என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மனைவி இறந்த துக்கம் தாங்காமல் விஷம் குடித்து பூசாரி தற்கொலை செய்து கொண்டார்.
    திருபுவனை:

    திருபுவனை பேங்க் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 67). கோவில் பூசாரி. இவரது மனைவி சுந்தரி (60). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு சுந்தரி இறந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட புருஷோத்தமன், நேற்று முன்தினம் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கலிதீர்த்தாள்குப்பம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் உதவி சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க. 13 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

    தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக புதுவைக்கு வந்த ராகுல்காந்தி பாரதிதாசன் கல்லூரி மாணவிகள், மீனவ சமுதாயத்தினரிடம் கலந்துரையாடினார். மேலும் பொதுக்கூட்டம் ஒன்றிலும் பேசினார்.

    பின்னர் முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் எம்.பி., திருச்சி சிவா எம்.பி., நாடாளுமன்ற மேலவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) புதுச்சேரி வருகிறார். காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    ரோடியர் மில் திடலில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசுகிறார். அப்போது அவர் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்கிறார். இதற்காக ரோடியர் மில் திடலில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
    நாராயணசாமி
    இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை புதுவை தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் தொடங்கி உள்ளது. இதில் பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி 16-ந் தேதியிலிருந்து போடப்பட்டு வருகிறது.

    முதல்கட்டமாக சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் முன் கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் தொடங்கி உள்ளது. இதில் பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த பிரிவை கவர்னர் தமிழிசை இன்று தொடங்கி வைத்தார். பின்னர் தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி எடுத்துக் கொண்டோம் என படம் எடுத்துக்கொண்டார்.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு இந்நேரத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. நாமெல்லாம் உயிரோடு இருப்போமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. நம் நாட்டிலேயே தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்வது பெருமையாக உள்ளது. பெண்களுக்கென தனி பிரிவு தொடங்கியுள்ளோம். 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

    காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி போடலாம். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா பரவாமல் தடுக்க முககவசம் அணிந்தால் 50 சதவீதம் தொற்று பரவலை தடுக்க முடியும். எனவே அனைவரும் முககவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணிவதை காவல்துறையினர் வலியுறுத்துவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிமெண்டு சிலாப் ஏற்கனவே பழுதடைந்த நிலையில் அதிகம் பேர் ஏறி நின்றதால் உடைந்து விழுந்தது. இதில் 5 பேர் கால்வாய்க்குள் விழுந்து காயம் அடைந்தனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மத்திய மந்திரி அமித்ஷா நேற்று காலை வந்தார். லாஸ்பேட்டை உழவர்சந்தை அருகே உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு திறந்த ஜீப்பில் புறப்பட்டார். அப்போது அவரை சுற்றி தொண்டர்கள் நின்றனர். இதனால் அங்கிருந்து செல்ல முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்த வாகனங்களை முன்னே எடுத்துச் செல்லுமாறு அமித்ஷா இந்தியில் கூறினார். அவர் இந்தியில் பேசியது தெரியாத நிலையில் தொண்டர்கள் அப்படியே நின்றபடி இருந்தனர்.

    உடனே அங்கிருந்த சாமிநாதன் முன்னே உள்ள வாகனங்களை அப்படியே ஓட்டிச் செல்லுமாறு தமிழில் கூறினார். அந்த வாகனங்கள் முன்னே சென்றதால் அங்கிருந்தவர்கள் சாலையின் இருபுறமும் ஒதுங்கினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் வாய்க்காலில் போடப்பட்டிருந்த சிலாப் மீது ஏறி நின்றனர். ஏற்கனவே பழுதடைந்த நிலையில் அதிகம் பேர் ஏறி நின்றதால் சிமெண்டு சிலாப் உடைந்து விழுந்தது. இதில் 4 பெண்கள் உள்பட 5 பேர் கால்வாய்க்குள் விழுந்து காயம் அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்களை பா.ஜ.க.வினர் மீட்டு பிரசார ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    தகராறில் மாமியாரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி. இவரது மனைவி அபூர்வம் (வயது 65). இவர்களது மூத்த மகன் பாலசந்தர். கடந்த 2016-ம் ஆண்டு வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி வள்ளி (27). பாலச்சந்தரின் தம்பிக்கு அப்போது பெண் பார்த்து வந்தனர். இதற்கிடையே வள்ளி தனது கணவர் வெளிநாட்டில் இருப்பதால் அவர் வந்த பின்பு தான் திருமணம் நடந்த வேண்டும் என்று கூறினார்.

