என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- மது குடிப்பதை கைவிட்ட ரஜினி!
    X

    ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- மது குடிப்பதை கைவிட்ட ரஜினி!

    • ரஜினி முள்ளும் மலரும் கடைசி காட்சியில் நடித்து கொடுத்து விட்டு சிங்கப்பூருக்கு சென்றார்.
    • “தப்புத் தாளங்கள்” படத்திலும் ரஜினியை டைரக்டர் பாலச்சந்தர் மேலும் நடிப்பில் மெருகு ஏற்ற வைத்தார்.

    ரஜினி நடித்த படங்கள் 1978-ம் ஆண்டு வெற்றிகரமாக ஓடத்தொடங்கியதால் அவரை தேடி வரும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எண்ணிக்கை மளமளவென அதிகரித்தது. குறிப்பாக பைரவி, இளமை ஊஞ்சலாடுகிறது படங்கள் வெளியான பிறகு ரஜினியை திரையுலகம் மொய்த்து விட்டது. ரஜினிக்கும் அந்த ஆரம்ப காலத்தில் சரியான திட்டமிடல் இருக்கவில்லை. தன்னை தேடி வந்த வாய்ப்புகளை பெரும்பாலும் ஒத்துக் கொண்டார். புதிய வேடங்களில் நடித்து புகழ் பெற வேண்டும் என்ற வெறி அவருக்குள் இருந்து கொண்டே இருந்தது. அதனால்தான் நிறைய படங்களில் ஒப்பந்தம் ஆகி இருந்தார். ஆனால் அதுவே அவருக்கு மிகப்பெரிய சோதனையை ஏற்படுத்தி விட்டது.

    இந்த சோதனை முள்ளும் மலரும் படம் ஷூட்டிங் சமயத்தில்தான் தொடங்கியது. அந்த படத்தின் சில காட்சிகள் படம் ஆக்காமல் விடுபட்டு விட்டது என்று கூறி மீண்டும் படப்பிடிப்புக்கு வருமாறு கேட்டபோது ரஜினி திட்டவட்டமாக வரமுடியாது என்று மறுத்தார்.

    நினைத்தாலே இனிக்கும் படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாகவும் வந்த பிறகு நடித்து தருகிறேன் என்றும் கூறினார். இதனால் முள்ளும் மலரும் படத்தின் இயக்குனர் மகேந்திரன் தவித்தார். இதை அறிந்த கமல் தலையிட்டு ரஜினியை சமரசம் செய்து நடிக்க வைத்தார். அதன்படி ரஜினி முள்ளும் மலரும் கடைசி காட்சியில் நடித்து கொடுத்து விட்டு சிங்கப்பூருக்கு சென்றார்.

    முள்ளும் மலரும் வெளியானதும் முதல் 3 வாரங்கள் சரியாக ஓடவில்லை. படத்தயாரிப்பாளர் வேணு செட்டியார் "என் வாழ்க்கையே போய் விட்டது" என்று கண்ணீர் விட்டார். ரஜினியையும், இயக்குனர் மகேந்திரனையும் திட்டித்தீர்த்தார். இதை அறிந்த ரஜினிக்கும் என்னவோ போல் ஆகி விட்டது.

    என்றாலும் ரஜினி மனம் தளரவில்லை. ராகவேந்திரரிடம் மனம் உருக வேண்டினார். அதன் பலனாக 3-வது வாரத்துக்கு பிறகு ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து வர தொடங்கினார்கள். ரஜினியின் நடிப்பை ரசித்து பார்த்தனர்.

    அதன் பிறகுதான் ரஜினி படங்கள் ஒவ்வொன்றும் வெற்றிப் படங்களாக இருக்கும் என்ற புதிய எண்ணம் மக்கள் மத்தியிலும், திரை உலகிலும் பரவத் தொடங்கியது. முள்ளும் மலரும் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தமிழக அரசு மாநில திரைப்பட விருதுகளை அறிவித்த போது ரஜினிக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவித்தது. நடிப்புக்காக ரஜினி பெற்ற முதல் அரசு விருது அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து டைரக்டர் பாலச்சந்தர் மீண்டும் ரஜினியை வைத்து "தப்புத் தாளங்கள்" என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தார். கதாநாயகியாக சரிதா ஒப்பந்தம் செய்யப்பட்டார். தமிழில் அதுதான் சரிதாவுக்கு முதல் படம்.

    "தப்புத் தாளங்கள்" படம் தயாரிக்கப்பட்ட போது பாலச்சந்தருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. ரஜினியை தொடக்க காலத்தில் அழைத்தது போல "வாடா... போடா..." என்று சொல்லலாமா? இப்போது அவர் சூப்பர் ஸ்டார் ஆகி விட்டாரே? அவரது நடிப்பை திருத்த முடியுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.

