என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • வெள்ளையம்மாள் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    பூந்தமல்லி அடுத்த திருமழிசை பிரியம்பத்து பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஸ்ரீபிரியா (43). இவர்கள் திருமழிசை, ஜவகர் தெருவில் மளிகை கடை நடத்தி வருகின்றனர்.

    நேற்று மாலை ஸ்ரீபிரியா கடையில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் சிகரெட் வாங்குவது போல் ஸ்ரீ பிரியாவிடம் பேச்சு கொடுத்தனர்.

    திடீரென அவர்கள் ஸ்ரீபிரியா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறிக்க முயன்றனர். இதில் நகை அறுந்ததில் 7 பவுன் நகையுடன் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து வெள்ளவேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா கா ட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமழிசை பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (63). இவர் வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த மர்ம வாலிபர்கள் வெள்ளையம்மாள் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இந்த 2 சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே நபர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விபத்தில் பலத்த காயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ஓதிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது53). சென்னை மாங்காட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று மாலை பணி முடித்து வழக்கம் போல் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    திருவள்ளூர் வந்த அவர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு ஓதிக்காடு நோக்கி சென்று கொண்டு இருந்தார். திருவள்ளூரில் உள்ள தேவாலயம் அருகே சென்றபோது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். திருவள்ளூர் டவுன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடையில் இருப்புகளை சரிபார்க்கும்போது வெளியில் உள்ள சில பொருட்கள் மட்டும் இல்லாமல் இருந்தது.
    • வாலிபர் நேற்று இரவு மீண்டும் மருந்து கடைக்கு வந்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர், ஜெ.என்.சாலையில் பிரபல மருந்து கடை உள்ளது.

    இந்த கடையில் 8 பேர் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாகவே கடையில் இருந்த பொருட்கள் விற்பனை ஆகாமல் தொடர்ந்து மாயமாகி வந்தன. இதனால் ஊழியர்கள் தங்களது பணத்தில் இருந்து இழப்பை சரி கட்டி வந்தனர்.

    கடையில் இருப்புகளை சரிபார்க்கும்போது வெளியில் உள்ள சில பொருட்கள் மட்டும் இல்லாமல் இருந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது மருந்து வாங்க வந்த வாலிபர் ஒருவர் ஊழியர்கள் கவனிக்காத நேரத்தில் கீழே குனிந்து வெளியில் உள்ள பொருட்களை பையில் எடுத்து வைத்து விட்டு பின்னர் தான் வாங்கிய மருந்து பொருட்களுக்கு மட்டும் பணம் கொடுத்து செல்வது பதிவாகி இருந்தது.

    அதே வாலிபர் நேற்று இரவு மீண்டும் மருந்து கடைக்கு வந்தார். அவரை கடை ஊழியர்கள் மடக்கி பிடித்து திருவள்ளூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். அந்த வாலிபர் மருந்து கடையில் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வளிமண்டல மேலடுக்கு சூழற்சி காரணமாக பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை கொட்டியதால் ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது.
    • ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் கடந்த மாதம் 25-ந் தேதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை திறந்து விடப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா குடிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு தமிழகத்துக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம். சி. ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.

    கடந்த ஜனவரி மாதம் ஏரியில் போதுமான நீர் இருப்பு இருந்ததால் கிருஷ்ணா நீர் பெறவில்லை. அதன் பின்னர் கோடை வெயில் காரணமாக ஏரியின் நீர்மட்டம் குறைந்ததால் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடக்கோரி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசை கேட்டுக் கொண்டனர். அதன் பேரில் கடந்த மே 1-ந் தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் 3-ந் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.

    இதற்கிடையே வளிமண்டல மேலடுக்கு சூழற்சி காரணமாக பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை கொட்டியதால் ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் கடந்த மாதம் 25-ந் தேதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை திறந்து விடப்பட்டது.

    இப்படி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை நிறுத்தும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசை கேட்டுக் கொண்டனர். அதன்படி கடந்த 6-ந் தேதி பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    மே 3-ந் தேதியில் இருந்து கடந்த 6-ந் தேதி வரை கண்டவேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 3.569 டி.எம்.சி. தண்ணீர் வந்தடைந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் தற்போது மழை இல்லாத காரணத்தால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்து போனது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 90 கன அடி மட்டுமே தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும் இதில் 3.231 தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 31.44 அடி ஆக பதிவானது. 2.0 92 டி.எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 300 கனஅடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதேபோல் சென்னை குடிநீர் தேவைக்காக பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 40 கன அடி தண்ணீர், மதகு வழியாக 70 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • சிகிச்சை பலனின்றி பிரதாப் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருேக உள்ள மோவூர், காலனி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் பிரதாப் (வயது30). தொழிலாளி.

