கத்திற்கு உடல் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள சிறிது அவகாசம் தேவை. ஆனால் போதையேறிய உடல் திசுக்கள் ஏறிய ஊக்கத்திலேயே தொடர்ந்து நிலைத்திருக்க விருப்பம் கொள்கிறது.

    அந்த விருப்பத்தை மீண்டும் மிகைவூக்கம் மட்டுமே ஈடுசெய்ய முடியும். ஆனால் தொடர்ந்து மிகையூக்கத்திற்கு உள்ளாகும் பொழுது உடலின் திசுக்களும் மென் நரம்புகளும் தளர்ச்சி அடைந்து முற்றிலுமாகச் செயல்திறன் குறைந்து விடும். இதைத்தான் இன்றைய உணவுமுறைப் பலவற்றிலும் புதிய தலைமுறையினர் எதிர்கொண்டு வருகின்றனர். இனம் புரியாத புதிய புதிய நோய்களுக்கும் இளம் வயதிலேயே ஆட்படுகின்றனர்.

    இதுவரை அடையாளம் கண்டிராத இரசாயனம் உடலில் ஏற்றப்படுகிற பொழுது அவற்றை இனம் கண்டு செரிக்கவும் நீக்க நம்முடைய நொதிப்பிகளும், சுரப்பு நீர்களும் வெவ்வேறு வகையான இயல்புக்கு மாறாக சுரக்க நேரிடுகிறது. இயல்புக்கு மாறாக ஒரு நீர் சுரக்கும் பொழுது அதனை மட்டுப்படுத்த இன்னொன்று சுரந்து அல்லது அதனை ஈடுசெய்ய மற்றது சுரந்து என உடலின் உள்ளியக்கம் குழப்பத்திற்கு உள்ளாகிறது.

    ஆனால் நாம் காலங்காலமாக உண்டு வந்த உணவுப் பொருட்களை நம்முடைய உயிரணுக்கள் அடையாளம் கண்டு அவற்றை எவ்வித புதிய மெனக்கெடலும் இன்றி எளிதில் செரித்து அவற்றின் சத்துக்கூறுகளை தன் வயப்படுத்திக் கொள்ளும். நம்முடைய நல்வினை மரபார்ந்த சிறுதீனிகளும், தின்பண்டங்களும் எளிய மக்கள் தயாரித்து கைக்கெட்டும் தொலைவில் விற்பனை செய்து கொண்டுள்ளனர். நம்முடைய மூத்த தலைமுறையினரும் அந்நுட்பத்தை கைக்கொண்டு வருகின்றனர்.

    அப்படியான உடலுக்குச் சத்தும் மூளையின் நியூரான்களுக்குத் தூண்டலும் வழங்கவல்ல தின்பண்டங்கள் குறித்துத் தொடர்ந்து பார்ப்போம்.

    செல்போன் எண்- 96293 45938

    • கருக்கலைப்பு செய்ய உள்ள பெண்ணின் கருவானது 12 வாரத்துக்கு கீழே உள்ளதாக இருக்க வேண்டும்.
    • கருக்கலைப்பின்போது முதல் முக்கியமான பிரச்சினை உடல் ரீதியான பிரச்சினை ஆகும்.

    இன்றைய காலகட்டத்தில் திருமணத்துக்கு முன்பே கருத்தரித்தல் மற்றும் கருக்கலைப்பு அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சினைகள் பெண்களின் வாழ்க்கையில், குறிப்பாக இளம்பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. திருமணத்துக்கு முன்பு கர்ப்பம் தரித்தலும், அதை செய்கிற கருக்கலைப்பு முறைகளும், இளம் வயது பெண்களின் இறப்பு, அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கிய பாதிப்பில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    எனவே கருக்கலைப்பை எப்படி பாதுகாப்பாக செய்வது? பாதுகாப்பாக கருக்கலைப்பை செய்தாலும் என்னென்ன பிரச்சி னைகள் ஏற்படுகிறது? இந்த பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு காண்பது எப்படி என்பது பற்றி இந்த வாரம் பார்க்கலாம்.

    கருக்கலைப்பு செய்வதற்கு முன்பு பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

    பெண்களுக்கு கருக்கலைப்பை பாதுகாப்பாக செய்வதற்கு, அதற்கான தகுதி பெற்ற மருத்துவர் இருக்க வேண்டும். கருக்கலைப்பு செய்வதற்கு தகுதி பெற்ற அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக இருக்க வேண்டும். அதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். அந்த மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ய உள்ள பெண்ணின் உடல் நலனை காப்பதற்கான வழிமுறைகள் சரியாக இருக்க வேண்டும்.

    கருக்கலைப்பு செய்ய உள்ள பெண்ணின் கருவானது 12 வாரத்துக்கு கீழே உள்ளதாக இருக்க வேண்டும். கருக்கலைப்பு செய்யலாம் என்று ஒரு மருத்துவர் உறுதி செய்தால் அந்த கருவை கலைக்க முடியும். கருக்கலைப்பு செய்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஒரு முறையான கவுன்சிலிங் பெறவேண்டும். கருக்கலைப்பு செய்யலாம் என்று அவரிடம் முறையாக ஒப்புதல் பெற வேண்டும். அதன்பிறகு தான் கருக்கலைப்பு செய்ய முடியும்.

    இதுவே கருவில் உள்ள குழந்தைக்கு உடல் பாதிப்பு என்றால், அதற்கான ஒரு சரியான ஸ்கேன் பரிசோதனை அறிக்கை இருக்க வேண்டும். அதற்கு ஒரு முதுநிலை மருத்துவர் சான்றிதழ் வழங்கி இருக்க வேண்டும். கருக்கலைப்பு செய்வதற்கு இதெல்லாம் சில வரைமுறைகள் ஆகும்.

    கருக்கலைப்பு செய்வதற்கு முன்பு பெண்கள் இந்த விஷயங்களை கவனிக்க வேண்டும். இந்த வகையில் இவை எல்லாமே சரியாக இருந்தால் கருக்கலைப்பு என்பது சாத்தியமானது. அதற்கு கணவரின் கையெழுத்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பெண்களின் முடிவையே இதில் ஏற்றுக் கொள்ள முடியும்.

    கருக்கலைப்பு விஷயத்தில் பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள்:

    என்னிடம் ஆலோசனைக்கு வரும் பெண்கள் முதலில் சில சந்தேகங்களை கேட்பார்கள். டாக்டர் நான் திருமணத்துக்கு முன்பு கருத்தரித்தேன், அதன்பிறகு பெரிய கார்ப்பரேட் ஆஸ்பத்திரியில் மிகவும் பாதுகாப்பான முறையில் தான் கருக்கலைப்பு செய்தேன். நல்ல மருத்துவமனையில் போய் தான் பார்த்தேன், தகுதியற்ற மருத்துவர்களிடம் போகவில்லை. அப்படிப்பட்ட நிலையில் கருக்கலைப்பு செய்துள்ள எனக்கு பின் விளைவுகள் வருமா,,,? என்பார்கள். இன்றைய பெண்கள் கேட்கிற முதல் கேள்வியே இப்படித்தான் இருக்கும்.

    அவர்களுக்கு நான் சொல்லும் பதில் இதுதான். கருக்கலைப்பு செய்வதால் கண்டிப்பாக பிரச்சினைகள் வரலாம். இந்த பிரச்சினைகள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், எப்போது வேண்டுமானாலும் வரலாம், திருமணம் என்பது இதற்கு தடையே அல்ல. திருமணமாகி இருந்தாலும், திருமணமாகவில்லை என்றாலும், எந்த காலகட்டத்திலும் கருக்கலைப்பு செய்யும்போது, சில பிரச்சினைகள் அதிகமாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தகுதி பெற்ற மருத்துவர் கருக்கலைப்பு செய்தால் கூட பிரச்சினைகள் வருமா என்றால் வரலாம். என்னென்ன பிரச்சினைகள் வரலாம்? முதலில் உடல் ரீதியான பிரச்சினைகள் வரலாம். இரண்டாவதாக, மன ரீதியான பிரச்சினைகள் வரலாம். மூன்றாவது, அவர்களுக்கு தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் ஏற்படலாம். நான்காவதாக, சமுதாய ரீதியாக பிரச்சினைகள் வரலாம்.

    எனவே ஒரு தேவையில்லாத கர்ப்பத்தை, திருமணத்துக்கு முன்பே உருவான கர்ப்பத்தை கருக்கலைப்பு செய்யும்போது பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்குகிறார்கள்.

    கருக்கலைப்பின்போது பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்:

    கருக்கலைப்பின்போது முதல் முக்கியமான பிரச்சினை உடல் ரீதியான பிரச்சினை ஆகும். அவர்களுக்கு உடல் ரீதியாக என்ன பிரச்சினை வரலாம் என்று பார்த்தால், கருக்கலைப்பு செய்யும்போது பல நேரங்களில் ரத்தப்போக்கு அதிகமாகலாம். கர்ப்ப வாயில் தொற்றுகள் மற்றும் பாதிப்புகள் ஏற்படலாம். கர்ப்பப்பையில் காயங்கள் ஏற்படலாம்.

    அதனால் கர்ப்பம் தரிக்காத நிலை உருவாகலாம். கர்ப்பப்பையில் ஓட்டை விழுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். பல நேரங்களில் கர்ப்பப்பையில் தொற்றுகளும் ஏற்படலாம். அதனால் அந்த பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டு பிற்காலத்தில் கருத்தரிக்க முடியாத நிலையும் வரலாம்.

    தேர்ச்சி பெற்ற மருத்துவர் கருக்கலைப்பு செய்தாலும் கூட, அல்ட்ரா சவுண்ட் வழிகாட்டுதலில் செய்தாலும் கூட சில நேரங்களில் கர்ப்பப்பை பழுது அடைவது, ரத்தப்போக்கு ஏற்படுவது என்பது போன்ற பிரச்சினைகளும் வரலாம்.

    இரண்டாவது மன ரீதியான என்னென்ன பிரச்சினைகள் வரலாம் என்றால், இவர்களை பாதிக்கின்ற ஒரு முக்கியமான விஷயம் மன அழுத்தம். அதாவது கவலை, தேவையில்லாத மன கஷ்டம், இதனால் குற்ற உணர்ச்சி ஆகியவை ஏற்படுகிறது. பல நேரங்களில் கருக்கலைப்பு செய்யும்போது, தாய்மைக்கான ஒரு விஷயத்தை, ஏதோ ஒரு காரணத்துக்காக கலைத்தோம் என்கிறபோது, அதனால் ஏற்படுகிற மன அழுத்தமும் பெண்களை பாதிக்கின்ற மன ரீதியான பிரச்சினைகள் ஆகும்.

    மூன்றாவதாக, சமுதாய ரீதியாக பிரச்சினைகள் வருகிறது. திருமணத்துக்கு முன்பு கர்ப்பம் தரித்து கருக்கலைப்பு செய்வது என்பது சமுதாய ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் ஆகும். அந்த வகையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அவர்களுடைய நிலை தாழ்ந்து விடுகிறது. இதனால் அவர்கள் சமூகத்தில் பழகுவதே குறைவாகிறது. சமூக ரீதியாக தேவையில்லாத செயல் செய்துவிட்டார் என்ற குற்ற உணர்ச்சியோடு அவர்களை பார்ப்பவர்களும் அதிகம். இந்த மாதிரியான பிரச்சினைகள் சமுதாய ரீதியாக ஏற்படுகிறது.

    நான்காவது, இதுபோன்ற பிரச்சினைகளால் அந்த பெண்கள் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் ஏற்படுகிற குழப்பங்களால் அவர்களுடைய வேலைத்திறன் குறைவாகிறது. பல நேரங்களில் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. தேவையில்லாத பண செலவு ஏற்படுகிறது. உடல் நிலை பாதிப்பினால் நீண்ட நாள் பிரச்சினைகள் நிறைய வரலாம். இவை தவிர பல நேரங்களில் இவர்களுக்கு பிற்காலத்தில் குழந்தையின்மை பாதிப்பும் ஏற்படலாம். குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட தம்பதியாக மாறும் நிலையும் வரலாம்.

