என் மலர்
திருப்பூர்
- கழிவுக் கிடங்கில் இருந்து நேற்று மாலை 4.10 மணி அளவில் கரும்புகை எழுந்ததை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்துள்ளனா்.
- கடந்த வாரம் திருப்பூர் காதர்பேட்டை பனியன் பஜாரில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான ஆடைகள் எரிந்து நாசமாகின.
திருப்பூர்:
திருப்பூா் புதுப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பின்னலாடை கழிவுக்கிடங்கு உள்ளது. இங்கு 10க்கும் மேற்பட்டத் தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தொழிலாளா்கள் குடியிருப்பில் இருந்துள்ளனா். இந்நிலையில், கழிவுக் கிடங்கில் இருந்து நேற்று மாலை 4.10 மணி அளவில் கரும்புகை எழுந்ததை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்துள்ளனா்.
இதுகுறித்து திருப்பூா் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். தகவலின்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலா் வி.மோகன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்றனா். எனினும் கிடங்கில் பரவிய தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
இதையடுத்து, திருப்பூா் வடக்கு, அவிநாசி, காங்கயம் மற்றும் ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் இருந்து கூடுதலாக 4 தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் வரை போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகள், எந்திரங்கள் சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் திருப்பூர் காதர்பேட்டை பனியன் பஜாரில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான ஆடைகள் எரிந்து நாசமாகின.
தற்போது பின்னலாடை கழிவுக்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர் தீ விபத்தால் திருப்பூர் பொதுமக்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
- ரெயில் தண்டவாளத்தில் நின்று செல்போனில் செல்பி எடுத்துள்ளனர்.
- விதிகளை மீறி தண்டவாளத்தை கடந்து சென்றாலோ, தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் ரெயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த தாமரைக்கரையைச் சேர்ந்தவர் பாண்டியன் (23).இவரது நண்பர் அதே ஊரைச் சேர்ந்த விஜய் (23), இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள நிட்டிங் நிறுவனத்தில் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று விடுமுறையை முன்னிட்டு இருவரும் அணைப்பாளையம் பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது ெரயில் தண்டவாளத்தில் நின்று செல்போனில் செல்பி எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த ெரயில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பூர் ரெயில்வே காவல் துறையினர் இருவரது உடலையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நேற்று விடுமுறை என்பதால் பாண்டியன், விஜய் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து ரெயில் தண்டவாளம் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு மது அருந்திய பின்னர் பாண்டியன், விஜய் மட்டும் ரெயில் வரும்போது ரெயிலுடன் சேர்த்து 'செல்பி' எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தண்டவாளத்தை ஒட்டி நின்றுள்ளனர்.
அப்போது நெல்லையில் இருந்து பிலாஸ்பூர் செல்லும் பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 2 பேர் மீதும் மோதியது. இதில் பாண்டியன், விஜய் இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரெயில் மோதி பலியான 2 பேரின் உடல்களை பார்த்து அவர்களுடன் வந்த நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.'செல்பி' மோகத்தால் வாலிபர்கள் 2 பேர் ரெயில் மோதி பலியான சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே விதிகளை மீறி தண்டவாளத்தை கடந்து சென்றாலோ, தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் ரெயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
- கீழே விழுந்த ஊழியர்கள் எழுந்து மொபட்டில் இருந்த பணத்தை பார்த்த போது அப்படியே இருந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை சாலையில் வாளவாடி பிரிவு மொடக்குப்பட்டியில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இங்கு உடுமலை எஸ்.பி. புரத்தை சேர்ந்த ஜெய ப்பிரகாஷ்(வயது 42), சரவணன் (44) ஆகியோர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்ததும் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு வசூலான பணம் ரூ.3.50 லட்சத்தை பையில் கட்டி மொபட் இருக்கைக்கு அடியில் வைத்தனர். மேலும் வீட்டிற்கு வாங்கிய தக்காளி பையை முன்பக்கம் மாட்டி க்கொண்டு புறப்பட்டனர்.
வாளவாடி பிரிவு அருகே செல்லும் போது, பின்னால் வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி 2 பேரும் விழுந்தனர்.
அப்போது காரில் இருந்து இறங்கிய 3பேர் வீச்சரிவாளை காட்டி மிரட்டி பணத்தை தருமாறு கேட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அலறி சத்தம் போட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவர் நிலைமையை புரிந்து கொண்டு காரின் முன்பாக தனது பைக்கை நிறுத்தினார். உஷாரான கொள்ளையர்கள் பிரகாஷ், சரவணன் வந்த மொபட்டில் இருந்த பையை பறித்து காரில் தப்பினர்.
