என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி எதிர்கட்சி தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி திலாஸ்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
    புதுச்சேரி:

    தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

    புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில், புதுச்சேரி எதிர்கட்சி தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி திலாஸ்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். 

    அதனை தொடர்ந்து புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது வாக்கை பதிவு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் மத்தியில் காங்கிரஸ் -திமுக கூட்டணிக்கு அமோக வரவேற்பு உள்ளது. புதுச்சேரி மக்கள் ஆதரவுடன் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும்” என்ற கூறினார்.
    சுதந்திர போராட்ட வீரர் ஜெகஜீவன் ராமின், பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில், அரசு ஆணைகள் அனைத்தும் தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    சுதந்திர போராட்ட வீரர் ஜெகஜீவன் ராமின், பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி கவர்னர்(பொறுப்பு) டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், லாசுபேட்டையில் உள்ள ஜெகஜீவன் ராம் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து, புதுச்சேரியின் கலை மற்றும் பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும், தாகூர் கலைக் கல்லூரியில் உள்ள மொழியியல் மற்றும் கலை நிறுவனத்தை தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார்.

    இதையடுத்து, தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், ‘‘புகழ்பெற்ற நிறுவனமான மொழியியல் மற்றும் கலை நிறுவனம் தமிழ் மொழிக்கு நிறைய தொண்டு புரிந்துள்ளது. இங்கு பல வெளிநாட்டவர்கள் வ‌ந்து தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். பல அரிய ஆராய்ச்சி நூல்கள் இங்கு உ‌ள்ளன. அவைகளை உலகம் அறிய மின்னணு நூல்களாக கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

    இத‌ன் கட்டமைப்புகளை பலப்படுத்த நடவடி‌க்கைக‌ள் மேற்கொள்ளப்படும். மேலு‌ம், கோரிக்கையை ஏ‌ற்று அர‌சு ஆணைகள் அனைத்தும் தமிழில் வெளியிட நடவடி‌க்கை மேற்கொள்ளப்படும்’’ எ‌ன்றார்.

    நலிவடைந்த தமிழ் கலைஞர்களுக்கு உத‌வி புரியவும், அவ‌ர்க‌ளி‌ன் வாழ்வாதாரத்துக்காகவும், அவ‌ர்களை தமிழ் புத்தாண்டு ம‌ற்றும் கொண்டாட்டங்களின் போது ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று துறை செயலாளரை, தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டார்.
    புதுவை வாக்குச்சாவடிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் உரிய பாதுகாப்போடு அனுப்பி வைக்கப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை )நடக்கிறது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 324 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர்கள் 70 பேரும், சுயேச்சை, இதர வேட்பாளர்களும் அடங்குவார்கள். 35 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அரசியல் கட்சிகளில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி புதுவையில் தட்டாஞ்சாவடி, ஏனாம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் காரைக்கால் வடக்கு தொகுதியிலும், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் லாஸ்பேட்டை தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மண்ணாடிப்பட்டு தொகுதியில் களமிறங்கியுள்ளார். தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா வில்லியனூரிலும், வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் ராஜ்பவன் தொகுதியிலும், காரைக்கால் மாவட்ட அமைப்பாளர் நாஜிம் காரைக்கால் தெற்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

    மாநிலம் முழுவதும் 4 லட்சத்து 72 ஆயிரத்து 341 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 31 ஆயிரத்து 383 பெண் வாக்காளர்களும் இதர பிரிவினர் 116, புலம்பெயர்ந்த இந்தியர்கள் 357, பணி வாக்காளர்கள் 310 உள்பட 10 லட்சத்து 4 ஆயிரத்து 507 வாக்காளர்கள் உள்ளனர்.

    வாக்காளர் பட்டியல்

    மாநிலம் முழுவதும் 100 சதவீத வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை, இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ள ஆதார்கார்டு, பான்கார்டு உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை காண்பித்து ஓட்டளிக்கலாம்.

    இதுதவிர தேர்தல் துறை சார்பில் வாக்காளர் சிலிப்பும் வழங்கியுள்ளனர். மாநிலம் முழுவதும் 635 இடங்களில் ஆயிரத்து 558 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 952 பிரதான ஓட்டுச்சாவடிகளும், 606 துணை ஓட்டுச்சாவடிகளும் உள்ளது.

    ஒவ்வொரு தொகுதியிலும் முற்றிலும் பெண்களால் இயங்கும் ஒரு ஓட்டுச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்காக ஆயிரத்து 558 கண்ட்ரோல் யூனிட், ஆயிரத்து 677 ஓட்டுப்பதிவு எந்திரங்களும், ஆயிரத்து 558 வி.வி.பாட் எந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது.

    அதிகபட்சமாக 16 வேட்பாளர்கள் போட்டியிடும் உழவர்கரை, நெல்லித்தோப்பு தொகுதியில் மட்டும் 2 ஓட்டு எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. 6 ஆயிரத்து 835 பேர் ஓட்டுச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் 2 ஆயிரத்து 833 பெண் அலுவலர்களும், 719 மத்திய அரசு ஊழியர்களும் அடங்குவர். மாநில போலீசார் 2 ஆயிரத்து 420 பேரும், 901 ஐ.ஆர்.பி.என். போலீசாரும், கர்நாடகாவிலிருந்து வரவழைக்கப்பட்ட 100 பேர் உள்பட 49 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர் ஆயிரத்து 490 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுவரை 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 2 ஆயிரத்து 928 பேரும், மாற்றுத்திறனாளிகள் ஆயிரத்து 546 பேரும், கொரோனா பாதித்து தனிமையில் உள்ள 34 பேரும், அத்தியாவசிய பணியில் உள்ள 68 பேரும், வாக்குச்சாவடி பணியில் உள்ள 8 ஆயிரத்து 117 பேர் உள்ளிட்ட 12 ஆயிரத்து 693 பேர் தபால் ஓட்டளித்துள்ளனர்.

    வாக்குச்சாவடிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் உரிய பாதுகாப்போடு அனுப்பி வைக்கப்பட்டது. வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அதிகாரிகள், அலுவலர்கள் அதனை பெற்றுக்கொண்டனர். தேர்தல் தினமான நாளை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கிருமிநாசின மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. வாக்குச்சாவடிக்குள் நுழையும் வாக்காளர்களுக்கு வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு கையுறை வழங்கப்படும்.

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வாக்கு சாவடிகளில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புதுவையில் 278, காரைக்காலில் 30, மாகியில் 8, ஏனாமில் 14 என 330 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஏனாமில் உள்ள 16 ஓட்டுச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் மத்திய ஆயுதப்படையினர் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வாக்குச்சாவடிகள் அனைத்திலும் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம், மாநில தேர்தல் ஆணையர் அலுவலகம் ஆகியவற்றின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. பதட்டமான வாக்குச்சாவடிகளின் வெளியிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு 7 மணி வரை நடக்கிறது.
    புதுவை கலெக்டர் பூர்வா கார்க் 144 தடை உத்தரவு குறித்து விளக்கம் அளித்து ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் நேற்று இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது.

    இதனையடுத்து நேற்று இரவு 7 மணி முதல் வருகிற 7-ந் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவை மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் பிறப்பித்துள்ளார்.

    இதன்படி தேர்தல் நிமித்தமாக சட்டவிரோதமான வகையில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுதல், ஆயுதங்கள் கம்புகள் மற்றும் பேனர்கள் வைத்திருத்தல், கோ‌ஷங்களை எழுப்புதல், ஒலிபெருக்கிகளை பயன்படுத்துதல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளது

    இந்த 144 தடை உத்தரவு சட்டவிரோதமானது என்றும், இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் ராஜாங்கம் அவசர வழக்கு தொடுத்தார்.

    இதில், புதுவையில் பொதுமக்கள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் யாருமே ஒன்று கூட கூடாது என தேர்தலுக்கு முன்பாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு இருப்பது உண்மையான ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கூறப்பட்டிருந்தது.

    விடுமுறை தினமான நேற்று மாலை காணொளி வயிலாக இந்த அவசர வழக்கை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.

    மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் அமைதியான சூழல் நிலவும் போது 144 தடை உத்தரவு பிறப்பித்து இருப்பது வெளிப்படையான மற்றும் நேர்மையான தேர்தலுக்கு முரண்பட்டதாகும் என்றும், தடை உத்தரவு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

    எனவே, இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்

    அரசு சார்பில் ஆஜரான வக்கீல் தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையிலேயே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் 144 தடை உத்தரவு போடப்பட்டதற்கு அரசு தரப்பில் உரிய காரணமும், விளக்கமும் அளிக்கவில்லை. பொத்தாம் பொதுவாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க இயலாது.

    எனவே, 144 தடை உத்தரவு எந்தெந்த காரணங்களுக்காக பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில் இந்த உத்தரவை ரத்து செய்ய நேரிடும் என எச்சரித்து வழக்கை முடித்து வைத்தனர்

    வாக்குப்பதிவு எந்திரம்

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கலெக்டர் பூர்வா கார்க் 144 தடை உத்தரவு குறித்து விளக்கம் அளித்து ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர், 144 தடை உத்தரவு வாக்களிப்பதை பாதிக்காது. கூட்டமாக சென்றோ, உறவினர்கள், நண்பர்களுடன் சென்றோ வாக்களிப்பதற்கு எந்தவித தடையும் இல்லை என்று கூறியுள்ளார்.




    வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அரியாங்குப்பம்:

    சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க புதுவையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அரியாங்குப்பம் தொகுதி வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்களது பரிந்துரையின்படி அரியாங்குப்பம் போலீசார் சுனாமி குடியிருப்புக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு 2 பேர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டு இருந்தனர். போலீசாரை கண்டதும் 2 பேரும் தப்பியோட முயன்றனர். ஆனால் அவர்களை, போலீசார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள், வீராம்பட்டினம் சிவாஜிநகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரமேஷ், முகிலன் என்பதும், காங்கிரஸ் கட்சி சார்பில் பணம் பட்டுவாடா செய்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.21 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் வ.உ.சி.நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக லாஸ்பேட்டை பாரதிநகரை சேர்ந்த பாலாஜி (37) என்பவரை பறக்கும் படை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.26 ஆயிரத்து 500 மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
    வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் 50 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கையில் தூக்கிப் பார்த்தார்.
    புதுச்சேரி:

    இந்தியாவின் 75-வது சுதந்திரதின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வனத்துறை சார்பில், சுமார் 75 ஆயிரம் மரங்கள் நட திட்டமிட்டுப்பட்டுள்ளது. இதற்காக புதுவை வனத்துறை அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

    தொடர்ந்து அவர், அங்கு பராமரிக்கப்படும் வன விலங்குகள், பறவைகளை பார்வையிட்டார். அப்போது பிரமாண்ட மலைப்பாம்பு ஒன்றினை பயப்படாமல் கையில் எடுத்து பார்த்தார். அதுமட்டுமின்றி அடிபட்ட நிலையில் பராமரிக்கப்படும் பருந்து ஒன்றையும் பார்வையிட்டார்.

    பின்னர் அவர், வனத்துறை அலுவலக வளாக பகுதியில் உள்ள காடுபோன்ற பகுதியை நடந்து சென்று பார்வையிட்டார். அங்குள்ள பழமைவாய்ந்த மரங்களை பார்த்து அவர் வியந்து போனார். அந்த மரங்கள் குறித்து வனக்காப்பாளர் சத்தியமூர்த்தி, துணை வனக்காப்பாளர் வஞ்சுளவல்லி ஆகியோர் விளக்கி கூறினார்கள்.

    நிகழ்ச்சியில் கவர்னரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஏ.பி.மகேஸ்வரி, தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், அரசு செயலாளர்கள் வல்லவன், விக்ராந்த்ராஜா, கவர்னரின் தனி செயலாளர் ஸ்ரீதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    புதுவை வனத்துறை அலுவலகத்தில் ஏராளமான பாம்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டொன்றுக்கு சுமார் 3 ஆயிரம் அளவுக்கு பாம்புகள் பிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த பாம்புகள் அவ்வப்போது வனப்பகுதியில் விடப்பட்டு வருகிறது.