    ஒவ்வொரு பெண்ணும் தேவையில்லாத கர்ப்பம், தேவையில்லாத கருக்கலைப்பு, திருமணத்துக்கு முன்பு உருவாகும் கர்ப்பம் ஆகியவற்றை கண்டிப்பாக தடுக்க முடியும். ஏனென்றால் இதை தடுப்பதற்கு நிறைய முக்கியமான வழிமுறைகள் இருக்கிறது. இன்றைக்கு கருத்தடை முறை என்பது மிகவும் பொதுவாக இருக்கிறது. கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு சட்ட ரீதியாகபாதுகாப்பு இருந்தாலும், அந்த பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கி யத்துக்கு இது பங்கம் விளைவிக்கிறது.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    தேவையில்லாத கர்ப்பம், கருக்கலைப்பை கண்டிப்பாக தடுக்க முடியும்:

    இந்த வகையில் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், தேவையில்லாத கர்ப்பத்தை தடுக்க முடியும். இன்றைக்கு எத்தனையோ வகையில் கருத்தடை முறைகள் இருக்கிறது. இந்த கருத்தடை முறைகளை சரியான வகையில் பயன்படுத்த வேண்டும். இதைப்பற்றி ஒரு தெளிவான புரிதல் இருக்க வேண்டும்.

    தேவையில்லாத உறவுகளால் ஏற்படுகிற கர்ப்பம், அதை கலைப்பதால் ஏற்படுகிற மன உளைச்சல், இதனால் ஏற்படுகிற உடல் ரீதியான பிரச்சினைகள், அதனால் நீண்ட நாட்களாக குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட தம்பதியினர் இவர்களில் நிறைய பேரை நாங்கள் பார்க்கிறோம்.

    பெண்களுக்கு நாங்கள் சொல்கின்ற முக்கியமான விஷயம் என்னவென்றால், குழந்தை பேறு என்பது நமது நாட்டை பொறுத்த வரைக்கும் திருமணத்துக்கு பிறகு என்பதுதான். தற்காலத்தில் எத்தனையோ கருத்தடை முறைகள் இருக்கிறது. இவற்றினை தெளிவாக தெரிந்து கொண்டு, உங்களுடைய பாலியல் உறவுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். பல நேரங்களில் தேவையில்லாமல் பாலியல் உறவு கொண்டு, அதனால் வருகிற தேவையில்லாத கர்ப்பத்தை கலைக்க போய் உடல், மன ஆரோக்கியம் எல்லாமே கெட்டுப்போகிறது. நல்ல கருத்தடை முறைகள் நமது நாட்டில் மிகவும் எளிதாக கிடைக்கிறது. அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். திருமணத்துக்கு முன்பே உறவு கொள்வது தவறு தவறு இல்லை என்பது ஒவ்வொருவரின் மனம் சார்ந்த விஷயம். அதேபோல் திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் தரிப்பதும் சரியா தவறா என்பது சொல்வதற்கில்லை. ஆனால் உங்களது கர்ப்பத்தை திட்டமிடுவது என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.

    நீங்கள் முறையாக உங்கள் கருத்தரிப்பை திட்டமிட்டால், கண்டிப்பாக இந்த தேவையில்லாத கர்ப்பமும், கலைக்க வேண்டிய அவசியமும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளும் வராது. உணர்வு ரீதியான விஷயங்களில் தேவையில்லாமல் உங்களை இழந்து கருத்தரித்து, அதனால் ஏற்படுகிற மன உளைச்சல், நீண்ட நாள் உடல் ரீதியான பாதிப்பு, பிற்காலத்தில் குழந்தையின்மை ஏற்பட்டு அதனால் உருவாகும் குற்ற உணர்வு, அதோடு உங்களுடைய துணையுடன் ஏற்படுகிற பிரச்சினைகள் ஆகிய அனைத்துமே உங்களால் கண்டிப்பாக தடுக்கக்கூடியது தான். எனவே தேவையில்லாமல் கர்ப்பம் அடைந்து, அதை கருக்கலைப்பு செய்து, உங்கள் உடல், மன ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் உடல் ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் இந்த விஷயங்களில் தெளிவாக பொறுப்புடன் இருந்தால், உங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முழுமையாக தடுக்க முடியும்.

    • உலகில் ஏழு வகை பிறப்புகள் உள்ளன என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
    • மனிதர்கள் இந்த பிறவியில் அனுபவிக்க வேண்டிய வினைக்கு ஏற்ப உடல் அமைப்பு இருக்கும்.

    சந்திர கிரகணம் முடிந்து மகாளய பட்சம் ஆரம்பித்து விட்டது. சாதாரண மனிதன் முதல் சாதனையாளர்கள் வரை பலரும் அஞ்சக்கூடிய ஒரே தோஷம் பித்ருக்கள் தோஷம். இந்த பித்ருக்கள் தோஷம் ஏழைகளுக்கு மட்டுமே உண்டு பணக்காரர்களுக்கு இது செயல்படாத தோஷம் என்ற ஒரு கருத்தும் உள்ளது.

    அதாவது பொருளாதாரரீதியாக எவர் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்களோ எந்த வீட்டில் சுப விசேஷங்கள் நடக்கவில்லையோ யாருக்கு தடை தாமதங்கள் அதிகம் உள்ளதோ அவர்களுக்கு மட்டுமே பித்ரு தோஷம் உண்டு என்ற நம்பிக்கையும் உள்ளது.

    உண்மையில் இது தவறான நம்பிக்கை. உலகில் ஏழு வகை பிறப்புகள் உள்ளன என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த ஏழு பிறவிகளும் அவர் அவர்களின் பாவ புண்ணியங்களை பொருத்து அமையும்.

    அதாவது ஒரு ஆன்மாவின் நல்வினை, தீவினை முடியும் வரை அவர்களின் வினைக்கேற்ப தேவர்களாக, மனிதர்களாக, மிருகங்களாக, பறவைகளாக, நீரில் வாழ்வனவாக, ஊர்வனவாக, தாவரங்களாகப் பிறப்பு எடுப்பார்கள்.

    அவரவர்களின் ஊழ்வினைக்கு ஏற்ப எந்த பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம். எந்தப் பிறவி எடுத்தாலும் அது முன் வினைப்பயனின் தொடர்ச்சியாக தான் அமையும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. தேவர்கள் மனிதராக பிறக்கலாம், மனிதன் மிருகமாக பிறக்கலாம். மிருகம் பறவையாக பிறப்பு எடுக்கலாம். பறவையாக பிறந்தவர் ஊர்வனவாக பிறக்கலாம். நீர்வாழ் உயிராக பிறக்கலாம் அல்லது தாவரமாக பிறக்கலாம்.

    ஆக பிறவிப் பிணி உள்ளவர்களுக்கு மறு பிறவி எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அந்த ஆன்மா எடுக்கும் உடல் வடிவம் வேறுவேறாக இருக்குமே தவிர ஆன்மாவில் பதிந்து கிடக்கும் நல்ல, தீய வினைகள் மாறாது. மனிதர்கள் இந்த பிறவியில் அனுபவிக்க வேண்டிய வினைக்கு ஏற்ப உடல் அமைப்பு இருக்கும். அதாவது அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற் போன்று உடல் வடிவம் உண்டாகும்.

    மனித உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும். அந்த உயிர் காந்த ஆற்றலானது தசா புத்திக்கு ஏற்ப சில நேரங்களில் வலிமையாகவும், சில நேரங்களில் வலுவற்றும் இயங்கும். தசாபுத்திக்கு ஏற்ப மனநிலையில் மாற்றம் உண்டாகி அவரவரின் வினைப் பயன்களை அனுபவிப்பார்கள்.

    ஒரு ஆன்மாவில் நல்வினைகள் அதிகமாக இருந்தால் அடுத்தடுத்து எடுக்கக்கூடிய பிறவிகளில் அவர்களின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்கள் லெளகீக உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் விதத்தில் இருக்கும். தீய கர்மாக்கள் அதிகம் இருந்தால் வரக்கூடிய பிறவிகள் ஜாதகருக்கு மறுபிறவியே இருக்கக் கூடாது என்ற மனநிலையை ஏற்படுத்தும்.

    ஒரு உயிர் பூமியில் பிறப்பெடுக்க அதற்கு ஒரு தாய் தந்தையர் வேண்டும். அந்தத் தாய் தந்தையருக்கு ஒரு பெற்றவர்கள் இருக்க வேண்டும். ஒரு தாய் தந்தையர் தங்கள் பூர்வ ஜென்ம வினைக்கு ஏற்ற குழந்தைகளையே பெற்றெடுப்பார்கள். பிறப்பெடுக்கும் ஒரு உயிர் அனுபவிக்கும் நல்ல தீய கர்மாக்கள் பெற்றோர்களின் கர்மாவுடன் முன்னோர்களின் கர்மாவுடன் சம்பந்தப்பட்ட வையாகவே இருக்கும்.

    ஆக ஒருவன் பிறப்பெடுக்க கர்மா என்ற ஒன்று உண்டு என்பது இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும். சென்ற பிறவியின் பெற்றோர்கள், தாத்தா, பாட்டன், பாட்டி அத்தை, மாமா, மச்சான், பிள்ளைகள், நண்பர்கள் இவர்களுடன் ஏற்பட்ட உறவின் தொடர்ச்சியை முழுமை செய்ய கூடிய உருவ அமைப்பு உள்ள இடத்தில் ஆன்மா பிறப்பெடுக்கும்.

    ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைகள் அவரின் முன்வினையின் தொடர்ச்சியையும், அதனால் வரும் நன்மைகள் அல்லது தீமைகளையும் பிரதிபலிக்கும். ஒருவர் வாழும் பிறவியில் நல்லதைச் செய்தால் துன்பப்படுவதும், கெடுதல் செய்து சிறப்பாக வாழ்வதற்கும் முன்வினைத் தொடர்ச்சியே காரணமாக அமைகிறது.

     

    ஐ.ஆனந்தி

    சுருக்கமாக ஒரு ஆன்மாவின் செயல்களின் அடிப்படையில் அடுத்த பிறவி அமையும். பிறவிச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதே மோட்சமாகும். ஆக இந்தப் பிறவியில் செய்யக்கூடிய நன்மை தீமைக்கு உள்ள பிரதிபலன் அடுத்த பிறவியிலேயே கிடைக்கும். அதைத்தான் நமது முன்னோர்கள் போகும் வழிக்கு புண்ணியம் சேர்த்து வைத்து விட்டு செல் என்று சொல்லி இருக்கிறார்கள்.

    ஒருவருக்கு வாழ்நாளில் அதிர்ஷ்டமோ, கடவுளின் அருளோ, கர்ம வினையோ எதுவாக இருந்தாலும் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடமே தீர்மானம் செய்கிறது. ஏனெனில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் தான் இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டிய அனைத்து வினைகளும் பதிவாகியிருக்கும்.

    ஒருவரின் பூர்வ புண்ணிய ஸ்தான வலிமையை ஐந்தாமிடம், ஐந்தாம் அதிபதி, ஐந்தில் நின்ற கிரகம், ஐந்தாமிடத்தை பார்த்த கிரகம், ஐந்தாம் அதிபதி நின்ற நட்சத்திர சாரம் போன்றவற்றின் மூலம் அறியலாம். சுய ஜாதகத்தில் 5-ம்மிடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுத்திருந்தால் அதாவது அந்த வீட்டில் சுபர்கள் வீற்றிருந்தால் அல்லது அந்த வீட்டுக்குடையவன் சுப வலிமை பெற்றிருந்தால், குரு பார்த்திருந்தால், அந்த வீட்டில் லக்னாதிபதி யோகமாக அமர்ந்திருந்தால் அவர் பூர்வ ஜென்மத்தில் மிகுதியாக புண்ணிய காரியங்கள் செய்தவர் என்று கூறலாம்.

