என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- யார் அந்த ரெஜினாம்மா!
    X

    ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- யார் அந்த ரெஜினாம்மா!

    • ரஜினியின் நடிப்பையும், ஸ்ரீதேவியின் நடிப்பையும் ரெஜினா குடும்பத்தினர் நேரில் கண்டுகளித்தனர்.
    • ரெஜினா வின்சென்ட் எழுந்து வீட்டுக்குள் மாடியில் உள்ள அறைக்குச் செல்ல புறப்பட்டார்.

    ரஜினி அடிபட்ட புலி போல விஜயா நர்சிங் ஹோம் ஆஸ்பத்திரியில் சீறிக் கொண்டே இருந்தார். ஆஸ்பத்திரியில் அவர் இருந்த 3 நாட்களும் டாக்டர்கள் போர்முனையில் நிற்பது போலதான் உணர்ந்தனர்.

    3-வது நாள் அவர் அம்மாவை பார்க்க வேண்டும் என்று திரும்ப... திரும்ப... சொல்லிக் கொண்டு இருந்ததால் அவர் குறிப்பிட்ட ரெஜினாம்மாவை டாக்டர்கள் தொடர்பு கொண்டனர்.

    யார் அந்த ரெஜினாம்மா...?

    அவரைப் பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். சென்னையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பெஸ்ட் அண்ட் கிராம்டன் நிறுவனம் புகழ் பெற்ற நிறுவனமாக இருந்தது. அந்த நிறுவனத்துக்கு சொந்தமாக சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகர் பகுதியில் ஒரு ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்ட இடம் இருந்தது.

    அந்த இடத்தில் கட்டப்பட்டு இருந்த பங்களாவில் பெஸ்ட் அண்ட் கிராம்டன் நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாக இருந்த வின்சென்ட் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் இருந்த பங்களாவை மாளிகை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அந்த இடம் பராமரிக்கப்பட்டு வந்தது. பங்களாவின் பின்புறம் அழகிய புல்தரை அமைக்கப்பட்டு இருந்தது.

    வீட்டை சுற்றிலும் வகை வகையான பூச்செடிகளுடன் அழகான தோட்டம் அமைத்து இருந்தனர். பசுஞ்சோலைக்கு மத்தியில் அந்த மாளிகை வீடு ரம்மியமாக இருந்தது. அந்த பங்களாவின் பின்புறம் விருந்தினர்கள் தங்கவும் அறைகள் கட்டப்பட்டு இருந்தன.

    பங்களா முன்புறமும் மிகவும் விஸ்தாரமாக காலி இடம் இருந்தது. படத்தயாரிப்பாளர் ஏ.பி.நாகராஜன் அந்த இடத்தை பார்த்ததும் தனது "மேல்நாட்டு மருமகள்" படத்தின் சூட்டிங்கை அங்கு நடத்த ஆசைப்பட்டார். அதற்கு அனுமதி கிடைத்ததால் அந்த படம் அங்கு எடுக்கப்பட்டது.

    பெஸ்ட் அன்ட் கிராம்டன் தலைமை நிர்வாகி வின்சென்ட்டுக்கு ஜேப்பியார் நண்பர் ஆவார். எனவே ஜேப்பியாரும் தனது படங்களின் படப்பிடிப்புகளையும் அங்கு நடத்தினார். வின்சென்ட்டின் மனைவி ரெஜினா வின்சென்ட். இவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினியால் 'ரெஜினாம்மா' என்று அழைக்கப்பட்டார்.

    இவர் இயற்கை வைத்தியத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். ஆனால் மருத்துவமனைகளில் பணிபுரியவில்லை. தெரிந்தவர்களுக்கு மட்டும் வைத்தியம் செய்வதை வழக்கத்தில் வைத்திருந்தார். அதோடு அவர் சென்னையில் மதர் தெரசா சமூக நல அமைப்பின் பொறுப்பாளராகவும் இருந்தார்.

    எப்போதும் சமூக நல சேவை செய்வதை நோக்கமாக கொண்ட அவர் தனது வீட்டில் நடக்கும் படப்பிடிப்புகளை எப்போதாவது பார்ப்பது உண்டு. மற்றபடி அவருக்கு சினிமாவில் பெரிய ஆர்வம் கிடையாது. அவரது வாரிசுகள் விரும்பியதால் வீட்டின் பின்பகுதியில் உள்ள தோட்டத்து பகுதியை படப்பிடிப்புக்கு விடுவதற்கு அவர் தடை விதிக்கவில்லை.

