என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராஜபாளையம் அருகே அம்மன் சிலைகளுக்கு அணிவித்திருந்த 4 தங்கத்தாலி செயின்கள் திருட்டு
- ராஜபாளையம்-தென்காசி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள இந்த கோவில் அந்த பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது.
- கோவிலில் அம்மன் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க தாலி செயின்கள் திருட்டு போயிருந்தன.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் கோவிலூர் கிராமத்தில் காளியம்மன்-மாரியம்மன் கோவில் உள்ளது. ராஜபாளையம்-தென்காசி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள இந்த கோவில் அந்த பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த கோவிலின் பூசாரியாக கோவிலூர் வடக்கு தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் உள்ளார். சம்பவத்தன்று இரவு பூசாரி வழக்கமான பூஜைகளை முடித்துக் கொண்டு கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
சில நாட்கள் கழித்து வழக்கம்போல் பூஜைகளை செய்ய காலையில் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலில் அம்மன் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க தாலி செயின்கள் திருட்டு போயிருந்தன.
கோவில் உள்ள கல்லால் ஆன அம்மன் சிலை, வெண்கல சிலை, மூலவர் சிலை, உற்சவர் சிலை ஆகிய 4 சிலைகளுக்கும் தலா 3 கிராம் எடையுள்ள தங்கத்தால் ஆன தாலி செயின் நிரந்தரமாக அணி விக்கப்பட்டிருக்கும். அந்த தங்க தாலி செயின்கள் திருடப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் இந்த திருட்டு குறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.
இதையடுத்து திருட்டு நடந்த கோவிலுக்கு இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்கள் கோவிலில் அம்மன் சிலைகள் உள்ள இடம் மற்றும் கோவில் வளாகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஆனால் போலீசாருக்கு எந்த தடயங்களும் சிக்கவில்லை.
மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கோவில் சுவர், சாமி சிலைகள் உள்ளிட்டவைகளில் பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரித்தனர்.
மேலும் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அதில் 2 பெண்கள், பக்தர்கள் போல் கோவிலுக்குள் சென்று வந்த காட்சிகள் பதிவாகி இருந்தன.
காலை நேரத்தில் பூசாரியின் மனைவி கோவிலை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, 2 பெண்கள் கோவிலுக்குள் செல்வதும், அந்த பெண்கள் சாமி சிலைகளில் இருந்த தங்க தாலி செயின்களை திருடும் காட்சிகளும் தெளிவாக பதிவாகி இருந்தது.
இதையடுத்து இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சேத்தூர் போலீசார் வழக்கு பதிந்தனர். பக்தர்கள் போன்று கோவிலுக்குள் புகுந்து அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க தாலிகளை திருடிய பெண்கள் யார்? என்று கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.






