search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருப்புக்கோட்டையில் ஆசிரியர் தம்பதி கொலை: மில் தொழிலாளி மனைவியுடன் கைது
    X

    அருப்புக்கோட்டையில் ஆசிரியர் தம்பதி கொலை: மில் தொழிலாளி மனைவியுடன் கைது

    • விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சங்கரபாண்டியன். இவரது மனைவி ஜோதிமணி.
    • தொழிலாளி சங்கர் மற்றும் அவரது மனைவி பொன்மணியை போலீசார் கைது செய்தனர்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சங்கரபாண்டியன் (வயது 65). இவரது மனைவி ஜோதிமணி (60). இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்களது மகன் சதீஷ். சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த ஜூலை 18-ந் தேதி சங்கரபாண்டியன்-ஜோதிமணி கத்தியால் குத்தப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தனர். ஜோதிமணி அணிந்திருந்த நகை திருடு போய்விட்டது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தென் மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் தலைமையில் டி.ஐ.ஜி. பொன்னி, விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

    கொலையாளிகளை பிடிக்க 7-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். ஆனால் அதில் ஏதும் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து தனிப்படை வரவழைக்கப்பட்டது.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக சிவகாசி டி.எஸ்.பி. தலைமையில் அருப்புக்கோட்டை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ பிரபு, தலைமை காவலர் அன்பு ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    இவர்கள் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தினர். கொலை நடந்த அன்று எம்.டி.ஆர். பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. பதிவுகளை போலீசார் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

    மேலும் கடந்த சில மாதங்களாக கொலை நடந்த பகுதியில் சந்தேகப்படும் படியான ஆள் நடமாட்டம் இருந்ததா? எனவும் கண்காணிக்கப்பட்டது. அப்போது அருகில் உள்ள ஜோதிபுரம் 7-வது தெருவில் வசித்து வரும் மில் தொழிலாளி சங்கர் (42) என்பவர் அடிக்கடி கொலை நடந்த பகுதியில் சைக்கிளில் சென்று வந்துள்ளார்.

    இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் சங்கரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது நகை, பணம் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் மனைவி பொன்மணியுடன் கூட்டு சதி செய்து சங்கர் ஆசிரியர் தம்பதியை கொலை செய்தது தெரியவந்தது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசிரியர் தம்பதி எதிர்ப்புறம் உள்ள வீட்டில் சங்கர் குடியிருந்துள்ளார். அப்போது அவரது மனைவி பொன்மணிக்கும், கொலையுண்ட ஜோதி மணிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பொன்மணி அடிக்கடி ஆசிரியர் வீட்டுக்கு சென்று சகஜமாக பழகியுள்ளார். இதனை பயன்படுத்தி சங்கர், ஆசிரியர் தம்பதியிடம் கடன் கேட்டுள்ளார். அவர்கள் தர மறுத்துள்ளனர். இதையடுத்து சங்கர் அந்த வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டார்.

    அதன்படி சம்பவத்தன்று நள்ளிரவு ஆசிரியர் வீட்டுக்குள் புகுந்த சங்கர் பாத்ரூமில் அதிகாலை வரை மறைந்திருந்தார். காலையில் ஜோதிமணி கோலம் போடுவதற்காக வெளியே வந்துள்ளார்.

    அப்போது வீட்டுக்குள் புகுந்த சங்கர் அங்கிருந்த சங்கரபாண்டியனிடம் கத்தியை காட்டி பணம்-நகையை தருமாறு மிரட்டியுள்ளார்.

    அப்போது அவர் கூச்சலிடவே, ஆத்திரம டைந்த சங்கர் கத்தியால் சங்கரபாண்டியனை சரமாரியாக குத்திக்கொலை செய்தார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த ஜோதிமணி கணவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதற்குள் கதவின் பின்புறம் மறைந்திருந்த சங்கர் ஜோதிமணியை கத்தியால் குத்திவிட்டு அவர் அணிந்திருந்த நகையை எடுத்துக் கொண்டார். பின்னர் மனைவி பொன்மணி உதவியுடன் ஜோதிமணி அங்கிருந்து தப்பினார்.

    மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து தொழிலாளி சங்கர் மற்றும் அவரது மனைவி பொன்மணியை போலீசார் கைது செய்தனர். ஆசிரியர் தம்பதி கொலை நடந்து 3 மாதங்களுக்கு பின் துப்பு துலக்கப்பட்டு கொலையாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×