இந்நிலையில் கீழே விழுந்த ஊழியர்கள் எழுந்து மொபட்டில் இருந்த பணத்தை பார்த்த போது அப்படியே இருந்தது. மொபட்டின் முன்பக்கம் தொங்கவிடப்பட்டிருந்த தக்காளி பையை காணவில்லை. அதில் பணம் இருக்கிறது என்று எண்ணி கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். இதனால் பிரகாசும், சரவணனும் நிம்மதி அடைந்தனர்.
மேலும் காயமடைந்த அவர்கள் சிகிச்சைக்கக மருத்துவமனையில் சேர்ந்தனர். மேலும் தளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
தற்போது தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், பணத்திற்கு பதிலாக தக்காளி பையை கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- புதிய மின்மோட்டார் அமைக்கும் பணி மற்றும் ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.
- பணி முடிவடையும் போது அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் சீரான முறையில் வழங்கப்படும்.
வெள்ளகோவில்
வெள்ளகோவில் நகராட்சியில் ரூ.62.29 கோடி மதிப்பீட்டில் முத்தூர்– காங்கேயம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய மின் மோட்டார் அமைத்து குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணியினை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்த தாவது:-
வெள்ளகோவில் நகராட்சி, சின்னக்கரை ஸ்ரீமுருகன் திருமண மண்டபம் அருகில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் முத்தூர் –காங்கேயம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.62.29 கோடி மதிப்பீட்டில் புதிய மின்மோட்டார் அமைக்கும் பணி மற்றும் ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.
முத்தூர் காங்கேயம் கூட்டுக்குடிநீர் திட்டமானது திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் 3 நகராட்சிகள், 6 பேரூராட்சிகள், 1790 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 86 கிராம ஊராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்டமாகும். 1998-ம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் உள்ள கான்கிரீட் குழாய்கள் 25 வருடங்கள் பயன்பாட்டில் உள்ளது. இதன் காரணமாக அடிக்கடி நீர் கசிவு ஏற்பட்டு வடிவமைக்கப்பட்ட குடிநீர் வழங்க இயலவில்லை. அதன் பொருட்டு நகராட்சி மற்றும் குடிநீர் வழங்குதல் துறையின் மூலமாக ரூ. 62.29 கோடியில் அனுமதி அளிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பணியானது 12 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பணி முடிவடையும் போது அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் சீரான முறையில் வழங்கப்படும் என்றார்.
அதனைத்தொடர்ந்து வெள்ளகோவில் நகராட்சி, சின்னக்கரை ஸ்ரீ முருகன் திருமண மண்டபத்தில் அமைச்சர்கள் மற்றும் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் முத்தூர் – காங்கேயம் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு இத்திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் தலைமைப்பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) செல்லமுத்து, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசு, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர் கண்ணன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், வெள்ளகோவில் நகர்மன்றத்தலைவர் கனியரசி முத்துக்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- நேற்று விடுமுறை என்பதால் பாண்டியன், விஜய் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து ரெயில் தண்டவாளம் பகுதிக்கு வந்துள்ளனர்.
- 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே வாலிபர்கள் 2 பேர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அங்கு நின்றிருந்த வாலிபர்கள் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ரெயில் மோதி இறந்த 2 பேர் ஈரோடு மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் (வயது 22), விஜய் (25) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் தங்கி, அங்குள்ள பனியன் நிட்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.
நேற்று விடுமுறை என்பதால் பாண்டியன், விஜய் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து ரெயில் தண்டவாளம் பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவர் மட்டும் ரெயில் வரும்போது ரெயிலுடன் சேர்த்து 'செல்பி' எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தண்டவாளத்தை ஒட்டி நின்றுள்ளனர்.
அப்போது திருநெல்வேலியில் இருந்து பிலாஸ்பூர் செல்லும் பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இருவர் மீதும் மோதியது. இதில் பாண்டியன், விஜய் இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து திருப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக ரெயில் மோதி பலியான 2 பேரின் உடல்களை பார்த்து அவர்களுடன் வந்த நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
- நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் அறிவிப்பு வெளியானதும் சட்ட விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி தலைமை வன உயிரின காப்பாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களிடம் தன் பெயரை பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூரிலுள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் 311 ஏக்கர் பரப்பளவு கொண்டது. திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு மற்றும் ஊத்துக்குளி தாலுகா எல்லையில் அமைந்துள்ளது. நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் அறிவிப்பு வெளியானதும் சட்ட விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சரணாலய பகுதிக்குள் வந்துசெல்லவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொது பணியாளர், சரணாலய எல்லையில் வன அலுவலர்களிடம் முன் அனுமதி பெற்ற பின்னரே சரணாலயத்துக்குள் செல்ல வேண்டும். சட்டவிதிகளின்படி எல்லை குறிகளை அழிக்கவோ மாற்றவோ கூடாது, வன உயிரினங்களை துன்புறுத்தக்கூடாது.
