என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே நிகழ்ந்த விபத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    அணைக்கட்டு அருகே உள்ள கெங்கை நல்லூரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 40). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இலவம்பாடியில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    இலவம்பாடி அருகே சென்ற போது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசன் பலத்த காயமடைந்தார்.

    பொது மக்கள் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சீனிவாசன் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.

    இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 70)இன்று அதிகாலை விண்ணமங்கலம் தேசிய நெஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் வள்ளியம்மாள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் உடலை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோர்ட்டு தீர்ப்புக்கு ஏற்ப தங்களை விரைந்து விடுவிக்கக் கோரி முருகன், நளினி ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். #RajivGandhiCase #Nalini
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை குற்றவாளிகளை தமிழக அரசே விடுதலை செய்வது குறித்து முடிவு எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    ராஜிவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவை அவசர கூட்டம் நாளை நடக்கிறது. இதில் 7 பேரின் விடுதலை தொடர்பாக கவர்னருக்கு பரிந்துரைப்பது பற்றி முடிவு எடுக்கிறார்கள்.

    வேலூர் ஜெயிலில் உள்ள நளினி அவரது மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நேற்று வாபஸ் பெற்றார்.

    இந்த நிலையில் வேலூர் ஜெயிலில் நளினி அவரது கணவர் முருகன் சந்திப்பு இன்று காலை நடந்தது. இருவரும் விடுதலை தொடர்பாக பேசியுள்ளனர். மேலும் அவர்கள் மகள் திருமண ஏற்பாடுகள் குறித்து உருக்கமாக பேசியதாக கூறப்படுகிறது.

    காலை 8.5 மணி முதல் 9.5 மணி வரை சந்திப்பு நடந்தது. காட்பாடி டி.எஸ்.பி. அலெக்ஸ் தலைமையிலான போலீசார் ஆண்கள் ஜெயிலில் இருந்து முருகனை பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். சந்திப்புக்கு பின் முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை அவரது வக்கீல் புகழேந்தி சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு நளினி மற்றும் முருகன் உள்ளிட்டவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல், முதல்வர் பழனிசாமி, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உட்பட அனைத்து தலைவர்களுக்கும் நளினி மற்றும் முருகன் நன்றி தெரிவித்தனர்.

    கோர்ட்டு தீர்ப்புக்கு ஏற்ப தங்களை விரைந்து விடுவிக்கக் கோரி முருகன், நளினி ஆகியோர் தமிழக உள்துறை செயலருக்கும், சாந்தன் தமிழக முருல்வருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.#RajivGandhiCase #Nalini
    குடியாத்தத்தில் ஜெயிலுக்கு சென்றபோது கொள்ளையன் தப்பிய சம்பவத்தில் சப்-இன்ஸ் பெக்டர் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளூர் கே.எம்.ஜி. கார்டன் பகுதியை சேர்ந்தவர் நசீர். இவருடைய மகன் அகம்மதுபாஷா (வயது 28). பிரபல கொள்ளையன். இவர் மீது குடியாத்தம் டவுன், தாலுகா, பேரணாம்பட்டு, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல கொள்ளை வழக்குகள் உள்ளன.

    தலைமறைவாக இருந்து தொடர்ந்து கைவரிசை காட்டி வந்த கொள்ளையன் அகம்மதுபாஷாவை, குடியாத்தம் டவுன் போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். குடியாத்தம் மாஜிஸ்திரேட் சந்திரகாசன் பூபதி முன்பு ஆஜர்படுத்தினர். ஜெயிலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

    இதையடுத்து, குடியாத்தம் கிளைச்சிறைக்கு அகம்மது பாஷாஷை, டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் அழைத்து சென்றனர்.

    ஜெயிலுக்கு செல்லும் வழியில் போலீஸ்காரர்களை தள்ளிவிட்டு கொள்ளையன் அகம்மதுபாஷா தப்பி ஓடி விட்டார். போலீசார் விரட்டி சென்றும், அவரை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    டி.எஸ்.பி. பிரகாஷ்பாபு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் இருதயராஜ் மற்றும் செங்குட்டுவன் அடங்கிய தனிப்படை போலீசார், தப்பி ஓடிய கைதியை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இதற்கிடையே, கைதி தப்பி ஓடிய சம்பவத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன் மற்றும் வெங்கடேசன் ஆகிய 2 பேரையும் அதிரடியாக சஸ்பெண்டு செய்து மாவட்ட எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். #tamilnews
    வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் சுப்பிரமணியன் லஞ்சம் வாங்குவதற்காக லஞ்சப் பணத்தில் ஆட்களை நியமித்து தனியாக அலுவலகம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Bribe

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பழைய முருகன் தியேட்டர் பகுதியில் வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு துணை இயக்குனராக சுப்பிரமணியன் கடந்த 1½ ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

    இந்த அலுவலகத்தில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளித்தல், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் போன்றவற்றிற்கு கட்டிட வரைபட ஒப்புதல் வழங்குதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வழக்கம்போல் நேற்று துணை இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

    இந்த அலுவலகத்தில் முறையற்ற பணப்பரிமாற்றம் நடைபெற்று வருவதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், இன்ஸ்பெக்டர்கள் விஜய், விஜயலட்சுமி உள்பட போலீசார் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

     

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகம்.

