என் மலர்
திருப்பூர்
- நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சம்பந்தப்பட்ட பகுதிக்கு ஆய்வு செய்து கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று அப்பகுதி மக்களிடம் உறுதி அளித்தார்.
- எம்.எல்.ஏ., மேயர், எம்.பி., அமைச்சர், முதல்-அமைச்சர் ஆகியோருக்கும், தமிழக அரசுக்கும் வார்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டு காயிதே மில்லத் நகரில் மாநகராட்சியின் சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க முற்பட்டபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திட்டம் நிறுத்தப்பட்டது. மேலும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சம்பந்தப்பட்ட பகுதிக்கு ஆய்வு செய்து கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று அப்பகுதி மக்களிடம் உறுதி அளித்தார்.
இந்தநிலையில் அனைத்து இஸ்லாமிய குழு தலைவர் ஷாஜகான் நிருபர்களிடம் கூறும்போது, காயிதேமில்லத் நகர் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க கடந்த 6 மாதமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். மேயர், எம்.எல்.ஏ., எம்.பி. ஆகியோரிடம் முறையிடப்பட்டது. முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, காயிதேமில்லத் நகர் பகுதிக்கு வந்து முஸ்லிம் மக்களிடம் விவரங்களை கேட்டார். வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக வைத்த கோரிக்கையை ஏற்று, கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதாக அமைச்சர் உறுதியளித்தார்.
இதற்காக எம்.எல்.ஏ., மேயர், எம்.பி., அமைச்சர், முதல்-அமைச்சர் ஆகியோருக்கும், தமிழக அரசுக்கும் வார்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார். இதில் முஸ்லிம் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- வீட்டின் அருகே இருந்த மரத்தடியில் பாய்விரித்து படுத்து உறங்கியுள்ளாா்.
- சாலையின் வளைவில் திரும்பிய போது, உறங்கிக்கொண்டிருந்த ராமசாமி மீது காா் ஏறியது
அவிநாசி:
அவிநாசி, காசிகவுண்டன்புதூா் ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்தவா் ராமசாமி (வயது 59). காங்கயம் சாா்பு நீதிமன்றத்தில் இளநிலை கட்டளைதாரராக பணியாற்றி வந்தாா். விடுப்பில் உள்ள ராமசாமி, அவிநாசி மகா நகரில் உள்ள தனது மகன் வீட்டுக்கு வந்துள்ளாா். வீட்டின் அருகே இருந்த மரத்தடியில் பாய்விரித்து படுத்து உறங்கியுள்ளாா்.
அதே பகுதியில் வசித்து வரும் வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளா் குருமூா்த்தி (47) தனது வீட்டிலிருந்து காரை அதிவேகமாக ஓட்டி வந்துள்ளாா். அப்போது சாலையின் வளைவில் திரும்பிய போது, உறங்கிக்கொண்டிருந்த ராமசாமி மீது காா் ஏறியது. இதில் பலத்த காயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து குருமூா்த்தியை கைது செய்தனா்.
- “நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- மாணவ மாணவிகள் மற்றும் தகுதியுடைய நபர்கள் இப்போட்டிக்கு பதிவு செய்து போட்டியில் பங்கு பெற்று தனி நபர்களின் திறமைகளை நிரூப்பித்திட இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
திருப்பூர்:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்பட்டு வரும் "நான்முதல்வன்" திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடைபெறவுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச அளவிலான மற்றும் இந்திய அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்பட்டு வரும் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேற்படி மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க https://naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.போட்டிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற ஜூலை மாதம் 7-ந் தேதி கடைசி நாள் ஆகும்.விண்ணப்பதாரர்கள் கடந்த 2002 ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சில குழுவாக பங்குபெறும் சில தொழில் பிரிவுகளுக்கு கடந்த 1999 ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தொழிற் பயிற்சி நிலையங்களில் படித்தவர்கள் மற்றும் படித்துக் கொண்டிருப்பவர்கள் தொழில் பழகுநர்கள் பயிற்சி முடித்தவர்கள் தொழிற்சாலைகளில் பணியில் உள்ளவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக மாவட்ட உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம்.
