என் மலர்
வேலூர்
வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனை அருகே 100-க்கும் மேற்பட்ட டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்கள் இயங்கி வருகின்றன.
இதில் சிலவற்றில் ரெயில் பயணத்துக்கான போலி இ-டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருவதாக காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் பாபுராவ் தெரு, மெயின்பஜார், தோட்டப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் டிராவல்ஸ் ஏஜென்சிகளில் அதிரடி ஆய்வு நடத்தினர்.
இதில் பாபுராவ் தெருவில் உள்ள தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி ஒன்றில் வெவ்வேறு பெயர்களில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு செல்லும் விரைவு மற்றும் அதிவிரைவு ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்யப்பட்ட 300-க்கும் மேற்பட்ட போலி ரெயில்வே டிக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்திருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்த ஏஜென்சி உரிமையாளர் சுரேஷ் (வயது 33) என்பவரை ரெயில்வே போலீசார் கைது செய்து அங்கிருந்த போலி ரெயில் டிக்கெட், கணினி, லேப்டாப், ஸ்கேனர், பிரிண்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற செயல்களில் இனியாராவது ஈடுபடுவது தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் எச்சரித்துள்ளனர்.
அரக்கோணம் பகுதிகளில் திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களை தடுக்கும் பொருட்டு எஸ்.பி. பர்வேஷ்குமார் உத்தரவின் பேரில் அரக்கோணம் டி.எஸ்.பி. குத்தாலிங்கம் தலைமையில் அரக்கோணம் உட்கோட்ட பகுதிகளில் இரவு பகல் முழுவதும் ஏராளமான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் சரியான முறையில் தங்களுக்கு இட்ட பணிகளை செய்கிறார்களா? என்று டி.எஸ்.பி.யும் அனைத்து பகுதிகளிலும் நேரில் சென்று கண்காணித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று அரக்கோணம் தொல்சாப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட டவுன் போலீசார் அங்கு நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் கோவிந்தவாடி அகரத்தை சேர்ந்த அஜித்குமார்(20), லோகேஷ்(24), மற்றும் பள்ளூர் பகுதியை சேர்ந்த சரத்குமார்(22) என்றும் அவர்கள் பைக் திருடர்கள் என்றும் தெரிந்தது.
அவர்கள் மறைத்து வைத்திருந்த 3 பைக்குகளும் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து டி.எஸ்.பி. குத்தாலிங்கம் கூறியதாவது:-
புதிதாக பொறுப்பேற்ற எஸ்.பி. அவர்கள் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்கள் மீது தயங்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் இரவு பகல் முழுவதும் அனைவரும் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபடவேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருந்து தங்கள் கடமையை முழு மனதுடன் செய்ய வேண்டும் என்று கூறிய ஆலோசனைகளின் படி நாங்களும் கால நேரம் பாராமல் கடமையாற்றி வருகிறோம். எங்களுக்கு பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாலாஜா:
ராணிப்பேட்டை சிப்காட் காமராஜர் நகரை சேர்ந்தவர் மனோகர். இவருடைய மகன் கிஷோர்குமார் (வயது 17). பெல் ராமகிருஷ்ணா மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த சில நாட்களாக கிஷோர்குமார் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
விடுமுறை நாளான நேற்று வீட்டில் இருந்த கிஷோர் குமாருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. வலி அதிகமாகி துடித்துள்ளார். பிறகு, என்ன செய்வதென்று தெரியாமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.
குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கிஷோர்குமார் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து, சிப்காட் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். வழக்குப்பதிந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வேலூரில் தி.மு.க. சார்பில் அமைதி பேரணி நடந்தது.
பேரணியில் தி.மு.க. முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன், முன்னாள் எம்.பி முகமதுசகி, எம்.எல். ஏக்கள் காந்தி, நந்தகுமார், கார்த்திகேயன், நல்ல தம்பி உள்பட கலந்து கொண்டனர்.
வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி காட்பாடி சாலை, மக்கான் சிக்னல், பழைய பஸ் ஸ்டாண்டு வழியாக அண்ணா சாலையில் உள்ள தி.மு.க. மாநகர அலுவலகத்தில் நிறைவடைந்தது.
அங்கு வைக்கப்பட்டுள்ள கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி துரைமுருகன் அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. தலைவர் கருணாநிதி இல்லாத நாட்கள் என் வாழ்க்கையில் இருண்டு போனதாக கருதுகிறேன். அவரின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவருக்கு முன்பு நான் இறப்பேன் என நினைத்தேன். ஆனால் என்னை அவர் முந்திக் கொண்டு சென்றுவிட்டார்.
