என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

கவுரி அன்னையின் கருணை!
- பதினெட்டு வயதில் கவுரி உறவினர்களோடு கங்காசாகருக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டாள்.
- பதிமூன்று ஆண்டுகள் சாரதேஸ்வரி ஆசிரமம் வாடகை இடங்களில் இயங்கியது.
அப்போது பதிமூன்று வயதுதான் இருக்கும் கவுரிக்கு. ஆனால் தெளிவாகத் தன் தாயிடம் ஒரு வாக்கியத்தைச் சொன்னாள் அவள்.
அதைக்கேட்ட கவுரியின் தாய்க்கு உள்ளூற அச்சமும் கவலையும் எழுந்தன. காரணம் அந்த வாக்கியத்தைச் சொன்னபோது கவுரியின் சொற்களில் தென்பட்ட உறுதியும் கண்ணில் தென்பட்ட தீர்மானமும்.
அவள் சொன்னாள்: `நான் மரணமே இல்லாதவனைத்தான் மணப்பேன். செத்துப் போகிறவர்களை மணந்துகொள்ள மாட்டேன்!`
பகவான் கிருஷ்ணரே தன் கணவர் என்பதைப் பிஞ்சுமொழியில் அவள் சொன்ன விதம்தான் அது. மீராவின் வழிவந்த இன்னொரு கிருஷ்ண பக்தை அவள். பகவான் ராமகிருஷ்ணரிடம் மந்திரோபதேசம் பெற்று, பக்தியில் தோய்ந்து வாழ்ந்தவள்.
கவுரி சிறுவயதில் ஒரு யோகினியைச் சந்தித்தாள். கவுரியின் கிருஷ்ண பக்தியைப் பார்த்து வியந்த யோகினி, `தாமோதர் சிலா` என்னும் விஷ்ணு சாலிக்கிராமத்தை அவளிடம் கொடுத்தாள்.
`இந்த சாலிகிராமத்தில் உன் கணவர் கிருஷ்ணர் உயிரோடும் உணர்வோடும் உறைந்திருக்கிறார். உன்னை மிகவும் நேசிப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார். அதனால்தான் இவரை உன்னிடம் ஒப்படைக்கிறேன். இவரை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்!` - சொல்லிவிட்டு, அவளை ஆசீர்வாதம் செய்து, விடைபெற்றுச் சென்றுவிட்டாள்.
தன் வலது உள்ளங்கையில் வைத்து அந்த சாலிக்கிராமத்தையே பார்த்துக் கொண்டிருந்த கவுரியின் விழிகளில் பக்திக் கண்ணீர் பெருகியது. அவள் அந்த சாலிகிராமக் கிருஷ்ணரிடம் தன் வாழ்வை ஒப்படைத்துவிட்டாள்.
அதையே தாலியைப் போல் கழுத்தில் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டாள். நாள்தோறும் அதை பூஜித்து வரலானாள். வாழ்நாளில் ஒருநாள் கூட அவள் அந்தக் கிருஷ்ணரைப் பிரிந்ததே இல்லை........
ஹெளராவில், சிப்பூர் கிராமத்தில் 1857 இல், பார்வதி சரண் சட்டோபாத்யாயாவுக்கும் கிரிபாலா தேவிக்கும் மகளாகப் பிறந்தாள் கவுரி. கவுரிக்குச் சின்னஞ் சிறுவயதிலேயே அளவற்ற ஆன்மீக நாட்டம் இருந்தது.
ஒருமுறை தன் அண்ணனோடு கங்கையில் படகில் போய்க் கொண்டிருந்தாள் சிறுமி கவுரி. அப்போது, அவளுக்குத் தான் அணிந்திருந்த தங்க வளையலைப் பற்றிச் சிந்தனை எழுந்தது. தங்கம் அணியாவிட்டால்தான் என்ன?
வளையலைக் கழற்றிக் கடித்துப் பார்த்தாள்! தங்கம் ஒன்றும் தித்திக்கவில்லையே? பிறகு எதற்கு இது?
அண்ணனின் பதற்றத்தைப் பொருட்படுத்தாமல் தங்க வளையல்களைக் கங்கையில் வீசிவிட்டாள்!
