என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.
    • மழை வெள்ளத்தில் ராமச்சந்திராபுரம் பகுதியில் இருந்து குன்னூர் செல்லும் தரைப்பாலம் மூழ்கியது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.

    நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், மல்லி, வன்னியம்பட்டி, அழகாபுரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

    இந்த மழை வெள்ளத்தில் ராமச்சந்திராபுரம் பகுதியில் இருந்து குன்னூர் செல்லும் தரைப்பாலம் மூழ்கியது. தொடர்ந்து தரைப்பாலத்தில் அதிக அளவு தண்ணீர் செல்லும் நிலையில் பள்ளி மாணவ-மாணவிகள் ஆபத்தை உணராமல் அந்த வழியாக சென்று வருகின்றனர்

    இந்த பாலம் சேதமாக உள்ளதால் அதனை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக வற்புறுத்தி வருகின்றனர்.

    இந்த தரைப்பாலத்தில் செல்லும் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக சென்றுவர அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சாத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென்று கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது.

    இதைத்தொடர்ந்து சாத்தூர் தாலுகா அலுவலகம் அருகில் செயல்படும் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் மழை நீர் புகுந்தது. அங்கு அதிக அளவு மழைநீர் தேங்கியதால் மேஜை, நாற்காலி மழை வெள்ளத்தில் மிதந்தது. கழிவு நீரும் சேர்ந்து வந்ததால் துர்நாற்றம் வீசியது.

    பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவாளர் அறை, பத்திரம் சேமிப்பு அறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழை நீர் புகுந்தது. மேலும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியில் இருந்த பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு மழை நீரை வெளியேற்றியதால் பத்திரங்கள் அனைத்தும் மீட்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

    • பாலகுமரன் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
    • தொழில் அதிபர் வீட்டில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவாரம்பட்டி கம்பர் தெருவைச் சேர்ந்தவர் பாலகுமரன் (வயது 29). விசைத்தறி கூடம் மற்றும் பல்வேறு தொழில்களை செய்து வரும் இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் பீரோவை பாலமுருகன் எதேச்சையாக திறந்து பார்த்தார். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை மாயமாகி இருந்தது.

    இதே போல் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் நிறுவனத்தில் ரூ. 1 கோடியே 29 லட்சம் முதலீடு செய்ததற்கான பத்திரங்கள், சத்திரப்பட்டியில் உள்ள விசைத்தறிக்கூட பத்திரம், வீட்டு பத்திரங்கள், ஏ.டி.எம். கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் திருடு போயிருந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த பாலகுமரன் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். மேலும் இது தொடர்பாக விசாரித்து குற்றவாளிகளை கைது செய்து நகை-பணம், ஆவணங்களை மீட்டுத்தர போலீசாருக்கு உத்தரவிடுமாறு பாலகுமரன் ராஜபாளையம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு நகை-பணம், ஆவணங்கள் கொள்ளை போனது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பாலகுமரன் வீட்டில் துணிகர கொள்ளையில் ஈடுபட்டது யார்? என போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    மேலும் கொள்ளை நடந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். தொழில் அதிபர் வீட்டில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சங்கரபாண்டியன். இவரது மனைவி ஜோதிமணி.
    • தொழிலாளி சங்கர் மற்றும் அவரது மனைவி பொன்மணியை போலீசார் கைது செய்தனர்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சங்கரபாண்டியன் (வயது 65). இவரது மனைவி ஜோதிமணி (60). இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்களது மகன் சதீஷ். சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த ஜூலை 18-ந் தேதி சங்கரபாண்டியன்-ஜோதிமணி கத்தியால் குத்தப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தனர். ஜோதிமணி அணிந்திருந்த நகை திருடு போய்விட்டது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தென் மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் தலைமையில் டி.ஐ.ஜி. பொன்னி, விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

    கொலையாளிகளை பிடிக்க 7-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். ஆனால் அதில் ஏதும் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து தனிப்படை வரவழைக்கப்பட்டது.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக சிவகாசி டி.எஸ்.பி. தலைமையில் அருப்புக்கோட்டை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ பிரபு, தலைமை காவலர் அன்பு ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    இவர்கள் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தினர். கொலை நடந்த அன்று எம்.டி.ஆர். பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. பதிவுகளை போலீசார் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

    மேலும் கடந்த சில மாதங்களாக கொலை நடந்த பகுதியில் சந்தேகப்படும் படியான ஆள் நடமாட்டம் இருந்ததா? எனவும் கண்காணிக்கப்பட்டது. அப்போது அருகில் உள்ள ஜோதிபுரம் 7-வது தெருவில் வசித்து வரும் மில் தொழிலாளி சங்கர் (42) என்பவர் அடிக்கடி கொலை நடந்த பகுதியில் சைக்கிளில் சென்று வந்துள்ளார்.

    இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் சங்கரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது நகை, பணம் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் மனைவி பொன்மணியுடன் கூட்டு சதி செய்து சங்கர் ஆசிரியர் தம்பதியை கொலை செய்தது தெரியவந்தது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசிரியர் தம்பதி எதிர்ப்புறம் உள்ள வீட்டில் சங்கர் குடியிருந்துள்ளார். அப்போது அவரது மனைவி பொன்மணிக்கும், கொலையுண்ட ஜோதி மணிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பொன்மணி அடிக்கடி ஆசிரியர் வீட்டுக்கு சென்று சகஜமாக பழகியுள்ளார். இதனை பயன்படுத்தி சங்கர், ஆசிரியர் தம்பதியிடம் கடன் கேட்டுள்ளார். அவர்கள் தர மறுத்துள்ளனர். இதையடுத்து சங்கர் அந்த வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டார்.

    அதன்படி சம்பவத்தன்று நள்ளிரவு ஆசிரியர் வீட்டுக்குள் புகுந்த சங்கர் பாத்ரூமில் அதிகாலை வரை மறைந்திருந்தார். காலையில் ஜோதிமணி கோலம் போடுவதற்காக வெளியே வந்துள்ளார்.

    அப்போது வீட்டுக்குள் புகுந்த சங்கர் அங்கிருந்த சங்கரபாண்டியனிடம் கத்தியை காட்டி பணம்-நகையை தருமாறு மிரட்டியுள்ளார்.

    அப்போது அவர் கூச்சலிடவே, ஆத்திரம டைந்த சங்கர் கத்தியால் சங்கரபாண்டியனை சரமாரியாக குத்திக்கொலை செய்தார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த ஜோதிமணி கணவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதற்குள் கதவின் பின்புறம் மறைந்திருந்த சங்கர் ஜோதிமணியை கத்தியால் குத்திவிட்டு அவர் அணிந்திருந்த நகையை எடுத்துக் கொண்டார். பின்னர் மனைவி பொன்மணி உதவியுடன் ஜோதிமணி அங்கிருந்து தப்பினார்.

    மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து தொழிலாளி சங்கர் மற்றும் அவரது மனைவி பொன்மணியை போலீசார் கைது செய்தனர். ஆசிரியர் தம்பதி கொலை நடந்து 3 மாதங்களுக்கு பின் துப்பு துலக்கப்பட்டு கொலையாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கு நடந்தது.
    • உலகிலேயே தமிழ் அதிகம் பேசும் மொழி வாிசையில் 15-வது இடத்தில் உள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், "உலகை ஆளும் உள்நாட்டுத் தொழில் நுட்பங்கள்" என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கு மெக்கானிக்கல், ஏரோநாட்டிக்கல், ஆட்டோமொபைல், கட்டிடக்கலை துறை சார்பில் நடந்தது. பல்கலைக்கழக துணைத்தலைவா் எஸ்.சசிஆனந்த் தலைமை தாங்கினார். டி.ஆர்.டி.ஓ. மூத்த விஞ்ஞானி டில்லிபாபு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில், உலகிலேயே தமிழ் அதிகம் பேசும் மொழி வாிசையில் 15-வது இடத்தில் உள்ளது.

    இதனை முதல் இடத்திற்கு கொண்டு வரவேண்டும். தமிழில் அறிவியல் தொழில் நுட்பங்களை பதிவு செய்யவேண்டும் என்றார். மெக்கானிக்கல் துறை மூத்த பேராசிரியா் சரவணசங்கா், டீன் ராஜேஷ் வரவேற்று பேசினர். ஐ.எஸ்.ஆர்.ஓ. முன்னாள் இணை இயக்குநா் வளா்மதி "இந்திய பலவகை செயற்கை கோள்கள்" பற்றி பேசினார்.

    புதுடெல்லி – விஞ்ஞான் பிரசார் விஞ்ஞானி வெங்கடேஸ்வரன், விஞ்ஞானி டில்லிபாபு எழுதிய "அறிவியல் கருத்தரங்கு மலரை" வெளியிட்டார். பேராசிரியா்கள் மெய்யப்பன், உதயகுமார், லிங்கா குளோபல் பள்ளி முதல்வா் அல்கா சா்மா மற்றும் பள்ளி, கல்லுரி மாணவா்கள் கலந்து கொண்டனா். பேராசிரியை கவிதா விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். துறைத்தலைவா் ஆறுமுகபிரபு நன்றி கூறினார்.

