என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • அதிவேமாக சென்ற மோட்டார் சைக்கிள் நின்றிருந்த லாரி மீது மோதி முதியவர் பலியானார்.
    • சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பேர் நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் மோகன் (58). இவர் சம்பவத்தன்று வெம்பக்கோட்டை மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில்அதி வேகமாக சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்துதகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவர் கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதிய பஸ் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
    • கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் ஸ்மார்ட் பஸ் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், துணைத்தலைவர் பழனிசாமி, ஆணையாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர்.

    பஸ் நிலைய கட்டுமான பணிக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறிய தாவது:-

    புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் கடந்ததாலும் பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும் பஸ் நிலையத்தை முழுவது மாக இடித்துவிட்டு புதிய நவீன பஸ் நிலையம் கட்டு வதற்கு முதல்-அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தேன். அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்த பணிகள் முழு வடிவம் பெறும்போது பஸ் நிலையத்தில் ஏ.டி.எம். வசதி, நவீன கழிவறை, பொது மக்களுக்கு தேவை யான அனைத்து வசதிகளும் அமையும்.

    நகரில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ள நிலையில் அதற்கான பணிகளும் விரைவில் நடைபெற உள்ளன. வைகை அணையில் இருந்து கிடைக்கும் குடிநீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு மையம் கட்டங்குடியில் அமைய உள்ளது.

    புதிய தாமிரபரணி குடிநீர் திட்டம் முழுமை அடையும் உள்ள நிலையில் கூடுதல் தண்ணீர் பெறப் பட்டு பொதுமக்களுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும். நவீன முறையில் புதிய மார்க்கெட், கூடுதல் மின் தகன மேடை அமைக்கும் பணிகளையும் மேற்கொள்ள உள்ளோம். புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பிளஸ்-2 பொதுத் தேர்வில் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்திருப்பது பெருமை அளிக்கிறது. தீவிர முயற்சி எடுத்த மாணவ- மாணவிகள், அவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள், நல்ல நிர்வாகத்தை வழங்கி கொண்டிருக்கும் பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    கவர்னர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு இல்லாமல் ஒரு சாராருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். உயர்ந்த பதவியில் இருப்பவருக்கு இது அழகல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப் பிரகாசம், நகர் மன்ற துணை தலைவர் பழனிசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல்ஹமீது, நகராட்சி பொறியாளர் ராமலிங்கம், இளநிலை பொறியாளர் முரளி,

    தி.மு.க. நகர செயலாளர் மணி, ஒன்றிய செயலா ளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர், சோலையப்பன், கவுன்சிலர்கள் மணி முருகன், இளங்கோ, டுவிங்ளின் ஞான பிரபாகரன், கலைவாணி, இளங்கோ, ஜெய கவிதா சிவகாமி, அல்லிராணி, சங்கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒருதலை காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள இலங்கிப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது20), கூலி தொழிலாளி. இவர் மேட்டு தொட்டியங்குளத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். இவரது தந்தைக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால் இவருடன் சரியாக பேசுவதில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆனந்த் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஆனந்த் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதால் அவர் விரக்தியில் இருந்துள்ளார். மனமுடைந்த ஆனந்த் அவர் தங்கியிருக்கும் வீட்டின் அருகே பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ஆனந்தின் சகோதரர் செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடனை திருப்பி கேட்டவருக்கு மிரட்டல் விடுத்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோட்டை தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (62). இவர் அந்த பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் புனரமைப்பு பணிக்காக இவரிடம் கோவில் நிர்வாக குழுவினர் ரூ.10 லட்சம் கடன் வாங்கி உள்ளனர். இந்த நிலையில் அவர்கள் கடனை திருப்பி தராமல் இருந்துள்ளனர். சந்திரசேகரன் அவரிடம் கடனை திருப்பி கேட்க சென்ற போது அவரை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சந்திரசேகரன் வழக்கு தொடர்ந்தார்.

    அதில் கோர்ட் உத்தரவின்படி பெருமாள் (72), லட்சுமணன் (62), கோவிந்தராஜ், முத்துகுமார், சீனிவாசன், ராமசந்திரன் உள்ளிட்ட 9 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றது.
    • கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 97.27 ஆகும்.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின. விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 10 ஆயிரத்து 465 மாணவர்களும், 11 ஆயிரத்து 843 மாணவிகளும் தேர்வெழுதினர்.

