என் மலர்
திருப்பூர்
- மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- நிர்வாகிகள் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து வர வேண்டும்.
திருப்பூர்:
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் அடுத்த மாதம் (அக்டோபர்)27-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிர வாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்த உள்ளார். மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் மாநாட்டில் பங்கேற்க வரும் முக்கிய நிர்வாகிகள் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து வர வேண்டும் என நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் பொது ச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மாவட்ட நிர்வாகிகளிடம் வலியுறுத்தி உள்ளார்.
இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் மாநாட்டிற்கு அணிந்து செல்லும் வகையில் வேட்டி, சட்டைகள் தயாரிக்க திருப்பூர், ஈரோடு குமார பாளையம் பகுதிகளில் உள்ள ஜவுளி உற்பத்தி நிறுவனங்களில் ஆர்டர்கள் கொடுக்க தொடங்கி உள்ளனர்.
இது குறித்து திருப்பூரை சேர்ந்த பிரபல வேட்டி-சட்டை தயாரிக்கும் நிறுவனத்தை சேர்ந்த உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-
திருப்பூரில் அனைத்து அரசியல் கட்சியினரும் அணியக்கூடிய வகையில் கட்சி பார்டர்களுடன் கூடிய வேட்டிகள் தயாரித்து கொடுத்து வருகிறோம். தற்போது நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டை யொட்டி திருப்பூர் மாவட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மூலம் த.வெ.க. பார்டர் போட்ட வேட்டிகள் தயாரிக்க ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆர்டர்களின்படி வேட்டிகள் தயாரிக்க உள்ளோம்.
மாநாட்டிற்கு இன்னும் ஒரு மாதம் இருப்பதால் குறிப்பிட்ட நேரத்தில் வேட்டிகளை தயாரித்து கொடுத்து விடுவோம். வரும் நாட்களில் கூடுதலாக ஆர்டர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
இதேப்போல் மாநாட்டிற்கான சால்வை, தொப்பி, பேட்ஜ் உள்ளிட்டவையும் திருப்பூர், ஈரோடு குமாரபாளையத்தில் தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருவதாக திருப்பூர் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும் எந்தெந்த வடிவில் தயாரிக்க வேண்டும் என்பதற்காக அதற்கான மாடல்களை ஜவுளி நிறுவனங்களிடம் த.வெ.க. நிர்வாகிகள் கொடுத்துள்ளனர்.
அந்த வடிவமைப்பில் வேட்டி, சட்டை, தொப்பிகள், பேட்ஜ்கள் தயாரிக்கும் பணியை ஜவுளி நிறுவனத்தினர் தொடங்கி உள்ளனர்.
- அத்திக்கடவு -அவிநாசி திட்டம் வரவேற்கத்தக்கது.
- விடுபட்ட குளங்கள் இருந்தால் விரைவில் இணைப்பார்கள்.
திருப்பூர்:
சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருமான செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் திருப்பூரில் இன்று வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்த பின், செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி இருப்பதை வரவேற்கிறேன். பா.ஜ.க., எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்கு தொடுப்பதும், பின்னர் பா.ஜ.க.வில் இணைந்தால் அதனை வாபஸ் பெறுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்கள். செந்தில் பாலாஜியை ஏன் இத்தனை நாட்கள் சிறையில் அடைத்து வைத்து இருந்தார்கள்? என்று தெரியவில்லை. அவர் மீண்டும் அமைச்சராவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தன் மீது குற்றச்சாட்டு எழுந்திருப்பது தொடர்பாக அடுத்த 2 நாட்களில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்க இருக்கிறேன்.
அத்திக்கடவு -அவிநாசி திட்டம் வரவேற்கத்தக்கது. விடுபட்ட குளங்கள் இருந்தால் விரைவில் இணைப்பார்கள். இது போன்ற திட்டங்களால் தான் நிலத்தடி நீர் உயரும். மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தொடர்ந்து ஆட்சியில் அதிகாரம் கேட்பது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., நோ கமெண்ட்ஸ் என பதிலளித்து சென்றார்.
