என் மலர்
வேலூர்
கிருஷ்ணகிரியில் இருந்து இன்று காலை திருப்பத்தூர் நோக்கி பயணிகளுடன் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சினை டிரைவர் பாலாஜி (வயது 42). என்பவர் ஓட்டி வந்தார்.
கந்திலி அருகே உள்ள சதாங்குட்டை என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்த போது பஸ்சை ஒரு பைக் முந்தி சென்றது. அந்த பைக் மீது பஸ் மோதாமல் இருக்க டிரைவர் பாலாஜி பஸ்சை நிறுத்த முயன்றார். அப்போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதி நின்றது.
இதில் பஸ்சில் பயணம் செய்த டிரைவர் பாலாஜி, கண்டக்டர் ராமலிங்கம் (38). விஜயகுமாரி (70). அசோக்குமார் (31). முருகன் (40). சென்றாயன் (55). லட்சுமி (50). 7 பேர் படுகாயமடைந்தனர்.
கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஈடுபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சென்னை மேலவாக்கத்தை சேர்ந்தவர் எட்வின் இவரது மகன் ஐசக் ராஜேந்திரன் (வயது 27). பெங்களுருவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் இன்று காலை விடுமுறை காரணமாக சென்னைக்கு காரில் புறப்பட்டார். கார் ஆற்காடு அடுத்த வேப்பேரி அருகே சென்ற போது சாலையின் அருகே நின்றிருந்த லாரி மீது மோதியது.
இதில் ஐசக் ராஜேந்திரன் அதிர்ஷ்டவசமாக லேசான காயமுடன் உயிர் தப்பினார். பின்னர் காரில் இருந்து இறங்கி சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற மற்றொரு லாரி ஐசக் ராஜேந்திரன் மீது மோதியது. இதில் ஐசக் ராஜேந்திரன் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீசார் உடலை மீட்டு ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வர்ணகுமார் தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் தனபால் மற்றும் மாவட்ட தலைவர் பரசுராமன் உள்பட 50-க் கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, காய்ந்து கருகிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும். தென்பெண்ணை-பாலாறு நதிகளை இணைப்பு பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு விவசாயிகள் சென்றனர். கலெக்டர் ராமனை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த கடாம்பூர் பகுதியில் உள்ள வீடுகளில் கடந்த சில நாட்களாக கியாஸ் சிலிண்டர் மற்றும் வெளியே உள்ள பாத்திரங்கள் திருடு போகின. இந்த நிலையில், வீடுகளுக்குள்ளும் புகுந்து பீரோவை திறந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டன. வீடுகளில் உரிமையாளர்கள் இருக்கும்போதே லாவகமாக புகுந்து பொருட்களை திருடி செல்வது யாராக இருக்கும் என்பது மர்மமாகவே இருந்து வந்தது.
இதற்கிடையே, கடாம்பூர் அறிவொளிநகரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் பொருட்கள் திருடப்பட்டன. தொடர் திருட்டு குறித்து அப்பகுதி மக்கள், உமராபாத் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கடாம்பூரை சேர்ந்த சுப்பிரமணி மகன் பூபதி (38) என்பது தெரியவந்தது. பூபதியை போலீசார் கைது செய்தனர்.
பா.ம.க.வின் 30-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் ராணிப்பேட்டையை அடுத்த லாலாப்பேட்டையில் நடந்தது.
தமிழகத்தில் பா.ம.க.வின் கோட்டையாக மாறியுள்ளது வேலூர் மாவட்டம். இந்த மாவட்டத்தின் மண் வளத்தையும், நீர் வளத்தையும் கெடுத்தவர்கள் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் தான்.
இந்தியாவில் 50 மாவட்டங்கள் கருப்பு மாவட்டங்கள் என கூறப்படுகிறது. இதில் வேலூர் மாவட்டமும் ஒன்று. இந்த மாவட்டத்தில் மண் வளம் கெட்டுவிட்டது.
பல போராட்டங்கள் நடத்தியும் மணல் கொள்ளையை தடுக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் கல்வியில் 3-வது இடத்தில் இருந்த வேலூர் மாவட்டம் இன்றைக்கு கடைசி மாவட்டமாக இருக்கிறது. இதற்கு காரணம் தி.மு.க., அ.தி.மு.க. தான்.
