என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறதி"

    • வீட்டைவிட்டுக் கிளம்பி வாசலுக்கு வந்தவுடனேயே நாம் எதற்காக வெளியே வந்துள்ளோம் என்பதுகூடச் சிலருக்கு மறந்து போகிறது.
    • மறதி என்பது பலருக்கு நோய்போலப் பேசப்படுகிறது.

    'மறதி' மனிதர்க்கு வரமா? சாபமா? என்பதை அறிந்துகொள்வதற்கு ஆவலாய்க் காத்திருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

    அன்றாடம் நொடிகள்தோறும் நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு நிகழ்வும், அல்லது ஒவ்வொரு அனுபவமும் நமது மூளையில் சேமித்து வைக்கப்படுகின்றன. சேமித்து வைக்கப்படும் தகவல்கள் நினைவுகளாக மாற்றப்பட்டு, நாம் நினைக்கும்போது, மறந்துபோகாமல் நினைவில் வந்து தோன்ற வேண்டும். அவ்வாறு அவை தோன்றாமல், மறைந்துபோக நேரிட்டால் அது 'மறதி' என்று ஆகிவிடும். வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும் மூளை சேமித்து வைக்கக் கூடிய ஆற்றல் உடையதுதான். என்றாலும், ஒவ்வொன்றையும் மறந்துபோகாமல் நினைவில் வைத்திருந்தால் அது வீண் குழப்பங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் நம்மை ஆளாக்கி விடும். அந்த வகையில் மறதியை ஒரு மாபெரும் வரப்பிரசாதம் என்று குறிப்பிடுவர். ஆனால் மறக்கக் கூடாததையும் சேர்த்து மறந்துவிட்டால், பிறகு நாம் நன்றிகெட்டவர்கள் ஆகி விடுவோம். அதனால்தான் திருவள்ளுவர், வாழ்க்கையில் சிலவற்றை நெடுநாட்களுக்கு நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றும், சிலவற்றை உடனே மறந்துவிட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

    "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

    அன்றே மறப்பது நன்று"

    பிறர் நமக்குச் செய்த உதவிகளையும் நன்மைகளையும் மறக்காமல் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்; பிறர் நமக்குச் செய்த தீமைகளையும் கெடுதல்களையும் கால தாமதப்படுத்தாமல் அப்போதே மறந்து விடுவது நல்லது என்கிறது வள்ளுவம். ஆனால் இன்று இதை அப்படியே தலைகீழாகத் திருப்பிப் போட்டுக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறோம். அடுத்தவர் செய்த நன்மைகளை உடனே மறந்துபோய் செய்ந்நன்றி கொன்றவர்களாக வாழ்கிறோம்; அடுத்தவர் செய்த தீமைகளை எப்போதும் நெஞ்சில் சுமந்துகொண்டு பழிவாங்கும் பாதகர்களாக அலைந்து கொண்டிருக்கிறோம்.

    அடுத்தவர்கள் நமக்குச் செய்யும் கொடுமைகளை உடனே மறந்துபோவதன் மூலமாக, நம் மனம் துன்பமில்லாத மனமாகத், தெளிந்த பளிங்குபோலக் குழப்பமின்றி எப்போதும் தெளிவாகவும் அமைதியாகவும் இருக்கும். அடுத்தவர் செய்த நன்மைகளை நினைத்துப் பார்க்க நினைத்துப் பார்க்க, நம்முடைய மனமும் எப்போதும் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதிலேயே அக்கறையாய் இருக்கும்.

    மறதி என்பது பலருக்கு நோய்போலப் பேசப்படுகிறது. வீட்டைவிட்டுக் கிளம்பி வாசலுக்கு வந்தவுடனேயே நாம் எதற்காக வெளியே வந்துள்ளோம் என்பதுகூடச் சிலருக்கு மறந்து போகிறது. சரியான உடற் பயிற்சியின்மை, மனப் பயிற்சியினமை, போதிய உறக்கமின்மை, சத்தான ஆகாரமின்மை போன்ற குறைபாடுகள் மறதி நோய் வருவதற்கு மருத்துவக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. 'மறதி' யுடையவர்கள் வாழ்க்கையில் விரைவில் கெட்டழிவார்கள் என்று திருவள்ளுவர் எச்சரிக்கவும் செய்கிறார்.

