என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • கல்லூரி கட்டிட கட்டுமான பணிகள் குறித்து அமைச்சர் கயல்விழி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
    • கட்டுமான பணிகளுக்கு தரமான சிமெண்டு மற்றும் கட்டுமான பொருட்களை கொண்டு கட்ட வேண்டும்.

    தாராபுரம்

    தாராபுரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமான பணிக்கு அரசு ரூ.12½ கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதற்கான கட்டுமான பணிகளை தாராபுரம் ஐ.டி.ஐ. வளாகத்தில் கடந்த டிசம்பர் மாதம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தனர். அதன் முதற்கட்ட பணி தொடங்கி நடந்து வருகிறது. கல்லூரி கட்டிட கட்டுமான பணிகள் குறித்து அமைச்சர் கயல்விழி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தாராபுரத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு கலைக்கல்லூரி கட்டிடம் நிர்ணயிக்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார். மேலும் கட்டுமான பணிகளுக்கு தரமான சிமெண்டு மற்றும் கட்டுமான பொருட்களை கொண்டு கட்ட வேண்டும். நீங்கள் கட்டும் கல்லூரி கட்டிடம் 100 ஆண்டுகளை கடந்தாலும் உறுதி தன்மையுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது ஆர்.டி.ஓ.செந்தில் அரசன், தாராபுரம் தாசில்தார் ஜெகஜோதி, தாராபுரம் தி.மு.க ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவருமான எஸ்.வி.செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட அமைப்பாளர் வக்கீல் கே.செல்வராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை செய்யப்படுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    அவிநாசி

    சேவூா், வடுகபாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 5 -ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    மின் தடை ஏற்படும் பகுதிகள்

    சேவூா் துணை மின் நிலையம்: சேவூா், ராமியம்பாளையம், அசநல்லிப்பாளையம், புலிப்பாா், போத்தம்பாளையம், சந்தைப்புதூா், பந்தம்பாளையம், சூரிபாளையம், பாப்பங்குளம், வாலியூா், தண்ணீா்பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சை தாமரைகுளம், சாவக்கட்டுப்பாளையம், நடுவச்சேரி, சாலைப்பாளையம், கருக்கங்காட்டுப்புதூா், தளிஞ்சிப்பளையம் மற்றும் மாரப்பம்பாளையம்.

    வடுகபாளையம் துணை மின் நிலையம்: வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சை தாமரைகுளம், பிச்சாண்டாம்பாளையம், ஒட்டா்பாளையம் மற்றும் ஓலப்பாளையம்.

    • கிராம மக்கள் பலமுறைபோக்குவரத்துறையினரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
    • மாவட்டத்தில் பஸ் வசதி இல்லாத கிராமங்களை கண்டறிந்து நடவடிக்கை உரிய எடுக்க வேண்டும்.

    திருப்பூர்:

    இந்திய மாதர் தேசிய சம்மேளம் திருப்பூர் புறநகர் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம் பல்லடம், ஆறுமுத்தாம்பளையம் ஊராட்சியில் அறிவொளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு உரிய பஸ் வசதியில்லை .இது குறித்து போக்குவரத்துறையினரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

    ஆகவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பஸ் வசதி செய்து தர வேண்டும். அதே போன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல கிராமப்புற பகுதிகளில் பஸ் வசதி இல்லை. அதனால் நகரப் பகுதிகளுக்கு அன்றாடப் பணிகளுக்கும், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு வர முடியாமல் மக்கள் பாதிப்பு அடைகின்றனர்.

    மாவட்டத்தில் பஸ் வசதி இல்லாத கிராமங்களை கண்டறிந்து நடவடிக்கை உரிய எடுக்க வேண்டும். அவினாசி தாலுகாவில் உள்ள கானூர் ஊராட்சியில், சின்ன கானூர், பெரிய கானூர் பகுதியில் இயங்கும் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் வந்து செல்வது இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் அவதி அடைகின்றனர். அதனை முறைப்படுத்தி நேரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும்.

    ஊத்துக்குளி ஏ. பெரியபாளையம் ஊராட்சியில் உள்ள நல்லக்கட்டிப்பாளையம் பகுதியில் சரியான முறையில் பஸ் இயக்கப்படாத காரணத்தால் அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக அவதிப்பட்டு வருகின்றனர். அதனை சரி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகளை பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
    • தோட்டத்தில் புகுந்த சிறுத்தை அங்கு கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை தூக்கி செல்ல முயன்றது.

