என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    செய்(த) வினையை உணர்த்தும் ருண, ரோக, சத்ரு, ஸ்தானம்
    X

    செய்(த) வினையை உணர்த்தும் ருண, ரோக, சத்ரு, ஸ்தானம்

    • வாழ்க்கை என்பது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்றது.
    • ஒருவர் உண்ணும் உணவே அவர்களுக்கு செய்வினை உணர்வு பயத்தை உண்டாக்கும்.

    முக்காலத்தை உணர்த்தும் ஜோதிடக் கலையின் மூலம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களை நீக்கிக் கொள்ள பலர் விரும்புகிறார்கள். தங்களின் பிரச்சினைக்காக ஜோதிடரை சந்திக்கும் சிலர் செய்வினையை பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள். குறிப்பாக 6, 8, 12-ம் இடத்துடன் தொடர்பு பெறும் தசைகள், புத்திகள் அல்லது பாதகாதிபதியின் தசைகள் புத்திகள் நடக்கும் காலங்களில் அதீத சிரமத்தால் ஒருவித மன பயம் இருக்கும்.

    அந்த மனபயம் ஜாதகருக்கு செய்வினை போன்ற ஒரு பிரம்மையை உண்டாக்கும். தனக்கு யாரோ சூனியம் வைத்து விட்டார்கள் என்று எண்ணம் மேலோங்கும். அதாவது வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து ஏதாவது அசவுகரியங்கள் நடந்தால் ஜாதகர் தனக்கு யாரோ செய்வினை பில்லி சூனியம், ஏவல் செய்து விட்டார்கள் என்று நம்புகிறார்கள்.

    வாழ்க்கை என்பது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்றது. சில நேரங்களில் சுப பலன்கள் இரட்டிப்பாக நடக்கும். சில காலங்களில் அசுப பலன்கள் சகித்துக் கொள்ள முடியாத வகையில் இருக்கும். ஒருவருக்கு நல்லது நடந்தாலும், கெட்ட சம்பவங்கள் சூழ்ந்தாலும் தசாபுத்தியே காரணம். தசாபுத்திக்கு மீறிய சம்பவங்கள் நடக்கக்கூடிய வாய்ப்புகள் குறைவு.

    அந்த வகையில் செய்வினை என்பது ஒருவர் தன் வாழ்வில் முன்னே செய்த வினையின் பிற் தாக்கமாகவே இருக்கும். செய்வினை = செய்த+வினை என்கின்ற செயல். ஆக, ஒருவனுக்கு செய்வினை தாக்குகிறது அல்லது செய்வினை குறித்த பய உணர்வு வந்தால், நிச்சயம் அவரது செயல்கள் தெரிந்தோ தெரியாமலோ மற்றவர்களை பாதித்து இருக்கும். மனதில் உள்ள குற்ற உணர்வுதான் கேள்வியாக வருகிறது என்பதே உண்மை. தன்னால் பாதிகப்பட்ட நபர் நமக்கு செய்வினை செய்து இருப்பார் என்ற பய உணர்வு வருகிறது. இதையே வேறு விதமாக சொன்னால் தாய், தந்தை, சகோதர, சகோதரி, கணவன், மனைவி, குழந்தை என்று யாருடைய அன்பாவது மனதிற்கு இனிமையாக இருந்து இருக்கும். அந்த இனிமையான உறவுகளிடம் கருத்து வேறுபாடு அல்லது பாதிப்பு ஏற்படும் போது பாதிக்கப்பட்ட உறவின் மேல் பழி சொல்லி அந்த உறவுகளால் செய்வினை வந்தது என்கிறார்கள்.

    ஜாதகம் பார்க்க வரும் நேரத்தில் ஜாதகருக்கு செய்வினை இருக்கிறதா என்பதை பிரசன்னத்தில் தெளிவாக கூற முடியும். ஒரு ஜாதகத்தில் 6-ம் மிடமான ருண ரோக சத்ரு ஸ்தானம் செய்வினையை உணர்த்தும் ஸ்தானமாகும். ஒருவருக்கு சத்ரு தொல்லை உருவாகும் போது தான் செய்வினை சார்ந்த கேள்வியும் எழுகிறது. ஒருவர் ஜாதகத்தில் 6-ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசா புத்தி காலங்களில் கடன், நோய், எதிரி, ஏவல் பில்லி சூன்யம் சார்ந்த பய உணர்வு ஜாதகரை அச்சுறுத்தும். 6-ம் இடத்துடன் பாதகாதிபதி சம்பந்தம் பெறும் போது சத்ருவின் மூலம் பாதிப்பு நேருகிறது. 6-ம் இடத்திற்கு, பாதகாதி, ராகு/கேதுவுடன் சம்பந்தம் பெறும் பாதிப்பு கடுமையாகவும், ராகு/கேது, மாந்தியுடன் சம்பந்தம் பெறும் போது இனம் காண முடியாத மரண பயத்தையும் கூட ஜாதகருக்கு ஏற்படுத்துகிறது. ஒருவருக்கு ஏற்படும் மன உடல் நல பாதிப்புகள் மூன்று விதமான நாடிகள் மூலமே ஏற்படுகிறது.

