என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முத்தியால்பேட்டையில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை மஞ்சினி நகர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கமலா. சம்பவத்தன்று இவர், அந்த பகுதியில் உள்ள வரதவள்ளி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்றார். அங்கு கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. அப்போது மர்மநபர் ஒருவர் கமலா அணிந்திருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டார். வீட்டிற்கு வந்து பார்த்த பின்னர் தான் தங்க சங்கிலி பறிபோனது கமலாவுக்கு தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அவர், முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது
    புதுடெல்லி:

    புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசில் இருந்த அமைச்சர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்தது.

    இதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 14 ஆகவும், என்.ஆர்.காங்கிரஸ் -7, அ.தி.மு.க. -4, நியமனம் (பா.ஜ.க.) 3  என எதிர்க்கட்சி களின் பலம் 14 ஆகவும் சம நிலையில் இருந்தது. இதையடுத்து சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.

    இதற்கிடையே, சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு சென்ற நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார்.

    அதை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்றுக்கொண்டார். இதன்பின் புதுவை அரசியல் நிலவரம் குறித்த விவரங்களை மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கையாக அனுப்பி வைத்தார். முதலமைச்சர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டார்.

    இதுதொடர்பாக, மத்திய அரசின் கூடுதல் செயலாளர் கோவிந்த் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் முதலமைச்சர் நாராயணசாமி, அவரது அமைச்சரவையின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து ஜனாதிபதிக்கு  அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் புதுச்சேரியில் ஜனாதிபதி  ஆட்சியை அமல்படுத்தி உள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு உள்துறை அமைச்சகம் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
    மீனவ பெண் கூறிய புகாரை தவறாக மொழி பெயர்த்து ராகுல் காந்தியை ஏமாற்றியவர் நாராயணசாமி என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில் விழுப்புரம்-நாகை 4 வழிச்சாலை உள்ளிட்ட புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:-

    * மீனவ பெண் கூறிய புகாரை தவறாக மொழி பெயர்த்து ராகுல் காந்தியை ஏமாற்றியவர் நாராயணசாமி.

    * நாட்டுக்கு உண்மையை சொல்வதற்கு பதில் நாராயணசாமி பொய் உரைத்தார்.

    * புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பஞ்சாயத்து தேர்தலை நடத்தவில்லை.

    * குஜராத், காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் புதுச்சேரியில் நடக்கவில்லை.

    * புதுச்சேரியில் இருந்த காங்கிரஸ் அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை. மத்திய நிதியை பயன்படுத்தவில்லை.

    * மோசமான காங்கிரஸ் அரசு நிர்வாகத்திடமிருந்து புதுச்சேரி மக்கள் விடுதலை பெற்றுள்ளனர்.

    * புதிய வளர்ச்சி பணிகள் புதுச்சேரி மக்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை தரும்.

    * புதுச்சேரியில் மக்கள் சக்தியால் இயங்கும் அரசு வரும் சட்டசபை தேர்தலில் அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    விழுப்புரம்-நாகை 4 வழிச்சாலை மூலம் காரைக்கால் மாவட்டத்தில் பொருளாதாரம் மேம்படும் என பிரதமர் மோடி பேசினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில் விழுப்புரம்-நாகை 4 வழிச்சாலை உள்ளிட்ட புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    நாடு முழுவதும் உள்ள வேளாண் மக்களுக்கு 4 வழிச்சாலை பயனளிக்கிறது. விழுப்புரம்-நாகை 4 வழிச்சாலை மூலம் காரைக்கால் மாவட்டத்தில் பொருளாதாரம் மேம்படும். 4 வழிச்சாலையால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில், வேளாங்கண்ணி ஆலயத்திற்கு எளிதாக செல்லலாம். 4 வழிச்சாலையால் அப்பகுதியில் தொழில்கள் அதிகரித்து, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும். 

    புதுச்சேரியில் வாழும் மக்கள் பல மொழிகளை பேசினாலும் ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கின்றனர். வருங்காலத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த துறையாக சுகாதாரத்துறை இருக்கும். சுகாதாரத்துறையில் முதலீடு செய்யும் நாடுகள் பிரகாசிக்கும். அனைவருக்கும் தரமான சுகாதார சேவையை வழங்குவதற்கான நமது நோக்கத்தின் ஒரு பகுதியாக, நான் ஜிப்மரில் ரத்த சேமிப்பு மையத்தை திறந்து வைத்துள்ளேன்.  