    மேலும் அலுவலகத்திற்குள் இருந்து ஊழியர்கள் வெளியே யாரும் செல்லாத வகையிலும், வெளியே இருந்து யாரும் உள்ளே செல்லாத வகையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    போலீசாரின் விசாரணையில் சுப்பிரமணியன் வேலூர் வள்ளலார் டபுள்ரோடு விவேகானந்தர் முதல் தெருவில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து அலுவலக பணிகளை மேற்கொண்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை அந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

    அந்த வீட்டில் உள்ள அறைகள் நகரமைப்பு அலுவலகம் போலவே அமைக்கப்பட்டிருந்தது. அரசு அலுவலகத்தில் உள்ள டேபிள், சேர்கள் அங்கே போடப்பட்டிருந்தன.

    மேலும் நகர் அமைப்பு அலுவலகத்தில் உள்ள அனைத்து பதிவேடுகள் ஆவணங்கள் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சுப்பிரமணியன் லஞ்சம் வாங்குவதற்காகவும் முறைகேடுகள் செய்வதற்காகவும், மிகவும் சாமர்த்தியமாக தனியாக அலுவலகம் நடத்தியுள்ளார்.

    ரூ.8 ஆயிரம் மாத வாடகைக்கு இந்த வீட்டை எடுத்துள்ளார். அரசு அலுவலகம் போல உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ4 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.

    பிறகு அரசு அலுவலகத்திற்கு புதியதாக வந்த டேபிள், சேர்களை இங்கு போட்டுள்ளார். நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரியை பணிக்கு அமர்த்தி அவருக்கு கீழ் 37 பேரை வேலையில் சேர்த்துள்ளார். இவர்கள் மூலம் அலுவலகத்தில் நடக்க வேண்டிய அனைத்து பணிகளும் இங்கே நடந்துள்ளது. 38 ஊழியர்கள் தனியாக லேப்டாப் கொண்டு வந்து வேலை செய்து விட்டு வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளனர்.

     

    வள்ளலாரில் சுப்பிரமணியன் வாடகைக்கு எடுத்து அலுவலகம் நடத்திய வீட்டை படத்தில் காணலாம்.

    ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு மாதம் ரூ.20 ஆயிரம் மற்ற 37 ஊழியர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் என லஞ்ச பணத்தில் மாதம் ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும் போனஸ் உள்ளிட்ட சலுகைகளும் வழங்கியதாக தெரிகிறது.

    இந்த பணிகள் எல்லாம் சுப்பிரமணியன் பணியில் சேர்ந்த 1½ ஆண்டுகளாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில மாதங்களாகத்தான் தனியாக அலுவலகம் நடத்தி வந்ததாக அவர் கூறியுள்ளார்.

    இதனையடுத்து வாடகை வீட்டில் நடத்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மீண்டும் சுப்பிரமணியனை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மண்டல நகர் ஊரமைப்பு அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    அங்கு தொடர்ந்து சோதனையும் நடத்தப்பட்டது. அங்கிருந்து கணக்கில் வராத 3 லட்சத்து 28 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய சோதனை 8 மணி நேரத்திற்கு பிறகு இன்று அதிகாலை 3 மணிக்கு நிறைவு பெற்றது.

    லஞ்சம் வாங்கவும், முறைகேடுகள் செய்யவும் தனியாக அலுவலகம் நடத்திய சுப்பிரமணியன் கோடி கணக்கில் லஞ்சம் வாங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சுப்பிரமணியன் தனியாக வேலைக்கு அமத்திய ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உள்பட 38 பேர் குறித்த விவரங்களை சேகரித்துள்ளனர். அவர் களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Bribe

    திருப்பத்தூர் நகராட்சியில் ரூ.50 லட்சத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட பூமி பூஜையை நல்லதம்பி எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் நகராட்சி 32 வார்டு ஆரிப் நகரில் குடிநீர் பிரச்சனை உள்ளது என அப்பகுதி மக்கள் நல்லதம்பி எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதனைத்தொடர்ந்து நல்லதம்பி எம்.எல்.ஏ., குடிநீர் வடிகால் வாரிய செயலாளர் பிரகாசை சந்தித்து மனு அளித்தார்.

