என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • ராஜபாளையம் அருகே மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது.
    • விழாவில் ராஜபாளையம் சேத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் பூப்பல்லக்கு, சிம்ம வாகனம் என பல்வேறு அலங்கார வாகனங்களில் திருவீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழாவையொட்டி தீ குண்டம் வளர்க்கப்பட்டது.

    பூக்குழி இறங்கும் பக்தர்கள் மற்றும் பெண்கள் பெண்கள் முளைப்பாரி எடுத்தும், ஆயிரங்கண் பானை எடுத்தும் ஊர்வலமாகச் சென்றனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். விழாவில் ராஜபாளையம் சேத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

    • 2-வது ஆண்டாக 100 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டு விட்டது.
    • நகராட்சி ஊழியர்களை தலைவர் தங்கம் ரவி கண்ணன் பாராட்டினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 31 ஆயிரம் வரி இனங்கள், 16 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், 12 லட்சம் காலிமனை இனங்கள், 311 கடை வாடகை மற்றும் குத்தகை இனங்கள் உள்ளன. நகராட்சியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலுவை வரிகள் அனைத்தும் சென்ற ஆண்டு வசூல் செய்யப்பட்டது. கடந்த மார்ச் 31-ந் தேதிக்குள் நிலுவை வரியையும் சேர்த்து 100 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டது.

    கடந்த ஆண்டுக்குரிய தமிழகத்தின் சிறந்த நகராட்சிக்கான விருது மற்றும் ரூ.15 லட்சம் ரொக்க பரிசை நகர் மன்ற தலைவர் தங்கம் ரவிகண்ணன், ஆணையாளர் ராஜ மாணிக்கம் ஆகியோர் பெற்றனர்.

    இந்த ஆண்டு சொத்து வரி ரூ.4 கோடி, குடிநீர் வரி ரூ.1.76 கோடி, வாடகை மற்றும் குத்தகை உள்ளிட்ட வரியற்ற வருவாய் ரூ.1.58 கோடி என அனைத்து வரி மற்றும் வரியற்ற வருவாய் இனங்கள் அனைத்தும் 100 சதவீதம் வசூல் செய்யப் பட்டுள்ளது. 2-வது ஆண்டாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 100 சதவீத வரி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

    இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் ராஜ மாணிக்கம் கூறுகையில், கடந்த ஆண்டுகளில் வரி நிலுவை தொகை இருந்ததால் வரி வசூலில் சிரமம் ஏற்பட்டது. இந்த ஆண்டு நிலுவை வரி இல்லாததால் நடப்பு நிதியாண்டின் வரி மற்றும் வரியற்ற வருவாய் இனங்கள் அனைத்தும் 100 சதவீதம் வசூல் செய்யப்பட்டு விட்டது.

    இதன் மூலம் நகராட்சியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அரசிடம் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கீட்டை பெற முடியும். மேலும் நகராட்சியின் வரியற்ற வருவாயை பெருக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    100 சதவீத வரி வசூல் செய்த நகராட்சி ஊழியர்களை தலைவர் தங்கம் ரவி கண்ணன் பாராட்டினார்.

    • தொழிலாளி-தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • விரும்பிய படிப்பு மற்றும் வேலை கிடைக்காததால் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என தெரிகிறது.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கட்டையதேவன் பட்டியை சேர்ந்தவர் பாண்டிமுருகன்(30). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். சம்பவத்தன்று பாண்டிமுருகன், மனை வியை குடும்பம் நடத்த அழைத்தார். அவரும் கண வருடன் செல்ல சம்மதித்தார்.

    அப்போது திடீரென பாண்டிமுருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரித்தபோது, மனைவி தன்னுடன் வரமாட்டார் என கருதி முன்கூட்டியே விஷம் குடித்ததாக கூறியுள் ளார்.

    உறவினர்கள் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டிமுருகன் இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தனியார் நிறுவன ஊழியர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள செட்டி பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் பாண்டியராஜ்(வயது21). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஊருக்கு வந்திருந்த பாண்டி யராஜ் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், பாண்டியராஜூக்கு விரும்பிய படிப்பு மற்றும் வேலை கிடைக்காததால் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என தெரிகிறது.

    • செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • விசாரணை நடத்தியதில், சின்ன பேரா ளியை சேர்ந்த சுந்தர மூர்த்தி(28), வினோத்(23) என்பது தெரியவந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் லோகேஷ் (வயது18). இவர் செவல்பட் டியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி முடிந்து விருதுநகரில் உள்ள உணவகத்தில் லோகேஷ் பகுதி நேர வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு 1 மணிய ளவில் வேலையை முடித்து விட்டு லோகேஷ் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2பேர் கத்தியை காட்டி மிரட்டி லோகேஷிடம் இருந்த ரூ.500 மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.

    விருதுநகர் தாழையப்பன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல்(வயது22). இவர் நேற்று லட்சுமி நகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவரை வழிமறித்த 2 பேர் மிரட்டி செல்போன், பணத்தை பறித்துச் சென்ற னர்.

    இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக பாண்டியன் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சின்ன பேரா ளியை சேர்ந்த சுந்தர மூர்த்தி(28), வினோத்(23) ஆகிய 2 பேர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    • மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    • வரதட்சணையாக 30 பவுன் நகை, ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லியை சேர்ந்தவர் காயத்ரி(வயது26). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் எனக்கும், உறவினர் பிரியதர்சன் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    வரதட்சணையாக 30 பவுன் நகை, ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது. பிரியதர்சன் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்தார். இதனால் நான் எனது தாயார் வீட்டுக்கு வந்து விட்டேன்.

    இந்த நிலையில் எனது நகையை விற்று கார் வாங்கியதோடு பிரியதர்சன், சிவானந்த லட்சுமி என்பவரை 2-வது திரும ணம் செய்துள்ளார். இதற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக உள்ளனர். எனவே இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இதனை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சம்பந்தப் பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பிரியதர்சன், அவரது பெற்றோர் பரமசிவம்-செல்வி, சகோதரர் பிரசன்ன குமார் உள்பட 8 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீ சார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • பராசக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • இதன் காரணமாக விருது நகர் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகரில் பிரசித்தி பெற்ற பராசக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.

    தினசரி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். விழாவில் நேற்று பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் படை யலிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் இன்று அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் ஆடை உடுத்தி 21 அக்னி சட்டி, 101 அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். மேலும் பலர் குழந்தையை கரும்பு தொட்டிலில் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதன் காரணமாக விருது நகர் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

    • விருதுநகர் மாவட்டம் சங்கரநத்தம் கிராமத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியானார்.
    • இந்த சம்பவம் சங்கரநத்தம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சங்கரநத்தம் ஊராட்சி உள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலும் பட்டாசு தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமியின் ஒரே மகன் பாலமுருகன் (வயது15) 10-ம் வகுப்பு படித்தான். இந்த சிறுவனுக்கு சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது.

    சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவன் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும், சரியான சுகாதாரமின்றி இருப்பதால் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பாதிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். டெங்கு காய்ச்சலால் 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சங்கரநத்தம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி தொடக்கப்பள்ளியை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோட்டைபட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி 5 ஆசிரியர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்க பள்ளி பல்வேறு காரணங்களால் மூடப்பட்டது. இதனால் தொடக்க கல்வி பயில்வதற்காக 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்ல வேண்டிய இருப்பதால் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் ஊராட்சி சார்பில் கடந்த ஆண்டு ரூ.3 லட்சம் செலவில் தொடக்கப்பள்ளி கட்டிடம் புனரமைக்கப்பட்டு, அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது.

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த வாரம் நடந்த ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் கோட்டைபட்டி ஊராட்சி தலைவர் சதீஷ்குமார் பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அதில் கோட்டைபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 2023-24 கல்வியாண்டில் மீண்டும் தொடங்கப்பட்டால் அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதாக மக்கள் உறுதி அளித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஊராட்சி தலைவர் சதீஷ்குமார் மற்றும் கோட்டைபட்டியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 11-ந் தேதி நடக்கிறது
    • விருதுநகர் மாவட்ட கலெக்டர் பரிசுகள் வழங்க உள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கத்தில் தமிழ் வளர்ச்சித்துறை மூலம் ஆண்டுதோறும் மாவட்ட வாரியாக கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    2022-23-ம் ஆண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் வருகிற ஜூன் மாதத்திலும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் வருகிற 11-ந் தேதி (செவ்வாய்கிழமை) அன்றும் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் நடத்தப்பட உள்ளன. பள்ளி மாணவர்க ளுக்கான போட்டிகள், விதிமுறைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

    கல்லூரி மாணவர்க ளுக்கான போட்டிகளில் அனைத்து அரசு, தனியார், அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகள், பொறியியல், மருத்துவக் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

    ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் ஒரு கல்லூரியில் இருந்து மொத்தம் 3 மாணவர்கள் பங்கேற்கலாம். கல்லூரி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைத் முதல்வர் ஒப்புதலுடன் விருதுநகர் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ, அஞ்சல் முலமாகவோ, மின்னஞ்சல் – (tamilvalar.vnr@tn.gov.in) முலமாகவோ 10.4.2023 - க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    போட்டிகளின் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் பரிசுகள் வழங்க உள்ளார். பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம்பரிசு ரூ.7ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5ஆயிரம், என்ற வீதத்தில் பரிசுத்தொகைகள் வழங்கப்பட உள்ளது.

    மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள பரிந்துரை செய்யப்படுவார்கள்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சுசிலா மேற்கொண்டு வருகிறார் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • சேத்தூர் வேல்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டியில் மாவட்ட தலைவி செல்வமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் அய்யனார், செட்டியார்பட்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாவட்ட தலைவரும், விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவருமான தளவாய் பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ேபசினார்.