    இவ்வாறு அவர் பேசினார்.
    விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும் 4 வழிப்பாதை, காரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை கட்டிடப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
    புதுச்சேரி:

    பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை புதுவைக்கு வந்தார். காலை 11.20 மணியளவில் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு ராணுவ ஹெலிகாப்டரில் வந்த பிரதமரை கவர்னர் தமிழிசை, மத்திய மந்திரி, பா.ஜனதா கட்சியினர், கூட்டணி கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் கார் மூலம் ஜிப்மர் கலையரங்கத்துக்கு பிரதமர் வந்தார்.

    அவரை ஜிப்மர் இயக்குனர், அதிகாரிகள் வரவேற்றனர். அங்கு நடந்த அரசு விழாவுக்கு பிரதமர் மோடி தலைமை வகித்தார். கவர்னர் தமிழிசை, பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அர்ஜூன்ராம் மெக்வால், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன், செல்வ ராஜ், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அங்கு காணொலி காட்சி வழியாக விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கும் 4 வழிப்பாதை, சீர்காழி சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான 56 கி.மீ. சாலை பணி, காரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    புதுவை துறைமுகத்தில் சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியில் சிறிய துறைமுக மேம்பாட்டு பணி, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டரங்கில் ரூ.78 கோடியில் 400 மீட்டர் தடகள பயிற்சிக்கு சிந்தடிக் டிராக் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    ஒட்டுமொத்தமாக பிரதமர் மோடி ரூ.3 ஆயிரத்து 23 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்து பேசினார்.

    பின்னர் பிரதமர் மோடி லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்துக்கு வந்து உரையாற்றினார்.  

    பின்னர் பகல் 1.20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார். அங்கிருந்து கோவை புறப்படுகிறார்.

    பிரதமர் வருகையை யொட்டி லாஸ்பேட்டை, விமான நிலைய சாலை, கிழக்கு கடற்கரை சாலை, காமராஜர் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. பிரதமர் காரில் செல்லும் சாலையில் வழிநெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். பாதுகாப்பு பணிக்காக கமாண்டன்ட் ரவீந்திரன் தலைமையில் 120 அதிவிரைவு படையினர் பணியில் ஈடுபட்டு இருந்தனர். துணை ராணுவ படையினர் 200 பேர் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    நகரம் முழுவதும் போலீசார் கண்காணிப்பும், பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. பிரதமர் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் அறிவிப்பால் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் வந்து செல்வதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு அரசு, தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை சார்பில் இன்று (வியாழக்கிழமை) விடுமுறை விடப்பட்டது.

    புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கும் 4 வழிப்பாதை உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கடந்த 17-ந்தேதி புதுவைக்கு வந்து, பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று புதுவை வந்தார். டெல்லியில் இருந்து காலையில் விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இந்த வரவேற்பைத் தொடர்ந்து, ராணுவ ஹெலிகாப்டரில் புதுவை லாஸ்பேட்டையில் உள்ள ஹெலிபேடு தளத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்தனர்.

    இந்த வரவேற்பைத் தொடர்ந்து, கார் மூலம் ஜிப்மர் மருத்துவமனை கருத்தரங்கு கூடத்துக்கு பிரதமர் வந்தார். அங்கு நடைபெற்ற விழாவில் பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.

    விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கும் 4 வழிப்பாதை (புதுவையின் காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய திட்டம்), சீர்காழி சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான சாலை பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். 

    காரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார். புதுவை துறைமுகத்தில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியில் சிறிய துறைமுக மேம்பாட்டு பணி, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டரங்கில் ரூ.78 கோடியில் 400 மீட்டர் தடகள பயிற்சிக்கு சிந்தடிக் டிராக் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    ஜிப்மரில் ரூ.28 கோடியில் கட்டப்பட்ட புதிய ரத்த வங்கி, இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் ரூ.18.30 கோடியில் மகளிர் விடுதி, கடற்கரையில் ரூ.14.23 கோடியில் கட்டப்பட்ட மேரி கட்டிடம் ஆகியவற்றை பிரதமர் திறந்து வைத்தார்.

    பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. லாஸ்பேட்டை, விமான நிலைய சாலை, கிழக்கு கடற்கரை சாலை, காமராஜர் சாலையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
    புதுவையில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்து கவிழ்ந்ததால் 30 ஆண்டுக்கு பின் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வருகிறது.
    புதுச்சேரி:

    புதுவையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு நடந்து வந்தது.

    2 அமைச்சர்கள், காங்கிரஸ்- தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் ராஜினாமா செய்ததால் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் தமிழிசை உத்தரவிட்டார்.

    கடந்த 22-ந் தேதி புதுவை சட்டசபை கூடியது. நீண்ட உரையாற்றிய முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி முன்மொழிந்த நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததாக சபாநாயகர் சிவகொழுந்து அறிவித்தார். இதன்பின் கவர்னர் தமிழிசையை சந்தித்த நாராயணசாமி, தன் அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

    இந்த கடிதத்தை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்தார். அமைச்சரவையின் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றார். காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து ஆட்சி அமைக்க எதிர்கட்சிகள் கோரவில்லை.

    இதனால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கவர்னர் தமிழிசை பரிந்துரை செய்தார்.

    இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடந்தது. இதில் புதுவையில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இருப்பினும் எந்த தேதியிலிருந்து அமலாகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என தெரிகிறது.

    ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதில் 2 வகை உண்டு. ஒன்று சட்டசபையை முடக்குவது. மற்றொன்று சட்டசபையை கலைப்பது. சட்டசபையின் பதவிக்காலம் 2, அல்லது 3 ஆண்டு உள்ளது என்றால் சட்டசபை முடக்கம் செய்யப்படும்.

    அரசியல் குழப்பம் தீர்ந்து எந்த கட்சியாவது ஆட்சியமைக்க கோரினால் மீண்டும் உயிர்பிக்க முடியும். பெரும்பான்மை நிரூபிக்க முடியாத நிலையில் தேர்தலுக்கு சில மாதம் உள்ள நிலையில் சட்டசபை கலைக்கப்படும்.

    புதுவையில் பெரும்பான்மை நிரூபிக்க யாரும் முன்வரவில்லை. தேர்தல் தேதி எந்த நேரத்திலும் வெளியாகும் என்பதால் சட்டசபையை கலைத்த பின்னரே ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும்.

    இதுகுறித்து மத்திய மந்திரி பிரகாஷ்ஜவடேகர் டெல்லியில் கூறியதாவது:-

    புதுவையில் யாரும் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. ஜனாதிபதி ஆட்சிக்கு கவர்னர் பரிந்துரைத்தார். இதற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பின் சட்டசபை கலைக்கப்படுவதுடன் நிர்வாகத்துக்கு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    சட்டசபை கலைக்கப்பட்டால் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பதவிகளை இழக்க நேரிடும். புதுவையில் 1991 மார்ச் 4-ந் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன் பின் 6 முறை ஆட்சி அமைந்துள்ளது.

    இதில் 3 ஆட்சியில் முதல்-அமைச்சர் மாற்றம் இருந்தது. இருப்பினும் ஆட்சி கவிழவில்லை. தற்போது காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்து கவிழ்ந்ததால் 30 ஆண்டுக்கு பின் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வருகிறது. இதற்கு முன் 6 முறை ஜனாதிபதி ஆட்சி இருந்துள்ளது. தற்போது 7-வது முறையாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுகிறது.

    புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பகல் 11.20 மணியளவில் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவரை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பா.ஜ.க.வினர் வரவேற்கின்றனர். வரவேற்பு முடிந்ததும் பிரதமர் மோடி காரில் கோரிமேடு ஜிப்மர் கலையரங்கத்துக்கு செல்கிறார். அங்கு நடக்கும் அரசு விழாவில் கலந்துகொள்கிறார்.

    அப்போது சதானந்தபுரம்-நாகப்பட்டினம் இடையேயான 4 வழிச்சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் காரைக்காலில் ரூ.491 கோடி செலவில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    பிரதமர் மோடியின் வருகையையொட்டி புதுச்சேரி நகர் பகுதி முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
    புதுவை அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள் வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னராக தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 18-ந்தேதி பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து அவ்வப்போது அரசுத் துறைகளில் ஆய்வு நடத்தி வருகிறார்.

