என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • சுமார் 100-க்கும்மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மக்கள் கவுன்சிலர் ஜெயராமன் தலைமையில் மாநகராட்சி மண்டல அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், முல்லை நகர் பகுதியில் குடியிருப்பு அருகில் உள்ள காலி இடத்தில் கோவில் அருகே தனியார் நிறுவனம் சார்பில் கியாஸ் சிலிண்டர் குடோன் வைப்பதற்கு பணிகள் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும்மேற்பட்டோர் முல்லை நகர் தலைவர் சக்திவேல், செயலாளர் பழனிச்சாமி, துணைத் தலைவர் பொண்ணம்பலம் ஆகியோர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து குடோன் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கவுன்சிலர் ஜெயராமன் தலைமையில் மாநகராட்சி மண்டல அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    • வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ஒன்றிய தலைவர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியம் சிறுலபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது அண்ணாமலை சேரி கிராமம். இங்கு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலையில் முறைகேடு நடப்பதாக அப்பகுதி பெண்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் குடிநீர், சாலை, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்ப டவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மீஞ்சூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும், 100 நாள் வேலை திட்ட முறை கேடுகளை களையவேண்டும் என்று வலியுறுத்தினர்.

    அவர்களிடம் ஒன்றிய தலைவர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக தலா 6 கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன.
    • கழிப்பறை உள்ள இடத்தில் ‘செப்டிக்டேங்’ அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூரை அடுத்த எண்ணூர், தாழங்குப்பம் பகுதியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு பொதுக்கழிப்பறை கட்டிடம் ரூ.30 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக தலா 6 கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன.

    கழிவறை கட்டிடம் திறக்கப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் பயன்படுத்த முடியாமல் மூடியே கிடக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக கழிவறையில் இருந்து செல்லும் குழாயை அருகில் உள்ள கால்வாயில் இணைக்க முடியாததே காரணமாக கூறப்படுகிறது.

    தாழங்குப்பம் அருகே உள்ள நெட்டுக்குப்பம் வழியாக கழிவறை கழிவுநீர் குழாயை கொண்டு சென்று அருகில் உள்ள கால்வாயில் இணைக்கும் சூழல் உள்ளது.

    ஆனால் இதற்கு நெட்டுக்குப்பம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு சாதிபாகுபாடு காரணம் என்றும் கூறப்படுகிறது. இயற்கையாகவே தாழங்குப்பம் பகுதி உயரமான இடம் ஆகும். இதனால் அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் நெட்டுக்குப்பம் வழியாக செல்லும்.

    தற்போது கழிவறை பகுதியில் இருந்து குழாயை நெட்டுக்குப்பம் வழியாக கொண்டு செல்ல முடியாத அளவுக்கு வீட்டை ஒட்டி சுவர்கள் எழுப்பப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    இதனால் வேறு வழியின்றி மாற்றுப்பாதையை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். எனினும் மாற்றுப்பாதையில் குழாய்கள் பதித்தால் மேடான பகுதி வாரியாக கழிவு நீர் பாய்ந்து செல்வதில் சிரமம் ஏற்படும் சிக்கலும் உள்ளது.

    இதனால் கழிவறையை பயன்படுத்த முடியாமல் பூட்டி வைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த பிரச்சினை தொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளில் ஒருவர் கூறும்போது, 'தாழங்குப்பம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கழிவறையில் இருந்து குழாய் பதிப்பதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷ்னரிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர கோரி உள்ளோம்.

    விரைவில் குழாய் பதிக்கும் பணி தொடங்கப்படும்' என்றார்.

    இது குறித்து தாழங்குப்பத்தை சேர்ந்த ஒருவர் கூறும்போது, 'நான் பிறந்த முதலே இங்கு தான் வசிக்கிறேன். நெட்டுக்குப்பத்தில் உள்ள சிலர் கழிவுநீர் குழாய் பதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பூமிக்கடியில் குழாய் சென்றாலும் தங்கள் பகுதி வழியாக குழாய் செல்ல எதிர்ப்பு தெரிவித்து சாதிய அவதூறுகளை கூறுகிறார்கள்' என்றனர்.

    மற்றொருவர் கூறும் போது, 'இந்த கழிவறை மிகவும் பழமை யானது. கடந்த 3 ஆண்டு முன்பு இதனை சீரமைக்க தொடங்கியதும் பிரச்சினை ஏற்பட்ட ஆரம்பித்தது. முன்பு கழிவறை அருகே வீடுகள் இல்லாததால் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. தற்போது நெட்டுக்குப்பம் அருகே கழிப்பறை பக்கத்தில் ஏராளமான வீடுகள் வந்துவிட்டன. இதனால் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. பொதுக்கழிப்பறை இருந்தாலும் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும்' என்றார்.

    இதற்கிடையே கழிப்பறை உள்ள இடத்தில் 'செப்டிக்டேங்' அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    • குடோனின் மேல் உள்ள ஓட்டை பிரித்து இறங்கி அங்கு விட்டுச் சென்ற மதுபாட்டில்களை எடுத்து ஓசியில் குடித்து வந்து உள்ளனர்.
    • சுமார் 200-க்கும் மேற்பட்ட போலி மதுபான பாட்டில்களும் சிதறி கிடந்தன.

    திருவள்ளூர்:

    திருவாலங்காடு அடுத்த வரதாபுரம் கிராமத்தில் உள்ள தனியார் அரிசி ஆலை வளாகத்திற்குள் கடந்த 2013-ம் ஆண்டு போலி மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது.

    அப்போது கலால் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து போலியாக செயல்பட்டு வந்த மதுபான தொழிற்சாலை மற்றும் மதுபாட்டில்கள் இருந்த குடோனுக்கு சீல் வைத்தனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த போலி மதுபான குடோன் பூட்டியே கிடந்தது. அந்த குடோனில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிதறிய பாட்டில்களை முறையாக பறிமுதல் செய்யாமல் அப்படியே விட்டு சென்றதாக தெரிகிறது.

    இதனை அறிந்த மது பிரியர்கள் நள்ளிரவில் குடோனின் மேல் உள்ள ஓட்டை பிரித்து இறங்கி அங்கு விட்டுச் சென்ற மதுபாட்டில்களை எடுத்து ஓசியில் குடித்து வந்து உள்ளனர்.

    நாட்கள் செல்ல செல்ல குடிமகன்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தினந்தோறும் ஏராளமான போதை ஆசாமிகள் இந்த குடோனுக்குள் புகுந்து மதுகுடித்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும் அதிக மதுபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் வீட்டுக்கு வந்து தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட போலி மதுபான குடோனுக்குள் புகுந்து போதை வாலிபர்கள் மதுகுடித்து செல்வது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா மற்றும் திருவள்ளூர் தாலுகா போலீசார் சீல் வைத்த போலி மதுபான தொழிற்சாலைக்குள் சுவர் ஏறி குதித்து சென்றனர்.

    அப்போது அங்கு ஏராளமான காலி மதுபாட்டில்கள் குவிந்து கிடந்தது. மேலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலி மதுபான பாட்டில்களும் சிதறி கிடந்தன. அதனை போலீசார் பறிமுதல் செய்து அங்கேயே உடைத்து அழித்தனர். போதை வாலி பர்கள் எத்தனை நாட்களாக எவ்வளவு மதுபாட்டில்களை குடித்து காலி செய்தனர் என்று தெரியவில்லை. பணம் கொடுக்காமல் ஓசியில் தினந்தோறும் மதுகுடித்து ஜாலியாக இருந்து உள்ளனர். அவை போலி மது பானம் என்பதாலும் தயாரிக்கப்பட்டு 10 ஆண்டுக்கு மேல் ஆவதாலும் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதா என்றும் தெரியவில்லை.

    இது தொடர்பாக குடோனுக்குள் புகுந்து போலி மதுபானங்களை குடித்து சென்ற மதுபிரியர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த குடோனுக்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டது.மேலும் திருவள்ளூர் மாவட்ட கலால் உதவி இயக்குனர் மாலா மது பாட்டில்கள் அழிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டார்.