    வாதம்

    ஒருவர் ஜாதகத்தில் 6-ம் இடத்துடன் சனி, புதன், ராகு சம்பந்தம் பெறுவது வாதம் சார்ந்த பாதிப்பாகும். வாத நாடி மூச்சு வெளிவிடுதல் மற்றும் மூச்சை உள்ளே இழுத்தல், தன்மையை உணர்த்தும். வாத நோய்க்கான காரக கிரகங்கள் சனி, புதன் ராகுவாகும். அதாவது செயலற்ற அல்லது குறைவான இயக்கம். உதாரணமாக பக்கவாதம், ஜீரணக்கோளாறு, வாயுப்பிடிப்பு, மூச்சுப்பிடிப்பு போன்றவற்றை கூறலாம். வாத நாடியானது பாதிக்கப்பட்டால் உடல் உறுப்புகள் செயல்இழத்தல், உடல் வலி, மூட்டுவலி, உணர்வு இழத்தல், தசைச்சுருங்கல், சரும வறட்சி, நாவில் ருசி குறைதல், மலக்கட்டு, உடலில் நீர் குறைந்து போதல், உடல் சோர்வு, தூக்கமின்மை, மயக்கம் போன்றவை உண்டாகும். திடீரென இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவது ஜாதகருக்கு செய்வினை போன்ற பயத்தை உருவாக்கும்.

    பித்தம்

    ஒருவர் ஜாதகத்தில் ஆறாம் இடத்துடன் சூரியன், செவ்வாய், கேது சம்பந்தம் இருந்தால் பித்த நோய் தாக்கத்தை உருவாக்கும். அதிக உடல் சூடு, நெஞ்செரிச்சல், தொண்டை எரிச்சல், நீர்க்கடுப்பு, மூலம், அலர்ஜி, அரிப்பு, அல்சர், குடல் புண், கட்டி, கொப்புளம், ரத்த அழுத்தம், தலைவலி , தலைச்சுற்றல், வாந்தி, படபடப்பு முதலானவையும் பித்தம் சம்பந்தபட்டது. பித்த நாடி பாதிப்படைந்தால் ஈரல் மற்றும் கல்லீரல் நோய் ஏற்படுதல், பார்வைத்திறன் குறைதல், கண்ணில் படலம் ஏற்படுதல் உடலின் தோல் சுருங்கி கறுப்பாகமாறுவது, முடியின் கறுப்புநிறம் மாறி வெள்ளை முடி தோன்றுதல், மூச்சுவாங்குதல், இதயம் சம்பந்தமானநோய்கள், மனிதனின் உடல் அமைப்பில் வயோதிக தோற்றம் காணப்படும். இது போன்ற உடல் ரீதியான மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு செய்வினை போன்ற மன பயம் தோன்றும்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    கபம்

    ஒருவர் ஜாதகத்தில் 6-ம் இடத்திற்கு சந்திரன், சுக்ரன். நீர் தத்துவ கிரகங்கள் சம்பந்தம் பெறும் போது சளி, மூச்சிரைப்பு, ஆஸ்துமா, அலர்ஜி, சீதளம், பேதி, ஆறாத புண், சர்க்கரை நோய், கணையம், சிறுநீரகச் செயல்பாடு, தைராய்டு, நுரையீரல் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவை அனைத்தும் கபம் சார்ந்தது. கப நாடியானது இயல்பாக இருக்குமேயானால் உடலுக்கு குளிர்ச்சி, உடல் வலிமை, தோல் பளபளப்பாக இருத்தல், கண்கள் குளிர்ச்சியாகவும் எவ்வித கண்களுக்கு பாதிப்பு இல்லாமல் தெளிவான பார்வை இருத்தல், முடி சிறப்பாக அடர்த்தியாக வளர்தல், பேச்சில்குரல் தெளிவோடு இருத்தல், உடல்குளிர்ச்சி அடைந்து மென்மையாக இயல்பாக இருத்தல், நாக்கில் சுவைத்தன்மை சரியாக இருந்தால் இயல்பாக இளமையோடு காட்சி தருவார்கள்.

