search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி நாளை புதுவை வருகை- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

    பிரதமர் மோடி நாளை புதுவை வருகிறார். பாதுகாப்பு பணிக்காக 120 அதிவிரைவு படையினர் புதுவைக்கு வந்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கடந்த 17-ந்தேதி புதுவைக்கு வந்தார். ரோடியர் மில் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) புதுவை வருகிறார். அவர் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் மற்றும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.

    இதற்காக நாளை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்.

    அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் காலை 11 மணிக்கு புதுவைக்கு வருகிறார். அங்கு அவருக்கு பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.

    அங்கிருந்து கார் மூலம் ஜிப்மர் மருத்துவமனை கருத்தரங்கு கூடத்துக்கு பிரதமர் செல்கிறார். அங்கு நடக்கும் விழாவில் விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கும் 4 வழிப்பாதை, சீர்காழி சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான 36 கி.மீ. சாலை பணியை தொடங்கி வைக்கிறார்.

    காரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை கட்டிட பணிகளை தொடங்கி வைக்கிறார். புதுவை துறைமுகத்தில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியில் சிறிய துறைமுக மேம்பாட்டு பணி, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டரங்கில் ரூ.78 கோடியில் 400 மீட்டர் தடகள பயிற்சிக்கு சிந்தடிக் டிராக் அமைக்கும் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    ஜிப்மரில் ரூ.28 கோடியில் கட்டப்பட்ட புதிய ரத்த வங்கி, இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் ரூ.18.30 கோடியில் மகளிர் விடுதி, கடற்கரையில் ரூ.14.23 கோடியில் கட்டப்பட்ட மேரி கட்டிடம் ஆகியவற்றை பிரதமர் திறந்து வைக்கிறார்.

    விழாவுக்கு பின் காரில் லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் மதியம் 12 மணிக்கு பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார். பின்னர் பகல் 1.20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார்.

    பிரதமர் வருகையையொட்டி லாஸ்பேட்டை, விமான நிலைய சாலை, கிழக்கு கடற்கரை சாலை, காமராஜர் சாலையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு பணிக்காக கமாண்டன்ட் ரவீந்திரன் தலைமையில் 120 அதிவிரைவு படையினர் புதுவைக்கு வந்தனர். புதுவையில் உள்ள 350-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ஜிப்மர் மருத்துவனையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.ஜி.பி. ரன்வீர் சிங்கிருஷ்ணியா, கூடுதல் டி.ஜி.பி. ஆனந்தமோகன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிஷா கோத்ரா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    விழா மேடை, பொதுக்கூட்ட மேடை போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் மேடையில் அமரும் மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் உள்பட பா.ஜனதா நிர்வாகிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
    Next Story
    ×