என் மலர்tooltip icon

    வேலூர்

    தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் தூக்கி எறியாமல் உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். #Plasticban
    வேலூர்:

    ஒருமுறை உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அமலுக்கு வந்தது.

    இதுதொடர்பாக இந்த வகை பிளாஸ்டிக் பொருட்கள், உற்பத்தியாளர்கள், சில்லரை வியாபாரிகள், வணிகர்கள், அனைத்து விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வைக்காமல், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

    தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் தூக்கி எறியாமல் உள்ளாட்சி அமைப்புகள் அல்லது பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் பாதுகாப்பான முறையில் சுழற்சி செய்ய ஏதுவாக அமையும்.

    இதுகுறித்த விவரங்களை தெரிந்துகொள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அலுவலகத்திற்கு 044-22353153, 8056042121 என்ற எண்ணிலும், மாவட்ட அலுவலகத்திற்கு 0416-2242700, 8056042130, 04174-234831, 8056042184 என்ற எண்ணிலும், WWW.Plasticpollutionfreetn.org என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.

    தமிழக அரசால் பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்கு வதற்காக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Plasticban
    ஜோலார்பேட்டை-ஆம்பூரில் விபத்தில் வாலிபர் மற்றும் ஆவின் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பல்லாண்டுகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் தென்னரசு (22) பட்டதாரி வாலிபர்.

    இவர் திருப்பத்தூரில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சியில் வேலை செய்து வந்தார். நேற்று மாலை திருப்பத்தூரில் இருந்து வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

    திருப்பத்தூர் அடுத்த திரியாலம் என்ற இடத்தில் வந்தபோது திருப்பத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி சென்ற தனியார் பஸ் தென்னரசு பைக் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த தென்னரசுவை அப்பகுதி மக்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு இறந்தார்.இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் (60), ஓய்வுபெற்ற ஆவின் ஊழியர். இன்று காலை கன்னிகாபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது வேலூரில் இருந்து சென்னை சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த எல்லப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து பஸ் டிரைவர் ஏலகிரியை சேர்ந்த பிரபு (32) என்பவரை கைது செய்தனர்.

    ஈரோட்டில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 பயணிகளிடம் ரூ.11 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர்:

    ஈரோட்டில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று அதிகாலை கொள்ளை நடந்துள்ளது.

    ஈரோடு மாவட்டம் தோனாநள்ளியை அடுத்த நந்தகாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி. பில்டிங் காண்டிராக்டர். இவர் தனது தொழில் வி‌ஷயமாக அடிக்கடி இந்த ரெயிலில் சென்னை வருவது வழக்கம்.

    நேற்று இரவு ஈரோட்டில் இருந்து சென்னைக்கு பயணம் செய்தார். ஏ.சி. 2-ம் வகுப்பு (எச்.ஏ.1) பெட்டி யில் ரூ.10 லட்சம் பணப்பெட்டியுடன் பயணம் செய்துள்ளார்.

    பணப்பெட்டியை அருகில் வைத்து கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 2 மணியளவில் காட்பாடி நிலையத்திற்கு ரெயில் வந்த போது திடுக்கிட்டு எழுந்து பார்த்தபோது பணப்பெட்டியை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் படுக்கை அருகில் உள்ள பகுதி முழுவதும் தேடினார். கிடைக்கவில்லை.

    பணப்பெட்டியில் ரூ.10 லட்சத்து 36 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்துள்ளது. பணத்தை பறிகொடுத்த காண்டிராக்டர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த வண்ணம் இருந்தார்.

    அதே ரெயிலில் மற்றொரு கொள்ளை சம்பவமும் நடந்துள்ளது. 2-ம் படுக்கை வசதி பெட்டி எண் எஸ்-12ல் பயணம் செய்த சண்முகசுந்தரம் என்பவரிடம் ரூ.1 லட்சம் கொள்ளை போய் உள்ளது.

    சென்னை ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த அவர் மனைவியுடன் பயணம் செய்தபோது அவரிடம் இருந்த பையை அபேஸ் செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    ஒரே ரெயிலில் அடுத்தடுத்து பயணிகளிடம் கொள்ளை நடந்திருப்பது ரெயில் பயணிகளை அதிர்ச்சி அடைய செய்தது.

    பயணிகளை தாக்காமல் அவர்கள் தூங்கும் போது சக பயணியாக பெட்டிக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 4 மணிக்கு சென்ட்ரல் வந்து சேர்ந்ததும் ரெயில்வே போலீசில் காண்டிராக்டர் பெரியசாமியும், சண்முகசுந்தரமும் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தாமஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    கொள்ளைப்போன ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியிலும் போலீசார் சோதனை நடத்தினர். எஸ்-12 பெட்டியின் கழிவறையில் சண்முகசுந்தரத்தின் கைப்பை வீசப்பட்டு இருந்ததை கைப்பற்றினர்.