- 6 பேரும் பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியில் சேருவதற்காக மத்திய பஸ் நிலையத்துக்கு வந்தபோது போலீசாரிடம் சிக்கினர்.
- சென்னை அழைத்து சென்று புழல் சிறையில் அடைத்தனர்.
திருப்பூர்:
வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் தங்கி பணியாற்றுவது அதிகரித்து வருகிறது. அவ்வாறு பதுங்கி இருப்பவர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் தெற்கு போலீசார் மற்றும் அதிவிரைவுப்படையினர் திருப்பூர் மத்திய பஸ் நிலைய பகுதியில் சுற்றித்திரிந்த வெளிமாநில தொழிலாளர்களிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக வந்த 6 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை. விசாரணையில் அவர்கள் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவர்கள் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்துக்கு வடமாநில தொழிலாளர்கள் போல் வேலைக்கு வந்துள்ளனர். அந்த நிறுவனத்தில் வேலை செய்தபோது, பனியன் நிறுவன தரப்பில் இருந்து அவர்களின் அடையாள ஆவணங்களை சரிபார்த்தபோது வங்கதேசத்தினர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர்களை வேலைக்கு அமர்த்தாமல் அங்கிருந்து அனுப்பி விட்டனர்.
இதைத்தொடர்ந்து 6 பேரும் பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியில் சேருவதற்காக மத்திய பஸ் நிலையத்துக்கு வந்தபோது போலீசாரிடம் சிக்கினர். உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கவுகாத்தியில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து திருப்பூர் வந்தது தெரியவந்தது. அவர்கள் வங்கதேச நாட்டின் நாராயண்கஞ்ச் பகுதியை சேர்ந்த தன்வீர் (வயது 39), ரசிப் தவுன் (43), முகமது அஸ்லம் (41), முகமது அல் இஸ்லாம் (37), முகமது ராகுல் அமின் (30), சவுமுன் ஷேக் (38) என்பது தெரியவந்தது. 6 பேரையும் தெற்கு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை சென்னை அழைத்து சென்று புழல் சிறையில் அடைத்தனர்.
- சிறுமிகளை ஜீப் ஓட்ட வைத்து ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
- காளிமுத்து என்பவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே உள்ள பள்ளபாளையத்தில் சிறுமிகளை ஜீப் ஓட்ட வைத்து ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
காளிமுத்து என்பவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். சிறுமிகளுக்கு ஜீப் ஓட்ட கற்றுக்கொடுத்து இந்த வீடியோவை அவர் படம் பிடித்துள்ளார்.
சிறுமிகள் ஆபத்தான முறையில் ஜீப் ஓட்டும் இந்த வீடியோவிற்கு இணையத்தில் கடும் கண்டனம் எழுந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அரசு அதிகாரிகள் தற்போது விளக்கம் அளித்துள்ளனர்.
ஆபத்தான முறையில் சிறுமி வாகனத்தை இயக்கியது சட்டப்படி குற்றம்தான். தனது சொந்த விவசாய நிலத்தில் உரிமையாளர், வாகனத்தை சிறுமியிடம் கொடுத்து இயக்கச் சொல்லியுள்ளார். சாலையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
- சிறுத்தை நடமாட்டத்தால் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
- கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், கூண்டு வைத்து பிடிக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் ஓலக்கடை எதிரே தனியாருக்கு சொந்தமான கியாஸ் பங்க் உள்ளது. இது அடர்ந்த காட்டுப்பகுதியாகும். அங்கு தாராபுரத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் வந்துள்ளார்.
அப்போது காட்டுப்பகுதியில் சிறுத்தை ஒன்று வேகமாக பாய்ந்து சென்றுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவக்குமார் உடனே தாராபுரம் போலீசாருக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு காங்கயம் வனச்சரக அலுவலர் மவுனிகா தலைமையில் வனவர் ஷேக்உமர், வனக்காவலர் குணசேகரன், வனக்காப்பாளர் பூரணி ஆகியோர் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிறுத்தை வந்ததற்கான தடயங்கள் ஏதாவது உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தனர்.
