என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் துப்புரவு தொழிலாளி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று திடீரென கத்தியால் தொழிலாளியை வெட்டி விட்டு தப்பிச்சென்றனர்.

    வேலூர்:

    வேலூரை அடுத்த விருபாட்சிபுரத்தை சேர்ந்தவர் வேணுகோபாலன் (வயது 42). துப்புரவு தொழிலாளி. இவர் நேற்று இரவு 7.30 மணியளவில் பழைய பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் ஒன்று திடீரென கத்தியால் வேணுகோபாலனை வெட்டி விட்டு தப்பிச்சென்றனர்.

    இதில் படுகாயம் அடைந்த வேணுகோபாலனை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேணுகோபாலனை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடிய மர்மகும்பலை தேடி வருகின்றனர். ‘வேணுகோபாலனுக்கும், அவரது மருமகனுக்கும் இடையே குடும்பதகராறு இருந்து வருவதாகவும், அதனால் மர்ம கும்பலை ஏவி அவரை கொலை செய்ய முயற்சி செய்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

    இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று போலீசார் தெரிவித்தனர்.

    திருப்பத்தூர் கனிம சுரங்கத்தில் கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்து கேட்டறிந்தார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் டாமின் வெர்மிகுலேட் சுரங்கம் 1978 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

    திருப்பத்தூர் தாலுகா செவ்வத்தூர் மற்றும் எலவம்பட்டி ஊராட்சி பகுதிக்குட்பட்ட 23,710 எக்டேர் பரப்பளவில் கையகப்படுத்தப்பட்ட பகுதிகளில் கனிமம் வெட்டி எடுக்கப்படுகிறது. இந்த கனிம சுரங்கத்தில் வெர்மிகுலேட் கனிமம் வெட்டி எடுக்கப்படுகிறது.

    இந்த வெர்மிகுலேட் கனிமம் வெப்பத்தை தனிக்கும் தன்மை கொண்டதால் வீடுகளின் கூரைகளில் பதிக்கவும், மின்சார இன்சுலேட்டர்கள் பேருந்து மேற்கூரை சீட், மேலும் வேளாண்துறையில் மரக்கன்றுகளை சுற்றி போடப்பட்டு ஈரப்பதத்தை பாதுகாக்கும் வகையில் உள்ளதால் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.

    மாதத்திற்கு 100 முதல் 150 டன் அளவிற்கு வெட்டி எடுக்கப்படும் வெர்மிகுலேட் வேளாண் பயன்பாட்டிற்காக கோவை, தேனி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கோடைக்காலத்தில் மட்டும் கனிமம் வெட்டும் பணிகள் நடைபெறும். மழைக்காலத்தில் இந்த சுரங்கப் பணிகள் நடைபெறாது.

    இந்த நிறுவனத்தில் 40 பணியாட்கள் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பணிபுரிந்து வருகிறார்கள்.

    தொடர்ந்து நவீன தொழில் நுட்பத்தை கொண்டு ரூ.1.80 கோடி மதிப்பில் பட்டப்பட்டுள்ள புதிய வெர்மிகுலேட் கனிமத்தை தரம்பிரித்து சுடேற்றி பிரிக்கும் அலகு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்து கேட்டறிந்தார்.

    இதேபோன்ற அமைப்பு சென்னை அம்பத்தூரில் இயங்கி வருகிறது. இந்த வெர்மிகுலேட் தாது கனிமத்தை எடுத்து வரும் செலவை குறைக்கும் வகையில் இந்த புதிய சுரங்க அலகு கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் பெருமளவு பயண நேரம் மிச்சப்படும் கலனின் போட்டு சூடேற்றப்படும் போது வெர்மிகுலேட் கனிம தாது மண் பாப்கார்ன் போன்று மாறிவிடும்.

    இவற்றை 3 பிரிவாக தரம் பிரித்து அதன் தேவைக்கேற்ப விற்பனை செய்யப்படும். இந்த அலகை விரைவில் தமிழக முதல் அமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்கள் என்று டாமின் கோட்ட மேலாளர் ரமேஷ்பாபு, கலெக்டர் ராமனிடம் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து கந்திலி ஊராட்சி ஒன்றியத்து ஊரக வளர்ச்சி மூலம் கட்டப்பட்டுள்ள தனிநபர் கழிப்பறை கட்டமைப்பு மற்றும் பாரத பிரதம மந்திரியின் வீடுகள் வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீட்டினையும் பார்வையிட்டார்.