    இதே போல் ரூ.10 லட்சம் வைத்திருந்த பணப்பெட்டி ஆம்பூர் பச்சக்குப்பத்தில் வீசப்பட்டு கிடந்தது. பணத்தை எடுத்துக் கொண்டு காலி பெட்டியை வீசியுள்ளனர். அதனையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி உள்ளனர்.

    ஜோலார்பேட்டை எல்லைக்குள்தான் கொள்ளை சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. கொள்ளையர்கள் பணத்தை எடுத்து விட்டு பெட்டியை வீசி விட்டு அங்கு குதித்து தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். #tamilnews
    ராணிப்பேட்டை சிப்காட் பெல் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிற்சங்கத்தினர் பொது வேலை நிறுத்தம் முன்னிட்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து பெல் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை சிப்காட் பெல் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிற்சங்கத்தினர் பொது வேலை நிறுத்தம் முன்னிட்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து பெல் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் புதிய பணி நியமனம் செய்திட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுபடுத்திட வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியம் வழங்கிட வேண்டும், வேலையின்மையை போக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், குறைந்தபட்ச மாத பென்சன் ரூ.3000 வழங்க வேண்டும், பொதுதுறைகளை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது, தொழிலாளர் நலசட்டங்களை திருத்தாதே உள்ளிட்ட 12அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் செய்தனர்.

    இதில் தொழிற்சங்கத்தினர் பாண்டியன், சிவகுமார், கணேஷ் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். #tamilnews
    ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் சென்னை காண்டிராக்டரிடம் ரூ.10 லட்சம் கொள்ளையடித்து விட்டு சூட்கேசை வீசி சென்றுள்ளனர்.
    ஜோலார்பேட்டை:

    சென்னையை சேர்ந்தவர் பெரியசாமி. காண்டிராக்டரான இவர் நேற்று ஈரோடு சென்றார். அங்குள்ள தொழிலதிபரிடம் ரூ.10 லட்சம் பணத்தை வாங்கினார்.

    அதனை ஒரு சூட்கேசில் எடுத்து கொண்டு சென்னை சென்ட்ரல் செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.

    நள்ளிரவு 12.30 மணிக்கு வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது பெரியசாமி தூக்க கலக்கத்தில் இருந்தார்.

    இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம கும்பல் பெரியசாமி வைத்திருந்த பணப்பெட்டியை யாருக்கும் தெரியாமல் கொள்ளையடித்தனர். திடீரென கண் விழித்த பெரியசாமி பணப்பெட்டி காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார். இதுபற்றி போன் மூலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் சென்னை சென்ட்ரல் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.

    அவர்கள் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு ஆம்பூர் அருகே உள்ள பச்சகுப்பம் ரெயில் நிலையத்தில் பெரியசாமியின் சூட்கேஸ் வீசப்பட்டு கிடந்தது. மர்ம கும்பல் பணத்தை எடுத்துவிட்டு காலி சூட்கேசை வீசி சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

    பெரியசாமி வந்த அதே ரெயில் பெட்டியில் தான் கொள்ளையர்கள் பயணிகள் போல பயணம் செய்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இந்த கொள்ளை சம்பவம் ரெயில் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இரவு நேரங்களில் ரெயில்வே போலீசார் பிளாட்பாரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
    காட்பாடியில் வீட்டுவரியை குறைக்க கோரி குடியிருப்போர் நலசங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வேலூர்:

    புதிய வரிவிதிப்பை அரசு ஆணைப்படி மாற்றி அமைத்திட வேண்டும், பழுதடைந்த சாலைகளை சீரமைத்து தரமான சாலைகள் அமைக்க வேண்டும், காவிரி கூட்டு குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் முறையாக வழங்கபட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடியிருப்போர் நலசங்கம் சார்பில் காட்பாடி காந்திநகரில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு குடியிருப்போர் நலசங்க தலைவர் பிச்சுமணி தலைமை தாங்கினார். அருள்தணிகை செல்வன், லோகநாதன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராதாகிருஷ்ணன், சிவசங்கர், அமரன், துரைபாண்டி, கண்மணி, துரைமுருகன், தனசேகர் உள்பட பலர் கலந்து கொண்டு கோ‌ஷம் எழுப்பினர். முடிவில் பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.

    ஜோலார்பேட்டை அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த மேட்டுசக்கரகுப்பம் பகுதியை சேர்ந்த முனிரத்தினம் மகன் திருமூர்த்தி (வயது 26). கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

    இவரும் ஆந்திர மாநிலம் குப்பத்தை அடுத்த பலபந்தகொட்டா பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகள் ஆர்த்தி (21) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.

    ஆர்த்தியின் பெற்றோர் இறந்து விட்டதால் அவர் தனது அண்ணன் அருண்குமார் பராமரிப்பில் இருந்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமூர்த்தியும், ஆர்த்தியும் காதல் திருமணம் செய்து கொண்டு மேட்டுசக்கரகுப்பத்தில் இல்லற வாழ்க்கையை தொடங்கினர்.