    இந்த அமைப்பு பெற்றவர்களின் ஜாதகத்தில் எந்தவித தோஷங்கள் இருந்தாலும் ஜாதகருக்கு பாதிப்பை கொடுக்காது. முன்வினையில் நல்ல கர்மாக்கள் இருப்பவர்களுக்கு இந்த பிறவியில் நல்ல பெற்றோர்கள் கிடைப்பார்கள். நல்ல குடும்பத்தில் பிறப்பார்கள்.

    உரிய வயதில் திருமணம் நடக்கும். வாழ்க்கைத் துணையால் இன்பங்கள் உண்டாகும். குல கவுரவத்தைக் காப்பாற்றக்கூடிய நல்ல பிள்ளைகள் பிறப்பார்கள். நிலையான நிரந்தரமான தொழில் உத்தியோகம் இருக்கும். ஸ்திர சொத்துக்கள் சேரும். குலதெய்வத்தின் அருள் கடாட்சம் கிடைக்கும். பூர்வீகத்தால் பயன் உண்டு. கெட்ட நோய்த் தாக்கங்கள் வராது. தேவைக்கு நல்ல பண வசதிகள் இருக்கும்.

    ஆயுள் சார்ந்த பயம் இருக்காது. பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் இருக்கும். லவுகீக வாழ்வில் உள்ள அனைத்து பாக்கியங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்களாக இருப்பார்கள். ஒரு ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் ஐந்தாம் இடமே ஒருவரின் முன்வினை தொடர்ச்சியை சொல்லக்கூடிய ஸ்தானமாகும்.

    ஜோதிட ரீதியாக லக்னம் ( ஜாதகர்) பூர்வ புண்ணிய ஸ்தானம் (ஐந்தாமிடம்) பாக்கிய ஸ்தானம் (ஒன்பதாமிடம்) போன்ற இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகத்தை வைத்தும் பித்ரு தோஷத்தை தெளிவாக உணர முடியும். குறிப்பாக சூரியன், ராகு/ கேது, மாந்தி சம்பந்தம், 9-ம் அதிபதி ராகு/கேது, மாந்தி சம்பந்தம், சூரிய, சந்திர கிரகணத்திற்கு 7 நாட்களுக்கு முன், பின் பிறக்கும் குழந்தைகளுக்கு கடுமையான பித்ரு தாக்கம் உண்டு.

    சூரியன் ராகு சேர்க்கை தந்தை வழி பித்ரு தோஷத்தாலும், சூரியன் கேது சேர்க்கை தாய் வழி பித்ரு தோஷத்தாலும் ஏற்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேதுக்களுடன் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உள்ள ஜாதகமாக கருதப்படும்.

    பித்ருக்கள் தோஷம் வெளிப்படும் காலம்

    ஜனன கால ஜாதகத்தில் உள்ள சூரியன், சந்திரன், சனி பகவானை கோட்ச்சார ராகு, கேது சந்திக்கும் காலத்திலும் ஜனன கால ராகு மற்றும் கேதுவை கோட்ச்சார சூரியன், சந்திரன், சனி சம்பந்தம் பெறும் காலங்களில்பித்ரு தோஷம் மிகுதியாக வெளிப்படும். மேலும் ஏழரைச் சனி, அஷ்டம சனி கண்டகச் சனி, அர்த்தாஷ்டம சனி காலங்களிலும், கீழ்கண்ட தசா புத்திகளிலும் பாதிப்பு வெளிப்படும்.

    சூரிய தசை ராகு புத்தி

    ராகு தசை சூரிய புத்தி

    சனி திசை ராகு புத்தி

    ராகு தசை சனி புத்தி

    சனி தசை கேது புத்தி

    கேது தசை சனி புத்தி

    கேது தசை ராகு புத்தி

    சந்திர தசை ராகு புத்தி

    ராகு தசை சந்திர புத்தி

    சந்திர தசை கேது புக்தி

    கேது தசை சந்திர புத்தி

    ஒருவருக்கு பித்ருக்களிடமிருந்து கிடைப்பது நல்லாசியா அல்லது கர்மவினை சார்ந்த பாதிப்பா என்பதை நிர்ணயிப்பது திதிசூனிய பாதிப்பு. தோஷம் தொடர்பான பாகங்கள்.

    திதி சூனிய பாதிப்பு இருந்தால் நிச்சயமாக அது தோஷமாக செயல்பட்டு ஜாதகருக்கு கர்ம வினை சார்ந்த பாதிப்புகளை தரும். அதே போல் தோஷம் தொடர்பான பாவங்களுக்கு சுபர்களின் சம்பந்தம் இருந்தால் அது ஜாதகருக்கு சுப பலன்களை வழங்கும்.

    ஒரு ஜாதகத்தில் உள்ள எத்தகைய தோஷமாக இருந்தாலும் அது எல்லா காலத்திலும் வேலை செய்யாது. குறிப்பிட்ட சில காலங்களில் மட்டுமே வேலை செய்யும். அதனால் எந்த காலத்தில் எந்த தோஷம் பாதிக்கும் என்பதை அறிந்து செயல்பட்டால் அந்த பாதிப்புகளில் இருந்து மீளக்கூடிய வழிபாடுகளை கடைபிடிக்க முடியும். ஒரு ஜாதகத்தில் உள்ள எந்த தோஷமாக இருந்தாலும் லக்னம் லக்னாதிபதியுடன் சம்பந்தப்படாத எந்த தோஷமும் ஜாதகரை தாக்காது பாதிக்காது.

    கிரக தோஷங்களை வெளிப்படுத்தக்கூடிய தசா புத்தி வராத காலங்களிலும் பாதிப்பு வராது.

    ஒரு ஜாதகத்தின் பலனை நிர்ணயிக்கக் கூடிய தோஷங்கள் அனைத்திற்கும் இதே முறையில் பலன் எடுக்க வேண்டும். தசா நாதன் அல்லது புத்திநாதனுக்கு வீடு கொடுத்த கிரகம் சுபத்துவ நிலையில் இருந்தாலும் தோஷங்களால் பாதிப்பு வராது.

    அதே போல் தசை வராவிட்டால் என்ன புத்தி வரும் .அதிக வருடங்கள் கொண்ட தசாவின் புத்திகள் நடப்பில் வரும் காலங்களில் கோட்சார கிரகங்கள் சாதகமாக இருந்தாலும் புத்தி நாதனுக்கு சுப கிரகங்களின் பார்வைகள் இருந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது என்று கூறலாம். சிறிய தசைகளின் புத்தியாக இருந்தால் குறுகிய காலம் கண்ணிமைக்கும் முன் கடந்து விடும்.

    ஒருவருக்கு பித்ரு தோஷம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி தனது முன்னோர்களுக்கு பிதுர் கடன் செய்வது மானிடராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உள்ள கடமையாகும். அந்த வகையில் தற்போது சந்திர கிரகணம் முடிந்து மகாளய பட்சம் ஆரம்பித்துவிட்டது. இந்த காலகட்டங்களில் முழுமையாக முறையாக பித்ருக்களை வழிபட்டால் இந்தப் பிறவியிலும் வரக்கூடிய பிறவியிலும் புண்ணிய பலன்கள் அதிகமாகும். பித்ரு தோஷம் பாதிப்பு வராது.

    மறைந்த முன்னோர்கள் மொத்தமாக கூடும் காலமான 15 நாளே மகாளய பட்சம். முன்னோர்கள் அனைவரும் கூட்டமாக வந்து தங்கும் இந்த நாட்களில் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். மகாளய பட்ச காலத்தில் பிரதமையில் துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். 3 தலை முறை தந்தை வழி, தாய் வழி முன்னோர்களை நினைத்து தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி முன்னோர் ஆத்மசாந்திக்காக வழிபாடு செய்ய வேண்டும். அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுத்து உதவலாம்.

    மகாளய பட்சம் என்னும் இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் பயன்படுத்தினால் புண்ணிய பலன்கள் உங்கள் தலைமுறைக்கு வந்து சேரும்.

    செல்: 98652 20406

    • செய்வன திருந்த செய்வதோடு, சிறப்பாகவும் செய்ய வேண்டும்.
    • உணவில் பாம்பின் விஷம் கலந்து அந்த ஆயிரம் பேரும் இறந்துள்ளனர்.

    காய்கறி என்றாலே பலருக்கும் அவ்வளவு பிடித்தமானதாக இருப்பது இல்லை. வெங்காயம், உருளை, தக்காளி, பூண்டு, இஞ்சி போன்றவை எப்படியோ சமையலில் இடம் பிடித்து விடுகின்றன. ஆனால் மற்ற காய்கறிகளில் எத்தனை சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள், ஆன்டிஆக்ஸிடென்ட், நார்சத்து என கொட்டிக் கிடக்கின்றன.

    அவையெல்லாம் நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்டுகின்றன என்பது யாருக்கும் தெரிவதில்லை. கடும் நோய்களை தாக்கும் அபாயத்தினை வெகுவாக குறைக்கின்றன. ஜீரண சக்தி சீராகின்றது. எடை கூடுதல் தவிர்க்கப்படுகின்றது.

    பொட்டாசியம், வைட்டமின் கே போன்றவை உயர் ரத்த அழுத்த கட்டுப்பாடு, இருதய பாதுகாப்பு இவற்றைத் தருகின்றன. வைட்டமின் ஏ, பி. சத்துக்கள் ஆரோக்கியமான கண், மூளை இவற்றிற்கு உதவுகின்றன. உங்கள் தட்டில் பாதி பகுதி தட்டு நிரம்ப காய்கறிகள் இருக்க வேண்டும். சருமம் இளமையாய் இருக்கின்றது. புற்று நோய், சர்க்கரை நோய், இருதய நோய் இவைகளுக்கு எதிர்ப்பாக அமைந்து காய்கறிகளே உடலை பாதுகாக்கின்றது.

    இப்படி எண்ணற்ற அத்தியாவசிய பயன்கள் உள்ளன.

    * பசலை கீரை- குறைந்த கலோரி சத்து கொண்ட இந்த கீரை உடலுக்கு நல்லது.

    * புற்று நோயில் இருந்து காப்பது, நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டுகின்றது.

    * ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்க உதவுகின்றது.

    * இருதய நோய்களில் இருந்து காக்கின்றது. பார்வை சீராக இருக்க உதவுகின்றது.

    * எலும்பு ஆரோக்கியம் கூட்டுகின்றது. மக்னீசியம் சத்து நிறைந்தது.

    * வைட்டமின் கே, ஏ. போலேட், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம், வைட்டமின் பி6 என இதில் கொட்டி கிடக்கின்றது.

    * உயர் ரத்த அழுத்தம் குறைக்கின்றது. வயது கூடும் பொழுது ஏற்படும் மறதி பாதிப்பு குறைகின்றது.

    * குடல் ஆரோக்கியம் கூடுகின்றது. கழிவுப் பொருட்கள் தேக்கமின்றி வெளியேறுகின்றன.

    * இரும்பு சத்து நிறைந்தது

    கமலி ஸ்ரீபால்


     

    * ஒரு கப் பசலை கீரை அன்றாடம் இருந்தாலே போதும். இத்தனை நன்மைகளும் கிடைக்கும். பிள்ளைகளுக்கு கொஞ்சம் பன்னீர், கொஞ்சம் உருளை, கொஞ்சம் கூட்டு என எளிதாய் சேர்க்கலாமே.

    முட்டை கோஸ்- காபேஜ் எனப்படும் இந்த முட்டை கோசினை அதிகம் ஓட்டல்களில் கூட்டு, பொரியல் என பயன்படுத்துவார்கள். வீட்டில் இதற்கு சற்று மவுசு குறைவுதான். இதனை அதிக நீரில் வேக வைத்து நீரை கொட்டி சமைக்கும் போது சத்துக்களையும் இழந்து விடுகின்றோம். முட்டை கோஸ், காலிபிளவர், புரோகலி இவற்றினை ஒரு பிரிவின் கீழே கொண்டு வரலாம். இதில் பெரியது, சிறியது, நிற மாற்றம் கொண்டது என முட்டை கோஸ் பிரிவு படலாம். ஆனால் குணங்கள் அநேகமாக ஒரு மாதிரியாகதான் இருக்கும்.