    இதை ரஜினியிடம் டைரக்டர் பாலச்சந்தர் நேரிலேயே கேட்டார். அதை கேட்டதும் ரஜினி கண்கள் கலங்கியது. அவர் பாலச்சந்தரை பார்த்து, "சார்.... என் சினிமா வாழ்க்கை நீங்கள் போட்ட பிச்சை. உங்கள் கருணையால்தான் நான் இன்று நாலு பேர் மத்தியில் பேசப்படுகிறேன். என்னை திருத்தவும், கண்டிக்கவும் உங்களுக்கு உரிமை இருக்கிறது. என்னை நீங்கள் அடித்துக் கூட திருத்தலாம்? அதற்கு உங்களுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது. இனியும் என்னை உங்களிடம் இருந்து பிரித்து தனிமைப்படுத்தாதீர்கள்" என்றார்.

    ரஜினி கண்ணீர் மல்க இப்படி சொன்னதை கேட்டதும் பாலச்சந்தரும் கண் கலங்கினார். நீ எப்போதுமே என்னுடைய பையன்தான் என்று கட்டிப்பிடித்துக் கொண்டு நெகிழ்ந்தார். இதனால் "தப்புத் தாளங்கள்" படத்திலும் ரஜினியை டைரக்டர் பாலச்சந்தர் மேலும் நடிப்பில் மெருகு ஏற்ற வைத்தார்.

    'தப்புத்தளாங்கள்' படப்பிடிப்பின் போது சரிதா அனைவரிடமும் சகஜமாகப் பேசிப் பழகியதைப் பார்த்து ரஜினி மிகவும் ஆச்சரியப்பட்டார். ரஜினியைப் பார்க்கும் போது வேண்டும் என்றே 'மிஸ்டர் கறுப்பா' என்பார். ரஜினியும் விடவில்லை. 'கறுப்பி' என்று கிண்டல் செய்தார். தப்புத்தாளங்கள் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பெங்களூரில் நடந்தது. ரஜினி தங்குவதற்கு ஸ்டார் ஓட்டலில் அறை முன்பதிவு செய்து கொடுத்திருந்தனர். அது ரஜினிக்கு மது அருந்த மிகவும் வசதியாக போய்விட்டது.

    பெங்களூரில் வாழ்ந்த போது சிறு வயதில் ரஜினியிடம் ஏற்பட்டிருந்த கெட்ட பழக்கங்களில் மது குடிக்கும் பழக்கம் பிரதானமாக இருந்தது. அடிக்கடி பாட்டிலும் கையுமாகத்தான் இருப்பார். சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படித்த 2 ஆண்டுகளிலும் அவரிடம் மது குடிக்கும் பழக்கம் நீடித்தது. இதனால் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகும் மது பழக்கம் அவருடன் ஒட்டிக் கொண்டே வந்து விட்டது. 1977, 1978களில் நிறைய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதால் தினமும் உயர்ரக மதுபானங்களை வாங்கி குடிக்க ஆரம்பித்தார்.

    ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்ததும், இரவு குளித்து முடித்து சாமி கும்பிட்டு விட்டு, சரக்கு அடிக்க ஆரம்பித்து விடுவார். அவரிடம் இது ஒரு மரபு போல மாறி இருந்தது. பெங்களூரில் தப்புத்தாளங்கள் படப்பிடிப்பு நாட்களிலும் தினமும் மது குடிக்கும் பழக்கத்தை ரஜினி கைவிட வில்லை.

    ஒரு நாள் தப்புத்தாளங்கள் சூட்டிங் முடிந்து ஓட்டல் அறைக்கு திரும்பியதும் குளித்து, சாமி கும்பிட்டு விட்டு வழக்கம் போல ரஜினி மதுபானம் குடிக்க ஆரம்பித்து விட்டார். சில ரவுண்டுகள் முடிந்த நிலையில் ரஜினிக்கு போதை ஏற்பட தொடங்கியது.

    அப்போது அவரது அறைக் கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால் வெளியில் டைரக்டர் பாலச்சந்தரின் உதவியாளர் அமீர்ஜான் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் ரஜினிக்கு 'பக்' என்றாகி விட்டது.

    'என்னங்க' என்றார். அதற்கு அமீர்ஜான், 'சார்.... உங்களை டைரக்டர் உடனே கூட்டிட்டு வரச்சொன்னார். ஒரே ஒரு ஷாட் எடுக்காமல் விட்டு விட்டனர். அந்த காட்சியை இப்போதே எடுக்க வேண்டுமாம். புறப்பட்டு வாங்க' என்றார்.

