என் மலர்
திருவள்ளூர்
- பள்ளி, கல்லூரிகளிலும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கின்றன.
- காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு வாரம் வரை பாதிப்பு உள்ளது.
பொன்னேரி:
பொன்னேரியில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்கு பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து தினமும் ஏராளமானோர் வெளிநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பொன்னேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினந்தோறும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் வரும் வெளி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. பெரும்பாலானோருக்கு சளி, இருமலுடன் காய்ச்சல், உடல்வலி இருக்கிறது.
காய்ச்சல் பாதிப்புடன் வரும் நோயாளிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடம் தினமும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. பள்ளி, கல்லூரிகளிலும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கின்றன.
குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் இருந்தால் வீட்டில் உள்ள அனைவருக்கும் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். பெரும்பாலானோர் மருந்து கடைகளில் மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவதால் பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள மருந்து கடைகளிலும் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது.
ஆண்டார்குப்பம், தடபெரும்பாக்கம், வெள்ளி வாயில் சாவடி, வாயலூர், பொன்னேரி, மீஞ்சூர் பழவேற்காடு ,தேவம்பட்டு, உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் காணப்பட்டு வருகின்றன.
காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் உள்ள 150 படுக்கை வசதியில் 20 படுக்கைகளுடன் டெங்குகாய்ச்சல் வார்டு திறக்கப்பட்டு உள்ளது.
இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ள சித்த மருத்துவ வார்டில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் நோயாளிகளுக்கு வைக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் பரவலை தடுக்க பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இதுகுறித்து பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறியதாவது:-
டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது குறைவாக இருந்தாலும் பருவநிலை மாற்றம் மற்றும் கொசுக்களின் காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட 2 மடங்கு அதிகரித்து உள்ளது.
இதைத்தொடர்ந்து டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டு படுக்கை வசதியுடன் திறக்கப்பட்டு உள்ளது. யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அவர்கள் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரின் ஆலோசனை படி சிகிச்சை எடுத்து மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் கடைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிடக் கூடாது.
இப்போது காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு வாரம் வரை பாதிப்பு உள்ளது. ஓரிரு நாட்களில் காய்ச்சல் குணமாவிட்டாலும், பசி இன்மை, குமட்டல், வாந்தி, உடல்சோர்வு ஏற்படுதல் என இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி இருந்தால், உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களின் பரிந்துரையின்படி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காய்ச்சல் பாதித்த கிராமங்களில் மீஞ்சூர் வட்டார கொசு ஒழிப்பு பணியாளர்கள் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- கோவிலில் உள்ள உண்டியல் பணத்தை எண்ணும் பணி கோவில் நிர்வாகம் சார்பில் நடைபெற்றது.
- கோவில் ஊழியர்கள் உண்டியல் பணத்தை தனித்தனியாக பிரித்து எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோவில் மிகவும் சிறப்பு பெற்றது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். அவர்கள் கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் உள்ள உண்டியல் பணத்தை எண்ணும் பணி கோவில் நிர்வாகம் சார்பில் நடைபெற்றது. கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் இணைஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷாரவி, சுரேஷ்பாபு, நாகன், கோ. மோகனன் ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் உண்டியல் பணத்தை தனித்தனியாக பிரித்து எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் மொத்தம் ரூ.64 லட்சத்து 90 ஆயிரத்து 989 ரொக்கம் மற்றும் 161 கிராம் தங்கம், 4கிலோ வெள்ளி காணிக்கையாக இருந்தது. இது கடந்த 19 நாட்களில் மட்டும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது என்று திருத்தணி கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.
- போலீசார் அங்கு சென்றபோது அங்குள்ள கிணற்றில் உடல் அழுகிய நிலையில் அஜித் உடல் மிதந்தது.
- வழக்கு தொடர்பாக மேலும் மீஞ்சூர் சூர்யா நகரை சேர்ந்த மோகன், சாய், கணேஷ் ஆகியோரை தேடிவருகிறார்கள்.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த லட்சுமிபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மகன் அஜித் (வயது25). கடந்த 16-ந்தேதி இரவு நண்பர்களுடன் வெளியே சென்ற அஜித் பின்னர் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து பச்சையப்பன் மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக அஜித்தின் நண்பர்களான மீஞ்சூரை அடுத்த ராமரெட்டி பாளையத்தை சேர்ந்த நாகராஜ், மீஞ்சூர் லால் பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த கார்த்திக் என்கிற திருட்டு கார்த்திக் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்களுடன் சேர்ந்து அஜித்தை வெட்டி கொலை செய்து விட்டதாகவும், அவரது உடலை ராம ரெட்டிபாளையம் ஏரிக்கரை பகுதியில் புதர் அருகே உள்ள கிணற்றில் வீசி இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதைத்தொாடர்ந்து போலீசார் அங்கு சென்றபோது அங்குள்ள கிணற்றில் உடல் அழுகிய நிலையில் அஜித் உடல் மிதந்தது. உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அஜித்தின் கை, கால்கள் அவர் அணிந்து இருந்த ஆடையால் கட்டப்பட்டு இருந்தது.
