என் மலர்
உள்ளூர் செய்திகள்

டெங்கு பரவல்: கலெக்டர் ஆலோசனை
- விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை மேற்கொண்டார்.
- இதில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது தொடர்பான அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-
தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட காரணத்தால் மாவட்டத்தில் ஆங்காங்கே சில இடங்களில் வைரஸ் காய்ச்சல் மற்றும் ஏ.டி.ஸ். கொசுக்களால் பரவும் டெங்கு மற்றும் இதர வைரஸ் காய்ச்சல் நோய் தென்படுகிறது.
பொதுமக்கள் மழைக்காலங்களில் பரவும் வைரஸ் காய்ச்சல் மற்றும் ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு வீடுகளைச் சுற்றியும் மொட்டை மாடிகளிலும் தேவையற்ற பொருட்களை சேமித்து வைப்பதால் இவற்றில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி ஏடிஸ் கொசுக்கள் உருவாகக்கூடிய வாய்ப்பு உள்ளது.
மேலும் வீட்டின் உள்ளேயும் நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். மேலும் பயன்படுத்தக்கூடிய பாத்திரங்களை வாரம் இருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் மழை நீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாத வகையில் நிறுவனங்களை சுத்தமாக பேணிகாக்க வேண்டும்.
மேலும் வாகனங்களை பழுது நீக்கும் இடங்களில் உள்ள டயர்களில் மழை நீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் சாமான் வாங்கி விற்கும் கடைகளில் உள்ள பொருட்களை மழை நீர் தேங்காமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். புதிய கட்டிடங்கள் கட்டும் இடங்களில் நீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்வது சம்பந்தப்பட்ட உரிமையாளரின் கடமையாகும். இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது பொது சுகாதார சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) யசோதாமணி (விருதுநகர்), கலுசிவலிங்கம் (சிவகாசி) மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