    அந்தவகையில் சமீபத்தில் ரோடியர் மில் வீதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அவர் ஆய்வு நடத்தினார். அப்போது அங்கிருந்த குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். அவர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசுப் பொருட்களையும் வழங்கினார்.

    இந்தநிலையில் தற்போது அவர்களுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கப்படுவதை 3 முட்டைகளாக உயர்த்தி வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் நிதியுதவியுடன் புதுச்சேரி மாநிலத்திலுள்ள 855 அங்கன்வாடி மையங்களில் 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    அக்குழந்தைகளின் புரதச் சத்தின் தேவையை உணர்ந்து வாரந்தோறும் ஒரு முட்டை வழங்கப்படுவதை உயர்த்தி வாரம் 3 முட்டைகள் வீதம் வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அரசுத் துறைக்கு அறிவுறுத்தினார். அதற்கான செலவினங்களுக்கும் ஒப்புதல் அளித்தார்.

    இதனால் 29 ஆயிரத்து 846 குழந்தைகள் பயன்பெறுவர். புதுச்சேரி அரசுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.1 கோடியே 68 லட்சம் கூடுதல் செலவாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    துரோகிகள் மூலம் ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    21 கட்சிகள் இணைந்து மத்தியில் உள்ள பாசிச மதவாத சக்தியான பா.ஜனதா கட்சி புதுவை மாநிலத்தில் காங்கிரஸ், தி.மு.க. மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் ஆட்சியை கவிழ்த்துள்ளதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

    புதுவை மாநிலத்தை அவமதித்துள்ளதை கண்டிக்கிறோம். பா.ஜனதா, என்ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. சதித்திட்டம் தீட்டி ஆட்சியை கவிழ்த்ததை கண்டித்து ஜனநாயக படுகொலை செய்துள்ளனர் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இதனை மக்கள் மன்றத்தில் கொண்டுசெல்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

    இந்தியா முழுவதும் நமக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜனநாயக படுகொலையை இந்தியாவில் மட்டுமல்ல, எல்லா மாநிலங்களிலும் பா.ஜனதா அரங்கேற்றி உள்ளது. அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் குதிரை பேரம் செய்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி கவிழ்ப்பு செய்துள்னர்.

    கர்நாடகாவில் ரூ.பல ஆயிரம் கோடி பேரம் பேசி ஆட்சி மாற்றம் செய்தனர். ராஜஸ்தானில் அவர்களின் வேலை பலிக்க வில்லை. புதுவையில் 5 ஆண்டுகளை நாம் நிறைவு செய்துவிட்டோம். 10 நாட்களே தேர்தல் தேதி அறிவிப்புக்கு உள்ளது.

    தற்போது ஆட்சியை கவிழ்க்கும் செயலை என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க.வினர் செய்துள்ளனர். இதற்கு அவசியம் என்ன? அதிகார பலம், பணபலத்தை பயன்படுத்தியும், காங்கிரஸ் கட்சியில் இருந்து சில துரோகிகள் மூலம் ஆட்சியை கவிழ்த்தனர்.

    ஆனால், புதிதாக ஆட்சி அமைக்க முடியவில்லை. நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு நம்பிக்கை கோரும் வாக் கெடுப்பில் வாக்களிக்கலாம் என நீதிமன்றம் கூறவில்லை. இதனால் அவர்களுக்கு வாக்குரிமை கிடையாது.

    புதுவை அரசுக்கு தொல்லை கொடுக்க திட்டமிட்டு கவர்னர் கிரண்பேடியை அனுப்பி வைத்தார்கள். எங்களை நிம்மதியாக ஆட்சி செய்யவிடவில்லை. உண்ணாவிரதம், தர்ணா, கையெழுத்து இயக்கம், தெருமுனை பிரசாரம் என கவர்னரை கண்டித்து நடத்திய போராட்டத்துக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எம்.பி. ரவிக்குமார் இந்த போராட்டத்தில் பங் கேற்றுள்ளனர். அவர்களுக்கு நன்றி.