    * காபேஜில் மிக முக்கியமாக பார்க்கப்படுவது இதில் உள்ள வைட்டமின் கே1, கே2 இவைதான். ரத்தம் உறைதலுக்கு மிகத் தேவையான வைட்டமின் ஆகும்.

    * வைட்டமின் 'சி' சத்து நிறைந்தது.

    * இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் நாட்பட்ட உடல் வீக்கங்களையும் குறைக்கின்றது.

    * ஜீரணத்தை எளிதாக்குகின்றது. * இருதய பாதிப்பு அபாயத்தை குறைக்கின்றது.

    * உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கிறது. * கெட்ட கொழுப்பு குறையும். * நார் சத்து கொண்டது. * சமைப்பது எளிது... விலையும் குறைவுதான். * சூப், கூட்டு, பொரியல், சட்னி, காபேஜ் பக்கோடா (எப்போதாவது) என உணவில் எளிதாய் சேர்க்கலாமே.

    மஞ்ச பூசணி- தோட்டங்களில் காய்த்து கொட்டி கிடக்கும். இதற்கும் மக்களிடையே மவுசு குறைவுதான். ஆனால் இவையெல்லாம் நமக்கு இறைவன் கொடுத்த வரம். * நோய் எதிர்ப்பு சக்தி கூட்டவல்லது. * இதில் உள்ள அதிக வைட்டமின் 'சி' சத்து வெள்ளை ரத்த அணு உருவாக்கத்தில் பெரிதும் உதவுகிறது.

    * இதனால் காயங்கள் எளிதில் குணமாகின்றன.

    * வைட்டமின் ஏ, இரும்பு, ஸ்போலேட் சத்து நிறைந்தது.

    * இதில் உள்ள வைட்டமின் ஏ, வியூடின், சான்தின் இவை கண்பார்வையை காப்பதில் பெரும் பங்கு கொள்கின்றன. குறிப்பாக முதுமைகால கண் பாதிப்புகளை காக்கின்றன.

    * குறைந்த கலோரி சத்து கொண்டது என்பதால் எடை குறைப்புக்கும் உதவுகிறது.

    * இதில் உள்ள ஆன்ட்டிஆக்சிடன்ட் புற்று நோயினை எதிர்க்கும் வல்லமை கொண்டது.

    இப்படியெல்லாம் வளம் கொண்ட இதனை உண்பது அவசியம் அல்லவா?

    இதெல்லாம் கூட வாழ்வில் அவசியம்தான்.

    * உங்களை மதிக்காத, அக்கறை கொடுக்காத ஒருவரின் பின்னால் நீங்கள் ஏன் தொங்கிக் கொண்டு செல்ல வேண்டும். அவர்கள் காட்டும் அலட்சியம், மரியாதையின்மையால் நீங்கள் ஏன் நொந்து துவண்டு, மனச்சோர்வில் செல்ல வேண்டும். ஏன் சோகமாக இருக்க வேண்டும். இவர்களை மனதில் இருந்து கண்டிப்பாக அகற்றி விடுங்கள். மறந்து விடுங்கள்.

    * எதற்காகவும் யாரையும் கெஞ்சாதீர்கள். இறைவனிடம் கெஞ்சுங்கள். (உங்களுக்கு இறை நம்பிக்கை இருந்தால்) பிரபஞ்சத்திடம் கேளுங்கள். மற்றபடி மனிதர்கள் அடுத்தவனுக்கு வாழ்வில் சற்று இறக்கம் வந்தால்கூட ஏறி மிதித்து மகிழ்பவர்கள்தான்.

    * தேவையான அளவு அடுத்தவரிடம் பேசுங்கள். நம் வீட்டு பால் செலவு, மளிகை செலவு, உறவினர் சண்டை இதெல்லாம் அடுத்தவருக்கு சொல்ல நீங்கள் என்ன சினிமா படம் ஓசியில் வெளியிடுகின்றீர்களா என்ன?

    * மரியாதை இல்லாத இடத்தினை உடனே அமைதியாய் எதிர்த்து விட வேண்டும்.

    * மதியாதார் தலை வாசல் மிதியாதே' என்பது தெரியுமே.

    * முயற்சி, உழைப்பு, பணம் இவற்றினை உங்கள் மீது முதலீடு செய்து மகிழ்ச்சி பெறுங்கள்.

    * பிறரைப் பற்றி, ஊர் வம்பினை சிறிது கூட ஆதரிக்க வேண்டாம்.

    * வாயில் இருந்து ஒரு வார்த்தை வருவதற்குள் நன்கு யோசித்து சொல்ல வேண்டும். இதில் தான் உங்களைப் பற்றிய மதிப்பும், மரியாதையும் பதிவாகின்றது.

    * தேவையின்றி பிறரைத் தூக்கி தலையில் வைத்து ஆட வேண்டாம். அவரவர் பண்பின் தகுதிக்கேற்ப அவர்களை மதித்தால் போதும்.

    * செய்வன திருந்த செய்வதோடு, சிறப்பாகவும் செய்ய வேண்டும்.

    * நமக்கு மகிழ்ச்சி வேண்டும். துன்ப கடலில் நீந்த வேண்டாம். அனைவரும். அன்னை தெரசா ஆக முடியாது.

    * உங்கள் குழந்தைகளுடன் நன்கு நேரம் செலவழியுங்கள்.

    பழைய நிகழ்வுகளை தோண்டி எடுத்து வருந்த வேண்டாமே.

    * வாழ்க்கையினை கொடூர அரக்கனாக பார்க்கக் கூடாது. நாம் நன்கு வாழ வேண்டும்.

    * அடிக்கடி வெளியில் செல்லுங்கள். இயற்கையோடு இருங்கள். சூரிய உதயம், கடல், மலை, பூங்கா என அத்தனை இடங்கள் உள்ளன. 'இவை அனைத்தும் வாழ்வினை நன்கு வாழ்வதற்காகவே' ஊர்வம்பு, புரளி, பிறரைப் பற்றி பேசக்கூடாது என்பதனை வலியுறுத்தும் ஒரு கதையினைப் பார்ப்போமா.

    ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். அவருக்கு கொஞ்சம் நல்ல மனசு. இரக்கமான மனசு. அன்றாடம் கண் தெரியாதோர் ஆயிரம் பேருக்கு உணவு அளித்து வந்தார். ஒருநாள் அந்த உணவில் பாம்பின் விஷம் கலந்து ஆயிரம் பேரும் இறந்து விடுகின்றனர். ராசாவின் மனசு பாடாய்பட்டது. புண்ணியம் சேரா விட்டாலும் பரவாயில்லை. இப்படி பாவத்தினை சேர்த்துக் கொண்டு விட்டோமே என்று வேதனைப் பட்டான். ஊர் ஊராய் சுற்றி அலைந்தான். ஒரு நாள் இரவில் ஒரு கிராமத்தினை வந்தடைந்தான். அவனை யாருக்கும் அடையாளம் தெரிய வில்லை. மிகுந்த சோர்வாய் இருந்த அவன் ஒரு நல்ல பக்திமான் இருக்கும் வீட்டில் ஓய்வெடுக்க விரும்பினான்.

    அங்குள்ளவர்களை விசாரித்த பொழுது சற்று தள்ளி உள்ள குடிசையினை காட்டி 'இங்கு ஒரு சிறுவனும், சிறுமியும் உள்ளனர். அவர்கள் உடன்பிறந்தவர்கள். இந்த சிறு வயதிலேயே மிகுந்த பூஜை, பக்தி என்று இருப்பவர்கள். நீங்கள் அவர்கள் வீட்டு திண்ணையில் இன்று இரவு தங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்றனர்.

    அரசனும் அங்கு சென்றார். இரவும் சரி, விடியற்காலையும் சரி அந்த சிறுவனும், சிறுமியும் தியானம், பூஜை என்றிருந்தனர். வழக்கத்தினைக் காட்டிலும் அன்று அதிக நேரம் சிறுமி தியானத்தில் இருந்தாள். அப்பொழுது அவனது சகோதரன் 'அக்கா இன்று நீ மிக அதிக நேரம் தியானத்தில் இருந்தாய். ஏன்? வாசலில் ஒரு வழிப்போக்கர் உள்ளார்.

    அவருக்கு நாம் ஏதாவது உணவு கொடுக்க வேண்டாமா? என்று கேட்டான். அந்த பெண்ணோ, ஒரு விநோதமான குழப்பம் எமதர்ம ராஜனுக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு அரசன் தினமும் 1000 பேருக்கு உணவளித்து வந்துள்ளான். அந்த உணவில் பாம்பின் விஷம் கலந்து அந்த ஆயிரம் பேரும் இறந்துள்ளனர்.

    எமதர்மராஜனின் குழப்பமே இந்த பாவக் கணக்கினை யார் மீது எழுதுவது? அந்த பாம்பினை தூக்கிப் பறந்த பறவையின் மீதா, இறுக்கத்தால் விஷம் கக்கிய அந்த பாம்பின் மீதா அல்லது அரசன் மீதா என்ற விவாதம் நடக்கிறது. இதனை கேட்டுக் கொண்டிருந்தால் என் தியான நேரம் கூடி விட்டது என்றாள். இந்த விஷயம் தன்னைப் பற்றியதாக இருக்கவே அரசன் கூர்ந்து கவனித்தான்.

    'என்ன முடிவு எடுத்தார்கள்?'- சிறுவன்

    'இன்னமும் முடிவு எடுக்கவில்லை?'-சிறுமி

    அரசன் அந்த சிறுவர்களிடம் நான் இன்றும், நாளையும் இந்த வாசல் திண்ணையில் தங்கிக் கொள்ளலாமா எனக் கேட்டான். அவர்களும் மகிழ்ச்சியுடன் 'சரி' என்றனர்.

    என்ன முடிவு வருமோ என்ற கவலை அரசனுக்கு. ஊர் மக்கள் இவன் தங்குவதைப் பார்த்தனர். அவ்வளவுதான். ஊர் தான் என்ன வேண்டுமானாலும் பேசுமே. அந்த சிறுமி அழகாக இருப்பதால் இந்த வழிப்போக்கன் அங்கே தங்கி இருக்கிறான் என தவறாக பேசத் தொடங்கினர்.

    மறுநாள் சிறுமி தியானம் முடித்து வந்தாள். பயத்துடன் காத்திருந்த அரசன் 'குழந்தாய் இன்று எமதர்ம ராஜா என்ன முடிவு கூறினார்' என்று கேட்டார். அச்சிறுமி சொன்னாள் அந்த பாவம் எங்கள் கிராமத்தில் திண்ணையில் அமர்ந்து பேசிய நபர்களுக்கு பங்கிடப்பட்டுள்ளது. எனவே அடுத்தவரை தவறாக பேசுவது, கதை கட்டி விடுவது இவையெல்லாம் மற்றவர்களின் பாவத்தையும் சேர்த்து புரளி பேசுபவர் தலையில் கட்டி விடும். கவனம் தேவை.

    • மனத்தில் குழப்பம் சூழ்வதால் செயலில் எந்தத் தெளிவும் இல்லாமல் போய்விடும்.
    • நிலையானதைக் கண்டறிவதற்கு நிலைத்த நம்பிக்கை என்பது அவசியம் தேவை.

    'யானைக்கு வலிமை தும்பிக்கையில்! மனிதனுக்கு வலிமை நம்பிக்கையில்!' என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள வாசகப் பெருமக்களே வணக்கம்!.

    மனித வாழ்வில் எல்லாத் தருணங்களிலும் எதிரெதிர்த் தன்மைகளில்தான் எல்லா நிகழ்வுகளும் நிகழ்ந்து கொண்டுள்ளன. நேர்முறை அல்லது எதிர்மறை ஆகிய இவ்விரண்டின் திசைகளில்தான் நமது திட்டமிடல்களும் செயல்பாடுகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன; இதன் முடிவு, நன்மையில் விடிவது! அல்லது தோல்வியில் துவள்வது! இரண்டில் ஒன்றாகவே இருக்கிறது. எது எப்படியாயினும் தளர்ந்து போகாத நம்பிக்கையே மனிதனைத் தொய்ந்து போகாத வெற்றி இலக்கைநோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது.

