என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ரஜினியின் ரகசிய ஆன்மீகம்: படிப்பு முடிந்தது-வாய்ப்பு கிடைக்கவில்லை!
- சில நிறுவனங்களில் சிவாஜிராவை யாருமே கண்டுகொள்ளவே இல்லை.
- எல்லா நண்பர்களும் ஆளுக்கு ஒரு பக்கம் சென்று சினிமா வாய்ப்பு தேடினார்கள்.
டைரக்டர் பாலச்சந்தர் ஆச்சரியத்தோடு சிவாஜிராவை தன் அருகில் வருமாறு அழைத்தார். தூரத்தில் பரபரப்பான மனநிலையுடன் நின்றுக் கொண்டிருந்த சிவாஜிராவுக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. டைரக்டர் பாலச்சந்தர் அருகே சென்று மீண்டும் ஒருமுறை வணக்கம் தெரிவித்தார்.
அவரை டைரக்டர் பாலச்சந்தர் ஆச்சரியத்தோடு பார்த்தார். அப்போது பேராசிரியர் கோபாலி சிரித்துக் கொண்டே சிவாஜிராவை சுட்டிக்காட்டி, "சார் இவன் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன். உங்கள் படங்கள் அனைத்தையும் பார்த்து விட்டான். அரங்கேற்றம் படத்தை பார்த்து விட்டு அழுததாக என்னிடம் பல தடவை சொல்லி இருக்கிறான்.
இப்போது வெளியாகி இருக்கும் அவள் ஒரு தொடர்கதை படத்தை 17 தடவை பார்த்து விட்டான். உங்களுடைய டைரக்ஷன் மீது மிகப்பெரிய மரியாதை வைத்து இருக்கிறான். உங்கள் படம் என்றால் அவனுக்கு உயிர். எனவே அவனுக்கு உங்களது படங்களில் நடிக்க நீங்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும்" என்றார்.
பேராசிரியர் கோபாலி இப்படி சொல்ல... சொல்ல... சிவாஜிராவுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், மற்றொரு பக்கம் பயமாகவும் இருந்தது. ஏனெனில் அவள் ஒரு தொடர்கதை படத்தை 4 தடவைதான் பார்த்து இருந்தார். அதை மறைத்து பேராசிரியர் கோபாலி 17 தடவை பார்த்து இருப்பதாக சொல்லி அறிமுகப்படுத்தியது சற்று சங்கடமாக இருந்தது. என்றாலும் டைரக்டர் பாலச்சந்தர் கவனத்தை தனது பக்கம் திருப்ப இந்த அறிமுகம் கை கொடுத்ததால் அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
டைரக்டர் பாலச்சந்தர் மீண்டும் ஒருமுறை சிவாஜிராவை உன்னிப்பாக பார்த்தார். தனது கையை சிவாஜிராவை நோக்கி சிரித்துக் கொண்டே நீட்டினார். சிவாஜிராவும் கையை நீட்டினார். அவரது கையை குலுக்கிக் கொண்டே டைரக்டர் பாலச்சந்தர், "உனக்குத் தமிழ் தெரியுமா?" என்று கேட்டார்.
அதற்கு சிவாஜிராவ், "கொஞ்சம் கொஞ்சம் தெரியும்" என்று தமிழில் பதில் அளித்தார். அந்த தமிழில் கன்னட வாசனை ஒட்டிக் கொண்டு இருந்ததையும் சிவாஜிராவின் பேச்சு கொச்சை தமிழில் இருந்ததையும் டைரக்டர் பாலச்சந்தர் கண்டார். அடுத்த வினாடியே அவர், "உனக்குத் தமிழ் நன்றாகப் பேச தெரியவில்லை. நீ பேசுவதில் இருந்தே உனக்கு தமிழ் தெரியாது என்பதை நான் புரிந்து கொண்டு இருக்கிறேன்.
தமிழில் நன்றாக பேச வேண்டும். அப்படி நீ பேசி பழகி விட்டால் உன்னை நான் எனது படத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறேன்" என்று கூறினார்.
இதைக் கேட்டதும் சிவாஜிராவுக்கு வானத்தில் பறப்பது போல் இருந்தது. நடப்பது கனவா? நனவா? என்பது புரியாமல் சிவாஜிராவ் திகைத்தபடி சிலைப்போல அங்கு நின்று கொண்டிருந்தார். "சரி நான் போய் வருகிறேன்" என்று டைரக்டர் பாலச்சந்தர் மீண்டும் குரல் கொடுத்தபோதுதான் சிவாஜிராவ் இயல்பு நிலைக்கு திரும்பினார்.