    கப நாடி பாதிக்கப்பட்டால் இருமல் மற்றும் சளி உண்டாதல், தொண்டை வறட்சி ஆஸ்துமா, சைனஸ், தலை வலி, தலைச்சுற்றல், மயக்கம், ரத்த அழுத்தம் அதிகமாதல், சருமம் வறண்டு காணப்படுதல், அதிகத் தூக்கம், நடந்தால் மேல் மூச்சு வாங்குதல், நெஞ்சு படபடப்பு, வேலை பார்ப்பதில் உற்சாகம் குறைந்து காணப்படுதல், பசி இல்லாது இருத்தல், உமிழ்நீர் சுரப்பு குறைந்து காணுதல், சிறுநீர் அதிகமாக செல்லுதல் அல்லது குறைந்து செல்லுதல் போன்றவைகள் காணப்படும். நல்ல தைரியமான மனநிலை உள்ளவர்கள் உடல்நல பாதிப்பால் ஏற்படக்கூடிய அசவுகரியத்தை ஏற்றுக் கொள்வார்கள். அதற்கான வைத்தியத்தில் ஈடுபடுவார்கள்.

    பலவீனமான மனம் உள்ளவர்கள் ஏவல், பில்லி, சூனியம். செய்வினை போன்றவற்றை நீக்கும் இடம் தேடி அலைவார்கள்.

    செய்வினை உண்மையா?

    செய்வினை என்பது முதலில் உண்மையா? என்று ஆய்வு செய்யும் போது நம் கண்ணுக்கு புலப்படாத தீய சக்தி சில சமயங்களில் ஏவப்படுகிறது என்ற உண்மையும் பல சமயங்களில் ஜாதகரின் தவறுக்கு பிரபஞ்சம் தரும் தண்டனையும் ஏவப்பட்ட தீய சக்தி போல் ஜாதகரின் உள் உணர்வுக்கு தோன்றும் என்பதே நிதர்சனமான உண்மை. மேலும் மத நல்லிணக்கத்தை உணர்த்தும் அனைத்து புனித நூல்களும் தீய சக்தியின் ஏவலை மறுக்கவில்லை. செய்வினை சரி செய்யப்பட்டு பலர் மறு வாழ்வு அடைந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை.

    செய்வினை வெளிப்படும் காலம்

    கண்ணுக்கு தெரியாமல் தொடங்கும் இந்த செய்வினை பாதிப்பு ஒற்றை தலைவலி முதல் மாரடைப்பு வரையான பல்வேறு பாதிப்புகளைத் தருகிறது. ஜனன ஜாதகத்தில் லக்கினம், 3ம் இடம், சந்திரன், சூரியன், நல்ல நிலையில் இருந்தால் எளிதில் எந்த விசயத்திற்கும் அசருவதில்லை.

    ஒருவரின் ஆழ்ந்த சிந்தனை, ஆழ்மனதை குறிக்கும் கிரகம் காலபுருஷ 5-ம் அதிபதியான சூரியன் ராகு, கேது, சனியுடன் இணைவு, சூரியன்நீசம் பெற்றவர்கள், 6,8,12-ல் மறைந்தவர்கள், அஷ்டம, பாதக அதிபதியோடு சம்பந்தம் பெற்றவர்கள் மனவிரக்தியை அதிகம் சந்திக்கிறார்கள். கோட்சார சந்திரன் ராசிக்கு எட்டில் மறையும் போது அல்லது பிறப்பு ராகு கேது, சனியை கோட்சார சந்திரன் தொடும் போதோ சில அமானுஷ்ய மாற்றங்கள் உடல் மற்றும் மனதில் உண்டாகும். ஜனன கால ஜாதகத்தில் மனோகாரகன் எனப்படும் சந்திரன் வலிமை குறைந்தால் இது போன்ற பாதிப்பு மிகுதியாகும். ஜனன சந்திரன் கோச்சார ராகு. கேதுவுடன் சம்பந்தம் பெறும் போது ஜாதகருக்கு தனக்கு யாரோ செய்வினை வைத்தது போன்ற உணர்வு வரும்.

    ஒருவரின் ஆயுள் ஆரோக்கியம், வறுமை, கடன், பலவீனம், அடிமைத் தன்மை, தொழில், பொதுஜனம் ஆகியவற்றுக்கு காரக கிரகம் பொதுவாக சனி பகவான். சனிபக வானால் கிடைக்கக்கூடிய நன்மையோ தீமையோ நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும். ஒருவரின் பூர்வ ஜென்ம புண்ணியத்திற்கு ஏற்ப அவரவரின் ஜாதகத்தில் உள்ள சனி பகவான் நின்ற நிலைக்கு ஏற்ப கோட்ச்சாரத்தில் ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி, அர்த்தாஷ்டமச் சனி காலங்களில் பலன் கிடைக்கும். அல்லது சனி தசை புத்தி அந்தர காலங்களில் செய்வினை ஏவல் பில்லி சூனியம் போன்ற பிரச்சினைகள் எழும்.