    கவர்னர் கையில் எடுத்து பார்த்த மலைப்பாம்பு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வனத்துறை அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த மலைப்பாம்பு சுமார் 50 கிலோ எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகம் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகம் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 416 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 227 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 109 பேர் குணமடைந்தனர்.

    மாநிலத்தில் இதுவரை 42 ஆயிரத்து 359 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 ஆயிரத்து 83 பேர் குணமடைந்துள்ளனர்.

    தற்போது 404 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 1,188 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது 1,592 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 684 பேர் உயிரிழந்துள்ளனர்.

    நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 560 பேரும், முன்கள பணியாளர்கள் 2 ஆயிரத்து 465 பேரும், பொதுமக்கள் 2 ஆயிரத்து 14 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 80 ஆயிரத்து 198 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழகத்தில் ஏற்கனவே எடப்பாடி அரசாங்கத்தை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட்டனர். புதுவையில் கடந்த 5 ஆண்டுகளாக கவர்னர் மூலமாக அரசை முடக்கி வைத்திருந்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் உழவர் கரை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.

    அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று தொகுதி முழுவதும் பிரசாரம் செய்தார். ஜவகர்நகர் குடியிருப்பு பகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய அவர், வீதி வீதியாக திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-

    கடந்த 2001-ம் ஆண்டு முதல் தேர்தலில் கூட்டணி சார்பில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்து வருகிறோம்.

    இந்த முறை அப்படி ஒரு நிலை வரக்கூடாது என்பதற்காக ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம். கடந்த 5 நாட்களுக்கு முன்னர் ஏற்கனவே இந்த தொகுதியில் பிரசாரம் செய்தேன். தற்போது 2-வது முறையாக பிரசாரம் செய்கிறேன். இந்த முறை பானை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்து, சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். புதுவை அரசை சட்டமன்ற காலம் முடியும் சில நாட்களுக்கு முன்பு கலைத்தார்கள். அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து கலைத்தனர். பா.ஜ.க.வின் இந்த செயலுக்கு என்.ஆர். காங்கிரசும் அ.தி.மு.க.வும் ஒத்துழைப்பு அளித்தது.

    தமிழகத்தில் மட்டுமன்றி, புதுவையையும் குறிவைத்து பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது. புதுவையை கைப்பற்றியே தீருவோம் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் ஏற்கனவே எடப்பாடி அரசாங்கத்தை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட்டனர். புதுவையில் கடந்த 5 ஆண்டுகளாக கவர்னர் மூலமாக அரசை முடக்கி வைத்திருந்தனர்.

    புதுவையியில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி அரசு பணியாது என்பதால் புதுவையை கைப்பற்ற முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர்.

    பாஜக


    புதுவையை பா.ஜ.க. கைப்பற்றினால், புதுவை கலாசாரம் அரசியல் சமூகம் பாதிக்கப்படும். இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் ஒற்றுமையோடு வாழ்கின்ற நிலை மாறும். மத வெறி தூண்டப்படும், அமைதி சீர்குலைக்கப்படும்.

    இதனால் பா.ஜ.க. ஆட்சி புதுவையில் அமையக் கூடாது புதுவையில் பா.ஜ.க.வை காலூன்ற செய்யக்கூடாது. நாம் நீண்டகாலமாக காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியோடு பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து இருக்கிறோம்.

    கூட்டணியில் போட்டியிட தனித்தொகுதி வேண்டுமென கேட்டோம். ஆனால், தொகுதி ஒதுக்க முடியாத நிலையினால் பொதுத்தொகுதியை எங்களுக்கு அளித்துள்ளனர்.

    நமக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர்கள் கோடி கோடியாக பணத்தை செலவு செய்கிறார்கள். நம்மால் அதுபோல் செலவு செய்ய முடியாது.

