என் மலர்
வேலூர்
குடியாத்தம் அருகே உள்ள ஒலக்காசி ரோடு இந்திரா நகரை சேர்ந்தவர் மதிவாணன். இவரது மனைவி கனிமொழி (வயது37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
மதிவாணன் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தினமும் கனிமொழியிடம் தகராறு செய்துவந்தார். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட கனிமொழி இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அவர் மீது மண்எண்ணையை ஊற்றி தீ பற்ற வைத்து கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர். அவரை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து குடியாத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஆம்பூர், சோளிங்கர், குடியாத்தம் ஆகிய 3 சட்டமன்ற இடைதேர்தல் வாக்குபதிவு இன்று நடந்து வருகிறது.
இந்நிலையில் வாலாஜா அருகே உள்ள அனந்தலை குளத்துதெருவை சேர்ந்தவர் துளசி (வயது 80). இவர் இன்று அதே பகுதியில் உள்ள அரசு நிதியுதவி நடு நிலைபள்ளி மையத்தில் உள்ள வாக்குசாவடியில் ஓட்டு போடுவதற்காக சென்றார்.
வாக்குசாவடி மையத்தின் உள்ளே சென்ற போது திடீரென மயங்கி விழந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை கண்ட போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கிறது. ஆனால் இன்று நடக்க இருந்த வேலூர் தொகுதி தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் மட்டும் ஓட்டுப்போட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இது அவமானம்தான். மக்கள் ஓட்டுப்போடாமல் போனது துரதிஷ்டவசமானது.
தேர்தல் நடத்துவது குறித்து எங்கள் வக்கீல் குழுவினருடன் ஆலோசனை நடத்தி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. தேர்தல் கமிஷனுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள். வரும் மே மாதம் 19-ந் தேதி தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலுடன் நிறுத்தப்பட்ட இந்த பாராளுமன்ற தொகுதி தேர்தலையும் நடத்த வேண்டும்.
ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து அங்கேயும் இதுபோன்ற தீர்ப்பு வந்தால் தேவையில்லாமல் வருமான வரித்துறையினருடன் உரசல் ஏற்படும். வருமான வரித்துறை இந்த வழக்கை துரிதமாக முடிக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் விரைவில் நடக்கும். தி.மு.க. வேட்பாளர் செய்த தவறால் இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் தன்னிச்சையாக முடிவு எடுக்ககூடியது. அவர்களின் முடிவுக்கு பிரதமர் மோடியை குறை கூறுவது தவறு. இந்த தேர்தலை ரத்து செய்தது ஒரு வகையில் தி.மு.க.வுக்கு சாதகமானதுதான்.
பெரிய தோல்வியில் இருந்து அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். எனவே தாமதம் செய்யாமல் தேர்தல் நடத்த வேண்டும். இல்லையென்றால் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று காலை ஆரணி நாடாளுமன்ற தொகுதி ஆரணி கொசப்பாளையத்தில் ஏ.சி.சண்முகம் ஓட்டு போட்டார். அப்போது நிருபர்களிடம் பேட்டி அளித்த அவர் பேச முடியாமல் கண்கலங்கினார். பின்னர் நிறுத்தபட்ட வேலூர் நாடாளுமன்ற தேர்தலை 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் மே 19-ந் தேதி நடத்த வேண்டும் என்றார். #acshanmugam #admk #parliamentelection
காட்பாடியில் டான் போஸ்கோ பள்ளி வாக்கு சாவடியில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோர் வாக்களித்தனர். அப்போது துரைமுருகன் கூறியதாவது:-
தேர்தல் நேரத்தில் வருமானவரி சோதனை நடத்துவது அதிகார துஷ்பிரயோகம். நடுநிலையோடு செயல்படுகின்ற சி.பி.ஐ, வருமானவரித்துறை ஆகியவற்றை பிரதமர் மற்றும் அவருக்கு கீழ் இருப்பவர்கள் இயக்க கூடாது.
இதுவரையில் தேர்தல் கட்டங்களில் எதிர் கட்சிகள் மீது வருமானவரித்துறையை கட்டவிழ்த்துவிட்டு ஏவியது கிடையாது. இந்தியாவில் இதுவே முதல் முறை. நிர்வாகம் நீதிமன்றம், சட்டமன்றம் தனியாக இயங்க வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கம்.