    "நெடுநீர் மறவி மடி துயில் நான்கும்

    கெடுநீரார் காமக் கலன்"

    எந்தச் செயலையும் உடனே செய்யாமல் காலம் தாழ்த்தித் தள்ளிப்போடுவது (நெடுநீர்), மறந்து போவது (மறதி), சோம்பல்(மடி), அளவுகடந்த தூக்கம் (துயில்) ஆகிய நான்கும் விரைவில் கெட்டுப்போகிறவர்கள் விரும்பிக் கட்டி ஏறுகிற வாகனங்கள் ஆகும் என்கிறார் திருவள்ளுவர். எனவே மறந்து போகாமல் நினைவுகளை மூளையில் சேமித்து வைப்பது எப்படி?.

    நம்முடைய அனுபவங்களையும், நாம் சந்திக்கும் சம்பவங்களையும் தகவல்களாக நாம் நமது மூளைக்கு அனுப்புகிறோம்; அந்தத் தகவல்களை மூளை, நினைவுகளாக மாற்றி நமது மூளையில் சேமித்து வைத்துக் கொள்கிறது. தேவைப்படும் நிகழ் தருணங்களில், தேவையான விஷயங்களை மறப்பின்றி நினைப்பூட்டிப் பொருத்தமாக, நம் செயலுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கின்றன. நம் மூளைக்குச் செல்லுகின்ற எல்லாத் தகவல்களும் நினைவுகளாக நிலைத்துத் தங்குவதில்லை; எந்த அனுபவம் அல்லது சம்பவம் முக்கியமானவையாக அல்லது மதிப்புடையனவாக இருக்கிறதோ அது மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் நினைவில் சென்று அமர்ந்து கொள்ளும்; அந்தத் தகவல் இனிமையானதோ அல்லது கசப்பானதோ எதுவாக இருந்தாலும் நாம்தரும் முக்கியத்துவத்தைப் பொறுத்து அழியாத நினைவுகளாக அவை உருமாறிக் கொள்கின்றன.

    ஒரு செய்தி அல்லது தகவலின் மீது நாம் செலுத்தும் அக்கறையைப் பொறுத்தே அது அழியாத நினைவாக நம் மூளையில் மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அக்கறை காட்டாத எந்த அனுபவமும், கண்ணோடு வந்து இமையோடு கரைவது போலவும், காதோடு வந்து காதோடு கடப்பது போலவும் காணாமல் போய்விடும். மாணவர்களைப் பொறுத்த வரை கற்றல் திறனில் மறதி என்பது கூடாத தீய சக்தியாகவே பார்க்கப்படுகிறது. எவ்வளவுதான் பலதடவை மனப் பாடம் செய்தாலும், பரீட்சை அரங்குக்குள் நுழைந்தவுடன் சுத்தமாகக் கழுவி விட்டதுபோல அனைத்தும் மறந்துவிடுகிறதே! ஏன்? என்று பல மாணவர்கள் அனுபவக் கேள்வியோடு வந்து நிற்கிறார்கள். எல்லாப்பாடமும் புரிகிறது!; கணக்குப் பாடம் மட்டும் காததூரம் தள்ளி நிற்கிறதே! ஏன்? என்று சிலர் கணக்காகக் கேட்கிறார்கள். போன வாரம் ரயிலில் சந்தித்து உரையாடிய நபரை இந்த வாரம் பார்த்தவுடன் சட்டென்று பெயர்கூட நினைவில் வர மறுக்கிறதே! ஏன்? என்று சிலர் தனது ஞாபகப் பிசகைக் கேள்வியாகக் கேட்கிறார்கள்.

