என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்களே விக்கியை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
    • கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாணை நடத்தி வருகிறார்கள்.

    திருநின்றவூர்:

    சோழவரத்தை சேர்ந்தவர் விக்கி (வயது32). ரவுடி. இவர் மீது சோழவரம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் ஆவடியை அடுத்த புதிய கன்னியம்மன் நகர் மாந்தோப்பில் தலையில் கல்லைப்போட்டு விக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலை மற்றும் முகம் முழுவதும் அடையாளம் தெரியாத வகையில் சிதைந்து காணப்பட்டது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஆவடி டேங்க் பேக்டரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    கொலை நடந்த இடத்தில் ஆவடி துணை கமிஷனர் பாஸ்கர், உதவி கமிஷனர் அன்பழகன், ஆவடி டேங்க் பேக்டரி இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த இடத்தின் அருகே கேக் வெட்டப்பட்டு சிதறி கிடந்தது. மேலும் மதுபாட்டில்களும் கிடந்தன.

    எனவே இரவு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்களே விக்கியை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக ரவுடி விக்கியுடன் தொடர்பில் உள்ள நண்பர்கள் யார்? யார்? என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள். நேற்று இரவு விக்கி புதிய கன்னியம்மன் நகரில் உள்ள உறவினர் ஒருவரை சந்திக்க வந்ததாக தெரிகிறது. அவரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    ரவுடி முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.
    • பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படும் 16 மதகுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

    சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.

    இந்நிலையில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து, நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பூண்டி ஏரி பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் கலெக்டர் பிரபு சங்கர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களோடு கலந்துரையாடி கேட்டறிந்தார். முன்னதாக அவர் பூண்டி ஏரியிலிருந்து புழல் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் இணைப்பு கால்வாயை பார்வையிட்டார். மேலும் பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படும் 16 மதகுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது நீர் வளத்துறை உதவி செயற் பொறியாளர் சத்ய நாராயணன், உதவி பொறியாளர் ரமேஷ் உடன் இருந்தனர்.

    • ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் குப்பையுடன் வந்த டிராக்டர்களை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
    • மழைவெள்ளத்தில் குப்பைகள் அடித்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள நிலங்களில் சேர்ந்ததால் அந்த இடமும் பாழாகும் அபாயம் உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ள வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சிக்கு உட்பட்ட சுற்று வட்டார பகுதிகளில் சேறும் குப்பைகளை துப்புரவுப் பணியாளர்கள் மணவாளன் நகர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் கொட்டிவந்தனர்.

    ஆனால் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அந்த இடத்தில் குப்பைகளை கொட்டுவது நிறுத்தப்பட்டு பின்னர் வெங்கத்தூர், கன்னிமாநகர் பகுதியில் பள்ளி அங்கன்வாடி குடியிருப்புகள் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டது.

    இதில் தினம்தோறும் 5 டன் குப்பைகள் கொட்டப்படுவதால் அந்த பகுதியில் மலை போல் சேர்ந்து துர்நாற்றம் வீசியது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் குப்பையுடன் வந்த டிராக்டர்களை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சியில் சேரும் குப்பைகளை தற்போது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தடுப்புகள் அமைத்து கொட்டப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஏராளமான டிராக்டர்கள் மூலம் கொட்டப்படும் கழிவுகள் சாலையோரம் குவிந்து வருவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனம் மற்றும் பொது மக்கள் சென்று வரும் நிலையில் குப்பை கழிவுகளால் தொற்றும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    கழிவுகளில் பிளாஸ்டிக், தெர்மாகோல், மெத்தை, முட்டை கழிவுகள், இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுவதால் கால் நடைகள், நாய்கள் அதனை இழுத்து சாலையில் போட்டு சென்று விடுகின்றன. தற்போது மழை பெய்து வரும் நிலையில் குப்பை கழிவுகளில் தண்ணீர் தேங்கி கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மழைவெள்ளத்தில் குப்பைகள் அடித்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள நிலங்களில் சேர்ந்ததால் அந்த இடமும் பாழாகும் அபாயம் உள்ளது.

    எனவே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • குளக்கரை அருகே வான வேடிக்கை நிகழ்த்த ஏராளமான பட்டாசுகள் வைத்து இருந்தனர்.
    • காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த ராம ரெட்டிபாளையத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5-ம் வார திருவிழாவை நேற்று (சனிக்கிழமை) விமரிசையாக நடைபெற்றது. பின்னர் இரவு சாமி ஊர்வலம் நடந்தது.

    அப்போது அங்குள்ள குளக்கரை அருகே வான வேடிக்கை நிகழ்த்த ஏராளமான பட்டாசுகள் வைத்து இருந்தனர்.