    ஓட்டுக்கு காசு தர முடியாது. உங்களை நம்பிதான் போட்டியிடுகிறோம். லஞ்ச, ஊழலால் கோடி கோடியாக சம்பாதித்த பணத்தில் 1 சதவிகிதத்தை மட்டும் செலவு செய்கிறார்கள். பா.ஜ.க.வை தோளில் தூக்கி சுமக்கும் என்.ஆர். காங்கிரசுக்கும் பாடம் புகட்ட வேண்டும். விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
    ஏனாம் தொகுதியில் ரங்கசாமியை எதிர்த்து துர்கா பிரசாத் பொம்மடி உள்ளிட்ட 14 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபைக்கு நாளை மறுநாள் (6-ந் தேதி) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் புதுவை மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளில் 324 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி புதுவையில் தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

    ரங்கசாமி

    ஏனாம் தொகுதியில் ரங்கசாமியை எதிர்த்து துர்கா பிரசாத் பொம்மடி உள்ளிட்ட 14 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

    இந்த நிலையில் சுயேட்சை வேட்பாளர் துர்கா பிரசாத் பொம்மடி திடீரென மாயமாகி விட்டார். இது தொடர்பாக அவரது மனைவி ஏனாம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தனது கணவரை கடந்த 1-ந்தேதி முதல் காணவில்லை என கூறி உள்ளார்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் ஒரு நாட்களே உள்ள நிலையில் சுயேட்சை வேட்பாளர் மாயமாகி இருப்பது ஏனாமில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரியில் மண்ணடிபேட்டை பா.ஜ.க. வேட்பாளர் நமசிவாயம் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் வரும் 6-ம் தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறும்.  தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

    அரசியல் கட்சிகளும் பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டுவது, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பது உள்ளிட்ட பிரசார பணிகளில் ஈடுபட்டன. தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்காக தேர்தல் ஆணையமும் செயல்பட்டு வருகிறது. இதற்காக கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி வருகிறது.

    இந்நிலையில், புதுச்சேரியில் பா.ஜ.க. சார்பில் மண்ணடிபேட்டை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மந்திரியான வேட்பாளர் நமசிவாயம் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    இதனை முன்னிட்டு அவர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.  அனைவரும் பாதுகாப்புடன் இருக்கும்படியும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
    புதுவை மாநிலத்தில் மொத்தம் ஆயிரத்து 558 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 330 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி கடந்த 25-ந்தேதி முதல் 80 வயதுக்கு மேற்பட்டோர், கொரோனா நோயாளிகள், அத்தியாவசிய பணியில் ஈடுபடுவோரிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டது.

    அதன்படி நேற்று முன்தினம் வரை புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் 5 ஆயிரத்து 501 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது.

    புதுச்சேரி

    புதுவை மாநிலத்தில் மொத்தம் ஆயிரத்து 558 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 330 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு உள்ளது.

    அனைத்து வாக்குச்சாவடிகளையும் இணையவழி மூலம் கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளின் நுழைவு வாயில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வாக்குச்சாவடியில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் மாநில, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்தபடி நேரலையாக கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 6ந்தேதிக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் வருகிற 6ந்தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறும். தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

    அரசியல் கட்சிகளும் பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டுவது, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பது உள்ளிட்ட பிரசார பணிகளில் ஈடுபட்டன. தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்காக தேர்தல் ஆணையமும் செயல்பட்டு வருகிறது.

    இதுபற்றி புதுச்சேரி மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் கூறும்பொழுது, புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 6ந்தேதிக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

    புதுச்சேரி சட்டசபை

    இதன்படி, அமைதிக்கு எதிரான சட்டவிரோத வகையில் ஒன்று கூடுதல், ஆயுதங்களை வைத்திருத்தல், கம்புகள் மற்றும் பேனர்களை வைத்திருத்தல், கோஷங்களை எழுப்புதல், ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

    இந்த உத்தரவு, வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு கேட்பதற்கு தடை விதிக்காது. பொது ஊரடங்கு, மத விழாக்கள், திருமணங்கள், இறுதி சடங்குகள் அல்லது பிற தேர்தல் தொடர்புடைய செயல்களுக்கோ இது பொருந்திடாது. மக்கள் அதிகளவில் வந்து தங்களுடைய வாக்குகளை செலுத்த வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.

    ×