என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • காதலனுடன் இளம்பெண் மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே உள்ள எலுமிச்சங்காய்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ரெபேக்காள். இவர்களுக்கு சாந்தி(வயது21) என்ற மகளும், ஐசக் என்ற மகனும் உள்ளனர். சாந்தி பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.

    சம்பவத்தன்று செல்வராஜ், அவரது மனைவி மற்றும் ஐசக் ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். ரெபேக்காள் வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது, சாந்தி வீட்டில் இல்லை. அக்கம், பக்கத்தில் விசாரித்தும் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. அப்போது ஐசக்கின் செல்போனுக்கு ஒரு நபர் போனில் அழைத்தார். அவர் சாந்தியை தான் காதலிப்பதாகவும், அவரை அழைத்துக்கொண்டு பாலக்காடு செல்வதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். அதன் பின்னர் அந்த செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸ் நிலையத்தில் செல்வராஜ் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தியை தேடி வருகின்றனர். 

    • ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 25-ந்தேதி நடக்கிறது.
    • ஜெயவிலாஸ் குழும ெதாழிலதிபர் டி.ஆர்.வரதராஜ் தொடங்கி வைக்கிறார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்துள்ள செட்டிக்குறிச்சி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீதேவி- பூதேவியுடன் பெருமாள் காட்சி அளிக்கிறார்.

    இப்பகுதியில் பிரசித்திப் பெற்ற இந்த கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான பூர்வாங்க பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. கோவில் கோபுரங்கள், பிரகாரங்கள் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது. சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) கோவில் கும்பா பிஷேகம் நடைபெறுகிறது.

    இதையொட்டி நாளை(23-ந்தேதி) காலையில் சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடக்கிறது. மாலையில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறு கின்றன. 24-ந்தேதி காலையில் புண்யாகவாசனம், அக்னி ஆராதனம், பல்வேறு ஹோமங்கள் நடக்கின்றன.

    காலை 10.30 மணிக்கு மூலவர் வரதராஜ பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவிக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது. மாலையில் பல்வேறு சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெறுகின்றன. வருகிற 25-ந்தேதி காலையில் கோபூஜை, பூர்ணாகுதி, சங்கல்ப பூஜை நடக்கிறது.

    யாகசாலை பூஜையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். இதில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்க பாண்டி யன், அசோகன், ரகுராமன், மான்ராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    தொடர்ந்து காலை 10.10 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடும், 10.30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 10.45 மணிக்கு ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. மதியம் அன்னதானத்தை ஜெயவிலாஸ் குழும ெதாழிலதிபர் டி.ஆர்.வரதராஜ் தொடங்கி வைக்கிறார்.

    விழாவை நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கே.வி.கே.ஆர்.பிரபாகரன் மற்றும் செட்டிகுறிச்சி கிராமமக்கள் செய்து வருகின்றனர்.

    • கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சாமுண் டீஸ்வரி. இவர்கள் 5 வருடங்களாக காதலித்து வந்தனர்.

    திருமண ஆசை காட்டி பலமுறை சாமுண் டீஸ்வரியை, நாகராஜ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் பின்னர் நாகராஜூக்கு ராணுவத்தில் வேலை கிடைத்தது. அப்போது சாமுண்டீஸ்வரி திருமணம் செய்து கொள்ளுமாறு நாக ராஜிடம் கேட்டார். ஆனால் நாகராஜ் அதற்கு மறுத்துவிட்டார்.

    இதைத்தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சாமுண்டீஸ் வரி புகார் செய்தார். போலீசாரின் அறிவுறுத் தலை தொடர்ந்து சாமுண்டீஸ்வரியை நாகராஜ் திருமணம் செய்து கொண்டார். 25 நாட்கள் குடித்தனம் நடத்தி வந்த நிலையில் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு நாகராஜ் வேலைக்கு சென்றார்.

    பின்னர் திரும்பி வந்தபோது, நாகராஜ் வீட்டாருக்கும், சாமுண் டீஸ்வரிக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது ரூ. 2 லட்சம் ரொக்கம் மற்றும் 50 பவுன் நகைகள் கொண்டு வந்தால் மட்டுமே நாகராஜூ டன் சேர்ந்து வாழ அனுமதிப்பதாக நாகராஜின் தாய் வரதம்மாள், உறவினர் வீரம்மாள் ஆகியோர் கூறியுள்ளனர்.