    சாமி ஊர்வலம் வந்ததும் அங்கிருந்த பட்டாசுகளை வெடிக்க தொடங்கினர். அப்போது தீப்பொறி பறந்து விழுந்ததில்பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் அருகில் கூடியிருந்தவர்கள் மீது பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் அப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

    உடனடியாக அவர்களை மீட்டு மீஞ்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த சூரி, சுரேஷ், பிரபா, பொன்மணி, உள்ளிட்ட 7 பேர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிதறியதால் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வலியால் துடிக்கும் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதை விட்டுவிட்டு மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் முகமது அலி 3-வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது35). இவரது மனைவி பாரதி (32). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    பாரதி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இடுப்பு வலி மற்றும் காய்ச்சல் காரணமாக அவரை திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கணவர் மணிகண்டன் அழைத்து சென்றார். மருத்துவமனையில் 2-வது மாடியில் கர்ப்பிணிகள் வார்டு நர்சுகளிடம் விட்டு விட்டு மனைவியின் உடைகளை எடுக்க மணிகண்டன் வீட்டிற்கு சென்றார். அப்போது பாரதி நர்சுகள் அமரும் இருக்கையில் அமர்ந்து உள்ளார். அப்போது மருத்துவமனையில் உள்ள நர்சுகள் பாரதியிடம் விவரத்தை கேட்டுள்ளனர். பின்னர் அவரை இருக்கையில் அமரக்கூடாது. ஓரமாக உட்காருமாறு அலட்சியமாக கூறினார்கள். மேலும் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சிகிச்சை அளிக்காததால் அவருக்கு இடுப்பு வலியும் காய்ச்சலும் அதிகரித்தது. ஆனாலும் அவருக்கு சிகிச்சை அளிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிகிச்சை அளிக்காதது குறித்து கணவர் மணிகண்டன் நர்சுகளிடம் கேட்டார். வலியால் துடிக்கும் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதை விட்டுவிட்டு மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நர்சுகள் பாரதியை அவசர அவசரமாக அழைத்து குளுக்கோஸ் ஏற்ற வேண்டும் என கையில் முறையாக ஊசியை ஏற்றாமல் ஏனோதானோவென ஊசியை குத்தியதால் வலி தாங்க முடியாமல் கதறி உள்ளார்.

    பின்னரும் சிகிச்சை அளிக்காமல் தரையிலேயே அமர வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த மணிகண்டன் நர்சுகளிடம் வாக்குவாதம் செய்துவிட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு மனைவியை சிகிச்சைக்காக அழைத்து சென்றார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியை அலைக்கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஊத்துக்கோட்டையில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை திடீரென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • மக்களோடு கலந்துரையாடி கோரிக்கைகளை கலெக்டர் கேட்டு அறிந்தார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையில் புதிதாக தார் சாலைகள் மழை நீர் கால்வாய், கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மழை நீர் பாயாத நிலையில் உள்ள தாழ்வான பகுதிகளில் சாலை அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஊத்துக்கோட்டையில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை திடீரென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதியில் மக்களோடு கலந்துரையாடி கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் லதா, உதவி செயற்பொறியாளர் சரவணன், ஊத்துக்கோட்டை பேரூராட்சித் தலைவர் அப்துல் ரஷீத், துணைத் தலைவர் குமரவேல், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அபிராமி, பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ், இளநிலை பொறியாளர் சிவக்குமார், வார்டு கவுன்சிலர்கள் கோல்ட் மனி, பார்த்திபன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னேரி கோட்டத் தலைவர் அருள்நாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மதன் கலந்து கொண்டு கண்டன விளக்க உரையாற்றினார்.

    பொன்னேரி:

    பொன்னேரி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சென்னை வடக்கு கிளை சி.ஐ.டி.யு. சார்பில் தமிழ்நாடு மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் இ-டெண்டர் முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னேரி கோட்டத் தலைவர் அருள்நாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மதன் கலந்து கொண்டு கண்டன விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பெங்களூர் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் 700-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
    • சதி திட்டத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    திருத்தணி:

    பீகார் மாநிலம் பகல்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரேனிகுண்டா, திருத்தணி வழியாக பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் திருத்தணி அருகே உள்ள பொன்பாடி ரெயில் நிலையத்தை கடந்து சென்றது நேற்று நள்ளிரவு 2 மணி யளவில் பொன்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ரெயில் சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தில் 10 கிலோ எடை கொண்ட சிமெண்டு கற்கள் 2 இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. ரெயில் டிரைவர் அதனை பார்த்து துரிதமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தினார்.

    பின்னர் ரெயிலில் இருந்து கீழே இறங்கி தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த 2 கற்களையும் செல்போனில் வீடியோ எடுத்துவிட்டு அகற்றினார். பின்னர் வீடியோவை ரெயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பி தகவல் தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து அரக்கோணம் ரெயில்வே போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப் போது எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதி திட்டம் தீட்டியிருப்பது தெரிய வந்தது. அவர்கள் யார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தண்ட வாளத்தில் வைக்கப்பட்டு இருந்த சிமெண்டு கற்கள் ரெயில்வே பணிக்கு பயன்படுத்தக் கூடியவை என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    அதே பகுதியை சேர்ந்த நபர்கள் தண்டவாளத்தில் நாச வேலையில் ஈடுபடும் வகையில் கற்களை வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சதி திட்டத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    பெங்களூர் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் 700-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். டிரைவரின் சாமர்த்தியத்தால் ரெயில் கவிழ்வதில் இருந்து தப்பி உள்ளது. பயணிகள் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர். இதையடுத்து ரெயில் டிரைவரை பாராட்டியுள்ள அதிகாரிகள் அவரை கவுரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