இதற்காக உறவினர்கள் அவளைக் கடிந்துகொண்ட போது அவளுக்கு வியப்பாக இருந்தது. ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாத, இனிப்பாகக் கூட இல்லாத தங்கத்தை வீசி எறிந்ததற்கு ஏன் இத்தனை கோபம் எல்லோரிடமும்?!
1875 இல், பதினெட்டு வயதில் கவுரி உறவினர்களோடு கங்காசாகருக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டாள். அங்கே தங்கியிருந்த மூன்றாம் நாள், திடீரென்று யாத்ரீகர்களின் கூட்டத்தில் கலந்து மறைந்துவிட்டாள்.
அவளுக்கு உறவினர்களோடு வாழும் சராசரி வாழ்க்கை பிடிக்கவில்லை. பிறப்பால் நேர்ந்த அத்தனை உறவுகளையும் அப்போதே முற்றிலுமாகத் துறந்துவிட்டாள்.
கால்நடையாகவும் ரயிலிலும் இந்தியாவில் உள்ள பல ஆலயங்களுக்குச் சென்றாள். பல நாட்கள் உண்ணாமலே இருப்பது, பல நாட்கள் மவுனத்தில் ஆழ்ந்திருப்பது, நாள்முழுவதும் தியானத்தில் தோய்ந்திருப்பது என்று அவள் செய்த சாதனைகள் பலப்பல.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கவுரி ஆண் உடை தரித்துத்தான் இமாலயம் உள்ளிட்ட பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டாள். என்னை எந்த ஆணேனும் காமப் பார்வை பார்த்தால் அவனை என் காலடியில் போட்டு, ஒரு புழுவைப் போல் மிதித்துத் தேய்ப்பேன் என உறுமினாள்.
திருப்பூர் கிருஷ்ணன்
இயற்கையிலேயே பேரழகியான அவள் தன் அழகால் யாரும் தன்னை இம்சை செய்யக் கூடாது என்பதற்காக களிமண்ணையும் சாம்பலையும் முகத்தில் அள்ளிப் பூசிக்கொண்டு அழகை மறைத்து உலவினாள். எலும்புருவை வேண்டிப் பெற்ற காரைக்காலம்மையாரைப் போன்ற மனோபாவம் கெளரிக்கும் இருந்தது.....
கொல்கத்தாவில் 1882இல், பலராம்போஸ் என்ற பக்தர் இல்லத்தில் அவள் தன் கிருஷ்ண சாலிகிராமத்தை பூஜித்துக் கொண்டிருக்கும்போது அந்த விந்தை நிகழ்ந்தது.
என்ன இது! சாலிக்கிராமத்தின் தோற்றம் மறைந்து அங்கே இரு மனிதப் பாதங்கள் தென்படுகின்றனவே! கவுரி தன் விழிகளைத் தேய்த்து விட்டுக் கொண்டு மறுபடி மறுபடி பார்த்தாள். சந்தேகமே இல்லை. ஒளிவீசும் திருப்பாதங்கள். குளுமையான அந்தத் தூய பாதங்களைப் பரவசத்தோடு தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள். அவை யாருடையவை?
சில கணங்களில் காட்சி மறைந்து மீண்டும் சாலிகிராமமே கண்ணுக்குத் தென்பட்டது. தான் தரிசித்த திருப்பாதங்கள் யாருடையவை என கவுரியின் மனம் அலைபாய்ந்தது. அந்தப் பாதங்கள் தன்னைக் கயிறுகட்டித் தன்னிடத்தில் வா என்று இழுப்பதுபோல் தோன்றியது கவுரிக்கு.