    இவர்களுக்கெல்லாம் ஒரே ஒரு பதில்தான். எதையும் விருப்பத்தோடும் ஆர்வத்தோடும் அக்கறையோடும் செய்தால் அது நிச்சயம் நினைவை விட்டு அகலவே அகலாது. மாணவர்கள் எந்த வகையிலாவது தங்களுக்கும் படிக்கும் பாடத்திற்குமுள்ள தூரத்தை குறைத்து அந்நியோன்யப் படுத்திக்கொள்ள வேண்டும். கற்பிக்கும் ஆசிரியரோடு அன்பின் நெருக்கத்தை உருவாக்கிக் கொண்டால், அந்தப் பாடம் வெல்லக் கட்டியாய் இனிக்கும்; ஆசிரியர் மீது மரியாதை, கற்கும் பாடத்தின்மீது மதிப்பு, கல்வியின்மீது அக்கறை இவை ஒன்றுகூடிவிட்டால் புரிகிறவரை கற்க வேண்டும் என்கிற ஆர்வம் பெருகும்; பெருகிய ஆர்வத்தில் புரிந்து படித்தால் அந்தப் பாடம் அதன்பிறகு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்கவே மறக்காது. அதைப் போல நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர் மீதும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலின்மீதும் ஆர்வத்தோடும் அக்கறையோடும் இருந்தால் எல்லாமே நினைவுச் சேமிப்பில் கல்லில் எழுத்தாய் நிலைத்து நிற்கும்.

    ஓர் அலுவலகத்தில் ஓர் எழுத்தர் பணிபுரிந்து வந்தார்; அவரிடம் எப்போதும் ஒரு மாறாத பழக்கம் இருந்தது. அலுவலகம் சென்றாலும், வங்கிக்குச் சென்றாலும் அஞ்சல் நிலையம், ரயில் நிலையம் என்று எங்குச் சென்றாலும் தன்னுடைய பேனாவைப் போகிற இடத்தில் மறந்து வைத்துவிட்டு வந்துவிடுவார். அதனால் எப்போதும் அவரது சட்டைப் பை, கால்சட்டைப் பை, ஜோல்னாப் பை என்று எல்லாவற்றிலும் இரண்டிரண்டு பேனாக்கள் இருக்கும். ஆனாலும் மாலையில் வீடு திரும்பும்போது அவரிடத்தில் ஒரு பேனாவும் இருக்காது.

    சுந்தர ஆவுடையப்பன்


     

    ஒருநாள் மனநல மருத்துவரிடம் சென்று, தான் அன்றாடம் பேனாவை மறந்து விட்டு வருவதை நிறுத்த ஒரு மார்க்கம் சொல்லுங்கள்; அல்லது ஏதாவது மருந்தாவது கொடுங்கள்! என்று பாவமாகக் கேட்டார். மருத்துவர் அவரிடம் இதுவரை என்ன மாதிரிப் பேனாக்களை உபயோகிக்கிறீர்கள்? என்று கேட்டுவிட்டு, "இனிமேல் ஒரே பேனாவை உபயோகியுங்கள்!; அதுவும் விலை உயர்ந்த பேனாவாக இருக்கட்டும்!; தங்கத்தால் செய்யப்பட்ட பேனாவாக இருந்தால் இன்னும் சிறப்பு!. வாங்கிப் பயன்படுத்திப் பாருங்கள்; ஒரு மூன்று மாதம் கழித்து வாருங்கள்!" என்று சொல்லி அனுப்பினார் மனநல மருத்துவர்.

