என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊராட்சி தொடக்கப்பள்ளியை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி தொடக்கப்பள்ளியை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோட்டைபட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி 5 ஆசிரியர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்க பள்ளி பல்வேறு காரணங்களால் மூடப்பட்டது. இதனால் தொடக்க கல்வி பயில்வதற்காக 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்ல வேண்டிய இருப்பதால் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் ஊராட்சி சார்பில் கடந்த ஆண்டு ரூ.3 லட்சம் செலவில் தொடக்கப்பள்ளி கட்டிடம் புனரமைக்கப்பட்டு, அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது.
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த வாரம் நடந்த ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் கோட்டைபட்டி ஊராட்சி தலைவர் சதீஷ்குமார் பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அதில் கோட்டைபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 2023-24 கல்வியாண்டில் மீண்டும் தொடங்கப்பட்டால் அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதாக மக்கள் உறுதி அளித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஊராட்சி தலைவர் சதீஷ்குமார் மற்றும் கோட்டைபட்டியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.