என் மலர்
விருதுநகர்
- கும்பாபிஷேகத்துக்கான பூமி பூஜை தொடங்கியது.
- தமிழகம் முழுவதும் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பூக்குழி திருவிழா விமர்சையாக நடைபெறும். இதில் தமிழகம் முழுவதும் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள்.
இந்த கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான பூமிபூஜை நடந்தது. இதில் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். நகர்மன்றத் துணைத் தலைவர் செல்வமணி, கோவில் செயல் அலுவலர் சத்திய நாராயணன், ஊர் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
- அருப்புக்கோட்டையில் 4 வழிச்சாலையில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
பாலையம்பட்டி
திருப்பூரில் இருந்து பனியன் துணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு கண்டெய்னர் லாரி தூத்துக்குடி துறைமுகம் நோக்கி சென்று புறப்பட்டது. லாரியை சீதாராமன் (வயது 52) என்பவர் ஓட்டி வந்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை புறவழிச்சாலை வழியாக கன்டெய்னர் லாரி இன்று காலை வந்து கொண்டிருந்தது. சாய்பாபா கோவில் அருகே வந்தபோது லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை மைய தடுப்பில் மோதியது. இதில் 4 வழிச்சாலையில் கண்டெய்னர் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் கிரேன் உதவியுடன் கவிழ்ந்து கிடந்த கண்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தனர்.காலை வேளையில் ஏற்பட்ட விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் என அரசு செயலாளர் கூறினார்.
- இருப்பிடத்திற்கு அருகிலேயே வேலை வாய்ப்பினை வழங்க தேவையான வழிவகைகள் செய்ய வேண்டும்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்த மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் லால்வேனா, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்தி றனாளிகளுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில், மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை, அடையாள அட்டை வழங்கப்பட்ட விவரம் குறித்து முழுமையான கணக்கெடுப்பு பணி கள் மேற்கொள்ள வேண்டும்மாற்று த்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID – Unique Disability Identity Card) வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்த வங்கிகளில் தொழில்கடன் பெறவும், அவர்களுக்கு இருப்பிடத்திற்கு அரு கிலேயே வேலை வாய்ப்பினை வழங்க தேவையான வழிவகைகள் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மாதம் ஒருமுறை சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்தி ட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்றார்.
முன்னதாக, சிவகாசி, சாட்சியாபுரம் சி.எஸ்.ஐ மனவளர்ச்சி குறையுடையோர் பள்ளிக்கு சென்று, வகுப்பறைகளை ஆய்வு செய்தார். அங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து கேட்டறிந்தார்.
18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் தொழில்சார்ந்த பயிற்சிகள் மற்றும் அவர்களால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களையும் பார்வையிட்டார். தசைபயிற்சி மையத்தில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் லால்வேனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், சிவகாசி சார் ஆட்சியர் பிருத்திவிராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூ. செயலாளர் முத்தரசன் பேட்டியளித்தார்.
- இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமை தாங்கினார்.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்களின் வாழ்வுரிமை வளர்ச்சி அடிப்படையில் முதன்மை மாவட்ட மாக உருவாக்குவதற்கான செயல்திட்டத்தை பொது மக்களிடம் விளக்கிக்கூறும் வகையில் 3 இடங்களில் இருந்து பாத யாத்திரை தொடங்கியது.
வத்திராயிருப்பில் பாதயாத்திரையை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற ஆகஸ்டு 9-ந் தேதி வெள்ளையனே வெளியேறு என்ற பிரமாண்ட பேரணி திருப்பூரில் நடைபெற உள்ளது. அந்தப்பேரணியை அண்ணாமலை வந்து பார்க்கட்டும். அப்போது அவருக்கு தெரியும் கம்யூ னிஸ்டு கட்சிக்கு சுவடு இருக்கிறதா?, இ்ல்லையா? என்று.
விருதுநகர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் பட்டாசு மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் கிடைக்கி றது. எனவே பட்டாசு தொழில் பாதுகாக்கப்பட வேண்டும். பட்டாசு தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்களு க்கும் சட்டரீதியான உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அரசு செய்ய க்கூடிய நல்ல திட்டங்களை இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரிக்கும். மக்களுக்கு எதிராக ஏதாவது பிரச்சினை வந்தால் உடனடியாக தயக்க மில்லாமல் விமர்சனம் செய்வோம். தி.மு.க.வுடன் கம்யூனிஸ்டு கட்சி தோழமை கட்சியாக நீடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமை தாங்கினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பொண்ணு பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் கோவிந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மாணவர்களை நேரில் சென்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.