    எழுத்தர் 22 காரட் தங்கத்தாலான பேனாவை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினார். மூன்றுமாதம் கழித்து மருத்துவரைக் காணச் சென்றார். " என்ன ஆயிற்று? இப்போதும் பேனாக்களை மறந்து வைத்துவிட்டு வந்து விடுகிறீர்களா? பேனாக்கள் தொலைகின்றனவா?" கேட்டார் மருத்துவர். " அதெப்படித் தொலையும்? இப்போது நான் பயன்படுத்துவது விலை உயர்ந்த தங்கப் பேனா ஆயிற்றே!; கவனமாகக் கையாளுகிறேன்; யாரிடம் எழுதக் கொடுத்தாலும் மறக்காமல் கையோடு கேட்டுவாங்கிப் பையோடு வைத்துக்கொள்கிறேன்!. தங்கப் பேனா மந்திரத்தின்மூலம் என் பேனாமறதியை நிறுத்தியதற்கு மிக்க நன்றி!" என்றார் எழுத்தர்.. "அதில் எந்த மந்திரமும் இல்லை!; மனித மூளைக்கு ஒரு குணம் உண்டு; அது எதை மதிப்புமிக்கதாகக் கருதுகிறதோ அதை மறக்கவே மறக்காது!" என்றார் மனநல மருத்துவர்.

    நமது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களையும் மதிப்புமிக்க தருணங்களாக ஆக்கிக் கொண்டு மதிப்போடு வாழக் கற்றுக்கொண்டால், மறதியில்லாமல் வெற்றிகாணலாம். வாழ்வின்மீது அக்கறையும் ஆர்வமும் கொண்டு வாழ்பவர்களின் வாழ்வு அவர்களுக்கு மட்டுமல்ல; மற்ற எல்லாருக்கும் நினைவில் நிற்கும் வாழ்வாகப் பளிச்சிடும். எல்லாமே ஓர் எல்லைக்குள் இருக்க வேண்டும். அளவுக்குமீறிய மிதமிஞ்சிய மகிழ்ச்சி மயக்கத்தில் மனிதனுக்கு மறதிநோய் ஏற்படுவதாகத் திருவள்ளுவர் கூறுகிறார். இதற்காக, மனிதனுக்கு மறதி கூடாது! என்பதை வலியுறுத்திக் கூறுவதற்காகவே 'பொச்சாவாமை' என்கிற அதிகாரத்தையும் படைத்திருக்கிறார்.

    "இறந்த வெகுளியின் தீதே சிறந்த

    உவகை மகிழ்ச்சியிற் சோர்வு"

    கோபம், கொண்டவரையும் கொல்லும் கொடுமை வாய்ந்தது; அது அளவு கடந்து வந்தால் இன்னும் கடுமையான கொடுமையானதாக இருக்கும். அந்தக் கோபத்தைவிடத் தீமையானது அளவுக்கு மீறிய மகிழ்ச்சி மயக்கத்தில், அடுத்தவர் செய்த நன்மைகளை மறந்துவிடுவதாகும் என்கிறார் வள்ளுவர்.

    மறதி நம்மைத் தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளித், தோல்வி நிலைக்குள் எளிதாகப் புகுத்திவிடும். மறதி ஓர் நோயாக வயதானவர்களுக்கு வரும் என்பதை நம்பி விடாதீர்கள். முறையான உடற்பயிற்சிகள் மூலம் நமது உடலை எப்போதும் இயங்கு நிலையில் வைத்திருந்தால், உடல் எப்போதும் விழிப்புணர்வோடு செயல்படும்; அதே போல மனத்தையும் தனிமையில் தள்ளிவிடாமல், ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடச் செய்து வந்தால் மனமும் எப்போதும் கூர்மையாக இருக்கும். குறுக்கெழுத்துப்போட்டியில் ஈடுபடுவது, மூளைக்கு வேலைகொடுக்கும் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவது, நல்ல இசையை ரசிப்பது, பழைய அல்லது பக்திக் கவிதைகளை மனப்பாடம் செய்து, திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்ப்பது போன்றவை மனம் பழக்கும் மகத்துவச் செயல்களாகும். ஒரு வேலையில் ஈடுபட்டால் அதில் மட்டுமே கவனம் செலுத்துவது; ஒரு சிந்தனையில் ஈடுபட்டால் பிற சிந்தனைகளைத் தவிர்த்து அதைமட்டுமே கூர்ந்து சிந்திப்பது ஆகியவை நமது நினைவுகளைச் செழுமைப்படுத்தும். போதிய தூக்கம், தேவையான உணவு, அமைதியான மனநிலை ஆகியவை நமது நினைவுகளை ஒருங்கிணைத்து, மறதிகளே இல்லாமல் செய்துவிடும்.

