என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- சுஜாதாவை கட்டி பிடிக்க வெட்கப்பட்ட ரஜினி!
- சுஜாதாவுடன் நடிக்கும் காட்சிகளில் சில சமயங்களில் ரஜினி திணறினார்.
- ரஜினியிடம் நாடகங்களில் நடிக்கும்போதும், சினிமாவில் நடிக்கத் தொடங்கிய போதும் ஒரு பழக்கம் இருந்தது.
அபூர்வராகங்கள், மூன்று முடிச்சு படங்களின் தாக்கத்தால் 1977-ம் ஆண்டு ரஜினிக்கு அதிக படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த ஆண்டை ரஜினிக்கு திரையுலகின் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொன்னான ஆண்டாக சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் அந்த ஆண்டு மள...மள...வென படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
மூன்று முடிச்சு படத்தில் ரஜினியின் வேகத்தை பார்த்த டைரக்டர் பாலச்சந்தர் உடனடியாக ரஜினியை முன்னிறுத்தி "அவர்கள்" என்று ஒரு படத்தை தயாரித்தார். இந்த படத்தில் கமல், சுஜாதா, ரவிக்குமார் ஆகியோருடன் ரஜினி வித்தியாசமான ஒரு வேடத்தை ஏற்றார்.
கதைப்படி மும்பையில் வசிக்கும் சுஜாதா ரவிக்குமாரை காதலிப்பார். ஆனால் எதிர் பாராதவிதமாக அவர்களிடம் பிரிவு ஏற்படும். இதனால் சுஜாதாவுக்கும், ரஜினிக்கும் திருமணம் நடைபெறும். திருமணத்திற்கு முன்பு ரவிக்குமாரை சுஜாதா காதலித்த விஷயம் ரஜினிக்கு தெரிய வரும்.
இதனால் சுஜாதாவை ரஜினி கடுமையாக துன்புறுத்தி அதில் மகிழ்ச்சி அடையும் ஒருவிதமான "சாடிஸ்ட்" வேடத்தில் நடித்து இருந்தார். சுஜாதாவை அவர் துன்புறுத்தும் காட்சிகளில் மிகப்பெரிய முத்திரையை பதித்தார். ஆனால் படத்தில் அவர் காட்டிய வேகமும், ஸ்டைல்களும் வசன உச்சரிப்பின் போது தடுமாற வைத்தன.
இதனால் வழக்கம்போல இந்த படத்திலும் டைரக்டர் பாலச்சந்தரிடம் ரஜினி அடிக்கடி திட்டு வாங்க நேரிட்டது. குறிப்பாக சுஜாதாவுடன் நடிக்கும் காட்சிகளில் சில சமயங்களில் ரஜினி திணறினார். அதற்கு காரணம் ரஜினியைவிட சுஜாதா திரையுலகத்துக்கு முன்பே வந்தவர் ஆவார்.
17 படங்களில் நடித்து அனுபவம் பெற்று இருந்த சுஜாதாவுடன் நெருங்கி நடிப்பதற்கு புதுமுக நடிகரான ரஜினி மிகவும் வெட்கப்பட்டார். ஒரு காட்சியின் போது சுஜாதாவை ரஜினி இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டு வசனம் பேச வேண்டும்.
"இந்த மாதிரி அணைத்துப் பிடித்தால் உனக்கு பிடிக்குமா? உன் பழைய காதலன் உன்னை எப்படி கட்டிப்பிடிப்பான்?" என்று வசனம் பேச வேண்டும். ஆனால் அளவுக்கு மீறிய கூச்சம் காரணமாக ரஜினியால் சுஜாதாவை கட்டிப்பிடித்துக் கொண்டு வசனம் பேச முடியவில்லை. சுமார் 2 மணி நேரம் போராடியும் அந்த காட்சி சரியாக அமையவில்லை.
டைரக்டர் பாலச்சந்தருக்கு கடுமையான கோபம் வந்து விட்டது. "என்னடா இவன் இப்படி இருக்கிறான்? அவனவன் பொம்பளையைத் தொட முடியாதா? என்று சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அலைகிறான். இவன் சந்தர்ப்பம் கிடைத்தும் கட்டிப்பிடிக்க மாட்டேன் என்கிறான். சுஜாதாவை கரப்பான் பூச்சியை தொடுவது போல தொடுகிறானே?" என்று கத்தி தீர்த்து விட்டார்.
டைரக்டர் பாலச்சந்தர் இப்படி கத்தித் தீர்த்தப்பிறகுதான் ரஜினி ஒழுங்காக கட்டிப்பிடித்து நடித்தார். சுஜாதாவை ரஜினி துன்புறுத்தும் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்ததால் அவர் ரஜினியை விவாகரத்து செய்து விட்டு சென்னைக்கு வந்து விடுவார்.
சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேருவார். அந்த நிறுவனத்தில் ஜானி என்ற பெயரில் கமல்ஹாசன் வேலை பார்த்து வருவார். மனைவியை இழந்த அவருக்கு சுஜாதா மீது புது ஈர்ப்பு ஏற்படும். சுஜாதாவுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுப்பார். இதனால் கமல் வீட்டிலேயே சுஜாதா குடியேறுவார்.
அப்போதுதான் பக்கத்து வீட்டில் மும்பையில் முதல் முதலாக காதலித்த ரவிக்குமார் இருப்பது தெரிய வரும். இருவரும் மனம் விட்டு பேசுவார்கள். திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவுக்கு வருவார்கள். அந்த சமயத்தில் சுஜாதா வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு மானேஜராக மும்பையில் இருந்து மாற்றலாகி அவரது கணவர் ரஜினி வருவார்.
அவர் சுஜாதாவிடம், "நான் திருந்திவிட்டேன். இனி உன்னை துன்புறுத்த மாட்டேன். நாம் சேர்ந்து வாழலாம்" என்பார். அதே சமயத்தில் கமல்ஹாசனும் சுஜாதாவை ஒருதலையாக காதலித்துக் கொண்டிருப்பார். அதாவது ஒரே நேரத்தில் சுஜாதாவை கமல், ரஜினி, ரவிக்குமார் மூன்று பேருமே விரும்புவார்கள்.
நான்கு கோணங்களில் இந்த காதல் கதையை டைரக்டர் பாலச்சந்தர் விறுவிறுப்பாக எடுத்து இருந்தார். கடைசியில் சுஜாதா என்ன முடிவு எடுத்தார் என்பதுதான் மிகப்பெரிய விறுவிறுப்பாக இந்த படத்தில் அமைந்து இருந்தது.
மூன்று முடிச்சு படத்தில் ஸ்டைல் மூலம் கலக்கிய ரஜினிக்கு இந்த படத்தில் அத்தகைய வாய்ப்பு எதையும் பாலச்சந்தர் கொடுக்க வில்லை. ஸ்டைலுக்கு பதில் நடிப்பு திறமையை காட்ட வேண்டியது இருந்ததால் ரஜினி அதிகம் உழைக்க வேண்டியது இருந்தது. ரஜினியிடம் இருந்த சிறு சிறு பலவீனங்கள் எல்லாவற்றையும் இந்த படத்தில்தான் டைரக்டர் பாலச்சந்தர் சரி செய்தார் என்று சொல்லலாம்.
ரஜினியிடம் நாடகங்களில் நடிக்கும்போதும், சினிமாவில் நடிக்கத் தொடங்கிய போதும் ஒரு பழக்கம் இருந்தது. வசனம் பேசும்போது அவர் அவரையும் அறியாமல் கீழ்நோக்கி பார்க்க ஆரம்பித்து விடுவார். அவரது கண்கள் காந்த சக்தி கொண்டதாக இருந்தாலும் சற்று சிறிய கண்கள் ஆகும். இந்த குறை தெரியக் கூடாது என்பதற்காகத்தான் ரஜினி அவ்வாறு கீழ்நோக்கி பார்த்து வசனம் பேசி நடித்தார்.
இது டைரக்டர் பாலச்சந்தருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஒவ்வொரு காட்சியையும் படமாக்கும் போது அவர் நேரே பார்த்து பேசு.... நேரே பார்த்து பேசு.... என்று சொல்லிக் கொண்டே இருப்பார். சில சமயங்களில் ரஜினிக்கு அவரையும் அறியாமல் பார்வை கீழ் நோக்கி சென்று விடும்.
அப்போது எல்லாம் ரஜினியை பார்த்து, "என்னடா இந்த பாடுபடுத்துகிறாய்? கண்ணை நல்லா திறந்து நடி?" என்று பாலச்சந்தர் திட்டிக் கொண்டே இருப்பார். ஒருநாள் சூட்டிங்கின் போது சுஜாதாவிடம் குழந்தையை தூக்கி கொடுத்து விட்டு வசனம் பேச வேண்டிய காட்சியில் ரஜினி மிகவும் திணறினார்.
படக்குழுவினர் அனைவரும் ரஜினிக்கு பல்வேறு விதங்களில் உதவிகள் செய்தனர். ஆனாலும் ரஜினியால் அந்த காட்சியில் சரியான நேரத்தில் வசனம் பேச இயலவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த டைரக்டர் பாலச்சந்தர், "உனக்கு நடிப்பு வராது. திரைப்படக் கல்லூரியில் 2 வருடம் என்னதான் படித்து கிழிச்சியோ?" என்றார்.
