என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • போலி ஆவணம் தயாரித்து நில மோசடியில் தாசில்தார் உள்பட 4 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
    • கடந்த 2011-ம் ஆண்டு போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்ததாக தெரிகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் 334. 75 சதுர மீட்டர் நிலம் உள்ளது.

    இந்த நிலத்தை சூலக்கரையை சேர்ந்த நாராயணன், சின்னமுத்து, அருப்புக்கோட்டை மண்டல முன்னாள் துணை தாசில்தார் ரவிச்சந்திரன், சூலக்கரை முன்னாள் கிராம நிர்வாக அதிகாரி கணபதி சுப்புராம் ஆகியோர் கடந்த 2011-ம் ஆண்டு போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்ததாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கதிர்வேல் இது தொடர்பாக விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி நில மோசடி தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் சூலக்கரை போலீசார் ஓய்வு பெற்ற துணை தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    • அருப்புக்கோட்டை அருகே அரசு பள்ளி ஆசிரியை மர்மமாக இறந்தார்.
    • தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டியைச் சேர்ந்தவர் பண்டரிபாய் (வயது 51). இவர் பரளச்சி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். 15 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து விட்டார். இதன் காரணமாக பண்டரிபாய் தனியாக வசித்து வந்தார். மேலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று உறவினர் தீபக்ராஜ் என்பவர் பண்டரிபாயை பார்க்க வீட்டுக்கு சென்றார். அப்போது நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப்பகுதியினர் கதவை உடைத்து பார்த்தபோது பண்டரிபாய் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பண்டரிபாய் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனை முன்பு வந்த போது சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதியது.
    • அப்போது அந்த வழியாக வந்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. விபத்து நடந்ததை அறிந்ததும் தனது காரை விட்டு இறங்கி மீட்டு பணியில் ஈடுபட்டார்.

    ராஜபாளையம்

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு ஒரு அரசு பஸ், 42 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனை முன்பு வந்த போது சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதியது.

    இதில் பஸ்சின் முன்பக்க அச்சு முறிந்து சக்கரங்கள் கழன்று ஓடியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 16 ஆண்கள், 2 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 21 பேர் படுகாயம் அடைந்தனர். அதே வேளையில் பழங்கள் ஏற்றி வந்த ஒரு சரக்கு வேன் மோதி பஸ்சின் பின்புறம் புகுந்தது.

    அப்போது அந்த வழியாக வந்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. விபத்து நடந்ததை அறிந்ததும் தனது காரை விட்டு இறங்கி மீட்டு பணியில் ஈடுபட்டார். அவருடன் நகரசெயலாளர் ராமமூர்த்தி மற்றும் ஆதரவாளர்கள் அவருக்கு உதவி புரிந்தனர்.

    விபத்தில் காயமடைந்த வேன் டிரைவர் திருமலைக்குமார் (வயது 45), தென்காசி நைனாபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (40) ஆகிய இருவரை ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராமன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் 1 மணி நேரம் போராடி மீட்டனர்.

    மீட்கப்பட்ட இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த அரசு பஸ் டிரைவர் வேல்முருகன் (55) மற்றும் பயணிகள் 21 பேர் மீட்கப்பட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    • தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    அருப்புக்கோட்டை

    தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் அறிவுறுத்தலின் பேரில் டி.எஸ்.பி. சகாய ஜோஸ் அருப்புக்கோட்டை நகர் காவல் துறையில் தனிப்படை அமைத்து செயல்படுத்தினார்.

    தனிப்படை சார்பு ஆய்வாளர் தாமரைக் கண்ணன், நாகராஜ பிரபு, தலைமை காவலர் அன்பழகன் ஆகியோர் அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் கடைகளை சோதனை செய்தனர். அப்போது 3 இடங்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை இருப்பது தெரியவந்தது.

    வெள்ளக்கோட்டை, மலையரசன் கோவில் தெரு மற்றும் பாலையம்பட்டி பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இது குறித்து நகர் காவல்துறையினர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் காசிமிடம் புகார் செய்தனர்.

    உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நேரில் ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருளை விற்ற ேமற்கண்ட 3 கடைகளுக்கும் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார்.

    • காட்டுயானைகள் அட்டகாசத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நாசமானது.
    • கடந்த 3 நாட்களாக இந்த பகுதியில் யானை கூட்டம்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கல்லாத்து காடு உள்ளது. இங்குள்ள விளைநிலங்களுக்குள் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

    கல்லாத்துக்காடு பகுதியில் தர்மபுரம் தெருவைச் சேர்ந்த முத்து பாலா ராஜா என்பவர் வாழை, தென்னை, மா, பலா மரங்களை விவசாயம் செய்து வருகிறார். இவரது தோப்பிற்குள் கடந்த 3 தினங்களாக தொடர்ந்து காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    காட்டுயானைகள் அட்டகாசத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நாசமானது.மேலும் காட்டுயானைகள் பலா மரத்தில் காய்த்துக் கிடந்த பலாக் காய்களை கீழே தள்ளி மிதித்தும், கம்பி வேலிகளை தகர்த்து எறிந்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.