    தொடர்புக்கு 944319098

    • பாதாம் இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, நினைவாற்றலை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
    • பால் வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது.

    பொதுவாக குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை விரும்பி சாப்பிடுவதில்லை, அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளின் ஊட்டச்சத்து குறைவாகவே காணப்படுகிறது. எனவே குழந்தைகளின் நலனில் அக்கறை எடுத்து, வயதிற்கேற்ற உடல் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுக்கவேண்டும்.

    எல்லா குழந்தைகளும் விளையாட்டுத்தனமாகதான் இருக்கும், எனவே நல்ல ஊட்டச்சத்துள்ள உணவை, அவர்களுடன் விளையாடிக்கொண்டே ஊட்ட முயற்சிப்பது மிக சிறந்த வழியாகும். குறைந்தது 1 மணி நேரமாவது உணவு தர செலவிடவேண்டும்.

    எதை விரும்புகிறார்கள் என்பதை நன்கு அறிந்து, அவர்களுடன் குழந்தைகளை சாப்பிடவைப்பது என்பது சற்று கடினமான விஷயம் என்றாலும், விடாமுயற்சியால் அவற்றை இலகுவாக்க முயற்சிக்கவேண்டும்.


    தற்போது உணவிலும் ரசாயன கலவை இருப்பதால், எதிர்பார்க்கும் அளவிற்கு ஊட்டச்சத்துள்ள பொருட்கள் நமக்கு கிடைப்பதில்லை. இருப்பினும் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க எவ்வகையான உணவு கொடுக்கலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

    வால்நட் பொதுவாக குழந்தைகளுக்கு மூளை செயல்பாடு எப்போதும் சுறுசுறுப்பாக தான் இருக்கும்.சில முக்கியமான உணவுகள் மூளையின் போதுமான வளர்ச்சிக்கு மேலும் உதவுகிறது.வளரும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க இந்த வகையான உணவுகள் சேர்த்துக்கொள்ளுங்கள். யதேர்ச்சையாக மூளையைப் போன்றே தோற்றமளிக்கும் வால்நட் மூளை வளர்ச்சிக்கும் உகந்ததாக உள்ளது. நுங்கு சாப்பிடுவது மார்பகத்திற்கு நல்லது என்ற சித்த மருத்துவர் கருத்து மாதிரி இல்லை இது. பல முன்னணி ஆங்கில இதழ்களில் வெளியான தகவல்தான் வால்நட்டின் நன்மைகள். வால்நட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் குழந்தைகளுக்கு மூளை அல்சைமர் நோய்களைத் வராமல் தடுக்கிறது. தினமும் 3-5 வால்நட் கொடுத்தாலே போதுமானது.

    பாதாம் இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, நினைவாற்றலை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. பாதாமை காலை அல்லது மாலையில் கொடுக்கலாம், இரவில் கொடுக்கக்கூடாது இரவில் கொடுப்பது செரிமான கோளாறு ஏற்படலாம்.தினமும் 5 முதல் 10 பாதாம் வரை கொடுக்கவேண்டும்,அதிக அளவு வயிற்றுப்போக்கு உண்டாக்கும்.

