என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ரஜினியின் ரகசிய ஆன்மீகம்- 3 நாட்கள் கண் மூடி கிடந்த ரஜினி!
- சபரிமலைக்கு அழைத்துச் சென்ற குருசாமி என்பதால் ரஜினி அவர் அருகில் அமர்ந்ததும் அமைதியானார்.
- ரஜினிக்கு ஆழ்ந்த தூக்கத்துக்கான மருந்துகள் கொடுக்கப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் ரஜினி தகராறு செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. விமானத்துக்குள் ஏற்றப்பட்ட பிறகும் ரஜினியை கட்டுப்படுத்துவது நடிகர்-நடிகைகளுக்கு மிகவும் சவாலாக இருந்தது. ரஜினி ஒருவித பதட்டத்துடன் இருப்பதை கண்டு நடிகர்கள் வித்தியாசமாகப் பார்த்தனர்.
சிறிது நேரம் ரஜினி அமைதியாக இருப்பார். எங்கேயோ பார்த்துக் கொண்டு எதையோ சிந்தித்துக் கொண்டே இருப்பார். அவர் என்ன சிந்திக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. அடுத்த சில நிமிடங்களில் ஆக்ரோஷம் வந்தது போல சத்தம் போட ஆரம்பித்து விடுவார்.
இதனால் ரஜினி அருகில் செல்ல நடிகர்-நடிகைகள் அனைவரும் பயப்பட்டனர். அந்த சமயத்தில் நம்பியார் மட்டும் துணிச்சலாக முன் வந்து ரஜினியை அழைத்து தனது பக்கத்து இருக்கையில் உட்கார வைத்துக் கொண்டார். சபரிமலைக்கு அழைத்துச் சென்ற குருசாமி என்பதால் ரஜினி அவர் அருகில் அமர்ந்ததும் அமைதியானார்.
அதன் பிறகு சென்னை வரும் வரை ரஜினி எந்த தொந்தரவும் யாருக்கும் செய்யவில்லை. சென்னையில் விமானம் தரை இறங்கியதும் நடிகர்-நடிகைகள் யாரும் அவரை அப்படியே விட்டு விட்டுச் சென்று விடவில்லை. மருத்துவமனையில் ரஜினியை அனுமதிக்க முடிவு செய்தனர்.
நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்த மேஜர் சுந்தரராஜன், நம்பியார், பாலாஜி, நாகேஷ் ஆகிய 4 பேரும் கூடி ஆலோசனை செய்தனர். விமான நிலையத்தில் இருந்து தங்களது காரில் வடபழனியில் உள்ள விஜயா நர்சிங் ேஹாம் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல தீர்மானித்தனர்.
அதன்படி ரஜினி நேரடியாக விஜயா நர்சிங் ேஹாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர் செரியன் தலைமையிலான டாக்டர்கள் குழு பரிசோதனை செய்தது. பல்வேறு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டன. பிறகு ரஜினிக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை டாக்டர்கள் விளக்கி கூறினார்கள். "மேனியாக் டிப்ரெசிவ் சைக்கோசிஸ்" என்று அழைக்கப்படும் மிகப்பெரிய நரம்பு தளர்ச்சி நோயால் ரஜினி பாதிக்கப்பட்டு இருப்பதாக டாக்டர்கள் கூறினார்கள்.
ஓய்வு எடுக்காமல், தூக்கமே இல்லாமல் வேலை செய்பவர்களுக்கு இத்தகைய நரம்பு தளர்ச்சி ஏற்படும். இதனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரியாமலேயே நடந்துக் கொள்ளச் செய்து விடும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதை கேட்டதும் மேஜர் சுந்தரராஜன், நம்பியார், பாலாஜி, நாகேஷ் ஆகிய 4 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர். அதற்கு டாக்டர்கள், "நல்ல வேளை சரியான நேரத்தில் இவரை அழைத்து வந்தீர்கள். இன்னும் 10 நாட்கள் நீங்கள் இவரை இப்படியே வைத்து இருந்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்.
அவர் 72 மணி நேரம் (3 நாட்கள்) மருத்துவமனையில் படுக்கையில் தூங்க வேண்டும். 3 நாட்கள் அவர் தூங்கி எழுந்தால்தான் அவருக்கு அடுத்தக் கட்ட சிகிச்சையை நாங்கள் தொடர முடியும்" என்றனர். அதற்கு நடிகர்கள் 4 பேரும் சம்மதித்து சிகிச்சையை தொடருமாறு தெரிவித்தனர்.