பலராம்போஸ் அழைத்துச் செல்ல, பரமஹம்சரை முதல்முறையாக தரிசித்து அவர் பாதங்களில் விழுந்து வணங்கி நிமிர்ந்தபோது அவள் உள்மனம் ஆனந்தத்துடன் கூவியது. ஆ. அதே பாதங்கள். கவுரி அந்தப் பாதங்களைக் கிருஷ்ணரின் பாதங்கள் என்றே கண்டுகொண்டாள். குருதேவர் கையில் ஒரு நூல்கண்டை வைத்து அதில் நூலைச் சுற்றியவாறே கவுரியைப் பார்த்துக் குறும்புகலந்த புன்முறுவல் பூத்தார். உன்னைக் கயிறுகட்டி இழுத்தது நான்தான் என்பதை நூலைச் சுற்றுவதன் மூலம் தெரிவிக்கிறாரா?
அன்று முதல் அவள் பரமஹம்சரின் பக்தையாக மாறி சாரதாதேவியோடு அங்கேயே தங்கிவிட்டாள்.
`பகவானே! இளம் வயதிலேயே ஆன்மீக நாட்டத்தால் உறவுகளையெல்லாம் துண்டித்துக் கொண்ட நான், உங்களைச் சந்திக்க ஏன் இத்தனை கால தாமதமாயிற்று?` - பரமஹம்சரிடம் ஆதங்கத்தோடு வினவினாள்.
`நீ தன்னந்தனியே எத்தனை ஆன்மீகச் சாதனைகளைச் செய்து பக்குவப் பட்டிருக்கிறாய்? முன்னரே சந்தித்திருந்தால் இந்தச் சாதனைகளையெல்லாம் செய்திருப்பாயா?` - சிரித்துக்கொண்டே பரமஹம்சர் வினவியதும் கவுரியின் மனம் சமாதானமடைந்தது.
தட்சிணேஸ்வரத்தில் பரமஹம்சரிடம் தீட்சை பெற்ற பிறகு கவுரி சாரதாதேவியுடன் வசிக்கலானாள். பரமஹம்சருக்காக அவள் உணவு தயாரித்ததும் உண்டு.
பரமஹம்சர், `கவுரி ஒரு முழுமையான ஆன்மா. பிருந்தாவனத்தில் இருந்த ஒரு கோபிகை தான் அவள்!` என்று சொன்னதுண்டு.
பரமஹம்சர், ஓயாமல் திருத்தல யாத்திரை செல்லும் கவுரியை `போதும் இனி யாத்திரைகள்!` எனச் சொல்லி ஓரிடத்தில் தங்கவைத்தார். இந்தியப் பெண்களின் நிலையை உயர்த்தப் பாடுபடுமாறு அறிவுறுத்தினார். அறிவு, ஆன்மீகம் ஆகியவற்றில் பாரதப் பெண்கள் வளர்ச்சி அடையவேண்டும் என்பது பரமஹம்சரின் எண்ணம்.
தனக்கு அவற்றைப் பயிற்றுவிக்கத் தெரியாதே, சரியாகத் தான் கல்வி கற்றவள் அல்லவே என கவுரி தயங்கியபோது, `நீ களிமண்ணைக் குழை. நான் தண்ணீர் வார்க்கிறேன். நாம் விரும்பும் வகையில் இந்தியப் பெண்களை மாற்றி உருவாக்கிவிடுவோம்!` என்றார் ராமகிருஷ்ணர்.
குருதேவர் சொல்லைத் தட்ட முடியாத கவுரி பாரதப் பெண்களின் கல்விக்காகவும் ஆன்மீக முன்னேற்றத்திற்காகவும் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டாள். கவுரி அன்னை போன்ற ஆயிரம் அன்னைகள் வேண்டுமே நமக்கு என்று விவேகானந்தர் கவுரியைப் பாராட்டியிருக்கிறார்.
1895 இல், சாரதேஸ்வரி ஆசிரமத்தைத் தொடங்கினாள் கவுரி. அது உறைவிடப் பள்ளியாகச் செயல்பட்டது. திருமணமாகாத முதிர்கன்னிகள், திருமணமாகிக் கைவிடப்பட்டவர்கள், கைம்பெண்கள் என அங்கே பலதரப்பட்டவர்கள் சேர்ந்து பயனடைந்தார்கள்.
