என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • சீனிவாச பெருமாள்கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இங்கும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்திருப்பதி என்று அழைக்கபடும் திருவண்ணா மலை சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

    மேலும் இன்று புரட்டாசி 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று அதிகாலை 3 மணிக்கு சீனிவாசப் பெருமாளுக்கு திருமஞ்சனம், 5.30 மணிக்கு காலசாந்தி பூஜை ஆகியவை நடந்தது. இதில் ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் பலர் இங்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஆடு, மாடுகள், விவசாய பொருட்கள், தானிய பொருட்கள் ஆகியவற்றை சீனிவாசப்பெருமாளுக்கு காணிக்கையாக வழங்கி வருகிறார்கள்.

    இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பஸ் வசதிகள், மருத்துவம், குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 30-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கபட்டு வருகின்றனர்.

    விழா ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள காட்டழகர் கோவிலிலும் 4-ம் சனிக்கிழமை பிரமோற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது. இங்கும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • எடை அளவுகளை முத்திரையிடாமல் பயன்படுத்திய வியாபாரிகள் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
    • 2009-ம் வருட சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், மதுரை கூடுதல் தொழிலாளர், ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும் ஆணையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும்,

    விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை கடைகள், இனிப்புக் கடைகள் மற்றும் நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.

    அப்போது எடை அளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 8 வியாபாரிகள் மீதும், எடையளவுகள் மறுமுத்திரையி டப்பட்டதற்கான சான்றினை நுகர்வோர்கள் பார்க்கும் வகையில் வெளிக்காட்டி வைக்காத 12 வியாபாரிகள் மீதும், தராசின் எடையினை சரிபார்க்க வியாபாரிகள் வைத்திருக்க வேண்டிய சோதனை எடை கற்கள் வைத்திருக்காத 7 வியாபாரிகள் மீதும், 2009-ம் வருட சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தும் வியாபாரிகளுக்கு சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் முதல் குற்றச்சாட்டிற்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமும். 2-ம் மற்றும் அதற்கு அடுத்த குற்றங்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் கோர்ட்டு மூலம் விதிக்க வழிவகை உள்ளது.

    சிவகாசி, விருதுநகர் தொழிலாளர் துணை ஆய்வாளர்களான முத்து, சதாசிவம், விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்களான தயாநிதி, உமாமகேஸ்வரன், துர்கா, பாத்திமா, முருகன், சிவசங்கரி ஆகியோர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்தார்.

    • மாணவர்கள் கொடுக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தினார்.
    • மாணவர்களின் நலனுக்காக பள்ளி கல்வி துறைக்கு அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் தியாகராஜா தொடக்க பள்ளியில் இல்லம் தேடி கல்வி மையத்தில் படிக்கும் பெற்றோரை இழந்த மாணவ- மாணவிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் ரவிகண்ணன் முன்னிலை வகித்தார். இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் வரவேற்றார்.மாதா அமிர்தானந்த மயி மடத்துடன் இணைந்த மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் பெற்றோரை இழந்த 126 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.1000 மதிப்பிலான புத்தாடைகள் வழங்கப்பட்டது.

    முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி மாணவர்களுக்கு புத்தாடைகளை வழங்கி பேசுகையில், மாணவர்கள் சிறு வயதில் இருந்தே கொடுக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். எங்களிடம் என்ன இருக்கிறது கொடுப்பதற்கு? என்று நீங்கள் கேட்கலாம்.சக மாணவர்களுக்கு ஆதரவு, பாராட்டு, நம்பிக்கை அளிப்பது என எல்லாமே உதவிகள் தான். மாணவர்களின் நலனுக்காக பள்ளி கல்வி துறைக்கு அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனைப் பயன்படுத்தி நாட்டிற்கும், குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ள வர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும் என்றார்.

    மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் கஜேந்திரன், சிவகாசி மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) எம்பெருமான், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதி மணிராஜன், தலைமை ஆசிரியர் பழனிச்சாமி, பள்ளிக்குழு தலைவர் ஆதிநாராயணன் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார இல்லம் தேடி திட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

    • கொல்கத்தாவில் நடந்த தேசிய ஹேக்கத்தான் போட்டியில் சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்தது.
    • இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    மத்திய அரசின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி மையம், இந்திய தேசிய பொறியியல் அகாடமி மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் இணைந்து தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டியை நடத்தியது.

    கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியின் மின்னனுவியல் மற்றும் தொலை தொடர்பியல் துறை மாணவர்கள் எம்.இசக்கிமுத்து, கே.ஹரி தினேஷ்குமார்,

    எம்.மனோஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ''டாப்-5'' இடம் பெற்று சாதனை படைத்தனர்.