இப்போட்டிக்கு இதுவரை சுமார் 1000 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர். திறன் ேபாட்டிக்கு பதிவு செய்திட ஜூலை 7-ந் தேதி கடைசி என்பதால் மாணவ மாணவிகள் மற்றும் தகுதியுடைய நபர்கள் இப்போட்டிக்கு பதிவு செய்து போட்டியில் பங்கு பெற்று தனி நபர்களின் திறமைகளை நிரூப்பித்திட இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் மாவட்ட அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநிலஅளவிலான திறன் போட்டிக்கும் மாநில அளவில் வெற்றி பெற்றவர்கள் இந்திய அளவிலும்,இந்திய அளவில் வென்றவர்கள் சர்வதேச அளவிலான திறன் போட்டிக்கும் பங்கு பெறலாம்.தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 0421-2250500, 94990 55695,94434 71184. https://naanmudhalvan.tn.gov.in/tnskills/என்ற இணையதள முகவரியின் வாயிலாகவோ அல்லது கீ QR Code- மூலமாகவோ பதிவுகளை மேற்கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசு பஸ்கள் பெரிதும் உதவியாக உள்ளது.
- பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பஸ்களை உரிய முறையில் பராமரிப்பு செய்து சீரான முறையில் கிராமங்கள் தோறும் இயக்குவதற்கு முன் வர வேண்டும் என்று தெரிவித்தனர்.
உடுமலை:
அன்றாட அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உடுமலை கிளை சார்பில் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன் மூலமாக பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த சூழலில் அரசு பஸ்கள் பராமரிப்பில் நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக தெரிகிறது. இதன் காரணமாக அவை பழுதடைந்து ஆங்காங்கே திடீரென நின்று விடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசு பஸ்கள் பெரிதும் உதவியாக உள்ளது. இதனால் நாள்தோறும் பயனடைந்து வருகின்றோம். ஆனால் உடுமலை கிளையில் அரசு பஸ்கள் பராமரிப்பில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் அவை ஓடிக் கொண்டிருக்கும் போதே திடீரென ஆங்காங்கே நின்று விடுகிறது. இதனால் பொதுமக்கள் தக்க தருணத்தில் தேவை மற்றும் சேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு அமராவதியை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் கொங்கலக்குறிச்சிக்கு அருகே திடீரென பழுதாகி நின்று விட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் பொதுமக்கள் பரிதவித்து போயினர். பின்னர் ஒரு வழியாக நீண்ட நேரத்துக்கு பிறகு மாற்று பஸ் பிடித்து வீடுகளுக்கு சென்றனர். நிர்வாகத்தின் அலட்சியத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. அதே போன்று கடந்த சில மாதங்களாக அரசு பஸ்கள் கிராமங்களுக்கு முறையாக இயக்காமல் திடீரென நிறுத்தி விடுகிறார்கள்.
குறிப்பாக பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்த பின்பு தான் பஸ்கள் கிராமங்களுக்கு இயக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கேட்டபோது பல்வேறு காரணங்களை கூறி வேண்டுமென்றே தட்டிக் கழித்து வருகின்றனர்.
இதனால் அரசு மீது பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பஸ்களை உரிய முறையில் பராமரிப்பு செய்து சீரான முறையில் கிராமங்கள் தோறும் இயக்குவதற்கு முன் வர வேண்டும் என்று தெரிவித்தனர்.
- உங்களது மனமும், உடலும் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தால் மட்டுமே உங்களால் சாதிக்க முடியும் என்றாா்.
- கல்லூரியில் கற்றுத் தரும் பாடங்கள் அனைத்தும் உங்கள் வாழ்க்கைக்கு ஊன்றுகோலாக அமையும்.