    சப்-கலெக்டர் பிரியங்கா, டாமின் கனிம நிறுவன கோட்ட மேலாளர் ரமேஷ்பாபு, சுரங்க பணி உதவியாளர் கார்த்திகேயன், திருப்பத்தூர் தாசில்தார் சத்தியமூர்த்தி, வட்டா வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சந்திரன் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

    அனுமதியின்றி குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்த சோளிங்கர் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    சோளிங்கரை சேர்ந்தவர் சரவணன் மகன் கார்த்திக் (வயது25). சோளிங்கர் அரக்கோணம் மெயின் ரோட்டில் குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்தார். இதில் ஆதரவற்ற 6 சிறுவர்கள், ஒரு சிறுமி பராமரிக்கபட்டு வந்தனர்.

    இந்த காப்பகத்தில் வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது காப்பகம் அனுமதியின்றி செயல்படுவது தெரிய வந்தது. அங்கிருந்த சிறுவர், சிறுமி உள்பட 7 பேரையும்மீட்டனர். அவர்களை வேலூர் அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக சோளிங்கர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அனுமதியின்றி குழந்தைகள் காப்பம் நடத்திய கார்த்திக்கை கைது செய்தனர். கார்த்திக் மேலும் காப்பகங்கள் நடத்துகிறார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூரில் கொலை வழக்கில் ஜாமினில் வந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வேலூர்:

    வேலூர் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட்டீஸ்வரன் என்பவர் கொலை செய்யபட்டார். இந்த வழக்கில் ஓல்டுடவுனை சேர்ந்த சாய்சரத் (24) என்பவர் உள்பட 4 பேர் கைது செய்யபட்டனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட சாய்சரத் ஜாமினில் வெளியே வந்தார். அவர் சரியாக வேலைக்கு போகாமல் வீட்டில் பணம் கேட்டுள்ளார்.

    இதனால் வீட்டில் தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த சாய்சரத் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூர் தெற்கு போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    வேலூரில் 101.7 டிகிரி வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். ரோட்டில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

    வேலூர்:

    கோடைகாலத்தில் வேலூர் மாவட்டத்தில் வெயில் கொளுத்தும். இதனால் பொதுமக்கள் கோடைகாலங்களில் மிகுந்த சிரமத்திற்குள்ளாவார்கள். இந்த வருடம் கோடைகாலம் முடிந்தும் வேலூரில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. வேலூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்தாலும், அதற்கு இணையாக வெயிலும் கொளுத்துகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் 100 டிகிரியும், நேற்று 101.7 டிகிரியும் வெயில் பதிவானது.

    இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    நேற்று இரவு 8.30 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் ½ மணி நேரம் மழை பெய்ததால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இரவில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    காட்பாடியில் மோட்டார்சைக்கிள் திருட முயன்ற வடமாநில வாலிபரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    காட்பாடி தாராபடவேட்டில் மளிகைக்கடை ஒன்று உள்ளது. அங்கு சிலர் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வடமாநில வாலிபர் ஒருவர் அங்கு பொருட்கள் வாங்குவது போல நின்று கொண்டிருந்தார். திடீரென அவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை திருட முயன்றார்.

    இதனை பார்த்த பொதுமக்கள் அவரை அடித்து உதைத்தனர். பின்னர் கைகளை கட்டிப்போட்டு காட்பாடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அந்த வாலிபரிடம் அவர் யார்? எந்த ஊர் என்பது குறித்து விசாரித்தனர். ஆனால் அவர் ஒரு வகையான போதைபொருளை உட்கொண்டிருந்ததால் மயக்க நிலையில் இருந்தார். அதனால் போலீசார் கேட்ட எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை.

    பிடிபட்ட வாலிபர் வடமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து வாகனம் மற்றும் நகைகளை திருடும் கும்பலை சேர்ந்தவரா?, அல்லது மோட்டார்சைக்கிள்கள் திருடும் கும்பலை சேர்ந்தவரா? என்பது குறித்தும், அவர் பழைய குற்றவாளியா? என்பது பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ஜோலார்பேட்டையில் விடுதியில் மாணவர்களிடம் இருந்து நன்கொடையாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை வசூலித்த வார்டனை சஸ்பெண்ட் செய்து உதவி கலெக்டர் உத்தரவிட்டார்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகில் ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதி உள்ளது. இதில் ஜவ்வாதுமலை, புதூர் நாடு, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து 35 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். விடுதியின் வார்டனாக ஜோலார்பேட்டையை சேர்ந்த பாஸ்கரன் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் விடுதியில் சுகாதாரமில்லாத உணவுகள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதோடு அடிப்படை வசதிகள் இல்லாததால் நோய் தொற்று அபாயம் இருப்பதாக திருப்பத்தூர் உதவி கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மாணவர்கள் மின் விசிறி, மின் விளக்கு இல்லாமல் இருளில் அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது. சமையல் அறைக்கு சென்று ஆய்வு செய்தபோது காலையில் சமைத்த உணவையே இரவுக்கும் பயன்படுத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து நேற்று உதவி கலெக்டர் தலைமையில் நகராட்சி கமி‌ஷனர் விசாலாட்சி, ஆதிதிராவிட நல (தனி) தாசில்தார் குமரேசன் ஆகியோர் வார்டனிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவும், அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமல் இருந்தது தெரியவந்தது. மேலும் திருமண நாட்களில் விடுதியில் உணவு சமைக்கப்படாமல் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்து உணவை எடுத்து வந்து மாணவர்களுக்கு கொடுத்தது தெரியவந்தது.