சரணாலயத்தில் இருந்து அகற்றப்படும் பொருட்களை, சுற்றுப்பகுதி மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தலாம். வணிக நோக்கத்தில் பயன்படுத்தக்கூடாது. சரணாலயத்துக்கு தீ வைக்க கூடாது. எழுத்துப்பூர்வ அனுமதியில்லாமல் எவ்வித ஆயுதத்துடனும் பிரவேசிக்க கூடாது.
தீங்கு விளைவிக்கும் வெடி மருந்து, ஆபத்தான ரசாயனங்களை உள்ளே எடுத்துவரக்கூடாது. தேசிய வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல், சரணாலயத்துக்குள் வணிக சுற்றுலா, ஓட்டல், லாட்ஜ் கட்ட முடியாது.தலைமை வன உயிரின காப்பாளர், வன உயிரினங்கள் நலனுக்கு ஏற்ப சரணாலயத்தை ஒழுங்குபடுத்தலாம். கட்டுப்படுத்தலாம்,தேவையெனில் தடை செய்யலாம்.
சரணாலயம் அறிவிக்கப்பட்ட 3 மாதத்துக்குள், 10 கி.மீ., சுற்றளவில் வசிக்கும் நபர்கள் ஆயுத உரிமம் வைத்திருந்தாலும், ஆயுதங்கள் வைத்திருந்தாலும், குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி தலைமை வன உயிரின காப்பாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களிடம் தன் பெயரை பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.
தலைமை வன உயிரின காப்பாளர் முன் அனுமதியின்றி, சரணாலயத்தை சுற்றி, 10 கி.மீ., சுற்றளவில் வசிப்பவருக்கு புதிய உரிமம் எதுவும் வழங்கப்படாது. ஆக்கிரமிப்பு இருந்தால் அவர்களை வெளியேற்றலாம்.
அத்துமீறி எடுத்துவரும் பொருட்கள், கருவிகளை பறிமுதல் செய்யலாம். பாதிக்கப்பட்டவருக்கு இதுகுறித்து அறிந்துகொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- வேளாண்மை (ஆங்கிலம், தமிழ் வழி), தோட்டக்கலை, வேளாண் பொறியியல் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பம் பெறப்படுகிறது.
- 15-ந் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், ஜூலை.3-
கோவை வேளாண் பல்கலைகழகத்தில் பட்டயப்படிப்புக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்க ஜூலை 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இப்பல்கலையின் கீழ் வேளாண்மை (ஆங்கிலம், தமிழ் வழி), தோட்டக்கலை, வேளாண் பொறியியல் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பம் பெறப்படுகிறது.விண்ணப்பம் வழங்க தற்போது 15-ந் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
www.tnagfi.ucanapply.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விபரங்களுக்கு, 0422-6611346, 9488635077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஐஸ் பெட்டிகளில் வைத்து கொண்டு வரப்படும் மீன்களை விட கிராமத்து குளங்களில் அவ்வப்போது மீன்களை பிடித்து சமைப்பது கூடுதல் சுவை தருவதாகும்.
- பால் (பந்து) தூண்டில்கள் எனப்படும் இந்தவகை தூண்டில்களில் மீன்களுக்கு உணவாக சத்துமாவு, கோதுமைமாவு மற்றும் முட்டை கலந்த கலவையை பயன்படுத்துகிறோம்.
குடிமங்கலம்:
குடிமங்கலத்தை அடுத்த புதுப்பாளையம் பகுதி இளைஞர்கள் பயனுள்ள பொழுதுபோக்காக மீன்பிடித்து வருகின்றனர்.