    இந்த நிலையில் நேற்று மேட்டுசக்கரகுப்பத்தில் உள்ள வீட்டில் ஆர்த்தி தூக்குப் போட்ட நிலையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்குப் பதிவு செய்தார். திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் ஆர்த்தியின் மரணம் குறித்து திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா விசாரணை நடத்தி வருகிறார்.

    ஆர்த்தி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவில் வேறு மர்மம் ஏதும் உள்ளதா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
    அரக்கோணம் அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த புலியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜா இவரது மகன் கார்த்திக்ராஜ் (வயது 18). இவர் திருவள்ளுரில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தார்.

    நேற்று மாலை கார்த்திக்ராஜ் வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறி உள்ளார்.

    அப்போது கால் தகவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு கார்த்திக்ராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காட்பாடி அருகே தந்தையை கழுத்தறுத்து கொலை செய்த கல்லூரி மாணவர் கத்தியுடன் போலீசில் சரணடைந்தார்.

    காட்பாடி:

    காட்பாடி சேனூரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 57). சிக்கன் கடை வைத்திருந்தார். இவரது மனைவி நிர்மலா. மகன்கள் சுரேஷ், பிரபு (19).

    கடந்த மாதம் நிர்மலா உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனையடுத்து கண்ணனுக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    அந்த பெண்ணுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு கண்ணன் வீட்டில் இருந்தார். அப்போது பிரபு கள்ளக்காதல் விவகாரம் குறித்து கேட்டுள்ளார்.

    இதனால் தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரபு கத்தியால் கண்ணண் கழுத்தை அறுத்தார். இதில் படுகாயமடைந்த கண்ணன் துடிதுடித்து இறந்தார்.

    கொலை செய்ய பயன்படுத்திய கத்தியுடன் பிரபு விருதம்பட்டு போலீஸ் நிலையத்துக்கு சென்றார். தந்தையை கொலை செய்து விட்டதாக போலீசாரிடம் கூறி சரணடைந்தார்.

    விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்குபதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.கள்ளக்காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் தந்தையை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமில் 359 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் ராமன் வழங்கினார்.
    வேலூர்:

    வேலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ‘வீ ஆர் யுவர் வாய்ஸ்’ தொண்டு நிறுவனம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. முகாமை கலெக்டர் ராமன் குத்துவிளக்கேற்றி வைத்து, தொடங்கி வைத்தார். முகாம் மூலம் மாற்றுத்திறனாளிகள் 1,065 பேர் தேர்வு செய்யப்பட்டு, 359 பேருக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் ராமன் வழங்கினார். 32 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது

    அப்போது அவர் பேசியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, திருவள்ளூர் போன்ற மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளும், வேலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்று பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கலெக்டருக்கு அளிக்கப்படும் தன்விருப்ப நிதியினை கடந்த 2 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளின் உபகரணங்கள் பெறுவதற்காக பயன்படுத்தி வருகிறோம். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் வேலைவாய்ப்பு முகாம்களில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வேலை வாய்ப்பு வழங்கக்கோரி அதிகளவில் மனுக்கள் பெறப்படுகின்றன. அவற்றின் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மென்மேலும் முன்னேறி வெற்றிகளை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத்தொடர்ந்து ‘பைக் டாக்ஸி’ திட்டத்தில் முன்பதிவு செய்து மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்திட ‘மா உலா’ என்ற செல்போன் செயலியை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார். இத்திட்டம் வேலூர் மாநகரில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதில் மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, ‘வீ ஆர் யுவர் வாய்ஸ்’ தொண்டு நிறுவனர் பாஷித், தலைவர் ஜாகிர் உசேன் மற்றும் தன்னார்வலர்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் குழு பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
    அரக்கோணம் அருகே எரிந்த நிலையில் பெண் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே நாகவேடு காலனியை சேர்ந்தவர் தியாகராஜன் என்ற கோபி (வயது 38), காஞ்சீபுரத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி (31). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று காலை தியாகராஜன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். காலை 10.30 மணியளவில் வீட்டின் கழிப்பறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது வளர்மதி தீயில் எரிந்த நிலையில் தீக்காயத்துடன் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் விநாயகம், மணிவாசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் வளர்மதியின் தந்தை பொன்னுரங்கம் எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது, அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் மனு கொடுத்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.கே.துரைப்பாண்டியன் புகார் மனு மீது தீவிர விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    ராணிப்பேட்டை அருகே சாலையை கடக்க முயன்ற காவலாளி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானர்.

    வாலாஜா:

    ஆற்காடு அருகே உள்ள வளவனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 51). இவர் மாந்தாங்கலில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    முருகானந்தம் நேற்று இரவு வேலைக்கு ஷேர் ஆட்டோ மூலம் மாந்தாங்கலுக்கு சென்றார். அங்கு ஆட்டோவில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முருகானந்தம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×