    இந்த நிலையில் 29-4-2016 அன்று வள்ளிக்கும், அவரது மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது மாமியாரை தாக்கினார். இதில் அபூர்வம் மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வள்ளி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அபூர்வத்தை சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அபூர்வம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வள்ளியை கைது செய்தனர். இந்த வழக்கு புதுச்சேரி 2-வது மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சுபா அன்புமணி தலைமையில் நடைபெற்று வந்தது.

    வழக்கில் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட வள்ளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சுபா அன்புமணி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பெருமாள் ஆஜரானார்.
    கட்சி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் விவரங்களை சேகரித்ததாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    சென்னை:

    புதுச்சேரியில் வாக்காளர்களின் மொபைல் எண்களை ஆதார் மூலம் சட்டவிரோதமாக பெற்று பாஜகவினர் பிரசாரம் செய்வதாக கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பாஜகவின் இந்த பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருப்பதாக மனுவில் கூறியிருந்தார்.
     
    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாஜக மீதான எஸ்எம்எஸ் பிரசாரம் குறித்த புகாரை விசாரித்து முடிக்கும்வரை புதுச்சேரி சட்டசபை தேர்தலை ஏன் தள்ளி வைக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினர்.

    பாஜக சின்னம்

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்சி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் விவரங்களை சேகரித்ததாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.  

    ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன்களுக்கு மட்டும் எஸ்எம்எஸ் வந்துள்ளது, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியபிறகும் எஸ்எம்எஸ் மூலம் பாஜக பிரசாரம் செய்தது தீவிரமான தனிமனித உரிமை மீறல் என்று  நீதிபதிகள் கூறினர். 

    மேலும் வாக்காளர் விவரங்கள் எப்படி கசிந்தது? என்பது பற்றி ஆதார் ஆணையம் விசாரிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    அமித்ஷா வருகையையொட்டி லாஸ்பேட்டை மெயின்ரோடு முழுவதும் போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசமன்ற தேர்தலில் பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

    பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, தேசிய தலைவர் நட்டா, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், கிரிராஜா சிங் ஆகியோர் தேர்தல் பிரசாரம் செய்துள்ளனர்.

    காரைக்கால் மாவட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    இந்நிலையில் புதுவையில் இன்று மத்திய மந்திரி அமித்ஷா ரோடு ஷோ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக லாஸ்பேட்டை சுபாஷ் சந்திரபோஸ் சிலையிலிருந்து சிவாஜி சிலை வரை திறந்த வேனில் மக்களை சந்தித்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தபடி செல்வதற்கான திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சிவாஜி சிலை அருகில் அலங்காரம் செய்யப்பட்ட திறந்த வேன் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. காலை 8 மணி முதல் பா.ஜனதா தொண்டர்கள் லாஸ்பேட்டை உழவர் சந்தை முன்பு குவிய தொடங்கினர். புதுவையின் பல்வேறு தொகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்தனர். காலை 10.30 மணிக்கு சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுவை விமான நிலையத்துக்கு அமித்ஷா வந்தார்.

    அமித்ஷா

    அங்கிருந்து கார் மூலம் கருவடிக்குப்பம் சித்தானந்தர் கோவிலுக்கு வந்தார். அங்கு சாமிதரிசனம் செய்தார். பின்னர் கார் மூலம் 10.45 மணிக்கு லாஸ் பேட்டை உழவர்சந்தை எதிரே உள்ள சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு வந்தார். அங்கு சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை அணிவித்தார்.