    • நிலத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி பயன்படுத்தி வந்தனர்.
    • தற்போது ரூ.100 கோடி மதிப்புள்ள 1.01 ஏக்கர் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

    பூந்தமல்லி:

    தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மீட்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவில் சொத்துக்கள் கண்டறியப்பட்டு நீதிமன்ற வழிகாட்டுதல்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

    பூந்தமல்லியை அடுத்த வரதராஜபுரம் ஊராட்சியில் சித்திபுத்தி விநாயகர் திருக்கோவிலுக்கு சொந்தமான 1.01 ஏக்கர் நிலம் பூந்தமல்லி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. இந்த நிலத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி பயன்படுத்தி வந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த இந்து சமய அறநிலையத்துறை, ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை கையகப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் ஜெயா தலைமையில் செயல் அலுவலர் மாதவன், பூந்தமல்லி தாசில்தார் மாலினி மேற்பார்வையில் கோவில் ஊழியர்கள், வருவாய் துறையினர் அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர்.

    தற்போது ரூ.100 கோடி மதிப்புள்ள 1.01 ஏக்கர் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது, அத்துமீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் கட்டிடத்திற்கு செல்லும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மேலும் அசம்பாவிதம் நிகழாமல் தடுப்பதற்காக நசரத்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • 1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் உயிரிழந்தனர்.
    • வீரமரணம் அடைந்தவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர்.

    திருவள்ளூர்:

    ஆண்டு தோறும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. 1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் உயிரிழந்தனர்.

    அதே போல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியின் போது உயிர் நீத்த 188 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அஞ்சலியின் போது நினைவுத் தூணுக்கு ஆயுதப்படை துணைப் போலீஸ் சூப்பிரண்டு குமரன், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து 63 குண்டுகள் முழங்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். வீரமரணம் அடைந்தவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர்.

    இந்நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஓய்வு பெற்ற போலீசார், ஆயுதப்படை போலீசார் கலந்து கொண்டனர்.

    • தாய்மார்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் உட்பட மகளிர் சம்பந்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் நிறுத்தி வருகிறார்கள்.
    • வரும் பாராளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் எடப்பாடியார் வேட்பாளராக யாரை கை காண்பிக்கிறாரோ அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    அம்பத்தூர்:

    திருவள்ளூர் தெற்கு மாவட்டம் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. 52- ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் அம்பத்தூர் தெற்கு பகுதி செயலாளர் சி.வி. மணி தலைமையில் மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் முன்னிலையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் அமைப்பு செயலாளருமான கோகுல இந்திரா கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசியதாவது:- தி.மு.க. சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடத்துகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கிய மகளிர்க்கு தாலிக்கு தங்கம், மகப்பேறு நிதி உதவி, மகப்பேறு குழந்தை நலப் பெட்டகம், பணிக்கு செல்லும் தாய்மார்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் உட்பட மகளிர் சம்பந்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் நிறுத்தி வருகிறார்கள். இந்த நிலைமாறி முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வழங்கிய திட்டங்கள் அனைத்தும் மீண்டும் தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் எடப்பாடியார் வேட்பாளராக யாரை கை காண்பிக்கிறாரோ அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மருத்துவ அணி செயலாளர் ராமசாமி, மாவட்ட அவை தலைவர் திண்டு உத்தமராஜ், பொருளாளர் வி.கே.ரவி, மாவட்ட துணை செயலாளர் முகப்பேர் பாலன், பகுதி செயலாளர்கள் கே.பி.முகுந்தன், ஜெ.ஜான், தலைமை கழக பேச்சாளர் வடுகப்பட்டி சுந்தர்ராஜன் இந்திராணி, மீனா பாண்டியன், எல்.என்.சரவணன், வக்கீல் அறிவரசன், பாஸ்கர், பத்மநாபன், வழக்கறிஞர் சுருளி ராஜன், வி.பார்த்த சாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட செயலாளர்கள் எல்.கே.மீரான், என்.சேகர் ஆகியோர் நன்றி கூறினர்.

    • மின்கம்பி அறுந்து விழுந்த போது அவ்வழியே பொதுமக்கள் யாரும் செல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை.
    • உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர், மார்க்கெட் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காய்கறி, மளிகை, பூ கடைகள் உள்ளன. இந்த பஜார் பகுதிக்கு திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். மேலும் பஜார் பகுதியை சுற்றி அரசு பள்ளி, தனியார் பள்ளி, திருமண மண்டபங்கள், கோவில்கள் உள்ளன.

    இதனால் இந்த சாலையில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இருக்கும். இந்நிலையில் இன்று காலை ஆஞ்சநேயர் கோவில் அருகே மார்க்கெட் கூட்டுச்சாலையில் திடீரென உயர் மின் அழுத்த மின்கம்பி அறுந்து சாலையில் விழுந்தது.

    மேலும் மின்கம்பிகள் உரசி தீப்பொறிகள் பறந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மின்கம்பி அறுந்து விழுந்த போது அவ்வழியே பொதுமக்கள் யாரும் செல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

    இதுபற்றி உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    ×