    மேலும் நாகராஜூம், தாயுடன் சேர்ந்து கொண்டு வரதட்சணை கொண்டு வருமாறு வற்புறுத்தி யுள்ளார். இதையடுத்து மீண்டும் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் சாமுண்டீஸ்வரி புகார் செய்தார். போலீசார் நாகராஜ், அவரது தாய் வரதம்மாள், வீரம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கல்வி கடன்களை தாமதமின்றி உடனே வழங்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.
    • வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில், அனைத்து வங்கியாளர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தாட்கோ, மாவட்ட தொழில்மையம், மகளிர் திட்டம் ஆகிய துறை கள் மூலம் பெறப்பட்ட கடன் விண்ணப்பங்களை முறையாக பரிசீலனை செய்து காலதாமதமின்றி கடன் வழங்க வேண்டும் என்றும், கல்விக்கடன் விண்ணப்பங்களை நிராகரிக்காமல் எந்த வித தாமதமின்றி பரிசீலனை செய்து கடன்களை வழங்கிட வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதில் மாவட்ட தாட்கோ அலுவலகம் மூலம் 7 பயனா ளிகளுக்கு பால் பண்ணை தொழில் புரிவதற்கும், 4 பய னாளிகளுக்கு வெள்ளாடு கள் வாங்குவதற்கும், 7 பய னாளிகளுக்கு டிராக்டர் வாங்குவதற்கும் என மொத்தம் 18 பயனாளி களுக்கு ரூ.21.8 லட்சம் மதிப்பில் சுய தொழில் புரி வதற்கான மானிய தொகைக்கான ஆணை களை கலெக்டர் வழங்கி னார்.

    கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வன் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • அன்னப்பராஜா பள்ளியில் யோகா தினவிழா நடந்தது.
    • உடற்கல்வி ஆசிரியர்கள் லட்சுமணன், கிருஷ்ணகுமார் செய்திருந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி யில் சர்வதேச யோகா தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி செயலர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ராஜபாளையம் நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் கலந்து கொண்டார். விழாவில் பள்ளி மாணவ-மாணவிகள் சூரிய நமஸ்காரம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர்.

    முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார்.என்.ஏ.மஞ்சம்மாள் தொழில்நுட்ப கல்லூரி இயக்குநர் விஸ்வநாதன், என்.ஏ. ராமச்சந்திரராஜா அறக்கட்டளை கருத்தாளர்கள் சிவகுமார், பழனியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் மாணவன் சுதர்சன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் லட்சுமணன், கிருஷ்ணகுமார் செய்திருந்தனர்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடக்கிறது.
    • இந்த மருத்துவ முகாமில், அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    விருதுநகர்

    தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 100 இலவச பன்நோக்கு சிறப்பு முகாம்களை நடத்திட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

    அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி அமலா உயர்நிலைப்பள்ளி மற்றும் அருப்புக்கோட்டை ஏ.பி.டி.எஸ்.எம்.பி.எஸ். மெட்ரிக் பள்ளி ஆகிய இடங்களில் வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும்.

    இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்படும். இதில் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, இசிஜி, எக்கோ, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, தொழு நோய் கண்டறியும் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைக ளும், ஆலோச னைகளும் வழங்கப்படும்.

    மேலும் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைக் கான ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்படும்.இந்த மருத்துவ முகாமில், அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இந்த தகவலை விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • சில்லறை வியாபாரிகள் முன்னேற்றத்திற்கும் உதவி செய்யப்படும் என்று யூனியன் வங்கி அதிகாரி கூறினார்.
    • கோபாலபுரம் கிளை மேலாளர் திவ்யா நன்றி கூறினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வாடிக்கையாளர் தின நிகழ்ச்சி நடந்தது. ராஜ பாளையம் கிளை மேலாளர் ஜேம்ஸ் வரவேற்றார். மண்டல மேலாளர் ரஞ்சித் பேசியதாவது:-

    வாடிக்கையாளர்களுக்கு வசதிகளை அதிகரிக்கவும், பெரிய வணிகர்கள் மட்டுமின்றி சில்லறை வியாபாரிகளும் முன்னேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்வது தருவதற்காக இந்த வாடிக்கையாளர் தினம் நடத்தப்படுகிறது.