என்னால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. (அப்போது அவர் மேற்கொண்டு பேச முடியாமல் கதறி அழுதார். உடன் அவரை கட்சி நிர்வாகிகள் சமாதானப்படுத்தினர்.)
எத்தனையோ பேருக்கு பாரத ரத்னா விருதுகளை கருணாநிதி வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் அவருக்கு நாங்கள் அந்த விருதை கேட்பதைவிட தோழமை கட்சிகள் கேட்பதே சிறந்தது. இதற்கு மத்திய அரசு மனசு வைக்க வேண்டும்.

அமைதி பேரணியில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ், த.மா.கா., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சியை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். #DMK #Karunanidhi #DuraiMurugan #MKStalin
அரக்கோணம்:
காவேரிப்பாக்கம் அடுத்த கொண்டாபுரத்தை சேர்ந்தவர் சுந்தர் (வயது40). கூலி தொழிலாளி இவரது மனைவி யாசினி. இவர்களுக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர்.
சுந்தர் நேற்று அதிகாலை அதே பகுதியில் உள்ள கண்ணங்குளத்தில் மீன் பிடிக்க செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தரின் மனைவி யாசினி கண்ணங்குளத்திற்கு சென்று பார்த்தார். அப்போது சுந்தர் பிணம் குளத்தில் மிதந்தது.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சுந்தரின் உடலை போராடி மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூடுதல் ஏ.டி.எஸ்.பி.க்கள் டி.எஸ்.பி.க்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறை அல்லாத இதர பிரிவுகளை சேர்ந்த சமூக நலத்துறை அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், அரசு மருத்துவமனை அதிகாரிகள். சிறைத்துறை, வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட அளவில் நடைபெற்ற இக்கூட்டத்தில் குற்றங்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்தும், சாலை விபத்துக்கள் நடைபெறாமல் எவ்வாறு தடுப்பது என்பது பற்றியும், அறிவுரை வழங்கப்பட்டது. பெண்களுக்கெதிரான குற்ற வழக்குகளில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
காணாமல் போன சிறுவர், சிறுமியர்களை விரைந்து கண்டுபிடிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள பிடி கட்டளைகளை நிறைவேற்ற தணிகுழு அமைக்க வேண்டும். பற்றியும், ஒவ்வொரு கிராமத் திலும் கிராம விழிப்புணர்வு கூட்டம் நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்களை உரிய மரியாதையுடன் வரவேற்று அவர்களது கோரிக்கைகளை பரிசீலித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு சூப்பிரண்டு பர்வேஷ்குமார் உத்தரவிட்டார். #tamilnews
வேலூர்:
வரும் 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று காலை 11 மணிக்கு தவறாமல் கிராம சபை கூட்டங்கள் கூட்டப்பட வேண்டும்.
இக்கிராம சபைக் கூட்டத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி தடை செய்தல், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், கடந்த மே 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி முடிய கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பணிகளின் விவரம் மற்றும் 2018-19ம் ஆண்டுக்கான தொழிலாளர் வரவு-செலவு திட்டம்.
பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள சாலைப்பணிகள், உயர்மட்ட பாலங்கள் மற்றும் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தில் பணிகள் தேர்வு செய்து பார்வைக்கு வைத்தல், நியாய விலை கடைகளின் கணக்குகளை சமூக தணிக்கைக்கு உட்படுத்துதல் உட்பட பல்வேறு பொருள்கள் விவாதிக்கப்பட உள்ளது.
இந்த கிராம சபைக் கூட்டங்களில் தாசில்தார் களை பார்வை யாளர்களாக கலந்து கொண்டு, கிராம சபைக்கூட்டம் நடை பெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்து உத்தர விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
காட்பாடி ரங்காலயா திருமண மண்டபம் அருகே இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்றிரவு ஒரு வாலிபர் மதுபோதையில் தள்ளாடியபடி ஏ.டி.எம். மையத்திற்கு வந்தார். அவர் ஏ.டி.எம். மையம் முன்பு கையில் காலி மதுபாட்டிலை வைத்துக் கொண்டு ரகளை செய்தார்.
போதை வாலிபரின் எல்லை மீறிய அட்டகாசம், ஏ.டி.எம். மையத்தின் முன்பு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
இதை கவனித்த அந்த வாலிபர், மதுபாட்டிலை கேமராவை மீது வீசி உடைக்க முயன்றார். இதில் கேமரா சேதமடைந்தது.
பின்னர், ஏ.டி.எம். மையத்தில் புகுந்த வாலிபர் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் மீண்டும் தள்ளாடி கொண்டு அங்கிருந்து சாவகாசமாக தப்பிச்சென்றார்.