இதற்கிடையே ரஜினி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பெங்களூரில் உள்ள அவரது சகோதரர் சத்திய நாராயணா மற்றும் நண்பர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பெங்களூரில் இருந்து சென்னைக்கு விரைந்து வந்தனர்.
ஆஸ்பத்திரியில் இருந்த 3 நாட்களும் அவரை மூத்த சகோதரர் சத்திய நாராயணா, நண்பர் முரளி, அவரது உதவியாளர் கிரி ஆகியோர் கவனித்துக் கொண்டனர். இந்த நிலையில் ரஜினி உடல்நலம் பற்றி பத்திரிகைகளில் வெளியான பலவிதமான மாறுபட்ட தகவல்களை பார்த்து விட்டு விஜயா நர்சிங் ஹோம் முன்பு நூற்றுக்கணக்கான ரஜினி ரசிகர்கள் திரண்டு விட்டனர். அவர்களை சமாளிப்பது போலீஸ்காரர்களுக்கும், நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும் மிகவும் சவாலாக இருந்தது.
இந்த நிலையில் ரஜினிக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை மேஜர் சுந்தரராஜன் நிருபர்களிடம் விளக்கி கூறினார். அவர் கூறுகையில், "கடந்த சில மாதங்களாக ரஜினி காந்த் சரியான தூக்க மின்றி இரவு-பகலாக நடித்து வருகிறார். கடந்த ஒரு வருட காலமாகவே அவருக்கு ஓய்வு இல்லை, தூக்கம் இல்லாததால் அவர் உடல் நிலையும், மன நிலையும் பாதிக்கப்பட்டு இருப்பதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். அவர் 72 மணி நேரம் (3 நாள்) தொடர்ந்து தூங்க வேண்டும் என்றும், அதன் பிறகுதான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள்" என்றார்.
ரஜினிகாந்த் நடித்த "ப்ரியா" படத்தின் கதாசிரியரான பிரபல எழுத்தாளர் சுஜாதா கூறியதாவது:-
"ப்ரியா" படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் எனக்குப் பழக்கமானார். அப்போது அவர் உச்சியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார். இருந்தும் என்னை விமானத்திலோ, படப்பிடிப்பிலோ சந்தித்தால் தனியாக மதிப்புக் கொடுத்துப் பேசிக் கொண்டிருப்பார். நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பார்.
ரஜினிகாந்துக்கு தற்காலிக "நெர்வ்ஸ் பிரேக் டவுன்" (நரம்பு மண்டல பாதிப்பு) ஏற்பட்ட காரணங்களை, அப்போதே என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.
பெங்களூரில் இரவு எட்டரை மணிக்குப் பாலச்சந்தர் படத்தின் படப்பிடிப்பில் (தப்புத் தாளங்கள் என்று நினைக்கிறேன்) சைக்கிள் செயின் சுழற்றிக் கொண்டிருக்கிறார். 8.45 மணிக்கு, பெங்களூரில் விமானம் ஏறி, சென்னை போய், அங்கே சூட்டிங் முடித்து விட்டு பிறகு ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மற்றொரு பிளேன் பிடித்து சிங்கப்பூர் போய், அதிகாலையில் அங்கே 'ப்ரியா' சூட்டிங்கில் கலந்து கொண்டார். மூன்று நாள் கழித்துத் திரும்பிப் பெங்களூர் வந்து சைக்கிள் செயின் சுழற்றி விட்டு மறுபடி சிங்கப்பூர்! இந்த மாதிரி அலைந்தால் ஒரு திபேத்திய லாமாவுக்குக்கூட "நெர்வ்ஸ் ப்ரேக் டவுன்" வந்து விடும்.
இவ்வாறு சுஜாதா கூறினார்.
ரஜினியின் திரையுலக முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகித்த பஞ்சு அருணாசலம் கூறியதாவது:-
"உடல் நலம் சரி இல்லாதபோதும், படப்பிடிப்பை ரத்து செய்யாமல் நடித்தவர் ரஜினி. இதற்காக அவரை நான் கடிந்து கொண்டது உண்டு. அப்போதெல்லாம், "சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற வேண்டாமா சார்! தூக்கம் என்ன வேண்டிக் கிடக்கிறது!" என்பார்.