    நம்பிக்கையும் இருபெரும் பிரிவுகளைக் கொண்டது ஆகும். நன்னம்பிக்கை மற்றும் அவநம்பிக்கை என்பவை அவை. ஒரு செயலில் இறங்கும்போதே, வெற்றி பெறுவதே இலக்கு என்றாலும், சிலவேளைகளில் அவநம்பிக்கை நம்மை அறியாமலேயே வந்து நமது ஆழ்மனத்தில் அமர்ந்து கொள்ளும். ஒரு வேலைக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும்போது, நாம் நம்பிக்கையுடன் சென்று கலந்து கொண்டால், தெரியாத கேள்விக்கு விடையளிக்கும் போதுகூட, அது சரியான பதில்போல அமைந்து விடுவதுண்டு.

    அதேநேரத்தில், நேர்முகத் தேர்வுக்கு, இந்த வேலை நமக்குக் கிடைக்கவே கிடைக்காது என்கிற அவநம்பிக்கையோடு போய்க் கலந்துகொண்டால், தெரிந்த கேள்விகளுக்குக்கூடப் பிழையான பதில்களையே மனம் கொண்டுவந்து நிறுத்தும். ' மருந்து கால்! நம்பிக்கை முக்கால்!' என்கிற பழமொழி, நோய்த் தீர்வுக்கான சூத்திரம் மட்டுமல்ல; வெற்றி இலக்கை எட்டுவதற்கான நம்பிக்கை மந்திரமும் கூட.

    வாழ்வின் ஒவ்வொரு நொடியும், அடுத்த நொடி குறித்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே நகர்ந்து கொண்டிருக்கிறது; அதுவும் நன்னம்பிக்கையாக இருந்தால், வெகு சிறப்பாகவே இருக்கும். நாளைக் காலையும் விடியும்; சூரியன் உதிக்கும்; பகலின் வெளிச்சக் கிரணங்கள் நமது சுறுசுறுப்பான இயங்குதலுக்கு வழிகாட்டும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை நெஞ்சத்தில் ஆழமாக இருப்பதால் தான், நாம் முதல்நாள் இரவில் நிம்மதியாகக் கண்மூடித் தூங்கப் போகிறோம்.

    நெஞ்சத்தில் நிச்சயமின்மை புகுந்து விட்டால், தூக்கம்கூடத் தொலைதூரத்திற்குச் சென்றுவிடும்; மனத்தில் குழப்பம் சூழ்வதால் செயலில் எந்தத் தெளிவும் இல்லாமல் போய்விடும். அதனால்தான் நம்பிக்கை வேண்டும்; அதுவும் அவநம்பிக்கையற்ற நன்னம்பிக்கை வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

    "வானிலாதது ஒன்றுமில்லை வானுமில்லை

    வானிடில்

    ஊனிலாதது ஒன்றுமில்லை ஊனுமில்லை

    ஊனிடில்

    நானிலாதது ஒன்றில்லை நானுமில்லை

    நன்னிடில்

    தானிலாதது ஒன்றுமே தயங்கி

    ஆடுகின்றதே!"

    சுந்தர ஆவுடையப்பன்


     

    என்கிற சிவவாக்கியர் பாடல், இந்த உலகில், நிலையானதுபோல் தோன்றுகிற எதுவுமே நிலையானது இல்லை என்கிறது. வானம், உடம்பு, நான் என்னும் ஆளுமை எல்லாம் இருப்பதுபோல் தோன்றி உலகிற்கும் மனித உடம்பின் செயல்பாட்டிற்கும் ஒரு கட்டமைப்பை வழங்கினாலும், உண்மையில், வானமும், உடம்பும், நான் என்னும் தன்முனைப்பும் நிச்சயமாக இல்லை என்பதே கண்கண்ட உண்மை; தான் என்பது இல்லாமல் ஜோதி சொரூபமாய் ஆடிக்கொண்டிருக்கும் இறையே நிலையானது ஆகும் என்பதை இப்பாட்டு உணரச் செய்கிறது.

    நிலையில்லாதவற்றிலிருந்து நிலையானவற்றைக் கண்டறிவதே உலகியல் வாழ்வின் தத்துவம். நிலையானதைக் கண்டறிவதற்கு நிலைத்த நம்பிக்கை என்பது அவசியம் தேவை.

    திபெத் நாட்டில் நடந்த ஒரு நிகழ்வு. ஒரு துறவியை நாடி ஓர் இளைஞன் வந்தான். "குருவே! என்னைச் சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்!. எனக்கு உங்களது ஆசிகளையும் அறிவுரைகளையும் வழங்குங்கள்!" என்று மன்றாடிக் காலில் விழுந்தான். அந்த இளைஞனைத் தூக்கி நிறுத்திய துறவி," இன்று முதல் உன்னைச் சீடனாக ஏற்று ஆசீர்வதிக்கிறேன்; அறிவுரை என்று பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை; என்னை குருவாக ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாய், இனிமேல் நீ எதைச் செய்தாலும், என்னுடைய பெயரைச் சொல்லிச் செய்!.

    முழுமையாக என்னுடைய பெயரை மட்டும் நம்பு! வெற்றி நிச்சயம்! "என்று சொல்லி அனுப்பினார்.

    அன்றுமுதல் குருவின் திருப்பெயரைச் சொல்வதையே மந்திரமாகக் கருதிச் செயல்படத் தொடங்கினான் அந்த இளைஞன்; திடீரென ஒருநாள், அந்த ஊரின் குளத்திற்குக் குளிக்கச் சென்ற இளைஞன், குளித்து முடித்தவுடன், குளத்து நீரின் மீதேறி அக்கரைக்கு நடந்தே சென்று அடைந்தான்; சீடன் குளத்து நீரின் மீதேறி நடந்து சென்ற அதிசயத்தை அந்தத் துறவியிடம் சென்று மக்கள் ஆச்சரியமாகச் சொன்னார்கள். அடுத்த நாளே, அந்த ஊரில் உயரமாக இருந்த குன்றின் உச்சிக்குச் சென்ற சீடன், குருவின் பெயரைச் சொல்லிக் கீழே குதித்து விட்டான்; குன்றின் அடிவாரத்தில் விழுந்த சீடன், ஒரு பொட்டுக் காயமின்றி எழுந்து நடக்கவும் தொடங்கி விட்டான்.

    இதையெல்லாம் கேள்விப்பட்ட துறவி, சீடன் இவ்வளவும் செய்வதற்கு எது காரணம்? யார் காரணம்?; அந்த இளைஞனின் தனிப் பயிற்சியா? அல்லது சிறப்பான திறமையா? என்று ஊர் மக்களைப் பார்த்துக் கேட்டார். "வேறு எதுவுமே காரணமில்லை! நீங்கள் ஒருத்தர் மட்டுமே காரணம்!. நீரின்மீது நடக்கும்போதோ அல்லது குன்றின் உச்சியிலிருந்து குதிக்கும்போதோ அந்த இளைஞன் உங்கள் பெயரை மட்டுமே தொடர்ந்து மந்திரம்போலச் சொல்லிக்கொண்டு செயலில் ஈடுபட்டான்; வெற்றியும் கண்டான்.

    அந்த ஆற்றலை அவன் பெறுவதற்கு உங்கள் பெயரே உறுதுணையாக இருந்திருக்கிறது; உண்மையில், உங்கள் பெயர் மட்டுமல்ல, நீங்களும் ஆற்றல் மிக்கவர்" என்று துறவியிடம் கூறினர் பொதுமக்கள்.

    மகிழ்ந்துபோன துறவி, தன்னுடைய ஆற்றலைப் பரிசோதித்துப் பார்க்க, அவரே நேரடியாகக் குளத்தங்கரைக்குச் சென்று, குளத்தின்மீது நடக்கத் தொடங்கினார்; பாவம் நீருக்குள் மூழ்கி மூச்சுத் திணறலுக்கு ஆளானார்.

    பிறகு குளத்துக்குள் குதித்த நீச்சல் தெரிந்த சில பொதுமக்களால் காப்பாற்றப்பட்டார். நல்லவேளை முதல் பரிசோதனைக்குக் குளத்தங்கரைக்கு வந்ததால், அவர் சேதாரமின்றிக் காப்பாற்றப்பட்டார்; நேராகக் குன்றின் உச்சிக்குச் சென்று குதித்திருந்தால், ஆதாரமின்றி உடல் சிதறியிருப்பார். இப்போதுதான் அவருக்கு உண்மை விளங்கியது. உண்மையில் தனது சீடனுக்கு மந்திர ஆற்றலை வழங்கிய சக்தி, தானோ அல்லது தன்னுடைய பெயரோ இல்லை; அந்த இளைஞன் அந்தப் பெயரின் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத நன்னம்பிக்கை.

    நம்பிக்கை கொள்வது என்பது இயல்பானது; ஆனால் நம்பிக்கைமீதே மாற்றமுடியாத நம்பிக்கை கொள்வதில்தான் வெற்றியின் விலாசம் அடங்கியிருக்கிறது. நம்பிக்கை கொள்வது என்பது ஒரு செயலோடு உறவுகொள்வது மட்டுமல்ல; அதனோடு உரிமை கொள்வதும் ஆகும். அப்போதுதான், செயலாற்றும்போது தளராத முயற்சி, இடைவிடாத உழைப்பு, அயற்சி கொள்ளாத மகிழ்ச்சி ஆகிய அத்தனையும் நம்மோடு உரிமை கொண்டாடி வந்து உயரத்திற்கு உயர்த்தும்.

    விருப்பத்தோடு கல்லையும் சாப்பிட்டால், அதையும் வயிறு சீரணித்துவிடும்; இதற்குக் காரணம் விருப்பமும் நம்பிக்கையுமே காரணம். அதே நேரத்தில், நம்பிக்கையில்லாமல் பச்சைத் தண்ணீரைப் பருகினாலும் வயிற்றுப் போக்கும் வாந்தியுமே இறுதி விளைவாக இருக்கும். எதில் ஈடுபட்டாலும் அதில் முழு மனஈடுபாட்டோடும், மகிழ்ச்சி நம்பிக்கையோடும் ஈடுபட்டால் தளர்ச்சியில்லாத வெற்றி, தகுதிப் பரிசாகக் கிட்டும்.

    நம்பிக்கை வைப்பதுகூடத் திடீரென வந்துவிடக்கூடாது; அப்படி வந்துவிட்டால் அது மூடநம்பிக்கையாகக் கூட மாறிவிடும். இன்றைய புதிய அறிவியல், மனித மூளையை நம்பிக்கை இயந்திரமாகப் பார்க்கச் சொல்கிறது. இதுவரை இறங்கிச் செய்த வேலைகளில் ஏற்பட்ட தடைகளையும் தோல்விகளையும் பாடங்களாக எடுத்துக்கொள்ளச் சொல்கிறது மூளை; இந்த இடத்தில் நம்பிக்கை நமக்குக் கற்றுத்தருகிற போதகாசிரியராகவும் திகழ்கிறது.

    கடந்த காலம் நமக்குத் தந்தது தோல்வி மட்டுமே! என்றாலும் அவநம்பிக்கை கொள்ளாமல், அதிலிருந்தும் படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு எதிர்காலம் இனிமையானது எனும் நன்னம்பிக்கையோடு முன்னேற வேண்டும். எதிலும் தளராமல் உறுதியான நம்பிக்கை எண்ணங்களோடு செயல்படத் தொடங்கினால் நேர்முறையான விளைவுகளே நமக்கு அமைதியையும் வளத்தையும் அள்ளிக்கொண்டு வந்து கொட்டும்.

    உலகம் ஒளிமயமானது என்கிற நம்பிக்கை நமது எண்ணங்களிலும் பரவ வேண்டும் என்பதற்காகத்தான் நமது வாழ்வின் ஒவ்வொரு விடியலும் ஒளிக்கிரணங்களோடு மலர்கிறது. ஒளி என்பது அறிவின் குறியீடு; ஒளி மகிழ்வின் வெளிப்பாடு; ஒளி நம்பிக்கையின் புறப்பாடு. நம்பிக்கை மகிழ்வோடு, மகிழ்ச்சி ஈடுபாட்டுடன் ஒரு செயலில் இறங்கும்போது, எல்லாத் தடங்கல்களும் சூரியக் கதிர் பட்ட பனிபோல விலகிவிடுகின்றன.