மேலும் இந்தப் பகுதியின் அருகே ரங்கம்பாளையம், கருவேலம்பள்ளம், ஆச்சியூர், மங்களம் பாளையம் பிரிவு, கோனேரிப்பட்டி, துலுக்கனூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் அதிக அளவில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. சிறுத்தை நடமாட்டத்தால் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள்-பொது மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
ஏற்கனவே ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கிய சிறுத்தை இதுவரை பிடிபடாத நிலையில் அங்குள்ள சிறுத்தை தான் இங்கு வந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே தாராபுரத்தில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், கூண்டு வைத்து பிடிக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.
- அணைக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரும் குறைந்து வருகிறது.
- அணைக்கு நீர்வரத்து குறைந்தது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.
உடுமலை:
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் மூலமாக மழைக் காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள விளை நிலங்கள் பயன்பெறும் வகையில் பாசனத்திற்கும், சுற்றுப்புற கிராமங்களுக்கு குடிநீர் திட்டத்தின் மூலமாக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஜூலை மாதம் பலத்த மழை பெய்தது. அதைத் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு கடந்த 66 நாட்களாக முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்து வனப்பகுதியில் வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து குறைந்து விட்டது. இதனால் அணைக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரும் குறைந்து வருகிறது. ஆனாலும் நீர் வரத்து மற்றும் நீர் இருப்பை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு நீர்வரத்து குறைந்தது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.
இதனால் வடகிழக்கு பருவ மலையை எதிர்நோக்கி காத்துள்ளனர். அதற்கு முன்பாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதனால் அணையில் நீர் இருப்பு குறைந்து வடகிழக்கு பருவ மழையால் ஏற்படுகின்ற நீர் இருப்பை தேக்கி வைக்க இயலும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
இன்று காலை 6 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 88.98 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 35 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
- எஸ்.பி.யின் உத்தரவு கொள்ளையர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், தாராபுரம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது. முகமூடி அணிந்து கையில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் தவித்தனர்.
இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் துப்பாக்கியுடன் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட போலீசாருக்கு திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் இரவு முழுவதும் துப்பாக்கியுடன் ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். கொள்ளையர்கள் தப்பியோடும் பட்சத்தில் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டது. எஸ்.பி.யின் இந்த உத்தரவு கொள்ளையர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் தனிப்படை போலீசார் விசாரணையில் முகமூடி கொள்ளையர்கள் சிக்கினர். அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரப்பகுதிக்கு வந்தது.
- வனவிலங்குகள் வனப்பகுதிக்கு திரும்பி செல்லாமல் அடிவாரப்பகுதியிலேயே முகாமிட்டு வருகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவற்றிற்கு தேவையான உணவு தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளும், தண்ணீர் தேவையை அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் பூர்த்தி செய்து தருகின்றன. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளை அதிகம் நம்பி உள்ளது.
இந்த நிலையில் நடப்பு ஆண்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததால் வனவிலங்குகளுக்கான உணவு, தண்ணீர் தேவை பூர்த்தி அடைவதில் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரப்பகுதிக்கு வந்தது. அமராவதி அணை அவற்றுக்கான உணவு, தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து அடைக்கலம் அளித்தது.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. அதைத் தொடர்ந்து ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டு வனப்பகுதியும் பசுமைக்கு திரும்பியது. ஆனாலும் ஆறுகளில் நீர்வரத்து குறைந்து விட்டதால் வனவிலங்குகள் வனப்பகுதிக்கு திரும்பி செல்லாமல் அடிவாரப்பகுதியிலேயே முகாமிட்டு வருகிறது.
தற்போது யானைகள் காலை நேரத்தில் உடுமலை - மூணாறு சாலையை கடந்து காலையில் வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது. அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு கொடுப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக யானைகள் மிரட்சி அடைந்து வாகன ஓட்டிகளை துரத்திச் சென்ற சம்பவமும் நிகழ்ந்து உள்ளது.
இதனால் உடுமலை- மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீது கற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அத்துடன் உடுமலை- மூணாறு சாலை மலைஅடிவாரப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- விறு விறுப்பாக நடைபெற்ற போட்டியில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையிலான அணி தோல்வியடைந்தது
- அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர்:
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பல்லடம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் ஒரு பகுதியாக பல்லடம் அரசு மேல்நிலை ப்பள்ளி மாணவர் விடுதியை ஆய்வு செய்தார். அப்போது அங்கு மாணவர்கள் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் தங்களுடன் வாலிபால் விளையாட வருமாறு அழைத்தனர்.