விசாரணையில் கடந்த 16-ந்தேதி இரவு அஜித் மற்றும் அவரது நண்பர்கள் மதுகுடித்த போது மோதல் ஏற்பட்டு உள்ளது. பின்னர் வீட்டுக்கு சென்ற அஜித்தை மீண்டும் அழைத்து நண்பர்கள் கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு, அவரது கை, கால்களை கட்டி உடலை அருகில் உள்ள கிணற்றில் வீசி சென்று இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அஜித்தின் நண்பர்களான நாகராஜ், கார்த்திக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக மேலும் மீஞ்சூர் சூர்யா நகரை சேர்ந்த மோகன், சாய், கணேஷ் ஆகியோரை தேடிவருகிறார்கள்.
இவர்களில் கார்த்திக் மற்றும் மோகன் மீது ஏற்கனவே 7 குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அஜித் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து மீஞ்சூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலிபரை நண்பர்களே வெட்டிக்கொன்று விட்டு உடலை கிணற்றில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தண்ணீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
- வீடுகள் முன்பு தேங்கிய தண்ணீரை அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பலத்த மழை இல்லாவிட்டாலும் விட்டு விட்டு பெய்து வருவதால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி வருகிறது.
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டு ஹரே ராம் நகர் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து தேங்கி நிற்கிறது. கடந்த ஒரு மாதத்துக்கு மேல் வீடுகள் முன்பு தேங்கி நிற்கும் இந்த தண்ணீரால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது. தற்போது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்த தண்ணீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் வீடுகள் முன்பு தேங்கிய தண்ணீரை அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அவ்வழியே செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
இந்த நிலையில் தெருக்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பெண்கள் அதில் நாற்று நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''பலத்த மழை பெய்யும் போது கழிவுநீருடன் மழைநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. தற்போது சிறிய மழைக்கே தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தேங்கிய தண்ணீரில் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருக்களில் தேங்கிய தண்ணீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- காலையில் ஊழியர்கள் வங்கிக்கு வந்தபோது ஜன்னல்கம்பி உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- கொள்ளையனின் திட்டம் தோல்வியில் முடிந்ததால் வங்கியில் இருந்த பல லட்சம் பணம், நகைகள் தப்பியது.
திருவள்ளூர்:
ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கம் பகுதியில் வங்கி உள்ளது. இந்த வங்கியில் 500-க்கும் மேற்பட்டோர் சேமிப்பு மற்றும் நகைகடன் கணக்கு வைத்து உள்ளனர். மாலையில் பணி முடிந்ததும் ஊழியர்கள் வழக்கம் போல் வங்கியை பூட்டி விட்டு சென்றனர். இந்தநிலையில் நள்ளிரவில் வந்த மர்ம வாலிபர் வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே சென்றான். பின்னர் அங்கிருந்த லாக்கரை உடைக்க முயன்றபோது ஒலி எழுந்ததால் மர்ம வாலிபர் கொள்ளை திட்டத்தை கைவிட்டு தப்பி சென்று விட்டான்.
இதற்கிடையே காலையில் ஊழியர்கள் வங்கிக்கு வந்தபோது ஜன்னல்கம்பி உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது முகமூடி அணிந்த மர்மநபர் ஒருவர் பணம் வைத்துள்ள லாக்கரை உடைக்க முயன்றது பதிவாகி இருந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் வைத்தியநாதன் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.
கொள்ளையனின் திட்டம் தோல்வியில் முடிந்ததால் வங்கியில் இருந்த பல லட்சம் பணம், நகைகள் தப்பியது. இச்சம்பவம் அப்பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆத்திரம் அடைந்த செல்வம் இரும்பு கம்பியால் பெருமாளை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டார்.