    அதேபோல் செவ்வாய் வேகமான கிரகம். விவேகம் அற்ற கிரகம். பிடிவாதம், அகம்பாவம், துணிச்சல், கர்வம், மூர்க்கம், சுயநலம், கோபப்படுதல், சண்டையிடுதல், அதீத காமம், அவசரம், உடலில் உள்ள ரத்தம், உடன் பிறந்த சகோதரம் ஆகியவற்றிற்கு காரக கிரகம். ஒரு மனிதனின் அனைத்து ஆற்றல்களும் செவ்வாய் கிரகத்தில் தான் பதிவாகி இருக்கும்.

    சனி மற்றும் செவ்வாய்க்கு சுய ஜாதக ரீதியான சம்பந்தம். கோச்சார ரீதியான சம்பந்தம் ஏற்படும் காலங்களில் உஷ்ண சுரம், ரத்தக் கொதிப்பு, ரத்தப் போக்கு, வலி, வீக்கம், சொறி சிரங்குகள், குஷ்டம், அடிபடுதல், விரோதிகளால் ஆபத்து அங்ககீனம் ஏற்படுதல், பில்லி, சூன்யம், தீ விபத்து, அறுவை சிகிச்சை போன்றவைகள் ஏற்படும்.

    ஒருவர் உண்ணும் உணவே அவர்களுக்கு செய்வினை உணர்வு பயத்தை உண்டாக்கும். சாத்வீக உணவை உண்டால் எந்தவித செய்வினை தாக்கமும் ஜாதகரை தாக்காது. மேலும் லக்னம் லக்னாதிபதி வலிமையாக இருந்தால் யாரேனும் செய்வினை செய்தால் கூட ஜாதகரை அண்டாது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை செய்வினை மாந்திரீக பாதிப்புகள் ஏற்படுத்துபவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறார்கள்.

    மலேசியா, சிங்கப்பூரில் இருந்து வரும் தமிழர்கள் கடுமையான பாதிப்போடு வருகிறார்ககள். அங்கே சாதாரண விஷயங்களுக்கு கூட செய்வினை என்ற ஆயுதத்தை பிரயோகம் செய்கிறார்கள். எதிரியை தைரியமாக எதிர் கொள்ளக் கூடிய சக்தி இல்லாத 6ம் பாவகம் வலிமை குறைந்தவரே இது போன்ற தவறான செயல்களை செய்கிறார்கள்.

    தனி மனிதனுக்கு யாரையும் தண்டிக்கும் அதிகாரத்தை பிரபஞ்சம் கொடுக்கவில்லை. நம் சுவாசக் காற்றைக் கூட கால பகவான் தன் காலப் பதிவேட்டில் பதிந்து வருகிறார். காலத்திற்கும் கால பகவானுக்கும் ஞாபக மறதியே கிடையாது. செய் (த )வினை மறுபடியும் எய்தவரை தேடி வரும் என்ற புரிதல் வேண்டும். இயற்கைக்கு மாறாக என்ன செய்தாலும் தனக்கு தானே சூன்யம் வைத்துக் கொள்வதற்கு சமம். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் மனக் குமுறலை பிரபஞ்சத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். தக்க நேரத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும். தவறான செய்வினை, ஏவல் போன்ற ஆயுதத்தை கையில் எடுக்கக் கூடாது. ஒரு ஆன்மாவை துன்புறுத்துவது மிகவும் கொடூரமானது. செய்வினை தோஷம் ருண ரோக சத்ரு ஸ்தானமான 6ம் பாவகம் தொடர்பான தசா, புத்தி, அந்தர காலங்களில் மட்டுமே அதன் தாக்கம் இருக்கும் மற்ற நேரங்களில் செயல்படுத்த முடியாது.

    பரிகாரம்

    இன்றைய அவசரகதியான உலகில் செய்வினை என்ற ஒரு பாதிப்பு இருப்பதை அறியாதவர்கள் இன்றும் இருக்கிறார்கள். சிறிய பாதிப்புகளுக்கு கூட கற்பனை பயத்தை தங்களுக்கு தானே உருவாக்கிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் என்ன வகையான பாதிப்பு என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு அதற்குரிய எளிய பரிகார வழிபாட்டு முறைகளை செய்யலாம். அரசு, வேம்பு சமித்து சர்வரோக நிவாரணியாகும். அரச மரமும் வேப்ப மரமும் ஒன்றாக பிணைந்த மரத்திற்கு அடியில் இரண்டு மணி நேரம் அமர்ந்தாலே சிறிய பாதிப்புகள் குறைந்துவிடும். உண்மையில் பெரிய பாதிப்புகள் இருந்தால் செய்வினை ஏவல் பில்லி சூனியம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் ஸ்ரீ பிரத்தியங்கரா தேவியை வழிபடவும்.

    செல்: 98652 20406

    Next Story
    ×