மாணவர்கள் வற்புறுத்தலின் பேரில் கலெக்டர் போட்டியில் பங்கேற்றார். கலெக்டர் தலைமையில் ஒரு அணியும், மற்றொரு அணியும் மோதின. போட்டி தொடங்குவதற்கு முன்பாக மாணவர்களிடம் பேசிய கலெக்டர், இப்போட்டியில் தோல்வியடைந்தால் 10 தண்டால் எடுக்க வேண்டும் என்று சவால் விடுத்தார். அதனை 2 அணி மாணவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து போட்டி தொடங்கியது. விறு விறுப்பாக நடைபெற்ற போட்டியில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையிலான அணி தோல்வியடைந்தது. இதையடுத்து கலெக்டர் தனது அணி மாணவர்களுடன் சேர்ந்து 10 தண்டால் எடுத்தார். இது அங்கிருந்த அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் முறைகேடாக மது விற்பனை மற்றும் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுஜாதா உத்தரவின் பேரில் மதுவிலக்கு போலீசார் மாநகர மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர் கென்னடி , சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பொன்மணி ஆகியோரது தலைமையிலான போலீசார் மங்களம் சாலையில் வாகண சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இடுவம்பாளையம் அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் மதுபான பாட்டில்கள் மற்றும் பீர் பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மதுவிலக்கு காவல் நிலையம் எடுத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மதுவிலக்கு போலீசாரின் விசாரணையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பு (26) மங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பாபு (55) இருவரும் வஞ்சிபாளையம் ரத்தினபுரி கார்டன் அருகே உள்ள மதுபான கடையில் இருந்து மது பாட்டில்களை மொத்தமாக கொள்முதல் செய்து இடுவம்பாளையம் பகுதிக்கு விற்பனைக்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சரக்கு ஆட்டோவில் இருந்த 24 பெட்டிகளில் 1152 மதுபான பாட்டில்கள் மற்றும் 8 பெட்டிகளில் இருந்த 92 பீர் பாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்து சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். முறைகேடக மது பாட்டில்களை கொண்டு சென்ற கருப்பு மற்றும் பாபுவை கைது செய்தனர்.
இன்று மிலாது நபி பண்டிகையின் காரணமாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் மதுபான கடைகள் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்புதிருந்த நிலையில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக மொத்தமாக வாங்கி சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
- பின்னலாடை நிறுவனத்தின் ஒரு பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது.
- தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் நெருப்பெரிச்சல் ஜி என் கார்டன் பகுதியில் முத்துக்குமார் (55) என்பவருக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் இரவு நிறுவனம் மூடப்பட்டு சென்ற நிலையில் பணிக்கு யாரும் வேலைக்கு வராததால் காவலாளி மட்டும் பணியில் இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை பின்னலாடை நிறுவனத்தின் உட்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. உடனடியாக காவலாளி சென்று பார்த்த போது பின்னலாடை நிறுவனத்தின் ஒரு பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது. உடனடியாக உரிமையாளர் மற்றும் தீயானைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நிறுவனம் முழுவதும் பின்னலாடை துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காரணத்தால் மளமளவென நிறுவனம் முழுவதும் தீ பரவியுள்ளது.
திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறையினர் நான்கு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரத்திற்கு மேலாக பத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
ஆனாலும் பின்னலாடை நிறுவனத்தில் உற்பத்திக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த துணிகள் மற்றும் உற்பத்தி செய்து பண்டல் போட்டு வைக்கப்பட்டிருந்த துணிகள், பின்னலாடை இயந்திரம் , கட்டிடம் என பல கோடி மதிப்பில் பொருட்கள் சேதமடைந்துள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் தீ விபத்து குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சத்யாவின் நடத்தையில் அவரது கணவருக்கு சந்தேகம் எழுந்தது.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாராபுரம்:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் சத்யா (வயது 30). இவருக்கும், திருமணத்திற்கு பெண் பார்த்து வந்த திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த பேக்கரி உரிமையாளர் ஒருவருக்கும் இடையே செல்போன் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு சென்று அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இந்த தம்பதிகள் தாராபுரம் வந்து குடும்பம் நடத்தினர்.