    பின்னர் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து கை அசைத்தார். இதனை தொடர்ந்து அலங்கார வேனில் ஏறி ரோடு ஷோ சென்றார். மலரட்டும் மலரட்டும் தாமரை மலரட்டும், ஒளிரட்டும், ஒளிரட்டும், புதுவை ஒளிரட்டும் என ஊர்வலத்தில் பங்கேற்றோர் கோ‌ஷம் எழுப்பியபடி சென்றனர்.

    லாஸ்பேட்டை கல்லூரி மெயின்ரோடு முழுவதும் அலங்கார வாகனத்தில் நின்றபடி இருபுறமும் இருந்து மக்களை பார்த்து கையசைத்தபடி தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தும், வெற்றி சின்னமாக இரு விரலை வி வடிவில் காட்டிக்கொண்டே வந்தார். அமித்ஷாவை பார்க்க வீடுகளின் மாடியில் திரண்டு இருந்த மக்கள் அவர் மீது மலர்களை தூவினர். வண்டியில் வைக்கப்பட்டிருந்த பூக்களை எடுத்து பொதுமக்கள் மீது அமித்ஷா வீசினார்.

    ஆயிரக்கணக்கில் ஆண்களும், பெண்களும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

    சுமார் ஒரு கி.மீ. தூரம் ஊர்வலம் வந்தது. மகாவீர் நகர், பாரதிநகர் வீதிக்கு ஊர்வலம் வந்தபோது வாகனம் நிறுத்தப்பட்டது. அவர் அங்கிருந்து இறங்கி காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

    அமித்ஷா வாகனத்தில் மத்திய மந்திரி அர்ஜூன் ராம்மெக்வால், மேலிட பார்வையாளர் நிர்மல் குமார் சுரானா, வேட்பாளர்கள் நமச்சிவாயம், கல்யாண சுந்தரம், சாமிநாதன், ஏம்பலம் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர். அமித்ஷா ரோடு ஷோ சிவாஜி சிலை வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அரை கி.மீ. முன்னதாகவே ஊர்வலம் நிறுத்தப்பட்டது. அமித்ஷா பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் எங்கும் பேசவில்லை.

    அமித்ஷா வருகையையொட்டி லாஸ்பேட்டை மெயின்ரோடு முழுவதும் போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வீட்டின் மாடியிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அமித்ஷா வருகையையொட்டி லாஸ்பேட்டை பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
    காங்கிரஸ் கட்சியில் மேலிட தலைவர்கள் யாரும் தேர்தல் பிரசாரத்திற்கு வராதது புதுவை காங்கிரசார் இடையே சோர்வை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபைக்கு வருகிற 6-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இத்தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மேலிட தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    பிரதமர் மோடி பிப்ரவரி மாதம் 25-ந் தேதி புதுவையில் தேர்தல் பிரசாரம் செய்தார். அரசு விழாவில் பங்கேற்ற அவர் லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    2-வது முறையாக மோடி நேற்று முன்தினம் (30-ந் தேதி) புதுவையில் பிரசாரத்தில் ஈடுபட்டார். புதுவை- கடலூர் சாலையில் உள்ள ஏ.எப்.டி. மில் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பா.ஜனதா, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

    பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஜனவரி 31-ந் தேதி புதுவையில் பிரசாரம் செய்தார். ஏ.எப்.டி. மில் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார்.

    கடந்த 26-ந் தேதி புதுவையில் பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதனை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டார். பின்னர் அவர் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

    கடந்த மாதம் 30-ந் தேதி மத்திய மந்திரி நிதின் கட்காரி காரைக்காலில் பிரசாரம் மேற்கொண்டார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிப்ரவரி 25-ந் தேதி காரைக்காலில் பிரசாரம் செய்தார். இன்று (வியாழக்கிழமை) அவர் புதுவையில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    புதுவை கிழக்கு கடற்கரை சாலை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையில் இருந்து சிவாஜி சிலை வரை அவர் பேரணியாக சென்று பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    மேலிட தலைவர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருவதால் பாரதிய ஜனதா தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் (3-ந் தேதி) புதுவையில் பிரசாரம் செய்ய உள்ளார்.