    மேலும் விடுதி வார்டன் பாஸ்கரன் மாணவர்களிடம் இருந்து இதுவரை நன்கொடையாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை வசூலித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பாஸ்கரனை சஸ்பெண்ட் செய்து உதவி கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். #tamilnews
    ஜோலார்பேட்டை அருகே விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

    ஜோர்பேட்டை:

    வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை சேர்ந்தவர் மதியழகன்(வயது 24) ஆட்டோ டிரைவர் இவரது மனைவி ஜனனி (20) இவர்களுக்கு 1 மகன் உள்ளார்.

    இந்நிலையில் மதியழகன் நேற்று இரவு நாட்டறம்பள்ளியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது குடியாலகுப்பம் என்ற இடத்தில் வந்த போது அங்கு சாலையின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின் பக்கம் மோதினார்கள் இதில் மதியழகன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு அஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மு.க.அழகிரி அமைதிப் பேரணி குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கைகளை உயர்த்தியபடி நோ கமெண்ட்ஸ் என பதிலளித்தார். #DMK #DuraiMurugan #MKAlagiri
    வேலூர்:

    முன்னாள் அமைச்சர் துரைமுருகன் திமுக பொருளாளராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக இன்று அவரது சொந்த ஊரான காட்பாடிக்கு வந்தார்.

    அவருக்கு தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்த பொதுக்குழு, செயற்குழு, தி.மு.க. தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் ரூ. 1 கோடி தேர்தல் நிதி வழங்கியுள்ளனர். இதை போல மற்ற மாவட்டங்களிலும் நிதி வழங்க வேண்டும்.

    ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் வீடுகளிலும் குட்கா சம்பந்தமாக சோதனை நடத்த வேண்டும். இது தாமதமானது தான் என்றாலும் வரவேற்கதக்கது.


    கர்நாடக மாநிலம் மேகதாதுவில் எப்படியாவது அணை கட்ட வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா ஒற்றைகாலில் நிற்கிறார்.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் அதனை தடுத்து நிறுத்தினோம். மேகதாதுவில் அணைகட்டினால் காவிரியில் வரும் கொஞ்ச தண்ணீரும் நின்று விடும். இது மிகப்பெரிய ஆபத்து. தமிழக அரசு இதனை முழு மூச்சோடு எதிர்க்க வேண்டும்.

    பாலாற்றில் தந்திர அரசு தடுப்பணைகளை கட்டி வருகிறது. தற்போது ஆற்றுக்கு தண்ணீர் வரக்கூடிய கால்வாய்களிலும் அணை கட்ட ஆரம்பித்துவிட்டனர். தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தோடு தான் இது நடக்கிறதா. பொதுப் பணித்துறை அமைச்சர் விஜயவாடாவுக்கு நேரில் சென்று பார்வையிட்டு அணைகட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மு.க.அழகிரி அமைதிப் பேரணி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது துரைமுருகன் கைகளை உயர்த்தியபடி நோ கமெண்ட்ஸ் என பதிலளித்தார். #DMK #DuraiMurugan #MKAlagiri
    பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வேலூர்:

    வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் அருகே உள்ள சத்தியமங்கலம் புதிய காலனியை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் அருண்பிரசாத் (வயது 16). அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 10 நாட்களாக அருண்பிரசாத் பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இதில் மனமுடைந்த அருண்பிரசாத் நேற்று காலை அனைவரும் வெளியில் சென்றிருந்த நேரத்தில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றிருந்தவர்கள் வீடு திரும்பியபோது அருண்பிரசாத் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதனர். உடனடியாக இதுபற்றி விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து சென்று மாணவர் அருண்பிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ஆம்பூர் அருகே பிளஸ்-1 மாணவன் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே பிளஸ்-1 மாணவன் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் பட்டுவாம்பட்டி கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவன் மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த மாணவனின் உறவினர் பெண்ணும் அதே பள்ளியில் படிக்கிறார். 2 பேரும் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர்.