    இன்று வெளியான தேர்வு முடிவில் 10 ஆயிரத்து 135 மாணவர்களும், 11 ஆயிரத்து 693 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 828 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 96.85 ஆகும். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 98.73 சதவீதம் ஆகும். மொத்த சதவீதம் 97.85 ஆகும்.

    மாநிலத்திலேயே மாவட்ட அளவில் பிளஸ்-2 தேர்வில் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்று முதன்மை மாவட்டமாக விருதுநகர் திகழ்கிறது.

    கடந்த 25 ஆண்டுகளாக பிளஸ்-2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்று வந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக முதலிடத்தை இழந்த விருதுநகர் மாவட்டம் தற்போது மீண்டும் அதிகளில் தேர்ச்சி விகித்தை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

    கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 97.27 ஆகும்.

    • தமிழ்நாட்டில் நில அபகரிப்பு தொடர்பான வழக்கை விசாரிக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும்.
    • இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வலியுறுத்தப்பட்டது.

    ராஜபாளையம்

    தமிழ்நாட்டில் நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியாக சிறப்பு போலீஸ் பிரிவை ஏற்படுத்த கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

    தனி சட்டமோ, தனி நீதிமன்றமோ, தனி விசாரணை அமைப்போ ஏற்படுத்துவதற்கு முறையான சட்டமன்ற மசோதா தாக்கல் செய்து சட்டம் இயற்ற வேண்டும். ஒரு அரசாணை மூலம் அதை செயல்படுத்த முடியாது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தி.மு.க. முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன் சென்னை ஐகோர்ட்டை வழக்கு தொடர்ந்தார்.

    இதை விசாரித்த ஐகோர்ட்டு இந்த அரசாணை தவறு. இதை தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது. நில மோசடி குறித்து விசாரிக்க இந்திய தண்டனை சட்டம், சொத்து மாற்று சட்டம் என ஏற்கனவே சட்டங்கள் உள்ளன. தனியாக அரசாணை மூலம் தனிப்பிரிவு அமைத்து தனி நீதிமன்றம் அமைக்க அவசியமில்லை என்று கூறி அரசாணையை ரத்து செய்தது.

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.இந்த நிலையில் ஈரோட்டை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர், தனது நில அபகரிப்பு தொடர்பான வழக்கு நீண்டநாட்களாக நிலுவையில் இருப்பதாகவும், அந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிடக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அவருக்காக சுப்ரீம் கோர்ட்டு வக்கீலான ராஜபாளையத்தை சேர்ந்த ராம்சங்கர் ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைத்து வாதிட்டார். தமிழகத்தில் 23 மாவட்டங்களில் சுமார் 3 ஆயிரம் முதல் தகவல் அறிக்கைகள் நிலுவையில் உள்ளன. இதனை சிலர் தவறாக பயன்படுத்து கின்றனர்.

    கணவர் சொத்தை மனைவி விற்றுவிட்டார் என்பதற்காக நில அபகரிப்பு சட்டம் மூலம் வழக்கு தாக்கல் செய்து அதை சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கிறார்கள் என்று ஆதாரங்களுடன் முறை யிட்டார். அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம் ஆஜரானார்.

    இந்த 2 வழக்குகளையும் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் அமர்வு தீர்ப்பை வழங்கியது.

    அதில் 2 நபர்களுக்கு இடையிலான தனிப்பட்ட நில பிரச்சினைகளில் அரசின் தலையீடு என்பது வேதனைக்குரியது. மேலும் தமிழகத்தில் நிலப் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.

    குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் இருப்பது போன்று தமிழகத்திலும் நில அபகரிப்பு உள்ளிட்ட விவ காரங்களில் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

    • விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ராமநவமி விழா நடந்தது.
    • இதில் ஏராளமான பெண்கள் உள்பட உபநிஷர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரம் வடக்கு அக்ரஹாரம் பகுதியில் 57-வது ஆண்டு ராம நவமி விழா நடந்தது.

    முதல் நாள் ராமஜனம் லட்சார்ச்சனையுடன் தொடங்கப்பட்டு தொடர்ந்து ஆழ்வார்கள், தாசர்கள் உபன்யாசம் நடத்தப்பட்டது. 9-ம் நாளில் சீதா கல்யாணம் நடந்தது. சென்னை வெங்கடேஸ்வர பாகவதர் குழுவினர் சீதா கல்யாண நிகழ்ச்சியை நடத்தினர்.

