search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    பாஜகவுடன் என்.ஆர். காங்கிரஸ் சேர்ந்து விடும்- நாராயணசாமி திடுக்கிடும் தகவல்

    ரங்கசாமியால் சுதந்திரமாக செயல்பட முடியாது. பா.ஜ.க.வுடன் என்.ஆர். காங்கிரஸ் சேர்ந்து விடும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    சமூக வலைதளத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜ.க. என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தனியாக பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர், மக்கள் மத்தியில் நான் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிக்க தயார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேர்தலை புறக்கணிக்க தயாரா? என கேள்வி எழுப்பினார். பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் மாநில அந்தஸ்து கிடையாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    மாநில அந்தஸ்து கோரிக்கைக்காக தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி அரசை எதிர்த்து ரங்கசாமி போராட தயாரா?

    ஏற்கனவே டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்-அமைச்சருக்கும், அமைச்சரவைக்கும் உள்ள அதிகாரத்தை பறித்து கவர்னரிடம் கொடுத்து விட்டார்கள். அதேபோல் புதுச்சேரியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களிடம் இருந்து அதிகாரத்தை பறித்து கவர்னரிடம் கொடுத்து விடுவார்கள். என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜ.க.வின் ‘பி’ டீம். அந்த கட்சியை பா.ஜ.க. ஆட்டிப்படைக்கும். அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியாது. மாநில அந்தஸ்து பெற்றுத்தருவதாக உறுதி அளித்து கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த என்.ஆர்.காங்கிரஸ் அதை நிறைவேற்றவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக பா.ஜ.க. கூட்டணியில் இருந்தும் மாநில அந்தஸ்தை பெறவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கக் கூடாது என்பது தான் பா.ஜ.க.வின் கொள்கை.

    கவர்னரிடம் நான் தொடர்ந்து தகராறு செய்ததால் மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்பட்டதாக ரங்கசாமி போகும் இடமெல்லாம் பேசுகிறார். நாங்கள் அடிப்படை மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். காலத்தோடு உதவித்தொகைகளை வழங்கி உள்ளோம்.

    மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளது. பா.ஜ.க. ஆட்சி வந்தால் புதுச்சேரியின் தனித்தன்மை, கலாசாரம் போய்விடும். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.அதுமட்டுமல்லாமல் பா.ஜ.க. மதகலவரத்தை உருவாக்கும். பிரிவினையை உருவாக்கும். மக்கள் நிம்மதியாக இருக்க முடியாது. தனி மனித சுதந்திரம் பறிக்கப்படும். பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும். என்.ஆர்.காங்கிரஸ் முழுமையாக பா.ஜ.க.வுடன் ஐக்கியமாகிவிடும். ரங்கசாமி தனிமைப்படுத்தப்படுவார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×