    • மனிதனுடைய வளர்ச்சிக்கு அடிப்படையே வேளாண் புரட்சிதான் என்று கலெக்டர் பேசினார்.
    • பசுமைப் புரட்சிக்கு முன் அன்றாடம் பயன்பாட்டில் இருந்த இவை மெல்ல மெல்ல மறைந்து கடந்த 30 ஆண்டுகளில் பல காணாமலேயே போய்விட்டது.

    விருதுநகர்

    உலக உணவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பில் பாரம்பரியமிக்க, உயர்தர உளர் ரகங்கள் மேம்பாட்டு கருத்தரங்கம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இந்த கருத்தரங்கில் பாரம்பரியமிக்க, உயர்தர, உளர் ரகங்கள் குறித்த விளக்க கையேட்டை கலெக்டர் வெளியிட்டார்.

    அருப்புக்கோட்டை, கோவிலாங்குளத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ராஜாபாபு கலந்து கொண்டு, பாரம்பரிய தானியங்கள் மற்றும் அதில் அடங்கியுள்ள சத்துக்கள் குறித்து பேசினார்.

    இதில் கலெக்டர் மேகநாத ரெட்டி பேசியதாவது:-இந்தியாவில் லட்சத்தி ற்கும் மேற்பட்ட பாரம்பரிய ரகங்கள் இருந்துள்ளது. பசுமைப் புரட்சிக்கு முன் அன்றாடம் பயன்பாட்டில் இருந்த இவை மெல்ல மெல்ல மறைந்து கடந்த 30 ஆண்டுகளில் பல காணாமலேயே போய்விட்டது.

    விருதுநகர் மாவட்டத்தில் பல முன்னோடி விவசா யிகள் பல்வேறு சிறப்புப் பண்புகளைக் கொண்ட பாரம்பரிய பயிர் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்கள். அவற்றுள் பல ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும், வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டதாகவும் மற்றும் மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது.

    இந்த பாரம்பரியமிக்க உளர் பயிர் ரகங்கள், தாவர மரபியல் ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான விரும்பத்தக்க புதிய பயிர் ரகங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

    நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். ஒரு அரசு எத்தனை துறைகள் இருந்தாலும், வேளாண்மைத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. ஏனெனில் உணவு மிக முக்கியமானது.

    மனிதனுடைய முதல் கண்டுபிடிப்பு வேளாண்மை ஆகும். அதற்கு பிறகுதான் மனிதனுடைய வளர்ச்சி பல்கி பெருகியது. மனிதனுடைய வளர்ச்சிக்கு அடிப்படையே வேளாண் புரட்சிதான். அடுத்த வருடம் உலக சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட உள்ளதால் விருதுநகர், தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    சிறுதானியத்தை தொலைத்து விட்டு அதை தேடி அலைகிறோம். ருசிக்காக உணவின் ஊட்ட சத்தை விட்டுவிட்டோம். சிறுதானியங்கள் இன்று மதிப்பு கூட்டப்பட்ட பொருளாகவே கிடைக்கிறது. எனவே குழந்தைகளுக்கு ஊட்டசத்து உணவை கொடுக்க வேண்டும். மேலும் விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுதானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுதானிய உணவகம், சிறுதானிய மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை அங்காடி அமைக்கப்படும்.

    விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டமான கண்மணி மற்றும் இரும்பு பெண்மணி ஆகிய திட்டங்களில் மதிப்புகூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
    • வணிகவியல் நிறும செயலரியல் துறை தலைவர் மற்றும் இணை பேராசிரியர் செந்தில் குமார் வரவேற்றார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வணிகவியல் நிறும செயலரியல் துறை சார்பில் ''நிறுவன செயலாளருக்கான தொழில்'' குறித்த தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

    ''இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆப் இந்தியா'' பற்றிய சுருக்கமான முன்னுரையை சிவகாசி தனியார் நிறுவன செயலாளர் ஏ.என்.எஸ். விஜய் மாணவர்களிடையே உரையாற்றினார்.