    ஏற்கனவே காரைக்காலில் புறவழிச்சாலையை திறந் துள்ளோம். தற்போது மீண்டும் அதனை திறக்க உள்ளனர். மேரி கட்டடத்தை திறக்க திறப்பு விழா செய்தோம். அதனை தடுத்து நிறுத்தினர். பல திட்டங்களை நாம் செயல்படுத்தி உள்ளோம்.

    கடந்த தேர்தலில் 18 தொகுதியில் பா.ஜனதா போட்டியிட்டது. எத்தனை தொகுதியில் டெபாசிட் பெற்றார்கள். பா.ஜன தாவுடன் சேர்பவர்களும் இத்தேர்தலில் காணாமல் போவார்கள். பாஜனதா டெபாசிட் இழந்த கட்சி.

    வியாபாரிகளை, பொது மக்களை பா.ஜனதா கட்சியினர் மிரட்டுகின்றனர். ரவுடிகளை கட்சியில் சேர்த்துள்ளனர். பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணிக்கு நான் சவால் விடுகிறேன். வருகிற தேர்தலில் மக்கள் உங்களுக்கு பூஜ்யத்தைத்தான் கொடுப்பார்கள்.

    அரியானா மாநிலத்தில் சவுதாலா பேரனின் கட்சி 10 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றனர். அவர்களை இழுத்து பா.ஜனதா கூட்டணியாக ஆட்சி அமைத்தனர். சில காலம் கழித்து சவுதாலா கட்சியை சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்களை தங்கள் கட்சியின் வசப் படுத்தினர்.

    இதேநிலைதான் நாளை ரங்கசாமிக்கு ஏற்படும். யார், யாரையோ மிரட்டுகின்றனர். என்னை மிரட்டி பாருங்கள். கொள்கையும், கோட்பாடும் இல்லாதவர்கள்தான் மிரட்ட லுக்கு அடிபணிவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரதமர் மோடி நாளை புதுவை வருகிறார். பாதுகாப்பு பணிக்காக 120 அதிவிரைவு படையினர் புதுவைக்கு வந்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கடந்த 17-ந்தேதி புதுவைக்கு வந்தார். ரோடியர் மில் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) புதுவை வருகிறார். அவர் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் மற்றும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.

    இதற்காக நாளை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்.

    அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் காலை 11 மணிக்கு புதுவைக்கு வருகிறார். அங்கு அவருக்கு பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.

    அங்கிருந்து கார் மூலம் ஜிப்மர் மருத்துவமனை கருத்தரங்கு கூடத்துக்கு பிரதமர் செல்கிறார். அங்கு நடக்கும் விழாவில் விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கும் 4 வழிப்பாதை, சீர்காழி சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான 36 கி.மீ. சாலை பணியை தொடங்கி வைக்கிறார்.

    காரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை கட்டிட பணிகளை தொடங்கி வைக்கிறார். புதுவை துறைமுகத்தில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியில் சிறிய துறைமுக மேம்பாட்டு பணி, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டரங்கில் ரூ.78 கோடியில் 400 மீட்டர் தடகள பயிற்சிக்கு சிந்தடிக் டிராக் அமைக்கும் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    ஜிப்மரில் ரூ.28 கோடியில் கட்டப்பட்ட புதிய ரத்த வங்கி, இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் ரூ.18.30 கோடியில் மகளிர் விடுதி, கடற்கரையில் ரூ.14.23 கோடியில் கட்டப்பட்ட மேரி கட்டிடம் ஆகியவற்றை பிரதமர் திறந்து வைக்கிறார்.

    விழாவுக்கு பின் காரில் லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் மதியம் 12 மணிக்கு பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார். பின்னர் பகல் 1.20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார்.

    பிரதமர் வருகையையொட்டி லாஸ்பேட்டை, விமான நிலைய சாலை, கிழக்கு கடற்கரை சாலை, காமராஜர் சாலையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு பணிக்காக கமாண்டன்ட் ரவீந்திரன் தலைமையில் 120 அதிவிரைவு படையினர் புதுவைக்கு வந்தனர். புதுவையில் உள்ள 350-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ஜிப்மர் மருத்துவனையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.ஜி.பி. ரன்வீர் சிங்கிருஷ்ணியா, கூடுதல் டி.ஜி.பி. ஆனந்தமோகன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிஷா கோத்ரா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    விழா மேடை, பொதுக்கூட்ட மேடை போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் மேடையில் அமரும் மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் உள்பட பா.ஜனதா நிர்வாகிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
    தமிழகம், புதுவையில் பா.ஜனதாவை வீழ்த்தி அவர்களின் முகத்தில் கரி பூசுவோம என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை ஆட்சி கவிழ்ப்பை கண்டித்து காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. பேசினார். அவர் பேசியதாவது:-