- இந்தியாவிலேயே கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் முதல்வர் தமிழக முதல்வர் தான் எனக்கூறினார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் கோடை விடுமுறை முடிந்து அரசு பள்ளிகளுக்கு வருகை புரிந்த மாணவ- மாணவிகளை வகுப்பறைகளுக்கு நேரில் சென்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வரவேற்றார். அவர்களுக்கு காலை வணக்கம் கூறி நன்றாக படித்து முன்னுக்கு வாருங்கள் என வாழ்த்தி உற்சாகப்படுத்தினார்.
ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியனார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், மேலப்பாட்டகரிசல்குளம் ஊராட்சி திருவள்ளுவர் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கும் சென்று மாணவர்களை சந்தித்து வாழ்த்து கூறி அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என்று கூறினார்.
மாணவர்களை சந்திக்க வகுப்பறைக்கு செல்லும்போது வகுப்பில் போதிய வெளிச்சம் இல்லாதை அறிந்து சொந்த செலவில் வகுப்பறைக்கு தேவையான மின்விளக்கு, மின்விசிறி வசதி விரைவில் செய்துதரப்படும்எனக்கூறினார்.
பள்ளிக்கு என்னென்ன வசதி வேண்டுமென மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் கேட்கையில் 9,10-ம் வகுப்பு மாணவர்கள் சீருடை வேண்டுமென கூறினர். ஏழை எளிய மாணவர்களுக்கு தலைமை ஆசிரியரின் பரிந்துரையின்படி சீரூடை வழங்கப்படும் என்று எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
மேலும் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவியும், மாணவர்கள் இருக்கை வசதியும் வேண்டுமென கோரிக்கை விடுத்தார். சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக்கூறினார்.
அதனைத்தொடர்ந்து பேசிய அவர் , மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க எந்தெந்த மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என கண்டறிந்து அவர்களது வீட்டிற்கே சென்று படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லி அவர்களை பள்ளிக்கு அழைத்து வர வேண்டுமென தலைமை ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டார். இந்தியாவிலேயே கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் முதல்வர் தமிழக முதல்வர் தான் எனக்கூறினார்.
மேலும் திருவள்ளுவர் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பில் ராக்கேஷ் என்ற மாணவரை தமிழின் இனிமைப் பாடலை வாசிக்கச் சொல்லி வாசிப்பு திறனை கேட்டறிந்தார். குழந்தைகளுக்கு புதிய புத்தகங்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் குணசீலன்,ஜெயலட்சுமி தி.மு.க. நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா, ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ், கிளை செயலாளர் அங்குராஜ் மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- கல்லூரி மாணவிகள் மாயமாகின.
- இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை சேர்ந்தவர் சரஸ்வதி இவரது மகள் சிவகாசியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று வெளியே சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
சிவகாசி தென்றல் நகரைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவரது மகள் கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர் பின்னர் மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- நேபாள நாட்டில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் சாதனை படைத்த சகோதரிகளுக்கு வரவேற்பு அளித்தனர்.
- இதில் சக்தி பிரியா தங்கப்பதக்கத்தையும், விஷாலி வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.
வத்திராயிருப்பு
நேபாள நாட்டில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் இந்தியாவின் சார்பில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட வ.புதுப்பட்டியை சேர்ந்த சகோதரிகளான விஷாலி (18), சக்தி பிரியா (17) ஆகியோர் பங்கேற்றனர். இதில் சக்தி பிரியா தங்கப்பதக்கத்தையும், விஷாலி வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.
இருவரும் நேற்று காலை சொந்த ஊரான வ.புதுப்பட்டி கிராமத்திற்கு திரும்பினர். பதக்கம் வென்ற சகோதரிகள் இருவருக்கும் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் இருவரையும் கிராம மக்கள் பேரணியாக அழைத்து சென்றனர். பதக்கம் வென்ற சகோதரிகள் கூறுகையில், நாங்கள் யாரிடமும் யோகா பயிற்சி பெறவில்லை. யூடியூப் மூலமாக பயிற்சி செய்ய கற்றுக்கொண்டோம். ஏழ்மை நிலையில் உள்ள எங்களுக்கு தமிழக அரசு சிறந்த பயிற்சியாளரை நியமித்தால் இன்னும் பல பதக்கங்களை வெல்ல முடியும் என்றனர்.
- கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடம் இருந்த 400 கிராம் கஞ்சா மற்றும் ரூ.600-ஐ பறிமுதல் செய்தனர்.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பிபட்டி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது தம்பிபட்டி தனியார் மில் அருகே பைக்கில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்த போது அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
இருவரையும் வத்திராயிருப்பு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தபோது கூமாபட்டி அமச்சியார்புரம் காலனியைச் சேர்ந்த முத்துச்செல்வம் (25), அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் (18) என்பது தெரியவந்தது. 2 வாலிபர்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 400 கிராம் கஞ்சா மற்றும் ரூ.600-ஐ பறிமுதல் செய்தனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்.