தன்னிச்சையாக செயல்பட்டு நிர்வாகத்தை கையில் எடுத்து கொண்டு ஆளும் கட்சிக்கு எதிராக செயல்படுவது சர்வாதிகார போக்கின் முதற்கட்டம். இது தவிர்க்கப்பட வேண்டும். வாக்குபதிவு சமயத்தில் கூட வருமானவரி சோதனை நடைபெறுகிறது. இது ஜனநாயக நாடா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #LoksabhaElections2019 #VellorePolls #DuraiMurugan
திருப்பத்தூர்:
திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் நாளை நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள், மது பாட்டில்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அவர்களின் கண்காணிப்பையும் மீறி பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் திருப்பத்தூர் அருகே உள்ள காக்கனாம் பாளையம் பகுதியில் தேர்தல் உதவி ஆணையாளர் ராஜேந்திரன் தலைமையில் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்து கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.27 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மரிமாணிகுப்பம் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்து கொண்டிருந்த காளியப்பன், கோபி ஆகியோரை பிடித்து அவர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அதிகாரிகள் பணம் வினியோகம் செய்த 3 பேரையும் குறிசிலாபட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறுதிக்கட்ட பிரசாரம் 6 மணிக்கு முடிந்த நிலையில், தேர்தல் ரத்து என்பது வேட்பாளர்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசி நேரத்தில் இப்படி அறிவித்தது வேதனை அளிக்கிறது. அரசு அதிகாரிகள் இரவு பகலாக உழைத்த உழைப்பு வீணடிக்கப்பட்டு விட்டது. மக்களை தேர்தல் கமிஷன் ஏமாற்றிவிட்டது.
தமிழகத்தில் பல இடங்களில் பணம் கொடுத்த புகார்கள் வந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், 15 நாட்களுக்கு முன்பு பணம் கைப்பற்றப்பட்டதற்கு இப்போது தேர்தலை ரத்து செய்திருப்பது தேவையில்லாத ஒன்று என்று பொதுமக்கள் தங்களது கருத்தை கூறினர்.
தேர்தல் ரத்து குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பரந்தாமன் முன்னாள் எம்.எல்.ஏ. - வேலூர்

வேட்பாளரிடம் பணம் பறிமுதல் செய்திருந்தால் உரிய விசாரணை நடத்தி உடனே தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால் தேர்தல் பிரசாரம் முடிந்த பின்பு தேர்தல் ரத்து என்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்று. இதனால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கபட்டுள்ளது.
ஷீலா - தோட்டபாளையம்
தேர்தல் ரத்து செய்தது சரியான நடவடிக்கை வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மக்களுக்கு எந்தவித நலத் திட்டங்களையும் செய்யமாட்டார்கள். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை அறவே ஒழிக்க வேண்டும்.
தாமோதரன் - ஆம்பூர்
தேர்தல் ஆணையம் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்திருப்பது சரி என்றால் ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி தேர்தலையும் ரத்து செய்திருக்க வேண்டும்.

தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க சென்னையில் வேலை பார்க்கும் நான் விடுப்பு எடுத்து ஆவலாக ஊருக்கு வந்தேன், ஆனால் தேர்தல் ஆணையம் திடீரென நேற்று தேர்தலை ரத்து செய்து விட்டது.
இது எனக்கும் என்னை போன்ற இளம் வாக்காளர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
இக்பால் வாணியம்பாடி
தேர்தலை ரத்து செய்திருப்பது சரியல்ல, இதனால் மக்களின் வரி பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் பணத்தை பறிமுதல் செய்த அன்றே இதுபோன்ற நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். ஆனால் தேர்தல் பிரசாரம் முடிந்த பின்பு இவ்வாறு நடந்து கொள்வது தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறதா என கேள்வி எழுந்துள்ளது.