கல்வியை தனியார் கையில் கொடுத்து விட்டு, சாராயத்தை விற்கும் வேலையை அரசு எடுத்துக் கொண்டுள்ளது. அரசு பள்ளிகளில் எந்தவித வசதியும் இல்லை. அரசியல்வாதிகள் எவ்வித திட்டத்தையும் கொடுக்காமல் காசு கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என நினைக்கிறார்கள்.
என் வாக்கு விற்பனைக்கு இல்லை என்பதை எல்லோரும் பிரசாரமாக எடுத்துச்செல்ல வேண்டும். மனிதகுலத்தை உருவாக்கும் சக்தி பெண்களுக்கு உள்ளது, காக்கும் சக்தியும், அழிக்கும் சக்தியும் பெண்களிடம் உள்ளது. பெண்களிடத்தில் விலை மதிக்க முடியாத ஓட்டு எனும் ஆயுதமும் உள்ளது.
அதை ஒருமுறை உபயோகித்து டாக்டர் அன்புமணி ராமதாசை முதல் -அமைச்சராக்குங்கள். இலவச கல்வி, மது ஒழிப்பு, ஜனாதிபதி முதல் சாதாரண குடிமகன் வரை ஒரே விதமான உயர்தர மருத்துவ வசதி ஆகியவற்றை செய்து தரக்கூடிய திட்டங்களை அன்புமணி நிறைவேற்றுவார்.
இவ்வாறு அவர் பேசினார். #PMK #Ramadoss #AnbumaniRamadoss
முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது 2011-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில், பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் மானிய விலையில் வழங்கப்படும் என்று கூறினார். அதன்அடிப்படையில் தமிழகம் முழுவதும் உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 653 பேருக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி 100 பேருக்கும், 23-ந் தேதி 1000 பேருக்கும் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நேற்று 500 பேருக்கு வழங்கப்பட்டது.
இந்த இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்து. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி, லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு இருசக்கர வாகனங்கள் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியாக இருசக்கர வாகனங்கள் பெண்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 653 பேருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் இம்மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வேலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் அதிகமானவர்கள் பயன்பெறுகிறார்கள். ஜெயலலிதாவின் அரசு பெண்களுக்கான அரசாகும். பெண் குழந்தைகள் இறப்பை தடுக்க அவர் கொண்டு வந்த திட்டம் தான் தொட்டில் குழந்தை. இத்திட்டத்தின் மூலம் பல குழந்தைகள் உயிர் காப்பாற்றப்பட்டு உயர்கல்வி படித்து வருகின்றனர்.
இத்திட்டம் குறித்து அறிந்த அன்னை தெரசா ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பாராட்டினார். ஜெயலலிதா பெண்களுக்காக கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம். பிறப்பு, படிப்பு, திருமணம் போன்ற பல்வேறு நிலைகளில் பெண்களுக்கு பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார். இந்தியாவிலேயே பெண்களுக்கான தனி நலவாரியம் அமைத்தார். பெண்கள் சாதிக்க பிறந்தவர்கள், சம உரிமை உண்டு என பெண்களுக்கான உரிமைகளை பெற்று தந்தார். அவர் வழி நடக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராமன் பேசுகையில், “வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது. பெண்கள் வாழ்வில் முன்னேற மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். இருசக்கர வாகனம் வழங்குவது என்பது கவர்ச்சி திட்டம் அல்ல. உழைக்கும் பெண்களை கவுரவப்படுத்தும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு முன்மாதிரி திட்டமாகும்” என்றார். இதில், அ.தி.மு.க. அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி திட்ட அலுவலர் காந்தி நன்றி கூறினார்.
ஆம்பூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் போலீசார் ஜீப்பில் நேற்று நள்ளிரவு மாதனூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜீப்பை அருண்குமார் ஓட்டினார். மாதனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பெங்களூருவில் இருந்து சென்னைக்கு சென்ற கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக போலீஸ் ஜீப் மீது மோதியது.
இதில் சாலையோர பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் மாது. இவரது மகன் கோவிந்தசாமி (வயது 28) என்ஜினீயர். படித்து முடித்து பல வருடங்களாகியும் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. சென்னை, திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு வேலை தேடி சென்றும் தகுதியான வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்ததாக தெரிகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்னை செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டார்.
அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. போனும் பேசவில்லை. இந்த நிலையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பக்கிரிதக்கா எனும் இடத்தில் ஒருவர் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டு பிணமாக கிடந்தார்.
தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவராகவன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அருகில் விஷ பாட்டிலும் கிடந்தது. அருகில் ஒரு கடிதம் எழுதப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-
“வேலைகிடைக்காத விரக்தியில் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இதனால் எனது குடும்பத்தை விட்டு பிரிகிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இந்த தகவலை இதில் குறிப்பிட்டுள்ள போன் மூலம் உரியவர்களுக்கு தெரிவித்து விடவும்” என உருக்கமான தகவல் இடம் பெற்று இருந்தது.
அந்த எண்ணில் போலீசார் தொடர்பு கொண்டபோது இறந்து கிடந்தவரை பற்றிய மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தன. போலீசார் கூறிய தகவலை கேட்டு கோவிந்தசாமியின் அண்ணன் லோகேஷ் ஜோலார்பேட்டைக்கு வந்தார்.
கோவிந்தசாமி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸ் நிலையத்தில் லோகேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் விழா இன்று நடந்தது.
கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 500 பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 5653 பேருக்கு மானிய விலை ஸ்கூட்டர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று 3-வது கட்டமாக 500 பேருக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் அனைவருக்கும் ஸ்கூட்டர் வழங்கப்படும்.
மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா பெண்கள் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார். திருமண உதவி திட்டம், தாலி தங்கம் வழங்கும் திட்டங்கள் உள்பட அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். ஜெயலலிதா கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டத்தை அன்னை தெரசா பாராட்டினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ., மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் அருகே உள்ள பொய்கை சத்தியமங்கலம் புது காலனியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் அருண் பிரசாத் (வயது 16). பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்துவந்தார். கடந்த 3-ந் தேதி மாணவன் அருண்பிரசாத் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தற்கொலைக்கு முன்பாக மாணவன் எழுதியதாக கடிதம் ஒன்று பெற்றோருக்கு கிடைத்தது. அதில் ஆசிரியர்கள் பெயரை குறிப்பிட்டு தற்கொலைக்கு அவர்கள் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து மாணவன் உறவினர்கள் ஏராளமானோர் பள்ளியை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது, அங்கிருந்த முதுநிலை ஆசிரியர் கண்ணப்பனை சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தனர். இந்த தாக்குதலில் ஆசிரியர் நிலை குலைந்து மயங்கி விழுந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஆசிரியரை தாக்கிய மாணவன் உறவினர்களான கோவிந்தசாமி, ரஜினி என்கிற போஸ், முத்தமிழ்வாணன், குமார், ரகு ஆகிய 5 பேர் மீது விரிஞ்சிபுரம் போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூரில் மாநில அளவிலான 3 நாட்கள் வாலிபால் போட்டி திருப்பத்தூர் அரசு பூங்கா சாலையில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் மின்னொளியில் நேற்று தொடங்கியது.
போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியன் வங்கி வருமான வரி துறை அணி, கஸ்டம்ஸ் அணி உள்பட பிற அணிகளும், இதேபோல் பெண்களுக்கான அணியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அணி, ஈரோடு அணி விளையாட்டு மேம்பாட்டு துறை அணி உட்பட பிற அணிகளும் மோதுகின்றன.
இந்த போட்டியை திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா, வேலூர் மாவட்ட பிஷப் டாக்டர் சவுந்தரராஜன், திருப்பத்தூர் தொகுதி நல்லதம்பி எம்.எல்.ஏ., அ.ம.மு.க. ஞானசேகர், தொழிலதிபர் கணேஷ்மல் உட்பட பலர் போட்டியை தொடங்கி வைத்தனர்.
வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம் உட்பட பல்வேறு பரிசுகளை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார். இந்த போட்டியை காண திருப்பத்தூரில் இருந்து ஏராளமானோர் வந்து பார்த்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வாலிபால் முன்னாள் மாணவர்கள் மற்றும் அப்பூனிஸ் கிளப் செய்திருந்தனர்.
வேலூர் பலவன்சாத்து குப்பம் பாரதியார் நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 60). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த பாகாயம் போலீசார் உடலை கைப்பற்றி அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