    நமது ஒவ்வொரு செயலின் தீர்க்கமான வெற்றிக்கும் அடிப்படையாக நமது மனமும் உடலும் சோர்ந்துபோகாத சுறுசுறுப்போடு திகழ வேண்டும். செயலில் இறங்கும்போதே அவநம்பிக்கையின் சுவடுகள் அணுவளவும் சிதைக்காத வண்ணம் நம்மைப் பாதுகாப்பதற்கு நாம் நன்னம்பிக்கை கொள்வதே சிறந்த ஊக்கமாகும்.

    நன்னம்பிக்கை நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்க, செயலில் இறங்குவதற்கு முன், மூன்றுவிதமான தன்மைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம் இறங்கப் போகும் செயல்குறித்த பொதுவான விழிப்புணர்வு அடிப்படையான முதல் தேவையாகும். செயலின் தன்மை எப்படி? எதிர்கொள்ளும்போது ஏற்படும் விளைவுகளும் தடங்கல்களும் எப்படிப்பட்டவை? போன்றவற்றில் ஆழ்ந்த அறிவு இதற்கு வேண்டும்.

    "எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

    அதிர வருவதோர் நோய்"

    என்னும் குறளில் வள்ளுவப் பேராசான், 'எதிர்விளைவு பின்விளைவு குறித்து அறியும் எதிரதாக் காக்கும் அறிவு' ஒவ்வொரு செயல் தொடக்கத்திற்கு முன்னும் வேண்டும் என்கிறார். இரண்டாவதாக, அந்தச் செயலில் இறங்கிய பிறகு ஆற்றவேண்டிய செயலின் அளவு குறித்த கணக்கீடு வேண்டும். இதைத் திட்டமிடல் என்றும் கூறலாம்.

    "எண்ணிய எண்ணியாங்கு எய்துப

    எண்ணியார்

    திண்ணியராகப் பெறின்"

    என்பது வள்ளுவம். திட்டமிடல் என்றால் மேம்போக்காகத் திட்டமிட்டுக் காரியத்தில் இறங்குவது அல்ல. ஏற்படப்போகும் சாதக பாதகங்கள் அனைத்தையும் எதிர்பார்த்துத் திட்டமிட்டு இறங்குவது; தேவைப்படும் முழுமையான மனித வளம், பொருள்வளம், தொழில்நுட்பத் திறம் சகலத்தையும் தயாராக வைத்துக்கொண்டு செயலில் இறங்குவது.

    மூன்றாவது, முழு நம்பிக்கையோடு செயல்படத் தொடங்குவது. 'குத்தொக்க சீர்த்த விடத்து' என்பதைப்போல எவ்வளவு விரைவாகச் செயலை முடித்துக் காட்ட வேண்டுமோ அவ்வளவு உறுதியாக, விரைவாகச் செய்துகாட்ட வேண்டும். இப்படி அனைத்து முன்னேற்பாடுகளோடு நம்பிக்கை இயந்திரமாகிய மூளையைத் தயார் செய்துகொண்டு இறங்கினால் என்றென்றும் வெற்றியே!.

    தொடர்புக்கு 9443190098

    • உள்ளங்கைகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
    • நீளம் குறைவாகவும், மிக அதிக அகலம் உள்ளதாகவுமான உள்ளங்கையைக் கொண்டவர்களுக்கு ஸ்திர புத்தி இருக்காது.

    உள்ளங்கையின் தன்மைகளை வைத்துக் கூட ஒருவரின் இயல்பு மற்றும் அவரின் தன்மையை நாம் அறிந்து கொள்ள இயலும். இதை பற்றித் தான் இந்தப் பகுதியில் நாம் பார்க்க இருக்கிறோம். பொதுவாக, உள்ளங்கையைத் தொட்டுப் பார்த்து, அதன் கடினத்தன்மை, மென்மைத்தன்மையை வைத்து, சில உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

    இதன்படி உள்ளங்கைகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். மென்மைக்கும், கடினத்துக்கும் இடைப்பட்டது: இப்படியான உள்ளங்கை அமைப்பு பலருக்கு இருக்கும். இவர்கள் புத்தி, பலம் இரண்டையும் கொண்டு பிழைப்பவர்கள். கட்டுப்பாடு மிகுந்தவர்கள். எடுத்த காரியத்தை தாமாகவே முடிப்பார்கள். எனினும் நம்பிக்கைக்கு உரியவர்கள்.

    கடினமான உள்ளங்கை : உள்ளங்கை கடினமாக இருந்தால், முரட்டு சுபாவம் கொண்டவர்களாகவும், பிடிவாதம், கர்வம், மற்றும் சுயநலம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சிற்றின்பத்தில் நாட்டம் இருக்கும். மூளையைவிட உடல் பலத்தில் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். உடல் உழைப்பு சார்ந்த தொழில் செய்வார்கள்.

    மென்மையான உள்ளங்கை: உள்ளங்கை பஞ்சு போல் இருந்தால், அவர்கள் மென்மையானவர்கள். கற்பனை வளம் கொண்டவர்கள். வாழ்க்கையை நிறைவாக அனுபவிப்பார்கள். பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். பொதுவாக பெண்களுக்கு இந்த அமைப்பு உண்டு. ஆண்களின் கை இது போல் இருந்தால், அந்த நபரிடம் உயர் பண்பும், மென்மையும் மேலோங்கியிருக்கும். திறமைசாலியாகவும், அறிவாளியாகவும் திகழ்வார்.

    மிக பலவீனமான அல்லது மிகக் கடினமான உள்ளங்கை: மிகவும் வித்தியாசமானவர்கள். ஆனால் சமூகத்திற்கு லாயக்கு இல்லாதவர்கள். கோழைகள், கொடியவர்கள், குற்றவாளிகள் ஆகியோருக்கு இத்தகைய உள்ளங்கை அமைப்பு இருக்கும்.

    குறுகலான கை: மிக நீளமாக அமைந்து, அகலம் குறைவாகத் திகழும் உள்ளங்கையைப் பெற்றவர்கள், மிகவும் பலவீனமானவர்கள். சுயநலம் மிக்கவர்கள். எல்லோரையும் சந்தேகிப்பவர்கள். இவர்களால் எதையும் சாதிக்க முடியாது. தங்கள் தோல்விக்குப் பிறரை குறை சொல்வார்கள்.

    மிக அகலமான உள்ளங்கை: நீளம் குறைவாகவும், மிக அதிக அகலம் உள்ளதாகவுமான உள்ளங்கையைக் கொண்டவர்களுக்கு ஸ்திர புத்தி இருக்காது. அடிக்கடி முடிவுகளை மாற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். திட்டமிட்டு செயல்படமாட்டார்கள். ஒரே நேரத்தில் பல காரியங்களில் ஈடுபட்டு, எதிலும் வெற்றி பெறாமல் தோல்வியையும் அபவாதத்தையும் ஏற்கும் நிலை ஏற்படும்.

    இராமராஜன்

     

    அகலமான கை: உள்ளங்கையின் நீளத்துக்குத் தகுந்த அகலம் கொண்ட உள்ளங்கையை பெற்றிருப்பவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள். திட்டமிட்டு செயல்படுவார்கள். கொள்கையில் உறுதி கொண்டவர்கள். இவர்களின் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும். எதையும் செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள்.

    உங்கள் உள்ளங்கையின் வண்ணங்களும், உங்கள் இயல்புகளும்: உள்ளங்கையைப் பொறுத்தவரை, வண்ண அமைப்பில் சிவப்பு, அதிக சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள் ஆகிய நான்கு பிரிவுகளாக ரேகை சாஸ்திரம் பிரிக்கிறது.

    இதனைக் கொண்டு ஒருவர்களின் குண நலன்கள் வருமாறு:-

    மஞ்சள் நிற உள்ளங்கை கொண்டவர்கள்: இவர்கள், ஆரோக்கியக் குறைவு, பயம், பீதி உள்ளவர்கள். மனோபலம் இல்லாதவர்கள். பலவீனமானவர்கள். அறிவாற்றல் குறைந்தவர்கள். சோம்பேறிகள், தன்னம்பிக்கை இல்லாதவர்கள். எவரையும் நம்பாதவர்கள், தோல்வியும் துயரமும் வாழ்க்கையில் கொண்டவர்கள்.

    ஆழ்ந்த சிவப்பு நிற உள்ளங்கை கொண்டவர்கள்: இந்த நிறம் கொண்டவர்கள், சுயநலவாதிகள். சிற்றின்பப் பிரியர்கள். பணத்திலும், பதவியிலும் ஈடுபாடு உடையவர்கள். கடுமையான சுபாவம் உடையவர்கள். மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். சுய நலத்துக்காக எதையும் செய்வார்கள். அகம்பாவிகள்.

    சிவப்பு நிற உள்ளங்கை கொண்டவர்கள்: குங்குமம் போன்ற சாதாரண சிவப்பு நிறமுடைய உள்ளங்கை உடையவர்கள், கோபதாபங்கள் கொண்டவராக இருப்பார். ஆனால், பற்றும் பாசமும் உடையவர்கள். நினைத்ததை முடிக்கும் திறன் கொண்டவர்கள். ஆனால், அவசரக்காரர்கள். சற்று குறுகிய மனப்பான்மை உடையவர்கள். நல்லவர்களுக்கு நல்லவர்கள். கெட்டவர்களுக்குக் கெட்டவர்கள்.

    இளஞ்சிவப்பு நிற உள்ளங்கை கொண்டவர்கள்: ரோஜா இதழைப் போல இளஞ்சிவப்பு நிற உள்ளங்கை உடையவர்கள், ஆரோக்கியமான தேகமும், மனமும் உடையவர்கள். நிதானமும் கட்டுப்பாடும் உள்ளவர்கள். அறிவாளிகள். திறமைசாலிகள். பிறருக்காகவும் வாழக்கூடியவர்கள். நேர்மை, நாணயம், ஒழுக்கம் உள்ளவர்கள். எல்லோராலும் விரும்பப்படுவார்கள். நம்பத்தகுந்தவர்கள்.

    உள்ளங்கையில் ஸ்வஸ்திக் சின்னம் இருப்பது மிகவும் மங்களகரமான அறிகுறியாகக் கருதப்படுகிறது, ஸ்வஸ்திக், குறிப்பாக உள்ளங்கையில் காணப்படும் போது, நல்வாழ்வு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் புனித சின்னமாகக் கருதப்படுகிறது.

    குரு அல்லது புதன் மேடுபோன்ற சில மேடுகளில் ஸ்வஸ்திக் குறி தோன்றினால், அது ஒருவரின் சொந்த முயற்சியால் பெறப்பட்ட செல்வத்தையும் வெற்றியையும் குறிக்கும். ஆன்மீக நாட்டம்:

    வியாழன் மேடுகளில் ஸ்வஸ்திக் இருப்பது ஆன்மீகத்தின் மீதான நாட்டத்தையோ அல்லது ஒரு குறிப்பிடத்தக்க ஆன்மீகத் தலைவருடனான தொடர்பையோ குறிக்கலாம்.

    செல்பேசி 9965799409

    • பல்வேறு விட்டமின்கள் ஊட்டச்சத்து குறைபாடுகள்.
    • எல்லாவிதமான கீரைகளிலும் இரும்புச்சத்தும் மற்ற விட்டமின்களும் நிறைந்திருக்கிறது.

    ஒரு பெண்மணி என்னை பார்ப்பதற்கு வந்திருந்தார். அவருக்கு வயது 40களில்.

    வழக்கமான விசாரிப்புகளுக்கு பிறகு,

    அவருடைய பிரச்சினையை கூறினார்.

    "டாக்டர்! நான் திருப்பதிக்கு நடந்து வருவதாக வேண்டிக் கொண்டிருந்தேன்.