1911இல் சாரதேஸ்வரி ஆசிரமம் கொல்கத்தாவுக்கு இடம்பெயர்ந்தது. சாரதாதேவி அடிக்கடி அங்கு வருகை தந்தார். சிறு வயதிலேயே உறவுகளைத் துறந்த கவுரி, ஆதரவற்ற பாரதப் பெண்சமூகத்தையே உறவாகக் கொண்டு வாழ்ந்த புனித வாழ்வு, சாரதாதேவியால் வியந்து பாராட்டப்பட்டிருக்கிறது.
பதிமூன்று ஆண்டுகள் சாரதேஸ்வரி ஆசிரமம் வாடகை இடங்களில் இயங்கியது. அங்கு வந்துசேர்வோர் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அதற்குத் தகுந்தாற்போல் ஆசிரமமும் வெவ்வேறு இடங்களில் இயங்க நேர்ந்தது.
1924 இல் போதுமான நிதி கிடைத்தபின்னர் அது சொந்தமாக ஒரு மூன்று மாடிக் கட்டிடத்தைப் பெற்று அதில் இயங்கலாயிற்று.
பெண்கல்வியின் முக்கியத்துவத்தை கவுரி அன்னை உணர்ந்திருந்தாள். தியாகசீலர்களாக வாழும் பெண்மணிகளைத் தேடிப் பிடித்துத் தன் ஆசிரமத்தில் ஆசிரியைகளாக நியமித்தாள். சுதேசி இயக்கம் தொடங்குவதற்கு முன்பாகவே கைத்தறித் தொழிலைத் தன் ஆசிரமத்தில் நிறுவிய முன்னோடி கவுரிஅன்னை.......
ஒருமுறை ஒருபெண் கங்கையில் விழுந்து விட்டாள். ஆண்கள் கூட்டமொன்று அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
`முட்டாள்களே! விழுந்த பெண் தத்தளிப்பதை வேடிக்கையா பார்க்கிறீர்கள்?` என்று சீற்றத்துடன் கர்ஜித்த கவுரி அன்னை, ஜெய் காளி என்றவாறே கங்கையில் குதித்து விட்டாள். ஆனால் கவுரி அன்னைக்கு நீச்சல் தெரியாது!
கவுரி அன்னையும் தத்தளிப்பதைப் பார்த்துச் சில ஆண்கள் பாய்ந்து சென்று குதித்து கங்கையின் நீர்ப்பெருக்கிலிருந்து இரு பெண்மணிகளையும் காப்பாற்றினார்கள். கவுரி அன்னையின் கருணை என்பது எல்லை கடந்தது. 1938 பிப்ரவரி 28 சிவராத்திரி தினத்தன்று, கவுரிஅன்னை சொன்னாள். `சிஷ்யை மேல் கொண்ட பாசம் என்னும் கயிறு கொண்டு என்னை குருதேவர் முன்னர் இழுத்தார். ஸித்தி அடைந்த அதே குருதேவர் இப்போதும் தம் பாசக் கயிற்றால் என்னை இழுக்கிறார்! இன்று நாம் குருதேவரைப் பற்றி மட்டுமே பேசுவோம். வேறெதுவும் பேச வேண்டாம்."
மார்ச் ஒன்றாம் தேதி காலை கவுரி அன்னை, தாம் வைத்திருந்த விஷ்ணு சாலிக்கிராமத்தைத் தன் மேல் அன்பு செலுத்திய துர்க்காதேவியிடம் ஒப்படைத்தாள்.
கவுரி அன்னையின் ஆன்மா, அன்றிரவு 8:15 மணிக்கு குருதேவரின் அமரத்துவம் வாய்ந்த திருப்பாதங்களில் கலந்தது.
மறுநாள் கவுரி அன்னையின் உடல், குருதேவரின் உடல் எரியூட்டப்பட்ட அதே காசிப்–பூர் மயான பூமியில் தகனம் செய்யப்பட்டது.
`எந்த உறவும் நிலையல்ல, இறைவனுடனான பக்தியுறவு மட்டுமே நிலையானது!` என்ற உண்மையை அந்த உடலிலிருந்து எழுந்த பொன்னிற நெருப்பு, சடசடவென்ற ஒலியுடன், உலகிற்குப் பிரகடனம் செய்தது.
தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com