ரஜினி தலையைக் குனிந்து கொண்டே திட்டுகள் வாங்கினார். அதன் பிறகும் பாலச்சந்தருக்கு கோபம் தணியவில்லை. "இந்த படத்தில் நிறைய வசனம் பேச வேண்டியது இருக்கும். இவனுக்காக வசனத்தை மாற்ற முடியாது. இவனை நீக்கி விட்டு ஜெய்கணேசை போட வேண்டியதுதான். ஜெய்கணேசை அழைத்து வாருங்கள்" என்று படப்பிடிப்பு தளமே அதிரும்படி கத்தினார்.
அதே வேகத்தில் படப்பிடிப்பையும் ரத்து செய்து விட்டு போய் விட்டார்.
அதன் பிறகு ரஜினி தன்னை திருத்திக் கொண்டு மறுநாள் அந்த காட்சியில் சிறப்பாக நடித்துக் கொடுத்தார். ஒரு சிற்பி கொஞ்சம் கொஞ்சமாக தட்டி, தட்டி, செதுக்கி அழகான சிற்பத்தை உருவாக்குவது போல ரஜினியை டைரக்டர் பாலச்சந்தர் செதுக்கி, செதுக்கி ரஜினியிடம் பன்முகத் திறமையை உருவாக்கினார். இதனால் "அவர்கள்" படம் நிறைவு பெற்ற போது ரஜினி சிறப்பான நடிகராக மாறி இருந்தார்.
ஒரு கட்டத்தில் டைரக்டர் பாலச்சந்தரே பிரமித்து போகும் அளவுக்கு ரஜினியின் நடிப்பாற்றல் மெருகு ஏறி இருந்தது. இதுபற்றி டைரக்டர் பாலச்சந்தர் ஒரு பேட்டியில் கூறும்போது, "ரஜினியின் நடிப்பு, வேகம், மேனரிசம் போன்றவை தமிழக ரசிகர்களுக்கு ஒரு புதிய ரசனையை உருவாக்கி இருக்கிறது. அவரது விறுவிறுப்பான நடிப்பை தமிழக மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். அதனால் தான் "அவர்கள்" படத்தில் மனைவியை துன்புறுத்தும் சாடிஸ்ட் வேடத்தில் அவர் நூறு சதவீதம் கனகச்சிதமாக நடிக்கும் வகையில் வாய்ப்பு வழங்கப்பட்டது" என்று கூறி இருந்தார்.
ஆனால் "அவர்கள்" படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. என்றாலும் ரஜினியின் "ஆன்டிஹீரோ" வேடம் தமிழக மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ரஜினியின் சினிமா வாழ்க்கையில் 'அவர்கள்' படம் ஒரு முக்கியமான மைல் கல்லாக மாறி இருந்தது.
இதுபற்றி ரஜினியே பல தடவை பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். ஒரு தடவை அவர் நிருபர்களிடம் பேசும்போது, "அவர்கள் திரைப்படம் மூலம் பாலச்சந்தர் சார் எனக்கு எல்லா விஷயங்களையும் சொல்லி கொடுத்து விட்டார். அதனால்தான் அந்த படம் எனக்கு நட்சத்திர அந்தஸ்தை தந்தது" என்று குறிப்பிட்டு இருந்தார்.
1977-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 'அவர்கள்' படம் வெளியான பிறகு ரஜினியை தேடி வரும் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அந்த ஆண்டு ரஜினி அவர்கள், கவிக் குயில், ரகுபதி ராகவன் ராஜாராம், சில சும்மா செப்பிந்தி (தெலுங்கு), புவனா ஒரு கேள்விக் குறி, ஒந்து பிரேமதே கதே (கன்னடம்), 16 வயதினிலே, சகோதர சவால் (கன்னடம்), ஆடு புலி ஆட்டம், குங்கும ரக்ஷே (கன்னடம்), காயத்ரி, ஆறு புஷ்பங்கள், தொலிரேயி கடி சிந்தி (தெலுங்கு), ஆம்மே கதா (தெலுங்கு), கலாட்டா சம்சாரா (கன்னடம்) என 15 படங்களில் நடித்து சாதனை படைத்தார்.
இந்த 15 படங்களில் புவனா ஒரு கேள்விக் குறி, 16 வயதினிலே ஆகிய இரு படங்களும் ரஜினியை தமிழ் திரையுலகின் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றன. இந்த இரு படங்கள் மூலம் ஒவ்வொரு தமிழனின் சுவாசத்திலும், உச்சரிப்பிலும் ஒருவராக ரஜினி மாறிப்போன விந்தை நடந்தது. அந்த விந்தையை ரஜினி எப்படி உருவாக்கினார். அதன் பின்னணியில் ஆன்மீக சக்தி எப்படி உதவியது? என்பதை நாளை 22-ந்தேதி (புதன்கிழமை) பார்க்கலாம்.






