என் மலர்
திருவள்ளூர்
- மூட்டை, மூட்டையாக மருத்துவ கழிவுகள் அங்கு குவிந்து காணப்படுகிறது.
- கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினம் தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த ஆஸ்பத்திரியில் மகப்பேறுக்கு மட்டும் தனி கட்டிடம் ஒதுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்தக் கட்டிடத்திற்கு பின்புறம், மருத்துவனை முழுவதும் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் மூட்டை, மூட்டையாக மருத்துவ கழிவுகள் அங்கு குவிந்து காணப்படுகிறது.
குறிப்பாக அறுவை சிகிச்சை செய்யும் கழிவுகள், மற்றும் அவசர சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருத்துவ பாதுகாப்பு கவச கழிவுகள் உள்ளிட்டவற்றை பணியாளர்கள் ஆங்காங்கே கொட்டுவதால் மருத்துவமனை முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. திருவள்ளூர் நகரத்தின் மையப் பகுதியில் உள்ள இந்த ஆஸ்பத்திரியில் மருத்துவ கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- மழைநீர் அத்திப்பட்டு புதுநகர் வழியாக சென்று கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.
- நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக அளவீடு செய்து அமைக்க வேண்டும்.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. வல்லூர் கொண்டக் கரை குருவி மேடு கவுண்டர் பாளையம், வெள்ளி வாயில் சாவடி, உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து வெளிவரும் மழைநீர் அத்திப்பட்டு புதுநகர் வழியாக சென்று கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் அத்திப்பட்டு புது நகர் தாழ்வான பகுதி என்பதால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து பொது மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்த நிலையில் அங்குள்ள தாங்கல் நீர்நிலை இடத்தில் கன மழையால் வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் இருக்க பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் வல்லூர் தேசிய அனல் மின் நிலைய சமூக மேம்பாட்டு நிதி 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்புச் சுவர் அமைக்கப்படுகிறது. இந்த தடுப்பு சுவர் 50 அடி அகலத்திற்கு மட்டுமே 400 மீட்டர் தூரம் அமைக்கப்படுவதால் 100 அடி அகலத்திற்கு முழுவதுமாக தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக அளவீடு செய்து அமைக்க வேண்டும். தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கட்டுமான பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்
இதனால் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளாமல் ஒப்பந்ததாரர்கள் நிறுத்தி விட்டுச் சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பட்டாபிராம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி:
பட்டாபிராம் கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் மூர்த்தி இவரது மகன் கமலேஷ், 21. இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இன்று காலை 8.30 மணி அளவில் கமலேஷ் வழக்கம் போல் தனது மோட்டார் சைக்கிளில் பட்டாபிராம் ரெயில்வே மேம்பாலம் வழியாக வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, வளைவில் அதிவேகமாக வந்த போது, திடீரென்று நிலை தடுமாறி ரெயில்வே மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி நிலை தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடிச் சென்று அவரை மீட்டு போரூர் ராமச்சந்திரா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் கமலேஷ் வழியிலே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து பட்டாபிராம் போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹெல்மட் அணியாததும், அதிவேகமாக சென்றதுமே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
- ஒரு லட்சம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வழங்கக்கூடிய மிகப் பெரிய ஆமூர் ஏரி உள்ளது.
- ஏரியில் இருந்து விவசாயத்திற்கும் குடிநீருக்காகவும் பொது மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த ஆமூரில் சுமார் ஒரு லட்சம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வழங்கக்கூடிய மிகப் பெரிய ஆமூர் ஏரி உள்ளது.
இந்த ஏரியில் இருந்து விவசாயத்திற்கும் குடிநீருக்காகவும் பொது மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஆமூர் ஏரி ஒட்டிய பகுதியில் காட்டுப் பள்ளி துறைமுகத்தில் இருந்து சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வரை 400 அடி சாலை போடப்பட்டு வருகிறது.
இதற்காக இப்பகுதியில் உள்ள கோரைகளில் மண் எடுக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் அரசு கூறி உள்ள மூன்று அடி என்னும் அளவைவிட சுமார் 20 அடிக்கும் மேலாக கோரை மண் மற்றும் மணல் அள்ளப்படுவதால் ஏரியின் நீர் இருப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் விவசாயிகளுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி பொதுமக்கள் கோரையை முற்றுகையிட்டு லாரிகளை மடக்கி நிறுத்தினர்.
சம்பவ இடத்திற்கு பொன்னேரி காவல்துறையினர் விரைந்து சென்று பொது மக்களுடன் சமாதானம் பேசி கோரை உரிமையாளர்களிடம் அரசு நிர்ணயித்த அளவைவிட பள்ளம் எடுக்கக் கூடாது என அறிவுறுத்தியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- கடந்த 12-ந் தேதி சண்டையில் கோபித்துக்கொண்டு ரிஸ்வானா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
- திருவள்ளூர் போலீசார் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் முகமது அலி தெருவைச் சேர்ந்தவர் ஷாயின்ஷா (29). இவருக்கு திருமணமாகி ரிஸ்வானா என்ற மனைவி ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளது.