    முட்டை இதில் ஒமேகா 3 கொலஸ்ட்ரால் அமிலங்கள் மற்றும் கொலின் ஊட்டச்சத்து உள்ளது,தினமும் ஒரு 1 வேகவைத்த முட்டையை கொடுங்கள், 1 அல்லது 2 முட்டை கொடுக்கலாம், குழந்தைகள் ஆக்டிவ்வாக, சுறுசுறுப்பாக இருக்க உதவும்,மேலும் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும்


    மீன் வைட்டமின் டி மற்றும் பி12 கால்சியம், பாஸ்பர் நிறைந்துள்ளன, எனவே இது ஆரோக்கியமான மூளை செயல்பாடுகளுக்கு நல்லது மற்றும் நினைவக சக்தியை அதிகரிக்கிறது.எந்த வகையான மீனாக இருந்தாலும் கொடுக்கலாம்,ஆனால் முள் அதிக அளவு உள்ள மீனை கட்லெட்,புட்டு போன்ற ஸ்னாக்ஸ் முறையில் கொடுத்தால்,குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் வாரம் இருமுறை மீன் கொடுக்கலாம், இது மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தி மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

    பால் வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது,அதில் கால்சியம், புரதம், வைட்டமின் மற்றும் தாதுக்கள் உள்ளன, இவை அனைத்தும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் நல்ல ஞாபக சக்தியை அளிக்கிறது,பாலில் உள்ள கால்சியம் உங்களின் உடலை பராமரிக்கும்.தினமும் இரவில் ஒரு டம்ளர் பால் குடித்தால் குழந்தைகளுக்கு நல்ல தூக்கம் வரும்.

    • தனிமையில் இருப்பவர்களுக்கு அல்சைமர் நோய் உருவாகும்.
    • மனச்சோர்வு பிற மன நல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

    தனிமையும்.. இறப்பும்.. தனிமையால் நேரடியாக மரணத்தை ஏற்படுத்த முடியாது என்றாலும், தனிமையில் இருப்பவர்கள் முன்கூட்டியே மரணத்தை தழுவுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தனிமை, இறப்பு விகிதத்தை அதிகரிக்கச் செய்திருப்பதாக கூறுகின்றன.


    தனிமையின் அறிகுறிகள்

    * தோழமையாக பழகும் நபர்கள் யாருமே இல்லாதது போன்ற உணர்வு

    * தாம் ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு

    * தங்கள் உறவினர்கள், குடும்பத்தினருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பது போன்ற உணர்வு

    * நட்பு வட்டம் இல்லை அல்லது குறைந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு

    * உரிமையுடன் தொடர்பு கொள்ளக்கூடிய நபர்கள் இல்லை என்ற உணர்வு

    பணி, படிப்பு, தொழில் ரீதியாக பலரும் குடும்பத்தினர், நட்பு வட்டத்தினரை பிரிந்து தனிமையில் வசிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.

    முதியவர்கள்தான் தனிமையில் நேரத்தை செலவிடுவார்கள் என்ற நிலை மாறி இளம் தலைமுறையினரும் தனிமையில் காலத்தை கழிக்கும் சூழலை எதிர்கொண்டுள்ளனர்.

    அப்படி தம் மீது அன்பு, அக்கறை செலுத்துபவர்களிடம் இருந்து பிரிந்து வாழ்வது மனத்துயரம், அசவுகரியம், தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    நீண்டகாலமாக தனிமையை அனுபவிப்பது மன ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தனிமை ஏற்படுத்தும் மனச்சோர்வு பிற மன நல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

    தனிமையில் இருப்பவர்களுக்கு மறதியை ஏற்படுத்தும் அல்சைமர் நோய் உருவாகும் வாய்ப்பு இரு மடங்கு அதிகமாகும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. நாள்பட்ட தனிமைக்கு ஆளாகுவது மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்துவிடும்.

    தூக்க சுழற்சியை பாதிப்படைய வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமடைய செய்துவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் தனிமையை எதிர்கொள்ளவும், சமாளிக்கவும் உதவும் விஷயங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்....