திருப்பூர்:
திருப்பூா் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் கே.பி.பாலகிருஷ்ணன் வரவேற்றாா். கல்லூரி தலைவா் பி.மோகன் தலைமை வகித்துப் பேசியதாவது:-
கல்லூரியில் கற்றுத் தரும் பாடங்கள் அனைத்தும் உங்கள் வாழ்க்கைக்கு ஊன்றுகோலாக அமையும். இந்தக் கல்லூரியில் பயின்ற மாணவா்கள் பெங்களூா், சென்னை, கேரளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழில் முனைவோா்களாகவும், டிசைனா்களாகவும் பணியாற்றி வருகின்றனா். மாணவா்கள் சரியான முறையில் நேரத்தை செலவிட வேண்டும். உங்களது மனமும், உடலும் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தால் மட்டுமே உங்களால் சாதிக்க முடியும் என்றாா்.
இதைத்தொடா்ந்து, சிலம்பம், நடனம் , ஆடை அலங்கார அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில், தொழிலதிபா் மெஜஸ்டிக் கந்தசாமி, கல்லூரி துணைத் தலைவா்கள் ஈ.பழனிசாமி, ரங்கசாமி, பொருளாளா் கோவிந்தராஜூ, நிா்வாக குழு உறுப்பினா்கள் ராமசாமி, பேஷன் அப்பேரல் மேனேஜ்மெண்ட் துறையின் துணைத் தலைவா் பி.பி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- அணையில் அத்துமீறி, சுற்றுலாப்பயணிகள் குளிப்பது அதிகரித்துள்ளது.
- அணையின் முகப்பிலுள்ள பாலத்தில் தடை செய்யப்பட்ட இடத்தில், மீன்பிடிக்கின்றனர்
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் அத்துமீறி, சுற்றுலாப்பயணிகள் குளிப்பது அதிகரித்துள்ளது.
நீர் தேக்கத்தில் குளிப்பதற்கு, பொதுப்பணித்துறையினர் தடைவிதித்து, எச்சரிக்கை பலகையும் வைத்துள்ளனர். அணையில் முதலைகள் நடமாட்டமும் உள்ளது. இந்த விபரீதம் தெரியாமல், சுற்றுலாப்பயணிகள் அணையில் அத்துமீறுகின்றனர். படகு சவாரிக்காக அமைக்கப்பட்ட படித்துறையை ஒட்டி, ஆழமான பகுதியில் குளித்து வருகின்றனர். அதே போல் அணையின் முகப்பிலுள்ள பாலத்தில் தடை செய்யப்பட்ட இடத்தில், மீன்பிடிக்கின்றனர்.எச்சரிக்கை பலகை அருகிலேயே அத்துமீறி இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன.
பொதுப்பணித்துறையினர் கண்காணித்து, அத்துமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உயிரிழப்புகளை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- ஒருதலைப் பட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று முருகேசன் தரப்பினர் தெரிவித்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னிய கவுண்டம்பாளையத்தில் சாவித்திரி மற்றும் முருகேசன் ஆகியோர் வீடுகள் அருகருகே உள்ளது. இவர்களுக்கு இடையே சுற்றுச்சுவர் வைத்ததில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 26 ந் தேதி இது குறித்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த சாவித்திரி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முருகேசன் , சூரியமூர்த்தி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே போலீசார் இடப் பிரச்சினையில் சரிவர விசாரணை செய்யாமல் ஒருதலைப் பட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று முருகேசன் தரப்பினர் தெரிவித்தனர்.
- கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது
- பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய சாலையில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பல்லடம்:
பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
திருமணம் போன்ற விசேச நாட்களில் இந்த எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டும். இதற்கிடையே பல்லடம் பஸ் நிலையம் அருகே கொசவம்பாளையம் நால்ரோடு பகுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. அதில் இருந்த 6 விளக்குகளும், ஒவ்வொரு விளக்காக பழுதடைந்து தற்போது விளக்குகள் எரிவதில்லை. இதனால் அந்த பகுதியில் வெளிச்சம் குறைவாக உள்ளதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துகளில் சிக்குகின்றனர்.