இக்காட்சிகள் முழுமையாக, சேதமடைந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், போதை வாலிபரின் உருவம் தெள்ளத்தெளிவாக இல்லை. அவர் யார்? என்பதை அடையாளம் காணுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுப்பற்றி, வங்கி சார்பில் விருதம்பட்டு போலீசில் இன்று புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து, ஏ.டி.எம். மையம் இருக்கும் பகுதியில் உள்ள வணிக வளாகங்கள், அலுவலகங்களில் உள்ள மற்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வாலிபரை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நன்னடத்தை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். வேலூர் ஜெயிலில் இருந்து முதற்கட்டமாக 7 பேரும் 2-வது கட்டமாக 24 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இன்று 3-வது கட்டமாக சீனிவாசன் என்பவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டார். அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்று அழைத்து சென்றனர்.
ஆற்காடு அடுத்த கலவை பஜாரில் உள்ள ஒரு துணிக்கடையில் 18 வயது இளம்பெண்ணும், 22 வயது வாலிபரும் ஒன்றாக வேலை செய்தனர். அப்போது, 2 பேரும் நெருங்கி பழகியதால் காதல் மலர்ந்தது. 3 மாதம் மட்டுமே காதலித்த அந்த வாலிபரின் ஆசைக்கு அந்த இளம்பெண் இணங்கினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணை அந்த வாலிபர் தனிமையில் அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்தார்.
இதையடுத்து, இளம் பெண்ணுடன் பேசுவதை வாலிபர் முற்றிலும் தவிர்த்தார். வருத்தமடைந்த காதலி, திருமணம் செய்து கொள்ளுமாறு வாலிபரை வற்புறுத்தினார். திருமணத்திற்கு வாலிபர் ஒத்துக் கொள்ளவில்லை. இதுப்பற்றி கலவை போலீசில் காதலன் மீது இளம்பெண் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews
திருப்பத்தூர்:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் மகேந்திரகுமார். இவரது மகன் ராஜ்குமார் (வயது 31). இவர், திருப்பத்தூர் நகராட்சி குத்தகை சைக்கிள் ஸ்டாண்ட்டில் வேலை செய்து வந்தார். ராஜ்குமாருக்கு திருமணமாகி கவுசல்யா (28) என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நேற்றிரவு பணி முடிந்து வீடு திரும்பிய அவர், திடீரென மாயமானார். இரவு முழுவதும் வீட்டிற்கு வரவில்லை. இந்த நிலையில், இன்று காலை திருப்பத்தூர் அடுத்த பெரிய குனிச்சி பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவர் வீட்டின் அருகே ராஜ்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
இதுப்பற்றி அப்பகுதி மக்கள், கந்திலி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை பார்வையிட்டபோது, ராஜ்குமார் கழுத்தில் வீக்கம் இருந்தது.
எனவே, அவர் கழுத்து நெரிக்கப்பட்டும், அடித்தும் கொல்லப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து, பிணத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், நேற்றிரவு பணி முடிந்து வீடு திரும்பிய ராஜ்குமார், கவுதம பேட்டையை சேர்ந்த வாலிபர்கள் சிலருடன் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, ஏற்பட்ட தகராறில் அந்த வாலிபர்கள், ராஜ்குமாரை சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்து கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாங்காய் மண்டி அருகில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழக அவைத்தலைவர் நாமக்கல் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் நேற்று பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆலோசனை கூட்டம் கொணவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
கட்சியின் அவைத் தலைவர் நாமக்கல் அன்பழகன், தலைமை நிலைய செயலாளர் பழனியப்பன், தேர்தல் பிரிவு செயலாளர் செந்தமிழன், அமைப்பு செயலாளர்கள் செந்தில்பாலாஜி, சி.கோபால், ஞானசேகரன், மாவட்ட செயலாளர்கள் என்.ஜி.பார்த்திபன், பாலசுப்பிரமணி, கலையரசு மற்றும் ஜெயந்தி பத்மநாபன், கிழக்கு மாவட்ட பொருளாளர் அப்பு பால் பாலாஜி, முன்னாள் அமைச்சர்கள் பாண்டு ரங்கன், வடிவேல், முன்னால் எம்.எல்.ஏ. சந்திரசேகர், எல்.கே.எம்.பி.வாசு, தோட்டப்பாளையம் எஸ்.கே.மோகன் மற்றும் பகுதி செயலாளர்கள் கட்சி அனைத்து அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் டி.டி.வி. தினகரன் பங்கேற்கும் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.