    நேற்று பள்ளி வளாகத்தில் மாணவியுடன் பிளஸ்-1 மாணவன் பேசி கொண்டிருந்தார். அப்போது, அதே பள்ளியில் படிக்கும் பட்டுவாம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒருசில மாணவர்கள் பிளஸ்-1 மாணவனையும், மாணவியையும் காதலிப்பதாக சேர்த்து வைத்து ஆபாசமாக பேசியுள்ளனர்.

    பிளஸ்-1 மாணவன், வம்பு செய்த அந்த மாணவர்களை கண்டித்தார். ஆத்திரமடைந்த மாணவர்கள் பிளஸ்-1 மாணவனையும், மாணவியையும் மிகவும் மோசமாக பேசியுள்ளனர். இதையடுத்து, பிளஸ்-1 மாணவன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்துக் கொண்டு தகராறு செய்த மாணவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.

    பள்ளி வளாகத்தில் நடந்த மாணவர்களின் மோதலை ஆசிரியர்கள் தடுத்து சமரசம் செய்தனர். இந்த விவகாரம் மாலையில் வகுப்பு முடிந்து வீடு திரும்பிய பிறகு பூதாகரமாக வெடித்தது.

    பள்ளிக்கு வெளியே மீண்டும் இருத்தரப்பு மாணவர்களும் பயங்கரமாக மோதி கொண்டனர். பின்னர், வீட்டிற்கு செல்லும் வழியில் பிளஸ்-1 மாணவனை, வம்புக்கு இழுத்த மாணவனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிலர் மடக்கி பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    ‘எங்கள் மகனை தாக்க உனக்கு எங்கிருந்து வந்தது தைரியம்’ என்று கூறி தாக்கினர். தாக்கப்பட்ட பிளஸ்-1 மாணவன் நடந்ததை கூறியும் அவர்கள் ஏற்கவில்லை.

    மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்தை அங்கிருந்த ஒரு வாலிபர் செல்போனில் வீடியோவாக எடுத்து வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவ விட்டார். தற்போது, இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தாக்குதலில் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவனின் பெற்றோர், ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து முனிராஜ் (48) மற்றும் சிங்காரம் (57) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள தாக்குதலுக்கு காரணமான மாணவன் மற்றும் அவனது பெற்றோரை தேடி வருகின்றனர்.



    ஜெயலலிதாவின் ஆட்சிக்கு சூழ்ச்சி காரணமாக சறுக்கல் ஏற்பட்டால் அதை தடுக்கும் முதல் சக்தியாக நான் இருப்பேன் என்று வேலூர் பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #ADMK #OPanneerselvam
    வேலூர்:

    முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வேலூரில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    வேலூர் மாவட்டத்தின் பெருமை கூறும் அளவிற்கு இயற்கை கொடைகள் பல உள்ளன. ஆனால் கடல் இல்லை என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். ஆனால் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க.வின் தொண்டர்கள் கடல் அலைபோல திரண்டுள்ளனர். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை புனிதமாக கருதியவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருக்கு பின்னர் கட்சியை மீட்டெடுத்து இரும்பு கோட்டையாக உருவாக்கியவர் அவர். இந்தியாவிலேயே சிறந்த முதல்-அமைச்சராக திகழ்ந்தவர் ஜெயலலிதா. கட்சி பொறுப்பேற்றவுடன் அவர் பல சோதனைகளை தாங்கி, அவற்றை தகர்த்தெறிந்தார். பல கைக்கூலிகளின் முயற்சிகளை தோற்கடித்தார்.


    அவர் கொண்டு வந்த தொலைநோக்கு திட்டங்கள் ஏராளம். எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சியை வழிநடத்தியவர் ஜெயலலிதா. அவருக்கு பின்னால் அவரது கட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்து வருகிறது.

    ஜெயலலிதா அரசியல் பயணத்தில் கரடுமுரடான பாதைகளை கடக்க உதவியவர்கள் கட்சியின் தொண்டர்கள் தான். அவர்கள் தான் ஜெயலலிதாவுக்கு பக்க பலமாக இருந்தார்கள். அவரது கட்சியை கைப்பற்ற யாராலும் முடியாது. ஆட்சியில் இருந்த போது காவிரி பிரச்சினையில் வழக்கு தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று தந்தார்.