    இந்த நிலையில்தான் 1979-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஜினி கதாநாயகனாகவும், ஸ்ரீதேவி கதாநாயகியாகவும் நடித்த "தர்ம யுத்தம்" படத்துக்கான படப்பிடிப்பை நடத்த சென்னையில் இடம் தேடப்பட்டு வந்தது. ரெஜினா வின்சென்ட் பங்களாவை பார்த்ததும் படத்தயாரிப்பாளர் சீனிவாசன் அங்கு படப்பிடிப்பு நடத்த விரும்பினார். ரெஜினாவிடம் அவர் 3 நாட்கள் பங்களா இடத்தை தந்தால் போதும் சூட்டிங்கை முடித்து விடுவோம் என்றார்.

    அதற்கு ரெஜினா வின்சென்ட் ஒப்புதல் அளித்தார். மறுநாளே படப்பிடிப்பு தொடங்கியது. முதல் 2 நாட்கள் படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் நடந்தது. ரஜினியின் நடிப்பையும், ஸ்ரீதேவியின் நடிப்பையும் ரெஜினா குடும்பத்தினர் நேரில் கண்டுகளித்தனர்.

    அதே சமயத்தில் படப்பிடிப்புக்கு இடையே நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரஜினி தனியாக ஒரு ஓரமாக நின்றபடி ஸ்டைலாக சிகரெட்டை ஊதித் தள்ளுவதை ரெஜினா வின்சென்ட் கவனிக்கத் தவற வில்லை. இந்த நிலையில்தான் 3-வது நாள் படப்பிடிப்பில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. அன்றைய தினம் மதர் தெரசா சமூக நல அமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ரெஜினா வின்சென்ட் காலையிலேயே புறப்பட்டுச் சென்று விட்டார்.

    அன்று தர்ம யுத்தம் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க தயாரிப்பாளர் சீனிவாசன் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அன்று எதிர்பாராதவிதமாக ரஜினி கடுமையான மது போதையுடன் அந்த பங்களாவுக்கு வந்தார். அவரால் நிற்கக்கூட முடியவில்லை. படப்பிடிப்பை நாளை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

    தயாரிப்பாளர் சீனிவாசனுக்கு திக் என்று ஆகி விட்டது. மனம் வெறுத்துப் போன அவர் படப்பிடிப்பு சாதனங்களை அகற்ற கூறினார். அதன்படி திரைப்பட தொழிலாளர்கள் அந்த பங்களாவில் இருந்த படப்பிடிப்பு சாதனங்களை ஒவ்வொன்றாக எடுத்து வைக்க தொடங்கினார்கள். அப்போது வெளியில் சென்று இருந்த ரெஜினா வின்சென்ட் காரில் வந்து இறங்கினார். படப்பிடிப்பு எதுவும் நடக்காமல் இருப்பதை பார்த்ததும் ஏதோ ஒன்று நடந்து இருக்கிறது என்பது அவருக்கு புரிந்து விட்டது. அவரை பார்த்ததும் படத்தயாரிப்பாளர் சீனிவாசன் கண்ணீர் மல்க வந்தார். அவரிடம் ரெஜினா வின்சென்ட், "ஏன் படப்பிடிப்பு நடக்கவில்லை" என்று கேட்டார்.

    அதற்கு படத்தயாரிப்பாளர் சீனிவாசன், "கதாநாயகன் ரஜினி மது அருந்தி விட்டு வந்ததால் படப்பிடிப்பை தொடர முடியவில்லை. நாளை மீண்டும் வருவதாக சொல்லி விட்டு போய் இருக்கிறார். தயவு செய்து நாளை ஒருநாள் மட்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க வேண்டும்" என்றார்.

    அவரது சூழ்நிலையைப் புரிந்துக் கொண்ட ரெஜினா வின்சென்ட் "சரி நடத்திக் கொள்ளுங்கள்" என்று சம்மதித்தார். அடுத்த நாள் ரஜினி, ஸ்ரீதேவி காலையிலேயே வந்து விட்டனர். காட்சிகள் அனைத்தும் விறு விறுப்பாக படமாக்கப்பட்டன. ரஜினி தனது ஒவ்வொரு காட்சியிலும் தத்ரூபமாக நடித்தார்.