மேலும் அந்தப் பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய சாலையில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர் மின் கோபுர விளக்கை சரி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மது குடிப்பவர்கள் மது குடித்துவிட்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
- பள்ளி செல்லும் மாணவ மாணவியர் அந்த வழியாக சென்று வருகின்றனர்.
அவினாசி:
தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனம் 5320 கடைகள் மூலம் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. அரசு விதிப்படி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறான பகுதியில் மதுக்கடைகளை அமைக்க கூடாது. ஆனால் பல இடங்களில் விதிக்கு முரண்பாடாக மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது.
அவ்வாறு திருப்பூர் மாவட்டம் அவினாசி கோவை மெயின் ரோட்டில் சீனிவாசபுரம் பகுதியில் உள்ள மதுக் கடையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது குறித்து தொகுதி எம்எல்ஏ.விடமும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.இருப்பினும் அந்த மது கடை செயல்பட்டு வருகிறது.
இது குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அவிநாசி கோவை மெயின் ரோடு சீனிவாசபுரம் பகுதியில் நிறைய குடியிருப்புகள் வணிக வளாகங்கள் உள்ளன. பள்ளி செல்லும் மாணவ மாணவியர் அந்த வழியாக சென்று வருகின்றனர் .விளிம்பிலேயே கடை இருப்பதால் மது குடிப்பவர்கள் ரோட்டில் நின்று கொண்டு அங்கேயே மது குடித்துவிட்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
போதை அதிகமான நிலையில் ஆங்காங்கே ரோட்டிலேயே படுத்து கிடக்கின்றனர். இதனால் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது.போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள அந்த மதுபான கடையை மூடாமல் அதே பகுதியில் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் எந்த விதமான இடையூறும் இல்லாத ஒதுக்கு புறமான இடத்தில் செயல்பட்டு வந்த மதுபான கடை மூடப்பட்டுள்ளது. மேலும் பாட்டிலுக்கு கூடுதலாக வசூலிக்கும் பணத்தில் இருந்து தங்களுக்கு கமிஷன் வராத கடைகளை அதிகாரிகள் மூடி உள்ளதாக தெரிகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- 2 மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு கடை பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.
- போலீஸ் சமயோசிதமாக செயல்பட்டு போட்டோ எடுத்து வைத்திருந்ததால் மேற்கொண்டு அவர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடாமல் தடுக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கொடுவாயில் தனியார் ஒருவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று முன்தினம் இரவு 2 மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு கடை பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் பூட்டை உடைக்க முடியாததால் தங்களது முயற்சியைக் கைவிட்டு திரும்பி நடந்து வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த அவிநாசிபாளையம் ரோந்து போலீஸ் தயாளன் என்பவர் அவர்கள் மீது சந்தேகப்பட்டு நீங்கள் யார்? எந்த ஊர்? என விசாரித்துள்ளார். அவர்கள் தாங்கள் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், செங்கல் இறக்குவதற்காக வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசுக்கு மேலும் சந்தேகம் வலுக்கவே அவர்கள் இருவரையும் தனது செல்போன் மூலம் போட்டோ எடுத்துக்கொண்டு அவர்களை அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் செல்போன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டது குறித்த தகவல் நேற்று காலை அவினாசிபாளையம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. உடனடியாக வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் அவர்கள் இருவரும் பிடிபட்டனர். அவர்கள் ஒடிசாவைச் சேர்ந்த ஹரி நாயக் (வயது 20), பிருந்தா நாயக் (22) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தக்க சமயத்தில் போலீஸ் சமயோசிதமாக செயல்பட்டு போட்டோ எடுத்து வைத்திருந்ததால் மேற்கொண்டு அவர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடாமல் தடுக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது. சமயோசிதமாக செயல்பட்ட போலீஸ்காரர் தயாளனை பல்லடம் துணை காவல் கண் கண்காணிப்பாளர் சவு மியா, போலீசார், பொதுமக்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.