    அதேபகுதியை சேர்ந்த பிரதாப்பின் நண்பர் ஒருவர் புதிதாக வீடு கட்டி உள்ளார். இதற்கு குடிநீர் இணைப்பு கொடுப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் பிரதாப் ஈடுபட்டார். அப்போது அருகில் இருந்த ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் அருகே பள்ளம் தோண்டினார். இதில் அந்த சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து பிரதாப் மீது விழுந்தது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பிரதாப் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பென்னாலூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் ரகுபதிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தலையில் 5 தையல் போடப்பட்டு உள்ளது.
    • சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் சாலையில் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள். இங்கு நேற்று இரவு ஆயுதபூஜை விழா நடைபெற்றது. அப்போது சில வடமாநில தொழிலாளர்கள் மது போதையில் ரகளையில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்நிலைய போலீஸ்காரர் ரகுபதி சென்று அவர்களை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் போலீஸ்காரர் ரகுபதியை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தலையில் 5 தையல் போடப்பட்டு உள்ளது.

    மேலும் இது பற்றி விசாரிக்க வந்த மேலும் 5 போலீசாரையும் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கிருந்து திரும்பி சென்று விட்டனர். இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • எடப்பாடி பழனிசாமி அறிவித்த அறிவிப்புகளை, பாக பொறுப்பாளர்களுக்கு எடுத்து கூறினார்.
    • மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் பலர் ஆலோசனை கலந்து கொண்டனர்.

    அம்பத்தூர்:

    திருவள்ளூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்பத்தூர் தொகுதியில் பாகப் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான ஐ.எஸ்.இன்பதுரை கலந்துகொண்டு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த அறிவிப்புகளை, பாக பொறுப்பாளர்களுக்கு எடுத்து கூறினார்.

    கூட்டத்தில் ஐ.எஸ்.இன்பதுரை பேசுகையில், அ.தி.மு.க.வின் நேர்மையான, உண்மையான, உணர்ச்சிமிக்க, தொண்டர்கள் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்றி விரைவில் கோட்டை கொத்தளத்தில் எடப்பாடியார் கொடியேற்ற அனைவரும் ஒற்றுமையாக களப்பணி ஆற்ற வேண்டும். எம். ஜி. ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் மக்களாட்சியை எடப்பாடியார் தலைமையில் அமைக்க பாடுபட வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் திண்டு உத்தமராஜ், துணை செயலாளர் முகப்பேர் பாலன், பொருளாளர் வி.கே.ரவி, இணை செயலாளர் தேவகி, இந்திராணி, பொதுக்குழு உறுப்பினர் மீனாபாண்டியன் , பகுதி செயலாளர்கள் கே.பி.முகுந்தன், ஜெ.ஜான், சி.வி.மணி, கிருஷ்ணன் , எல்.என்.சரவணன், வழக்கறிஞர் டி.அறிவரசன், எஸ்.பிரபாகரன், பத்மநாபன், பாஸ்கர், ஜான்பீட்டர், வழக்கறிஞர்கள் எம்.பி.சுருளிராஜன், வி.பார்த்த சாரதி, துரைநாகராஜ், வட்ட செயலாளர் மணிகண்டன் உட்பட மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டனர்.
    • சடலமாக மீட்கப்பட்டவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த நாலூர் ஏரியில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டனர். சடலமாக மீட்கப்பட்டவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.

    அவரது தலையில் தொழிற்சாலையில் பணியின் போது பாதுகாப்புக்கு அணியும் ஹெல்மெட் இருந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. அவர் வடமாநில தொழிலாளியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரை யாரேனும் அடித்து கொலை செய்து வீசினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • வாலிபரின் இறப்புக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடம்பத்தூர்:

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவந்த் டோமனிக்(வயது28). தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.

    இவர் இரவு கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் பகுதிக்கு வந்தார். திடீரென அவர் அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரெயில் முன்பு பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ரேவந்த் டோமனிக்கின் இறப்புக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நேற்று இரவு ஜார்ஜ் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
    • அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஜார்ஜை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருநின்றவூர்:

    திருமுல்லைவாயலில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜார்ஜ்(வயது29). இவர், ஆவடியில் உள்ள 5-வது பட்டாலியனில் ஆயதப்படை போலீஸ்காரராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி பிரணா. இவர்களுக்கு 4 வயதில் தன்வி என்ற பெண் குழந்தை உள்ளது.

    நேற்று இரவு ஜார்ஜ் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் வெளியே செல்ல வேண்டும் என்று மனைவியிடம் கூறி உள்ளார். இதனை மனைவி பிரணா கண்டித்து வெளியே செல்ல அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    பின்னர் ஜார்ஜ் படுக்கை அறைக்கு சென்றுவிட்டார். நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த மனைவி பிரணா சென்று பார்த்தபோது கணவர் ஜார்ஜ் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஜார்ஜை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜார்ஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பணிமனையில் இருந்து ஆவடி ரெயில் நிலையம் வந்த புறநகர் ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டது.
    • இதனால் அரக்கோணம்-சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லக்கூடிய ரெயில்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    ஆவடி:

    ஆவடி அருகே உள்ள அன்னனூர் பணிமனையில் இருந்து ஆவடி ரெயில் நிலையத்துக்கு வந்து அங்கிருந்தே மின்சார ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    இதன்படி இன்று காலை 6 மணியளவில் அன்னனூர் பணிமனையில் இருந்து ஆவடி நோக்கி மின்சார ரெயில் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் ஆவடி ரெயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை கடற்கரை நோக்கிச் செல்லவேண்டும். ஆனால் ரெயில் நிலையத்தில் நிற்காமல் கட்டுப்பாட்டை இழந்து ரெயில் நிலையத்தை தாண்டி இந்து கல்லூரி ரெயில் நிலையத்தை நோக்கிச் சென்றது.