- சூறை காற்றுடன் பெய்த பலத்த மழையில் பழமையான மரங்கள் சாய்ந்து விழுந்தன.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், காரியாபட்டி ஆகிய பகுதிகளில் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதில் பழமையான மரங்கள் சாய்ந்து விழுந்தன. சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சிவகாசி 11, விருதுநகர் 20.8, ராஜபாளையம் 20, காரியாபட்டி 30.2, வெம்பக்கோட்டை 23.2, கோவிலாங்குளம் 19.8. மாவட்டத்தில் 175 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.
- தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தாயை தொந்தரவு செய்து வந்துள்ளார்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள எஸ். ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் வெயில் முத்து. இவரது மனைவி சுந்தரவல்லி (வயது 42). நெசவு வேலை பார்த்து வருகிறார்.
இவர்களது மகன் பூமாலை ராஜா வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையானார். அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தாயை தொந்தரவு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இது தொடர்பாக சுந்தரவல்லியிடம் பூமாலை ராஜா பிரச்சினை செய்துள்ளார்.
அப்போது ஆத்திரத்தில் தாயை அடித்து உதைத்த பூமாலை ராஜா கொலை மிரட்டலும் விடுத்தார். இதில் காயமடைந்த சுந்தரவல்லி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை மேற்கொண்டார்.
- இதில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது தொடர்பான அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-
தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட காரணத்தால் மாவட்டத்தில் ஆங்காங்கே சில இடங்களில் வைரஸ் காய்ச்சல் மற்றும் ஏ.டி.ஸ். கொசுக்களால் பரவும் டெங்கு மற்றும் இதர வைரஸ் காய்ச்சல் நோய் தென்படுகிறது.
பொதுமக்கள் மழைக்காலங்களில் பரவும் வைரஸ் காய்ச்சல் மற்றும் ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு வீடுகளைச் சுற்றியும் மொட்டை மாடிகளிலும் தேவையற்ற பொருட்களை சேமித்து வைப்பதால் இவற்றில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி ஏடிஸ் கொசுக்கள் உருவாகக்கூடிய வாய்ப்பு உள்ளது.
மேலும் வீட்டின் உள்ளேயும் நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். மேலும் பயன்படுத்தக்கூடிய பாத்திரங்களை வாரம் இருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் மழை நீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாத வகையில் நிறுவனங்களை சுத்தமாக பேணிகாக்க வேண்டும்.
மேலும் வாகனங்களை பழுது நீக்கும் இடங்களில் உள்ள டயர்களில் மழை நீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் சாமான் வாங்கி விற்கும் கடைகளில் உள்ள பொருட்களை மழை நீர் தேங்காமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். புதிய கட்டிடங்கள் கட்டும் இடங்களில் நீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்வது சம்பந்தப்பட்ட உரிமையாளரின் கடமையாகும். இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது பொது சுகாதார சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) யசோதாமணி (விருதுநகர்), கலுசிவலிங்கம் (சிவகாசி) மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையம், சிவகாசியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
- சில இடங்களில் நெல் அறுவடை முடிவடையாமல் இருப்பதால் மழையின் காரணமாக விளைந்த நெற்பயிர்கள் சேதமானதாக விவசாயிகள் சிலர் கவலை அடைந்துள்ளனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் கடும் வெயில் அடித்தது. இந்த நிலையில் மாலை 4.30 மணி அளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்தது.
இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்ேபாது பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் ராஜபாளையம்-தென்காசி தேசிய நெடுஞ்சாலை, காந்தி சிலை ரவுண்டானா, சங்கரன்கோவில் விலக்கு, பஞ்சு மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. ராஜபாளையம் பழைய நீதிமன்ற பகுதி உள்ளிட்ட சில இடங்களில் மரங்ள் சாலையில் முறிந்து விழுந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் இருசக்கர வாகனங்களை இயக்கி செல்ல மிகவும் சிரமப்பட்டனர். கடந்த சில நாட்களாக விட்டு,விட்டு மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது.
தற்போது அறுவடை முடிந்து பின்னர் அடுத்த சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பெய்த மழை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் சில இடங்களில் நெல் அறுவடை முடிவடையாமல் இருப்பதால் மழையின் காரணமாக விளைந்த நெற்பயிர்கள் சேதமானதாக விவசாயிகள் சிலர் கவலை அடைந்துள்ளனர்.
சிவகாசியிலும் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் மழைநீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் போது ரிசர்வ்லைன் பகுதியில் இடி விழுந்ததில் பல ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் அருகில் இருந்த மின் கம்பங்கள் சேதமடைந்து அந்தப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு மரங்களை அப்புறப்படுத்தினர்.