    நிர்வாக இயக்குநர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைமை நிதி அதிகாரி போன்ற முக்கிய நிர்வாக பணியாளர்களாக நிறுவனத்தின் செயலாளரின் பங்கை அவர் வெளிப்படுத்தினார். அறக்கட்டளை, நிர்வாக நுழைவு, நிர்வாக மற்றும் தொழில்முறை திட்டம் போன்ற ஐ.சி.எஸ்.ஐ. பாடத்தின் நிலைகளையும் அவர் விளக்கினார்.

    வணிகவியல் நிறும செயலரியல் துறை தலைவர் மற்றும் இணை பேராசிரியர் செந்தில் குமார் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் சூரியா நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியை ஜாஸ்மின் பாஸ்டினா செய்திருந்தார். இதில் சுமார் 100 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • கண்ணன் புதிய பஸ் நிலையத்தில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
    • கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விழுப்புரம் மாவட்டம் கிடார் அஞ்சல் அருகே உள்ள செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 60). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் காவி உடை அணிந்து சாமியார் போன்று ஊர் ஊராக சென்று யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு வந்த கண்ணன், புதிய பஸ் நிலையம் கழிவறை அருகே தங்கியிருந்து யாசகம் பெற்று வந்தார். இந்த நிலையில் கண்ணன் புதிய பஸ் நிலையத்தில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    அவரை யாரோ அடித்துக் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து புதுப்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி பழனிமுருகன் ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கண்ணன் கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவரது கொலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் பகுதியில் சுற்றித்திரியும் திருநங்கைகள் கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்த ஜெனிதா (22), லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த மாளவிகா (19).

    சம்பவத்தன்று அவர்களது செல்போன்கள் தொலைந்து போனது. இதனை அங்கிருக்கும் சாமியார் கண்ணன் தான் எடுத்திருப்பார் என அவர்கள் சந்தேகித்தனர். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது வாக்குவாதம் முற்றியது.

    இதில் ஆத்திரமடைந்த ஜெனிதா, மாளவிகா மற்றும் அவர்களது நண்பர்கள் பாரதி சங்கர், ஜெயபிரகாஷ் ஆகிய 4 பேர் சேர்ந்து கண்ணனை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் மயங்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்திருக்கிறார்.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து திருநங்கைகள் ஜெனிதா, மாளவிகா, வாலிபர்கள் பாரதி சங்கர், ஜெயபிரகாஷ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பஸ் நிலையத்தில் சாமியாரை திருநங்கைகள் உள்பட 4 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் உலக கண் பார்வை தின விழா நடந்தது.
    • கண் பார்வையினை பாதுகாக்க ஆலோசனை வழங்கினார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ராஜபாளையம்-தென்காசி ரோட்டில் இளந்தோப்பில் உள்ள பி.ஏ.சி.ஆர் அரசு மருத்துவமனை, கண் மருத்துவப்பிரிவு. இணைந்து உலக கண் பார்வை தின விழாவை நடத்தியது.

    செவிலியர் கண்காணிப்பாளர் விஜயலட்சுமி வரவேற்றார். தலைமை பொறுப்பு மருத்துவர் உமா ஜெயபாஸ்கர் தலைமை தாங்கினார். டாக்டர்கள் சுரேஷ், சீனிவாசன், மேகலா, அருண், கலைச்செல்வி முன்னிலை வகித்தனர்.மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க மேலாளர், தலைமை கண் மருத்துவர் பொன்னுசாமி, கண்களை பாதுகாப்பது, கண்ணில் ஏற்படும் கண்நோய்கள், அதனால் ஏற்படும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயினால் ஏற்படும் பார்வை இழப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    கண் மருத்துவர் நதியா குழந்தை பிறந்தவுடன் கண்ணில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய, கண் புரை அறுவை சிகிச்சைக்குப்பின் கண் பார்வையினை பாதுகாக்க ஆலோசனை வழங்கினார். இதில் பொதுமக்கள் மற்றும் வெளிநோயாளிகள் மற்றும் கண் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகள் கலந்துகொண்டனர். முதுநிலை கண் மருத்துவ உதவியாளர் பால்ராஜ், கண் மருத்துவ உதவியாளர் பிரேமா ஆகியோர் நன்றி கூறினர்.