    சிறிது தூரம் சென்ற நிலையில் ரெயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு கீழே இறங்கி நின்றது. 4 பெட்டிகள் தடம் புரண்டு காணப்பட்டன. ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரெயிலை ஓட்டிச் சென்ற டிரைவர் ரவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் ரெயில் தடம் புரண்டிருப்பது தெரியவந்தது.

    ரெயில் தடம் புரண்டது பற்றி கேள்விப்பட்டதும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். கோட்ட மேலாளர் வினோத், ஊழியர்களுடன் சென்று தடம் புரண்ட மின்சார ரெயிலை தண்டவாளத்தில் ஏற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். இதன் காரணமாக திருவள்ளூரில் இருந்து கடற்கரை நோக்கிச் செல்லும் மின்சார ரெயில்கள் தாமதமாக சென்று கொண்டிருக்கின்றன.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருப்பதி, கோவை, பெங்களூர் செல்லும் ரெயில்களும் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கும், 9.50 மணிக்கும் என 2 ரெயில்கள் திருப்பதிக்கு புறப்பட்டுச் செல்லும். இந்த ரெயில்களில் 7 மணிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய திருப்பதி ரெயில் ரத்து செய்யப்பட்டது. விடுமுறை தினமான இன்று திருப்பதி செல்வதற்காக ஏராளமான பயணிகள் வந்திருந்தனர். ரெயில் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் அவதிக்குள்ளானார்கள்.

    9.50 மணிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய திருப்பதி ரெயில் ஒரு மணி நேரத்தைக் கடந்தும் புறப்படவில்லை. அந்த ரெயில் எப்போது செல்லும் என்கிற அறிவிப்பும் வெளியாகவில்லை. இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது ஆவடியில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் 9.50 மணிக்கு செல்ல வேண்டிய ரெயிலை தாமதமாக இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    இதேபோன்று, திருவள்ளூர் பகுதியில் இருந்து சென்ட்ரலுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்களும் தாமதமாக புறப்பட்டு மாற்று பாதை வழியாக வந்தன. இந்த ரெயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக சென்ட்ரல் வரையில் இயக்கப்படவில்லை.

    ரெயில் நிலையத்துக்கு ஒரு கிலோமீட்டர் முன்பே ரெயில்கள் நிறுத்தப்பட்டு விடுகின்றன. இதனால் அங்கிருந்து இறங்கி பயணிகள் தண்டவாளத்தின் வழியே நடந்தே சென்ட்ரல் ரெயில் நிலையத்தை அடைந்தனர்.

    இதுபோன்று நிறுத்தப்பட்ட ரெயில்கள் சுமார் ஒரு மணி நேர காத்திருப்புக்கு பிறகே சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தை வந்து சேர முடிந்தது. இதன் காரணமாக இன்று காலையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு ஆவடி வழியாக புறப்பட்டு வந்த ரெயில் பயணிகள் கடும் பாதிப்பை சந்தித்தனர்.

    இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, தடம் புரண்ட மின்சார ரெயிலை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் வழக்கம்போல ஆவடி வழியாக அனைத்து ரெயில்களும் இயக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

    • கொள்ளை வழக்கில் ஜாமினில் வெளிவந்த காந்திமதி திருச்சி ஜீயர் நகர் பகுதியில் கொலை வழக்கு ஒன்றில் சிக்கினார்.
    • ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் காந்திமதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

    செங்குன்றம்:

    சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி என்கிற காந்திமதி. 65 வயதான இவர் வேளச்சேரியில் லட்சுமி தேவி என்பவரின் வீட்டில் வேலை செய்து வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு லட்சுமியை கட்டிப்போட்டு விட்டு 14 பவுன் நகை மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த வழக்கில் கைதான காந்திமதி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    பின்னர் இந்த வழக்கில் ஜாமினில் வெளிவந்த அவர் திருச்சி ஜீயர் நகர் பகுதியில் கொலை வழக்கு ஒன்றில் சிக்கினார். மூதாட்டி ஒருவரை கொன்று நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட காந்திமதி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் இலவச சட்ட உதவி மூலமாக காந்திமதிக்கு ஜாமின் கிடைத்தது. ஆனால் அவரை அழைத்துச் செல்வதற்கு உறவினர்கள் யாரும் புழல் சிறைக்கு செல்லவில்லை. இதனால் மனமுடைந்த காந்திமதி புழல் சிறை கழிவறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் காந்திமதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

    ×