அப்போது சத்யாவின் நடத்தையில் அவரது கணவருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் சத்யா மீது தாராபுரம் போலீசில் அவரது புதுக்கணவர் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சத்யாவை அழைத்து விசாரித்தபோது அவர் சிறிது நேரத்தில் வருகிறேன் என்று கூறிவிட்டு தலைமறைவானார். அதன்பின்னர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சத்யாவை பிடித்து வந்து விசாரித்தனர். விசாரணையில், சத்யா சென்னையை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதும், அடுத்து கரூரைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டரை கரம் பிடித்ததும், பின்னர் மாட்டு வியாபாரி ஒருவரை ஏமாற்றி பணம் பெற்றதும், அடுத்து மற்றொரு வாலிபரை பதிவு திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி குழந்தை பெற்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து போலீசார் சத்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் சத்யாவின் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பெண் புரோக்கரான கரூர் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வி (32) என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தமிழ்செல்வியை தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அள்ளி ராணி தலைமையிலான போலீசார் கரூர் அருகே வைத்து கைது செய்தனர். பின்னர் அவரை தாராபுரம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்களை அவர், போலீசாரிடம் கூறியுள்ளார். தமிழ்செல்வி திருமணமாகி முதல் கணவரை பிரிந்து தற்போது வேறு ஒருவருடன் வசித்து வருகிறார். சத்யாவுக்கும் தமிழ்ச்செல்விக்கும் இடையே கடந்த 2021-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. அப்போதுதான் பேஸ்புக் மற்றும் ஆன்லைன் வழியாக பெண் பார்ப்பவர்களை நோட்டமிட்டு பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி பெண் பார்ப்பவர்களை புரோக்கர் என அறிமுகமாகி சத்யாவின் படத்தை அனுப்பி திருமணத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்செல்வி செய்துள்ளார்.
குறிப்பாக வசதி படைத்தவர்களை மட்டும் தேர்வு செய்து திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்காக புரோக்கர் கமிஷனாக ஒரு தொகையை வாங்கிக் கொண்டு சத்யாவுக்கு தாய், தந்தை, உறவினர் என ஒரு சிலரை ஏற்பாடு செய்து எளிமையான முறையில் திருமணம் நடத்தி வைத்துள்ளார். மேலும் சத்யா எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர், அவருக்கு நீங்கள் தான் நகை போட்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் நிர்பந்தம் செய்துள்ளனர். அவர்கள் பெண் கிடைத்தால் போதும் என்று சத்யாவுக்கு 10 முதல் 20 பவுன் நகை வரை கொடுத்து திருமணம் செய்து கொள்வார்கள். இரண்டு நாட்கள் முதல் ஒரு வாரம் வரை திருமணமானவர்களுடன் குடும்பம் நடத்தி விட்டு பின்னர் நகை, பணத்துடன் அங்கிருந்து சத்யா, கரூர் சென்று விடுவார்.
இதேபோல் 20-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்- மனைவியாக வாழ்வதற்கும் தமிழ்செல்வி சத்யாவை பயன்படுத்தியுள்ளார். 30-க்கும் மேற்பட்டோர் உடன் தனிமையில் இருப்பதை வீடியோ மற்றும் போட்டோக்களை எடுத்துக் கொண்டு அவர்களை மிரட்டி ரூ.10 முதல் 20 லட்சம் வரை பணம் பறித்துள்ளனர். இவ்வாறு 53 பேரிடம் ஏமாற்றி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். மேலும் சத்யாவின் பெயரில் கொடுமுடி அருகே ரூ.4 கோடி மதிப்பிலான இடம் வாங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. திருமணத்திற்காக போடப்பட்ட நகைகள் அனைத்தையும் புரோக்கர் தமிழ்ச்செல்வி பெயரில் வங்கி லாக்கரில் பதுக்கி வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