    போட்டியின் முதல் சுற்றில் மாணவர்கள் தங்கள் செயல்திட்டத்திற்கான விளக்கத்தை ஆன்லைனில் சமர்ப்பித்தனர்.அதில் இருந்து மொத்தம் 95 அணிகள் மட்டுமே ேதர்வு செய்யப்பட்டனர்.இதில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆர்ட்டிபிசியல் இன்டலிஜன்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ''பங்குச் சந்தை கணிப்பு'' என்ற தலைப்பில் செயல் திட்டத்தை வெளியிட்டனர்.

    தொடர்ந்து 30 மணி நேரம் நடந்த ஹேக்கத்தான் போட்டியில் திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி, முதல்வர் மாரிச்சாமி, துறைத்தலைவர் வளர்மதி, பேராசிரியர்கள் கருப்பசாமி, மதினா, விமலா ஆகியோர் பாராட்டினர். 

    • ராஜபாளையம் அருகே புரட்டாசி தேரோட்ட திருவிழா நடந்தது.
    • இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட மாரி யம்மன் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி பொங்கல் தேர் திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன் பின் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று தோரோட்டம் நடைபெற்றது. ஏ.கே.ஆர். குழும தலைவர் காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

    ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தேருக்கு பின்னால் விழுந்து வழிபாடு செய்து தங்களுடைய நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.

    • ரேசன் கடைகள் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.
    • மண்டல இணைப்பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்க ளால் நடத்தப்படும் நியாயவிலைக்கடைகளில் காலிப்பணியிடங்களாக உள்ள 146 விற்பனையா ளர்கள் மற்றும் 18 கட்டுநர்கள் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து https//www.vnrdrb.net என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

    விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான விண்ணப்பதார ர்களுக்கான அறிவுரைகள் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி? போன்ற விவரங்கள் மேற்கண்ட இணையதள முகவரியிலும், https://youtube/G6c5e2ELJD8 என்ற யூடியூப் சேனலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையிடம் மற்றும் அதன் கிளைகளில் விண்ணப்பக் கட்டணங்கள் செலுத்த தேவையான செலான்களை மேற்காண்ட இணைய வழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விண்ணப்பிக்கும் முறை குறித்து எழும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் www.vnrdrb2022@gmail.com என்ற இ-மெயில் மூலமும், உதவி மைய தொலைபேசி எண்: 04562-290769 வாயிலாகவும் விருதுநகர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான கண்காட்சி நடந்தது.
    • மாணவர்களின் வளர்ச்சிக்கு வகுப்பறை கல்வியுடன் ஆய்வு சார்ந்த கல்வியும் தேவை என்றும் கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் உயிர்த்தொழில்நுட்பவியல் ஆகிய துறைகள் இணைந்து ''காளீஸ் எக்ஸ்போ'' என்ற தலைப்பில் 3 நாள் கண்காட்சியை நடத்துகிறது.

    கல்லூரி கலையரங்கில் நடைெபறும் இந்த கண்காட்சி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலர்

    அ.பா. செல்வராசன் தலைமை தாங்கினார்.

    முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, சிவகாசி உதவி கலெக்டர் பிருதிவிராஜ், விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி ஆகியோர் பேசினர். விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தொடக்கவுரையாற்றினார்.

    அவர் பேசுகையில், கல்வி சார்ந்த கண்காட்சி மூலம் மாணவர்கள் அடையும் பலன்கள் மற்றும் இது போன்ற கண்காட்சிகள் மாணவர்கள் முன்னேற்றத்திற்கான அடிகல்லாக அமையும் என்றார். மாணவர்களின் வளர்ச்சிக்கு வகுப்பறை கல்வியுடன் ஆய்வு சார்ந்த கல்வியும் தேவை என்றும் கூறினார்.

    மாணவர்கள் அறிவியல், கணிதம் மற்றும் கலை ஆகிய அனைத்து துறைகளையும் பொருத்தி கற்க வேண்டும். மாணவர்கள் தவறில் இருந்து கற்றல், கேள்வி ஞானம் மூலம் தம்மை செம்மைபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கலெக்டர் கூறினார்.

    துணை முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். துணை முதல்வர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.

    • வளைகாப்பு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • விழாவில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், சாத்தூர் யூனியன் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், வட்டாட்சியர் ரங்கராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் முன்னிலை வகித்தார்.

    இதில் 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார். மேலும், வருவாய்த்துறை சார்பில், 36 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.36 ஆயிரம் மதிப்பில் முதியோர் உதவித்தொகைகளையும், 65 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 97 ஆயிரத்து 215 மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் என மொத்தம் 101 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 33ஆயிரத்து 215 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.பின்னர் கலெக்டர் பேசுகையில், ஒரு குழந்தையின் வளர்ச்சி, கருவாக உருவான நாளில் இருந்தே ஆரம்பமாகிறது. இதனை மனதில் கொண்டு கர்ப்பிணி பெண்கள், கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பது அறிவியல் பூர்வமான நிகழ்ச்சியாகும்.

    வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த வாய்ப்பும் நன்மை யும் கிடைக்காமல், அவர்களின் குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற தொலைநோக்குப் பார்வையுடன் செயல்ப டுத்தப்பட்டு வரும் திட்டம் இந்த வளைகாப்பு திட்டம் ஆகும்.

    சாதி, மத வேறுபாடின்றி கர்ப்பிணி தாய்மார்களும் இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகிறார்கள்.வருங்கால சந்ததியரை உருவாக்கும் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும், கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

    விழாவில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், சாத்தூர் யூனியன் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், வட்டாட்சியர் ரங்கராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தனியார் பாலிடெக்னிக்கில் ரூ.41 ½ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள ஆனைக்குட்டத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கல்லூரி நிர்வாக குழு தலைவர் சுதர்சன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் எங்களது கல்லூரியில் 2017-18, 2019-20 ஆகிய ஆண்டின் கல்விக்கட்டணம், விடுதி கட்டணம் ஆகியவற்றை ஆய்வு செய்த போது கல்லூரியில் கணக்காளராக பணிபுரிந்த சிவகாசி செங்கமலநாச்சியாபுரம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த ஜோசப் லயோலா (47) மற்றும் சிவகாசி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த செல்வசுதா (35) ஆகியோர் ரூ.48 லட்சத்து 5 ஆயிரத்து 863 மோசடி செய்துள்ளனர்.

    இது தொடர்பாக 2 பேரிடமும் கல்லூரி நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஜோசப் லயோலா ரூ.6 லட்சத்தை திருப்பி கொடுத்து விட்டார். மீதமுள்ள 41 லட்சத்து 51 ஆயிரத்து 863 ரூபாயை 2 பேரும் மோசடி செய்து விட்டனர் என கூறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் பணம் மோசடி செய்த ஜோசப் லயோலா, செல்வசுதா ஆகிய 2 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீப்பெட்டி கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.
    • சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    விருதுநகர்

    சிவகாசி பெரியகுளம் காலனியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் நாகனா புரம் புதூர் ரோட்டில் தீப்பெட்டி கம்பெனி நடத்தி வந்தார்.

    சம்பவத்தன்று இவரது கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் நந்தகுமார் மற்றும் கட்டிட உரிமையாளர் கணேஷ் ஆகியோர் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    • தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்தவர் முனியசாமி. இவர் வீடு கட்ட பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடனை செலுத்த முடியாததால் முனியசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் தினேஷ் (29). இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த தினேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சாத்தூர் அச்சங்குளத்தை சேர்ந்தவர் முத்துசெல்வம். இவரது மகன் கணேஷ்குமார் (22). சம்பவத்தன்று பெற்றோர் கண்டித்ததால் இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    • கூடுதல் வட்டி கேட்கும் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் டி.எஸ்.பி.யிடம் மகளிர் சுய உதவிக் குழுவினர் மனு கொடுத்தனர்.
    • 3 குழுவிலும் 30 உறுப்பினர்கள் உள்ளனர்.

    பாலையம்பட்டி

    அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்லூர ணியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் ''தங்க தாமரை'' என்ற மகளிர் குழுவுக்கு தலைவியாக உள்ளார். இதேபோல் மரியா தேவி என்பவர் ''மகரம்'' குழுவிற்கு தலைவியாகவும், லட்சுமி என்பவர் ''கணிமலர்'' குழுவிற்கு தலைவியாகவும் உள்ளனர்.

    இந்த 3 குழுவிலும் 30 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 3 குழுவிற்கும் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்ற தாகவும், அந்த கடனை முழுமையாக கட்டி விட்டதாகவும், அதற்கு தடையில்லா சான்று கேட்டபோது நிதி நிறுவனத்தின் மேலாளர் மேலும் நீங்கள் பணம் கட்ட வேண்டும்.

    இல்லை என்றால் கூடுதலாக கடன் வாங்க வேண்டும் என்றுகூறினாராம். கூடுதலாக கடன் வாங்க இல்லையென்றால் தடையில்லா சான்று வழங்க முடியாது என்றும் கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து 3 மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள்,போலீஸ் டி.எஸ்.பி. சகாயஜோஸை சந்தித்து நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து தடையில்லா சான்று பெற்று தர வேண்டும் என்று கோரி மனு அளித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக டி.எஸ்.பி. பதில் அளித்ததின் பேரில் மகளிர் குழுவினர் கலைந்து சென்றனர்.

    ×