    நடந்தும் சென்று விட்டேன். மேலே ஏறும்போது எனக்கு லேசாக மூச்சிரைத்தது. இறங்கும்போது மூச்சுரைப்பு அதிகமாக இருந்தது. அதனால் என்னவென்று பார்க்கலாம் என்று வந்தேன்" என்றார்.

    அவருக்கு ரத்தத்தை பரிசோதித்தோம். ஹீமோகுளோபின் அளவை பார்த்ததும்

    எனக்கு தலை சுற்றியது.சொன்னால் நம்ப மாட்டீர்கள்! பொதுவாக 12 கிராம் வரை இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அவருக்கு 3 கிராம் தான் இருந்தது.

    பிறகு அவருக்கு தேவையான சிகிச்சை கொடுத்தோம்.

    ஏன் இந்த அளவுக்கு ரத்தம் குறைவாகும் வரை நம் உடல் காட்டிக் கொடுப்பதில்லை?

    பொதுவாக நம் உடலின் மிக நல்ல குணம் அல்லது மிக கெட்ட குணம் என்னவென்றால் எந்த அளவுக்கு இருக்கக்கூடிய சத்துக்களை வைத்து சமாளிக்க முடியுமோ அந்த அளவுக்கு சமாளித்துக் கொண்டே இருக்கும்.

    முடியாது என்ற கட்டத்தை அடையும் போது , அறிகுறிகள் நம்மை கஷ்டப்படுத்தும் அளவுக்கு தோன்றும்.

    அதற்கு முன்னாலும் அறிகுறிகள் இருக்கும்.

    லேசாக இருப்பதால் பல சமயங்களில் நாம் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம் அதை நிராகரிப்போம்.

    வித்தியாசமான அறிகுறிகள் கூட இருக்கலாம்! என்னென்ன?

    ஒரு பெண்மணி சோம்பை அதிகமாக உண்ணுவதாக கூறினார்.

    இன்னொரு பெண்மணி வெறும் அரிசியை அதிகமாக உண்பதாக அவரே வருத்தத்துடன் தெரிவித்தார்.

    மற்றும் ஒரு பெண்மணி சாம்பல் மற்றும் பெயிண்டை பார்த்தால் அதை உண்ண வேண்டும் என்ற எண்ணம் வருவதாக கூறினார்.

    நாம் கூறுவோம் அரிசி சாப்பிடாதே!, ரத்தம் சுண்டி விடும் என்று.

    மருத்துவ உண்மை என்னவென்றால் யாருக்கு வழக்கத்திற்கு மாறான பொருட்களை அதிகமாக உண்ண வேண்டும் என்ற எண்ணம் வருகிறதோ, அவர்களுக்கு இரும்புச்சத்து அல்லது வேறு சில விட்டமின் குறைபாடுகளோ இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

    அந்த குறைபாட்டை சரி செய்த பின் அதே அரிசியையும் சோம்பையும் ஒரு மூட்டை அளவு அவர்கள் முன் வைத்தால் கூட அவர்கள் சாப்பிட மாட்டார்கள்.

    ஜெயஸ்ரீ சர்மா

     

    பொதுவாக என்னென்ன அறிகுறிகள் தோன்றும்?

    ரத்தம் குறைவால், முதலில் தலைவலி, சோர்வு, அடிக்கடி சளி பிடித்தல், கை, கால் அசதி, வலி, தலைமுடி கொட்டுதல், எதிர்ப்பு சக்தி குறைவு, செரிமான கோளாறுகள், தோல் வறட்சி போன்ற பொதுப்படையான அறிகுறிகள் தோன்றும்.

    ஹீமோகுளோபின் மிகவும் குறையும்போது நடக்கும்போது மூச்சு திணறல் மூச்சிரைப்பு மாடிப்படி ஏறும் பொழுது மூச்சிரைப்பு நெஞ்சில் வலி, மயக்கம், தலைசுற்றல் போன்றவை ஏற்படலாம்.

    ரத்தம் குறைவாக காரணங்கள் என்ன?

    ஒன்று - ரத்த உற்பத்தியில் பாதிப்பு அதுதான் மிகவும் பொதுவானது ரத்த உற்பத்தி பாதிக்கப்படுவதற்கான மிக முக்கியமான காரணம் இரும்புச்சத்து குறைபாடு மற்றும் பல்வேறு விட்டமின்கள் ஊட்டச்சத்து குறைபாடுகள்.

    இரண்டாவது - ரத்த இழப்பு

    பெண்களுக்கு மாதாந்திர ரத்த இழப்பு மற்றவர்களுக்கு பைல்ஸ் மற்றும் குடல் பகுதியில் இரத்த கசிவு. உடலின் எந்த பகுதியிலும் ஏற்படும் ரத்த இழப்பு.

    குடல் புழு, பேன் போன்ற ஒட்டுண்ணிகளால் ஏற்படும் உயிரிழப்பு.

    மூன்றாவது - ரத்த செல்கள் அழிப்பு

    பொதுவாக ரத்த செல்கள் வாழக்கூடிய காலம் 120 நாட்கள். அதற்கு முன்பாகவே அழிக்கப்படுதல்.

     

    எடுத்துக்காட்டு

    ரத்த அணுக்களின் அமைப்பு குறைபாடுகள் (சிக்கில் செல்) அரிவாள் செல் ரத்த சோகை, தளசிமியா போன்றவை.

    ஐந்தாவது - ரத்த தேவை அதிகரிப்பு

    அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு - கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய அனிமியா.

    யாருக்கு பொதுவாக ரத்த குறைவு ஏற்படும்?

    சரியான உணவு உண்ணாமல் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், சிறுநீரக குறைபாடு உள்ளவர்கள், எதிர்ப்பு சக்தி குறைபாட்டினர்,

    நாட்பட்ட நோயாளர்கள், வயதானவர்கள், குழந்தைகள் ரத்தம் அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?

    ஆரோக்கியமான சரிவிகித உணவு மிக அவசியம். எல்லாவிதமான கீரைகளிலும் இரும்புச்சத்தும் மற்ற விட்டமின்களும் நிறைந்திருக்கிறது. அத்துடன் பருப்பு, பால் மீன் முட்டை போன்றவை புரோட்டின் சத்தை கொடுக்கும்.

    ஒரு சில காய்கறிகள் பழங்களில் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக பேரிச்சை, முருங்கை புளிச்சக்கீரை.

    என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்?

    முதலில் எதனால் இந்த ரத்த குறைபாடு ஏற்பட்டது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் அதற்கு ஏற்றார் போல சிகிச்சை மாறுபடும். இரும்பு சத்து கொடுத்தால், 90% மாணவர்களுக்கும் அனிமியா குறைபாடு சரியாகிவிடும்.

    தேவைப்படுபவர்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் தருவோம்.

    எவ்வளவு சாப்பிட்டாலும் ஒரு சிலருக்கு உடலில் இரும்பு சத்து ஏறாது.

    குடலில் உள்ள ஒரு சில குறைபாடுகளால் இவ்வாறு நேரலாம்.

    அவர்களுக்கு இரும்பு சத்து ஊசி வழி ஏற்றுவோம்.

    அனைவருக்குமே குடல் புழுவை அகற்றக்கூடிய மாத்திரை கொடுப்போம்.

    மாதப் போக்கு அதிகமாக இருப்பின் அதற்கான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை கொடுப்போம்.

    சிகிச்சை எடுக்காவிட்டால் எந்த விதமான பாதிப்பு ஏற்படும்?

    குறைவான இரத்தத்தில் வேலை செய்வதால் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகும் உறுப்புகள் முக்கியமாக இதயமும் நுரையீரலும் தான். வெகு சீக்கிரமே இதய சோர்வு, செயலிழப்பு ஏற்படும்.

    மறைந்து தாக்கும் நோய்கள் என்னென்ன?

    மறைந்து என்ற வார்த்தையை கேட்டாலே" மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன?" என்ற தில்லானா மோகனாம்பாள் பாடல் தான் நமக்கு நினைவுக்கு வரும்.

    அதுபோல நம் உடலில் மறைந்திருந்து தாக்கும் சில நோய்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது இந்த ரத்த சோகை எனப்படும் அனீமியா.

    வலி என்ற உணர்வு தான் அல்லது வீக்கம் என்கிற ஒரு அறிகுறி தான் நமக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகளை காட்டிக் கொடுக்கிறது.

    வலியோ வீக்கமோ இல்லாத எல்லா நோய்களும் மறைந்தே தான் இருக்கும்.

    முக்கியமானவை:

    அனிமியா, சர்க்கரை நோய், கேன்சர் கல்லீரல் பாதிப்பு, கிட்னி பாதிப்புகள். ஒரு அடிப்படை சுகாதாரமான சூழல் உள்ள எந்த சமூகத்திலும் அனீமியா இருக்கவே கூடாது.

    பன்னிரண்டாவது படிக்கும் பெண் குழந்தைக்கு அதிக நேரம் படிக்க முடியவில்லை. கவனத்தை குவிக்க முடியவில்லை.

    ரத்தத்தை சோதித்த போது 7 கிராம் மட்டுமே ஹீமோகுளோபின் இருந்தது.

    அதை சரி செய்ததும் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம். எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய 12 ஆம் வகுப்பில் எவ்வளவு பெரிய நஷ்டமாயிருக்கும்?

    யோசித்துப் பாருங்கள்!

    பொதுப்படையான அறிகுறிகள் இருப்பின் ரத்தத்தை சோதித்துக் கொள்ளுங்கள். அனீமியாவை உடனே சரி செய்து கொள்ளுங்கள்.

    வாட்ஸ்அப்: 8925764148

    • உயிரோடு இருக்கும்வரை ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
    • திருஞானசம்பந்தர் அருளிய தமிழ் மந்திரம் அது.

    நெற்றியில் திருநீறு இட்டுக்கொள்ளக் காரணமே வாழ்க்கை நிலையற்றது என்பதை நாள்தோறும் நாம் உணரத்தான். இறுதியில் உடல் சாம்பலாகப் போகிறது என்பதை இப்போதே உணரவே சாம்பல் திருநீறாக அணியப்படுகிறது.

    `நிலையற்ற பொருட்களைத் தேடி ஓடாதே, நல்லவற்றைச் செய்து நல்லவனாக வாழ்ந்து இறைவன் திருவடியைச் சென்று சேர்` என்பதை ஒரு சிட்டிகைத் திருநீறு ஒவ்வொரு கணமும் மனிதர்களுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

    `நெருநல் உளனொருவன் இன்றில்லை

    என்னும்

    பெருமை உடைத்திவ் வுலகு`

    என்கிறார் வள்ளுவர். நேற்றிருந்தவர் இன்று இல்லை என்ற நிலைதான் இந்த உலகத்தின் பெருமை என்கிறார் அவர்.

    நேற்றிருந்தவர் இன்றில்லை என்பதை நாம் உணர்கிறோமா? திருநீறு இட்டுக்கொள்வது அதை உணரத்தானே? வெறும் சடங்காய்த் திருநீற்றைப் பூசி என்ன பயன்?

    அந்தச் சடங்கின் பின்னணியில் உள்ள நிலையாமைத் தத்துவத்தைப் பற்றி ஒவ்வொரு முறை திருநீறு அணியும்போதும் சிந்தித்து நெஞ்சில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படி நிலைநிறுத்திக் கொண்டால் கெட்ட வழிகளில் போகத் தோன்றாது.

    சமுதாய ஒழுக்கமில்லாமல் லஞ்சம் வாங்கிக் கொள்ளையடித்துக் கோடிகோடியாய்ச் சொத்து சேர்த்த மனிதர்களும் போகும்போது கையில் கொண்டு சென்றது ஒன்றுமில்லை.

    `கூடுவிட்டு ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்?` என்று அன்றே அவ்வைப் பாட்டி கேட்டிருக்கும் கேள்வியை இன்று சற்றேனும் சிந்தித்தால் முதிர்ந்த ஞானம் பிறக்கும்.

    ஆனால் உயிரோடு இருக்கும்வரை ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். அந்த ஆரோக்கியத்தைப் பெறுவது எப்படி? அதற்கு ஆன்மிகத்தில் பல வழிகள் சொல்லப்பட்டுள்ளன.