    மாலையில் காயத்ரி ரகுராம் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. நாளை ராமர் பட்டாபிஷேகம் நடக்கிறது. தினமும் இசை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான பெண்கள் உள்பட உபநிஷர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    • விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • மனுக்களை வழங்க முடியாமல் தவிப்புக்குள்ளாகினர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறை மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளிப்பார்கள்.

    குறைதீர்க்கும் முகாமில் கலெக்டரே நேரடியாக மனுக்களை பெறுவதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை.இதன்காரணமாக அன்றைய தினம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க பொதுமக்களின் கூட்டம அலைமோதும்.

    அதன்படி திங்கட்கிழமையான இன்று மனு அளிக்க காலை முதலே முதியவர்கள் உள்பட நூற்றுக்கணக் கானோர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். ஆனால் இன்று காலை அரசு அலுவல் காரணமாக கலெக்டர் வெளியே சென்று விட்டார். ஆனால் பொதுமக்களிடம் மனுக்களை பெற எந்தவித மாற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

    கலெக்டர் இல்லாதபோது அதற்கு அடுத்த தகுதியில் உள்ள அதிகாரிகள் முகாமை நடத்தி மனுக்களை பெறுவது வழக்கம். ஆனால் இன்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களை கண்டுகொள்ள யாரும் இல்லை. இதனால் அவர்கள் தங்கள் மனுக்களை வழங்க முடியாமல் தவிப்புக்குள்ளாகினர்.

    • விருதுநகர் அருகே மாட்டுவண்டி தலையில் ஏறி வாலிபர் பலியானார்.
    • இது பற்றிய புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாப்டூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பொன்ராஜ்(வயது 30 )இவர் மாட்டு வண்டி ஓட்டி வந்தார். நேற்று அவர் கும்பமலை அடிவாரத்தில் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    அப்போது அவர் தலையில் மாட்டுவண்டி ஏறியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றிய புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    • தொழிலாளி மாயமானார்.
    • சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மாலை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 36), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரேமா (32) இவர்களுக்கு நவீன் குமார் (13) என்ற மகனும் ஹரிணி (7) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பிரேமா கோபித்துக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து ரமேஷ் குழந்தைகளை கவனித்து வந்தார். பலமுறை பிரேமாவை சமாதானப்படுத்த முயன்றபோதும் அவர் கணவருடன் சேர்ந்து வாழ சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ரமேஷ் திடீரென மாயமானார். எங்கு சென்றார் என்று தெரியவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து மகனை கண்டுபிடித்து தருமாறு ரமேஷின் தாய் சாந்தி சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 178 குரோஸ் பட்டாசு திரி பறிமுதல்; 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அனுமதி இன்றி பட்டாசு திரி தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    விருதுநகர்

    சிவகாசி தாயில்பட்டி டி.ராமலிங்கபுரம் பகுதியில் அனுமதி இன்றி பட்டாசு திரி தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வெம்பக்கோட்டை போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது பாலமுருகன் (வயது 35) என்பவரது வீட்டில் 48 குரோஸ் பட்டாசு திரிகளும், உமாராஜ் (58) வீட்டில் 36 குரோஸ் பட்டாசு திரிகளும், வீரராஜ் (50) வீட்டில் 50 குரோஸ் பட்டாசு திரிகளும், செல்வராஜ் (61) வீட்டில் 44 குரோஸ் பட்டாசு திரிகளும் வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து பட்டாசு திரிகளை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

    • ம.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது.
    • கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    ராஜபாளையம்

    ம.தி.மு.க. 30-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி ராஜபாளையம் மதுரைக்கடைத் தெருவில் கொடியேற்று விழா நடந்தது. நகரச்செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். நகரத் துணைச் செயலாளர்கள் அக்பர்அலி, லிங்கம், பூபதி, பொருளாளர் பிச்சைக்கனி, மாவட்டப்பிரதிநிதி புஷ்பவேல், குருமூர்த்தி முன்னிலை வகித்தனர். சாத்தூர் எம்.எல்.ஏ.ரகுராமன், மூத்த நிர்வாகி விநாயகமூர்த்தி, விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் ஆகியோர் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். முன்னதாக விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் ராமர், கிழக்கு ஒன்றியச் செயலாளர் வில்லிசை மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், தலைமைக்கழகச் சொற்பொழிவாளர் ஆசிலாபுரம் பாண்டுரங்கன், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×