search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை-திருப்பதி சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி
    X

    சென்னை-திருப்பதி சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி

    • ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் குப்பையுடன் வந்த டிராக்டர்களை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
    • மழைவெள்ளத்தில் குப்பைகள் அடித்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள நிலங்களில் சேர்ந்ததால் அந்த இடமும் பாழாகும் அபாயம் உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ள வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சிக்கு உட்பட்ட சுற்று வட்டார பகுதிகளில் சேறும் குப்பைகளை துப்புரவுப் பணியாளர்கள் மணவாளன் நகர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் கொட்டிவந்தனர்.

    ஆனால் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அந்த இடத்தில் குப்பைகளை கொட்டுவது நிறுத்தப்பட்டு பின்னர் வெங்கத்தூர், கன்னிமாநகர் பகுதியில் பள்ளி அங்கன்வாடி குடியிருப்புகள் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டது.

    இதில் தினம்தோறும் 5 டன் குப்பைகள் கொட்டப்படுவதால் அந்த பகுதியில் மலை போல் சேர்ந்து துர்நாற்றம் வீசியது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் குப்பையுடன் வந்த டிராக்டர்களை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சியில் சேரும் குப்பைகளை தற்போது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தடுப்புகள் அமைத்து கொட்டப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஏராளமான டிராக்டர்கள் மூலம் கொட்டப்படும் கழிவுகள் சாலையோரம் குவிந்து வருவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனம் மற்றும் பொது மக்கள் சென்று வரும் நிலையில் குப்பை கழிவுகளால் தொற்றும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    கழிவுகளில் பிளாஸ்டிக், தெர்மாகோல், மெத்தை, முட்டை கழிவுகள், இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுவதால் கால் நடைகள், நாய்கள் அதனை இழுத்து சாலையில் போட்டு சென்று விடுகின்றன. தற்போது மழை பெய்து வரும் நிலையில் குப்பை கழிவுகளில் தண்ணீர் தேங்கி கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மழைவெள்ளத்தில் குப்பைகள் அடித்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள நிலங்களில் சேர்ந்ததால் அந்த இடமும் பாழாகும் அபாயம் உள்ளது.

    எனவே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×