    அவர் நடித்த காட்சிகள் ஒரே டேக்கில் ஓகே ஆனது. இதைப் பார்த்து ரெஜினா வின்சென்ட்டும் அவரது குடும்பத்தினரும் பிரமித்தனர். நடிப்பில் இவ்வளவு திறமையுடன் இருக்கும் ரஜினி மீது முதல் முறையாக ரெஜினா வின்சென்டுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஒரு ஈர்ப்பும், அன்பும் ஏற்பட்டது.

    முதல் 2 நாட்கள் படப்பிடிப்பை பார்க்காத ரெஜினா வின்சென்ட் 3-வது நாள் படப்பிடிப்பை வேடிக்கையாக பார்க்க ஆரம்பித்து அதில் அப்படியே மனதை பறிகொடுத்து அங்கேயே அமர்ந்து விட்டார். மதியம் படப்பிடிப்புக்கான இடைவேளை விடப்பட்டது. அப்போது ரெஜினா வின்சென்ட் எழுந்து வீட்டுக்குள் மாடியில் உள்ள அறைக்குச் செல்ல புறப்பட்டார்.

    இதைப் பார்த்த ரஜினி வேகம் வேகமாக வந்தார். ரெஜினா வின்சென்ட் அருகில் சென்று "அம்மா" என்று அழைத்தார். ரெஜினாவுக்கு தூக்கி வாரிப் போட்டது. திரும்பிப் பார்த்தார். ரஜினி கண்கள் பாசத்தில் மிளிர நின்றுக் கொண்டிருந்தார்.

    "அம்மா நான் உங்களிடம் பேச வேண்டும். என் மனதில் உள்ளதை எல்லாம் உங்களிடம் சொல்ல வேண்டும் போல் இருக்கிறது" என்றார். இதை ரெஜினா வின்சென்ட் எதிர்பார்க்கவில்லை. அவர் ரஜினியை பார்த்து, "நானே உன்னிடம் பேச வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டு இருந்தேன். உனக்கு நிறைய அட்வைஸ் தேவைப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்ததும் பேசலாம்" என்றார்.

    அவர் அவ்வாறு சொன்னதும் ரஜினிக்கு ஆச்சரியமாக இருந்தது. தலையை சரித்து ரெஜினா வின்சென்ட்டை கண் இமை கொட்டாமல் பார்த்தார். அவரையும் அறியாமல் அவர் வாயில் இருந்து "சரிம்மா" என்ற வார்த்தை வந்தது. ஆனால் அன்று மாலை ரெஜினா வின்சென்ட்டை ரஜினி சந்திக்கவில்லை. படப்பிடிப்பு முடிந்து சென்று விட்டார். சுமார் ஒரு வாரம் கழித்து ரஜினி அந்த பங்களாவுக்கு தன்னந்தனியாக வந்தார். ரஜினி எப்போதுமே புதிய விஷயங்களை தொடங்குவதற்கு வியாழக்கிழமையை தேர்வு செய்வது வழக்கமாகும். அன்று பிப்ரவரி 15-ந்தேதி வியாழக்கிழமை.

    ரஜினி அந்த பங்களாவுக்குள் சென்ற போது ரெஜினா வின்சென்ட்டின் மகள் பமீலா கீழ்தளத்தில் வயலின் வாசித்துக் கொண்டிருந்தார். அவரிடம் ரஜினி, அம்மாவை பார்க்க வேண்டும் என்றார். உடனே பமீலா மேல் தளத்துக்கு சென்று தனது தாயாரிடம், "ரஜினி சார் வந்து இருக்காங்க. உங்களோடு பேச வேண்டுமாம்" என்றார்.

    ரெஜினா வின்சென்ட் அந்த சமயத்தில் ரஜினியை சுத்தமாக மறந்து போய் இருந்தார். மீண்டும் ரஜினி வந்து இருக்கும் தகவல் அறிந்ததும் அவர் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். ரஜினி அங்கு இல்லை. பங்களா பின்புறத்தில் உள்ள புல்வெளியில் நின்று கொண்டிருந்தார். அங்கு சென்ற ரெஜினா வின்சென்ட், "என்னப்பா.... என்ன விஷயம்..." என்று கேட்டார். அடுத்த வினாடி ரஜினி கொஞ்சம் கூட தாமதிக்கவில்லை. நெடுஞ்சான் கிடையாக ரெஜினா வின்சென்ட் காலில் விழுந்து கும்பிட்டார்.

    ரெஜினா வின்சென்ட்டுக்கு அதிர்ச்சியாகி விட்டது. அடுத்து என்ன நடந்தது என்பதை நாளை பார்க்கலாம்.

    Next Story
    ×