     காங்கயம்

    திருப்பூர் மாவட்டம் ஊதியூர் வனப்பகுதிக்கு வந்த ஒரு சிறுத்தை அங்கு பதுங்கி மலையடிவாரப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகளை பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    ஆனால் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. இந்த நிலையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சிறுத்தையை பார்த்ததாக தெரிவித்தனர். பொதுமக்கள் தெரிவித்த இடங்களுக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள விவசாயிகளின் தோட்டத்தில் பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆட்டுக்குட்டிகள் தொடர்ந்து மாயமாகி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று கால்தடங்களை ஆய்வு செய்து சிறுத்தை வேட்டையாடியதை உறுதி செய்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஊதியூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிறுத்தையின் வேட்டையை கண்காணிக்க தங்களது தோட்டத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவு 12 மணியளவில் ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள விவசாயி கார்த்தியின் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை மெதுவாக நடந்து சென்று இரை தேடிய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் மலையடிவார பகுதியில் உள்ள விவசாயி ராஜாமணி என்பவரது தோட்டத்தில் புகுந்த சிறுத்தை அங்கு கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை தூக்கி செல்ல முயன்றது.

    அப்போது கன்றுக்குட்டியின் அலறல் சத்தத்தை கேட்டு ராஜாமணி வெளியே ஓடி வருவதை பார்த்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடி வனப்பகுதிக்குள் மறைந்தது. இதையடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் நேரில் சென்று கால் தடயங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சிறுத்தையை பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

    • தேசிய மருத்துவர்கள் தினத்தினை முன்னிட்டு மகிழ்வனம் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • கோவை ராயல் கேர் மருத்துவ குழுமத்தின் தலைவர் மாதேஸ்வரன் மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி சங்கோதி பாளையத்தில், கோடங்கி பாளையம் ஊராட்சி மன்றம், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் மகிழ்வனம் என்ற பூங்காவை அமைத்து சுமார் 4000த்திற்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் தேசிய மருத்துவர்கள் தினத்தினை முன்னிட்டு மகிழ்வனம் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி. பழனிச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் சோமு என்கிற பாலசுப்ரமணியம், முன்னிலை வகித்தார்.

    பொருளாளர் பூபதி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை ராயல் கேர் மருத்துவ குழுமத்தின் தலைவர் மாதேஸ்வரன் மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் விஷ்ணு இன்ஸ்பெரா நிறுவனங்களின் தலைவர் செல்வராஜ், தாய்மண் அறக்கட்டளை தலைவர் பாலசுப்ரமணியம், மற்றும் மகிழ்வன பூங்கா உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாய ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • குன்னாங்கல்பாளையத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி குன்னாங்கல் பாளையத்தில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பல சாய தொழிற்சாலைகள் உள்ளது.

    இந்தநிலையில் புதிதாக சாய தொழிற்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஏற்கனவே முதலமைச்சர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு சாய ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இது தொடர்பாக அந்தப் பகுதிமக்கள் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் அதிகாரிகளிடம் மனு கொடுப்பது, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்துவது, சாயத்தொழிற்சாலை அமைப்பதை நிறுத்தும் வரை தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று குன்னாங்கல்பாளையத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • 49-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.
    • பொதுமக்கள் கூறிய குறைகளை பணிவுடன் கேட்டுக்கொண்ட மேயர் தினேஷ் குமார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் வார்டுகள் வாரியாக பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து வருகிறார். அதன்படி இன்று காலை 49-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் கூறிய குறைகளை பணிவுடன் கேட்டுக்கொண்ட மேயர் தினேஷ் குமார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    இதேபோல் வார்டு முழுவதும் வீதி வீதியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு அதற்கான தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டார்.

    • பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 4 பேரை கைது செய்து அவரிடமிருந்து சீட்டுக்கட்டுகள், ரொக்கம் ரூ.1,600 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள உப்பிலிபாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கருப்பராயன் கோவில் பின்புறம் பணம் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், மணிகண்டன், சிவராஜ், பரமசிவம் ஆகிய 4 பேரை கைது செய்து அவரிடமிருந்து சீட்டுக்கட்டுகள், ரொக்கம் ரூ.1,600 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • விவசாயிகள் கால்நடைகளால் கிடைக்கும் பால் விற்பனை மற்றும் கால்நடைகள் விற்பனை மூலம், வருவாய் ஈட்டி வருகின்றனர்.
    • விவசாயிகளின் தோட்டங்களுக்கே வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லா விட்டால் கால்நடை வளர்ப்பதை கைவிடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

    பல்லடம்:ன

    பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விவசாயத்திற்கு அடுத்ததாக கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயிகள் கால்நடைகளால் கிடைக்கும் பால் விற்பனை மற்றும் கால்நடைகள் விற்பனை மூலம், வருவாய் ஈட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பால் விற்பனை விலை விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. இது குறித்து கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் கூறியதாவது:- விவசாயத்துடன் கால்நடைகள் வளர்ப்பதன் மூலமாக கிடைக்கும் வருவாய் சற்று உதவிகரமாக இருந்தது. இந்நிலையில் தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பால் விற்பனை விலை போதுமானதாக இல்லை. அரசு 4.3 சதவீத கொழுப்பு சத்தும், 8.2 சதவீத புரதச் சத்தும் கொண்ட பாலுக்கு ஒரு லிட்டருக்கு 32 ரூபாய் அறிவித்துள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு ஒரு லிட்டருக்கு 29 முதல் 30 ரூபாய் தான் கிடைக்கிறது.