    அன்புக்குரியவர்களுடன் இணையுங்கள்

    தொலை தூரத்தில் இருந்தாலும் செல்போன் உரையாடல், வீடியோ அழைப்புகள் மூலம் உங்கள் மீது அன்பு செலுத்துபவர்களுடன் இணையுங்கள். 10 நிமிடம் தொடர்ந்தால் கூட போதும். அந்த தொடர்பும், மனமார்ந்த உரையாடலும் உங்கள் மன நிலையை திறம்பட மேம்படுத்த உதவிடும்.


    நன்றி கூறுங்கள்

    வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உங்களின் உயர்வுக்கு ஏதாவதொரு வகையில் சிலர் காரணமாக இருப்பார்கள். அவர்களுக்கு மனமார நன்றி கூறுங்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தனிமையில் இருக்கும் சூழலிலும் மீண்டும் நினைவு கூர்ந்து மனதுக்குள் நன்றி செலுத்துங்கள்.

    தனியாக இருக்கும்போது நேர்மறையான எண்ணங்களை மனதில் நிழலாட செய்யுங்கள். விருப்பமான உணவுகளை ருசியுங்கள். மகிழ்ச்சியை வெளிப்படுத்த உதவிடும் சூழலை கட்டமையுங்கள்.


    இசையை ரசியுங்கள்

    தனிமையை விரட்டி மனதை சஞ்சலங்களுக்கு இடம் கொடுக்காமல் நிலை நிறுத்தக்கூடிய அபார சக்தி இசைக்கு உண்டு. விருப்பமான இசையை கேட்டு ரசியுங்கள். அவை கவனச்சிதறலை தடுக்கும். நேர்மறையான எண்ணங்களை, சூழலை நிரப்ப உதவிடும்.


    இயற்கையோடு இணையுங்கள்

    வீடு, அறைக்குள் முடங்கியே கிடப்பது தனிமை உணர்வை அதிகரிக்க செய்துவிடும். விரக்தியான மன நிலைக்கு வித்திடும். அலுவலக பணி, தொழில், படிப்பு இவற்றை தவிர்த்து வெளியிடங்களில் சில மணி நேரத்தை செலவிட வேண்டும். அது காலையிலும், மாலையிலும் நடைப்பயிற்சி செய்வதாக இருக்கலாம்.

    இயற்கை சூழ்ந்த இடங்கள், பூங்காக்களில் நேரம் செலவிடுவதாக இருக்கலாம். நண்பர்களுடன் பொழுதை போக்குவதாக இருக்கலாம். இயற்கையோடு செலவிடும் நேரம் மன நலத்திற்கு கூடுதல் நன்மைகளை சேர்க்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    உணர்வுகளை வழிநடத்துங்கள்

    கலை, இசை அல்லது எழுத்து என உணர்ச்சிகளை வழிநடத்தி செல்லும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அவை படைப்பாற்றல் திறனை அதிகரிக்கவும், தேவையற்ற சிந்தனைகள் மனதை ஆட்கொள்வதை தவிர்க்கவும், கவனச்சிதறலை கட்டுப்படுத்தவும் வழிவகை செய்யும்.


    செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடுங்கள்

    செல்லப்பிராணிகள் தோழமை உணர்வை கொடுக்கக்கூடியவை. மன அழுத்தத்தைக் குறைக்க உதவுபவை. உங்களிடம் செல்லப்பிராணி இல்லையென்றால் தெரு நாய்களிடம் நேசம் காட்டுங்கள். விலங்குகள் காப்பகத்திற்கு சென்று அங்குள்ள விலங்குகளுடன் நேரத்தை செலவிடுங்கள். அது மனதுக்கு இதமளிக்கும்.


    உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்

    உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது அவற்றின் தீவிரத்தைக் குறைக்கும். உங்களின் உணர்ச்சிகளை அன்புக்குரியவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லது மனதில் பதிந்த விஷயங்கள், எண்ணங்களை டைரியில் எழுதும் பழக்கத்தை கடைப்பிடியுங்கள். இத்தகைய செயல்பாடுகள் நல்வாழ்வுக்கு வித்திடக்கூடியவை.

    ×