- யுவராஜ், தங்கராஜ் , சுரேஷ்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
- அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள புதுப்பை, ஈஸ்வரன் கோவில் அருகே காசு வைத்த சூதாடி கொண்டிருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தார்.
அப்போது காசு வைத்த சூதாடி கொண்டிருந்த யுவராஜ், தங்கராஜ் , சுரேஷ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ. 860 ரொக்கத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், புதுப்பை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த ராமசாமி மகன் ஆனந்தன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.180ஐ கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கிராம மக்களுக்கு தடையின்றி குடிநீர் பெற தண்ணீர் பம்பிங் நிலையம், 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சார வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது.
- குடிநீர், உடல் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்டவை கிடைப்பதற்கு முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடி சாலையில் உள்ள மடத்துப்பாளையம் பகுதியில் ஆற்றல் அறக்கட்டளை சார்பில் தொப்பம்பட்டி உள்ளிட்ட 9 கிராம மக்களுக்கு தடையின்றி குடிநீர் பெற தண்ணீர் பம்பிங் நிைலயம், 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சார வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது.
இதையடுத்து தடையில்லா மின்சாரம்- குடிநீர் வினியோகம் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆற்றல் அறக்கட்டளை அசோக்குமார் தலைமை தாங்கினார். தொப்பம்பட்டி ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் முன்னிலை வகித்தனர்.ஆற்றல் அசோக்குமார் குடிநீர் செல்லும் இணைப்பினை தொடங்கி வைத்து பேசியதாவது:-
மக்களுக்கு அடிப்படை தேவை குடிநீர். இந்த பகுதியில் அமராவதி ஆற்றுப்பாசனம் இருந்தும் மும்முனை மின்சாரம் பழுதால் குடிநீர் கிடைக்காமல் சுமார் 9 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தவிப்பதாக ஊர் தலைவர்கள் மூலமாகவும் கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் மூலமாகவும் அறிந்தோம் . உடனடியாக மக்களின் முக்கிய தேவையாக உள்ள குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சுமார் ரூ.3.50 லட்சம் செலவில் மின் இணைப்பு கருவிகள், உதிரி பாகங்கள் அனைத்தையும் வழங்கி மின்சார பணிகளை முடித்துவிட்டு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தொப்பம்பட்டி ஊராட்சி பெரிய குமார பாளையம், பெட்டிக்காம்பாளையம், வேலாயுதம்பாளையம், மருதூர் , மோனார்பட்டி உள்ளிட்ட 9கிராம பஞ்சாயத்து மக்களின் குடிநீர் தேவையை ஆற்றல் அறக்கட்டளை பூர்த்தி செய்வதில் மகிழ்கிறோம். ஆற்றல் அறக்கட்டளை சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் முக்கிய தேவைகளான குடிநீர், உடல் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்டவை கிடைப்பதற்கு முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது.
அறக்கட்டளை மூலம் திருக்கோவில்கள் புனரமைப்பு, அரசு பள்ளிகள் மேம்பாடு, சமுதாயக்கூடங்கள் கட்டித் தருதல் போன்ற பணிகளை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மட்டுமின்றி, மொடக்குறிச்சி, காங்கேயம் ,வெள்ளகோவில், முத்தூர், குண்டடம் மற்றும் ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் சிறப்பாக செய்து வருகிறோம். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக கிடைக்க தொடர்ந்து ஆற்றல் அறக்கட்டளை பெரும் உதவியாக இருக்கும். இந்த உதவியை பொதுமக்கள் சிறப்பாக பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள், ஊர் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்த ஆற்றல் அசோக்குமாருக்கும் அவரது குழுவினர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கிராம ஊராட்சி தலைவர்கள் லட்சுமி சரண்யா ,சேகர் ,மகேந்திரன், பி. கே. ராஜ், தேவி ,ரத்தின சாமி, முத்து பிரியா மற்றும் ஊர் தலைவர்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.