    அதனைத் தொடர்ந்து ஆரிப் நகரில் ரூபாய் 50 லட்சம் செலவில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டவும் 1 லட்சம் லிட்டர் தண்ணீர் கீழே தேக்கிவைக்க நீர்த்தேக்கத் தொட்டியும் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டது.

    மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி ஆரிப் நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி பொறியாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். பணி மேலாளர் அன்பரசு இளநிலை பொறியாளர் அறிவழகன் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக நல்லதம்பி எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டி பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் நகர சபை தலைவர் எஸ்.அரசு முன்னாள் கவுன்சிலர்கள் சவுத்அகமத் ஸ்ரீதர் கமால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இறுதியில் ஒப்பந்ததாரர் சேகர் நன்றி கூறினார் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இப்பகுதியில் நீண்டநாள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட கோரிய கோரிக்கை நிறைவேறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    காட்பாடியில் வீட்டை அதிகாரிகள் இடித்ததை கண்டித்து ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் விஜயகுமார் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில், பழைய காட்பாடி குளக்கரையில் உள்ள ஒரு ஏரி புறம்போக்கு நிலத்தில் விஜயகுமார் புதிய வீடு கட்டினார். தகவலறிந்து அங்குசென்ற அதிகாரிகள் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக கூறி இடித்து தள்ளினர்.

    இதனால், மனமுடைந்த விஜயகுமார் தனது மனைவி, குழந்தைகளுடன் திருவலம் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார். மேலும் மண்எண்ணையை ஊற்றி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார்.

    காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மண்எண்ணை கேனை கைப்பற்றினர். பிறகு ஆட்டோ டிரைவர் விஜய குமாரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    கல்லப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களை கேலி செய்த மாணவன் மீது ஒழுங்கீன புகார் குறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளை சேர்ந்த சுமார் 400 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஒருவர் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது செல்போனை பயன்படுத்துதல், சக மாணவர்களை செல்போனை பார்க்க வைத்து தொந்தரவு செய்வது, மாணவர்களையும், ஆசிரியர்களையும் கேலி, கிண்டல் செய்வது என ஒழுங்கீனமாக நடந்து வந்துள்ளார்.

    இந்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் சில தினங்களுக்கு முன்பு வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர்.

    இதனையடுத்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்பேரில் நேற்று பள்ளிக்கு வாணியம்பாடி கல்வி மாவட்ட அலுவலர் சி.டி.வீரமணி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் வந்தனர்.

    அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியை பரிதா பிரேமா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சபாபதி, துணைத் தலைவர் குருசாமி மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், சம்மந்தப்பட்ட மாணவனின் பெற்றோர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணைக்கு பின்னர் கல்வி அலுவலர் வீரமணி கூறுகையில், ’பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடைபெற்றது. விசாரணை அறிக்கை மேல்நடவடிக்கைக்காக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும்’’ என்றார். #tamilnews
    வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் மாங்காய் தோப்பு பகுதியை சேர்ந்தவர் அகம்மது பாஷா (வயது 30). ஷூ கம்பெனி தொழிலாளி. இவர், நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீடு பூட்டப்பட்டிருந்தது.

    இதனை நோட்டமிட்ட வாலிபர் ஒருவர், அகம்மது பாஷாவின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று திருட முயன்றார்.

    இதனை கவனித்த அக்கம், பக்கத்தினர் திருட முயன்ற வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். தகவலறிந்ததும், ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து வந்து பிடிபட்ட வாலிபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர். போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், ஆம்பூர் கிருஷ்ணாபுரம் 3-வது தெருவை சேர்ந்த ஆதித்யன் மகன் பிரபுசங்கர் என்கிற முகம்மது பிலால் (30) என்பது தெரியவந்தது.

    கொள்ளையடிக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், முகம்மது பிலாலை கைது செய்தனர்.
    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வரும் 9-ந்தேதி வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 681 ஓட்டுச்சாவடி மையங்களில் நடக்கிறது.
    வேலூர்:

    பாராளுமன்ற தேர்தலுக்கான, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 10-ம் தேதி வெளியிடப்பட்டது.

    இதைத் தொடர்ந்து 2019 ஜனவரியில் 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, பெயர் நீக்கம், திருத்தம் முகவரி மாற்றம் செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    இதில், பெயர் சேர்த்தலுக்காக 3 லட்சம் விண்ணப்பங்கள் (படிவம் 6) பெயர் நீக்கம் செய்ய 56 ஆயிரம் விண்ணப்பங்கள் (படிவம்7), திருத்தம் செய்ய 3 லட்சம் விண்ணப்பங்கள் (படிவம்8ஏ) ஆயிரத்து 500 என்ற எண்ணிக்கையில் வந்துள்ளது.