    கலப்பு தீவனம் கிலோ 24 ரூபாயாக உயர்ந்துள்ளது. பருத்தி, புண்ணாக்கு கிலோ 50 ரூபாயாகவும், சோளத்தட்டு, வைக்கோல், மக்காச்சோளம் ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது.மேலும் தொழிலாளர்களுக்கான கூலி, பராமரிப்பு செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் அரசு ஆவின் கொள்முதல் விலையை பல ஆண்டுகளாக உயர்த்தவில்லை. விளை பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை இல்லாததால் சிரமமான நிலையில் பால் உற்பத்தி மட்டுமே வாழ்வாதாரத்திற்கு உதவியாக உள்ளது. தற்போது தீவன விலை உயர்வால் பால் உற்பத்தியிலும் நஷ்டம் ஏற்படுகிறது. தமிழக அரசு மாட்டுப்பால் ஒரு லிட்டருக்கு 45 ரூபாய் வாங்க வேண்டும். எருமைப்பால் லிட்டருக்கு ரூ.55 என நிர்ணயம் செய்ய வேண்டும். கால்நடை தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும். விவசாயிகளின் தோட்டங்களுக்கே வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லா விட்டால் கால்நடை வளர்ப்பதை கைவிடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நெடுஞ்சாலை மத்தியில் வெள்ளை கோடு போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்ததால், ஒரு வழியை அடைத்து அந்த இடத்தில் ஒரு வழிச்சாலையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
    • கோவையில் இருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தியது.

    பல்லடம்:

    கரூர் அருகே உள்ள பசுபதி பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் சரண் (வயது 22). இவர் கோவை தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்றவர், நேற்று கரூரில் இருந்து கோவை நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். பல்லடத்தை அடுத்த பெரும்பாலி என்ற இடம் அருகே சென்ற போது, நெடுஞ்சாலை மத்தியில் வெள்ளை கோடு போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்ததால், ஒரு வழியை அடைத்து அந்த இடத்தில் ஒரு வழிச்சாலையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

    அந்த வழியாக சென்ற போது, கோவையில் இருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தியது. அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சரண் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சரண் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த விபத்து குறித்து சரணின் தந்தை செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • கரைப்புதூர் ஊராட்சி வ. உ. சி. நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்.
    • பொது குடிநீர் தொட்டியில் இருந்து வீடுகளுக்கு முறைகேடாக குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி வ. உ. சி. நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இந்தநிலையில் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்றும், பலமுறை இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், பெண்கள், ஆண்கள் , குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில்:- வ .உ .சி. நகர் பகுதிக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருகிறது. குடிநீர் தொட்டியில் இருந்து விநியோகம் செய்யப்படும் குடிநீர்முறையாக வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில், பொது குடிநீர் தொட்டியில் இருந்து வீடுகளுக்கு முறைகேடாக குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் அளவு குறைந்தும், சில சமயம் குடிநீர் கிடைக்காமலும் போகிறது.

    எனவே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    குடிநீர் முறையாக வழங்கப்படும் என அவர் தெரிவித்ததை அடுத்து மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ.4.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜையும், ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி திறப்பு விழாவும் நடைபெற்றது.
    • புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டியும் திறந்து வைத்தார்.

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் - பெருமாநல்லூர் அருகே உள்ள ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ.4.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜையும், ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி திறப்பு விழாவும் நடைபெற்றது.

    விழாவில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் கலந்து கொண்டு கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை செய்தும், புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டியும் திறந்து வைத்தார்.

    இதில் ஒன்றிய பெருந்தலைவர் சொர்ணாம்பாள், ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவசாமி, ஒன்றிய பேரவை செயலாளர் எஸ்.எம்.பழனிச்சாமி, முன்னாள் சேர்மன் தங்கராஜ், கொண்டத்துக்காளியம்மன் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம், ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்யம் மகராஜ்,வார்டு உறுப்பினர்கள் யுவராஜ்,முருகேஷ், குமார், ராசப்பன் மற்றும் அங்கன்வாடி ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×