அவர்கள் கைத்தூண்டில், நிலத் தூண்டில், வலை என பல விதங்களில் மீன்களைப்பிடித்து வருகிறார்கள். அதேநேரத்தில் மாவு உருண்டை தூண்டில் மூலம் நூதன முறையில் மீன் பிடிப்பது ரசிக்க வைப்பதாக உள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
ஐஸ் பெட்டிகளில் வைத்து கொண்டு வரப்படும் மீன்களை விட கிராமத்து குளங்களில் அவ்வப்போது மீன்களை பிடித்து சமைப்பது கூடுதல் சுவை தருவதாகும். ஆனால் பெரும்பாலான கிராமத்து குளங்களில் மீன் பிடிக்கும் உரிமை ஏலம் விடப்படுவதால் குத்தகைதாரர்கள் தவிர மற்றவர்களை மீன் பிடிக்க அனுமதிப்பதில்லை. ஒருசில சிறிய குளங்கள் மட்டுமே ஏலம் விடப்படாமல் உள்ளது. அந்த குளங்களில் மட்டுமே மீன் பிடிக்க முடிகிறது.
பொதுவாக தூண்டில்களில் மீன்களுக்கு இரையாக மண் புழுக்களை பயன்படுத்துவது வழக்கமாகும். ஆனால் சமீப காலங்களாக ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் விளைநிலங்களில் மண் புழுக்களைப் பார்ப்பதே அரிதான விஷயமாக உள்ளது. அதனால் தூண்டில்களில் மீன்களுக்கு இரையாக கறிக்கடையிலிருந்து கோழி குடல்களை வாங்கி வந்து பயன்படுத்துகிறோம். இதுதவிர மாவு உருண்டை தூண்டில்களை பயன்படுத்தி விரைவாக மீன்களை பிடிக்க முடிகிறது. பால் (பந்து) தூண்டில்கள் எனப்படும் இந்தவகை தூண்டில்களில் மீன்களுக்கு உணவாக சத்துமாவு, கோதுமைமாவு மற்றும் முட்டை கலந்த கலவையை பயன்படுத்துகிறோம். ஒரு ஸ்பிரிங்கை சுற்றி மாவை உருண்டையாக வைத்து அதனுள் தூண்டில்களை புதைத்து வைக்கிறோம்.
மேலும் மாவு உருண்டை தூண்டில் நீருக்குள் மூழ்குவதற்காக ஒரு இரும்பு நட்டு அதற்கு மேலே சற்று இடைவெளியில் பிளாஸ்டிக் பந்து இணைத்து இந்த தூண்டிலை தயாரிக்கிறோம். இந்த தூண்டிலை கயிற்றுடன் இணைத்து ஒரு முனையை பிடித்துக்கொண்டு தூண்டிலை தண்ணீருக்குள் வீசி விட்டு காத்திருந்தால் மாவைத் தின்னும் மீன்கள் தூண்டிலில் சிக்கிக் கொள்ளும். இந்த முறையில் மீன்கள் அதிக அளவில் சிக்குகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மாநகர பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக பொதுமக்கள் மத்தியில் தொடர் குற்றச்சாட்டு வந்நதது.
- திருப்பூரில் பல்வேறு இடங்களில் குறிப்பாக ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்தை மட்டும் தொடர்ந்து திருடி வந்தது தெரிய வந்தது .
திருப்பூர்:
திருப்பூர் மாநகர பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக பொதுமக்கள் மத்தியில் தொடர் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினவ் உத்தரவின் பேரில் கொங்கு நகர் பகுதியில் உதவி ஆணையர் அனில் குமார் தலைமையில் வடக்கு காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதை தொடர்ந்து காவல்துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் விக்கி என்கிற விக்னேஸ்வரன் என்பதும் இவர் திருப்பூர் ஊத்துக்குளி சாலை எஸ் .பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தொடர்ந்து திருப்பூரில் பல்வேறு இடங்களில் குறிப்பாக ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்தை மட்டும் தொடர்ந்து திருடி வந்தது தெரிய வந்தது .
அதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரிடமிருந்து 7 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர் .மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளும் பட்சத்தில் இன்னும் பல இருசக்கர வாகனங்கள் கிடைக்கும் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
தொடர்ந்து இருசக்கர வாகனத்தை திருடிய விக்கி என்கின்ற விக்னேஸ்வரனை வடக்கு காவல் துறையினர் கைது செய்ததுடன், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் பல்லடத்தை அடுத்த கள்ளிப்பாளையத்தில் தமிழக அரசின் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
- முகாமின் போது 5 பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளும், 6 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், இரண்டு வளர் இளம் பெண்களுக்கு இயற்கை நல பெட்டகம் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
பல்லடம்:
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் பல்லடத்தை அடுத்த கள்ளிப்பாளையத்தில் தமிழக அரசின் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். விழாவிற்கு வந்திருந்தவர்களை சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகதீஷ் குமார் வரவேற்றார். திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கே. செல்வராஜ் எம்.எல்.ஏ., பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார், துணைத் தலைவர் அபிராமி அசோகன், கள்ளிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த சிறப்பு முகாமை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்து சிறப்பு முகாம் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து குறிப்பு விளக்கி பேசினார். இந்த முகாமின் போது 5 பள்ளி மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளும், 6 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், இரண்டு வளர் இளம் பெண்களுக்கு இயற்கை நல பெட்டகம் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இந்த முகாமின் போது வடமலைபாளையம் மற்றும் அய்யம்பாளையத்தை சேர்ந்த 84 பேருக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களும், அறிவொளி நகரை சேர்ந்த 50 நபர்களுக்கு சாதி சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் மொத்தம் 640 பேர் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். முடிவில் பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரவேல் நன்றி கூறினார்.