சற்று தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த தனது எம்.எஸ்.எல். 363 எண் கொண்ட காரை நோக்கி டைரக்டர் பாலச்சந்தர் நடந்தார். அவரை வழிஅனுப்ப பேராசிரியர் கோபாலியும் உடன் சென்றார். சில நிமிடங்களில் டைரக்டர் பாலச்சந்தர் கார் புறப்பட்டு சென்று விட்டது. இதையெல்லாம் சிவாஜிராவ் தூரத்தில் நின்றபடியே பவ்யமாக பார்த்துக் கொண்டு இருந்தார். பாலச்சந்தரை வழியனுப்பி விட்டு வந்த பேராசிரியர் கோபாலி சிரித்தபடியே சிவாஜிராவிடம், "உன்னை டைரக்டர் பாலச்சந்தருக்கு மிகவும் பிடித்து விட்டது. உன்னை மீண்டும் பார்க்க விரும்புகிறார். எப்போது வேண்டுமானாலும் அவரிடம் இருந்து அழைப்பு வரலாம். தயாராக இரு" என்று கூறினார்.
சிவாஜிராவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. சினிமா நடிகன் ஆகி விடலாம் என்று அவர் மனது கும்மாளமிட்டது. அதே மகிழ்ச்சியுடன் அருண் ஓட்டல் அறைக்கு திரும்பினார். நண்பர்கள் அனைவரிடமும் டைரக்டர் பாலச்சந்தரிடம் பேசியதை மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தார்.
அடுத்த சில தினங்களில் சிவாஜிராவின் திரைப்படக் கல்லூரி வாழ்க்கை நிறைவு பெற்றது. கல்லூரி தேர்வில் முதல் மாணவனாக வேணு தேர்வாகி இருந்தார். பேராசிரியர்கள் அனைவரும் அவரை பாராட்டினார்கள். அதே சமயத்தில் சிவாஜிராவையும், பேராசிரியர்கள் பாராட்டி உற்சாகம் கொடுத்தனர்.
திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டுகள் படித்ததற்கான டிப்ளமோ சான்றிதழ் சிவாஜிராவுக்கு வழங்கப்பட்டது. பி.நாகிரெட்டி தனது பொற்கரங்களால் சிவாஜிராவுக்கு அந்த சான்றிதழை வழங்கினார். அதைப் பார்க்க பார்க்க சிவாஜிராவுக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.
ஆனால் திரையுலகில் யதார்த்த நிலை வேறுவிதமாக இருந்தது. திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து ஒருவர் படித்து பட்டம் பெற்று விட்டதால் மட்டுமே அவருக்கு எந்த தயாரிப்பு நிறுவனமும் உடனே அழைத்து நடிப்பதற்கு வாய்ப்பு கொடுப்பது இல்லை என்ற யதார்த்தத்தை சிவாஜிராவ் அடுத்த ஓரிரு நாட்களிலேயே புரிந்து கொண்டார். என்றாலும் அவர் மனதில் நம்பிக்கை குறையவில்லை.
சினிமாவில் நடிப்பதற்காக ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமாக ஏறி-இறங்க தொடங்கினார். ஆனால் ஒருவர்கூட நடிக்க வாய்ப்பு கொடுக்கவில்லை.
சில நிறுவனங்களில் சிவாஜிராவை யாருமே கண்டுகொள்ளவே இல்லை. சில தயாரிப்பு நிறுவனங்கள் சிவாஜிராவை அலுவலக வரவேற்பு அறைக்கு கூட அழைக்கவில்லை. வாசலிலேயே நிற்க வைத்து ஏதேதோ... சொல்லி திருப்பி அனுப்பி விட்டனர். அவ்வளவு எளிதில் நடிகனாகி விட முடியாது என்பதை சிவாஜிராவ் அன்று உணர்ந்தார்.
எல்லா நண்பர்களும் ஆளுக்கு ஒரு பக்கம் சென்று சினிமா வாய்ப்பு தேடினார்கள். சில சமயம் சிவாஜிராவ் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு சினிமா வாய்ப்புக்காக அலைந்தார். 1974-ம் ஆண்டின் கடைசி மாதங்கள் சென்னையில் சினிமா வாய்ப்புக்காக சிவாஜிராவ் அலைந்த அலைச்சல் கொஞ்சம் நஞ்சமல்ல... ஏராளம்... சென்ற இடத்தில் எல்லாம் அவருக்கு ஏமாற்றமும், அவமானமுமே பதிலாக கிடைத்தது.
முதல் ஓரிரு வாரங்கள் சற்று தன்னம்பிக்கையோடு சிவாஜிராவ் வாய்ப்புகளை தேடி அலைந்தார். இடைஇடையே தியேட்டர்களுக்கு சென்று படம் பார்த்தார். அந்த காலக்கட்டத்தில் திரைப்படக் கல்லூரியில் அடிக்கடி சினிமா படம் காட்டுவார்கள். பழைய மாணவர் என்ற உரிமையுடன் அந்த படங்களையும் அவர் சென்று பார்ப்பது உண்டு.
இப்படியே 2 வாரங்கள் ஓடி விட்டது. சிவாஜிராவ் மனதில் இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சம் தகர்ந்து போகத் தொடங்கியது. பாலச்சந்தர் சார் அழைப்பதாக சொன்னாரே, அவரும் நம்மை அழைக்கவில்லையே என்று சிவாஜிராவ் மனதில் கேள்விகள் அலைஅலையாக எழுந்தன.
நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தன. சிவாஜிராவுக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதும் அவருக்கு புரியவில்லை. பெங்களூரில் கண்டக்டர் வேலையையே பார்த்துக் கொண்டு இருந்து இருக்கலாமோ என்று அவருக்குள் நினைப்பு வந்தது.
சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னைக்கு வந்தது தவறான முடிவோ? என்ற தவிப்பும் அவருக்குள் அடிக்கடி தோன்றியது. இந்த 2 ஆண்டுகளில் நண்பர்கள், குடும்பத்தினர் மூலம் நிறைய பணம் செலவு செய்து விட்டதை நினைத்துப் பார்த்தார். அவருக்குள் கவலையும், வேதனையும் பீறிட்டுக்கொண்டு வந்தது.
திரைப்படக் கல்லூரி வாழ்க்கை வீணாகப் போய் விடுமோ? என்ற பயமும், தவிப்பும் மனதுக்குள் நிரந்தரமாக குடியேறி விட்டது. அவரால் ஒரு நல்ல முடிவுக்கு வர முடியவில்லை. டைரக்டர் பாலச்சந்தர் உறுதி அளித்தது கூட சும்மா பேச்சுக்குத் தானோ? என்று நினைத்தார். என்றாலும் நண்பர்கள் ஆலோசனைபடி தயாரிப்பாளர்களையும், டைரக்டர்களையும் சந்தித்து தனது புகைப்படத்தை கொடுத்து நடிக்க வாய்ப்பு தரும்படி கோரிக்கை விடுத்தார். அவரது போட்டோக்களை அவர் கண் எதிரிலேயே பலர் தூக்கி எறிந்து விட்டனர். சிலர் அவரது புகைப்படங்களை வேண்டாவெறுப்பாக வாங்கிக் கொண்டனர்.
இதுபற்றி சிவாஜிராவ் அளித்த ஒரு பேட்டியில், "நாங்கள் 36 பேரும் பிலிம் சேம்பர் அலுவலகம், சபையர், புளு டைமண்ட் தியேட்டர்கள், அமெரிக்க தூதரகம், சோவியத் கல்சுரல் சென்டர், டிரைவ் இன் ஓட்டல்... இப்படி சுற்றிச் சுற்றி வந்தாலும், எங்களுக்கு என்று ஒரு தனி உலகம் இருந்தது. அதுதான் கனவு உலகம்.
சுவாரசியமான வாழ்க்கை, வித்தியாசமான வாழ்க்கை, பொறுப்பு இருந்தும் பொறுப்பில்லாத மாதிரியான போலி வாழ்க்கை, கனவு வாழ்க்கை, ஓ... அந்தக் கனவில்தான் எத்தனை சுகம். காலை 10 மணிக்குக் கூடுகிறோம். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு "ஹலோ... ஹாய்" என்கிறோம். நகரில் ஓடும் சினிமா படங்களை எல்லாம் பார்க்கிறோம். வீட்டில் இருந்து வரும் பணத்தை ஜாலியாக செலவு செய்கிறோம்.
காலம் போனது தெரியவில்லை.
இதோ, படிப்பும் முடிந்து விட்டது. வெகு தூரத்தில் ஒரு சொர்க்கம் தெரிகிறது. அந்த சொர்க்கம் எது? அதுதான் சினிமா உலகம். அங்கே புகுந்து விடவேண்டும். எப்படி சினிமா உலகில் சான்ஸ் பிடிப்பது? எல்லோருடைய முகத்திலும் எதிர்காலம் பற்றிய கவலை தெரிகிறது. வீட்டில் சொன்னதைக் கேட்காமல் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தோம். பயிற்சி பெற்றோம். ஆனால் வேலைக்கு என்ன உத்தரவாதம்? மனம் குழம்பியது" என்று கூறியிருந்தார்.
சினிமா வாய்ப்பு கிடைக்க ஒவ்வொரு நாளும் அவர் ராகவேந்திரரை மனமுருக வழிபட்டார். அந்த நம்பிக்கையில்தான் அவரது ஒவ்வொரு நாளும் கழிந்துக் கொண்டிருந்தது. ஆனால் ஒரு கால கட்டத்துக்கு பிறகு நண்பர்களில் பெரும்பாலானவர்கள் பிரிந்து சென்ற நிலையில் சிவாஜிராவுக்கு தவிப்பு அதிகமானது. அப்போது பெங்களூரில் இருந்து அவரது அண்ணன் நாகேஸ்வரராவ் தந்தி கொடுத்து இருந்தார். "உடனே புறப்பட்டு வா..." என்று அதில் கூறப்பட்டு இருந்தது. சிவாஜிராவ் அதிர்ச்சி, குழப்பத்துடன் பெங்களூருக்கு புறப்பட்டார்.
பெங்களூரில் என்ன நடந்தது என்பதை நாளை மறுநாள் (அக்டோபர்) 2-ந்தேதி பார்க்கலாம்.