    • 1504 அங்கன்வாடி மையங்களிலும் கைத்தூய்மை தினம் அனுசரிக்கப்பட்டது.
    • குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், ரோசல்பட்டி ஊராட்சி, முத்தால் நகர், மகாலிங்கம் தெரு அங்கன்வாடி மையத்தில் உலக கைத்தூய்மை தின நிகழ்ச்சி நடந்தது. இைதயொட்டி கைத்தூய்மையின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    உலக கைத்தூய்மை தினமான இந்த நாளில், பல வகையில் கைகளை சுத்தமாக வைத்து கொள்ள விழிப்புணர்வைத் தந்து நலம் காப்பதே கைத்தூய்மை தினத்தின் நோக்கம் ஆகும். உலக அளவில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் சுகாதாரக் குறைபாடுகளினாலும், தன் சுத்த செயல்பாடுகளை முறையாக கடைப்பிடிக்காததாலும் சுமார் 1½ கோடி குழந்தைகள் இறக்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இதனை அறிந்த உலக சுகாதார நிறுவனம் 2008-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ம் தேதியை ''உலக கைத்தூய்மை தினமாக'' அனுசரிக்க ஆணை பிறப்பித்தது. உணவை உண்ணும் முன்பு, கழிவறை சென்று வந்த பின்பு, வெளியே சென்று வீட்டுக்கு வந்து சிறு குழந்தைகளைத் தூக்கும் முன்பு, மூக்கை சீந்திய பின்பு, தும்மும் போது கைகளை பயன்படுத்திய பின்பு, குப்பைகளை அப்புறப்ப டுத்திய பின்பு, சமைக்கும் முன்பு, சாப்பாட்டை பரிமாறும் முன்பு, மாடி கைப்பிடி பிடித்த வந்த பின்பு, நோயாளிகள், அடிபட்டவர்களுக்கு சிகிச்சை செய்த பின்பு, வீட்டு உபயோகப் பொருட்களை சுத்தம் செய்த பின்பு, செல்லப் பிராணிகளை தொட்ட பின்பு, நூலகங்களில் புத்தகங்களை தேடி எடுத்த பின்பு, தலைக்கு எண்ணை தேய்த்து குழந்தைகளுக்கு தலை வாரிய பின்பு என பல வேலைகளைச் செய்த பிறகு கட்டாயம் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

    அனைவரும் கைகளை தூய்மையுடன் பராமரித்து நல்ல வாழ்க்கையை பெறுவோம். விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ் செயல்படும் 1504 அங்கன்வாடி மையங்களிலும் உலக கைத்தூய்மை தினம் அனுசரிக்கப்பட்டு, குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அடிக்கல் நாட்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வருவதாக அறிவித்திருந்த நிலையில் அவர் வராததால் யூனியன் அலுவலக கட்டிட பூமி பூஜை 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
    • தேங்காய் உள்பட பூஜை பொருட்கள் வெயிலில் காய்ந்து வீணாவதைக் கண்டு பொது மக்கள் ஏமாந்ததுடன், இந்த நிலையை பார்த்து முகம் சுளித்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்- தென்காசி சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் சில இடங்கள் பழுதடைந்து விட்டதால் புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கு ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவில் இடம் தேர்வு செய்யப்பட்டடது.

    நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம்,கருவூலம் என அடுத்தடுத்து அலுவலகங்கள் அருகில் இருந்ததால் இந்த இடம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அடிக்கல் நாட்ட அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வருவதாக அறிவித்து 2 முறையும் அமைச்சர் வராததால் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

    ராஜபாளையத்தில் நேற்று தி.மு.க இளைஞர் அணியினருக்கு திராவிட மாடல் பயிற்சி பாசறை நடந்தது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன். ராஜபாளையம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் சிங்கராஜ், நகர் மன்ற தலைவி பவித்ரா சியாம்ராஜா உள்பட தி பலர் கலந்து கொண்டனர் .

    இந்த நிலையில் அமைச்சர் பூமிபூஜையை நடத்திவைப்பார் என்ற எதிர்பார்ப்புகளுடன் ஏற்கனவே 2 முறை ஒத்தி வைக்கப்பட்ட ராஜபாளையம் மாடசாமி கோவில் செல்லும் சாலையில் யூனியன் அலுவலகத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 3-வது முறையாக பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் அரசு அதிகாரிகளால் செய்யப்பட்டிருந்தது.

    நேற்றும் அடிக்கல் நாட்ட அமைச்சர் வரமுடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டதால் 3-வது முறையாக அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. பூமிபூஜைக்கான தேங்காய் உள்பட பூஜை பொருட்கள் வெயிலில் காய்ந்து வீணாவதைக் கண்டு பொது மக்கள் ஏமாந்ததுடன், இந்த நிலையை பார்த்து முகம் சுளித்தனர்.

    யூனியன் அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதில் தி.முக.வினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிளவுபட்டு கிடப்பதால் அரசு பணம் விரயம் ஆகிறது.