    ஆனால் காங்கிரஸ் கட்சியில் மேலிட தலைவர்கள் யாரும் புதுவைக்கு பிரசாரம் செய்ய வரவில்லை. காங்கிரஸ் புதுவை பொறுப்பாளர்களான சஞ்சய் தத், குண்டுராவ் உள்ளிட்ட சில தலைவர்கள் மட்டுமே புதுவையில் தங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    புதுவையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்வதற்கு முன் பிப்ரவரி 17-ந் தேதி புதுவையில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. புதுவையில் பிரசாரம் செய்தார்.

    அவர் மீனவர்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார். ஏ.எப்.டி. மில் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசினார்.

    ராகுல் காந்தி மீண்டும் புதுவைக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அவர் பிரசாரம் செய்வது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் பிரியங்கா காந்தியும் புதுவையில் பிரசாரம் செய்வார் என காங்கிரசார் நினைத்து இருந்தனர். வருகிற 3-ந் தேதி அவர் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். அவர் புதுவைக்கு பிரசாரத்திற்கு வருவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ராகுல், பிரியங்கா மற்றும் மேலிட தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு வராதது புதுவை காங்கிரசார் இடையே சோர்வை ஏற்படுத்தி உள்ளது.

    விபத்தில் சிக்கிய வாலிபரை தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி சிகிச்சைக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்பாடு செய்தார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை சென்னை தண்டலம் சவீதா மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள காரில் சென்றார். அவர் திண்டிவனம்- சென்னை 4 வழிச்சாலையில் படாளம் கூட்டுரோடு அருகே சென்றபோது வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி ரத்தக்காயத்துடன் ரோட்டில் கிடந்தார்.

    இதைக்கண்டதும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உடனடியாக காரை விட்டு இறங்கினார். அந்த வாலிபருக்கு முதல் உதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனத்தில் அந்த வாலிபரை ஏற்றி போலீஸ்காரர் ஒருவருடன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார். மேலும் அங்குள்ள டாக்டரை தொடர்புகொண்டு விபத்தில் சிக்கிய வாலிபருக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தார்.

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் நடவடிக்கையினால் அந்த வாலிபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ரத்த கசிவும் நிறுத்தப்பட்டது. அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    2 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணியவேண்டும், அதிவேகத்தில் செல்வது, செல்போனை பயன்படுத்துவதை தவிர்த்தால் விபத்துகளை தடுக்கலாம் என்றும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
    புதுவை சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. இடம்பெற்று தேர்தலை சந்திக்கிறது.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. இடம்பெற்று தேர்தலை சந்திக்கிறது.

    புதுவையில் பா.ஜனதா கூட்டணி அரசு அமைய கட்சியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

    மத்திய மந்திரி அர்ஜூன்ராம்மெக்வால், ராஜூசந்திரசேகர் எம்.பி., மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோர் புதுவையில் முகாமிட்டு தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர்.

    பிரதமர் மோடி

    பிரதமர் நரேந்திர மோடி 2 முறை தேர்தல் பிரசாரத்துக்கு புதுவைக்கு வந்தார். பா.ஜனதா தேசிய தலைவர் நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீத்தாராமன், கிரிராஜா சிங் ஆகியோர் புதுவையில் பிரசாரம் செய்தனர்.

    இந்நிலையில் மத்திய மந்திரி அமித்ஷா நாளை (வியாழக்கிழமை) புதுவை வருகிறார். அவர் புதுவையில் ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்கிறார்.

    நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புதுவைக்கு காலை 9.30 மணிக்கு அமித்ஷா வருகிறார். அவரை பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்கின்றனர்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலம் கருவடிக்குப்பம் சித்தானந்தா சாமி கோவிலுக்கு அமித்ஷா செல்கிறார். அங்கு சித்தானந்தா கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

    காலை 10.20 மணிக்கு சுபாஷ் சந்திரபோஸ் சிலை சதுக்கத்தில் இருந்து வீதி, வீதியாக திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரிக்கிறார்.