கடந்த 12-ந் தேதி சண்டையில் கோபித்துக்கொண்டு ரிஸ்வானா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அழைத்தும் அவர் வராததால் விரக்தி அடைந்த ஷாயின்ஷா புடவையால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் டவுன் போலீசார் தந்தை அமீத்பாஷா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீரராகவர் பெருமாள் கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் எழுந்தருளினார்.
- வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு அமாவாசை தினங்களில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்க ளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் ஆனி அமாவாசையான இன்று சாமி தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்றிரவு முதலே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். அவர்கள் கோவில் சுற்றுப்புற பகுதியில் தங்கி இன்று அதிகாலை முதலே பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்துவிட்டு மூலவர் வீரராகவர் பெருமாளை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்ய திரண்டனர்.
மேலும் உற்சவர் வீரராகவர் பெருமாள் கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் எழுந்தருளினார்.
வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று மாலை 6 மணியளவில் உற்சவர் வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி, மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதே போல் நாளை மற்றும் நாளை மறுநாளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
- விபத்தில் பலத்த காயம் அடைந்த 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த வலசைவெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் துளசி (58). இவர் நேற்று மதியம் போளிவாக்கள் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக திருவள்ளூரிலிருந்து ஸ்ரீபெரும்புதுார் நோக்கி வந்த காரும் எதிரே திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் சாலையோரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த துளசி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் துளசி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இருசக்கர வாகனத்தில் வந்த கம்மவார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி (48) சதானந்தம் (35) இருவரும் பலத்த காயம் ஏற்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- ஆத்துமேடு பகுதிக்கு மின் வயர் செல்லும் மின் கம்பம் ஒன்று உடைந்து விழுந்தது.
- முனீஸ்வரன் கோவில் டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆத்துமேடு செல்லும் மின் சப்ளை கடந்த சில நாட்களாக தடைபட்டுள்ளது.
பெரியபாளையம்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இருப்பினும், ஒரு சில இடங்களில் மாலை நேரங்களில் மேகமூட்டம் ஏற்பட்டு பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இதனால் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட்டும், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டும் பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவற்றையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடைவடிக்கை எடுத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் திருவள்ளூரின் மையப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோவிலின் வேப்பமரம் வேரோடு சாய்ந்தது. அதனை பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் அதே இடத்தில் கிரேன் மூலம் நட்டு வைத்தனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் மாளந்தூர் ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்பொழுது முனீஸ்வரன் கோவில் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆத்துமேடு பகுதிக்கு மின் வயர் செல்லும் மின் கம்பம் ஒன்று உடைந்து விழுந்தது. அப்பொழுது மின் தடை ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக பாதிப்பு ஏற்படவில்லை. இந்நிலையில், ஊத்துக்கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் ஆத்துமேடு பகுதிக்கு செல்லும் மின் வயர்களை துண்டித்து விட்டு மின்சார சப்ளை செய்து விட்டு சென்றனர்.
இதனால் முனீஸ்வரன் கோவில் டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆத்துமேடு செல்லும் மின் சப்ளை கடந்த சில நாட்களாக தடைபட்டுள்ளது. இதனால் பத்துக்கு மேற்பட்ட விவசாயிகளின் மின் மோட்டார்கள் இயக்க முடியாத அவல நிலை நீடித்து வருகிறது.
தற்போது குருவை சாகுபடிக்கு நாற்றங்கால் காப்பாற்ற தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு மின் கம்பத்தை மாற்றி மின் சப்ளை செய்ய கிராம மக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என மின்வாரிய துறையின் வாட்ஸ் அப் எண்ணில் விவசாயிகள் புகார் மனு அனுப்பியும் எந்த பயனும் இல்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
- சிகிச்சை பலனின்றி எல்லம்மாள் பரிதாபமாக இறந்தார்.
- மூதாட்டி பலி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீஞ்சூர் அண்ணா தெரு, காலனி பகுதியை சேர்ந்தவர் எல்லம்மாள் (வயது85). இவர் வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை தெரியாமல் சாப்பிட்டுவிட்டார்.
இதில் மயங்கிய அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி எல்லம்மாள் பரிதாபமாக இறந்தார்.
- இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி ரவுடி ‘ஸ்நேக்’ பாபுவை கைது செய்தனர்.
- குற்றச்செயல்களில் ஈடுபடும் இடங்களில் பாபு சிக்காமல் பாம்புபோல் வேகமாக தப்பி செல்வதால் அவரை நண்பர்கள் ஸ்நேக்பாபு என்று அழைத்து வந்து உள்ளனர்.
அம்பத்தூர்:
சோழவரம் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இவர் பள்ளிக்கு சென்று வரும்போது வழுதிகை மேடு, ஞாயிறு கிராமம் பகுதியை சேர்ந்த ரவுடியான பாபு என்கிற ஸ்நேக்பாபு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார்.