- பலத்த காயம் அடைந்த பெருமாளை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
திருத்தணி:
திருவாலங்காடு அருகே உள்ள ரங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(வயது60). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் கருவேல மரத்தை வெட்டி விற்பனை செய்வதில் தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்றும் அவர்களுக்கு இடையே இது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செல்வம் இரும்பு கம்பியால் பெருமாளை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த பெருமாளை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- விடையூர் பகுதியில் வேனில் கடத்தி வந்த ஒரு டன் ரேசன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- வேனில் இருந்த ஒருவரை போலீசார் கைது செய்து ரேசன் அரிசியையும் வேனையும் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அருகே விடையூர் பகுதியில் வேனில் கடத்தி வந்த ஒரு டன் ரேசன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை ஆந்திராவுக்கு கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து வேனில் இருந்த ஒருவரை போலீசார் கைது செய்து ரேசன் அரிசியையும் வேனையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பொன்னேரி அருகே கிளிக்கொடி கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் பின்புறம் கேட்பாரற்று கிடந்த ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் சிவராசு திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- ஆய்வின்போது நகராட்சி ஆணையர் கோபிநாத், நகர்மன்ற தலைவர் டாக்டர் பரிமளா விஸ்வநாதன் உடன் இருந்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணியை நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் சிவராசு திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொன்னேரி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பொன்னேரி, திருவெற்றியூர் சாலை பகுதியில் மழைநீர் கால்வாய் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு பணியை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.ஆய்வின்போது நகராட்சி ஆணையர் கோபிநாத், நகர்மன்ற தலைவர் டாக்டர் பரிமளா விஸ்வநாதன் உடன் இருந்தனர்.
- சென்னீர்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மருத்துவமுகாம் அமைத்து காய்ச்சல் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்து வருகிறார்கள்.
- ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கை இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லியை அடுத்த சென்னீர் குப்பம், ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் புவியரசன். கூலித்தொழிலாளி. இவரது மகன் சக்தி சரவணன் (வயது9). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக சக்தி சரவணன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து அவரை கடந்த 8-ந்தேதி வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவரது உடல் நிலை மேலும் மோசம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சக்தி சரவணனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை சிறுவன் சக்தி சரவணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சென்னீர்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மருத்துவமுகாம் அமைத்து காய்ச்சல் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்து வருகிறார்கள். ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கை இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
- பாபு பிணமாக கிடந்த இடத்தின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமிராகாட்சிகளை ஆய்வு செய்தனர்.
- இருதயராஜை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி:
பெரியபாளையத்தை சேர்ந்தவர் பாபு (வயது43). தொழிலாளி. இவர் கடந்த 14-ந்தேதி பொன்னேரி, தச்சூர் சாலை கிருஷ்ணாபுரம் மேட்டு காலனி அருகில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் பாபுவின் தலையில் 3 இடங்களில் தலையில் கல்லால் தாக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பாபு பிணமாக கிடந்த இடத்தின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமிராகாட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் பொன்னேரியை அடுத்த மேட்டு காலனி பகுதியைச் சேர்ந்த இதயராஜ் என்பவர் அப்பகுதியில் செல்வது பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது செல்போன் பறித்த போது தடுத்ததால் கல்லால் தாக்கியதில் பாபு இறந்துவிட்டதாக இருதயராஜ் தெரிவித்து கொலையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருதயராஜின் வீட்டில் மறைத்து வைத்திருந்த பாபுவின் செல்போனையும் பறிமுதல் செய்தனர். செல்போன் பறிப்பை தடுத்த தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை கேட்டறிந்தார்.
- கலெக்டர் பிரபுசங்கர் மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறினார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட புதிய கலெக்டராக பிரபு சங்கர் நேற்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலை கலெக்டர் பிரபு சங்கர் திருவள்ளூர், பஜார் அருகே உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது முதல் அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். மேலும் கலெக்டர் பிரபுசங்கர் மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறினார். மேலும் உணவு தயாரிக்கும் முறை, அதனை பள்ளிக்கு கொண்டு செல்லும் முறை மற்றும் மாணவர்களுக்கு உணவு பரிமாறப்படும் விதம், பள்ளியின் கட்டமைப்பு, மாணவர்ளின் வருகை மற்றும் படிப்பு குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது, கூடுதல் கலெக்டரும் திட்ட இயக்குனருமான சுகபுத்திரா, நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா, சுகாதார அலுவலர் கோவிந்த ராஜு, தலைமை ஆசிரியர்கள் சிவரணி, பூங்கோதை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- கஞ்சா கடத்தி வந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் வட மாநில வாலிபர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
- கைதானவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அம்பத்தூர்:
அம்பத்தூர் அடுத்த பட்டரவாக்கம் ரெயில் நிலையத்தில் ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபர்கள் 2 பேரை அம்பத்தூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் தனம்மாள் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த முன்னா நாயக் (34) பிதம்பரநாயக் (28) என்பதும் ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் வட மாநில வாலிபர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.