    முல்லைபெரியாறு அணை விவகாரத்திலும் 142 அடி தண்ணீர் தேக்க வழக்கு தொடர்ந்து சிறப்பான தீர்ப்பை பெற்று தந்தார். ஆனால் இந்த பிரச்சினைகளில் ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை.

    1 கோடியே 96 லட்சம் பேருக்கு இலவச அரிசி, 4 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வீடுகள் போன்று பல்வேறு திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்து, அவர்களின் மனதில் வாழ்கிறார்.

    அவர் ஆட்சியில் இருந்த போது பள்ளி கல்வித்துறைக்கு வருவாயில் 4-ல் ஒரு பங்கான ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கினார். அவர் வழி நடக்கும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தற்போது ரூ.33 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 48 சதவீத வருவாயை சமூக நலம் சார்ந்த திட்டங்களுக்கு ஒதுக்கியவர் ஜெயலலிதா.

    அவர் இறக்கும் தருவாயில் இருந்த போது நான் 3 பிரச்சினைகளை எதிர்கொண்டேன். ஒன்று ஜல்லிக்கட்டு, 2-வது வர்தா புயல், 3-வது சென்னை மாநகர குடிநீர் பிரச்சினை. அவை அனைத்தையும் நான் எதிர்கொண்டு வெற்றி பெற்றேன். ஜெயலலிதாவின் உடன் பல ஆண்டுகள் இருந்ததால் இந்த பிரச்சினைகளை என்னால் எதிர்கொள்ள முடிந்தது.

    பின்னர் தான் எனக்கு வினை வந்தது. எனக்கெதிராக சதிவேலை நடந்தது. நான் முதல்-அமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லை. ஜெயலலிதாவால் 2 முறை முதல்-அமைச்சராகி உள்ளேன். அவர் மறைந்த போது சில சம்பவங்கள் நிகழ்ந்தது. அவை அனைவருக்கும் தெரியும். நான் தர்மயுத்தம் தொடங்கினேன். அந்த தர்மயுத்தம் எதற்கு என்றால் சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என்பது தான் என் நோக்கமாக இருந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்தார்.

    நடப்பதோ ஜெயலலிதாவின் ஆட்சி. இந்த ஆட்சி மீண்டும் தி.மு.க.விற்கு சென்றுவிடக்கூடாது என்று கருதினேன். ஒருவேளை ஆட்சி கவிழ்ந்தால் அதற்கு மூலகாரணமாக நான் இருந்துவிடுவேன் என்ற அச்சம். வரலாற்றில் அந்த பழியை சுமக்கக்கூடாது என்று தான் அவருடன் இணைந்தோம். 1 கோடியே 50 லட்சத்துக்கு மேல் அ.தி.மு.க.வில் தொண்டர்களை சேர்ப்போம்.

    சசிகலா குடும்பத்துக்கு ஜெயலலிதா பெயரை கூற கூட அருகதை இல்லை. நான் ஒருமுறை ஜெயலலிதாவிடம் பேசியபோது தினகரனை டி.டி.வி.தினகரன் என்றேன்.

    அவருக்கு கோபம் வந்து விட்டது. அப்போது வெறும் தினகரன் என்று அழைத்தால் போதும் என்றார். ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து துரத்தப்பட்டவர் தான் டி.டி.வி.தினகரன். அவர் தற்போது ஜெயலலிதாவின் பெயரை சொல்லி கட்சி நடத்துகிறார்.

    உடன் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி ஆசை காட்டி வைத்துள்ளார். அவர் பக்கம் உள்ள தொண்டர்கள் உண்மையான தொண்டர்கள் இல்லை. ஜெயலலிதாவின் ஆட்சி நடக்கும் நம் பக்கம் உள்ள தொண்டர்கள் தான் உண்மையான தொண்டர்கள். என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறுகிறார். ஆனால் எப்போதும் சிரிப்பவர்கள் யார்? அவர்தான் லூசு. அதைத்தான் டி.டி.வி. செய்கிறார்.

    ஆர்.கே.நகரில் வென்றது போன்று திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெறுவேன் என்கிறார். அவரால் அவரது தொகுதிக்கு கூட தற்போது செல்ல முடியவில்லை. பொதுமக்கள் ரூ.20 நோட்டை காண்பித்து அவரை விரட்டி வருகின்றனர். ஜெயலலிதாவின் ஆட்சிக்கு சூழ்ச்சி காரணமாக சறுக்கல் ஏற்பட்டால் அதை தடுக்கும் முதல் சக்தியாக நான் இருப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #OPanneerselvam
    ×