    லாஸ்பேட்டை, காமராஜர் நகர், காலாப்பட்டு தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் அவர் மீண்டும் சிவாஜி சிலை அருகே பிரசாரத்தை முடிக்கிறார். 11.30 மணிக்கு விமான நிலையம் செல்லும் அவர் அங்கிருந்து திருக்கோவிலூர் செல்கிறார்.
    ரங்கசாமியால் சுதந்திரமாக செயல்பட முடியாது. பா.ஜ.க.வுடன் என்.ஆர். காங்கிரஸ் சேர்ந்து விடும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    சமூக வலைதளத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜ.க. என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தனியாக பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர், மக்கள் மத்தியில் நான் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிக்க தயார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேர்தலை புறக்கணிக்க தயாரா? என கேள்வி எழுப்பினார். பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்து கிடையாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    மாநில அந்தஸ்து கோரிக்கைக்காக தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி அரசை எதிர்த்து ரங்கசாமி போராட தயாரா?

    ஏற்கனவே டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்-அமைச்சருக்கும், அமைச்சரவைக்கும் உள்ள அதிகாரத்தை பறித்து கவர்னரிடம் கொடுத்து விட்டார்கள். அதேபோல் புதுச்சேரியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களிடம் இருந்து அதிகாரத்தை பறித்து கவர்னரிடம் கொடுத்து விடுவார்கள். என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜ.க.வின் ‘பி’ டீம். அந்த கட்சியை பா.ஜ.க. ஆட்டிப்படைக்கும். அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியாது. மாநில அந்தஸ்து பெற்றுத்தருவதாக உறுதி அளித்து கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த என்.ஆர்.காங்கிரஸ் அதை நிறைவேற்றவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக பா.ஜ.க. கூட்டணியில் இருந்தும் மாநில அந்தஸ்தை பெறவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கக் கூடாது என்பது தான் பா.ஜ.க.வின் கொள்கை.

    கவர்னரிடம் நான் தொடர்ந்து தகராறு செய்ததால் மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்பட்டதாக ரங்கசாமி போகும் இடமெல்லாம் பேசுகிறார். நாங்கள் அடிப்படை மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். காலத்தோடு உதவித்தொகைகளை வழங்கி உள்ளோம்.

    மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளது. பா.ஜ.க. ஆட்சி வந்தால் புதுச்சேரியின் தனித்தன்மை, கலாசாரம் போய்விடும். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.அதுமட்டுமல்லாமல் பா.ஜ.க. மதகலவரத்தை உருவாக்கும். பிரிவினையை உருவாக்கும். மக்கள் நிம்மதியாக இருக்க முடியாது. தனி மனித சுதந்திரம் பறிக்கப்படும். பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும். என்.ஆர்.காங்கிரஸ் முழுமையாக பா.ஜ.க.வுடன் ஐக்கியமாகிவிடும். ரங்கசாமி தனிமைப்படுத்தப்படுவார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    புதுச்சேரி முழுவதும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் 75-வது ஆண்டு சுதந்திர தின பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பசுமைமிகு புதுச்சேரியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று காலை கவர்னர் மாளிகையில் நடந்தது.

    கூட்டத்திற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    புதுச்சேரி முழுவதும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் அமைந்துள்ள 109 பூங்காக்களிலும் பயன்தரக்கூடிய மரங்களை நட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர கிராமப்புறங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உதவியுடன் பயன் தரும் பழவகை மரக்கன்றுகள் நட வேண்டும்.

    சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பொது இடங்களில் அழகான வண்ண தோட்டங்கள் அமைக்க வேண்டும். சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் இருக்கும் மக்கள் வீட்டுக்கு ஒரு மரம் நட்டு பசுமை புதுச்சேரி திட்டத்திற்கு உதவ வேண்டும்’.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் கவர்னரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஆனந்த பிரகா‌‌ஷ் மகேஸ்வரி, கவர்னரின் சிறப்பு செயலாளர் சுந்தரேசன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் அரசுத்துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
    ×