    மாவட்ட முன்னாள் பொதுச்செயலாளர் செல்வராஜ், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற தலைவர் சாமி, மாவட்ட விவசாய அணி தலைவர் தளவாய் பாண்டியன், மாவட்ட மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவி மேரி, துணைத் தலைவி முத்து, நெசவாளர் அணி மாநில செயலாளர் குமாரசாமி ராஜா, மகளிர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் காளீஸ்வரி, ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க தலைவர் பொன்னுசாமி வைரமுத்து, எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் ராமர், சேத்தூர் வேல்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம் வட்டார துணைத் தலைவர் சின்னத்தம்பி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.16 கோடியில் புதிய பஸ் நிலையம் நவீன வசதிகளுடன் கட்ட ஏற்பாடு நடக்கிறது.
    • மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் கடந்த 1985-ம் ஆண்டு 2 ஏக்கர் பரப்பளவில் 16 பேருந்துகள் நிறுத்தும் வகையில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. தற்போது மக்கள் தொகை அதிகரித்துவிட்ட நிலையில் இடநெருக்கடி ஏற்பட்டது. மேலும் பஸ் நிலையத்தில் வாகன காப்பகம், காத்திருப்பு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளதால் மதுரை, சென்னை, மூணாறு, திண்டுக்கல், கொல்லம், தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம் வந்து செல்கின்றன. ராஜாஜி சாலை, சின்னக்கடை பஜார், அரசு மருத்துவமனை, பென்னிங்க்டன் மார்க்கெட் உள்ளிட்ட நகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் நடப்பு சட்டப்பேரவை கூட்ட தொடரில் ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாரூர் உள்ளிட்ட 9 நகராட்சிகள் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 3 மாநகராட்சிகளில் ரூ.174 கோடியில் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என மானிய கோரிக்கையின் போது அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார்.

    இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அருகே மதுரை-கொல்லம் நான்கு வழிச்சாலை அருகே புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக 3.5ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.16கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமையவுள்ளது. இங்கு 36 பஸ்களை நிறுத்துவதற்கு வசதி செய்யப்படுகிறது, மேலும் கடைகள், வாகன நிறுத்துமிடம், சுகாதார வளாகம், காத்திருப்பு அறை உள்ளிட்ட பயணிகளுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.

    மாவட்ட நீதிமன்றம், நான்கு வழிச்சாலை, ரயில் நிலையம் ஆகியவற்றிற்கு அருகே புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • விருதுநகர் மாவட்ட ஓய்வூதியதாரர்கள் இணையதளம் வழியாக ஆயுள்சான்று பதிவேற்றம் செய்ய வேண்டும் என தொழிலாளர் துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
    • ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெ.காளிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியம் முதலான 18 அமைப்புச்சாரர் தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களில் 60 வயது முடிவடைந்த உறுப்பினர்களுக்கு விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் விருதநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்திற்கு வருகை தந்து ஆயுட்சான்று சமர்ப்பிக்கின்றனர். தற்போது ஓய்வூதிய தாரர்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் வருகிற 9-ந் தேதி முதல் அமைப்பு சாரா தொழிலா ளர்கள் நலவாரியங்களின் இணையதளத்தில் (tnuwwb.tn.gov.in) ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் முதலான 18 அமைப்பு சாரா நலவாரி யங்களின் கீழ் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தின் மூலம் ஏற்கனவே மாதந்திர ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண், குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு), ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை (PPO), வங்கி கணக்கு எண் மற்றும் நேரடி புகைப்படம் ஆகிய விவரங்களுடன் இணையதளத்தில் (tnuwwb.tn.gov.in) ஆயுள்சான்றினை சமர்ப்பிக்கலாம்.

    ஓய்வூதிய ஆணை இல்லாதவர்கள் tnuwwb.tn.gov.in என்ற இணையதள முகபரியில் ஓய்வூதிய தாரரின் ஓய்வூதிய விண்ணப்ப எண் மற்றும் தொழிலாளர் நல வாரிய பதிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து ஓய்வூதிய ஆணை (Pension Order)-யை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    ஓய்வூதிய விண்ணப்ப எண் தெரியாத ஓய்வூதிய தாரர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரிய இணையதளத்தின் முகப்பில் இருக்கும் "விண்ணப்பத்தின் எண்ணை அறிய" என்ற வசதியை பயன்படுத்தி பதிவு செய்த தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்தும் அல்லது Login-ல் பயனாளியின் பெயர் (User namc) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து Application History-ல் ஓய்வூதிய விண்ணப்ப எண்ணை அறிந்து கொள்ளலாம்.

    ஓய்வூதியதாரர்கள் இணையதளம் வழியாக மட்டுமே ஆயுள்சான்று பதிவேற்றம் செய்ய வேண்டும். மேற்கண்ட ஓய்வூதிய தாரர்களிடம் இருந்து ஆயுள்சான்று இந்த அலுவலகத்தில் நேரில் பெற இயலாது என்ற விவரம் தெரிவிக்கப் படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×