    1960 ஐ ஒட்டிய காலகட்டத்தில் பாரத தேசத்தில் பல நோய்கள் தோன்றி மக்கள் அவதிப்பட்டார்கள். பக்தர்கள் காஞ்சி மகாசுவாமிகளைச் சரணடைந்து நோயிலிருந்து விடுபட ஆன்மிக ரீதியாக என்ன உபாயம் என்றும் கேட்டார்கள்.

    காஞ்சி மகாசுவாமிகள், `கிரக நிலைகளின் மாற்றம்தான் இந்த நோய்களுக்குக் காரணம், எனவே எல்லோரும் திருஞானசம்பந்தர் எழுதிய கோளறு திருப்பதிகத்தைப் பாராயணம் செய்யுங்கள்` என்று அறிவுறுத்தினார்.

    மகாசுவாமிகளின் அன்பர்கள் பலர் அவ்விதம் நாள்தோறும் பாராயணம் செய்தார்கள். அது மட்டுமல்ல. பள்ளிக் கூடங்களில் கோளறு திருப்பதிக இலவச வெளியீடுகளை விநியோகித்தார்கள். மாணவ மாணவியரும் கோளறு திருப்பதிகத்தை வாசிக்கலானார்கள்.

    உலகில் ஏற்பட்ட கோளாறு, கோளறு பதிகத்தால் நீங்கியது. உலகம் மீண்டும் நல்ல ஆரோக்கிய நிலையை அடைந்தது.

    திருப்பூர் கிருஷ்ணன்

     

    ஆன்மிக அன்பர்கள் `வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்` எனத் தொடங்கும் கோளறு பதிகத்தை நாள்தோறும் பாராயணம் செய்வது பெரிய பலனை அளிக்கும். திருஞானசம்பந்தர் அருளிய தமிழ் மந்திரம் அது. பக்தித் தமிழுக்கு உலகைக் காக்கும் வல்லமை உண்டு என்பதில் சந்தேகமில்லை.

    ஆரோக்கியமான வாழ்க்கைக்கு குலதெய்வ வழிபாடு மிக முக்கியம் என்பது ஆன்றோர் கருத்து. `குலதெய்வத்தை வழிபடாமல் மற்ற தெய்வங்களை வழிபடுவது, அடிப்பாகம் இல்லாத பாத்திரத்தில் தண்ணீர் பிடிப்பதற்கு ஒப்பாகும், குலதெய்வ வழிபாடே அத்தனை வழிபாடுகளுக்கும் அடிப்படையானது` என்பது மகாசுவாமிகள் வாக்கு.

    ஆனால் கோவில்களுக்குச் செல்வதே சங்கடமாக இருக்கும் இன்றைய சூழலில், குலதெய்வ வழிபாட்டை எப்படி நிகழ்த்துவது என்ற கேள்வி எழலாம். அதனால் என்ன? குலதெய்வத்தின் படம் இருந்தால் அதை வீட்டில் வைத்து நாள்தோறும் அந்தப் படத்திற்கு விளக்கேற்றி வழிபடலாம். குலதெய்வத்தை மனத்தில் நினைத்து தியானம் செய்யலாம்.

    உண்மையில் ஆலய வழிபாட்டை விடவும் உள்ளத்தில் இறைவனை எழுந்தருளச் செய்து வழிபடுவதே இன்னும் சிறப்பானது. ஆலயத்திற்குச் சென்று வழிபடுவதுகூட, அந்த ஆலய விக்கிரகத்தை நம் நெஞ்சில் நிறுத்திக் கொள்வதற்குத் தான்.

    உள்ளத்தையே மலராக்கி இறைவனின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்கிறார் இலங்கையில் வாழ்ந்த ராமகிருஷ்ண மடத்துத் துறவியான சுவாமி விபுலானந்தர்.

    `வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ

    வள்ளல் பிரானார்க்கு வாய்த்த மலரெதுவோ?

    வெள்ளை நிறப் பூவுமல்ல, வேறெந்த மலருமல்ல,

    உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது!`

    திருமூலரும் உள்ளத்தைப் பெருங்கோவில் எனக் குறிப்பிடுகிறார்.

    `உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்

    வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்

    தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்

    கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே!`

    `மனமே முருகனின் மயில்வாகனம் மாந்தளிர் மேனியே குகனாலயம் குரலே செந்தூரின் கோவில்மணி!` என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு.

    `திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்..` பாடலில், `உனக்கான மனக்கோவில் கொஞ்ச மில்லை, அங்கு உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை` என்கிறார் கவிஞர் பூவை செங்குட்டுவன்.

    திருநின்றவூர் பூசலார் நாயனார் மரபில் மனக்கோவில் வழிபாடு நிகழ்த்த எக்காலத்திலும் எந்தத் தடையுமில்லை. அவ்வகையிலான வழிபாடு கூடுதல் சிறப்புடையது என்பதே உண்மை.

    உள்ள மலரை அர்ப்பணிப்பதோடு கூட, செடிகளில் உள்ள மலர்களையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கலாம். மலர் வழிபாட்டு நெறி நம்மிடம் தொன்று தொட்டு நிலவி வருகிறது. மலர்களில் இறைவனையே கண்டார்கள் அடியவர்கள்.

    `மலர்களிலே பல நிறம்கண்டேன் திருமாலவன் வடிவம் அதில் கண்டேன்!` என்று பாடினார் கவியரசர் கண்ணதாசன்.

    `பச்சை நிறம் அவன் திருமேனி,

    பவழ நிறம் அவன் செவ்விதழே,

    மஞ்சள் முகம் அவன் தேவி முகம்,

    வெண்மை நிறம் அவன் திருவுள்ளம்`

    என மலர்களின் நிறங்களைப் பார்த்ததும் இறைவனை எண்ணிப் பரவசமுறுகிறது கவியரசர் இதயம்.

    மலர்களிலும் இறைவனே இருப்பதால் மலர்களை எவ்விதம் பறிப்பேன் என உருகினார் மகான் தாயுமானவர்.

    `பண்ணேன் உனக்கான பூசையொரு வடிவிலே

    பாவித் திறைஞ்ச அங்கே

    பார்க்கின்ற மலரூடும் நீயே இருத்தி அப்

    பனிமலர் எடுக்க மனமும் நண்ணேன்`

    எனக் கூறிக் கரைந்தது அவரது தூய பக்தி உள்ளம்.

    மலர் வழிபாட்டில் ஆரோக்கியத்தைப் பெற எந்த மலர் வழிபாடு விசேஷப் பொருத்தமுடையது என்பதை பாண்டிச்சேரி ஸ்ரீஅன்னையின் ஆய்வு கொண்டு நாம் அறிந்துகொள்ளலாம்.

    `மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு என்றெல்லாம் பல மொழிகள் பயன்படுகின்றன. அதுபோல் இறைவனும் மனிதனும் பேசிக்கொள்ள உதவும் மொழிதான் மலர்கள்` என்பது அன்னையின் கண்டுபிடிப்பு.

    இன்னின்ன மலர்கள் இறைவனிடம் அடியவர்களுக்கு இன்னின்ன தேவை என்பதைச் சொல்வதாக அன்னை உணர்ந்துள்ளார். அதன்படி சாமந்தி போன்ற மஞ்சள் நிறமுடைய மலர்களை இறைவனுக்குச் சமர்ப்பிக்கும்போது, அடியவருக்கு ஆரோக்கியம் தேவை என அந்த மலர்கள் இறைவனிடம் எடுத்துச் சொல்லுமாம்.

    இன்றைய காலகட்டத்தில் நம் அனைவருக்கும் ஆரோக்கியம்தான் முதல் தேவை என்பதால் இறைவனை மஞ்சள் நிற மலர்களால் வழிபடுவது சிறப்பு. பாமாலையோடு பூமாலையும் சூட்டி வழிபட்ட ஆண்டாள் மரபில், இறைவனுக்கு நாமே தொடுத்த மஞ்சள் நிற மலர்ச்சரத்தை அணிவித்து வழிபடலாம்.

    போருக்குச் செல்லும் வீரன் தன் உடலை எதிரிகளின் ஆயுதங்கள் தாக்காதவாறு கவசமணிந்து செல்கிறான். வாழ்க்கைப் போரில் ஈடுபடும் ஆன்மாவும், காமம் குரோதம் முதலிய எதிரிகள் தன் மனத்தைத் தாக்காதவாறு இறையருளைக் கவசமாய்ப் பூண வேண்டும்.

    உடலை நோய் தாக்காதிருக்க இறையருட் கவசத்தை நாட வேண்டும். ஒவ்வோர் உறுப்பையும் இறையருட் கவசத்தால் பாதுகாக்க வேண்டும்.

    அவ்வகையில் இன்றும் அடியவர்களை ரட்சித்துக் கொண்டிருப்பது கந்த சஷ்டி கவசம். உடலின் ஒவ்வோர் உறுப்பையும் கந்தனின் வேல் காக்கட்டும் எனக் கூறி வழிபட வகைசெய்கிறது அந்த அற்புத ஆன்மிகச் செய்யுள்.

    பாலன் தேவராயன் என்ற பக்திக் கவிஞர் எழுதிய உயர்நிலைத் தோத்திரம் அது. தலைமுதல் கால்வரை அனைத்து உடல் உறுப்புகளையும் முருகப் பெருமானின் வேல் காக்க வேண்டும் என உருக்கத்துடன் வேண்டுகிறார் கவிஞர்.

    சஷ்டி கவசம் முழுவதுமே மந்திர சக்தி உடையது. சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்பவர்கள் முருகனின் பேரருளைப் பெற்றுப் பூரண உடல் நலம் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை.

    நாம் ஆன்மீகத்தில் தன்வந்திரியை உடல் நலனைக் காக்கும் கடவுளாக வழிபடுகிறோம். குருவாயூர் அருகே தன்வந்திரிக்கென்று தனி ஆலயம் உள்ளது. தன்வந்திரியை வழிபட்டும் ஆரோக்கியத்தைப் பெறலாம்.

    நாராயண பட்டதிரி எழுதிய நாராயணீயம் என்ற சம்ஸ்க்ருத நூல் ஆரோக்கியக் கண்ணோட்டத்திலேயே எழுதப்பட்டது. அந்நூலை நாள்தோறும் பாராயணம் செய்வதன்மூலம் ஒருவர் தன் உடல் நலனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

    ஆரோக்கியத்திற்கு வழிகாட்டும் நாராயணீயத்தைப் பிரபலப்படுத்தியதில் காலஞ்சென்ற ஸ்ரீஅனந்தராம தீட்சிதருக்குப் பெரும் பங்குண்டு. இப்போது தாமல் ராமகிருஷ்ணன் போன்றோர் நாராயணீயத்தை பக்தி மணம் கமழப் பிரசாரம் செய்துவருகிறார்கள்.

    உடல்நலக் குறைவுடையவர்கள் நாராயணீய பாராயணத்தின் மூலம் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தைப் பெற்றுத் தரும் இன்னொரு சுலோகம் விஷ்ணு சகஸ்ரநாமம். திருமாலின் ஆயிரம் நாமங்களைச் சொல்வது நம் உடல் நலனை மேம்படுத்தும்.

    ஸ்ரீஅரவிந்த அன்னை மனிதர்களின் ஆரோக்கியம் குறித்துப் பல அரிய கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். அவற்றில் மிக முக்கியமான கருத்து ஒன்று உண்டு.

    நம்மை அறியாமல், நம் ஆழ்மனத்தில் நோய் வந்துவிடுமோ என்று நாம் எண்ணுவதுதான் நமக்கு நோய்வரக் காரணம்` என்கிறார் அன்னை. நமக்கு நோய் வராது என்று நூறு சதவிகிதம் திடமாக நாம் நம்பினால் நமக்கு நோய்வரும் வாய்ப்பில்லை என்பது ஸ்ரீஅன்னை கோட்பாடு. நாம் இறையருளைச் சரணடைந்து அப்படி நம்பப் பழகுவோம். அதன்மூலம் பூரண ஆரோக்கியம் பெறுவோம்.

    தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com

    ×