    அத்துடன், ஒவ்வொரு விண்ணப்ப படிவத்தில் இருந்தும், எவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பதை கணக்கீடு செய்வதற்கான அப்ஸ்ட்ராக்ட் படிவங்களையும் சேர்த்து மொத்தம் 11 லட்சத்து 47 ஆயிரத்து 500 படிவங்கள் வந்து சேர்ந்துள்ளன. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம் வரும் 9-ந்தேதி மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 681 ஓட்டுச்சாவடி மையங்களிலும் நடக்கிறது.

    இது குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு தாசில்தார் பாலாஜி கூறியதாவது:-

    வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது. ஒவ்வொரு தாலுகாவுக்கும் தலா 20 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை உரிய ஆதாரங்களுடன் பூர்த்தி செய்து கலர் போட்டோவுடன் அங்கேயே வழங்கலாம்.

    எந்த ஓட்டுச்சாவடி மையத்திலாவது படிவங்கள் இல்லை என்றால், அங்கிருக்கும் ஓட்டுச்சாவடி அதிகாரி, மண்டல அதிகாரியை தொடர்பு கொண்டால் உடனடியாக படிவங்கள் கொண்டு வந்து தரப்படும்.

    இவ்வாறுஅவர் கூறினார்.
    வேலூர் அருகே பிளஸ்-1 மாணவன் தற்கொலை சம்பவத்தில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வேலூர்:

    வேலூர் அப்துல்லாபுரம் சத்தியமங்கலம் புதிய காலனியை சேர்ந்தவர் சங்கர். கூலி தொழிலாளி. இவரது மகன் அருண்பிரசாத் (வயது17). பொய்கை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான்.

    நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவன் அருண்பிரசாத் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை மாணவனின் பெற்றோர் அவனது புத்தக பையை சோதனையிட்டனர். அதில் மாணவன் எழுதிய கடிதம் ஒன்று இருந்தது. அதில் “எனது சாவுக்கு கணிதம், வேதியியல், உடற்கல்வி ஆசிரியர்கள் தான் காரணம்” எனக்கூறி 3 ஆசிரியர்களின் பெயர்களை எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.

    கடிதத்தை எடுத்து கொண்டு மாணவனின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பள்ளியில் திரண்டனர். அப்போது பள்ளி வளாகத்தில் நின்றிருந்த கணித ஆசிரியர் கண்ணப்பனை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் ஒரு ஆசிரியரை அறையில் தள்ளி பூட்டினர்.

    தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆசிரியர் கண்ணப்பனை மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மாணவனின் உறவினர்கள் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோ‌ஷம் எழுப்பினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் அன்புமணி தலைமையில் பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம் நடைபெறுகிறது என்று ஜி.கே.மணி கூறினார். #PMK #GKMani #AnbumaniRamadoss
    வேலூர்:

    பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி நேற்று காட்பாடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ம.க. சார்பில் ‘பாலாறு காப்போம், பாசனத்தை பெருக்குவோம்’ என்ற விழிப்புணர்வு பிரசார பயணம் வேலூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் 22, 23 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

    வேலூர் மாவட்டத்தில் 22-ந்தேதி காலை 10 மணிக்கு பிரசார பயணம் தொடங்குகிறது. இந்த பிரசார பயணத்தை பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்.

    இந்த பிரசார பயணம் புல்லூரில் தொடங்கி வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி, ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம் சென்று இரவு வேலூரில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

    23-ந்தேதி காலை தாமல் பகுதியில் தொடங்கி வாலாஜாபாத், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் சென்று காஞ்சீபுரத்தில் இரவு பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பிரசார பயணம் அரசியல் ரீதியாக இல்லாமல் நீர்மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தவேண்டி நடைபெறுகிறது. பாலாற்று பகுதியில் ஆந்திர அரசு கட்டும் தடுப்பணைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்தவேண்டும்.

    தமிழ்நாட்டில் ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. காமராஜர் காலத்தில் 9 அணைகள் கட்டப்பட்டன. அதற்குபிறகு வந்த எந்த ஆட்சியும் பெரிய அணையை கட்டவில்லை. தமிழக அரசு நீர்மேலாண்மை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கி நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இதனை பா.ம.க. சார்பில் வரவேற்கிறேன். இதில் தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி ஒப்புதல் பெறவேண்டும்.

    குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. சோதனை நடைபெறுகிறது. இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது தக்கநடவடிக்கை எடுக்கவேண்டும்.

    தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனை மாநில அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். கோதாவரி, பாலாற்றை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMK #GKMani #AnbumaniRamadoss
    ×