    மேலும் வீடு கட்டவும், வியாபாரம் செய்யவும், வீடு, நிலம் போன்றவை வாங்குவதற்கும், இதர வங்கி பரிமாற்றங்களுக்கும் சேவை அளிக்கப்படும். இந்தியாவிலேயே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக ளில் 5-வது சிறந்த வங்கி யாக யூனியன் வங்கி உள்ளது. மேலும் வாடிக்கை யாளர்களின் அனைத்து தேவைகளுக்கும் வங்கி மேலாளர் அணுகலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் வாடிக்கை யாளர்கள்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். விழாவில் துணை மண்டல மேலாளர் சோமசுந்தரம், கிளை மேலா ளர்கள் ஜேம்ஸ், செட்டியார்பட்டி சக்தி ஆனந்த மூர்த்தி, சேத்தூர் ஜெயகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோபாலபுரம் கிளை மேலாளர் திவ்யா நன்றி கூறினார்.

    • அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறி உள்ளார்.
    • இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    விருதுநகர் நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறி முறைகள் கடந்த 14.6.2018-ல் வெளியிடப்பட்டன.

    இந்த திட்டத்தின் கீழ் இணையம் வழியாக 14.6.2018 முதல் 13.9.2018 வரை 3 மாத காலத்தில் பெறப்பட்ட விண்ணப் பங்களுக்கு இசைவு வழங்கு வதற்கு சென்னை ஐகோர்ட்டு விதிக்கப் பட்டிருந்த தடையை நீக்கி 10.2.2021 அன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    பின்னர் 22.3.2021 முதல் 4.4.2021 வரை 2 வார காலத்திற்கு விண்ணப்ப ங்கள் பெறப்பட்டன. மீண்டும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறிய வர்களுக்கு 31.12.2022 வரை 6 மாத காலம் அவகாசம் வழங்கப் பட்டது. தற்போது இதற்கான கால அவகாசம் 30.6.2023 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவல கங்களை அணுகலாம்.

    மேலும் https://tcp.tn.gov.in என்ற இணைய முகவரி யில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • தனிப்படை போலீசார் மாயமான செந்தில்குமாரின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்தனர்.
    • தொழில் ரீதியாக 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

    விருதுநகர்:

    மதுரையை சேர்ந்தவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம். நடமாடும் நகைக்கடை போன்று அதிக நகைகள் அணிந்து வலம் வரும் இவரிடம், விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி வீரராமன் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (வயது 38) என்பவர் கூட்டாளியாக இருந்த வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரிச்சியூர் செல்வத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செந்தில்குமார் அவரை பிரிந்து சென்றார். சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பாயூரணியில் நடந்த ஊராட்சி தலைவர் கொலை சம்பவம் தொடர்பாக செந்தில்குமாரை போலீசார் வழக்கில் சேர்த்திருந்தனர்.

    ஆனால் அவர் விசாரணையின்போது ஆஜராகவில்லை. இதையடுத்து எதிர்தரப்பினர் செந்தில்குமாரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் முறையிட்டனர். இதனை விசாரித்த நீதிபதிகள், செந்தில்குமாரை கண்டு பிடித்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டனர்.

    அதன்படி தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆலோசனையின்பேரில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் உத்தரவின்பேரில் அருப்புக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண் காரட், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் மாயமான செந்தில்குமாரின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர் வரிச்சியூர் செல்வத்துடன் அடிக்கடி பேசியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து வரிச்சியூர் செல்வத்தை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் செந்தில்குமார் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

    செந்தில்குமார் வரிச்சியூர் செல்வத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில், கருப்பாயூரணி ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் அவரது பெயரை போலீசார் சேர்த்திருந்தனர். தொழில் ரீதியாக 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வரிச்சியூர் செல்வம், செந்தில்குமாரை கொலை செய்ய திட்டமிட்டார்.

    அதன்படி சென்னையில் இருந்த அவரை கூட்டாளிகளுடன் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு உடலை துண்டு துண்டாக வெட்டி உள்ளார். பின்னர் அதனை பார்சல் கட்டி நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் வீசி உள்ளனர்.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதற்கிடையில் கைது செய்யப்பட்ட வரிச்சியூர் செல்வத்தை சாத்தூர் கோர்ட்டில் நேற்று இரவு ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். கொலையுண்ட செந்தில்குமாரின் கார், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் விஜய் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது.
    • அண்ணாமலை பேச்சால் பா.ஜனதா வளர்ந்து விடாது.