சுகுமார் - வாணியம்பாடி
தேர்தல் ரத்து என்பது வேலூர் மாவட்ட தொகுதியில் மட்டும் செய்திருப்பது சரியானதல்ல. எல்லா தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே தேர்தல் ஆணையம் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்தை திரும்ப பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தேர்தல் நடப்பதற்கு முன்பே இவ்வளவு குளறுபடி என்றால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தால் என்னென்ன நடக்கும் தேர்தல் ரத்து செய்தது ஒரு விதத்தில் நல்லது தான். ஆனாலும் வெளியூரில் இருந்து லீவு போட்டு ஓட்டுபோட வந்தவர்களுக்கு ஏமாற்றம். மீண்டும் அவர்கள் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
தேர்தல் கமிஷன் எடுத்த முடிவு சரிதான். அரசியல்வாதிகளிடம் பிடிபட்ட பணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படியாக பல தரப்பு மக்களும் தேர்தல் கமிஷன் எடுத்த ரத்து முடிவுக்கு தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். மீண்டும் தேர்தல் நடத்தும் போதாவது பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசத்துடன் கூறினர். #LokSabhaElections2019 #VelloreConstituency
தமிழகத்தில் பருவமழை தவறியதையடுத்து கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதற்கேற்ப கோடை தொடங்கியதும் 100 டிகிரியை தாண்டியே வெயில் கொளுத்தியது.
கடந்த 3 நாட்களாக வெயிலின் டிகிரி 105 டிகிரியை தாண்டிய நிலையில் நேற்று 107.6 டிகிரியாக சுட்டெரித்தது. தகித்த வெயிலுடன் அனல் காற்றும் சேர்ந்து வீசியது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் வேதனைக்கு ஆளாகினர்.
வேலூர் மட்டுமின்றி மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை, வாலாஜா, அரக்கோணம் நகரங்களில் வெயிலின் உக்கிரம் அதிகரித்து சாலைகளில் மக்கள் நடமாட்டமும், வாகன நடமாட்டமும் குறைந்து மக்களின் இயல்பு வாழ்க்கையில் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. குளிர்பான கடைகளிலும், இளநீர் கடைகளிலும், கரும்புச்சாறு, பழரச கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.
இந்த நிலையில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்பதால் காலை 10 மணி தொடங்கி மாலை 4 மணி வரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.
அப்படி வெளியில் நடமாடினாலும் குடைகளுடன் செல்வதுடன், அடர்த்தியான வண்ணம் கொண்ட நைலான், பாலியெஸ்டர் போன்ற செயற்கை இழை ஆடைகளை தவிர்த்து பருத்தியாலான ஆடைகளை அணிய வேண்டும்.
அதிகளவில் நீராகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வெப்பத்தாக்குதல் எனப்படும் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பில் இருந்தும், கோடைகால நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். #SummerHeat
தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் டெல்லி மற்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

வருமானவரி சோதனை நடந்த 16 நாட்களுக்கு பிறகு தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்பு தேர்தலை ரத்து செய்துள்ளனர். இதனால் தகுந்த விளக்கம் கூட அளிக்க முடியவில்லை.
தேர்தல் ரத்து என்பது சரியான நடவடிக்கை இல்லை. எங்கள் வெற்றியை தடுக்க சோதனை நடந்துள்ளது. எனவே திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Loksabhaelections2019 #VelloreLSPolls #KathirAnand #ElectionCommission
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து காட்பாடியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. பெண்ணிடம் முதல்-அமைச்சர் பணம் கொடுப்பதை டிவியில் பார்த்தேன். அதை பற்றி கேட்க தேர்தல் ஆணையத்திற்கு மனம் வராது.
தேனியில் ரூ.2 ஆயிரம் கொடுத்ததை பார்த்தோம். இதுவும் இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் எங்கள் மீது எவ்வித நேரடி குற்றசாட்டும் இல்லாமல், எங்களை எந்த விளக்கமும் கேட்காமல் அவர்களாகவே முடிவு செய்திருக்கிறார்கள். இது திட்டமிட்ட ஒரு சதி.
தேர்தல் ஆணையம் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஆனால் அ.தி.மு.க.வில் பணம் கொடுப்பவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவில்லை என கருதுகிறேன். நடைபெறும் 38 பாராளுமன்றத்திலும், 22 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #Loksabhaelections2019 #VelloreLSpolls #DuraiMurugan #KathirAnand