சம்பவத்தன்று மாணவி பள்ளிக்கு சென்று வந்தபோது ரவுடி ஸ்நேக்பாபு வழிமறித்து மிரட்டினார். மேலும் மாணவியை தனது மோட்டார் சைக்கிளிலில் அமர வைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்து மாணவியின் தாய் அம்பத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி ரவுடி 'ஸ்நேக்' பாபுவை கைது செய்தனர். அவர் மீது சோழவரம் போலீஸ் நிலையத்தில் 7 வழக்குகள் உள்ளன.
குற்றச்செயல்களில் ஈடுபடும் இடங்களில் பாபு சிக்காமல் பாம்புபோல் வேகமாக தப்பி செல்வதால் அவரை நண்பர்கள் ஸ்நேக்பாபு என்று அழைத்து வந்து உள்ளனர். தற்போது ஸ்நேக்பாபு போலீ சாரின் பிடியில் சிக்கி உள்ளார்.
- ஆந்திர விவசாயிகள் சாகுபடிக்கு கிருஷ்ணா நீரை எடுப்பது வழக்கம்.
- பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 160 கன அடி தண்ணீர் வந்து சேர்ந்தது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மாதம் 4-ந் தேதியில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அதிகபட்சமாக வினாடிக்கு 310 கன அடி தண்ணீர் வந்து சேர்ந்தது.
ஆந்திர விவசாயிகள் சாகுபடிக்கு கிருஷ்ணா நீரை எடுப்பது வழக்கம். அவர்கள் அதிகமாக தண்ணீர் எடுக்கும்போது பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து குறையும்.
சமீபத்தில் அதிகப்படியான கிருஷ்ணா தண்ணீர் எடுத்ததால் நீர்வரத்து குறைந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கோடை மழையால் விவசாயிகள் தண்ணீர் எடுக்கவில்லை.
இதனால் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 160 கன அடி தண்ணீர் வந்து சேர்ந்தது. தற்போது விவசாயிகள் மீண்டும் தண்ணீர் எடுத்து வருவதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. இன்று காலை வினாடிக்கு 110 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி. எம். சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 27. 63 அடியாக பதிவானது. 1.252 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கன அடி வீதம் பேபி கால்வாயில் வெளியேற்றப்படுகிறது.
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 45 நாட்களில் இதுவரை 1½ டி.எம்.சி. தண்ணீர் வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
- சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தூண்டில் மற்றும் வலைவீசியும் மீன் பிடித்து வருகின்றனர்.
- கொசஸ்தலை ஆற்றில் காணப்படும் மீன்கள் நன்கு வளர்ச்சியடைந்து 5 கிலோவுக்கும் மேல் சிக்குகிறது.
பொன்னேரி:
தமிழகத்தில் இன்னும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. பல இடங்களில் 105 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. பருவமழையின் போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் பாய்ந்தது. தற்போது கோடைகாலம் என்பதால் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்து உள்ளது.
இந்த நிலையில் மீஞ்சூரை அடுத்த நாப்பாளையம் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர்குறைந்து காணப்படுவதால் மீன்பிடித் தொழில் அதிகமாக நடைபெறுகிறது. ஏராளமான மீனவர்கள் வலை வீசி மீன்பிடித்து வருகிறார்கள். மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தூண்டில் மற்றும் வலைவீசியும் மீன் பிடித்து வருகின்றனர்.
மீனவர்களின் வலையில் ஜிலேபி, சொட்டைவாளை, கெழுத்தி கெண்டை, விரால், இறால் உள்ளிட்ட மீன்கள் அதிக எடையுடன் கிடைத்து வருகிறது. சுமார் ஒரு கிலோ முதல் 5 கிலோ வரை மீன்கள் சிக்குவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இவை கிலோ ரூ.500 வரை விற்கப்படுகிறது.
சாதாரண வகை மீன்கள் கிலோ ரூ.200 முதல் ரூ.300-க்கும், விரால் மீன் கிலோ ரூ.500-க்கும், நன்னீர் இறால் ரூ. 800 முதல் ரூ.1000 வரையும் விற்பனை ஆகிறது. ஆற்றுமீனை ஏராளமனோர் போட்டிபோட்டு வாங்கி செல்கிறார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் கொசஸ்தலை ஆற்றின் கரையில் மீன்வியபாரம் களை கட்டி வருகிறது.
இதுகுறித்து மதூர் கிராமத்தைச் சேர்ந்த மீன்வியாபாரி புலிமணி கூறும்போது, நான் கடந்த 10 வருடத்திற்கு மேலாக ஆறு, ஏரி குளங்களில் மீன் பிடித்து வருகிறேன். தற்போது கொசஸ்தலை ஆறு, நாப்பாளையம், சிம்மாவரம், காரனோடை, பகுதிகளில் வலை போட்டு மீன் பிடிக்கிறேன். கொசஸ்தலை ஆற்றில் காணப்படும் மீன்கள் நன்கு வளர்ச்சியடைந்து 5 கிலோவுக்கும் மேல் சிக்குகிறது. விரால் மற்றும் இறால், மீனுக்கென்று தனி மவுசு உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் மீன் விற்பனை ஆகிறது. ஏராளமானோர் ஆற்று மீன்களை விரும்பி சாப்பிடுகிறார்கள் என்றார்.