    இதைக் கேட்டதும் ரஜினிக்கு சப்த நாடியும் ஒடுங்கி போனது போல ஆகி விட்டது. மது குடித்து இருப்பது பாலச்சந்தர் சாருக்கு தெரிந்தால் பிரச்சினை ஆகி விடுமே என்று பயந்தார். தவித்தார்.

    அந்த பயத்துடனே புறப்படத் தொடங்கினார். தன் மீது இருந்து மது வாசனை வந்து விடக்கூடாது என்று நினைத்த ரஜினி நன்றாக குளித்தார். சென்ட் பூசிக் கொண்டார். பிறகு படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு சென்றார்.

    டைரக்டர் பாலச்சந்தர், அருகில் செல்லாமல் சற்று தூரத்திலேயே நின்று பேசினார். ரஜினியின் முழியை வைத்து, அவர் மதுபானம் குடித்து இருப்பதை டைரக்டர் பாலச்சந்தர் எளிதாக கண்டுபிடித்து விட்டார்.

    ரஜினி, படப்பிடிப்பு நேரங்களில் மது குடித்து விட்டு நடிக்க வருகிறார் என்று டைரக்டர் பாலச்சந்தர் ஏற்கனவே அரசல், புரசலாக கேள்விப்பட்டிருந்தார். இன்று தனது படப்பிடிப்பிலேயே அதை நேரில் பார்த்து விட்டார். ரஜினி மீது அவருக்கு பயங்கர கோபம் வந்தது.

    'என்னுடன் அறைக்கு வா' என்று சொல்லிக் கொண்டே டைரக்டர் பாலச்சந்தர் நடந்தார். அவர் பின்னால் பயந்தபடியே ரஜினி சென்றார். அறைக்குள் சென்றதும் ரஜினியை உட்கார வைத்த பாலச்சந்தர், 'உனக்கு நடிகர் நாகேஷை தெரியுமா'? என்றார்.

    அதற்கு ரஜினி, 'தெரியும் சார் என்றார்'. அவன் எவ்வளவு பெரிய நடிகர் தெரியுமா? அவன் நடிப்பு முன்னால் நீ வெறும் தூசிதான். அவ்வளவு திறமை இருந்தும் அவன் தினமும் மது குடித்து தன் வாழ்க்கையையே அழித்துக் கொண்டான். உனக்கு அது தெரியுமா,?' என்றார்.

    ரஜினி தலை குனிந்து அமைதியாக இருந்தார். பாலச்சந்தரின் குரலில் ஆவேசம் தணியவில்லை. அவர் ரஜினியைப் பார்த்து, 'இன்னொரு தடவை நீ படப்பிடிப்புக்கு தண்ணி போட்டுவிட்டு வந்தால், அல்லது கேள்விப்பட்டால், உன்னைத் தேடி வந்து செருப்பாலே அடிப்பேன்' என்று கத்தினார்.

    ரஜினி தன்னை மன்னிக்கும்படி கண்ணீர் விட்டார். குருநாதரின் பேச்சுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் அன்றோடு மதுபானத்துக்கு ரஜினி விடை கொடுத்தார். இது ரஜினி வாழ்க்கையில் டைரக்டர் பாலச்சந்தர் ஏற்படுத்திய மற்றொரு மகத்தான திருப்புமுனையான மாற்றம் என்றே சொல்ல வேண்டும்.

    1978-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தப்புத் தாளங்கள் வெளியானது. இந்த படத்திலும் ரஜினியின் நடிப்பு ரசிக்கும்படி இருந்தது. இந்த படத்துக்கு பிறகு ஏற்கனவே சாண்டோ சின்னப்பா தேவர் ஒப்பந்தம் செய்து இருந்த "தாய் மீது சத்தியம்" படத்தில் ரஜினி விறுவிறுப்பாக நடித்தார்.

    ரஜினியின் நடிப்பை சின்னப்பா தேவர் வியந்துப் பார்த்தார். ஆனால் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருந்த நிலையில், சாண்டோ சின்னப்பா தேவர் கோவைக்கு சென்றிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அடுத்த சில வாரங்களில் தாய் மீது சத்தியம் படம் தீபாவளிக்கு வெளியாகி 100 நாட்கள் ஓடி வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்தபடியாக ரஜினி வாழ்க்கையில் ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது.

    ரஜினி மாலை அணிந்து சபரிமலை அய்யப்பனை காணச் சென்றார். சபரி மலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் ரஜினிக்கு எப்படி ஏற்பட்டது என்பதை 27-ந் தேதி (திங்கட்கிழமை) பார்க்கலாம்.

    Next Story
    ×