    பல்வேறு பணிகளை ஒதுக்கிவிட்டு இந்த பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் 3-வது முறையாக பூமிபூஜை ஒத்தி வைக்கப்பட்டதால் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

    3-வது முறையாக பூமிபூஜை தடைபட்டுவிட்டதால் இதை கெட்ட சகுனமாக எடுத்துக் கொண்டு யூனியன் அலுவலகத்திற்கு வேறு இடம் தேர்வு செய்வதுதான் நல்லது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

    • வாடிக்கையாளரிடம் 37 பவுன் நகை- ரூ.4 லட்சம் வாங்கி மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • வியாபாரி உள்பட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 32). இவர் விருதுநகர் பஜார் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு கடந்த 2 வருடமாக சென்று வந்தார்.

    இதில் கடை உரிமையா ளர் மண்டலே உத்தம் ஜோதி ராம், அவரது மனைவி அஸ்வினி, மாமனார் யஷ்வந்த் ஆகியோர் பழக்கமாகினர்.

    இந்த நிலையில் முத்துக்குமார் தனக்கு சொந்த மான நகைகளை அடகு கடையில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அவரிடம் நகைக்கடை உரிமையாளர் மண்டலே உத்தம் ஜோதிராம் நகைகளை என்னிடம் கொடுங்கள், வட்டி வேண்டாம் என்று கூறி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து முத்துக்குமார் கடந்த 2021ம் ஆண்டு 37 பவுன் நகைகளை மண்டலே உத்தம் ஜோதிராமிடம் கொடுத்துள்ளார். மேலும் நகையை மீட்பதற்கு ரூ.4 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட 3 பேரும் நகை-பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

    இதுபற்றி முத்துக்குமார் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மண்டலே உத்தம் ஜோதி ராம், அஸ்வினி, யஷ்வந்த் ஆகிேயார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் இதேபோல் பலரிடம் மோசடி செய்து இருப்பது தெரியவந்துள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையம்-தென்காசி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள இந்த கோவில் அந்த பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • கோவிலில் அம்மன் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க தாலி செயின்கள் திருட்டு போயிருந்தன.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் கோவிலூர் கிராமத்தில் காளியம்மன்-மாரியம்மன் கோவில் உள்ளது. ராஜபாளையம்-தென்காசி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள இந்த கோவில் அந்த பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    இந்த கோவிலின் பூசாரியாக கோவிலூர் வடக்கு தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் உள்ளார். சம்பவத்தன்று இரவு பூசாரி வழக்கமான பூஜைகளை முடித்துக் கொண்டு கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

    சில நாட்கள் கழித்து வழக்கம்போல் பூஜைகளை செய்ய காலையில் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலில் அம்மன் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க தாலி செயின்கள் திருட்டு போயிருந்தன.

    கோவில் உள்ள கல்லால் ஆன அம்மன் சிலை, வெண்கல சிலை, மூலவர் சிலை, உற்சவர் சிலை ஆகிய 4 சிலைகளுக்கும் தலா 3 கிராம் எடையுள்ள தங்கத்தால் ஆன தாலி செயின் நிரந்தரமாக அணி விக்கப்பட்டிருக்கும். அந்த தங்க தாலி செயின்கள் திருடப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் இந்த திருட்டு குறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.

    இதையடுத்து திருட்டு நடந்த கோவிலுக்கு இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

    அவர்கள் கோவிலில் அம்மன் சிலைகள் உள்ள இடம் மற்றும் கோவில் வளாகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஆனால் போலீசாருக்கு எந்த தடயங்களும் சிக்கவில்லை.

    மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கோவில் சுவர், சாமி சிலைகள் உள்ளிட்டவைகளில் பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரித்தனர்.

    மேலும் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அதில் 2 பெண்கள், பக்தர்கள் போல் கோவிலுக்குள் சென்று வந்த காட்சிகள் பதிவாகி இருந்தன.

    காலை நேரத்தில் பூசாரியின் மனைவி கோவிலை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, 2 பெண்கள் கோவிலுக்குள் செல்வதும், அந்த பெண்கள் சாமி சிலைகளில் இருந்த தங்க தாலி செயின்களை திருடும் காட்சிகளும் தெளிவாக பதிவாகி இருந்தது.

    இதையடுத்து இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சேத்தூர் போலீசார் வழக்கு பதிந்தனர். பக்தர்கள் போன்று கோவிலுக்குள் புகுந்து அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க தாலிகளை திருடிய பெண்கள் யார்? என்று கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ×