என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் இன்று காலை விபத்தில் சிக்கிய லாரி பழுதானதால் கடும் போக்குவரத்து நெரிசல்
- லாரியை அங்கிருந்த அப்புறப்படுத்த இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
- பொதுமக்கள் லாரியை அங்கிருந்து தள்ளி சாலையோரம் நிறுத்தினர்.
திருவள்ளூர்:
மத்திய பிரதேசத்தில் இருந்து ஒரகடம் பகுதியில் உள்ள டயர் தொழிற்சாலைக்கு மூலப் பொருட்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. டிரைவர் அத்துல் லாரியை ஓட்டினார். இன்று அதிகாலை 5 மணியளவில் திருவள்ளூர், காமராஜர் சிலை அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென முன்னால் சென்ற மற்றொரு லாரியின் மீது மோதியது. இதில் டயர் தொழிற்சாலைக்கு மூலப்பொருட்கள் ஏற்றி வந்த லாரியின் முன்பகுதி முழுவதும் சேதம் அடைந்து பழுதானது.
இதனால் லாரியை அங்கிருந்த அப்புறப்படுத்த இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காமராஜர் சிலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் வேலைக்கு செல்வார் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். கிரேன் வர தாமதமானதால் லாரியை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. காலை 10 மணி வரை லாரி அகற்றப்படாமல் அங்கேயே நின்றது. பின்னர் பொதுமக்கள் லாரியை அங்கிருந்து தள்ளி சாலையோரம் நிறுத்தினர்.