- ஹைட்ராலிக் சிப்டிங் தொழில்நுட்பத்தில் ஸ்க்ரூ ஜாக்கி மூலமாக மெல்ல மெல்ல கட்டிடத்தை நகர்த்தி வருகின்றனர்.
- 180 ஜாக்கிகள் மூலமாக 3 அடி உயரத்துக்கு கட்டிடம் உயர்த்தப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு பகுதியில் 1,200 சதுர அடி பரப்பளவுள்ள இரண்டு படுக்கை அறை வசதி கொண்ட கான்கிரீட் வீட்டை இடிக்காமல் ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நகர்த்தும் பணி தொடங்கியுள்ளது. ஹைட்ராலிக் சிப்டிங் தொழில்நுட்பத்தில் ஸ்க்ரூ ஜாக்கி மூலமாக மெல்ல மெல்ல கட்டிடத்தை நகர்த்தி வருகின்றனர்.
இதுகுறித்து நவீன தொழில்நுட்பத்தை கையாளும் திருப்பூரை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் பொன்லிங்கம் கூறும்போது, 180 ஜாக்கிகள் மூலமாக 3 அடி உயரத்துக்கு கட்டிடம் உயர்த்தப்பட்டது. பின்னர் 60 ரோலர்கள் உதவியோடு கட்டிடம் நகர்த்தப்பட்டது. ஒரு நாளுக்கு 8 அடி தூரம் என 3 நாட்களில் 24 அடி தூரம் நகர்த்தப்படும். இதுவரை 8 அடி தூரம் நகர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மொத்தம் ரூ.5 லட்சம் வரை செலவாகும். கட்டிடத்துக்கு எந்தவித சேதரமும் ஏற்படாது. இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக 5 மாடி உயர கட்டிடம் வரை நகர்த்தவும், உயர்த்தவும் முடியும் என்றார்.
- விதைகளை விற்பனை செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்கள் விற்பனை நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டு உள்ள விதைகளுக்கு முறையான பதிவேடு பராமரிக்க வேண்டும்.
- விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது
காங்கயம்
முத்தூர் பகுதிகளில் விதை விற்பனை நிலையங்கள் உரிமம் பெறாமல் விதைகள், காய்கறி நாற்றுக்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார். இது குறித்து ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
விதைகளை விற்பனை செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்கள் விற்பனை நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டு உள்ள விதைகளுக்கு முறையான பதிவேடு பராமரிக்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட விதைகள் பட்டியல், விற்பனை பட்டியல், முளைப்பு திறன் சான்று, பதிவு சான்றிதழ் உட்பட பல்வேறு உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும். நிறுவனத்தின் முன்பு கட்டாயம் தகவல் பலகை வைத்து விவசாயிகள் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் விலை பட்டியல் விவரம் ஆகியவற்றை தெளிவாக எழுதி வைக்க வேண்டும்.
மேலும் விவசாயிகள் விதைகளை விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் வாங்கும் போது தவறாமல் அதற்கான விற்பனை பட்டியலை கேட்டு வாங்க வேண்டும். இதில் வாங்கும் விதை குவியல் காலாவதி எண், விற்பனை செய்த நாள், வாங்குபவர் மற்றும் விற்பனை செய்பவரின் கையொப்பம் போன்ற விவரங்கள் சரியாக உள்ளதா? என்று சரி பார்த்து வாங்க வேண்டும். இதுபோன்ற அரசு விதிமுறைகளை விதை விற்பனை நிலையங்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
விதை விற்பனை உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் ஒரு சில தானிய மண்டிகளில் திறந்த நிலையில் சாக்குகளில் வைத்து விற்பனை செய்யும் விதைகளை விவசாயிகள் கட்டாயம் வாங்கக்கூடாது. மேலும் இப்பகுதிகளில் உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.
உரிமம் இல்லாமல் விதைகள் மற்றும் நாற்றுகள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