    • மகளின் படிப்பு செலவுக்காக நகையை அடகு வைக்க முடிவு செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த மப்பேடு அருகே உள்ள பன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்துசாமி. தொழிலாளி. இவரது மனைவி அண்ணம்மாள். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்கள் தங்களது மகளின் திருமணத்திற்காக சிறுக சிறுக 21 பவுன் நகை சேமித்து வைத்திருந்தனர்.

    இந்தநிலையில் மகளின் படிப்பு செலவுக்காக நகையை அடகு வைக்க முடிவு செய்தனர். அவர்கள் பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 21 பவுன் நகை மாயமாகி இருந்தது. மர்மநபர்கள் நகையை திருடி சென்று இருப்பது தெரிந்தது. ஆனால் வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்படவில்லை.

    எனவே வீட்டிற்கு அடிக்கடி வந்த சென்ற நபர்கள் நகையை திருடி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முத்து தினசரி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.
    • அனுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பொதட்டூர்பேட்டை:

    பள்ளிப்பட்டு தாலுகா ராம சமுத்திரம் ஊராட்சியில் உள்ள வி.ஜி.ஆர்.கண்டிகை காலனியை சேர்ந்தவர் முத்து (வயது 25). இவர் பொக்லைன் எந்திரம் ஓட்டும் வேலை செய்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த அனு (22) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிந்தது. முத்துவுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவர் தினசரி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அனு குடிப்பழக்கத்தை விடும்படி முத்துவிடம் கூறினார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்து வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட அனு கணவரிடம் தட்டிக்கேட்டு தகராறு செய்தார்.

    இதனால் மனவேதனை அடைந்த அனு படுக்கை அறைக்கு சென்ற நிலையில் மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டார் அனுவை கீழே இறக்கி உடனடியாக சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அனுவின் தந்தை ராஜேந்திரன் பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணம் முடிந்து சில நாட்களே ஆவதால் இதுகுறித்து திருத்தணி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் 13 நாட்களில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பாரிவாக்கம் இணைப்பு சாலை வழியாக செல்லக்கூடிய கால்வாயில் தண்ணீர் செல்லாத வகையில் மண்ணை கொட்டி மூடப்பட்டுள்ளது.
    • துர்நாற்றம் வீசுவதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பாரிவாக்கம் இணைப்பு சாலையில் பூந்தமல்லி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. மேலும் புதிதாக அமைக்கப்படும் சாலையின் ஓரத்தில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணியும் நடக்கிறது. இதற்கிடையே பாரிவாக்கம் இணைப்பு சாலை வழியாக செல்லக்கூடிய கால்வாயில் தண்ணீர் செல்லாத வகையில் மண்ணை கொட்டி மூடப்பட்டுள்ளது.

    இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தற்போது கழிவுநீர் அனைத்தும் சாலையில் தேங்கி ஆறாய் ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். துர்நாற்றம் வீசுவதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி நடக்கும் போது முறையாக கழிவுநீர் வெளியே செல்ல வழிவகை செய்யவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • லாரியை அங்கிருந்த அப்புறப்படுத்த இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
    • பொதுமக்கள் லாரியை அங்கிருந்து தள்ளி சாலையோரம் நிறுத்தினர்.

    திருவள்ளூர்:

    மத்திய பிரதேசத்தில் இருந்து ஒரகடம் பகுதியில் உள்ள டயர் தொழிற்சாலைக்கு மூலப் பொருட்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. டிரைவர் அத்துல் லாரியை ஓட்டினார். இன்று அதிகாலை 5 மணியளவில் திருவள்ளூர், காமராஜர் சிலை அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென முன்னால் சென்ற மற்றொரு லாரியின் மீது மோதியது. இதில் டயர் தொழிற்சாலைக்கு மூலப்பொருட்கள் ஏற்றி வந்த லாரியின் முன்பகுதி முழுவதும் சேதம் அடைந்து பழுதானது.

    இதனால் லாரியை அங்கிருந்த அப்புறப்படுத்த இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காமராஜர் சிலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் வேலைக்கு செல்வார் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். கிரேன் வர தாமதமானதால் லாரியை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. காலை 10 மணி வரை லாரி அகற்றப்படாமல் அங்கேயே நின்றது. பின்னர் பொதுமக்கள் லாரியை அங்கிருந்து தள்ளி சாலையோரம் நிறுத்தினர்.