    இதுகுறித்து வனத்துறையினரிடம் முத்து பாலா ராஜா பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் கடும் அச்சத்தில் உள்ளனர்.

    கடந்த 3 நாட்களாக இந்த பகுதியில் யானை கூட்டங்கள் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருவதால் மின் வேலி அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.

    • விருதுநகர் தொழிலாளி கொலையில் தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியாண்டி, அவரது மகன் அஜித்குமாரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் லட்சுமி நகரை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி முத்து.இவர்களது மகன் அஜித்குமார்.

    விருதுநகர் தெப்பம் பகுதியில் முனியாண்டி மனைவி முத்து ஜூஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளத்தை சேர்ந்த சவுந்தரராஜன் (48) என்பவருக்கு தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் முத்து ரூ. 3லட்சம் கடன் வாங்கி கொடுத்தார். கடந்த சில மாதங்களாக சவுந்தர்ராஜன் வட்டி பணத்தை கொடுக்கவில்லை.

    இது தொடர்பாக பேச, சவுந்தர்ராஜன் நேற்று முத்து வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கிருந்த முனியாண்டி, மகன் அஜித்குமார் ஆகியோர் கடன் தொடர்பாக வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த தந்தை-மகன் 2 பேரும் சவுந்தர்ராஜனை சரமாரியாக அடித்து தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சவுந்தர்ராஜன் இறந்த விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த கொலை தொடர்பாக சின்னமூப்பம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சமயன் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியாண்டி, அவரது மகன் அஜித்குமாரை கைது செய்தனர்.

    • 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைதானார்.
    • வாலிபர் போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்,

    ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வாலிபர் ஒருவர் சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவதாக சமூக ஆர்வலர் ராஜேஸ்வரிக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர் அந்தப்பகுதிக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

    அப்ேபாது கூலித்தொழிலாளியான திருவண்ணாமலையைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 26) என்பவர், ஸ்ரீவில்லி புத்தூரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததும், அந்த சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து ஸ்ரீவில்லி புத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் கூறப்பட்டுள்ள வாலிபர் சுரேஷ்குமார் மீது போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லூரி மாணவி-இளம்பெண் மாயமாயினர்.
    • போலீசார் வழக்கு பதிந்து மாயமான மாணவிகளை ேதடி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அங்குள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம். படித்து வந்தார். மேலும் தையல் வகுப்பிற்கும் சென்று வந்தார்.

    நேற்று வழக்கம் போல் தையல் வகுப்பிற்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் மாணவி மாயமானது குறித்து கிருஷ்ணன் கோவில் போலீஸ் நிலையத்தில் அவரது தாய் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான மாணவியை ேதடி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் பெரும்பல்சேரி பகுதியைச் சேர்ந்தவர் வேலம்மாள். இவரது 21 வயது மகள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் படுத்து தூங்கினார். நேற்று காலை பார்த்தபோது அவர் வீட்டில் இல்லை. மாயமான அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவர் மாயமானது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலம்மாளின் மகளும், வாலிபர் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த வாலிபருடன் மாயமா னாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அருப்புக்கோட்டை அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி தெற்கு தெருவில் வசிப்பவர் புன்னைவனம். இவரது மகன் அழகர் (வயது 36). இவர் தனியார் மில்லில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்றிரவு அழகர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அழகரின் உடலை கைப்பற்றி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழங்கங்களை எழுப்பினர்.

    சிவகாசி

    சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பராசக்தி காலனி பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஏராளமானோர் கூலி தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபானகடை அமைய ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், குடியிருப்பு பகுதியில் மன மகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபானகடை அமைக்க மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசாங்கமும் அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி பா.ஜ.க.வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழங்கங்களை எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் சுரேஷ், திருத்தங்கல் கலையரசன், பாட்டக்கு ளம் பழனிச்சாமி, வழக்க றிஞர்பாலசுப்பிரமணியம், ஆறுமுகசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    • வைகாசி மாத பவுர்ணமியான நேற்று பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.
    • சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஒரு உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்து உள்ளது. வைகாசி மாத பவுர்ணமியான நேற்று பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக நேற்று அதிகாலை நேரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஒரு உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் 200-க்கு மேற்பட்டோர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
    • விருதுநகர் மேற்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர் சிஜு முன்னிலை வகித்தார்.

     ராஜபாளையம்

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை செய்வதை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமையில் ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் 200-க்கு மேற்பட்டோர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். விருதுநகர் மேற்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர் சிஜு முன்னிலை வகித்தார்.

    ராஜபாளையம் நகர காங்கிரஸ் தலைவர் சங்கர்கணேஷ், கிழக்கு வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன், மேற்கு வட்டார தலைவர் கணேசன், மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ராஜாலிங்கராஜா, பொன்.சக்திமோகன், சங்குத்துரை,ராஜ்மோகன், கவுன்சிலர்கள் சங்கர்கணேஷ், புஷ்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×