search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவனை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்.
    X
    மாணவனை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்.

    ஆம்பூர் அருகே பிளஸ்-1 மாணவனை கம்பத்தில் கட்டி வைத்து அடி-உதை: 2 பேர் கைது

    ஆம்பூர் அருகே பிளஸ்-1 மாணவன் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே பிளஸ்-1 மாணவன் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் பட்டுவாம்பட்டி கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவன் மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த மாணவனின் உறவினர் பெண்ணும் அதே பள்ளியில் படிக்கிறார். 2 பேரும் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர்.

    நேற்று பள்ளி வளாகத்தில் மாணவியுடன் பிளஸ்-1 மாணவன் பேசி கொண்டிருந்தார். அப்போது, அதே பள்ளியில் படிக்கும் பட்டுவாம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒருசில மாணவர்கள் பிளஸ்-1 மாணவனையும், மாணவியையும் காதலிப்பதாக சேர்த்து வைத்து ஆபாசமாக பேசியுள்ளனர்.

    பிளஸ்-1 மாணவன், வம்பு செய்த அந்த மாணவர்களை கண்டித்தார். ஆத்திரமடைந்த மாணவர்கள் பிளஸ்-1 மாணவனையும், மாணவியையும் மிகவும் மோசமாக பேசியுள்ளனர். இதையடுத்து, பிளஸ்-1 மாணவன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்துக் கொண்டு தகராறு செய்த மாணவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.

    பள்ளி வளாகத்தில் நடந்த மாணவர்களின் மோதலை ஆசிரியர்கள் தடுத்து சமரசம் செய்தனர். இந்த விவகாரம் மாலையில் வகுப்பு முடிந்து வீடு திரும்பிய பிறகு பூதாகரமாக வெடித்தது.

    பள்ளிக்கு வெளியே மீண்டும் இருத்தரப்பு மாணவர்களும் பயங்கரமாக மோதி கொண்டனர். பின்னர், வீட்டிற்கு செல்லும் வழியில் பிளஸ்-1 மாணவனை, வம்புக்கு இழுத்த மாணவனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிலர் மடக்கி பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    ‘எங்கள் மகனை தாக்க உனக்கு எங்கிருந்து வந்தது தைரியம்’ என்று கூறி தாக்கினர். தாக்கப்பட்ட பிளஸ்-1 மாணவன் நடந்ததை கூறியும் அவர்கள் ஏற்கவில்லை.

    மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்தை அங்கிருந்த ஒரு வாலிபர் செல்போனில் வீடியோவாக எடுத்து வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவ விட்டார். தற்போது, இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தாக்குதலில் காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவனின் பெற்றோர், ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து முனிராஜ் (48) மற்றும் சிங்காரம் (57) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள தாக்குதலுக்கு காரணமான மாணவன் மற்றும் அவனது பெற்றோரை தேடி வருகின்றனர்.



    Next Story
    ×