    விருதுநகர் :

    விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்துக்கு நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்று, சங்கரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேணடுமென கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. ஆனால் எங்களை பொறுத்தமட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசை, ஒரு தனி நபர் செயல்படவிடாமல் தடுப்பது ஏற்புடையதல்ல.

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை சுறுசுறுப்பாக இயங்குகிறார். அவர் நேர்மையான அதிகாரி என்ற முறையில் ஊழல் பற்றி பேசுவதற்கு தகுதியானவர்தான். ஆனால் அவரது பேச்சால் பா.ஜனதா வளர்ந்து விடாது. பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

    நடிகர் விஜய் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது. நாங்களும் அதைத்தான் வலியுறுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய தொழில் தொடங்க இளைஞர்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.
    • ரூ.4லட்சத்து 57ஆயி ரத்திற்கான கடனுதவி ஆணையினை கலெக்டர் வழங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதன் மூலம் அவர்கள் சமூக பொரு ளாதார ரீதியாக வளர்ச்சி அடையும் நோக்கில் தமிழக அரசால் படித்த வேலை வாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, மாவட்ட தொழில் மையம் மூலம் சிறப்பாக செயல்படுத் தப்பட்டு வருகிறது.

    மாவட்ட தொழில் மையத்தின் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2023-24-ம் நிதியாண்டிற்கான முதல் காலாண்டில் ரூ.29 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் தற்போது 7 மகளிர் தொழில் முனைவோர்களுக்கு ரூ.7 லட்சத்து 18 ஆயிரத்து 400 மதிப்பிலும், ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த 1 தொழில் முனைவோருக்கு ரூ.1லட்சத்து 14 ஆயிரத்து 250 மதிப்பிலும், சிறு பான்மையினர் பிரிவைச் சார்ந்த 3 தொழில் முனைவோர்களுக்கு ரூ.3லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலும் மற்றும் 1 மாற்றுத்திறனாளி தொழில் முனைவோர்களுக்கு ரூ.45 ஆயிரத்து 350 மதிப்பிலும் என மொத்தம் 12 புதிய தொழில் முனைவோர்க ளுக்கு ரூ.12 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலான தமிழக அரசின் மானியத் தொகை பெறுவதற்கான ஆணை களை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

    முதல்-அமைச்சரின் தனிப்பிரிவிற்கு புதிய தொழில் தொடங்க கடனு தவி வேண்டி விண்ணப்பித்த இளைஞருக்கு புதிய தொழில் தொடங்குவதற்காக மானியத்துடன் கூடிய ரூ.4லட்சத்து 57ஆயி ரத்திற்கான கடனுதவி ஆணையினை கலெக்டர் வழங்கினார்.

    மேலும் விருதுநகர் மாவட்டத்தில் வியாபார நோக்கத்திற்காக தொழில் தொடங்க ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்ப தாரர்கள் மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், பொதுமேலாளர் (மாவட்ட தொழில் மையம்) ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தீக்குளிக்க முயன்ற தந்தை-மகன் மீது வழக்குப்பதியப்பட்டது.
    • புதுக்குளம் கிராம நிர்வாக அதிகாரி சரவணகுமார் புகார் செய்தார்.

    விருதுநகர்

    திருச்சுழி தாலுகா பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் தெய்வசிகாமணி. நரிக்குடி-திருப்புவனம் மாநில ெநடுஞ்சாலையை ஆக்கிரமித்து இவர்கள் வீடு, கடை கட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் நடந்த வழக்கில் வீடு, கடையை அகற்ற உத்தரவிடப்பட்டது. அதன்படி மதுரை ெநடுஞ்சாலைத்துறை உதவி இயக்குநர் சங்கர் தலைமையில் ஊழியர்கள் கட்டிடத்தை இடிக்க வந்தனர். அப்போது தந்தையும்-மகனும் பெட்ரோலை தங்கள் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    அங்கிருந்த ேபாலீசார் உடனடியாக தடுத்து அவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் ஊழியர்கள் வீடு, கடையை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்த நிலையில் அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து மாரியப்பன், தெய்வசிகாமணி தீக்குளிக்க முயன்றது தொடர்பாக ஏ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் புதுக்குளம் கிராம நிர்வாக அதிகாரி சரவணகுமார் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×