தயாரிப்பாளர்கள், டைரக்டர்களின் மனதை வருத்தக்கூடாதே என்று தன் உடலை வருத்திக்கொண்டார். ஓய்வே இல்லாமல் நடித்ததால்தான் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவரைப்போல் பரபரப்பான சுறுசுறுப்பான நடிகரைப் பார்ப்பது அபூர்வம்."
இவ்வாறு பஞ்சு அருணாசலம் கூறினார்.
திரை உலக பிரமுகர்களின் இந்த கருத்துக்கள், விஜயா நர்சிங் ஹோம் டாக்டர்கள் சொன்னதை நூற்றுக்கு நூறு உறுதி செய்தது. எனவே ரஜினி 3 நாட்கள் ஓய்வெடுத்து நன்றாக உடல் நலம் தேறி வரட்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.
ஆனால் 3-வது நாள் ரஜினி தூங்கவில்லை. அவரிடம் பிடிவாதமும், பதட்டமும் நீடித்தப்படி இருந்தது. அவர் தூங்கி எழுந்தால்தான் சிகிச்சை அளிக்க முடியும் என்பதால் டாக்டர்கள் திணறினார்கள். இதையடுத்து ரஜினிக்கு ஆழ்ந்த தூக்கத்துக்கான மருந்துகள் கொடுக்கப்பட்டது.
அதையும் மீறி ரஜினி ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தார். இதையடுத்து டைரக்டர் பாலச்சந்தர் மருத்துவமனைக்கு வந்தார். அவர் ரஜினியிடம் நன்றாக தூங்கு. நீ தூங்கினால்தான் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க முடியும் என்றார். இதனால் 3-வது நாள் ரஜினி ஓரளவு தூங்க ஆரம்பித்தார். அந்த சமயத்திலும் அவரது கால்ஷீட்டுக்காக 10-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் காத்து கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகில் ரஜினியின் உடல்நலம் பற்றி மாறுபட்ட தகவல்கள் பரவின.
அவரது ஆதரவாளர்கள் ரஜினி விரைவில் குணம் அடைந்து விடுவார் என்றனர். எதிரிகள் ரஜினி கதை முடிந்தது. இனி மீண்டும் அவர் பெங்களூருக்கு கண்டக்டர் வேலைப் பார்க்க போக வேண்டியதுதான் என்று ஏளனம் செய்தனர். ஆனால் ராகவேந்திரரின் கருணை வேறு விதமாக இருந்தது. 3-வது நாள் இரவு ஓரளவு தூங்கி கண் விழித்த ரஜினி மீண்டும் சத்தம் போடத் தொடங்கினார். அம்மா... அம்மா... என்று திருப்பி... திருப்பி... ஒரே வார்த்தையை சொல்லிக் கொண்டு இருந்தார். அவரது பார்வையிலும், நடவடிக்கைகளிலும் உக்கிரம் ஏற்பட்டு இருந்தது.
அப்போது டாக்டர் செரியன் நிதானமாக ரஜினியிடம் பேசினார். "சரி... சார்... அம்மாவை அழைத்து வந்து விடலாம். ஆனால் நீங்கள் சொல்லும் அந்த அம்மா யார் என்றே எங்களுக்குத் தெரியவில்லையே" என்றார்.
அதற்கு ரஜினி, "ரெஜினாம்மா.... ரெஜினாம்மா..." என்றார். உடனே டாக்டர், "சரி அந்த அம்மாவின் அட்ரஸ், போன் நெம்பர் சொல்லுங்கள். அழைத்து வருகிறோம்" என்றார். அதற்கு ரஜினி, "ரெஜினாம்மா ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் இருக்காங்க. மதர் தெரசா கம்யூனிட்டி அமைப்பில் அவங்க சமூக சேவை செய்துகிட்டு இருக்காங்க. அவரது கணவர் கிராம்டன் கம்பெனியில் வேலை செய்கிறார். இது போதுமா?" என்றார்.
டாக்டர்களும், "இது போதும். நாங்கள் அவரை அழைத்து வருகிறோம். அமைதியாக இருங்கள்" என்றனர். ஆனால் ரஜினி அமைதி யாகவில்லை. அம்மாவை பார்க்க வேண்டும்.
உடனே அழைத்து வாருங்கள்" என்று சொல்லிக் கொண்டே இருந்தார். இதையடுத்து டாக்டர்கள் அந்த அம்மாவை அழைத்து வர ஆள் அனுப்பினார்கள். ரஜினி அழைத்து வரச்சொன்ன அந்த ரெஜினாம்மா யார் என்பதை நாளை பார்க்கலாம்.