    • பொன்னேரி பாலாஜி நகரில் உள்ள அரசினர் நடுநிலை பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • பள்ளிக்கு செல்லாமல் சுற்றிய மாணவர்கள் 3 பேர் ஆரணி ஆற்றின் புதரில் ஓடி மறைந்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி பாலாஜி நகரில் உள்ள அரசினர் நடுநிலை பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியின் வளர்ச்சி குறித்து பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பாலாஜி நகர், கள்ளுக்கடை மேடு உள்ளிட்ட பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதில்லை என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து நகராட்சி தலைவர் பரிமளம் விஸ்வநாதன், பள்ளி ஆசிரியை குளோரி, கவுன்சிலர் மோகனா மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் பள்ளி செல்லா குழந்தைகளின் விபரத்தை சேகரிக்க சென்றனர். அப்போது பள்ளிக்கு அருகில் உள்ள நெல் அரிசி ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் பாலாஜி நகர் அருகில் உள்ள கள்ளுக்கடை பகுதியில் வசிக்கும் பழங்குடியினரிடம் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது பள்ளிக்கு செல்லாமல் சுற்றிய மாணவர்கள் 3 பேர் ஆரணி ஆற்றின் புதரில் ஓடி மறைந்தனர். பின்பு சாக்லேட் கொடுத்து வரவழைத்து பள்ளிக்கு அழைத்து சென்றனர்.

    • கடனை செலுத்தாமல் இருந்ததால் சந்தேகமடைந்த வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
    • இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் கபிலர் நகர் பகுதியை சேர்ந்தவர் சரண்யா. இவர் மத்திய அரசு திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க உள்ளதாக அதற்கு எந்திரம்வாங்குவதாக கடந்த 2022-ம் ஆண்டு திருவள்ளூரில் உள்ள வங்கி கிளையில் ரூ.9 லட்சத்து 43 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.

    ஆனால் வாங்கிய கடனை செலுத்தாமல் இருந்ததால் சந்தேகமடைந்த வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது ஆவணத்தில் தெரிவித்துள்ள முகவரியில் ஆய்வு செய்தபோது அங்கு எந்திரம் இல்லை. இதனால் பொய்யான தகவல் கொடுத்து கடன் பெற்றது உறுதியானது. இது குறித்து வங்கியின் மண்டல உதவி பொது மேலாளர் ஏ.கே பூமா திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • முகமது ரியாஸ்தீன் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் மாங்காய் பறிக்க வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார்.
    • மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கொளத்தூர்:

    மாதவரம் பொன்னியம்மன்மேடு தணிகாசலம் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் முகமது ரியாஸ்தீன் (வயது57). இவர் மணலியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வந்தார். மேலும் அருகில் உள்ள பள்ளிவாசலில் பொருளாளராக இருந்து வந்தார். இவரது மனைவி ரஹிமா கவுசர். இவர் பெரம்பூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

    இந்த நிலையில் முகமது ரியாஸ்தீன் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் மாங்காய் பறிக்க வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார். அங்கிருந்தபடி மரத்தின் கிளைகளை இழுத்து அவர் மாங்காய் பறித்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக முகமது ரியாஸ்தீன் நிலை தடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    இது குறித்து மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நடுரோட்டில் கேக்கை வைத்து விஷ்ணு பட்டாகத்தியால் வெட்டினார். நண்பர்கள் இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இருந்தனர்.
    • வேலஞ்சேரியில் பதுங்கி இருந்த விஷ்ணுவை போலீசார் கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருத்தணியை அடுத்த வேலஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு(24).இவர் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் அதே பகுதியில் கொண்டாடினார்.

    அப்போது நடுரோட்டில் கேக்கை வைத்து விஷ்ணு பட்டாகத்தியால் வெட்டினார். நண்பர்கள் இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் விஷ்ணு பட்டாக்கத்தியால் நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவை அவரது நண்பர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.

    இதுபற்றி திருத்தணி போலீசுக்கும் தகவல் கிடைத்தது. திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் வேலஞ்சேரியில் பதுங்கி இருந்த விஷ்ணுவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை திருத்தணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×