    மக்களால் தேர்வு செய்த அரசை நாராயணசாமி வெற்றிகரமாக நடத்தியுள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சியை பா.ஜனதா கவிழ்த்துள்ளனர். அநாகரீக அரசியலை அரங்கேற்றி வருகின்றனர்.

    பா.ஜனதாவின் அருவறுப்பான, அராஜகமான, கேவலமான அரசியலை நாராயணசாமி எடுத்துரைத்தார்.

    தேசத்தை பிடித்திருக்கும் பெரும் தீங்கு பா.ஜனதா. கொரோனாவை விட பா.ஜனதா கொடிய நோய். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி கவிழ்ப்பை செய்துள்ளனர்.

    ஒரு வகையில் காங்கிரசுக்கு பா.ஜனதா நல்லதையே செய்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் மீண்டும் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். புதுவை மக்களுக்கு நாராயணசாமி என்ன துரோகம் செய்தார் என ஆட்சியை கவிழ்த்தார்கள்?.

    தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு பல திட்டங்களை கொண்டு வந்தது துரோகமா? மக்களால் தேர்வு செய்த அரசை கலைக்க இவர்கள் யார்? என்.ஆர்.காங்கிரஸ் முகத்தில் தற்போதுதான் வெளிச்சம் விழுந்துள்ளது. அவர்கள் யார்? என்பது தெரியவந்துள்ளது.

    பா.ஜனதாவின் அடாவடி அரசியலுக்கு என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. துணை சென்றுள்ளது. அவர்களையும், ராஜினாமா செய்தவர்களையும் ஓட்டுக்கேட்க வரும்போது வீதிக்குள் நுழையவிடாமல் விரட்டியடிக்க வேண்டும்.

    காங்கிரசுக்கு, கூட்டணிக்கு செய்த துரோகத்தை விட புதுவை மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளனர். பா.ஜனதா விரித்த வலையில் 5, 6 பேர் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு அரசியல் எதிர்காலமே இல்லாமல் செய்யவேண்டும்.

    இந்திய நாட்டின் ஜனநாயகத்தை பா.ஜனதா சிதைத்துக் கொண்டிருக்கிறது. சாதி வெறியை தூண்டுகிறது. ஜனநாயகத்தை படுகொலை செய்கிறது. எதையும் செய்வோம், எங்களை யார் என்ன செய்ய முடியும்? என்ற அநாகரீமாகன, அறுவருப்பான செயலை செய்யவும் தயாராக உள்ளனர்.

    புதுவை அரசை கலைத் திருப்பதன் மூலம் தமிழக மக்களுக்கும் சிக்னல் கொடுத்துள்ளனர். தமிழகத்தில் தி.மு.க. அரசு அமைந்தால் அதனையும் கலைக்க முடியும் என எச்சரிக்கை விடுக்கும் ஒத்திகை போல பார்க்கிறோம்.

    ஆனால் தமிழகத்தில் பா.ஜனதா முயற்சி, கனவு பலிக்காது. சில தக்குறுதிகள் வேண்டுமானால் பா.ஜனதாவுக்கு துணை செல்லலாம். தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கைகோர்த்து நிற்கிறது.

    தமிழகத்தில் பா.ஜனதாவை ஓட, ஓட விரட்டி அடிப்போம். தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் மகத்தான வெற்றி பெறும். இது கூட்டணி அரசியல் அல்ல, சமூகநீதியை, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்.

    இந்திய நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் புதுவையில் நடைபெறும் போரட்டங்களில் பங்கேற்று வருகிறது. நாராயணசாமி ஆட்சியை பறிகொடுத்திருக்கலாம்.

    ஆனால் மிகப்பெரும் வெற்றியை வரும் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி பெறும். தமிழகம், புதுவையில் பா.ஜனதாவை வீழ்த்தி அவர்களின் முகத்தில் கரி பூசுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×