search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலைப்பாம்பை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கையில் பிடித்து பார்வையிட்ட காட்சி.
    X
    மலைப்பாம்பை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கையில் பிடித்து பார்வையிட்ட காட்சி.

    50 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பை கையில் பிடித்து பார்த்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் 50 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கையில் தூக்கிப் பார்த்தார்.
    புதுச்சேரி:

    இந்தியாவின் 75-வது சுதந்திரதின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வனத்துறை சார்பில், சுமார் 75 ஆயிரம் மரங்கள் நட திட்டமிட்டுப்பட்டுள்ளது. இதற்காக புதுவை வனத்துறை அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

    தொடர்ந்து அவர், அங்கு பராமரிக்கப்படும் வன விலங்குகள், பறவைகளை பார்வையிட்டார். அப்போது பிரமாண்ட மலைப்பாம்பு ஒன்றினை பயப்படாமல் கையில் எடுத்து பார்த்தார். அதுமட்டுமின்றி அடிபட்ட நிலையில் பராமரிக்கப்படும் பருந்து ஒன்றையும் பார்வையிட்டார்.

    பின்னர் அவர், வனத்துறை அலுவலக வளாக பகுதியில் உள்ள காடுபோன்ற பகுதியை நடந்து சென்று பார்வையிட்டார். அங்குள்ள பழமைவாய்ந்த மரங்களை பார்த்து அவர் வியந்து போனார். அந்த மரங்கள் குறித்து வனக்காப்பாளர் சத்தியமூர்த்தி, துணை வனக்காப்பாளர் வஞ்சுளவல்லி ஆகியோர் விளக்கி கூறினார்கள்.

    நிகழ்ச்சியில் கவர்னரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஏ.பி.மகேஸ்வரி, தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், அரசு செயலாளர்கள் வல்லவன், விக்ராந்த்ராஜா, கவர்னரின் தனி செயலாளர் ஸ்ரீதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    புதுவை வனத்துறை அலுவலகத்தில் ஏராளமான பாம்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டொன்றுக்கு சுமார் 3 ஆயிரம் அளவுக்கு பாம்புகள் பிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த பாம்புகள் அவ்வப்போது வனப்பகுதியில் விடப்பட்டு வருகிறது.

    கவர்னர் கையில் எடுத்து பார்த்த மலைப்பாம்பு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வனத்துறை அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த மலைப்பாம்பு சுமார் 50 கிலோ எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×